உண்மையான ரசிகன்

nagaswaramகல்யாண மண்டபத்தின் இரைச்சலிலும், சப்தங்களிலும், உறவினர்களின் குசல விசாரிப்புகளிலும் பொழுது போனதே தெரியவில்லை. இளம் தம்பதிகளை வாழ்த்தி, பரிசையும் கொடுத்தாயிற்று. சிற்றுண்டியே பலமாக இருந்ததால், மதிய உணவுக்குக் கடைசிப் பந்திக்குப் போகலாம் என எண்ணிக் கொண்டேன். ‘வள, வள’ என அரட்டை அடிக்கப் பிடிக்கவில்லை. எல்லாத் திருமணங்களிலும், நாதஸ்வர வித்வானைத்தான் ஒருவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். திருமணங்களில் அவருடைய பங்கு ஒரு இன்றியமையாத கடமை. ஆனால், அவரை வாழ்த்தவும் ரசிக்கவும் ஆட்கள் அபூர்வம்- என்னைப் போல ஓரிருவரைத் தவிர!

இப்போது அவர், கொஞ்சம் ‘ரிலாக்ஸ்டாக’ ‘அலை பாயுதே’ வாசித்துக் கொண்டிருந்தார். அவர் முன்பு இருந்த காலியான ஆசனங்களில் ஒன்றில் நான் போய் அமர்ந்து கொண்டேன். இன்னும் ஒரு மனிதரும் அங்கே அமர்ந்திருந்து, தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தார். மெல்ல நாதஸ்வர வித்வான் வாசிப்பை நிறுத்தலாமா, இடைவேளை விடலாமா என யோசிக்கத் துவங்கும் முன்னர், அவரிடம் ஒடோடிப் போய், “ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே, பாட்டை வாசிப்பீர்களா?” என்று கேட்டேன். தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து வந்து ஒரு பெண்மணி ஏதோ ஒரு பாட்டைக் கேட்கிறார்களே என அவர் மகிழ்ந்து போய் விட்டார். “ஓ, கட்டாயமாக,” என்று கூறி விட்டு உற்சாகமாக வாசித்தார்.

கண்ணை மூடிக் கொண்டு, ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் நாதஸ்வர வித்வான் சண்முகசுந்தரம் வாசித்து ஜனங்களைப் பரவசத்திலாழ்த்தும் அந்தக் காட்சியை மனக்கண்ணில் கண்டு களித்தேன். குற்றாலமும், குறவஞ்சியும், அந்த அற்புதமான சூழலும் மனதில் தோன்றி உள்ளத்தைக் களிப்படையச் செய்தன. பாடல் முடிந்ததும், வித்வானும் குழுவும் உணவு அருந்தத் தயாராகி விட்டனர். நானும் எனது நன்றியைத் தெரிவித்தேன். “இப்பவெல்லாம் யாரம்மா ஜாஸ்தி இது மாதிரி கேட்கிறாங்க? பெரிய பெரிய வித்வான்கள் விடிய விடிய வாசித்தது, ஜனங்கள் ரசித்துக் கேட்டது, அதெல்லாம் ஒரு காலம்,” எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

அந்த இன்னொரு ரசிகரும் இப்பொது எழுந்து வந்து என்னுடன் உரையாட ஆரம்பித்தார். மிகவும் சிறிய வயதில் தான் கேட்ட நாதஸ்வர வித்வான்களின் வாசிப்பையெல்லாம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர் மிக சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சியைக் கூறினார்.

இந்த சென்னை 2014 டிசம்பர்- மார்கழி சங்கீத சீஸனில் இதைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

******

Rajarathinam-pillai“எங்க ஊர் சுவாமி கோவிலில் திருவிழா. பெரிய பெரிய வித்வான்கள் வந்து பாடுவதும், நாதஸ்வரம் வாசிப்பதும் வழக்கம். அன்றைக்கு நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களுடைய நாதஸ்வரக் கச்சேரிக்கு ஏற்பாடாகி இருந்தது. அந்தக் காலத்தில் எங்கள் ஊர் சம்பிரதாயம் என்னவென்றால்,வெளியூரிலிருந்து பெரிய வித்வான் வாசிக்க வந்தால், உள்ளூர் வித்வான் அதே மேடையில் அவரை வரவேற்கிற மாதிரி முதலில் ஒரு பத்து நிமிஷம் வாசிப்பார். அதற்குப் பெயர் ‘எடுத்துக் கொடுக்கிறது’ என்பது. அதாவது பெரிய வித்வானை உள்ளூர் வித்வான் வரவேற்று, மரியாதை பண்ணி, அறிமுகம் செய்கிறது மாதிரி. அப்புறம் தான் பெரிய வித்வான் தொடர்ந்து வாசிக்க ஆரம்பிப்பார். இதெல்லாம் ராத்திரி ஒன்பது- பத்து மணிக்குத்தான் ஆரம்பம். கூட்டமான கூட்டம் ராஜரத்தினம் பிள்ளைவாளின் வாசிப்பைக் கேட்கக் கூடியிருக்கிறது.

“பிள்ளைவாளும் மரியாதையை ஏற்றுக் கொண்டு தன்னுடைய வாசிப்பைத் துவக்கியிருந்தார். என்ன ராகம் என்று நினைவு இல்லை. ஆனால் அவர் அப்போது தான் ஆரம்பித்து ‘உலாத்திக்’ கொண்டிருந்தார். அப்படி என்றால் என்ன தெரியுமா? ராகத்தை, ஆலாபனையை ஆரம்பித்து, ஒரு நாலைந்து வட்டங்களுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வலம் வருவார்கள். ராகத்தின் ஒவ்வொரு கூடுதல் நெளிவும் சுளிவும் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பிக்கும். பின்னே? நாலைந்து மணி நேரம் அல்லவா, விடிய விடிய வாசிக்கணுமில்லையா? அதனாலே பிள்ளைவாள் ‘உலாத்தி’க் கொண்டிருந்தார். கூட்டம் இதுலேயே கிறங்கிப் போய் தலையாட்டிக் கொண்டு இருக்கிறது!

“எங்க ஊரிலே ஒரு மனுஷர்- பேரு சீதாராம ஐயர். ஒரு பரதேசி மாதிரி இருப்பார். யாரையும் லட்சியம் பண்ண மாட்டார். ஊரே பிள்ளைவாள் வாசிப்பைக் கேட்க கல்யாண வீட்டுப் பந்தலிலே கூடிக் கிடக்கிறது. இவரானால் இங்கே ஊர்க்கோடியிலே, ஏதோ ஒருத்தர் வீட்டுத் திண்ணையிலே படுத்துத் தூங்கிக் கொண்டு இருக்கிறார்! ஒருமணி நேரம் ஆயிற்று; ரெண்டு மணி நேரமும் ஆயிற்று. ஒரு மனிதனும் மூச்சு விடவில்லை; ஒரு சிறு சப்தமுமில்லை; எல்லாரும் சங்கீதத்தில் மயங்கிக் கிடக்கிறார்கள். காற்றிலே மிதந்து வரும் நாதஸ்வர இசை சீதாராம ஐயரைத் தட்டிக் கூட எழுப்ப முடியவில்லை! இப்படியும் ஒரு ஞான சூன்யமா என்று எல்லாரும் நினைத்துக் கொண்டோம்.

“கொஞ்ச நேரத்துல பிள்ளைவாள் ‘உலாத்த’லை முடித்துக் கொண்டு பிருகாக்களையும், ஸ்பெஷல் பிடிகளையும், சங்கதிகளையும் வாணவேடிக்கை மாதிரி அள்ளி விட ஆரம்பித்தார். இதுவரை யாருமே கேட்டிராத கந்தர்வ கானம் அல்லது தேவகானம் அது! கூட்டம் தேன் குடித்த நரிகள் மாதிரி மயங்கிக் கிடக்கிறது.

திடீரென்று ஒரு சலசலப்பு! பார்த்தால் அங்கே வித்வானுக்கு முன்னால் மேடையின் எதிரில் நிற்கிறார் சீதாராம ஐயர். கண்ணிலிருந்து நீர் காவேரி மாதிரி வழிகின்றது. தலை இப்படியும் அப்படியும் பிள்ளையவர்களின் நாதஸ்வரத்திலிருந்து எழும் ஒவ்வொரு சங்கதிக்கும் ஆடுகின்றது.

பிள்ளைவாளும் வாசிப்பின் இடையிடையே இவரைப் பார்த்துக் கொள்கிறார். முழுமையாக வாசித்து முடித்தவர் அப்படியே எழுந்து போய் – அவர் கண்களிலும் நீர் வழிகிறது- சீதாராம ஐயரை ஆலிங்கனம் செய்து கொள்கிறார்- “நீர் தானய்யா உண்மையான, பரம ரசிகன்!” என்று கூறுகிறார். கூட்டம் பிரமித்துப் போய் அப்படியே உட்கார்ந்திருக்கிறது …………………..”

ஆமாம். அருமையான இசையை எல்லாராலும் கேட்டு அனுபவிக்க முடியும். ஆனால் கந்தர்வ கானத்தையும் தெய்வீக இசையையும் உணர்ந்து அனுபவிக்க சீதாராம ஐயர் போன்றவர்களால் தான் இயலும். அதையும் அந்த இசையின் பிறப்பிடமான ராஜரத்தினம் பிள்ளையவர்கள் போன்ற வித்வானால் தான் இனம் கண்டு கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு சான்று அல்லவா !

******

நானும் ஒரு அழகான ராகப் பிரயோகத்தைக் கேட்டதைப் போல இந்தக் கதையைக் கேட்டு விட்டு, உவகையில் நிறைந்து பொங்கிய உள்ளத்துடன் செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயலாமே எனச் சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி என் கணவருடன் விரைந்தேன்.

3 Replies to “உண்மையான ரசிகன்”

  1. ரசனை உள்ளவர்கள் ஒருவர் இருந்தால் போதும் கச்சேரி களை கட்டும் பக்தனை தான் பகவான் தன்னடி செர்த்துகொள்வான் அது போல் தான் ரசிகன்

  2. அருமை ! வாழ்த்துக்கள்.
    நாதஸ்வர சக்கரவர்த்தியின் வாசிப்பைக் கேட்க , தனது சிறுவயதில் நெல் வயல் வரப்புகள் மீது குறுக்குப் பாதையில் ஓடி , கிராமத்தில் சுவாமி புறப்பாட்டுக்கு அவர் வாசிக்கத்தயாராக இருந்த இடத்துக்கெல்லாம் போனதுபற்றி செம்மங்குடி மாமா அவர்கள் எங்களிடம் கூறியது நினைவுக்கு வருகிறது ! சுமார் 5 மணி நேரம் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் ஏந்திவரும் ஆட்களும் , உத்சவமூர்தியை தூக்கி வருபவரும் , நாதஸ்வரத்துடன் அவரும் ,இரட்டைத்தவில் வித்வான்களும் நடந்தே சென்று வாசிக்கும் தேக / மனோ பலம் வியக்கத்தக்கதே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *