சாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” ?

ப்படி என்ன பேசி விட்டார் அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி?

ராமனின் வழி வந்தவர்களின் அரசா அல்லது முறையற்ற வழி வந்தவர்களின் அரசா? எது வேண்டும் உங்களுக்கு? – “Ramzaadon ki sarkar ya haramzaadon ki sarkar” என்று ஹிந்தியில் எதுகை மோனையுடன் என்று ஒரு தில்லிப் பொதுக்கூட்டத்தில் அவர் கேட்டார். அவ்வளவு தான். இந்த “வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்காக”  மூன்று நாட்களாக பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் ரகளை செய்து கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். இந்த பாணியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமரே அறிவுறுத்தி, அமைச்சர் வந்து தனது பேச்சுக்கு வருத்தமும் தெரிவித்து விட்டார். அதற்குப் பின்னரும் இந்தச் சப்பை விஷயத்துக்காக அமைச்சரை நீக்க வேண்டும் ஆ ஊ என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் வியக்க வைக்கும் சாதனைகளையும், அபாரமான முன்னெடுப்புகளையும் செய்து கொண்டிருக்கிறது  மோதி தலைமையிலான அரசு. இந்த நிலையில் எந்த பிரசினையை அல்லது செயலின்மையை வைத்து இந்த அரசாங்கத்தை எதிர்ப்பது என்ற திக்பிரமை பிடித்த நிலையில் இருக்கும் காங்கிரசும் மற்ற சில்லறை எதிர்க்கட்சிகளும் இதைப் பிடித்துக் கொண்டார்கள். அவ்வளவு தான் விஷயம். அமைச்சரின் பேச்சு  எந்த சட்டப் பிரிவின் கீழ் “சட்ட விரோதமானது” என்று ஊடகங்கள் தங்கள் பாணியில் காமெடி செய்து கொண்டிருக்கின்றன.

Haramzaada என்ற இந்த வார்த்தை நூற்றுக்கணக்கான பாலிவுட் படங்களில் தடுக்கி விழும்போதெல்லாம் உச்சரிக்கப் படுவது. பாத்திரங்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள சகட்டுமேனிக்குப் பயன்படுத்தும் வார்த்தை இது. இந்த வார்த்தை இவ்வளவு சீரியசானது என்று சொன்னால் சென்சார் துறை உட்பட எல்லாருமே சிரிப்பார்கள். குறைந்த பட்ச மொழியறிவும் அரசியல் பிரக்ஞையும் உள்ளவர்கள் கூட, அமைச்சரின் பேச்சில் உள்ள உருவகத்தைப் புரிந்து கொள்ளலாம். ‘முறையற்ற வழி’ என்று அவர் தாக்குவது  எதிர்க்கட்சிகளின் ஊழல் அரசியலை, போலி மதச்சார்பின்மையை, வாரிசு அரசியலைத் தானே தவிர, தனிப்பட்ட எவருடைய வம்சாவளியையோ அல்லது குடும்ப கௌரவத்தையோ அல்ல. சாத்வி நிரஞ்சன் ஜ்யோதியின் கிராமியப் பின்னணியையும், அவரது வட்டார வழக்கையும் கருத்தில் கொண்டு அந்தப் பேச்சை மதிப்பிட வேண்டும் என்று சொல்லப் பட்டதைக் கூட ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை.

பதவியேற்கும் சாத்வி நிரஞ்ஜன் ஜோதி
பதவியேற்கும் சாத்வி நிரஞ்ஜன் ஜோதி

அமைச்சரை எதிர்க்கும் கட்சிகளின், தலைவர்களின் யோக்யதையைக் கொஞ்சம் பார்த்தால், இதில் உள்ள போலித்தனம் அப்பட்டமாக வெளிப்படும். முதல்வர் மமதா பானர்ஜி தனது மாநிலத்தின் தேர்ந்தெடுத்த கெட்ட வார்த்தைகளை கடந்த சில வாரங்களாக தனது எல்லா உரைகளிலும் பிரயோகித்து வருகிறார். “மூங்கில் குச்சியை எடுத்து ……..ல் சொருக வேண்டும்” என்று பத்திரிகைகள் பிரசுரிக்கவே கூசும் சொற்கள் சரளமாக அவரது பேச்சில் வந்து விழுகின்றன. அருவருப்புக்காகவே ரசிக்கப் பட்ட லாலு பிரசாத் யாதவின் பீகாரி வசைகளையும், தமிழகத்தின் திமுக, அதிமுக கட்சிக் காரர்களின் வாக்கில் விளையாடும் “சங்கத் தமிழ்” பற்றியும் நாம் நன்கு அறிவோம். தேர்தல் பிரசாரத்தின் போது, நரேந்திர மோதியை மீண்டும் மீண்டும் தொடர்ந்து “மரணத்தின் வியாபாரி” என்றார் இத்தாலிய சீமாட்டி சோனியா. நாய், தெருவில் அலையும் சொறிபிடித்த நாய் என்றான் இங்கிலாந்தில் பாரிஸ்டர் கல்வி படித்த இஸ்லாமியக் கட்சி (எம்.ஐ.எம்) தலைவன் ஓவைசி. குஜராத்தின் கசாப்புக் கடைக்காரன் என்றார் கல்கத்தாவின் மேல்தட்டு கல்லூரியில் படித்த திருணாமூல் எம்.பி டெரிக் ஓ பிரயன். ‘இந்த முலாயம் சிங்கிற்கு (That bloody Mulayam) ஆங்கிலத்தில் நாலு வார்த்தை கூட பேசித் தெரியவில்லை. ஆனால் இவன் என்னை மாதிரியே இருக்கிறான். என் அப்பா முன்பு உ.பிக்கு அடிக்கடி போய் வருவார்.. முலாயம் அம்மா கிட்ட எதுக்கும் கேட்டுப் பார்க்கணும்” என்று முலாயமின் கட்சிக் காரரான அமர் சிங்கிடம் நமுட்டுச் சிரிப்புடன் கூறியது – வேறு யாருமல்ல, ஆக்ஸ்போர்டு கனவான்களின் ஆங்கிலத்தில் கட்டுரை புனையும் மணி சங்கர் ஐயர். இதை அமர் சிங் பொதுவில் கூறியிருக்கிறார்.

வக்கிரமும், போலித் தனமும், கயமையும் நிரம்பிய இத்தகைய அரசியல்வியாதிகள் தான் சாத்வி நிரஞ்சன் ஜ்யோதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ayodhya_jai_shri_ram47 வயதாகும் சாத்வி நிரஞ்சன் ஜ்யோதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி. உ.பியின் ஹமீர்புர் மாவட்டத்தில், கேவட் (நிஷாத்) என்னும் கங்கை நதியில் படகோட்டி, மீன்பிடித்து வாழும் பிற்படுத்தப் பட்ட சாதியில் பிறந்தவர். “குகனொடும் ஐவரானோம்” என்று ஸ்ரீராமனைத் தழுவிக் கொண்ட குகனின் வழிவந்த ‘நிஷாதர்கள்’ என்று தங்கள் பாரம்பரியத்தைப் பெருமிதமாக உணரும் சாதியினர் இவர்கள். சிறுவயது முதலே நல்ல குரல்வளமும் பேச்சுத் திறனும் கொண்டிருந்த அவர், ஃபதேபூரில் உள்ள சுவாமி பரமானந்த கிரியின் ஆசிரமத்தில் சமயக் கல்வி கற்று, சுற்றுப்புற கிராமங்களில் ராமாயண பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். விரைவில் ஒரு சிறந்த “கதா வாசக்” (பிரசங்கி) ஆக பிரபலமடைந்தார். 1980, 90களில் அயோத்தி இயக்கத்தின் ஊடாக சாத்வி உமா பாரதி, சாத்வி ரிதம்பரா ஆகியோருடன் இணைந்து அரசியல் களத்தில் குதித்தார். மற்ற இரு சாத்விகளும் கூட இவரைப் போன்றே பிற்பட்ட சமுதாயப் பின்னணி கொண்டவர்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். சாத்வி ரிதம்பரா, ஒரு கட்டத்தில் அரசியலில் ஆர்வம் குன்றி, முற்றாக சமயப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.  இந்து தர்ம பிரசாரம், ராமஜன்ம பூமி இயக்கம், தனது சமுதாயத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்றையும் தழுவியதாக உமா பாரதி, நிரஞ்சன் ஜ்யோதி இருவரின் தொடர்ந்த அரசியல் செயல்பாடுகளும் அமைந்திருந்தன. 2012 உபி சட்டசபைத் தேர்தலில் தோல்வியுற்ற சாத்வி நிரஞ்ஜன் ஜோதி 2014 பாராளுமன்றத் தேர்தலில் வென்றார். தற்போது அமைச்சராகவும் ஆகியிருக்கிறார்.

இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரை இந்து விரோத ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தாக்குவதில் என்ன ஆச்சரியம்?  நிரஞ்சன் ஜோதி கிறிஸ்தவ ஆதரவாளரகவோ அல்லது இந்து வெறுப்பைக் கக்கும் தலித் அரசியல்வாதியாகவோ வளர்ந்திருந்து, இதை விட மிக மோசமான “வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை” பேசியிருந்தாலும் அவர் கொண்டாடப் பட்டிருப்பார். அவரது பேச்சு ஒடுக்கப் பட்ட விளிம்பு நிலை சமுதாயத்தின் போர்க்குரலாக அங்கீகரிக்கப் பட்டிருக்கும். ஆனால், ராமாயண பிரசங்கம் செய்து பாஜகவில் சேர்ந்து அமைச்சராகவும் அல்லவா ஆகி விட்டார்! அதனால் “கண்ணியம்” குறித்த கறாரான வரையறைகளைக் குறித்து பாடம் எடுக்கப் பட வேண்டும், அவர் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று ஓலமிடுகிறார்கள் இந்த சாதிய மேட்டிமைவாத ஓநாய்கள். நன்கு சிந்திக்கக் கூடிய பத்ரி சேஷாத்ரி கூட “Why does Modi have Sadhvi type characters in his ministry?” என்று விவரமில்லாமல் எழுதுகிறார்.

“முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட ஸ்ரீராமனின் குழந்தைகள்” என்று அவர் கூறியது “வெறுப்பு பேச்சுக்கு” மற்றொரு உதாரணமாகக் காட்டப் படுவது கொடுமையிலும் கொடுமை. சாத்வி பேசும் மொழியிலும் சரி, அவரது உணர்விலும் சரி “ராம்” என்றாலே கடவுள் தான். அடக் கடவுளே என்பதை “ஹாய் ராம்” என்று தான் சொல்வார்கள். அந்தக் கடவுளாகிய “ராம்”, இஸ்லாமியர்களின் அல்லாவைப் போன்றோ, கிறிஸ்தவர்களின் யாஹ்வேயைப் போன்றோ “பொறாமை கொண்ட தேவன்” அல்ல. நம்பிக்கையாளர்களை மட்டும் காப்பாற்றி, காஃபிர்களைக் கொல்லச் சொல்லி ஆணையிடும் குரூரன் அல்ல. இந்துக்களின் கடவுள் உலகில் உள்ள எல்லா மனிதர்களின், எல்லா ஜீவராசிகளின் உள்ளே உறைந்து, அனைவரையும் காப்பவள். அனைவருக்கும் அருள்பவள். தீமை புரிவோர்களையும் ஆட்கொள்பவள். அதனால் தான், ராவணனுடைய அரக்கத் தன்மை அழிந்ததும், அவனது ஜீவன் ஸ்ரீராமனின் ஜோதியிலேயே சென்று ஐக்கியமடைகிறது. சூரபன்மன் மயிலாகவும் சேவலாகவும் மாறுகிறான். அழிக்கப் பட்ட தீமையின் உருவான மகிஷாசுரன் தேவியின் காலடியில் கிடந்து தேவியின் திருவுருவத்தின் அங்கமாகவே ஆகி விடுகிறான்.

அதனால் தான்,  ஒரு இந்துவான சாத்வியால் இயல்பாக, பிற மதத்தவர்களையும் ஸ்ரீராமனின் குழந்தைகளாகக் காண முடிகிறது. அவர் கூறியது ஆன்மீக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஒரு உயர்வான கருத்து..  இந்தக் கருத்தை “வெறுப்புப் பேச்சு” என்று தூற்றும் அளவுக்கு  நிர்மூடத் தனமாக நமது ஊடகச் சூழல் அமைந்திருப்பது வெட்கக்கேடு. ஒரு ஒப்பீட்டுக்காக, ஒரு நடக்க முடியாத விஷயத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பாகிஸ்தானிலோ சவுதி அரேபியாவிலோ உள்ள ஒரு சுன்னி இஸ்லாமிய மௌல்வி, “ஷியாக்களும், அகமதியாக்களும், இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கூட அல்லாவின் குழந்தைகள்” என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது சர்வதேச ஊடகத்தால் வெறுப்புப் பேச்சாக மதிப்பிடப் படுமா அல்லது நல்லிணக்க பிரகடனமாகக் காணப் படுமா? ஆனால், இத்தகைய பேச்சை அந்த மௌல்விகள் ஒரு போதும் பேச மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம்.  எந்த அளவுக்கு பாரபட்சமான, துவேஷமான அணுகுமுறை இந்து மதத்தின் மீதும், இந்துத்துவ அரசியல் தலைவர்கள் மீதும் செயல்படுகிறது என்று பாருங்கள்.

பிரதமரும், மத்திய அரசும் சாத்வி நிரஞ்சன் ஜோதிக்குப் பின்னால் உறுதியாக நிற்பது ஆறுதல் அளிக்கிறது. அவரைப்  பதவி நீக்கம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைப்பாடு மிகவும் பாராட்டுக்குரியது. இதே போன்ற உறுதி இந்த அரசில் என்றென்றும் தொடர்ந்து இருக்கட்டும்.

ஜெய் ஸ்ரீராம் !

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

26 Replies to “சாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” ?”

  1. ஜடாயு, என்ன சொல்ல வருகிறீர்கள்? ஹராம்ஜாதா என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியாதா? ராமனின் வம்சாவளியினரின் அரசு இல்லை தேவடியாப் பையன்களின் அரசு என்று ஒரு மத்திய அமைச்சர் பேசுவது கேவலமாக இருக்கிறது என்றால் அதற்கு தமிழ் ஹிந்து தளம் சப்பைக்கட்டு கட்டுவது அதிகேவலமாக இருக்கிறது.

    இதையே யாராவது முஸ்லிம் – முஸ்லிம் அமைச்சர் அல்ல, முஸ்லிம் தலைவர் அல்ல – முஸ்லிம் பெயரில் ஊர்பேர் தெரியாத ஒருவர் இந்தத் தளத்தில் இப்படி ஒரு பின்னூட்டம் – “முகமதின் வம்சாவளியினரின் அரசு வேண்டுமா இல்லை தேவடியாப் பையன்களின் அரசு வேண்டுமா” – எழுதி இருந்தால் இப்படியேதான் அணுகி இருப்பீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

  2. ஒரு அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இது பற்றி பலர் பேசி வருகிறார்கள்.
    ஒருவர் பின்பற்றும் சமயம் வேறு. ஒருவரின் மூதாதையர் பற்றிய பெருமிதம் வேறு. உதாரணமாக, அரபு நிலப் பகுதியில் யூத மதம் மோசசில் துவங்கி தன் குலப் பெருமை பேசும். பின் அங்கு கிறிஸ்துவம் உருவானபோது , அதுவும் தன் குல மூதாதையான மோசசில் துவங்கி இயேசு கிறிஸ்து வரை பேசும். ஏசுவே நம் இறுதி இறை தூதர். அவர் மீண்டும் வருவார் என்று கூறும். பின் இஸ்லாமும் மூசா துவங்கி ஈசா வரை தன் குல மூததயர்களைப் பேசி பின் நபிகள் பெருமானின் பெருமை பேசி, அவரை ஒப்பற்ற இறை தூதராக முன்வைக்கும்.

    இந்திய சமயங்களிலும் பௌத்தமும், ஜைனமும், சைவமும் , சீக்கியமும் ராமன் எம் முந்தை என்றே பேசும்.

    ஆகவே ராமன் நம் முன் தாதை என்பது வேறு, நாம் இன்று பின்பற்றும் சமயம் என்பது வேறு. நாம் எந்த சமயத்தைப் பின் பற்றினாலும், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ராமன் நம் முன்னோன்.
    இது பற்றிய என் உரையின் காணொளி இணைப்பு.

    https://www.youtube.com/watch?v=De_yLGoiKLY

  3. சாத்வியின் பேச்சுக் குறித்து என் ஐயங்கள் தீர்ந்தன. சாத்வியின் பேச்சுக்குப் பெருமைப்படுகின்றேன்.

  4. வாழ்த்துக்கள் ! பிரதமரும், மத்திய அரசும் சாத்வி நிரஞ்சன் ஜோதிக்குப் பின்னால் உறுதியாக நிற்பது ஆறுதல் அளிக்கிறது. அவரைப் பதவி நீக்கம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைப்பாடு மிகவும் பாராட்டுக்குரியது. இதே போன்ற உறுதி இந்த அரசில் என்றென்றும் தொடர்ந்து இருக்கட்டும்.

    ஜெய் ஸ்ரீராம் !

  5. அதெல்லாம் ஒதுக்க முடியாதுங்க. வேணும்னா சாத்வி காங்கிரஸ் கட்சிக்கு மாறட்டும். நாங்க மன்னித்து விட்டுவிடுகிறோம்.

    அப்பாவும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மன்னிப்பே கிடையாது. எங்கள் வீரத் தமிழனாம் ராவணனைக் கொன்ற ராமனின் குழந்தைகளா – கிடையாது ! கிடையவே கிடையாது !! ( என்னது இராவணன் தமிழனா ! எங்கள் அன்புத் தலைவர் சீமானிடம் கேளுங்கள் சார். நரகாசுரனே தமிழன் என்னும்போது ராவணனும் தமிழன் தானே. )

  6. ஆர்.வி, நீங்கள் ஊடகங்களின் ஜல்லியை அப்படியே வந்து அடிக்கிறீர்கள். கொஞ்சம் சுயமாக சிந்தியுங்கள்.

    ஹராம்ஜாதா என்ற ஹிந்தி (உண்மையில் உருது) சொல்லை நீங்கள் தமிழ்ப் படுத்தியுள்ள விதமே தவறு. அந்தத் தமிழ் வசை உண்மையில் மகனை விட அந்த மகனின் தாயைத் தான் கேவலப் படுத்துகிறது. ஆணின் காம வெறியின் விளைவாகவே முறைதவறிப் பிறந்த ஒரு மகனையும் அவன் தாயையும் கேவலப் படுத்தும் ஆணாதிக்க வசை அது. ஆனால், ஹராம்ஜாதா என்பதற்கு நேரடியாக அப்படிப் பொருள் கிடையாது. ஹராம் என்பது அரபிச்சொல். முறைதவறிய, நெறியிலிருந்து வழுவிய, விலக்கப் பட்ட என்பது அதன் பொருள். ஆனால், நடைமுறையில் நீங்கள் சொன்ன பொருளிலும் வசையாக அது பயன்படுத்தப் படுகிறது. நீங்கள் சொல்லும் தமிழ் வசை தமிழ்ப் படங்களில் சென்சார் அனுமதிக்கப் படுமா? ஆனால் பாலிவுட் படங்களில், டிவி தொடர்களில் கூட தடையின்றி அனுமதிக்கப் படும் வார்த்தை ஹராம்ஜாதா என்பது. அதைக் கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன். அவர் சாதாரண அரசியல்வாதியல்ல, ஒரு சாத்வியும், ராமாயண பிரசங்கியும் ஆவார், அப்படிப் பட்டவர் நீங்கள் சொல்லும் தமிழ் வசைக்கு நிகரான வார்த்தையைப் பயன்படுத்துவாரா என்றாவது உங்கள் பொதுப் புத்தியை வைத்து யோசிக்க வேண்டாமா?

    உண்மையிலேயே எதிர்க்கட்சிக் காரர்களையும், பிற மதத்தினரையும் அந்த அர்த்தத்தில் கேவலப் படுத்தினார் என்றால், பிறகு “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட ராமனின் குழந்தைகள்” என்று அவர் ஏன் கூற வேண்டும்? ஆனால் அதையும் கூட “வெறுப்பு பேச்சு” என்கிறது மீடியா.

    இந்த ஊடகக் கயமையை நீங்கள் அப்படியே உள்வாங்குகிறீர்கள்.. கொடுமை.

  7. // ஹராம்ஜாதா என்ற ஹிந்தி (உண்மையில் உருது) சொல்லை நீங்கள் தமிழ்ப் படுத்தியுள்ள விதமே தவறு. அந்தத் தமிழ் வசை உண்மையில் மகனை விட அந்த மகனின் தாயைத் தான் கேவலப் படுத்துகிறது. ஆணின் காம வெறியின் விளைவாகவே முறைதவறிப் பிறந்த ஒரு மகனையும் அவன் தாயையும் கேவலப் படுத்தும் ஆணாதிக்க வசை அது. ஆனால், ஹராம்ஜாதா என்பதற்கு நேரடியாக அப்படிப் பொருள் கிடையாது. ஹராம் என்பது அரபிச்சொல். முறைதவறிய, நெறியிலிருந்து வழுவிய, விலக்கப் பட்ட என்பது அதன் பொருள். ஆனால், நடைமுறையில் நீங்கள் சொன்ன பொருளிலும் வசையாக அது பயன்படுத்தப் படுகிறது. //
    விட்டால் நாற்றம் என்றால் நல்ல வாசனை என்று வாதிடுவீர்கள் போலிருக்கிறதே? நடைமுறையில் அந்த ஹிந்தி வசையாக அல்லாமல் எந்தப் பொருளில் அது உபயோகிக்கப்படுகிறது? // ஹராம் என்பது அரபிச்சொல். முறைதவறிய, நெறியிலிருந்து வழுவிய, விலக்கப் பட்ட என்பது அதன் பொருள். // என்றால் ஜாதா என்ற விகுதி எதைச் சுட்டுகிறது? ஹராமையும் ஜாதாவையும் இணைத்தால் என்ன பொருள் வருகிறது?

    நீங்கள் சொல்லும் தமிழ் வசை தமிழ்ப் படங்களில் சென்சார் அனுமதிக்கப் படுமா?
    பல படங்களில் வந்திருக்கிறதே? நினைவில் இருப்பது ‘அபூர்வ ராகங்கள்’. 1974-ஆ, 75-ஆ? நீங்கள் பிறப்பதற்கு முன்பே வந்த படம் என்று நினைக்கிறேன். நீங்கள் தமிழ்ப் படமெல்லாம் பார்ப்பது இல்லையா?

    // ஆனால் பாலிவுட் படங்களில், டிவி தொடர்களில் கூட தடையின்றி அனுமதிக்கப் படும் வார்த்தை ஹராம்ஜாதா என்பது. அதைக் கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன். //
    சர்வசாதாரணமாக பல தமிழ் கெட்ட வார்த்தைகள் என்று பயன்படுத்தப்படுகின்றன. வக்காளி என்ற வார்த்தை நான் வளர்ந்த காலத்தில் நாகரீகமான் வார்த்தை அல்ல. மறைந்த டோண்டு ஒரு முறை இன்று அண்ணன் அம்மாவிடம் முறையிடும்போது “அம்மா, தங்கச்சி என் பேனாவை ஓத்துட்டு போயிடுச்சும்மா” என்று சொல்வது சகஜமாகிவிட்டது என்று எழுதி இருந்தார். அதற்காக இன்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால் நீங்கள் பேசாமல் இருப்பீர்களா? இந்தப் பதிவிலேயே மம்தாவைப் பற்றி நீங்கள் குறை சொல்லவில்லையா? ஏன் இந்தத் தளத்தில் // யாராவது முஸ்லிம் – முஸ்லிம் அமைச்சர் அல்ல, முஸ்லிம் தலைவர் அல்ல – முஸ்லிம் பெயரில் ஊர்பேர் தெரியாத ஒருவர் இந்தத் தளத்தில் இப்படி ஒரு பின்னூட்டம் – “முகமதின் வம்சாவளியினரின் அரசு வேண்டுமா இல்லை தேவடியாப் பையன்களின் அரசு வேண்டுமா” – எழுதி இருந்தால் இப்படியேதான் அணுகி இருப்பீர்களா? //

    // அவர் சாதாரண அரசியல்வாதியல்ல, ஒரு சாத்வியும், ராமாயண பிரசங்கியும் ஆவார், அப்படிப் பட்டவர் நீங்கள் சொல்லும் தமிழ் வசைக்கு நிகரான வார்த்தையைப் பயன்படுத்துவாரா என்றாவது உங்கள் பொதுப் புத்தியை வைத்து யோசிக்க வேண்டாமா? //
    சாத்விக்கள் எல்லாம் நாகரீகமாகத்தான் பேசுவார்கள் என்றெல்லாம் என்னிடத்தில் சொல்லாதீர்கள். நான் எண்பதுகளிலேயே சாத்வி ரீதாம்பராவின் பேச்சுகளை கேட்டிருக்கிறேன். 🙂

  8. அன்பின் ஸ்ரீ ஜடாயு

    *ஹராம்ஜாதா* என்பது கேவலமான வசை. சந்தேஹமே இல்லாமல்.

    ப்ரதமர் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி ஆளாளுக்கு மனம்போனபடி பேசுவதை மிகக் கடுமையாக கண்டித்துள்ளார் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

    வணக்கத்திற்குரிய சாத்வி நிரஞ்சன் ஜோதி அம்மையார் தான் பேசியதில் வசை இருந்துள்ளது என்பதற்காகத் தானே லோக்சபையில் மன்னிப்பும் கேட்டுள்ளார்?

    மற்றவர்கள் வசைமொழியில் பேசுகிறார்கள் என்பதற்காக பாஜக மற்றும் சங்கத்தினர்களும் வசை மொழியைக் கையாளுவதை …… நான் மட்டிலுமா வசை பொழிகிறேன் நீ வசை பொழிவதில்லையா ……… என்ற கோணத்தில் அணுகுவது சரியான நிலைப்பாடில்லை.

    முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்சில் இருக்கும் எனது நண்பர்களிடம் இந்த வார்த்தை பற்றி அலசினேன். மிகவும் தகாத வார்த்தை என்று கருத்துப் பகிர்ந்தார்கள். அரசியல் ரீதியாக இதை எப்படி அணுகுவது என்பதில் வேறுபாடுகள் இருக்கலாம். பொது தளத்தில் வசை மிகப் பேசுவது என்பதை ஹிந்துத்வவாதிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதற்கு சாத்வி அம்மா அவர்களின் இந்த நிகழ்வு நிச்சயம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

    இந்த அம்மையார் பேசி விட்டார்…… மன்னிப்பும் கேட்டு விட்டார்……. அத்துடன் விஷயத்தை முடித்துக்கொள்ளாமல் ……. அவரிடம் இருந்து ராஜினாமா கேழ்ப்பது என்பதற்கு………எதிர்க்கட்சியினரிடம் எந்த தார்மீகமும் இல்லை. இதற்கு முன் அல்லது இப்போது வசை பேசும் யார் ராஜினாமா செய்துள்ளார்கள்? சரி எஃப் ஐ ஆர் போடுவோம் என்னுகிறார்கள். அப்படி எஃப் ஐ ஆர் போட வேண்டுமானால் அது அதே போன்று மற்றவர்கள் மீதும் பாய வேண்டும். அப்போது நிச்சயம் சரி. சாத்விக்கு ஒரு வழி மணி சங்கர ஐயருக்கு வேறு வழி என்பது சரியாகாது.

  9. அன்பார்ந்த ஸ்ரீ முத்துக்குமாரசாமி மஹாசயர் அவர்களுக்கு

    \\ சாத்வியின் பேச்சுக்குப் பெருமைப்படுகின்றேன். \\

    ஐயா க்ஷமிக்கவும். மிகவும் வருத்தப்படுகிறேன். அந்த அம்மையார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லை. உண்மை. வசை மிகப் பேசுவதில் பெருமை கொள்ள ஏதும் இல்லை ஐயா. அது ஹிந்துத்வ இயக்கங்களின் வழிமுறையும் ஆகாது. நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்கள் இப்படிப்பட்ட பேச்சைக் கண்டித்ததையே அன்றி இப்படிப்பட்ட பேச்சை அல்ல.

  10. //அப்படிப் பட்டவர் நீங்கள் சொல்லும் தமிழ் வசைக்கு நிகரான வார்த்தையைப் பயன்படுத்துவாரா என்றாவது உங்கள் பொதுப் புத்தியை வைத்து யோசிக்க வேண்டாமா? //

    அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை என்றால் எதற்காக அவர் வருத்தம் தெரிவித்தார், மன்னிப்பு கேட்டார்?

    உண்மையிலேயே பேச்சில் தவறில்லாத நிலையில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் என்ன?

  11. no one knows our origin; you can safely say that our forefathers lived n africa; many agree on this; but even this is questionable; in any case, the minister need not have said this i public; ordianrly public is not as enlightened as you are; if at aal, she should have explained what she meant; further, we have enough quarelels in India based on this; there are so many other topics and things to do; the minister should concentrate on those things and bring out her original ideas which were absent in congress;

  12. திரு ஜடாயு அவர்களே! எல்லோரும் புரிந்துகொள்ளும்படியான விளக்கத்தை தந்ததற்கு மிக்க நன்றி. வேறு எந்த பிரச்னையும் கையில் எடுக்க முடியாத காங்கிரஸ் கும்பலும், ஊழல் குற்ற்றத்தை திசை திருப்ப முயலும் மம்தா அடிமைகளும் சாத்வி பேச்சை வேண்டுமென்றே மிகை படுத்தி அமளியில் ஈடுபடுகிரார்கள். அரசு உறுதியாக இருப்பது பாராட்டுக்கு உரியது.

  13. சந்தடி சாக்கில் கழக அரசியல்வாதிகளும் மேடை நாகரீகம் பற்றி உபதேசிக்கிறார்கள் …அதைத்தான் தாங்க முடியவில்லை…

  14. ஹிந்து என்றால் திருடன் என்று பொருள் என பேசிய வீராணம் திருடனின் கட்சியும் இவன்களோடு கூடி கும்மாளம் போடுவதுதான் ஆக சிறந்த கொடுமை.தேர்தல் பிரச்சாரங்களில் இதைவிட மட்டமான வசைமொழிகளை எல்லா கட்சிகளும் பயன்படுத்துகின்றன என்பதை திரு .ஆர்.வி .அறியமாட்டார் போலிருக்கிறது 😉

  15. திராவிட மாய வலை விரித்து கடந்த 70-80 ஆண்டுகளாக மேடையிலும் , எழுத்திலும் வக்கிரப்பேச்சை நம்பியே ஆட்சி செய்த கூட்டம் பேசுவது வழக்கம் போல் ரெட்டை நாக்குப் பேச்சுத்தான்.

    இவர்கள் பேச்சுக்காகவே பதவி விலகி இருந்து அரசியல் அனாதைகள் ஆகி இருந்தால் தமிழகம் எவ்வளவோ உருப்பட்டு இருக்கும்.

    சமயத்தில் தான் பேசாமல் ” நட்சத்திர’ பேச்சாளர்களை விட்டு வக்கிரப் பேச்சு பேச செய்து அதே மேடையில் அமர்ந்து இளித்து அதை ரசித்த , ரசிக்கும் பழக்கம் இன்னும் போகவில்லை திராவிட மாயை வாதிகளுக்கு.பெண்மையை இவர்கள் அசிங்கப் படித்தியது போல் இந்திய அரசியல் வரலாற்றில் எவரும் செய்திருக்க முடியாது.

    சாத்வி விஷயத்தை பிரதமர் கையாளும் விதம் சரி. ஸ்ரீ கிருஷ்ணகுமார் சொல்வது போல அது தவிர்த்திருக்க வேண்டிய வார்த்தையே. ஆனால் பதவி விலக சொல்லி வெற்றுக் கூச்சல் போடுவோர் முதலில் அரசியலை விட்டே விலகட்டும்.

    பாவம் முன்பு ஆட்சி செய்தவர்கள் மற்றும் அவரது ஊடக அடியாட்கள் , ஒவ்வொரு நாளும் இன்று என்ன சொல்லி மக்களை திசை திருப்பலாம் ,இந்த மோடி நம் முந்தைய ஆட்சி எவ்வளுவு கேவலம் என்று ஒவ்வொரு நாளும் மக்களுக்கு எப்படியோ புரிய வாய்த்த படி இருக்கிறாரே என்று ரூம் போட்டு யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. எதிர்பாராமல் கிடைத்த அவலை இடித்து மலையாக்குவது எவ்வளவு கஷ்டம் .மக்கள் விழித்திருக்கும் வரை , தெளிவாய் , நிஜமான நடுநிலைமையுடன் யோசிக்கும் வரை எத்தர்கள் எழுந்திருக்க இயலாது.
    https://www.mediacrooks.com/2014/12/the-rage-against-juggernaut.html
    மேலுள்ள ஆங்கில கட்டுரையும் தெளிவாகவே இருக்கிறது.

    சாய்

  16. என்றைக்குமே பிச்சை போடாத மகராசி போடாட்டி போறா…..

    தினமும் போடுற மூதேவிக்கு இன்னைக்கு என்ன கேடு வந்தது?

    என்ற வட்டார வழக்கு நினைவுக்கு வருகிற‌து….

    பாஜகவிடம் மட்டுமே உயர்ந்த பண்புகளை எதிர்பார்க்கமுடியும் என்று பிறகட்சிகள் ஒத்துக்கொள்கின்றன….

  17. ஹிந்தியையோ அல்லது உருதுவையையோ தாய்மொழியாகக் கொண்டோரின் புரிதல் வேறே; இங்கு எழுதும் பலரும் கட்டுரையாசிரியரும் புரிந்த‌ விதம் வேறே. நீங்கள் சொல்லியது போல புரியப்பட்டால் பிரச்சினையில்லை. ஆனால் இது பேச்சுவழக்குச் சொல். பேசுவோர் புரிந்த வண்ணம் தான் அதன் விளைவுகள். ஜடாயு ப‌ல வருடங்கள் வடக்கில் வந்து வாசம் செய்த பின் இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதலாம். இல்லாவிட்டால், குருடரே குருடரை வழிநடத்தினால் என்னவாகும் என்பதைத்தான் இங்கு பலர் எழுதும் பின்னூட்டங்கள் காட்டுகின்றன.

    ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன். சால. என்ற சொல்லுக்குப்பொருள் அக்காள் அல்லது தங்கையின் சகோதரன். தமிழில் மாப்ளே என்று பேசிக்கொள்வார்கள். பாகல் என்ற சொல்லுக்குப்பொருள் பைத்தியக்காரன். தமிழில் ஒருவனை பைத்தியம் என்றால், அப்படியொன்றும் வெகுண்டெழ மாட்டார்கள். அய்யோ பாவம் பைத்தியக்காரன் என்பார்கள். அல்லது வெறும் பைத்தியம் என்றாலும் அது ஒரு இரக்கமானச்சொல்லே. அதே போல மாப்ளே என்று நண்பர்கள் பேசிக்கொண்டால் எந்த பிரசினையும் இல்லை. இப்போது உங்களுக்கு ஒரு சவால்: வடக்கில் இந்தவிரு சொற்களையும் பேசிப்பாருங்கள். தர்ம அடிகொடுத்து உயிரை எடுத்துவிடுவார்கள். அல்லது அந்த நபர் உஙகளை லேசில் சும்மா விட மாட்டார். அவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும் சொற்களிவை.

    எனவே வடக்கில் எப்படி புரியப்பட்டதோ அதைப்புரிந்த பின்னர்தான் இப்படிப்பட்ட கட்டுரைகள் வரையலாம். சாத்வி பேசியது கேட்கக்கூடாச்சொல்.

    அவர் கருத்தென்ன? இந்தியர்கள் – அவர் எம்மதத்தவராயினும் இராமரின் குழந்தைகள். இப்படிப்பேசியதற்கு எந்தவொரு இசுலாமியரோ, கிருத்துவரோ, கோபம் கொள்ளமாட்டார். அனேக மக்களால் கடவுளாக வணங்கப்படும் இராமனை வணங்கும் ஒருவர் தங்களையும் இராமனின் குழந்தைகளே எனச்சொல்ல அவருக்கு அப்படியொரு விசால மனது இருக்கிறதே என்று உவகைத்தான் அடைவார்கள் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும். ஆனால் சாத்வி அப்படியே விடாமல் இரண்டாவது வாக்கியத்தில் அச்சொல்லை பயன்படுத்தி முதல் வாக்கியத்தை இம்சைப்படுத்திவிட்டார்.

    பாராளுமன்றத்துக்கு வெளியே கூட பிஜேபிக்காரர்கள் இதை ஆதரிக்கவில்லை. இந்தியைத்தாய்மொழியாகக்கொள்ளாதோர் மட்டும் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் வடமாநிலங்களுக்கு வெளியில்.

  18. Whatever one may say, it does not behove a central minister to talk like this. Just because opposition leaders have said similar words doe snot justify her action.

    2 Wrongs cannot make a right.

    The minister has simply expressed her regret.

    Expressing regret & apologizing are not the same. Expressing regret implies that the person is sorry that she has spoken like that. It can be either advertently or inadvertently.

    Only when a person apologizes, it means she is genuinely sorry for what she has done.

    The minister must apologize for her remarks & the matter must be closed.

  19. //சந்தடி சாக்கில் கழக அரசியல்வாதிகளும் மேடை நாகரீகம் பற்றி உபதேசிக்கிறார்கள் …அதைத்தான் தாங்க முடியவில்லை…//

    ஈ வெ ரா பேசாத தகாத வார்த்தைகள் இல்லை ஆனால் கழகம் அதை சாமார்த்தியமாக மறைத்து/அழித்து விட்டார்ட்கள். இதை மலர்மன்னன் தெளிவாகவே பதிவு பன்னி உள்ளார். ஆக கழகத்திடம் இருந்து இதை கர்ருக்கொள்ளவேண்டும் மற்ரபடி பேசுவதை இல்லை!!!!

  20. அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

    \\ ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன். சால. என்ற சொல்லுக்குப்பொருள் அக்காள் அல்லது தங்கையின் சகோதரன். \\

    சூப்பர்.

    எனக்குத் தெரிந்து ஹிந்தியில் சால என்று ஒரு பதமே கிடையாது …………….. பாயிண்டு 1

    அக்காள் அல்லது தங்கையின் சஹோதரன்…………… அது எனக்கும் தானே சஹோதரன் தானே ஜோ 🙂

    அதாவது நீங்கள் சொல்ல வருவது …………… அபூர்வ ராகங்களில் சொல்லுவது மாதிரி …………..

    என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளின் அப்பா என் மகனின் மாமனார்னா அவருக்கும் எனக்கும் என்ன உறவு?

    இப்படித்தனே சொல்ல வருகிறீர்கள்? 🙂 பாயிண்டு – 2

    ஹிந்தியில் “சாலா” என்று ஒரு சொல் உண்டு; அது சுட்டுவது மனைவியின் சஹோதரனை…………… சாலி………….. மனைவியின் சஹோதரி…………. பாயிண்டு – 3

    ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ சாஹப் கா ஜவாப் நஹீன்………… ஜோ சாஹப்புக்கு ஈடே இல்லை.

    அது எப்புடி சார் எத்தன பேர் மாத்தினாலும் …………. அந்த மணம் மட்டும் மாறவே மாட்டேங்குது 🙂

    கலக்குங்க.

  21. //The minister must apologize for her remarks & the matter must be closed.//

    I remember to have read she had apologised in the Parliament. Apology is ok. In the next election meeting in Trilokpuri held two days ago, she spoke vary carefully.

  22. ஜடாயு அவர்களே! அந்த காலத்தில் துக்ளக் பத்திரிக்கையில் ”ஒண்ணரை பக்க நாளேடு” என்று வரும். உங்கள் எழுத்தை படிக்கும் போது அது இன்று வரவில்லையே என்ற கவலை தீர்ந்தது. வளரட்டும் உங்கள் பணி….!

  23. //*ஹராம்ஜாதா* என்பது கேவலமான வசை. சந்தேஹமே இல்லாமல்.//

    உயர்திருவாளர்கள் ஆர்.வி. மற்றும் கிருஷ்ணகுமார் பதிந்துள்ள கருத்தேதான் என் கருத்தும். சொல்லக்கூடாத சொல்லை, அதுவும் ஒரு “சாத்வி” சொல்வது எவ்வளவு தவறு!

    அவரே அதை உணர்ந்து மன்னிப்பு வேண்டும்போது மதிப்பிற்குரிய ஜடாயு அவர்கள் அதைப் பரிந்து பேசுவது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது.

    மற்றபடி, ஆர்.வி, மற்றும் கிருஷ்ணகுமார் இவர்களின் கருத்தே என் கருத்தும்கூட. இப்பொழுது பி.ஜே.பி. தமிழநாட்டில் வேர்விட முயலும் நேரத்தில் இம்மாதிரி தவறான சொல்லுக்குச் சமாதனம் சொல்லி அந்த வேரில் வெந்நீர் ஊற்றுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகிறேன்.

  24. //தேர்தல் பிரச்சாரங்களில் இதைவிட மட்டமான வசைமொழிகளை எல்லா கட்சிகளும் பயன்படுத்துகின்றன //

    மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்று நாமும் அதே தவறைச் செய்தால், அவர்களுக்கும், நமக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகலாகத்தானே நாமும் ஆவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *