ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7

ஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன்

தமிழாக்கம்: எஸ். ராமன்

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம். 

தொடர்ச்சி.. 

2. அனுமன் சீதையைக் காணல்

     (V, சருக்கங்கள் 1-68)

அனுமன் சீதையைக் கண்டதுமே, அதுவரை சீதையைப் பற்றி அனைவரும் கவலையோடு இருந்த நிலை மாறி ஓர் ஒளிமயமான எதிர்பார்ப்பு உருவாகத் துவங்கியது. அதுவே சுந்தர காண்டத்தைப்  பற்றிய ஒற்றை வரி விளக்கம். அந்த காண்டம் மிக அழகான சொற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் அல்லாமல், அதைப் படிக்கும் எவருக்குமே அது ஒரு மன அமைதியைக் கொடுக்கிறது என்பதாலேயே அதற்குச் சுந்தர காண்டம் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமாகவே உள்ளது. வாழ்க்கையின் இன்னல்களைச் சமாளிக்க எவ்வாறு ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது காண்டம் படிப்பது உதவுகிறதோ, அதே போல சுந்தர காண்டம் படிப்பதும் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.

கடலின் மேல் பறந்து வரும்போது இடையில் வந்த இடையூறுகளைச் சமாளித்து வந்த அனுமன், இறுதியில் இலங்கையின் தலைநகருக்கு வெளியே இருந்த மலையுச்சியின் மேல் இறங்கினார். அங்கிருந்து அவர் நடந்து செல்லும்போது, நகரைக் காவல் காத்து நின்ற அரக்கி ஒருவள் அனுமனை ஒற்றன் என்று எண்ணி அறைய, அனுமன் திருப்பிக்கொடுத்த அடியில் அவள் நிலைகுலைந்து போனாள். அப்போது தங்களுக்கு வரப்போவதைப் புரிந்துகொண்ட அவள் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பின், என்று அவள் ஒரு வானரத்திடம் அடி வாங்குகிறாளோ அன்று இலங்கையின் அழிவு தொடங்குகிறது என்று அவளிடம் பிரம்மன் கூறியதைச் சொல்லிவிட்டு, அவள் அனுமனுக்கு ஆசியும் வழங்கினாள்.

Hanumanஇரவு நேரம் தொடங்கி, நிலவும் உதித்த பின் தனது உருவத்தைச் சிறிதாக்கிக்கொண்டு அனுமன் நகருக்குள் புகுந்தார். அங்கிங்கு அலைந்து தேடியவர் கடைசியில், சம்பாதி கூறியது போல,  சீதை ஒரு நந்தவனத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். சீதையின் அப்போதைய அவளது நிலையைப் பார்த்து மிகவும் வருந்திய அனுமன், அவளுடைய பாதுகாப்பிற்காகப் பிரார்த்தனை செய்துகொண்டு,  அவளிடம் பேசத் தொடங்குவதற்கு உகந்த நல்லதோர் நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டி மரம் ஒன்றின் மேல் பதுங்கி இருந்தார். இரவு கவியும் நேரம் அங்கு ராவணன் வந்து அவளை மயக்குவதாக எண்ணிக்கொண்டு எவரும் கேட்கத் தகாத வார்த்தைகளைக் கூறினான். அவனுக்கு முன்னால் புல் ஒன்றைக் கிள்ளிப்போட்டு அதைப் பார்த்துக்கொண்டே சீதை அவ்வாறு அவன் பேசியதற்கு அவனைக் கண்டித்து, அவனுக்கு எச்சரிக்கையும் கொடுத்தாள். ராவணன் அங்கிருந்து போனதும் அவனது கட்டளைப்படி அரக்கிகள் சீதையைக் கொடுமைப்படுத்தினர். ஆனால் அந்த அரக்கிகளில் இருந்த நல்லவளான திருஜடை என்பவள் சீதைக்கு ஆறுதல் கூறி, மற்றவர்களுக்குத் தான் கண்ட கனவான ராவணனின் அழிவையும், ராமரின் வெற்றியையும் கூறினாள் .

