தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்.

தமிழகத்தின் கல்வியை ஒரு வசதிக்காக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் கல்வி. இன்னொன்று தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கிடைக்கும் கல்வி.

அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் கல்வியின் தனி அம்சங்கள் என்று பார்த்தால், திறமை குறைவான, பொறுப்பற்ற ஆசிரியர்கள், அக்கறை இல்லாத கல்வி அதிகாரிகள், சமூகத்தோடு நெருக்கம் இல்லாத கல்வி (இப்போது ஓரளவுக்கு நிலைமை மேம்பட்டிருக்கிறது என்றாலும்) காலத்தால் பின் தங்கிய பயிற்று முறை, வேலை வாங்கித்தரும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் கல்வி என்று ஒரு சிலவற்றைச் சொல்லலாம்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், பயிற்று மொழியாகத் தாய் மொழி இல்லாமல் இருப்பது, அதிகப்படியான கல்வித் திணிப்பு, மாணவர்களைக் கசக்கிப் பிழியும் பயிற்றுமுறை, சுய நலனை முன்வைக்கும் கல்வி, மதிப்பெண்களைத் துரத்தும் கல்வி எனப் பல குறைபாடுகள் அதில் உண்டு. ப்ரீகேஜியிலேயே கட்டுரை எழுதச் சொல்லித் தருகிறோமென்று ஒரு பள்ளி சொன்னால், குழந்தை கருவில் இருக்கும்போதே ஏ,பி, சி,டி கற்றுத் தருகிறோம் என்று இன்னொரு பள்ளி விளம்பரம் செய்யும் அளவுக்கு அங்கு அதிகப்படியான பாடங்களைத் திணிப்பதை தமது உயர் தரத்தின் அடையாளமாகச் சொல்கிறார்கள்.

ஏட்டுக் கல்வியறிவு குறைவாக இருக்கும் எளிய மக்களுக்கு மட்டுமல்ல மெத்தப் படித்தவர்களுக்கும் கூட இந்த இரண்டு கல்வி முறைகளில் தனியார் கல்வியே உயர்ந்தது என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கல்வி என்பது நல்ல வேலையைப் பெற்றுத் தரும் கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. எனவே, இரண்டு வகைக் கல்விகளுமே வேலை வாங்கித் தரும் திறனின் அடிப்படையில் மட்டுமே மதிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் படித்தால் அந்த இலக்கை எளிதில் அடைந்துவிட முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் இருக்கிறது. எனவே, அரசுப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்கூட தமது குழந்தைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கும் அவலம் நடந்து வருகிறது.

இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கும் அனைவருமே இந்த இரண்டு கல்வி முறைகள் மீதும் கடுமையான விமர்சனங்களை உடையவர்கள். இந்த இரண்டுக்கும் மாற்றாக ஒரு கல்வி முறையை முன்வைக்க தம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறார்கள்.

alternate_education_in_TN_bookமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்த வே. வசந்தி தேவி, தான் கல்லூரிப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் அமைப்பு அனுமதிக்கும் அளவுக்குச் சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். புதிய பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்தியதில் ஆரம்பித்து, மாணவர்களை சமூகத்தோடு இணைக்கும் வகையில் சில முன்னோடி முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார்.

சகோதரி நிவேதிதா கன்யாகுமரியில் இருக்கும் விவேகானந்த கேந்திரத்தின் துணைத்தலைவராக இருக்கிறார். வனவாசிகள் அதிகம் இருக்கும் வட கிழக்கு மாநிலங்களில் விவேகானந்த கேந்திரத்தின் சார்பில் நடத்தப்படும் வித்யாலயாக்கள் அந்தப் பகுதி மாணவர்களை தேசிய உணர்வோடும் தெய்வ நம்பிக்கையோடும் புதிய எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வழி செய்து தருகின்றன. வட கிழக்கு மாநிலத்தில் ஒரு மாணவன் ஏதேனும் சாதனைகள் செய்தால், அவனைப் பார்த்து அந்தப் பகுதி மக்கள் கேட்கும் முதல் கேள்வி, நீ விவேகானந்த கேந்திர வித்யாலயாவைச் சேர்ந்தவனா என்பதுதான். இது கேந்திரத்தின் அர்ப்பண உணர்வுக்குக் கிடைத்த வெற்றி.

தோழர் தியாகு தமிழ் தேசிய சிந்தனைகள் உடையவர். அம்பத்தூரில் ஐந்தாம் வகுப்பு வரையில் தாய் தமிழ் பள்ளி நடத்திவருகிறார். மொழி சார்ந்து அதிக உணர்ச்சிவசப்படும் மக்கள் திரளில் உலக அளவில் தமிழர்களுக்கு நிச்சயம் தனி இடம் உண்டு. இங்கு ஆட்சி அமைத்தவர்கள் அதைப் புரிந்துகொண்டதால்தான் தமிழை வைத்தே தமது அரசியலை முன்னெடுத்துவந்திருக்கிறார்கள். இருந்தும் அப்படியான ஒரு இடத்தில் தாய்த் தமிழில் பள்ளி நடத்துவது ஐந்து வகுப்புக்கு மேல் முடியவில்லை என்பது அதிகார வர்க்கத்தின் இரட்டை வேடத்தை மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தின் போலித்தனத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தப் புத்தகத்தில் பேசியிருப்பவர்களில் தாய் மொழி வழிக் கல்வியை நடைமுறைப்படுத்திவரும் ஒரே நபர் தோழர் தியாகு மட்டுமே. மாற்றுக் கல்வியாளர்களிலும் இப்படியான நிலை இருப்பது வேதனைக்குரிய விஷயமே. மருத்துவம், பொறியியல் என அனைத்து உயர் கல்விகளையும் தமிழிலேயே கற்றுத் தர, சிங்கள இனவாதம் மேலோங்கிய இலங்கையில்கூட முடிந்திருக்கிறது, ஆனால், தாய்த் தமிழகத்தில் முடியவில்லை என்பது தியாகு போன்றவர்களின் தோல்வியை அல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வியையே எடுத்துக்காட்டுகிறது.

அரவிந்த ஆஸ்ரமத்தில் கல்விப் பருவத்தை முடித்த அஜித் சர்க்கார், செல்வி சர்க்கார் தம்பதிகள் உள்ளூர் குழந்தைகளுக்குப் பள்ளி ஆரம்பிக்க முதலில் முயன்றிருகிறார்கள். அரசு இயந்திரத்தின் ஊழல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த முயற்சி முளையிலேயே கருகிவிட்டிருக்கிறது. இந்திய யோகா, தியானம் போன்றவற்றுக்கு ஃப்ரான்ஸில் கிடைத்த ஆதரவை அடிப்படையாக வைத்து அங்கு ஒரு கல்வி மையத்தை ஆரம்பித்து சுமார் 20-25 வருடங்களாக நடத்திவருகிறார்கள். எனினும் தாய் நாட்டுக்கு உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் அணையாமல் இருந்து வந்திருக்கிறது. உரிய நேரம் வந்ததும் வெள்ளைத் தாமரை என்ற கல்வி மையத்தை தமிழகத்தில் பாண்டிச்சேரியில் ஆரம்பித்து நடத்திவருகிறார்கள்.

ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளும் கற்றுத் தருகிறார்கள். யோகா, தியானம், நடனம் கற்றுத் தருகிறார்கள். மாணவர்களின் இயல்பான படைப்பூக்கத்துக்குத் தோதான சூழலை அமைத்துத் தருகிறார்கள். முக்கியமாக இந்தப் பள்ளியில் சேர இவர்கள் வைத்திருக்கும் ஒரே தகுதி குழந்தைகள் ஏழைகளாக இருக்கவேண்டும்! விண்ணப்பவர்கள் உண்மையில் ஏழைகள்தான் என்பதை முதலில் பணியாளர்களை அனுப்பி சோதித்த பிறகே சேர்த்துக்கொள்கிறார்கள். உதவிகள் உரியவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் அவ்வளவு அக்கறை. சீருடையில் ஆரம்பித்து பாட புத்தகங்கள், எழுது பொருட்கள், இரு வேளை உணவு, பள்ளியிலேயே ஒரு மருத்துவர் என அனைத்தும் இலவசமாகவே தரப்படுகிறது. அரவிந்தர் ஆஸ்ரமத்தின் சார்பில் நடத்தப்படும் சர்வ தேசக் கல்வி மையத்தில் அதி உயர் வர்க்கத்தினர் மட்டுமே படிக்க முடிகிறது; அந்த உயர்ந்த கல்வி சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அங்கு படித்த இந்த தம்பதியினர் தமது கல்வி மையத்தை நடத்திவருகிறார்கள்.

இந்தப் புத்தகத்தில் திறந்த மனதுடன், விரிவாகக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருப்பவர் ச.தமிழ்செல்வன். அரசு உதவியுடன் அறிவொளி இயக்கம் என்ற சமூகக் கல்வி இயக்கத்தை துடிப்புடன் முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர். கல்வி சார்ந்து நேரடியாக அதிகம் இல்லையென்றாலும் சமூக நோக்கில் அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் கூடுதல் கவனத்துடன் பரிசீலிக்கத் தக்கவை.

நக்சல் பாதையில் சிறிது பயணித்து அதன் பயனின்மையையும் கெடுதலையும் விரைவிலேயே புரிந்துகொண்டு ஆக்கபூர்வப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிய தடா பெரியசாமி, கிராமப்புற மாணவர்களின், குறிப்பாக தலித்களின், மேம்பாட்டுக்காகப் பள்ளிகளை நந்தனார் சேவா டிரஸ்ட் மூலம் நடத்திவருகிறார். தலித்கள் இந்து மதத்தின் ஆதார சக்திகள் என்ற சரியான புரிதலுடன் கல்விப் பணிகளை முன்னெடுத்துவரும் இவரைப் போன்றவர்களுக்கு இந்து அமைப்புகள் கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டியது மிகவும் அவசியம். உள்ளிருந்து அரிக்கும் கரையான்களையும் பூச்சிகளையும் அழிக்க பூச்சி மருந்துகள் அடிக்கும் அதே நேரத்தில் வேருக்குத் தேவையான நீரையும் ஊற்றத்தானே வேண்டும். கடித்துத் தின்ன வரும் விலங்குகளை அடித்துத் துரத்தி வேலி போடுவதில் காட்டும் அக்கறையை வேருக்குத் தழை உரம் போடுவதிலும் காட்டத்தானே வேண்டும். வெறும் பூச்சி மருந்து அடிப்பதிலும் வேலியைப் போடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி நீரூற்றாமல், உரமிடாமல் வேரைப் புறக்கணித்தால் மரம் எப்படி வளரும்… பூ எப்படி மலரும்?

இந்திய வாழ்வியல் மீது கொண்ட பற்றினால் தன் பெயரை கோவிந்தா என்று சூட்டிக்கொண்ட ஆங்கிலேயருடன் இணைந்து தமிழகத்தைச் சேர்ந்த அருண், திருவண்ணாமலையில் மருதம் பண்ணைப் பள்ளியை நடத்திவருகிறார். சுற்றியுள்ள கிராமத்துக் குழந்தைகளுக்குக் கல்வியுடன் சேர்த்து விவசாயம், ஓவியம், கைவினைக் கலைகள், நடிப்பு, தோட்டக்கலை, கட்டிடக்கலை, தையல் பயிற்சி எனப் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் சார்பில் நடத்தப்படும் தி ஸ்கூலில் பணி புரிந்த அனுபவம் இவருக்கு கல்வி குறித்த புரிதலை செழுமைப்படுத்தியிருக்கிறது. திருவணணாமலையில் சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கையோடு இணைந்த கல்வியை வழங்கிவருகிறார். உள்ளூர் நலன், உலக முதலீடு என்ற சரியான செயல்திட்டத்துடன் நடந்துவரும் இந்தப் பள்ளியில் திருவண்ணாமலையில் இருக்கும் அயல் நாட்டினரின் குழந்தைகளும் தமிழ் குழந்தைகளும் இணைந்து படித்துவருகிறார்கள்.

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பவர்களில் கல்வி சார்ந்த சிந்தனைகளில் மிக அழுத்தமான, விரிவான சிந்தனைகளைக் கொண்டவர் ஆயிஷா இரா நடராசன். குழந்தை இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி பரிசும் பெற்றவர். அவருடைய கல்விச் சிந்தனைகள் மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு அருமையான வழிகாட்டி. இந்த சிந்தனைகளை அவர் நடைமுறையிலும் சாதித்துக்காட்டும்போது அவருடைய முக்கியத்துவம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

கல்விச் சிந்தனையிலும் சரி, அதை நடைமுறைப்படுத்தியதிலும் தமிழகத்திலேயே முன்னணி இடத்தில் இருப்பது கிருஷ்ண மூர்த்தி ஃபவுண்டேஷன்தான். அவர்கள் சார்பில் அடையாறில் நடத்தப்படும் தி ஸ்கூல் தமிழகப் பள்ளிகளிலேயே முதல் இடத்தில் இருக்கும் கல்வி மையம். அங்கு பயிலும் மாணவர்களின் வர்க்கப் பின்னணி, அங்கு படித்து முடிப்பவர்கள் சமூகத்துக்கு ஆற்ற முடிந்த/ ஆற்றும் சேவைகள், பயிற்று மொழி ஆகியவை சார்ந்து சில விமர்சனங்களை அவர்கள் மீது வைக்க முடியும். எனினும் தாங்கள் லட்சியமாக எடுத்துக்கொண்டிருப்பதை அப்படியே சிறிதும் வழுவாமல் நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் அபார வெற்றி பெற்றிருக்கும் கல்வி மையமாக அவர்களுடைய தி ஸ்கூல் திகழ்கிறது. தமது கல்வி முறை பற்றித் தெரிந்துகொள்ளவிரும்பும் தனி நபர்களில் ஆரம்பித்து, ஆசிரியர்கள் குழுக்கள் வரை அனைவருக்கும் அனைத்தையும் முழு மனதுடன் பகிர்ந்துகொள்ளவும் செய்கிறார்கள்.

தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் செயல் வழிக் கற்றல் என அரசுப் பள்ளிகளுக்கு ஒரு செயல் திட்டத்தை வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள். மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இவர்களுடைய கல்வி முறை தமிழகத்தில் அதிகம் பேருக்குக் கிடைக்கவேண்டும்.

இந்தப் புத்தகத்தில் தமிழகத்தின் 9 முன்னணி கல்விச் சிந்தனையாளர்கள் தமது கருத்துகளை, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவை ‘ஆழம்’ இதழில் தொடர் பேட்டியாக வெளியாகின. தாய் மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி, மனனத்தை ஒரு துணை வழியாக மட்டுமே பயன்படுத்துதல், தேச – சமூக நலன் சார்ந்த கல்வி, மாணவர்களின் தனித் திறமைகள், விருப்பங்களுக்கு போதிய வாய்ப்பு என கல்வியின் அடிப்படைகளாக சிலவற்றை முன்வைத்திருக்கிறார்கள். இவர்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த சமூகமும் இவர்கள் முன் வைக்கும் சிந்தனைகளுக்கு எதிர் திசையில் ராட்சச வேகத்துடன் நகர்ந்துவருகிறது. உலகின் எல்லா இடங்களிலுமே சிறுபான்மைதான் பெருந்திரளை வழி நடத்திவருகிறது. அதுதான் இயல்பானது; சாத்தியமானதும் கூட. அந்தச் சிறுபான்மை ஆரோக்கியமானதாக, நேர்மையானதாக இருக்கும்போது அந்த சமூகம் முன்னேற்றமடைகிறது. அல்லாதுபோகும்போது அந்த சமூகம் பின்னடவைச் சந்திக்கிறது. எண் சாண் உடம்புக்கு சிரசுதானே பிரதானம். தமிழகக் கல்வி நல்ல நிலையை அடையவேண்டுமென்றால், இந்தச் சொற்பச் சிறுபான்மையினர் தமிழ்க் கல்வியின் சிரசாக வேண்டும்.

தமிழகத்தில் மாற்றுக் கல்வி
(தமிழகத்தின் முன்னணிக் கல்வியாளர்களுடன் ஓர் உரையாடல்)
விலை : 136
பக் : 100
வெளியீடு: கிழக்கு  பதிப்பகம்.

Tags: , , , , , , , , , , , , , , ,

 

3 மறுமொழிகள் தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்

 1. Ramesh on January 9, 2015 at 5:20 pm


  எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். திரு. B.R. மகாதேவன் கட்டுரை அருமை. நம் பாரதத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழி கல்வி முறையை கொண்டுவரவேண்டும். இரண்டாம் & மூன்றாம் மொழியாக விருப்ப மொழியை பயில முறைகள் ஏற்படுதபடவேண்டும். முக்கியமாக கல்வி வியாபாரம் தடுத்து நிறுத்தபடவேண்டும். அரசு ஊழியர்களின் & அதிகாரிகளின் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என் கட்டயப்டுதவேண்டும். அரசுப்பள்ளிகளை சீர்படுதவெண்டும். இன்னும் கல்வியில் என்னனமோ வேண்டும் நடக்குமா நம் ஊழல் நிறைந்த நாட்டில்.

 2. க்ருஷ்ணகுமார் on January 9, 2015 at 9:38 pm

  சித்தாந்தச் சிமிழில் அடைபடாது…… தமிழகத்தில் கல்விக்காகப் பணி செய்யும் …..பற்பல பின்புலத்தினைச் சார்ந்த ….. அன்பர்களது தொண்டுகள்….. அவர்களது பங்களிப்புகளைத் தாங்கள் தொகுத்து வழங்க முனைந்தமைக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  ஒரு ஹிந்துத்வரால் மட்டிலுமே எல்லைகள் கடந்து இப்படி பலதளத்தில் உள்ளவர்களது உயர்வான பணியை விதந்தோத இயலும் என்பதனைத் தங்கள் வ்யாசம் உணர்த்துகிறது.

  இன்னம் ஒரு முக்யமான அன்பரின் பங்களிப்பை இங்கு சேர்க்க விரும்புவேன்.

  பலருக்கும் இணையம் வாயிலாக அறிமுகமான அன்பர் ஒத்திசைவு ராமசாமி அவர்களது அயராத கல்விப்பணியை தாங்கள் பகிர்ந்த இந்த முக்தாஹரத்திற்குப் பதக்கமாகச் சேர்க்கிறேன்.

 3. balasankar on February 14, 2015 at 6:01 pm

  தாய் மொழி கல்வி தான் சிறந்தது.

  tsu சமுக தளம் தான் சம்பாதிக்கும் பணத்தில் 90 % அதன் வாடிகையாளர்களுக்கு தருகிறது. இந்த தளம் நன்றாக இருக்கிறது. facebook போலவே உள்ளது. பொழுத்துபோக்குடன் பணமும் கிடைக்கிறது. TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது. இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும். வந்து சேருங்கள். எனது இணைப்பு tsu.co/balasankar

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*