சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்

சமுதாய சீர்திருத்தவாதிகள் தனி மனிதர்களாக தம்மை வெளிப் படுத்திக் கொள்ளாமல் ஒரு சக்தியாகவே செயல்பட்டு வந்திருக்கின்றனர். அவ்வகையில் 12 ம் நூற்றாண்டில் கன்னட இலக்கிய மற்றும் பக்தி உலகில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்த ’வசனகாரர்கள் ’ என்ற அடை மொழிக்குரியவர்கள் வீர சைவர்களாக அமைந்து ’வசனங்கள் ’மூலம் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர்.வசனங்களைப் படைத்தவர்கள் ‘வசனகாரர்கள்’ என அழைக்கப் படுகின்றனர்.

lingayat_women சுத்த சைவம், பூர்வ சைவம் , மார்க்க சைவம் ,ஆதி சைவம் , வீர சைவம் என சைவம் பல வகைப் பட்டு நின்ற கால கட்டத்தில் வீரசைவத்தின் கொள்கைகள் வசனகாரர்களைக் கவர்ந்தன. வீர சைவம் என்பது இட்ட லிங்கத்தை வழிபாடு செய்வதாகும்.குருவிடம் இருந்து பெற்றுக் கொண்ட லிங்கத்தை உடலின் மீது கட்டிக் கொள்வது இவர்கள் கொள்கையாகும்.இந்த லிங்கத்தை ஒரு போதும் இவர்கள் பிரிவதில்லை.மார்பில் சிவலிங்கத்தை அணிந்ததால் இவர்கள் “லிங்காயத் “என்றும் அழைக்கப்படுகின்றனர். [இன்றும் கூட கர்நாடகத்தில் ’லிங்காயத் ’ ஒரு பெரிய பிரிவாக வாழ்வது குறிப்பிடத் தக்கது ] உபதேசம் தருபவர் குருவாகவும்,அவர் அளிக்கும் சிவ அடையாளப் பொருள் லிங்கமாகவும் உள்ளது.அவர்கள் தாங்கள் அணிந் திருக்கும் லிங்கத்தை மட்டுமே வழிபடுகின்றனர்.இது முதியவர்களிடையே இன்றும் காணப்படுகிறது.வர்ணாசிரம முறையிலான சாதி வேறுபாடுகளை வீர சைவம் ஏற்கவில்லை. சிவ தீட்சை பெற்ற பிறகு அனைவரும் ஒன்றா கவே கருதப்பட்டனர். அறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். வீரசைவத்தினர் ’சரணர்” என்றும் அழைக்கப் பட்டனர்.சாதி ,பொருளாதார வேறபாடுகளின்மை, பெண்ணை மாயையாக விரட்டாத உயர்வு, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீர சைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்.

பெண்கள் ஒடுக்கப்பட்டும் ,ஒதுக்கப்பட்டும் வாழ்ந்த காலகட்டதில் வசனகாரர்கள் வீரசைவக் கொள்கையின் படி பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கிடைக்கும்படி செய்யப் போராடியிருக்கின்றனர். ’பெண் என்பவள் மாயை அல்லள் ;அவள் உண்மையில் கபிலசித்த மல்லிகார் ஜுனன் ’என்று சித்தராமய்யன் கூறுகிறான்.பொன்,பெண், மண் ஆகியவை மாயை அல்ல.மனதில் உள்ள ஆசையே மாயை என்பது அல்லமா பிரபுவின் கருத்தாகும்.பார்ப்பதற்கு எப்படி இரு கண்கள் தேவையோ அது போலவே வாழ்வதற்கு ஆண்-பெண் என்ற இரு கண்கள் வேண்டும் என்றும் அல்லமா வின் வசனம் அமைகிறது.வீரசைவ நெறி எந்த இடத்திலும் பெண்ணை ஒதுக்கவில்லை. வீரசைவர்களை சமூக சமயப் புரட்சியாளர்கள் என்று சொல்லலாம் வீர சைவத்தின் இந்தப் பார்வை பெண்கள் தங்கள் அனுபவங் களை வசனங்களாக்க உதவியது.

கொள்கைகளால் கவரப் பட்ட வீர சைவர்கள் சமுதாய நலனுக் காகவும்,மக்களின் வாழ்க்கையை அர்த்தம் உடையதாக்கும் வழியிலும் தாம் சொல்ல வந்த கருத்துக்களை ’வசனங்கள்”என்ற வடிவில் வெளிப்படுத்தினர். இந்த வசன இலக்கிய [வசன சாகித்யா ] வடிவம் அறிமுகமாவதற்கு முன்பு வரை மிகக் கடுமையான நடையில் அமைந்த இலக்கியம் தான் சிறப்புடைய தாக இருக்கும் என்பது அன்றைய சித்தாந்தமாக இருந்திருக்கிறது.பன்னிரண் டாம் நூற்றாண்டு வரை அமைந்த கன்னட இலக்கியங்களில் பழங்கன்னடச் சொற்களின் ஆளுமையே இருந்தது.சாதாரணக் கல்வியறிவுடையவர்,பாமரர் ஆகியோரைச் சேராததாகவே ஒரு கால கட்ட இலக்கியங்கள் இருந்திருக் கின்றன. இந்தப் போக்கை மாற்றிய தன்மை வசனகாரர்களையே சேரும். வசனம் என்பது உரைநடை மற்றும் பாடல் என்ற இரணடிற்கும் இடைப் பட்ட நடை கொண் டது. சொல்வதைச் சுருக்கமாகவும், எளிமையாகவும் , நேரடியாகவும் எல்லோருக்கும் பொருள் புரியும்படி சொல்வதாகும்.பத்து –பன்னிரண்டு என்ற இரண்டு நூற்றாண்டுகளில் வசன இலக்கியத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.வசனகாரர்கள் கவிஞர்கள் இல்லை : பண்டிதர்களும் இல்லை. மனிதர்கள் மனிதர்களோடு பேசுவதான, விவாதிப் பதான முறையிலேயே அவர்களின் வசனங்கள் உள்ளன.வசனகாரர்கள் சிவனைப் பற்றிப் பேசுவார்கள் சிவனோடு பேசுவார்கள் என்று ஏ.கே.ராமனுஜம் சொல்வது குறிப்பிடத் தக்கது. எனவே அறிவை வளர்க்கும் முயற்சியை விட மனதை, உண்மையை அறியும் முயற்சியை வசனங்கள் வெளிப்படுத்தின .அதுவே அவற்றின் தனிச் சிறப்பாகும். வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப் படுகின்றன.தேவரதாசிம்மையா அல்லமாபிரபு ,சித்தராமய்யன், பசவண்ணா, அக்கம்மா, ஆகியோர் வசனகாரர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

வசனகாரர்களின் திருக்கூட்டம் (நடு நாயகமாக நிற்பவர் பசவர்)

வசனகாரர்களின் திருக்கூட்டம் (நடு நாயகமாக நிற்பவர் பசவர்)

வீரசைவர்கள் மக்கள் மத்தியில் பரப்ப முயன்ற கொள்கைகளில் மிகச் சிறந்ததாக அமைவது ’காயகவே கைலாசா”. ’ காயகம் என்பதற்கு உடல் உழைப்பு என்பது பொருளாகும் அது இல்லாமல் வாழ்க்கை இல்லை..மனிதன் தன் அற நெறிச் சாதனையை சாதித்துக் கொள்ள உதவும் ஒரு சாதனம் தான் உழைப்பு. அது இருந்தால் மட்டுமே உரிய பலன் கிடைக்க முடியும்.உடல் உழைப்பு தான் மோட்சம் தருவது என்ற உண்மையை சாதாரண மனிதனும் அறியச் செய்வதே அடிப்படை நோக்கமாகும் .மனிதன் ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும்.எதுவும் செய்யாமல் பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கு உலகில் இடமில்லை.எனவே காயகத்தின்படி எந்த ஒரு தொழிலும் உயர்ந்ததும் இல்லை:தாழ்ந்ததும் இல்லை.அதனால் தான் பசவரின் அனுபவ மண்டபத்தில் மடிவாள மாச்சையா [துணி வெளுப்பவன் ]நூலிய சந்தையன்[கயிறு திரிப்பவன்] ஹள்ளய்யன் [மிதியடிகள் தைப்பவன்] என்று பலரும் பங்கு பெற்றிருந்ததை அறிய முடிகிறது.எந்த வேறுபாடும் இன்றி பலவகையான மனிதர்களின் கூட்டாகவே தங்களின் அனுபவங்களை வித்தியாசம் இன்றி மிக இயல்பாக பகிர்ந்து கொள்ள இந்த அனுபவ மண்டபம் உதவி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

வசனகாரர்களுள் காலத்தால் முதன்மையானவராக அமைபவர் தேவர தாசிமையா. இவருடைய காலமாக 10 ம் நூற்றாண்டு கணிக்கப்படு கிறது.கர்நாடக மாநிலம் முதனூரு கிராமத்தைச் சேர்ந்தவர்.அந்த கிராமத் தில் பல கோயில்கள் இருந்தாலும் திருமாலின் அவதாரமான இராமன் சிவனை வணங்கியதான ஐதீகப் பின்னணியில் வந்தது என்பதால் ராம நாதன் கோயில் அவரைக் கவர்கிறது. அதனால் தான் தாசிம்மையாவின் முத்திரை ராமநாதா [ ராமனின் கடவுள் ] ஆகிறது. இறைவனின் அருளை வேண்டி கடுமையான தவம் செய்யும் போது சிவன் காட்சி தந்து தன்னை அடைய உடலை வருத்திக் கொள்ள வேண்டியதில்லை எனவும், உழைப்பே உயர்வான நிலையில் மனம் விரும்பும் எதையும் அடைய முடியும் எனவும் சொல்ல தாசிமையா கிராமம் திரும்பி சிவத் தொண்டுகள் செய்து காட்டு வாசிகள் தொடங்கி அனைவரையும் சிவபக்தர்களாக மாற்றியதாகவும் துக்களே என்னும் பெண்ணை மணம் செய்து வாழ்ந்ததாகவும் வரலாறு அமைகிறது.

மூட நம்பிக்கைகளும் ,அது சார்ந்த கொள்கைகளும் ஆழமாக வேரூன்றியிருந்த கால கட்டத்தில் வசன இலக்கியம் பெண்ணை ஆணுக்கு சமமாகக் காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது. பசவேசர்,அல்லமா பிரபு, சித்தராமன் என்று ஒரு பரம்பரையே இந்தக் கருத்தை இயன்றவரை வசனங்களில் வலியுறுத்தியிருக்கிறது. ஆண்,பெண் பாகுபாடு தவறானது என்றும், இது புறத் தோற்ற பாகுபாடு மட்டுமே என்று கருதுகின்றனர். இதை வசன பரம்பரையின் முதல் ஆளான தாசிமையா,

மேலே முடி வந்தால் பெண்ணென்பார்
தாடி மீசை வந்தால் ஆணென்பார்
நடுவில் சுற்றும் ஆத்மா ஆணும் அல்ல
பெண்ணும் அல்ல காண் ராமநாதா

என்கிறார். இந்த வசனத்தின் பொருளை இவனுக்கு பின்னால் வந்த வசன காரர்கள் அனைவரும் பயன் படுத்தியிருக்கின்றனர். வசனகாரர்களின் நோக்கம் எந்தத் தத்துவத்தையும் ,கடவுள் கொள்கையையும் சாதாரண மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.பழ மொழிகள், உவமைகள்,எதுகை.மோனை அமைப்பு, அழகான சந்தம் ஆகியவை பெரும்பாலான வசனங்களில் வெளிப்படுகின்றன.

தீ எரியும் அசைய முடியாது
காற்று அசைய முடியும் எரியாது
தீ காற்றைச் சேரும் வரை
ஓரசைவும் இல்லை
தெரிவதும் செய்வதும் அதைப் போன்றது
மனிதர்களுக்குத் தெரியுமா ராமநாதா

என்று இணைவு தத்துவம் காடப்படுகிறது.நீ , நான், என், உன் என்று எதுவுமில்லை.நிலையற்ற வாழ்வும், அழியும் உடம்பும்தான் என்னும் போது சலன புத்தி எதற்கு என்ற கேள்வி இயல்பு தன்மையை முன் வைக்கிறது.

இது என் உடல் என்றால்
என் விருப்பப்படி நடக்க வேண்டும்
இது உன் உடல் என்றால்
உன் விருப்பப்படி நடக்க வேண்டும்
இது என்னுடையதுமில்லை
உன்னுடையதுமில்லை
சலன புத்தியுள்ள வஸ்து ராமநாதா

என்ற வசனம் அறிவார்ந்த சிந்தனையின் அடையாளம்.

ஒவ்வொருவரும் சாகவே
போருக்குப் போகின்றனர்
நூறில் ஆயிரத்தில் ஒருவர்தான்
எதிரியைக் கொல்கிறார்
ஒவ்வொரு புளியம்பூவும்
பழமாக முடியுமா ராமநாதா

என்று தெரிந்த பொருளும், செறிந்தகருத்தும் வசனமாகிறது.

பூமி உனது பரிசு
பயிர் உனது பரிசு
காற்று உனது பரிசு
நான் இதை என்னவென்று சொல்லட்டும்
எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பெற்றுக் கொண்டு
உன்னைத் தவிர எல்லோரையும் புகழ்வதேன்?

என்பது இயல்பான கேள்விதானே?

பசவண்ணர் சிலை (பெங்களூர்)

பசவண்ணர் சிலை (பெங்களூர்)

அந்தணர் குடும்பத்தில் பிறந்த பசவர் (பசவண்ணர்) சிவசாரணர்களின் வரலாறுகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி வேறுபாடுகளினால் தான் சமுதாயம் சீரழிகிறது என்பது அவருடைய உறுதியான எண்ணமாக இருந் தது. எல்லா தரப்பு மக்களும் பக்தி என்ற அடிப்படையில் ஒன்று சேரும் அனுபவ மண்டபம் [திருச்சபை] அவரால் உருவாக்கப் பட்டது.விறகு வெட்டி, படகோட்டி, விவசாயி, மருத்துவன், மாடு மேய்ப்பவன் என்று அனைவரும் திருச் சபையின் உறுப்பினர்களாக இருந்தனர்.திருச்சபை ஒருவரை ஒருவர் விமரிசிக்கவும், குறைகளை வெளிப்படையாகச் சொல்லி பரிமாற்றம் செய்து கொள்ளவும் வழி வகுத்தது.

இவன் யாரவன் இவன் யாரவன்
இவன் யாரவனென்று எண்ணாதிருமையா
இவன் நம்மவன் இவன் நம்மவன்
இவன் நம்மவன் என்று எண்ணய்யா
கூடலசங்கம தேவா
உங்கள் வீட்டு மகனென்று எண்ணய்யா

என்று பிறப்பின் பொதுமையைப் பேசுகிறார்.

கல்நாகம் கண்டால்
பால் ஊற்று என்பார்
மெய்நாகம் கண்டால்
கொல் என்பாரய்யா
உண்ணும் மெய்யன்பர் வந்தால்
நட என்பாரையா
உண்ணாத இலிங்கத்திற்கு உணவைப்
படை என்பாரையா

என்று மூட நம்பிக்கை கடியப்படுகிறது.வசன இலக்கியம் ஒரு மொழிக்கு வேண்டிய மென்மை, உவமை, வன்மை, எள்ளல், நகைச்சுவை ,எளிமை எல்லா கூறுகளையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

எனது மனமோ அத்திப் பழம் பாரையா
ஆராய்ந்து பார்த்தால் அதில் திரட்சி எதுவுமில்லை

என்கிறார். மிக அழகான தோற்றம் கொண்ட அத்திப் பழம் போன்றது மனம்.பழத்தினுள்ளே பெருகிக் கிடக்கும் புழுக்களைப் போன்றதுமனதின் கசடுகள் என்பது அவரது உவமை.பரங்கிக் காய்க்கு இரும்பு கவசமிட்டால் இறுகி அழுகுமே தவிர வலிமை பெற முடியுமா என்று வினவுகிறார்.பாம்பின் வாயிலுள்ள தவளை பசித்து பறக்கும் ஈயை விரும்புவது போலதான் மனிதனின் நிலை.அவன் அதை உணராத வரை விமோசனமில்லை.

இசைப்பிரியன் சிவன் என்பர் இசைப் பிரியன் சிவனல்லய்யா
வேதப் பிரியன் சிவன் என்பர் வேதப் பிரியன் சிவனல்லய்யா
பக்திப் பிரியன் நம் கூடல சங்கமதேவன்

என்று பக்தி நெறியின் விளக்கம் அமைகிறது.

Akkamahadeviசிமோகா மாவட்டம் உடுத்தடியில் பிறந்த அக்கம்மா விவரமறிந்த நாளிலிருந்தே உடுத்தடி மல்லிகார்ச்சுனனிடம் [சிவன் ] பேரன்பு கொண்ட வள்.கௌசிகன் என்னும் சிற்றரசன் அக்கம்மாவின் பேரழகில் மயங்கி அவளை மணக்க எண்ணுகிறான்.இதில் அவளுக்கு விருப்ப மில்லை யென்றாலும் பெற்றோரின் கட்டாயத்துக்கு இணங்கி மணக்க உடன்படும் அவள் சில நிபந்தனைகளை முன் வைக்கிறாள்.

சென்ன மல்லிகார்ச்சுனனுக்கு நாளும் வழிபாடு நடத்துதல், வரும் அடியவர்களை மறுப்பின்றி உபசரிக்க வேண்டிய நிலை ஆகியவை நிபந்தனைகளாகும். மன்னன் ஒப்புக் கொள்கி றான். சிவனடியார் கூட்டம் ,வழிபாடு என்று தொடர்ந்து அரண்மனையில் அக்கம்மாதேவியின் பக்தி நிலை வளர்கிறது. வெறுப்பு நிறைந்த ஒரு சூழலில் “அடியவர் கூட்டம் எப்போதும் ஏன்” எனக் கேட்க, நிபந்தனையை அவன் மீறியதாகச் சொல்லி அவள் வெளியேறுகிறாள். கல்யாணுக்கு வந்து பசவேசரைச் சந்தித்து திருக் கூட்டத்தில் பங்கு கொண்டு இறையோடு கலக்கிறாள்.

பொறி பறந்தால் என் வேட்கையும் பசியும் தீர்க்கப் பட்டதாக
எண்ணுவேன்
வானம் திறந்தால் என் குளியலுக்காகத்தான் என எண்ணுவேன்
தலைவனே என் தலை தோளில் சாயும் போது உன்னையே
எண்ணுவேன்

என்று ஆண்டாளாக ,காரைக்கால் அம்மையாராக, மீராவாக பெண்பக்தியை, காதலை அக்கம்மாவின் வசனம் காட்டுகிறது.சென்ன மல்லி கார்ச்சுனனின் துணையும் , அருகாமையும் எப்போதும் கூட இருக்கும் என்ற நம்பிக்கை அக்கம்மாவுக்கு இருக்கிறது. அதனால் தான்

பசி பிச்சைப் பாத்திர
அரிசியில் தீரும்
தாகம் கிணற்று நீரில் தீரும்
தூங்கச் சிதைந்த கோயில்கள் உண்டு
ஆத்மாவுக்குத் துணை நீ
என்ன கவலை சென்ன மல்லிகார்ச்சுனா

என்று மிக இயல்பாக ,எளிமையாக வாழ்க்கையை ஏற்க முடிகிறது.

அக்கம்மாவால் நாயன்மார்கள், ஆழ்வார்களைப் போல இயற்கையை, பறவைகளை அழைத்து கடவுளைக் காதலிக்க முடிகிறது. நாயக நாயகி பாவனையில் [மதுர பாவம்] சென்ன மல்லிகார்ச்சுனனோடு காதலை, உறவை வெளிப்படுத்த முடிகிறது.

குயில்களே
அவன் எங்கே இருக்கிறான்
மயில்களே உங்களுக்குத் தெரியுமா
அவன் எங்கே இருக்கிறான் தெரிந்தால் சொல்லுங்கள்
என் சென்ன மல்லிகார்ச்சுனன் அவன்

என்று சொல்லும் பாவனை அமைகிறது.

ஒரு நடனக் கலைஞரின் மகனான அல்லமப் பிரபு கோயிலில் இனிமையாக முரசு இசைக்கும் பணிசெய்பவர். கமலாத்தே என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார்.இருவரும் அன்பு காட்டவே பிறந்தவர்கள் போல மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.திடீரென கமலாத்தே காய்ச்சலில் இறந்து போகிறாள். அவள் இல்லாத வாழ்வு வெறுத்துப் போக அல்லமர் தன்னை மறந்து பித்துப் பிடித்தவராக காடு மேடுகளில் அலைகிறார்.ஒரு நாள் காட்டில் ஒரிடத்தில் மண்ணைத் சாதாரணமாகத் தொடும் போது வித்தியாசமான ஓர் உணர்வு ஏற்படுகிறது. அந்த இடத்தை மேலும் தோண்டும் போது மூடிய கதவு தெரிகிறது. அல்லமர் வேகத்தோடு உதைக்க கதவு திறக்கிறது. உள்ளே ஒரு யோகி கையில் லிங்கத்தோடு ஆழ்ந்திருப் பதைப் பார்க்கிறார். அல்லமர் அவரைக் கண்டு வியந்து நின்ற போது அவர் கையில் உள்ள லிங்கத்தை அல்லமரிடம் தந்து விட்டுச் சாய்கிறார். அந்தக் கணத்தில் அல்லமரின் எண்ணமும், செயல்பாடுகளும் மாறிப் போகின்றன. அந்தக் குகைக் கோயிலின் வடிவம் மனதில் தங்கி விட ’குகேஸ்வரா” என்பது அவரது வசனங்களின் முத்திரையாகிறது.பிற வசனகாரர்கள் அனைவரும் அவரை குருவாக வே காண்கின்றனர்.பிரபு என்றே அவர் அழைக்கப் படுகிறார். இறைவனோடு இணைவதும்,உணர்வதுமான பாவனையிலேயே அவருடைய பெரும் பாலான வசனங்கள் அமைகின்றன. பக்தியின் உயர்ந்த நிலையில் தத்துவார்த்தமாக,

மலைகள் குளிரில் நடுங்குமானால்
எதை வைத்து அவைகளைப் போர்த்த முடியும்
விண்வெளியே நிர்வாணமானால்
எதை அதற்கு ஆடையாக்க முடியும்
கடவுளின் மனிதர்கள் உலகப்பற்று உடையவர்களானால்
நான் உருவகத்தை எங்கே தேடுவது
ஓ குகேஸ்வரா

என்று கேட்பதாக இந்த வசனம் அமைகிறது.

இந்த உடலில்
முழு ஆலயம் உள்ளபோது
வேறு எங்கோஅதைத் தேட
என்ன தேவை?
யாரும் இரண்டைக் கேட்பதில்லை
ஓ குகேஸ்வரா..
நீ கல்லென்றால் நான் என்ன?

இருமை எந்த நாளிலும் இல்லை என்பதையும் இறையோடு இணைவதான பாவனையையும் இதை விட எளிமையாக கூர்மையாக வெளிப்படுத்த இயலுமா?

ஓடும் ஆறுகள் எல்லாம் கால்கள்
எரியும் நெருப்பு எல்லாம் வாய்கள்
வீசும் காற்று எல்லாம் கைகள்
ஓ குகேஸ்வரா
உன் மனிதர்களுக்கு
ஒவ்வொரு அவயமும் அடையாளம்தான்.

என்று பக்தியை குறிப்புப் படுத்துவதான வசனமாகிறது.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் அறிமுகமான வசன இலக்கியம் அன்றோடு நின்று விடவில்லை இவர்களுக்கு பின்னால் வந்த வசன காரர்கள் இக்கருத்துக்களால் கவரப் பட்டு அவைகளை பயன்படுத்தி உள்ளனர் இன்றைய கன்னட இலக்கியத்திலும் வசன இலக்கியத்தின் பாதிப்பு இருப்பதை மறுக்க முடியாது.

Tags: , , , , , , , , , , , , , , , , , , ,

 

8 மறுமொழிகள் சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்

 1. Dr.A.Anburaj on December 5, 2014 at 9:45 am

  கன்னட உபநிடங்கள் – பசவேஸ்வராின் போதனைகள் ஆங்கில மொழியில் தமிழில் வெளியிட்டு இருப்பாா்கள். வெளியிட்டவர்களின் முகவரி விலை போன்ற விபரங்களை வெயிிட்டால் உதவியாக இருக்கம். அவற்றை படிக்க விரும்புகின்றேன்.

 2. A P IRUNGOVEL on December 5, 2014 at 9:51 am

  இன்று திருக்கார்த்திகைத்திருநாள்.

  ஒரு சைவனாக, ஒரு ஹிந்துவாக இந்த பதிவினை படித்ததன் மூலம் பெருமை அடைகிறேன்.

  மலைகள் குளிரில் நடுங்குமானால்
  எதை வைத்து அவைகளைப் போர்த்த முடியும்
  விண்வெளியே நிர்வாணமானால்
  எதை அதற்கு ஆடையாக்க முடியும்
  கடவுளின் மனிதர்கள் உலகப்பற்று உடையவர்களானால்
  நான் உருவகத்தை எங்கே தேடுவது
  ஓ குகேஸ்வரா

  இந்த உடலில்
  முழு ஆலயம் உள்ளபோது
  வேறு எங்கோஅதைத் தேட
  என்ன தேவை?
  யாரும் இரண்டைக் கேட்பதில்லை
  ஓ குகேஸ்வரா..
  நீ கல்லென்றால் நான் என்ன?

  இருமை எந்த நாளிலும் இல்லை என்பதையும் இறையோடு இணைவதான பாவனையையும் இதை விட எளிமையாக கூர்மையாக வெளிப்படுத்த இயலுமா?

  ஓடும் ஆறுகள் எல்லாம் கால்கள்
  எரியும் நெருப்பு எல்லாம் வாய்கள்
  வீசும் காற்று எல்லாம் கைகள்
  ஓ குகேஸ்வரா
  உன் மனிதர்களுக்கு
  ஒவ்வொரு அவயமும் அடையாளம்தான்.

  –என்ன ஒரு அற்புதமான வரிகள்?. நன்றி தமிழ் ஹிந்து.காம்.

 3. Meenakshi Balganesh on December 5, 2014 at 10:32 am

  மிக அருமையான கட்டுரை. கன்னட சமய தத்துவ வாதிகளைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள மிக உதவியாக இருக்கிறது.
  மீனா, தொடர்ந்து நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

 4. C.N.Muthukumaraswamy on December 5, 2014 at 11:31 am

  கன்னட தேசத்துச் சிவசரணர்களின் பெருமையை உணர்வு பூர்வமாகக் கட்டுரையாசிரியர் கூறுகின்றார். தமிழ் இந்துவில் வீரசைவம் பற்றி மேலும் கட்டுரைகள் வரையக் கட்டுரையாசிரியரைக் கேட்டுக்கொள்கின்றேன்.

 5. JANAVI PUTHTHIRAN on December 5, 2014 at 12:58 pm

  Till date ,I heard about the name “Basavanna” connected with Karnataka, but on reading this exemplary Tamil version, I feel very much elated to know about the “Nayanmars” of Kannada; only a rationale religion will unite all the human being. Ours..the so called “Hindu Religion” is not at all a RELIGION ( as conceived or interpreted by many ) but…..IT IS A WAY OF LIFE AND VIEW OF LIFE !!!!! Thanks to Ms.T.R.Meena for this wonderful Tamil version.

 6. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on December 6, 2014 at 11:52 am

  கன்னட பத்தாம் மற்றும் பத்னொராவது நூற்றாண்டில் சைவத்தில் மறுமலர்ச்சியியையும் சமூகத்தில் புரட்சியையும் ஏற்படுத்திய வீரசைவ அருளாளர்களான ஜேடர தாசிமையா, ஸ்ரீ பசவேசர், அக்கமஹாதேவி மற்றும் அல்லமபிரபுதேவர் ஆகியோரைப்பற்றியும் அவர்களது உரை இலக்கியக்கியத்தினைப்பற்றி அருமையான அறிமுகமாக அமைகிறது இந்தக்கட்டுரை. பாராட்டுக்கள்.

 7. premathasan thirumeni on December 6, 2014 at 3:51 pm

  சைவ சமயம் என்னைக்கவர ஆணும் பெண்ணும் சமமானவர்கள் ,-சிவசக்தி தத்துவம-) இதுவே காரணம் .

 8. rani balakrishnan on December 8, 2014 at 3:43 pm

  Very nice. Congradulations to the author ms. Meena .Being a Hindu saivate I like this article very much.very interesting .Expecting many more writings from her. OM NAMASIVAAYAA. Then naadu udaiya sivane potri en
  naattavarukkum irraivaa. Potri potri .

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*