மெதுவாகத் தன் பக்கம் சீதையின் கவனத்தை ஈர்க்க, அனுமன் ராமருடைய பிறப்பில் இருந்து அன்றுவரை நடந்த நிகழ்ச்சிகளை ராம கதையாகத் தனது இனிமையான குரலில் மென்மையாகப் பாடினார். அதனால் கவரப்பட்ட சீதை அனுமனைப் பார்த்ததும், மரத்தில் இருந்து அமைதியாக இறங்கி வந்து தான் ராமனால் அனுப்பப்பட்ட தூதன் என்று அனுமன் சொல்லி, அதற்கு ஆதாரமாக ராமர் கொடுத்தனுப்பிய அடையாள மோதிரத்தை சீதையிடம் கொடுத்தார். ராமர் வானர சேனையுடன் கூடிய சீக்கிரம் இலங்கை வந்து, ராவணனைக் கொன்று, சீதையை மீட்பார் என்று அவளிடம் அனுமன் உத்திரவாதம் கொடுக்க, அவளது பங்கிற்குத் தன் சூடாமணியை அனுமனிடம் கொடுத்துவிட்டு, தான் பத்திரமாகவும், பொறுமையுடனும் இருப்பதாக ராமருக்குச் செய்தி அனுப்பினாள்.

சீதையைச் சந்திக்கும் தனது முக்கிய அலுவல் முடிந்துவிட்டதால், ஒரு நல்ல ஒற்றனுக்கு அழகு என்பது போல ராவணன் மற்றும் அவனது இலங்கையைப் பற்றிய தகவல்களை மேலும் சேகரிக்க அனுமன் நினைக்கிறார். அரக்கர்களின் வலிமையைத் தெரிந்து கொள்வதற்காக அனுமன் முதலில் நந்தவனத்தைப் பாழ் செய்கிறார். அதன் விளைவாக அவனுடன் மோத வந்த ஒரு பெரும் அரக்கர் சேனையை அவர் ஒட்டுமொத்தமாக அழிக்கிறார். அதனால் அவனுடன் சண்டை போட வந்த இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால், ராவணனைச் சந்திக்கும் வாய்ப்பிற்காகவே, தான் கட்டுப்படுவதற்கு அனுமதிக்கிறார். அவைக்கு இழுத்து வரப்பட்ட அனுமனைக் கொல்லவேண்டும் என்று ராவணன் சொல்லும்போது, தூதுவனாக வந்திருப்பவனைக் கொல்லக்கூடாது என்று சொல்லி விபீஷணன் அதைத் தடுக்கிறான். அதனால் ஒரு பாடமாக அமையட்டும் என்று ராவணன் அனுமனின் வாலில் தீயிட்டு, அதை அனைவரும் காண அழைத்துச் செல்லச் சொல்கிறான். ஆனால் அனுமனோ தன் வாலில் உள்ள நெருப்பால் இலங்கை மாநகரையே தீயிட்டுப் பொசுக்கிவிடுகிறார். அந்த அமர்க்களத்தில் சீதைக்கு ஏதேனும் பழுது நேர்ந்துவிட்டதோ என்று பார்ப்பதற்காக அவளை இன்னொரு முறை சந்தித்துவிட்டு, ஏதும் ஆகவில்லை என்பதை அறிந்துகொண்டு கடலை ஒரே தாவாகத் தாவி இக்கரை வந்தடைகிறார். இவ்வாறான அனுமனின் சாகசத்தைக் கேட்டு வானரர்கள் குதூகலிக்க, ராமரிடம் சீதை தெரிவிக்கச் சொன்ன சேதியையும், எடுத்துக் கொடுத்த சூடாமணியையும் அனுமன் சேர்ப்பிக்கிறார்.

3. உச்சகட்டத்தின் முடிவு

    (VI, சருக்கங்கள் 1-131)

இலங்கையைச் சூழ்ந்து போரிடுவதற்கான மும்முரங்கள் தொடங்கின. போர் வரப்போவதன் அறிகுறிகளை ராவணனும் உணர்ந்தான். ஆனாலும் அவன் தன் தம்பி விபீஷணனும், நல்லதையே அறிவுறுத்தும் அவனது ஏனைய உறவினர்களும் சீதையைத் திருப்பி அனுப்பி, ராமரிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னதைச் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. தன் பாவச் செயல்களிலேயே திளைக்க விரும்பிய ராவணனின் அடாவடித்தனத்தைத் தாங்க முடியாத விபீஷணன் அவனை விட்டு ஒதுங்கி ராமரிடம் தஞ்சம் அடைய , ராமரும் அவனை அரவணைத்துக்கொண்டார். இவ்வாறாக விபீஷணன் ராமரின் உதவிக்கு மிகவும் பயனுள்ள கூட்டாளியானான். அவன் தான் அறிந்தவைகளையும், தனது அனுபவங்களையும் ராமருடன் பகிர்ந்துகொண்டான். வானர சேனைகள் கடல் கடந்து இலங்கை போவதற்கு ராமர் கடல் அரசனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால் அந்த வேண்டுகோளுக்குப் பயன் ஏதும் இல்லாது போகவே, அவர் கடல் அரசனுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார். அதைக் கேட்ட அரசன் உடனே அங்கு தோன்றி கற்களால் ஆன பாலம் ஒன்றை நளன் கட்டலாம் என்று கூறி, அவரிடம் மன்னிப்பு கேட்டான். அந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் ராமரும், அவரது சேனையும் கடல் கடந்து இலங்கையைச் சென்றடைந்தனர்.

rama-killing-ravanaபோர் வரப்போவதை அறிந்து கலவரம் அடைந்த ராவணன் ராமருடையது போல ஒரு பொம்மைத் தலையைக் கொண்டுவந்து சீதையிடம் காட்டி அவளை ஏமாற்றப் பார்த்தான். ஆனால் நல்ல மனம் படைத்த சுராமா என்ற அரக்கி அது மாய வேலை என்றும், உண்மை நிலை என்ன என்பதையும் சீதைக்கு விளக்கினாள் . போர் தொடங்கியது. இந்திரஜித் தன்னுடைய நாக-பாசம் எனும் அஸ்திரத்தால் ராமரையும், லக்ஷ்மணனையும் கட்டிப்போட்டுவிட்டு, தானும் மாயமாய் மறைந்து போனான். அதைப் பார்ப்பதற்குக் கொண்டு செல்லப்பட்ட சீதை அவர்களின் நிலையைப் பார்த்து துடிதுடித்து முதலில் அலறினாலும், ராமர் இறுதியில் வெல்வார் என்ற சோதிடக் கணிப்பு அவளுக்கு ஞாபகம் வரவே அமைதி அடைந்தாள். பின்னர் கருடன் அங்கு வந்து ராம-லக்ஷ்மணர்களை அந்த மந்திரக் கட்டிலிருந்து விடுவித்தார். போர் தொடர்ந்து நடக்கவே அரக்கர்களின் தலைவர்களில் பலர் உயிர் இழந்தார்கள். உறக்கத்தில் இருந்த கும்பகர்ணனை ராவணன் பலவந்தமாக எழுப்பவைத்து அவனை அனுப்பிவைக்க, அன்று நடந்த போரில் ராமர் அவனைக் கொன்றார். இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் ராம-லக்ஷ்மணன் உட்பட வானரர் சேனையில் அனைவரும் மூர்ச்சையாகி விழுந்தார்கள். அப்போது அனுமன் சஞ்சீவி மலையையே தூக்கிக்கொண்டு வர, அதிலிருந்த மூலிகைகளின் உதவியால் அனைவரும் நினைவு திரும்பினர். தன் ரதத்தைச் செலுத்துவதற்கு முன், தனது பாதுகாப்பிற்காக என்றும் போல இந்திரஜித் நிகும்பலை சென்று யாகத்தை நடத்தும்போது அதை இடைமறித்து, லக்ஷ்மணன் அவனுடன் போர் செய்து இந்திரஜித்தைக் கொன்றான்.

இவ்வாறு பல உறவினர்களும், தலைவர்களும் போரில் மாளவே ராவணனே போர்க்களத்திற்கு வந்து நேருக்கு நேர் போர் புரிய வேண்டியதாயிற்று. ராவணன் போர்க்களத்திற்குத் தேரிலேறி வந்ததால், அவனுடன் நிகராக இருந்து போர் புரிவதற்காக இந்திரனே தன் தேரை ராமருக்கு அனுப்பி வைத்தான். அந்த இறுதி யுத்தத்தின் முதல் நாளன்று ராவணன் பலத்த காயங்கள் அடைந்து, தன்னிடம் இருந்த அனைத்தையும் இழந்து தலை குனியும் நிலைக்கு ராமரால் தள்ளப்பட்டு, அன்று போய் மறுநாள் போர்க்களத்திற்கு வரும்படி அவரால் கூறப்படும் இழிநிலைக்கு வந்து நின்றான். தனது நிச்சய வெற்றிக்காக, அகஸ்திய மகாமுனிவரின் அறிவுரைப்படி ராமர் ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகம் சொல்லி சூரியனைப் பிரார்த்தித்துவிட்டு மறுநாள் போருக்கு வந்தார். அன்று நடந்த மாபெரும் யுத்தத்தின் முடிவில் ராமரால் கொல்லப்பட்டு ராவனணன் உயிர் இழந்தான்.

ராமர் கொடுத்த அறிவுரைப்படி விபீஷணன் ராவணனின் ஈமக் கிரியைகளைச் செய்து முடித்தான். அது முடிந்ததும் விபீஷணன் இலங்கை அரசனாக முடிசூட்டப்பட்டான். சீதையை அழைத்துவரச் சொல்லி ராமர் விபீஷணனனிடம் கூறினார். சீதை வந்து சேர்ந்ததும், அங்கிருந்தோர் அனைவரும் அதிர்ச்சி கொள்ளும் உணர்வு வரும்படி, சீதைக்கு எங்கு போக விருப்பமோ அங்கு போகலாம் என்று ராமர் அவளிடம் சொன்னார். அதற்கான காரணத்தை அவர் வெளிப்படியாகச் சொல்லாவிட்டாலும், பாமரர்கள் மனதில் சீதையைப் பற்றிய தவறான எண்ணம் ஏதும் வரக்கூடாது என்றுதான் ராமர் நினைத்திருந்தார். மக்கள் சீதையை வெறுத்து மறுக்கலாம் என்ற பயம் ராமர் மனதில் ஆழமாக இருந்தது என்று வால்மீகி கூறுகிறார். தனது தூய்மையை எல்லோருக்கும் அறிவிக்கும் முகமாக தானே நிச்சயித்து சீதை அக்னிப் பிரவேசம் செய்தாள். அவ்வாறு செய்த சீதையைச் சிறிதும் தீண்டாமலேயே அக்னி பகவான் திருப்பிக் கொண்டு வந்ததும், ராமர் சீதையை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். பின்னர் அனைவரும் புடைசூழ ராமர் அயோத்தி செல்வதற்கு புஷ்பக விமானம் ஏறினார். வரும் வழியில் அவர்கள் அனைவரும் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் வந்திறங்கினார்கள். அங்கிருந்து ராமர் பரதனுக்குச் சொல்லி அனுப்பினார். மிகுந்த மகிழ்ச்சியுடன் பரதன் அங்கு வந்து அவர்கள் அனைவரையும் அயோத்திக்கு அழைத்துச் சென்றான். பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு ராமர் சக்கரவர்த்தியாக அரியணை ஏறிய பட்டாபிஷேக விழா அதுவரை எவரும் காணாத ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

6. அவதாரத்தின் முடிவு

    (VII, சருக்கங்கள் 37-111)

ramayanaமற்ற அரச பரம்பரையினர் போல வாழ்நாள் முழுதும் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்கு ராமரோ, சீதையோ ஒரு சாதாரண அரசனோ, அரசியோ அல்ல. ஆனாலும் அவர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்ததும் உண்மைதான்; வேறெவராலும் அத்தகைய ஆட்சியை வழங்க முடியாது என்பதும் உண்மைதான். அவர்களது ஆட்சியின்போது நாடு வளமாகவும், அமைதியாகவும் இருந்தது; நாட்டு மக்கள் அனைவரும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு நீதி, நேர்மை வழுவாத வாழ்க்கையை வாழ்ந்தனர். அதனால் இன்றும் “ராம ராஜ்யம்” என்றால் அது செல்வம் கொழித்த நாடாகவும், அதில் உள்ள மக்கள் ஆன்மீகத்தில் செழித்தவர்களாகவும் இருப்பார்கள் என்றே அனைவரும் அறிந்து வைத்துள்ளார்கள். ராமரது ஆட்சியைப் பற்றி பரதன் மிகவும் பெருமையாகப் பேசுகிறான் ( VII, 41, 16-21). ஆனாலும் ராமரும், சீதையும் அவதாரங்கள் என்றும், ராவணன் என்னும் வடிவில் குடியிருந்த தீய சக்தியை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் அவர்கள் இவ்வுலகிற்கு வந்த முதற்காரணம் என்பதையும் மறக்க முடியாது. அந்தக் குறிக்கோள் நிறைவேறியதும் அவர்கள் தங்களது மூல வடிவிற்குத் திரும்பி, அவர்களது முந்தைய உயர் நிலையை அடையவேண்டும் என்பதுதானே எவரது எதிர்பார்ப்பாகவும் இருக்க முடியும்? அந்தக் கதைதான் இறுதி காண்டமான உத்தர காண்டத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அதில் ராவணனது சரித்திரம், அனுமனின் இளம் பிராய அனுபவங்கள், சம்புகனைப் பற்றிய நிகழ்வுகள் என்றிவ்வாறான பல விவரங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

ராமர்-சீதையின் பிரிவு, சீதையின் மறைவு, லக்ஷ்மணனின் புறப்பாடு, அதன் பின் ராமர் வைகுண்டத்திற்கு ஏகுதல் என்றிவ்வாறு தொடரும் நிகழ்ச்சிகளுடன் உத்தர காண்டம் நிறைவு பெறுகிறது. அவையெல்லாமே தாங்க முடியாத அளவிற்கு சோகமயமானது என்றாலும், சீதை ராமரை விட்டுப் பிரியும் காட்சி அவை அனைத்திற்கும் மேலாகத் துயரை வரவழைக்கும். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ராமர் சீதையிடம் தேவையற்ற அளவிற்குக் கொடுமையாக நடந்துகொண்டது போல இருக்கும். அதனாலேயே உத்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்றும், ராமருடைய பட்டாபிஷேகத்துடன் முடியும் யுத்த காண்டமே ராமாயணத்தின் இறுதிப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று சில பக்தர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் ராமாயணத்தின் தொடக்கத்திலேயே வால்மீகி ஆறு காண்டங்கள் எழுதிய பின்னர் இன்னுமொன்றும் எழுதினார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், அந்த பக்தர்களின் எண்ணத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ராமாயணத்தின் மற்ற காண்டங்களில் காணப்படாத துயர சம்பவங்கள் உத்தர காண்டத்தில் மிகவும் அதிகமாக இருப்பதால் அது ஒரு பிற்சேர்க்கையே என்று வாதம் செய்வோருக்கு, வேறு எந்த மனோநிலைகளையும் விட அதிகமாகச் சோகமான நிகழ்வுகளே ராமாயணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்தே வருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதே நமது பதிலாக இருக்க முடியும். ராமாயணக் காவியத்தில் எங்கெங்கு அவ்வாறு வருகின்றன என்பதை இனி நாம் காணலாம்.

தான் கண்டு அனுபவித்த ஒரு சோகக் காட்சியே வால்மீகி முனிவரை ராமாயணக் காவியம் எழுதுவதற்குத் தூண்டியது. இரண்டு கிரௌஞ்சப் பறவைகள் தனித்து சல்லாபித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வேடன் அம்பெய்தி அவைகளைப் பிரித்தான். அதைக் காண நேர்ந்த அவருடைய துயரத்தின் வெளிப்பாடே இருவரி கொண்ட ஒரு ஸ்லோகமாக அமைந்தது என்று அந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும் சருக்கம் கூறுகிறது. அதன் பின் வரும் அயோத்தியாக் காண்டத்தின் தொடக்கத்திலேயே காணப்படும் நிகழ்வான ராமர் இளவரசாக முடிசூட்டப்பட்டு தடபுடலாக நடக்கவேண்டிய விழா, எவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில், அவரது வனவாசத்திற்குக் கொண்டுசென்று, அதன் விளைவாக தசரதரின் இறப்பிலே முடிகிறது. அடுத்து வரும் ஆரண்ய காண்டத்தின் இறுதியில் இரண்டாவது அதிர்ச்சியான ராவணனின் சீதை அபகரிப்பில் முடிகிறது. அதன் பின் தொடரும் மூன்று காண்டங்களின் இறுதியில் வரும் சீதை ராமருடன் திரும்பிச் சேரும் நிகழ்விற்காக, நாம்  பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அந்த இனிய நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் சமயம், யாரும் சிறிதும் எதிர்பாராத முறையில், ராமர் சீதைக்கு ஒரு சோதனை வைப்பதைக் காண்கிறோம். அந்தச் சோதனையில் அக்னி பகவானே சீதையைக் கொண்டுவந்து ராமரிடம் சேர்ப்பதினால் நாம் துயரத்தில் இருந்து விடுபடுகிறோம். இவ்வாறாக ராமாயணத்தின் ஆறு காண்டங்களில் தொடராக நடக்கும் நிகழ்வுகளைக் கண்ட நமக்கு, ஏழாவது காண்டம் துயர் நிறைந்ததாக உள்ளதால் அது ஒரு இடைச் செருகல் என்று சொல்லப்படுவது ஒரு நிறைவான வாதமாக எடுபடவில்லை. (உத்தர காண்டத்தில் உள்ள சில சருக்கங்கள் மற்ற காண்டங்களில் இருந்து வேறுபட்டதாகத் தெரிகின்றன என்ற கருத்துக்கள் இருந்தாலும் அவை சீதை, லக்ஷ்மணன் அல்லது ராமரது புறப்பாடுகளைப் பற்றியதாக அமையவில்லை.) இப்போது நாம் அவதாரத்தின் இறுதிக் கட்டத்தைப் பற்றி உத்தர காண்டத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை விவரமாகப் பார்ப்போம்.

(தொடரும்)

One Reply to “ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *