முகப்பு » அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள், பொருளாதாரம்

எனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை

January 19, 2015
-  

டந்து முடிந்த எகனாமிக் டைம்ஸ் உலக பொருளாதார கூட்டத்தில் (Economic Times Global Business Summit )  நமது பிரதமர் நரேந்திர மோதி ஒரு முக்கியமான உரை நிகழ்த்தி உள்ளார். உரையிலே வளர்ச்சியை எப்படி கொண்டு வருவது, அரசு என்றால் என்ன? வளர்ச்சி யாருக்கு பயன்படவேண்டும் என்பதெல்லாம் பேசியிருக்கிறார். நாட்டை முன்னேற்ற மிக முக்கியமான உரையாக இது இருக்கும். அதை முழுக்க தமிழாக்கி கீழே தந்துள்ளேன்.

பொருளாதார சீர்திருத்தம் என்றால் என்ன என்பதை பற்றி அருமையாக விளக்கியுள்ளார். அவர் என்ன செய்யப்போகிறார் என கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பதில் தந்துள்ளார்.

ஆங்கில சுட்டி:  http://www.narendramodi.in/economic-times-global-business-summit/

*************

modi_ET_summit_address

இந்திய மற்றும் வெளிநாடு வாழ் நண்பர்களே,

இந்த உலக பொருளாதார கூட்டத்தில் இன்று பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பொருளாதார நிபுணர்களையும் தொழில்முனைவோரையும் ஒன்று சேர்க்க இது ஒரு நல்ல இடம். இதைக் கூட்டிய எகனாமிக் டைமிஸ் பத்திரிக்கைக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

அடுத்த இரண்டு நாட்களில் நீங்கள் அனைவரும் வளர்ச்சி, பணவீக்கம், தொழில் உற்பத்தி, உள்கட்டமைப்பு, தவற விடப்பட்ட வாய்ப்புகள் மற்றும் இருக்கும் அளவில்லா வாய்ப்புக்களை பற்றி விவாதிப்பீர்கள். இது போல வேறெங்கும் வளர்ச்சி வாய்ப்பு இல்லை என்று சொல்லத் தக்க நாடாக  இந்தியாவை  நீங்கள் பார்ப்பீர்கள். உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் அரசின் கவனத்தை பெறும் என்பதில் உறுதியளிக்கிறேன்

நண்பர்களே,

ஜனவரி 14 அன்று மகரசங்கராந்தி கொண்டாடப் படுகிறது. இது ஒரு முக்கியமான பண்டிகை ஆகும். இது புண்ணிய நேரமாக கருதப்படும் உத்தராயணத்தின் ஆரம்பம் ஆகும். லோகிரி பண்டிகையும் இதோடு சேர்ந்து வருகிறது. இந்த நாளிலே சூரியன் தன்னுடைய பயணத்தை வடக்கு நோக்கி தொடங்குகிறான். இது குளிர்காலத்தில் இருந்து வசந்த காலத்தை ஆரம்பிப்பதாகும்.

இந்த நாளிலே புதிய இந்தியாவானது தன்னுடைய மாற்றத்தையும் தொடங்குகிறது. ஏதுமில்லாத குளிர்காலம் போன்ற கடந்த 3-4 வருடங்களில் இருந்து வளர்ச்சி எனும் வசந்த காலத்திற்கு பயணத்தை தொடங்குகிறது.

அரசு இயந்திரம் என்பதே வேலை செய்யாது போனதாலும் கடந்த இரண்டு வருடங்களாக 4 சத வளர்ச்சியாலும் நாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. டெலிகாமில் இருந்து நிலக்கரி வரை நடந்த ஊழல்களால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா என்பது வாய்ப்புக்களுக்கான இடம் என்பதில் இருந்து நாம் நிலை தவறிவிட்டோம். இதற்கு மேலும் பணமோ அல்லது தொழிலாளர்களோ இங்கே வாய்ப்பு இல்லை என நாட்டை விட்டு வெளியேறுவதை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

நாம் இந்த சேதாரத்தை சரி செய்தாக வேண்டும். வளர்ச்சி விகிதத்தை திரும்பவும் கொண்டுவருவது இமாலய வேலையாக இருக்கும். கடின உழைப்பு, தொடர்ந்த நோக்கு, உறுதியான அரசு செயல்களால் மட்டுமே அதை சரி செய்ய முடியும். ஆனால் நாம் இந்த மோசமான மனநிலையில் இருந்து மீண்டாகவேண்டும். கண்டிப்பாக நாம் மீளவேண்டும். இந்த முறையிலேயே நாம் முன்வைக்கும் அடிகளை பார்க்கவேண்டும்.

நண்பர்களே,

தெய்வவசத்தாலேயே இந்த நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. “ஒவ்வொரு கண்ணிலிருந்தும் எல்லா கண்ணீர்த்துளிகளையும் துடைக்கும்” வரை ஓயக்கூடாது என காந்தி சொல்லியிருக்கிறார். இதுவே வறுமை ஒழிப்பு என்பதற்கான என்னுடைய அடிப்படையாகும். இது தான் ஒருங்கிணந்த வளர்ச்சி என்பதன் என்னுடைய புரிதல் ஆகும். இந்த கனவை புதிய இந்தியா எனும் நனவாக்க நம்முடைய பொருளாதார நோக்கங்கள், முடிவுகள் பற்றி தெளிவாக இருக்கவேண்டும்.

அரசு என்பது கூட்டு அமைப்பு.
அதிலே பொருளாதாரம் என்பது வளர்ச்சியை நோக்கி தூண்டப் பட்டதாக இருக்கும்.
வளர்ச்சி என்பது எல்லா இடங்களிலும் முன்னேற்றத்தை கொண்டுவரும்.
அதிலே முன்னேற்றம் என்பது வேலை வாய்ப்பை கொண்டுவரும்.
வேலைவாய்ப்பு திறமையால் அடையப்படும்.
அதிலே திறமைகள் உற்பத்தியோடு இயையந்து இருக்கும்.
உற்பத்தி என்பது தரத்தால் அறியப்படும்.
அதிலே தரம் என்பது சர்வதேச தரத்தில் இருக்கும்.
சர்வதேச தரத்தில் இருந்தால் வளம் பொங்கும்.

இதுவே என்னுடைய கருத்தில் பொருளாதார நல்ல ஆட்சி மற்றும் முழுமையான வளர்ச்சி என்பதாகும். இதற்கு மேல் இதற்கான நல்ல வாய்ப்புக்களை இந்திய மக்களுக்கு உருவாக்கி கொடுப்பதால் மட்டுமே இந்திய மக்கள் வளர்ந்து இந்த புதிய இந்தியாவை உருவாக்குவார்கள்.

நண்பர்களே,

இந்த புதிய வசந்த காலத்தை அடைய நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என சொல்ல கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய அரசு வெகுவேகமாக கொள்கைகள், சட்டங்களை கொண்டுவந்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதிலே தான் நான் எல்லோருடைய ஒத்துழைப்பையும் கோருகிறேன்.

முதலில், நாங்கள் வரவுசெலவு இடையேயான பற்றாக்குறையை குறைக்க பட்ஜெடில் அறிவித்ததை அடைய தீர்மானித்துள்ளோம். இதற்காக முறையான வழியில் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

உங்களில் பலர் (ஜப்பானிய தரமுறையான) கெய்சன் என்பதை உங்களில் நிறுவனங்களில் பின்பற்றுவீர்கள். இது தேவையில்லாத செலவுகளையும் வீணாகும் செலவுகளையும் குறைக்கிறது. இதற்கு சுய கட்டுப்பாடு தேவை.

இதுபோலவே நாங்கள் செலவு நிர்வாக குழுவை வைத்து அதன் மூலம் தேவையில்லாத செலவுகளை குறைக்கிறோம். இதன் மூலம், செலவிடப் படும் பணத்திற்கு அதிக வேலை செய்யவும், செய்யப்படும் செலவுக்கு அதிக பலன் தரவும் செய்கிறோம்.

இரண்டாவதாக பெட்ரோலியம் துறை பெரிய சீர்திருத்தங்களை கண்டுள்ளது.

டீசல் விலைகள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. இது பெட்ரோலிய சில்லறை விற்பனையில் தனியார் நுழைய வழிவகுக்கும்.

எரிவாயு விலைகள் சர்வதேச விலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது இன்னோரு தடவையும் முதலீட்டிற்கு வழிவகுக்கும். இது எரிவாயு கிடைப்பதை அதிகரிக்கும். இது மின் உற்பத்தியில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும்.

இன்றைக்கு இந்திய சமையல் எரிவாயு மானியமே உலகின் மிகப்பெரும் நேரடி பணப்பட்டுவாடா திட்டம் ஆகும். 8 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்றைக்கு நேரடியாக மானியனத்தை அவர்களின் வங்கி கணக்கிலேயே பெறுகிறார்கள். இது இந்தியாவில் இருக்கும் குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இது பணம் வீணாவதை தடுக்கும்.

இதைப்போலவே மற்ற மானிய திட்டங்களுக்கும் நேரடி பணப்பட்டுவாடாவை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மூன்றாவதாக, கடும் நடவடிக்கைகள் மூலம் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வீழூம் கச்சா எண்ணெய் விலைகள் உதவினாலும் எண்ணெய் அல்லாத பணவிக்கமும் மிக குறைவான அளவிலேயே உள்ளது. உணவு பணவீக்கம் ஒருவருடத்திற்கு முன்பு இருந்த 15% சதவீதத்தில் இருந்து கடந்தமாதம் 3.1 சதவீதம் ஆக குறைந்துள்ளது. மே 2014 இல் இருந்து மிகவும் கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.

இது ரிசர்வ் பேங்க் வட்டி விகிதத்தை குறைத்து நிலையான வளர்ச்சியை முன்னெடுக்க இடம் அமைத்துள்ளது.

நான்காவதாக, பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்காக அரசியல் சட்டத்தை மாற்றுவது குறித்தான பொதுப்பார்வை எட்டப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் மற்றும் சேவை வரி என்பது மிகப்பெரும் மாற்றமாகும்.

இது கடந்த பத்து வருடங்களாக நிலுவையில் உள்ளது. இது மட்டுமே இந்தியாவை போட்டியிடவும் முதலீடு செய்யவும் வழி வகுக்கும்.

PM_modi_jan_dhan_yojana
ஐந்தாவதாக, ஏழைகள் பண அமைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். குறைந்த கால அளவிலான நான்கே மாதங்களில் 10 கோடிக்கும் மேலான புதிய வங்கி கணக்குகள் பிரதமரின் ஜன் தான் யோஜ்னா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன. நம்முடைய பெரிய நாட்டிற்கு இது மிகப்பெரும் சவாலாகும். ஆனால் அனைத்து வங்கிகளின் உறுதியுடனும் முழு ஆதரவுடனும் நாம் இப்போது கிட்டத்தட்ட முழு வங்கிமயமாக்கப்பட்ட நாடாக இருக்கிறோம். விரைவில் இந்த கணக்குகள் அனைத்தும் ஆதார் கணக்குடன் இணைக்கப்படும். வங்கி சேவைகள் நாடு முழுவதும் பொதுவான விஷயமாக ஆகும்.

இது மிகப்பெரும் வாய்ப்புகளை எதிர்காலத்திற்காக திறக்கும். மக்களின் சேமிப்பு உயரும். அவர்கள் புதிய நிதி திட்டங்களில் முதலீடு செய்வார்கள். 102 கோடி மக்கள் தங்களின் காப்பீட்டையும் ஓய்வு ஊதியத்தையும் எதிர்பார்க்கலாம். நாடு வளர வளர இந்த வங்கிக்கணக்குகள் புதிய தேவைகளையும் வளர்ச்சியையும் உருவாக்கும்.

நாம் எப்போதும் சமூக ஒற்றுமை, தேசிய ஒற்றுமை போன்றவற்றை விவாதித்து வந்துள்ளோம் ஆனால் நாம் எப்போதும் நிதி ஒற்றுமையை பற்றி பேசியதே இல்லை. அனைவரையும் நிதி முறைமைக்குள் கொண்டுவருவதைப்பற்றி. இது ஒரு குறிக்கோளில் சோஷலிஸ்டுகளும் கேப்பிடலிஸ்டுகளும் ஒத்த கருத்து கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே இதைவிடப் பெரிய சீர்திருத்தம் என்ன இருக்கமுடியும்?

ஆறாவதாக, எரிசக்தி உற்பத்தித்துறை சீர்திருத்தப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள் இப்போது வெளிப்படையான ஏலம் மூலம் ஒதுக்கப்படுகின்றன. சுரங்க விதிகள் மாற்றப்பட்டும் அதிகளவிலான நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது

இதே போன்ற சீர்திருத்தங்கள் மின் உற்பத்தி துறையிலும் செய்யப்படுகின்றன. நேப்பாளத்திலும் பூடானிலும் நெடுங்காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்களை அந்தந்த அரசுகளின் உதவியுடன் முன்னெடுக்கிறோம். அனைவருக்கும் 24 மணி நேர மின்சாரம் கொடுக்க எல்லா வழிகளிலும் ,மீளுற்பத்தி உடனும், முயற்சி எடுக்கப்படுகிறது.

ஏழாவதாக, இந்தியாவானது முதலீட்டிற்கு ஏற்ற இடமாக மாற்றப்படுகிறது. அந்நிய முதலீட்டு வரையறைகள் காப்பீட்டு துறையிலும் ரியல் எஸ்டேட் துறையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்நிய முதலீடும், தனியார் முதலீடும் ராணுவத்திலும் ரயில்வேயிலும் முன்னெடுக்கப்படுகிறது

(நில உடைமையாளர்களிடமிருந்து) நிலத்தைப் பெறும் சட்டம், அரசு விதிகளை எளிதாக்கும் படியும் வேகமாக செயல்படும் படியும் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் (தங்கள் நிலங்களை அளிக்கும்) விவசாயிகளுக்கு அதற்கான நல்ல விலை கிடைக்கும். இது உள்கட்டமைப்பு வசதிகளையும் உற்பத்தியையும் அதிகரிக்கும்.

எட்டாவதாக, உள் கட்டமைப்பு வசதிகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. ரயில்வேகளிலும் சாலைகளிலும் மிக அதிகமாக முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. புதிய வழிமுறைகளும் அமைப்புகளும் கொண்டுவரப்பட்டு அவற்றின் பலனை முழுவதுமாக அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒன்பதாவதாக, வெளிப்படையாக செயல்படுதல், திறமைக்கு முன்னுரிமை அளித்தல் ஆகிய விஷயங்கள் அரசுத் துறைகளில் இருக்க வேண்டியது மிக அவசியம். நிறுவனமயமாக்கப்பட்ட சீர்திருத்தங்களும் விரைவான வளர்ச்சிக்கு அவசியம். இவைகளுடன் நேர்மறையான கட்டுப்பாடு விதிகள், நிலையான வரிகள் மற்றும் வணிகம் செய்ய எளிதாக்குதல் போன்றவை வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இது எப்படியென்றால், நான் சமீபத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு அவற்றின் கடன்வழங்குதல் அல்லது வணிக செயல்பாடுகளில் அரசாங்க தலையீடு இல்லாமல் முழு சுதந்திரமாக செயல் படலாம் என உறுதியளித்துள்ளேன்.

நாம் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நல்லாட்சியை அளிக்கவேண்டும். உதாரணமாக, சாதாரணமான சிறிய விஷயமான பையோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு என்பது (அரசுப் பணியாளர்கள்) அலுவலகத்திற்கு நேரத்தில் வருவதை அதிகமாக்கியிருக்கிறது. வேலை செய்வதை ஊக்குவிக்கவும் செய்திருக்கிறது. பெரிய விஷயங்களான விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டமிடுல் வரைபடங்கள் தயாரித்தல், இன்னும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும்.

பொது விநியோக முறையை முழுமையாக கணினி மயமாக்குவதற்காக ஒரு பெரிய திட்டத்தை அறிவிக்க இருக்கிறேன். முழு பொது விநியோக முறையும், உணவுக் கட்டுபாட்டுக் கழக கிட்டங்கிகளில் ஆரம்பித்து ரேஷன் கடைகள், நுகர்வோர் வரைக்கும் முழுமையாக கணினி மயமாக்கப்படும். தொழில்நுட்பமானது சரியான உணவு விநியோகத்தையும் மக்களின் வளத்தையும் முன்னெடுக்கும்.

அடுத்த பெரிய சீர்திருத்தம் என்பது வெறுமனே திட்டமிடுதலில் இருந்து இந்தியாவை மாற்ற முயல்வதாகும். இதற்காகவே இந்தியாவின் மாற்றத்திற்கான தேசிய நிறுவனம் ‘நீதி ஆயோக்’ அமைக்கப்பட்டது அந்த வழியில் ஒரு முதல் அடிவைப்பாகும். இது நாட்டின் ஒருங்கிணைந்த கூட்டாட்சியை போட்டியின் மூலம் எடுத்துச்செல்லும். நீதி ஆயோக் என்பதே நம்பிக்கையை அளிக்கவும் மத்திய மாநில அரசுகளுக்குள் ஒருங்கிணைப்பு செய்வதற்கு நம்மிடம் இருக்கும் தாரக மந்திரம் ஆகும்.

இந்த பட்டியல் மிகவும் பெரியது. நான் இதைப்பற்றி நாட்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் நம்மிடம் அவ்வளவு நேரம் இல்லை.

ஆனால் நான் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான நிலையை சொல்லவிரும்புகிறேன். நாம் இவ்வளவு செய்திருக்கிறோம். இன்னும் எதிர்காலத்தில் செய்யவேண்டியது பலதும் இருக்கிறது.

நண்பர்களே,

சீர்திருத்தங்கள் என்பவை தன்னளவில் முழுமையான இலக்குகள் அல்ல. சீர்திருத்தங்களுக்கு மூறையான, உறுதியான பலன்கள் இருக்கவேண்டும். அந்த பலன்கள் மக்களின் நலத்தை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும். அதை அடைய பல வழிமுறைகள் இருக்கலாம் ஆனால் குறிக்கோள் ஒன்றே.

சீர்திருத்தங்கள் என்பது உடனடியாக கண்ணுக்கு தெரியாதவையாகவும் இருக்கலாம். ஆனால் சிறு சிறு செயல்களும் சீர்திருத்தங்களை விரைவாக்கலாம். ஒரு சிறிய செயலாக தெரிவது அடிப்படையாகவும் தேவையாகவும் இருக்கலாம்.

மேலும், பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்வதற்கும், சிறிய அளவிலான சீர்திருத்தங்களை செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

புதிய கொள்கைகள், பெரிய திட்டங்கள், பெரிய கட்டமைப்புகள் மூலம் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வருவது ஒரு வழி.
சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும் அதை மக்களின் இயக்கமாக மாற்றி பெரும் அளவில் செய்வது இன்னொரு வழி.
இரண்டு வழிகளும் வளர்ச்சியை கொண்டுவரும். நாம் இந்த இரண்டு வழிகளையும் பயன்படுத்தவேண்டும்.

இதை நான் விளக்குகிறேன். 20,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது மிகப்பெரும் கவனத்தை கொண்டுவரும் அது முக்கியம்
அதே நேரத்தில் 20,000 மெகாவாட் மின்சாரமானது பொதுமக்கள் அதை வீணாக்காமல் பயன்படுத்துவதன் மூலம் சேமிக்கப்படமுடியும்.
இறுதியில் இரண்டும் ஒரே விளைவை தருகின்றன ஆனால் இரண்டாவதை செய்வது என்பது கடினமாது. ஆனால் முதலாவதை போலவே முக்கியமானது. இதே போலவே ஆயிரக்கணக்கான ஆரம்பப் பள்ளிகளை உருவாக்குவதும் ஒரு புதிய பல்கலைக்கழகத்தை திறப்பது போலவே முக்கியமானது.

புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்குவது பொது மருத்துவத்தை மாற்றுவதைப் போலவே மருத்துவ உதவிக்கான கொள்கைகளும். என்னைப் பொறுத்தவரை ‘மருத்துவ நல உறுதியளிப்பு’ என்பது ஒரு பெயரளவுக்கான திட்டம் அல்ல. அதில் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயையும் நம்முடைய உடல்நலத்தில் செலவிடப்பட்டதாக இருக்கவேண்டும் ஒவ்வொரு குடிமகனும் அதன் மூலம் நல்ல மருத்துவ உதவியை பெறவேண்டும்.

modi_swachcha_bharatஅதே போலத்தான் சுத்தப்படுத்தும் ஸ்வச்ச பாரத் திட்டம். இது பல நல்ல விளைவுகளை கொண்டுவரும். இது வெறுமனே கோஷம் அல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றுகிறது. இது நம் வாழ்க்கை முறையை மாற்றுகிறது. சுத்தம் என்பது ஒரு பழக்கமாக மாறும். கழிவுகளைத் திறம்பட கையாள்வது, வெளியேற்றுவது என்பதிலேயே பல தொழில் வாய்ப்புகள் உள்ளன. இது பல லட்சம் “சுத்தப் படுத்துதல் தொழில் முனைவோர்களை” உருவாக்கும். தேசமானது சுத்தத்தோடு அடையாளப் படுத்தப்படும். அதோடு இது மக்களின் உடல்நலத்திலும் நல்ல மாற்றங்களை கொண்டுவரும். அடிப்படை சுத்தம், சுகாதாரம் இல்லாமல் வயிற்றுப்போக்கு, காலரா முதலான நோய்களை நாம் ஒழிக்கவே முடியாது.

சுதந்திர போராட்டத்தில் சத்தியாக்கிரகம் என்பது கோஷமாக இருந்தது. போராளிகள் சத்தியாக்கிரகிகள் எனப்பட்டனர். புதிய இந்தியாவின் கோஷம் ஸ்வச்சாகிரகம் (தூய்மைக்கான கோருதல்) என்பதாக இருக்கும். போராளிகள் ஸ்வச்சாகிரகிகள் ஆக இருப்பார்கள்.

சுற்றுலாத்துறையை எடுத்துக்கொள்ளுங்கள். இது இன்னமும் முழுமையாக செயல்திறன் அடையவில்லை. அவ்வாறூ அடைவதற்கு சுத்தமான இந்தியா தேவைப்படுகிறது. உள்கட்டமைப்பும் தகவல் தொடர்பு வசதிகளும் தேவைப்படுகின்றன. நல்ல கல்வியும் திறமைகளும் தேவைப்படுகிறன. இப்படி, “சுத்தப் படுத்துதல்” என்ற ஒரு செயல் பல இடங்களில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவரலாம்.

கங்கையை சுத்தப்படுத்துதல் என்பது பொருளாதார நடவடிக்கை என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். கங்கைக்கரையில் 40 சதவீத மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் நூற்றுக்கணக்கான நகரங்களிலும் ஆயிரக்கணக்கான கிராமங்களிலும் இருக்கிறார்கள். கங்கையை சுத்தப்படுத்துவது என்பது புதிய உள்கட்டமைப்பைகளை கொண்டுவரும். இது சுற்றுலாவை மேம்படுத்தும். இது ஒரு புதிய பொருளாதாரத்தை கொண்டுவந்து பல லட்ச மக்களுக்கும் உதவும். கூடவே இது சுற்றுப்புறத்தையும் பாதுகாக்கும்.

ரயில்வேக்களை எடுத்துக்கொண்டாலும் இதுவே உதாரணம். இப்போது நாடெங்கும் ஆயிரக்கணக்கான ரயில்வே நிலையங்களில் ஒருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு ரயில் வண்டிகளே நின்று செல்கின்றன. மற்றபடிக்கு அவை உபயோகப்படாமல் இருக்கிறன. இவை அருகில் இருக்கும் கிராமங்களுக்கு வளர்ச்சியை அளிக்கமுடியும். அவை திறன் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படலாம்.

சிறியவையே ஆனால் அழகானவை.

விவசாயத்திலும் கூட உற்பத்தியை அதிகரிப்பதே முக்கிய நோக்கமாகும். இது தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் மண்ணின் வளத்தை பெருக்கவும் ஒவ்வொரு துளிக்கு அதிக விளைச்சலை எடுக்கவும் சோதனைச்சாலையில் இருந்து புதியவற்றை நிலத்திற்கு கொண்டுவருவதுமாகும். விளைச்சலுக்கான செலவு உற்பத்தி அதிகரிக்கும்போது தானாக குறையும். இது விவசாயத்தை லாபகரமாக்கும்.

விற்பனையில் ஒட்டுமொத்த விவசாய விற்பனையும் நல்ல சேமிப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள், உணவை பதப்படுத்தும் வசதிகள் போன்றவற்றை அதிகரிப்பதன் மூலம் வளமாக்க முடியும். நாம் விவசாயிகளை உலக சந்தையுடன் இணைப்போம். நாம் உலகத்திற்கு இந்தியாவின் ருசியை அளிப்போம்.

நண்பர்களே,

நான் பலமுறை “சிறிய அரசு, அதிக நல்லாட்சி” என்பதை சொல்லியிருக்கிறேன். இது கோஷம் அல்ல. இது இந்தியாவை மாற்றுவதில் முக்கியமான ஒன்று.

அரசாங்கம் என்பது அடிப்படையிலேயே இரண்டு பலவீனங்களை கொண்டுள்ளது. ஒன்று, அது மிகவும் மெதுவாக செயல்படும் அமைப்பு. இன்னொன்று, அது மிகவும் சிக்கலானதொரு அமைப்பு.

வாழ்க்கையில் மக்கள் நான்கு புனிதத் தலங்களுக்கு (ஹிந்தியில் Char Dham) யாத்திரை சென்று மோஷத்தை அடைவார்கள். அரசாங்கத்திலோ ஒரு கோப்பு 36 இடங்களுக்கு போனாலும் விடுதலை அடைவதில்லை.

நாம் இதை மாற்றவேண்டும். நம்முடைய அமைப்புகள் சுருக்கமானதாக விரைவாக எளிதாக அதிகமாக வேலை செய்ய வேண்டும். இது வழிமுறைகளை எளிதாக்கவும் மக்களின் மீது நம்பிக்கையை வைக்கவும் தேவைப்படும். இது கொள்கையை முன்னெடுக்கும் தேசமாகவேண்டும்.

அப்படியானால் “சிறிய அரசு, அதிக நல்லாட்சி” என்பது என்ன? அரசின் பணி நிறைய வியாபாரம் செய்வது அல்ல என்பது தான். தேசத்தின் பல இடங்களில் தனியார் துறையானது நன்றாகவும் விரைவாகவும் செயல்பட முடியும். இந்த 20 ஆண்டுகால தாராளமயமாக்கலுக்கு பின்பும் நாம் கட்டுப்படுத்தும் நோக்கினால மனநிலையை மாற்றவில்லை. நிறுவனங்களில் அரசு தலையீட்டை நாம் சரி என்றே நினைக்கிறோம். இது மாறவேண்டும். ஆனால் இது ஒழுங்கற்ற தன்மையை கொண்டுவருவதல்ல.

அப்படியாயின் அரசு என்பது என்ன? இது 5 முக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

முதலாவதாக பொது உபயோகம் – இவை பாதுகாப்பு, காவல்துறை, நீதிமன்றம் போன்றவை.
இரண்டாவதான சுற்றுச்சூழல் மாசு போன்ற மற்றவர்களை பாதிக்கும் செயல்பாடுகள். இவைகளை தடுக்க ஓர் அமைப்பு வேண்டும்.
மூன்றாவது சந்தையின் ஆற்றல். அங்கே ஒரு சிலரின் மேலாதிக்கம் வளராமல் இருக்க கட்டுப்பாடு வேண்டும்.
நான்காவது தகவல் இடைவெளிகள், எடுத்துக்காட்டாக நீங்கள் வாங்கும் மருந்து போலி அல்ல என்பதை உறுதி செய்ய ஒருவர் வேண்டும்.
கடைசியாக சமூகத்தின் கடை நிலையில் இருப்பவர்கள் முன்னேற, மக்கள் நலம் நாடும் அரசு மானியங்கள் வேண்டும். குறிப்பாக, இது கல்வியிலும் மருத்துவத்திலும் மிக முக்கியம்.

இந்த ஐந்து துறைகளிலும் பணி செய்வதற்குத் தான் நமக்கு அரசு என்பது தேவையானதாகிறது.

இந்த ஐந்து இடங்களிலும் திறமையான நன்றாக வேலை செய்யக்கூடிய ஊழலற்ற அரசு தேவைப்படுகிறது. அரசில் இருக்கும் நாங்கள் எப்போதும் ஒரு கேள்வியை கேட்கிறோம், எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது. அதற்கு என்ன வகையான பலன் கிடைக்கிறது? இதற்கு அரசு அலுவலகங்கள் திறமையாக செயல்படவேண்டியிருக்கிறது. இதற்கு சில சட்டங்களை மாற்றவேண்டியிருக்கிறது. சட்டங்களே அரசின் டிஎன்ஏ ஆகும் இவையும் காலப்போக்கில் பரிணமிக்கவேண்டும்.

இந்தியா தற்பொழுது இரண்டு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கிறது இதை நாம் 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முடியாதா?

இதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடாதா? நாங்கள் இதற்கான அடிப்படை வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம். சுலபமான விரைவான சீர்திருத்தங்கள் வெகுவாக வளரும் பொருளாதாரத்தை கொண்டு வராது. நம்முன் இருக்கும் சவால் நாம் என்ன செய்ய முயல்கிறோம் என்பதே.

டிஜிட்டல் இந்தியா மற்றும் திறனுள்ள இந்தியா என்பவை இந்த நோக்கிலேயே செயல்படுத்தப்படுபவை.

டிஜிட்டல் இந்தியா என்பது அரசு அலுவகங்களை மாற்றி, வீணானதை குறைத்து, மக்களுக்கு அதிக அதிகாரமும் செயல்பாடுகளையும் அளிப்பதாகும். இது அடுத்த அலையான அறிவுத்திறனை அடிப்படையாக கொண்ட வளர்ச்சிக்கு உதவும். ஒவ்வொரு கிராமத்திலும் பல இணைய செயல்பாடுகளை கொண்ட அதிவேக இணைய வசதி என்பது இந்தியாவை நாம் நினைத்திராத அளவில் மாற்றிக்காட்டும்.

திறனுள்ள இந்தியா என்பது எல்லோரும் பேசுகின்ற மக்கள்தொகையின் சாதகமான அம்சத்தை வெளிக்கொணர்வது ஆகும்.

Modi with Officialsநண்பர்களே,

அரசாங்கத்தில் முன்னேற்றம் என்பது ஒரு தொடர்ந்த செயலாகும். எங்கெங்கெல்லாம் செயல்கள், விதிகள், நடைமுறைகள் தேவையில்லாமல் இருக்கின்றனவோ, அவற்றை எல்லாம் எங்கள் அரசு மாற்றுகிறது. நாங்கள் முதலீட்டாளர்களை சோர்வடையச் செய்யும் பல விண்ணப்பங்களை அனுமதி பெறுதல் இக்கட்டுகளை குறைக்கிறோம். நம்முடைய சிக்கலான வரிவிதிப்பு முறையானது சீர்திருத்தத்திற்காக காத்திருக்கிறது. அதை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். நான் விரைவாக செய்வதில் நம்பிக்கை உடையவன். இந்த மாற்றங்களை விரைவாக செய்து முடிக்க செய்வேன். நீங்கள் வருங்காலத்தில் இதை கண்டிப்பாக பாராட்டுவீர்கள்.

அதே நேரத்தில் ஏழைகளையும் ஒடுக்கப்பட்டோரையும் கைவிடப்பட்டோரையும் காப்பதும் நம்முடைய கடமையாகும். அவர்களுக்கு மானியங்கள் உதவிகள் தேவைப்படுகிறது என்றே நான் கருதுகிறேன். உதவி பெறும் மக்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும். மானியங்களின் இறுதி நோக்கு என்பது ஏழைகளுக்கு முன்னேற்றத்தை அளித்து வறுமையின் பிடியில் இருந்து விடுவிப்பதாகவும் வறுமைக்கு எதிரான போரை நடத்துவதாகவும் இருக்கவேண்டும்.

இந்த இடத்தில் முன்னேற்றம் என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் இருக்கவேண்டும். சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் என்பவை எல்லாம் வேலைவாய்ப்புகள் இல்லையேல் வெறும் வார்த்தைகளாகவே இருக்கும்.

நமக்கு உற்பத்தி மட்டும் தேவையில்லை, வெகுஜன மக்கள் செய்யும் பெரும் உற்பத்தி தான் தேவை.

நண்பர்களே,

பொருளாதார முன்னேற்றம் மட்டுமே நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லாது.

முன்னேற்றம் என்பது பல பரிமாணங்களை உடையது. நமக்கு அதிக வருமானம் மட்டும் முக்கியமல்ல, அமைதியான இணக்கமான சமூகமும் தேவைப்படுகிறது. சமூகத்தில் இருக்கும் களைப்பையும் துன்பத்தையும் போக்கும் வழிகளையும் நான் கண்டறிய வேண்டும்.

தேசங்களின் வளர்ச்சியையும் அழிவையும் வரலாற்றில் பார்க்கிறோம். இப்போதும் கூட பல நாடுகள் வருமானத்தால் பணக்கார நாடுகளாக இருக்கிற போதிலும் சமூக அமைப்பில் ஏழைகளாக இருக்கின்றன. சமூகத்தை ஒன்றாக பிணைக்கும் அவர்களின் குடும்ப அமைப்புகள், நம்பிக்கை முறைகள், சமூக உறவுகள் ஆகியவை சிதறியுள்ளன.

நாம் அந்த வழியில் போகக்கூடாது. நமக்கு சமூகமும் பொருளாதாரமும் இணைந்து செயல்படுதல் வேண்டும். இதுவே நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்லும்.

மேலும் முன்னேற்றம் என்பது அரசின் செயலாக மட்டுமே ஆகியிருக்கிறது அது ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது அப்படி இருக்ககூடாது.
முன்னேற்றம் என்பது எல்லோரின் வேலையும் ஆகும் அது ஒரு மக்களின் இயக்கமாக இருக்கவேண்டும்.

நண்பர்களே, உலகின் மற்ற பகுதிகளைப்போலவே நாமும் இரண்டு கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கிறோம். அவை தீவிரவாதமும் புவி வெப்பமயமும் ஆகும். இதற்கு நாம் கூட்டாக சேர்ந்து தீர்வு காண்போம்.

இன்றைக்கு எல்லோரும் ஆதர்சத்திற்காகவும் வளர்ச்சிக்காவும் ஆசியாவையே நினைக்கிறார்கள். ஆசியாவிலே இந்தியா மிகவும் முக்கியமானது. இதன் அளவிற்காக மட்டுமல்லாது ஜனநாயகம் மற்றும் பல விஷயங்களுக்காகவும். இந்தியாவின் முக்கிய கொள்கையானது ‘எங்கும் மங்கலம் பெருகட்டும்; எல்லோரும் சுகமாக இருக்கட்டும்’ (ஸர்வே பவந்து ஸுகின: ஸர்வே ஸந்து நிராமயா:) என்பதும் ஆகும். இது உலகளாவிய நலத்திற்கும், ஒருங்கிணைந்த ஒத்துழைப்பிற்கும், சமமான வாழ்க்கைக்கும் அறைகூவல் விடுக்கிறது.

இந்தியா மற்ற தேசங்களுக்கு வளர்ச்சியிலும் ஒருங்கிணைப்பிலும் ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

இதற்கு நமக்கு உலக தரத்தையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான உழைக்கும் மக்களும் பொருளாதாரமும் தேவை.

நாம் சமூக காரணிகளை சீக்கிரம் மாற்றியாகவேண்டும். இந்தியா இனிமேலும் வளர்ச்சியடையாத நாடாக கருதப்படக்கூடாது. நம்மால் இதை செய்ய முடியும்.

சுவாமி விவேகானந்தர் சொன்னது போல “எழுமின் விழுமின், இலக்கை அடையும் வரை ஓயாது உழைமின்”

இது நம்ம அனைவருக்கும் ஒரு ஆதர்சமாக இருந்து புதிய இந்தியாவை அடைய உதவட்டும்.

ஒன்றாக நம்மால் முடியும்

நன்றி..

=====

(மொழி பெயர்ப்பில் உதவிய நண்பர்கள் கோகுல் குமரன் மற்றும் வினோத் ராஜனுக்கு நன்றிகள்)

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

 

6 மறுமொழிகள் எனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை

 1. Ravi on January 19, 2015 at 10:33 pm

  தெளிவான எண்ணங்கள் – சுயமான சிந்தனை – வெளிப்படையான நாட்டுப்பற்று – குழப்பமில்லா அணுகுமுறை – எழுச்சிமிகு மன உறுதி – அசைக்கமுடியாத நம்பிக்கை – தான் மட்டுமின்றி தன் பேச்சைக் கேட்பவரையும் இவ்விஷயங்களில் உறுதி கொள்ள வைக்கும் பிரதமரை இதுநாள் வரை பாரத தேசம் கண்டதில்லை. வாழ்க மோதி – வளர்க அவரது ஆற்றல்!

 2. sarav on January 20, 2015 at 1:39 pm

  yabbbaaa ippaiyae kannai kattudhae !!

 3. சேக்கிழான் on January 20, 2015 at 2:37 pm

  நண்பர் ராஜ சங்கருக்கு நன்றி.

  தமிழ் ஊடகங்களில் கண்டுகொள்ளப்படாத முக்கியமான ஓர் உரை மோடியின் உரை. இதனை எளிய முறையில், சரியான நேரத்தில் தமிழாக்கம் செய்துள்ளது பாராட்டத் தக்கது.

  -சேக்கிழான்

 4. ganapathy on January 23, 2015 at 12:02 pm

  at the outset i have been a votary of modi thinking
  he will be a path breaker.
  but i amnot very convinced about the economic ideas of modi .
  this govt seems to continue many policies of upa which was desisted
  at that time e-g nuclear policy/ fuel pricing can you please analize and highlight

 5. venkat on July 7, 2015 at 10:50 pm

  super details thanks for Rajasankar

 6. RANGACHARI KRISHNAN on September 29, 2017 at 11:49 am

  wonderful! kudos, RAJASANKAR! KUDOS MODIJI. JAI HIND!BHARAT MATA KI JAI!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*