முகப்பு » அனுபவம், இலக்கியம், வரலாறு

கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே

November 4, 2014
-  

சுடுகாட்டின் மீது இருந்த பயம் எல்லாம் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதே போய் விட்டது. பழங்காநத்தம் பஸ் ஸ்டாப்பில் இருந்து டி வி எஸ் பள்ளிக்கு குறுக்கு வெளியில் செல்வதற்கு எனக்கு இருந்த வழிகளில் ஒன்று சுடுகாட்டு வழி. சிறு சிறு மணல் மேடுகளின் நடுவே இறைந்து கிடக்கும் கை கால் மற்றும் மண்டை ஓடுகளின் மீது ஜாக்கிரதையாக கடந்து சென்று பள்ளியை அடைவது எனது தினசரி சாகசங்களில் ஒன்றாக அப்பொழுது இருந்தது. தாரை தப்பட்டைகளுடன் ஆட்டங்களுடனும் ஜாதி பூக்கள் எறியப் பட ஆர்ப்பாட்டமாக வந்து சேரும் பிணங்களின் எலும்புகளை மறுநாள் நான் கடந்து செல்லும் அதே சுடுகாட்டில் இடற நேரிடும். அந்த சுடுகாட்டின் பின்புறமாக ரயில்வே லைன் ஓடும் அதைத் தாண்டினால் பக்கவாட்டில் ஒரு பெரும் பள்ளமும் அதன் பின்னால் பெரியதொரு ஆல மரத்தின் அடியில் இன்னொரு சுடுகாடும் இருந்தன. அந்த சுடுகாட்டைக் கோவலன் பொட்டல் என்பார்கள். அதன் எதிர்புறம் போகும் சாலையில்தான் இப்பொழுதைய மதுரையின் அஞ்சா நெஞ்சன் வசிக்கிறார்.

அந்த ஆலமரத்தடி சுடுகாட்டில் எனக்கு அந்தச் சிறு வயதில் பல ஆர்வங்கள் நிறைந்திருந்தன. கோவலன் பொட்டல் சுடுகாட்டில் பெரிய பெரிய பானைகளும் அந்தப் பானைகளில் இருந்து உடைந்த அழகான சின்னஞ் சிறு வழவழப்பான சில்லுகளும் நிறையைக் கிட்டும். ஒவ்வொரு முறை பிணம் தோண்டும் பொழுதும் இன்னுமொரு பெரும் மண்பானையை வெளியே எடுத்துப் போட்டிருப்பார்கள். அந்த மாபெரும் மண் பானைகள் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்று தொல் பொருள் சின்னங்கள் என்ற உணர்வு எங்களுக்கு இருந்தது கிடையாது. கல்லை விட்டெறிந்தால் ஓட்டை போட்டுச் சிதறும் இன்னொரு பானையாக விளையாட்டுப் பொருளாக அவை இருந்தன. ஆனால் அவற்றின் பெயர் முது மக்கள் தாழி என்ற உண்மை அப்பொழுதே எனக்குத் தெரிந்திருந்தது. அந்த இடத்தில் தான் கோவலனுக்கு பாண்டிய மன்னன் மரண தண்டனை அளித்தான் என்றும் நம்புகிறார்கள்.

சாலையில் இருந்து வேலிக் கருவேல முட்களினால் மறைக்கப் பட்ட ஒதுங்கிய விளையாட்டு இடமாக அப்பொழுது அது இருந்தது. பின்னர் ஒரு முறை பள்ளியில் இருந்து செல்லும் பொழுது அந்த இடம் ஏராளமான ஜீப்புகளினாலும், டர்பன் வைத்த டவாலிகளினாலும் சூழப் பட்டிருந்தது. வினாடிக்கு மூன்று ஐ சீ, ஐ சீக்களை உதிர்த்த அதிகாரி ஒருவர் அந்த இடத்தை வரலாற்றுச் சின்னமாக மாற்றும் திட்டத்திற்காக விஜயம் செய்திருந்தார். இப்பொழுது அதிமுக எம் பியாக இருக்கும் மலைச்சாமி ஐ ஏ எஸ் தான் அந்த ஐ சீ அதிகாரி. ஆனால் இன்று வரை அந்த இடம் இன்னமும் யாராலும் கவனிக்கப் படாத சுடுகாடாகவே நிற்கின்றது. எவரும் அதை தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய இடமாகக் கருதியதில்லை.

burial_pot_thazhiதினமலரில் முதுமக்கள் தாழி ஒன்றை உடையாமல் அகழ்ந்தெடுத்த செய்தியைப் படத்துடன் பார்த்த பொழுது என் மனதை உறுத்திக் கொண்டிருந்த புலவர் ஐயூர் முடவனார் என்ற சங்கப் புலவர் எழுதிய இந்த சங்கப் பாடல் நினைவுக்கு வந்தது, அதன் தொடர்ச்சியாக நான் தொட்டு விளையாடிய சில தாழிகளும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்தன:

ஓயாமல் சுழன்ற வண்டிச் சக்கரத்தின் அச்சில் ஒட்டிக் கொண்ட வெண்ணிற பல்லி போல தன் வாழ்க்கையும் இவனுடைய வாழ்க்கையுடன் ஓடி விட்டது ஆகவே கலம் செய்யும் குயவனே, செய்யும் கலத்தை இன்னும் பெரிதாக எனக்கும் அதிலொரு இடத்துடன் செய்வாயாக என்று சொல்லொணா சோகத்துடனும் ஏக்கத்துடனும் கோரிக்கை வைத்த பெண்ணின் கலமும் அந்த உடைந்து போன கலங்களில் ஒன்றாக இருந்திருக்கக் கூடும்.

கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!

வண்டியின் ஆரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு வண்டியும் அதன் ஆரமும் போகும் வழி எது என்பதை அறியாது அது போகும் போக்கில் தானும் ஒட்டிக் கொண்டு சென்ற சிறிய வெண்ணிறம் உடைய பல்லியைப் போலவே இந்தத் தலைவனுடன் நானும் அவனை அன்றி வேறு வெளி உலகம் அறியாது இத்தனை காலம் வறண்ட பல நிலங்களை அவனுடன் ஒட்டிக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக என் வாழ்க்கையையும் கடந்து விட்டேன். இப்பொழுது அவனை இழந்த பின் நான் தனியே வாழ்வது எங்கனம்? ஆகவே அவனுடன் கூடவே எனக்கும் ஒரு இடத்தை அந்தத் தாழியில் இருக்குமாறு அதை அகலமாகச் செய்வாயாக என்கிறாள். இதில் இருக்கும் சோகம் மனதை கலங்க அடிக்கும் ஒரு மாபெரும் சோகம். ஆழியை விடப் பெரிய ஒரு சோகத்தை இத்தனை சிறு வரிகளில் அடைத்து விட்டிருக்கிறார் அந்தப் புலவர்.

முதுமக்கள் தாழியில் பிணத்தைப் புதைக்கும் வழக்கம் எந்தக் காலம் வரை இருந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. தினமலர் செய்தியில் அகழ்வாராய்ச்சி செய்த இடத்தில் இருந்து கிட்டிய தாழி 2500 ஆண்டுகள் என்கிறார்கள். நாம் இங்கு ஏற்கனவே பேசிய ஒரு தாழி 5000 ஆண்டுகளுக்கும் மேலானது என்கிறார்கள். அப்படியானால் இந்தக் கவிதையும் அவ்வளவு பழமை உடையதாக இருந்திருக்குமா அல்லது பிற்காலத்திலும் தொடரப் பட்ட இந்த வழக்கத்தைக் கண்ட கவிஞர் எழுதியதா என்பது தெரியவில்லை. நிச்சயம் நான் தொட்டு விளையாடிய அந்த தாழிகளின் சில்லுகள் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைத்ததாக இருந்திருக்க வேண்டும், இன்றும் நீங்கள் அந்த கோவலன் பொட்டல் சென்றால் சில ஆயிரம் ஆண்டு பழமையான அந்தப் பாண்டங்களின் உடைந்த சில்லுகளைக் காணலாம், சற்று தோண்டினால் எலும்புகள் நிறைந்த முழுப் பாண்டங்களும் கிடைக்கலாம். இந்தக் கோவலன் பொட்டலில் இருந்து என்னைப் போன்ற சிறுவர்களினால் உடைக்கப் படாத சில முழுமையான மண் தாழிகளை பாதுகாப்பாக எடுத்து மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள ம்யூசியத்தில் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள்.

செய்தி:   http://www.dinamalar.com/News_Detail.asp?Id=432619

(“2012ஆம் ஆண்டு ஒரு தினமலர் செய்தியைப் படித்த பொழுது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட ஒரு மடல்” என்ற குறிப்புடன் ச.திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

 

3 மறுமொழிகள் கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே

  1. பாலா சுவாமிநாதன் on December 11, 2014 at 6:32 am

    இந்த சங்கப் பாட்டின் பொருளை உணர்ந்து நுகர வைத்துவிட்டீர்கள் ஐயா! மதுரையில் பிறந்து வளர்ந்த்தால் முழுமையாகச் சுவைக்க முடிந்தது. மிக்க நன்றி.

  2. Dr.A.Anburaj on December 20, 2014 at 9:19 am

    பாக்கிஸ்தானில் நடந்த பயங்கரவாதம் குறித்த படங்கள் செய்திகளை ஏன் வெளியிடவில்லை? வலைதளத்தில் தினசாி பதிவுகள் செய்ய வேண்டும்.

  3. அணைக்கட்டுபாலா on August 21, 2015 at 12:39 pm

    இக்கட்டுரையை 21.08.2015 அன்று தான் படித்தேன். இச்சங்கக் காலக் கவிதையில் வரும் உவமையைப் பற்றி நான் ஒரு வலைப்பூ ‘யாமறிந்த உவமையிலே’ என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். blogger.anaikattubala.com என்று தச்சிட்டோ அல்லது ‘அணைக்கட்டுபாலா’ என்று தச்சிட்டோப் படிக்கவும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*