மரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]

நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் உள்ளது “மிருத்யு பய நிவாரக சூக்தம்” (மரண பயத்தினின்று விடுவிக்க வேண்டுதல்) என்ற இந்த மந்திரம். மிருத்யு தேவனிடம் பிரார்த்தனை செய்தும், மருந்துகளால் நோய் நீக்கியும், வாழ்வின் மீது பிடிப்பும் மனவலிமையும் தரும் மொழிகள் கூறியும், சாகும் தறுவாயிலிருக்கும் ஒரு மனிதனை மரணத்தின் பிடியிலிருந்து மீட்பவர்கள் பாடும் பாடல் போல இது அமைந்துள்ளது. உணர்வெழுச்சியும், தெய்வீகமும் கொண்ட வேத ரிஷிகளின் தொல்பழங்கவிதை.

அதர்வ வேதம், எட்டாம் காண்டம், முதல் சூக்தம்

அனைத்தையும் முடிக்கும் அந்தகனுக்கு
மிருத்யுவுக்கு வணக்கம்.
பிராணனும் அபானனும்
இங்கேயே சஞ்சரித்திடுக
கதிரொளி படரும் இந்த அமுதஉலகில்
இம்மனிதன் உயிர்ச்சக்தி நிறைந்து
வாழ்ந்திடுக.

பகன் இவனை உயிர்ப்பித்து எழுப்பினான்
சோமன் தன் கதிர்களால் எழுப்பினான்
மருத்துக்களும் இந்திரனும் அக்னியும்
நல்வாழ்விற்காக இவனை எழுப்பினர்.

இதோ உன் உயிர்ச்சக்தி இதோ பிராணன்
இதோ உனது ஆயுள் இதோ உன் மனம்
தெய்வ வாக்குகளால்
இருள்வடிவான நிருதியின் கட்டுகளிலிருந்து
விடுவிக்கிறோம் உன்னை.

மனிதா மேலெழுக
மரணத்தின் கால்விலங்குகளை உதறிடுக
கீழே மூழ்க வேண்டாம்
அக்னியின் சூரியனின் பார்வைகளிலிருந்து
இவ்வுலகிலிருந்து
விலக வேண்டாம்.

உனக்காக மாதரிஸ்வான் காற்றாகி வீசுக
நீர்கள் உனக்காக அமுதைப் பொழிக
உன்னுடல் மீது சூரியன் நன்கு சுடர்க
மிருத்யு தயை புரிக உன்மீது
வீணாய் அழிய வேண்டாம்.

மனிதா நீ மேற்செல்க
கீழிறங்க வேண்டாம்
ஜீவனையும் விழிப்பையும் சமைக்கிறேன்
உனக்காக
இந்த அழிவற்ற இனிய ரதத்தில் ஏறுக
முதுமையிலும் இன்சொற்கள் பேசி
வாழ்ந்திடுக.

அங்கு போகாதிருக்கட்டும் உன் மனம்
மறையாதிருக்கட்டும்
வாழ்வாசை இன்றி ஆகாதிருக்கட்டும்
பித்ருக்களைத் தொடந்து செல்லவேண்டாம்
தேவரனைவரும் உன்னை
இங்கேயே காத்திடுக.

சென்றவர்களை எண்ணியிருக்க வேண்டாம்
காலமறிந்து இட்டுச்செல்வோர் அவர்கள்
இருளினின்று ஒளிக்கு மேலேறுக
உன் கைகளை
நாங்கள் பிடித்துக் கொள்கிறோம்.

Yama_with_two_dogs

அவிழ்த்து விடப்பட்டு
வழி காத்து நிற்கின்றன
யமனின் இரு நாய்கள்
கருப்பும் வெள்ளையுமாய்
அவை தொடரவேண்டாம் உன்னை
இங்கு வா நீ
விலகிச் செல்லாதே
தொலைவில் மனதை விட்டு நிற்காதே.

அச்சமூட்டும் அவ்வழியில் செல்லற்க
நான் சொல்கிறேன் கேள்
இதுவரை நீ செல்லாத வழி அது
மனிதா அது இருள்
அங்கு நுழைய வேண்டாம்
அது பயம்
பயமில்லாதிருப்பது இங்கு தான்.

நீர்களில் உறையும் நெருப்பு
காத்திடுக உன்னை
மனிதர் மூட்டும் தீ
காத்திடுக
அனைத்திலும் உறையும் வைஸ்வாநரன் அக்னி
அது உன்னைக் காத்திடுக
மின்னலாய் எரியும் தேவலோகச் சுடர்
உன்னை எரிக்காமலிருப்பதாக.

ஊன் பொசுக்கி உண்ணும் அக்னி
துன்புறுத்தாதிருந்திடுக உன்னை
வானமும் பூமியும் காத்திடுக
கதிரோனும் நிலவும் காத்திடுக
எங்கும் நிறைந்த வெளி
தன் தெய்வசக்தியால்
காத்திடுக.

போதமும் பிரதிபோதமும்
காத்திடுக
உறங்காதிருப்பதும் அசையாதிருப்பதும்
காத்திடுக
தனித்தும் விழித்துமிருக்கும் தெய்வங்கள்
காத்திடுக.

அவை உன்னைக் காத்திடுக
துணைபுரிந்திடுக
அவையனைத்தையும் போற்றுகிறோம்.
அவையனைத்திற்கும் ஸ்வாஹா!

வாயுவும் இந்திரனும்
காத்தருளும் சவித்ருதேவனும்
உயிர்வாழ்வனவற்றுடன்
ஒன்றுகூட்டிடுக உன்னை
பிராணனும் பலமும் அகலாதிருந்திடுக
மீண்டும் மீண்டும்
உயிர்ச்சக்தியை அழைக்கிறோம்.

தாடைகளை இழுக்கும் வலிப்புகளும்
நாக்கைக் கிழிக்கும் அசுரர்களும்
வராதிருக்கட்டும்
பின் உனக்கு ஏது துன்பம்
ஆதித்யர்களும் வசுக்களும் இந்திரனும் அக்னியும்
நல்வாழ்வளித்திடுக.

வானமும் பூமியும் பிரஜாபதியும்
காத்தளித்தனர்
சோமனை அரசனாய்க் கொண்ட மருந்துச்செடிகள்
மரணத்தினின்று
உன்னைக் காத்தளித்தனர்.

ஓ தேவர்களே
இவன் இங்கேயே இருக்கட்டும்
அங்கு செல்லவேண்டாம்
ஆயிரம் வீரியங்கள் கொண்டு
இவனை
மரணத்திலிருந்து
கடத்திச் செல்வோம்.

மிருத்யுவிடமிருந்து
மீட்டுவீட்டோம் உன்னை
ஆயுள்வளர்க்கும் சக்திகள்
உன்மீது உயிர்ப்பிப்பதாக
தலைவிரிகோலமான பெண்கள்
உனக்காக
அழாதிருப்பதாக.

மீண்டும் புதிதாய்
மீண்டும் வந்திருக்கிறாய்
மரணத்திடமிருந்து
இழுத்து வந்திருக்கிறோம் உன்னை
நல்லுடலும் நல்விழியும் நல்லாயுளும்
கூடுவதாக.

சோதி படர்ந்தது உன்மீது
விலகிச் சென்று விட்டது இருள்
மரணமும் அழிவும் நோயும்
உன்னினின்று
நீக்கினோம் யாம் இன்று.

5 Replies to “மரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]”

  1. “சோதி படர்ந்தது உன்மீது
    விலகிச் சென்று விட்டது இருள்”
    நம்பிக்கையூட்டும் வரிகள். மனதைத்தொடும் பிரார்த்தனை.
    எவருக்கேனும் மிகவும் உடல் நலம் குன்றி விட்டால் உடன் இருப்போரின் தைரியத்திற்கு மிகவும் துணை செய்யும் அதர்வ வேதப் பாடலை எளிமையாக மொழி பெயர்த்து அறிமுகம் செய்தமைக்கு மிகவும் நன்றி திரு ஜடாயு அவர்களே.
    சாய்

  2. திரு ஜடாயு அவர்களுக்கு மிக்க நன்றி; வேதங்களையும் உபநிஷதங்களையும் அவற்றின் பொருளையும் அனைவரும் புரிந்து கொள்ளுமாறு அருமையாக மொழி பெயர்த்து வழங்கும் தங்களது நற்பணி தொடர வேண்டும். இறைவன் தங்களுக்கு எல்லா நன்மைகளையும் தருவானாக.

  3. மரணம் என்பது என்ன? என்பது ஒரு பெரிய வினா அது மனித சிந்தனை வரலாற்றில் இன்னும் தொடரும் வினா. அதற்கு பதில் தருவதில் பாரதப்பாரம்பரியம் முன் நிற்கிறது. மரணத்தினை வெல்வதற்கு மரணபயம் போக்குவதற்கும் வழிகளை காணமுயன்றது இதன் தனிசிறப்பு. ஸ்ரீ ஜடாயு தமிழில் கவிதையாக்கித்தந்துள்ள அதர்வவேதத்தின் பனுவலும் அத்தகைய சிறப்புக்குறியதே. மரணதேவனை வழுத்துதலில் துவங்கிய சூக்தம் மரணமும் நீங்கிவிட்டது என்ற மன உறுதியை நோய்வாய்ப்பட்டவனுக்கு ஊட்டுதலோடு நிறைகிறது அதர்வ வேதத்தின் இந்த மிருத்யு பய நிவாரக சூக்தம். இன்றும் மனிதனை வாட்டும் நோய்களில் பல மனம் சார்ந்த நோய்கள் என்றே அறிவியலார் சொல்கின்றனர். நோய் நீக்க நோயாளியின் அச்சம் போக்க இந்த சூக்தத்தினை பாராயணமும் செய்யலாம். இணையத்தில் MP3 audio இருந்தால் இணைப்பையும் கொடுக்கலாம்.
    ஜய ஜய ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ சிவசிவ.

  4. மிக்க நன்றி திரு.ஜடாயு அவர்களே…உங்கள் அக்கறை மனிதகுலத்திற்கு மிக்க பயனுடையதாய் இருக்கும்..தொடரட்டும் உங்கள் சேவை..

  5. மருந்துகளும் மருத்துவர்களும் செய்ய முடியாததை மந்திரம் செய்யும்

    என்பது மறுக்க முடியாத உண்மை .எனவே இ ம்மந்திரத்தை உடல்

    நலம் இ ல்லாதவர்கள் அருகில் உட்கார்ந்து பாராயணம் செய்யலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *