குழப்ப நிலையில் தமிழக அரசியல்

திக்குத் தெரியாத காட்டில்….

தமிழக அரசியல் இதுவரை காணாத குழப்ப நிலையில் தத்தளிக்கிறது. ஆளும் அதிமுகவும் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவும் திசைகாட்டி இல்லாத கப்பல் போலத் தள்ளாடுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக, மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ள பாமக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் அனைத்திலுமே ஒருவித செயலற்ற தன்மை காணப்படுகிறது. தேசிய அளவிலான ஆளும் கட்சியான பாஜக இன்னமும் தன்னை மாநில அரசியலுக்குள் நிலைநிறுத்திக் கொள்ளாமல் தவிக்கிறது.

விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய அளவில் வழிகாட்டிய தலைவர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் நிலையைச் சொல்லவே வேண்டாம். திமுக- அதிமுக என்ற இரு துருவ அரசியலுக்குள் ஏதாவது ஒரு அணியில் இடம் பெறுவதே போதும் என்றிருக்கும் சிறு கட்சிகளைப் பற்றி இங்கு பேச வேண்டியதில்லை. மாநில மக்களுமே கூட போதிய அரசியல் உணர்வுடன் உள்ளார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.

திரிசங்கு நிலையில் திமுக:

தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக மாநில கட்சிகள் எழுச்சி பெறுவதற்கு முன்னுதாரணமாக இருந்த திமுகவின் நிலைமை மிகவும் பரிதாபமாக  இருக்கிறது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அளித்த  ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற மூன்று தாரக மந்திரங்களும் ‘சுயநலம், குடும்ப அரசியல், ஊழல்’ என்று மாறிவிட்ட சூழலில், கட்சியின் அடிமட்டத் தொண்டன் நம்பிக்கை இழந்துவிட்டான்.

மகன்களிடையே தடுமாறும் மு.க.

இப்போது இருக்கும் திமுக, லட்சியங்களால் வழி நடத்தப்படுவதல்ல; லட்சங்களால் வழி நடத்தப்படுவது. மாநில அளவில் தலைவர் எந்த வழிமுறையைக் கடைபிடிக்கிறாரோ அதே வழிமுறையை மாவட்டச் செயலாளர்களும் கடைபிடிக்கத் துவங்கி விட்டனர்.

வாரிசு அடிப்படையில் ஸ்டாலினுக்கு பட்டம் கட்டத் துடிக்கும் மு.க.வை அடியொற்றி, அவரது மா.செ.க்களும் தங்கள் ரத்தத்தின் ரத்தங்களை கட்சிப் பதவியில் அமர்த்தி அழகு பார்க்க விழைகின்றனர்.

சுவரொட்டி ஒட்டவும், சுவரெழுத்து எழுதவும்

கூட்டங்களில் கோஷமிடவும் தான் தொண்டன் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால் இப்போது அடிமட்டத் தொண்டர்களின் தொடர்பும் உறவும் விடுபட்டுவிட்டன. இப்போதெல்லாம் திமுக கூட்டங்களுக்கு ஆள் திரட்டுவதும் சுவரொட்டி ஒட்டுவதும் கூட ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் தொழிலாகி விட்டது.

தலைவரின் பிள்ளைகளிடையிலான மோதலை வேடிக்கை பார்க்கும் தொண்டர்களும் கழக நிர்வாகிகளும், வேறு வழியின்று சகித்துக்கொண்டு காலம் தள்ளும் நிலை. மதுரையில் அஞ்சாநெஞ்சன் என்று எண்ணிக் கொண்டிருந்த தலைவரின் பிள்ளை இப்படி அடங்கிப் போவார் என்று அவர்கள் எண்ணிப் பார்க்கவும் இல்லை.

இவை எல்லாவற்றையும் விட, திமுகவை அதிகம் நிலைகுலைய வைத்திருப்பது அதை விடாது துரத்தும் ஊழல் பூதங்கள் தான். சர்க்காரியா விசாரணை ஆணையத்தில் சிக்கியபோது கூட ’விஞ்ஞான ரீதியான அணுகுமுறை’ காரணமாகத் தப்பிய  மு.க. வுக்கு இப்போது போதாத நேரம். 2-ஜி அலைக்கற்றை மோசடியால் ஆட்சியையும் இழந்து மரியாதையும் இழந்த திமுக, இப்போது நம்பகமான கூட்டாளிகள் இன்றி வீரமணியாரையும் சுப.வீரபாண்டியனாரையும் வைத்து ஒப்பேற்றுகிறது.

2-ஜி ஊழலில் திமுகவின் ஆ.ராசாவையும் கனிமொழியையும் வைத்துப் பலனடைந்த காங்கிரஸ் பெருந்தலைகள் இப்போது திமுக என்ற பெயரைக் கேட்டாலே அலறுகிறார்கள். மோடியை பிரதமராக்கியதே 2-ஜி தான் என்று அவர்கள் கண்டுகொண்டுவிட்டார்கள் போல. இடதுசாரிகளோ, திமுகவுடன் சேர்ந்து மதச்சார்பின்மையைக் காக்க முடியவில்லையே என்று கிடந்து மறுகுகிறார்கள்.

தமிழகத்தில் ஆளும் கட்சி ஸ்தம்பித்துள்ள நிலையில் திமுகவின் அரசியல் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பதவிப்பித்தர்களும் நில அபகரிப்புப் பேர்வழிகளும், உள்ளூர் தாதாக்களும் கட்சியின் நிர்வாகிகளாக மாறிவிட்ட சூழலில், திமுகவில் வேறெந்த மாற்றத்தையும் எதிர்பார்ப்பது தொண்டனின் தவறாகவே இருக்கும்.

மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை வளையத்துக்குள் மனைவி, துணைவி, மகள்கள், மைத்துனர் மக்கள் எனப் பலரும் வந்துள்ள சூழலில் மோடி அரசைப் பகைத்துக் கொள்ளாமல் இருக்கவும் பம்முகிறார் கலாகார். காங்கிரஸ் போல பாஜகவை நினைத்துவிட்டார். போகட்டும், அதையேனும் புரிந்துகொள்ள முடிகிறது. மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பாமல் வேடிக்கை பார்ப்பது ஏனாம்? இயலாமை தவிர வேறெந்த காரணமும் கண்களுக்குப் புலப்படவில்லை.

திமுக தலைவர் மு.கருணாநிதி, எவ்வாறெல்லாம் சூழ்ச்சி செய்து அந்தப் பதவிக்கு வந்தாரோ, அவரது கண் முன்னரே அவரது கட்சி கரைந்து கொண்டிருக்கிறது- ஊதுவத்திப் புகை போல. இதைத் தடுக்கவும் திராணியின்றி, செம்மொழி கொண்டான் தத்தளிக்கிறார். மொத்தத்தில் திமுகவின் தற்போதைய நிலை விண்ணுக்கும் போக முடியாமல், மண்ணுக்கும் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் இருக்கிறது. செந்தமிழ்க் கவிஞன் அறம் பாடிச் சென்றாரோ?

கேது நிலையில் அதிமுக:

அதிமுகவின் காவல் தெய்வமும் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெறுவார் என்றோ, அதனால் முதல்வர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டியிருக்கும் என்றோ அதிமுக தொண்டர்கள் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், கட்சித் தலைமைக்கு என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருந்திருக்காது.

அதிமுகவினர் சரணாகதி அடைவது இனி யாரிடம்?

இப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ‘பொம்மை முதல்வர்’ என்றே அழைக்கப்படுகிறார். முந்தைய திமுக அரசை ஒவ்வோர் அறிக்கையில் ‘சிறுபான்மை அரசு’ என்று வறுத்தெடுத்த அம்மாவின் ஆசிபெற்றவரான ஓ.பி. இதுவரை தான் முதல்வர் என்பதை நினைவில் கொண்டிருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இன்னமும் சட்டசபையில் ‘மக்கள் முதல்வர்’ அமர்ந்திருந்த இருக்கையில் அவர் அமரத் துணியவில்லை. அவரை கட்சியினரும் பெரிய அளவில் மதிப்பதாகத் தெரியவில்லை.  எனவே தான் ஓ.பி. அரசை ‘பினாமி அரசு’ என்று அழைத்து தனது பழியைத் தீர்த்துக் கோண்டிருக்கிறார் மு.க.

பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெ-யின் அடியொற்றி அவ்வப்போது மத்திய அரசுக்கு தானும் கடிதம் எழுதும்போது தான்,  தமிழக முதல்வர் ஓ.பி. என்பதே தெரிய வருகிறது. அதுவும் கூட போயஸ் தோட்டத்தில் பெற்ற ஆலோசனைப்படித் தான் என்பது அனைவரும் அறிந்த கதை.

முதல்வர் தான் இப்படியென்றால், மாநில அமைச்சர்களுக்கோ, யாகம், பூஜைகள், தேர் இழுத்தல், காவடி சுமத்தல், அன்னதானம் போன்ற நிகழ்வுகளுக்கே நேரம் போதவில்லை. இதயதெய்வம் அம்மா மீண்டும் முதல்வராக வேண்டி அலகு குத்தும் அமைச்சர்களும், பால்குடம் எடுக்கும் எம்.எல்.ஏ.க்களும், விரதம் இருக்கும் எம்.பி.க்களும் மக்களிடையே தனக்கு கெட்ட பெயரைத் தான் சம்பாதித்துத் தருகிறார்கள் அன்பதை ‘காவல் தெய்வம்’ உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.

நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட ஒருவரை அதே நீதிமன்ற முறையீடுகளால் தான் காக்க முடியும் என்று தெரியாதவர்களா அதிமுகவினர்? இதில் ஏன் கடவுளை இழுத்து அரசியல் நடத்த வேண்டும்? மக்களிடையே அனுதாபம் பெறுவதற்கான முயற்சியாக இந்தச் செயல்பாடுகளை அதிமுகவினர் தொடர்வது அவர்களுக்கே எதிராக முடியும்.

மாநிலத்தில் நிர்வாகம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அரசுப் பதவி நியமனங்கள், பணியிட மாற்றங்களில் கொழுத்த பணம் விளையாடுகிறது. வசூலிப்பவர்கள் அனைவரும் சொல்லும் காரணம், இத்தொகை ‘மேலிட’ உத்தரவுப்படியே வசூலிக்கப்படுகிறது என்பதே. துணைவேந்தர் முதல், மாவட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், பஞ்சாயத்துப் பணியாளர்கள் வரை ஒவ்வொரு நியமனத்துக்கும் ஒவ்வொரு விலை இருப்பதாகச் சொல்கிறார்கள். இது எப்படி அம்மாவின் நற்பெயருக்கு சிறப்புச் சேர்க்கும்?

அம்மா உணவகம், அம்மா குடிநீர், இலவச மிதிவண்டிகள், விலையில்லாப் பொருள்கள், விலையில்லா அரிசி, விலையில்லா ஆடு, விலையில்லா மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் என்ப பல திட்டங்களால் மக்களை வசீகரித்த அதிமுக தலைவியின் ’பொற்கால அரசு’, தற்போது செயல்படாத அமைச்சர்களால் தேக்கமடைகிறது. அதிகாரிகளின் அரசாக மாறிவருகிறது அதிமுக அரசு. ஒவ்வொரு துறையிலும் உள்ள அரசு செயலாளர்களுக்கு அமைச்சர்களை விட அதிக மதிப்பு. இது மக்களாட்சி முறைக்கு நல்லதல்ல.

காலிப் பெருங்காய டப்பாக்கள்

பெரும்பாலான உள்ளாட்சிகளில் ஆளும் அதிமுகவினரே இடைத்தரகர்களாக மாறி வருவதால், அங்கும் குப்பைகள் தேங்குகின்றன; சாக்கடைகள் நாறுகின்றன. மொத்தத்தில் அதிமுகவின் பெயர் நாறுகிறது. போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து அம்மா தான் வெளிவரவில்லை; வெளி வட்டாரத் தகவல்கள் கூட அம்மாவை எட்டாதா?

போதாக்குறைக்கு மத்திய அரசுடன் இணக்கம் காட்டாமல் இருக்க வேண்டுமென்ற கட்டளை இருப்பது போல, மாநில அரசு நடந்துகொள்கிறது. மக்களவையில் துணை சபாநாயகர் பதவியின் கண்ணியம் மறந்து, அரசுக்கு எதிராக முழங்குகிறார் தம்பிதுரை.   ‘வழக்கு’களில் பாஜக உதவும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றியதால், அதிமுகவினர் இவ்வாறு நடந்து கொள்கின்றனரா?

அதிமுக என்ற கட்சியின் நிலையோ மிகவும் மோசம். அங்கு யார் எந்தப் பதவியில் இருப்பார்கள் என்பது யாருக்குமே நிச்சயமில்லை. உளவுத்துறை அளிக்கும் தகவல்களும் கட்சியினர் அனுப்பும் மொட்டைக் கடிதாசிகளும் தான் அதிமுக நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நிர்ணயிக்கின்றன. அதனால் தானோ, முதல்வர் சீட்டுநுனியில்  ‘அமர்ந்தும் அமராமல்’ தத்தளிக்கிறார் ஓ.பி?

ஆயினும் மாநிலம் முழுவதும் தொண்டர் பலத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அதன் தளபதிகள். ஆளும் கட்சியாக இருக்கும் சாதக சூழலே அதிமுகவை ஒரு கட்சியாக இயக்கிக் கொண்டிருக்கிறது. வழக்கம்போல காசை விட்டெறிந்தால் தேர்தலில் வென்றுவிடலாம் என்று அதிமுகவினர் நினைக்கக் கூடும். காலம் எப்போதும் ஒரே பகடையை உருட்டாது என்பதை, பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அறியாமல் இருந்தால், அது அதிமுகவினரின் அறியாமை அல்ல; கண்ணை மறைக்கும் ஆணவம்.

நீதிமன்ற வழக்கில் அம்மா முறைப்படி நிரபராதி என்று விடுதலை ஆகட்டும். அது சட்டம் சார்ந்த விஷயம். அம்மாவின் நிலைமை காண்போர் அனைவருக்கும் வருத்தம் அளிப்பதும் உண்மைதான். அதற்காக அதிமுகவினர் தங்கள் மிகை நடிப்பால் அம்மாவைக் கவர நடத்தும் முயற்சிகள் அவர்களுக்கே  ‘பூமராங்’ ஆகிவிடும். மொத்தத்தில், தற்போதைய அதிமுகவின் நிலை, அமிர்தம் தங்கிய கேதுவின் உடல் போலத் தான் இருக்கிறது.

மதில் மேல் பூனைகள்:

சென்ற சட்டசபைத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்ற தேமுதிக, கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலர் ஓட்டம் எடுத்ததால் நிலைகுலைந்திருக்கிறது. கட்சித் தலைவர் கேப்டனின் நிலையோ, மத்தியில் ஆளும் பாஜகவுடன் உறவைத் தொடரவும் முடியாமல், 2-ஜி புகழ் திமுகவுடன் சேரவும் முடியாமல் இரு கொள்ளியிடை அகப்பட்ட மெழுகாக இருக்கிறது. அவ்வப்போது சிங்கப்பூர் சென்றாலும், தெளிவான அரசியல் முடிவை அவரால் எடுக்க முடியவில்லை. மாநிலத்தில் தற்போது நிலவும் வெற்றிடத்தைப் பூர்த்தி செய்யும் ஆற்றலின்றி விஜயகாந்த் தடுமாறுகிறார். எஸ்றா போன்ற புதிய வழிகாட்டிகளின் பாதையில் பயணிக்கலாமா என்று மைத்துனருடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார் கேப்டன்.

மதில் மேல் பூனைகள்

பாமகவுக்கோ, அன்புமணி மீதான மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கு தான் ஒரே பிரச்னை. அதில் பாஜக உதவுவதாகத் தெரியாததால், மருத்துவர்  ‘பாமக ஆட்சி’ என்ற அஸ்திரத்தை கையில் எடுக்கிறார். அதே நேரம் திமுகவையும் அதிமுகவையும் ஒருசேர விளாசுகிறார். அதிமுக மீதான தாக்குதலில் மட்டும் கொஞ்சம் கருணை தெரிகிறது. தேர்தல் காலக் கணக்கீடாக இருக்கலாம். வரும் முன் காப்பது மருத்துவரின் கடமை அல்லவா?

வைகோவுக்கோ தோள் துண்டை இறுக்காமல் அமைதியாக எந்த ஒரு விஷயத்தையும் பேச முடிவதில்லை. மத்தியில் உள்ள பாஜக அரசுடன் தொடர்ந்து மோதி கூட்டணிப் பானையை உடைத்துவிட்டு, அதிமுகவின் கடைக்கண் பார்வைக்காக தூது விடத் தயாராகிறார் மதிமுக பொதுச்செயலாளர். இலங்கை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய கூட்டணி அமைக்க மதியூகிகள் யோசிக்கக் கூடும். அரசியலுக்கு வெட்க, மான நரம்புகள் இல்லை.

இடதுசாரிக் கட்சிகள் இப்போதைக்கு அதிமுகவை எதிர்க்கின்றன. உண்மையில் மாநிலத்தில் ஓரளவேனும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் தான். மக்கள் பிரச்னைக்காக இவ்விரு கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பத்திரிகைச் செய்திகள் அல்லாமல் களத்தில் நின்று குரல் கொடுக்கிறார்கள். ஆனால், தேர்தல் கால வியூகங்களில் அவர்களின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையும், பாஜகவை எதிர்த்தாக வேண்டிய கட்டாயச் சூழலும் தான் வெளிப்படும். இப்போதே, வெடிகுண்டு வைத்தவர்களின் கட்சிகளுடன் சமரசம் செய்துகொள்ளத் தயாராக உள்ள இடதுசாரிகளின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்காலத்தில் தீர்மானிப்பது கடினம். காலிப் பெருங்காய டப்பாக்களிடம் வேறென்ன எதிர்பார்ப்பது?

பழம்பெரும் கட்சியான காங்கிரஸ், வாசனின் வெளியேற்றத்தால் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. புதிய தலைவரான இளங்கோவன் பாஜகவை வசைபாடுவதன் மூலமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முனைப்பில் உள்ளாரே தவிர, மாநிலத்தில் உள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தும் நிலையில் இல்லை. வாசனுக்கும் காங்கிரஸ் தலைவர்களை தனது அணிக்கு இழுப்பது தான் இப்போதைய ஒரே கடமை.

திருமாவளவன், கிருஷ்ணசாமி, உள்ளிட்டோரின் ஜாதி அடிப்படையில் இயங்கும் அரசியல் கட்சிகள் ஏதாவது ஒரு அணியில் ஐக்கியம் கண்டு ஜென்ம சாபல்யம் அடைபவை. அவை குறித்து விமர்சிப்பதில் பொருளில்லை. மொத்தத்தில், அதிமுக, திமுக அல்லாத கட்சிகள் பலவும் மதில் மேல் பூனைகளாகவே காட்சி அளிக்கின்றன.

இதில் கவலைப்பட வேண்டிய ஒரே விஷயம், தேசிய ஆளும் கட்சியான பாஜகவின் நிலை தான். மாநிலத்தில் வேறெந்தக் கட்சிக்கும் இல்லாத தனித்தன்மையும், மத்தியில் ஆளும் கட்சி என்ற செல்வாக்கும் கொண்டிருந்தும் கூட, தமிழக பாஜக தன்வலிமை உணராத அனுமன் போல அடங்கிக் கிடக்கிறது. ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற தமிழக பாஜகவின் இலக்கை நிராகரித்த கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, ‘60 லட்சம் பேரைச் சேருங்கள், அதன் பிறகு மாற்றம் காணலாம்’ என்று கூறிச் சென்றிருக்கிறார். அவர் யதார்த்தவாதி. மாநிலத் தலைவர்கள் அவ்வாறு சிந்திக்கிறார்களா என்பது தெரியவில்லை.

தமிழக பாஜகவும் காங்கிரஸ் போல சுவரொட்டிக் கலாசாரத்தில் சிக்கிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இங்கும் கோஷ்டி கானங்கள் பாடப்படுவது ஆங்காங்கே கேட்கிறது. இவை நல்ல அறிகுறிகள் அல்ல.

வெற்றிடத்தை நிரப்புமா பாஜக?

தமிழகத்தில் தற்போதுள்ள வெற்றிடத்தை மறுபடியும் வெற்றிடத்தால் நிரப்ப முடியாது. தற்போதைய சூழலை சாதகமாக்க பாஜக விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்கவும், லட்சிய உணர்வுடன் செயல்படவும் வேண்டும்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் குறைபாடுகளே அவற்றின் சுமைகள். தேசிய நன்னோக்கு இருந்தால் போதாது. முதுகில் சுமை இருக்குமானால், இலக்கை நோக்கிய பயணம் இயலாது- இதை பாஜக உணர்வது அக்கட்சிக்கு நல்லது; நாட்டிற்கும் நல்லது.

 .

12 Replies to “குழப்ப நிலையில் தமிழக அரசியல்”

  1. எல்லாம் சரி. அதிமுகவை பற்றிய விமர்சனத்தில் தீர்க்கமாக ஒரு குற்றச்சாட்டையும் வைக்க முடியவில்லை. அமைச்சர்கள் செயல்பாட்டில் என்ன குறை என்று தெளிவாக விளக்கவில்லை. ஒ.பி.எஸ் முதல்வர் அமர்ந்த இடத்தில் உட்காரவில்லை என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டாக வைக்க முடியாது. அது அவரின் தனிப்பட்ட விஷயம். செயல்படாத அமைச்சர்கள் என்று எதை வைத்து சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. குப்பைகள் சேருகின்றன என்பதெல்லாம் உங்கள் ஊகமாக இருக்கலாம் அல்லது அதிமுகவின் மீது உள்ள வெறுப்பின் அடையாளமாக வந்திருக்கலாம். இது சம்பந்தமாக சமீபத்திலோ அல்லது சற்று முன்னதாகவோ ஏதும் செய்தி வந்ததாகத் தெரியவில்லை. தம்பிதுரை மாண்பை மீறியதாக உள்ள செய்தியை தந்தால் நன்றாக இருக்கும். அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆசிரியர்கள், இளநிலைப் பணியாளர்கள் பல ஆயிரம் பேர் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள். ஊழல் நடந்த துறையின் பொறுப்பிலுள்ள அமைச்சர் மாற்றப்படுகிறார். இது வரை இந்த அரசு மீது எந்த அரசியல் கட்சியும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட சுமத்த முடியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீடு நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஜெயலலிதாவிற்கு சாதகமான விஷயங்கள் நிறைய உள்ளது என்றுதான் சொல்லுகிறார்கள். அதனால் சாதகமான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. கடந்த தேர்தலில் திமுகவை விட இருமடங்கு ஓட்டு சதவீதம் வாங்கிய கட்சி அதிமுக. இரண்டரை ஆண்டுகளில் அதிகமாக ஓட்டிழப்பு ஏற்பட சத்தியம் இல்லை. அடுத்த தேர்தலிலும் அதிமுகவே ஜெயிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

    அதென்ன மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ள பாமக? எவ்வளவு செல்வாக்கு உள்ளது? ஒன்றும் இல்லை. ஒரு சில மாவட்டங்களில் வேண்டுமானால் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம். ஆனால் மாநில அளவில் என்று சொல்வதெல்லாம் பெரிதுபடுத்தபட்ட செய்தி.

    பாஜகவைப் பொருத்தவரை மோடியின் ஆட்சியால் பல நன்மைகள் விளைந்திருக்கின்றன. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தீர்க்கமான முடிவு எடுத்தது; அதனால் இந்த வருடம் 136 அடிக்கு மேல் தேக்க முடிந்தது; மீனவர்ப் பிரச்சனையில் அரசின் தெளிவான அணுகுமுறை மற்றும் அதை நிரந்தரமாக தீர்க்க முனைவது; விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வந்தது; வளர்ச்சி சதவீதம் அதிகமானது; போன்றவை. ஆனால் இதையெல்லாம் மக்களிடையே கொண்டு செல்வதில் அதன் தலைவர்கள் முனைப்பு காட்டவில்லை என்றே நினைக்கிறேன். வெறும் டிவி விவாதங்களினால் எந்தப் பயனும் இல்லை. அதே போல் சில குறைகளும் இருக்கின்றன. காவிரிப் பிரச்சினையில் ஆணையம் அமைக்காதது பெரிய குறை. இது குறித்து ஜெ. அவர்கள் பலமுறை கேட்டுக் கொண்டும் கூட மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருண பகவானின் துணையோடு இந்த வருடம் கழிந்தது. போதாக்குறைக்கு கர்நாடகாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் இந்த விஷயத்தில் நடந்து கொண்ட விதம் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. தமிழகத் தலைவர்கள் இது குறித்து வாய் திறக்கவில்லை. இன்னொன்று இரயில்வேயில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது; முக்கியத் திட்டங்கள் நிதியில்லாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்த இரண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்கு பாஜக தலைவர்கள் என்ன செயல்திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டும்.

    என்னைப் பொருத்தவரை அதிமுகவிலும் ஆட்சியிலும் பெரிய குழப்பமில்லை. அதே போல் தேர்தல்களில் அதிமுகதான் வெற்றிபெறும். பாஜக பிரதான எதிர்கட்சியாக வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு மோடி என்கின்ற ஒரு மாமனிதர் மட்டுமே காரணம். இன்னொன்று தமிழக பாஜக தலைவர்கள் இந்துத்துவத்தை தூக்கிப் பிடிப்பதை நிறுத்தி விட்டு மாநிலத்தின் வளர்ச்சி என்ற தத்துவத்தை தூக்கிப் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வளர முடியாது.

  2. அ. முத்துக்குமார்
    //எல்லாம் சரி. அதிமுகவை பற்றிய விமர்சனத்தில் தீர்க்கமாக ஒரு குற்றச்சாட்டையும் வைக்க முடியவில்லை. அமைச்சர்கள் செயல்பாட்டில் என்ன குறை என்று தெளிவாக விளக்கவில்லை//
    //இது வரை இந்த அரசு மீது எந்த அரசியல் கட்சியும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட சுமத்த முடியவில்லை//

    நீங்கள் இந்த இனையம் மட்டும்தான் படிப்பீர்களா? என்ன ஒரு ஆட்சர்யம். ஒரு இணயத்தில் இந்த ஆட்சியின் ஊழலை கிழி கிழி என்று கிழித்து ஆதாரம் போட்டு தோறணம் கட்டியாகி விட்டது. ராமதாஸ் அதை கபக் என்று புடித்து அறிக்கை மேல அறிக்கை விடுகின்றார்? நீங்கள் வெளிநாடா?

  3. கட்டுரையில் தமிழக அரசியல் நிலை பற்றிய இன்றைய நிலையை நன்கு எடுத்துக்காட்டப்பட்டிருகிறது. மக்களின் வரிப்பணத்திலிருந்து மக்களுக்கு இலவசங்களை வாரிக்கொடுத்து தேர்தல் வெற்றியில் குறியாக இரண்டு
    முக்கிய திராவிட கட்சிகள் இருக்கின்றன. இன்றைய நிலையில் எந்த தேசீய
    கட்சிகளுக்கும் தமிழ் நாட்டில் இடம் இல்லை. மற்ற மாநில அரசியல் கட்சிகள் மக்களை தீவிர பிரிவு வாதங்களில் இறக்கி ஆதாயம் பெற முயற்சிப்பது ஓர் துர்பாக்கியமே. தமிழ் நாட்டில் பா ஜ ப மற்றும் பொதுஉடமை கட்சிகள் தவிர
    மற்ற எல்லா கட்சிகளும் குடும்ப சொத்துக்களாகிவிட்டன.
    வருங்கால தமிழ்நாட்டு அரசியல்நிலையை காலம் தான் சொல்லவேண்டும். .

  4. தமிழ் நாட்டை பொறுத்தவரை திராவிட கட்சிகளை தவிர்த்து பெரும்பான்மை பலமுள்ள, மத்திய அரசின் செல்வாக்குப்பெற்ற பி ஜே பி ஆட்சி அமைத்தால் நலமாக இருக்கும் என நம்ப இடமுள்ளது

  5. தமிழ்நாட்டை பொறுத்தவரை திராவிட கட்சிகளில் அடிமட்ட தொண்டர்கள் கிராம அளவிலிருந்து உள்ளநெர் ஆனால் பி ஜே பிகிராம அளவில் இல்லை திராவிட கட்சிகள் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று கூறியே வளர்ந்த கட்சிகள் இந்நிலையில் பி ஜே பி தமிழ்நாட்டில் வளரவேண்டுமானால் மோடி அரசு தமிழ்மக்கள் மேன்பாட்டிற்க்கு திட்டங்கள் செயல்படுத்தவேண்டும் இல்லையெனின் தேசிய கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை

  6. முத்துகுமாரின் திறனாய்வு 100% உண்மை எதார்தநிலைமை

  7. முத்துக்குமார் கணிப்பு ஓர் அளவு சரி என்றுதான் தோன்றுகிறது

  8. அதிமுக செல்வாக்கு ,திமுக என்ற கெட்ட இருப்பின் உக்கிரத்திலும்,ஒளிவிலும்,தான் .அதிமுகவின் கொள்கை முழகத்திலோ,மக்களின் விருப்பிநாளோ,அல்ல .இருவரின் உறவும் ஒருத்தாலும்,வெறுத்தாலும் , ஒழிக்க முடியாதது .வேறெங்கும் காணாத இந்த வினோத வழக்கு இரசிக்கத்தக்கது .கருணாநிதி ஓர் உருவகம் !வீழ்ந்த அவர் கட்சியை பூச்சாண்டி காட்டி இனி பிழைக்க முடியாது. மக்களுக்கு இனி அநேக வாய்ப்புகள். காட்சி மாற்றற்திகான காலம் .அமளிகள் தோன்றும் ,அதிலிருந்தே அடுத்த தலைவனோ ,தலைமையோ உருவாகும்.அமளிகள் வாழ்க!mgr மரணம் என்ற அமளியில் வந்தவரல்லவா ஜெயா? இந்த அரசில் அனைத்தும் அருமையாக நடக்கிறது என்பது ஓர் மயக்கம் .நாட்டில் மிக அபலைகளும்,அநாதைகளும் யாரென்றால் அது ஊனமுற்றவர்களே,அவர்களுக்கு ஐந்தாயிர ரூபாய்க்காவது ஓர் உத்திரவாத வேலை போட்டு கொடுங்கள் அதை வைத்தாவது மானமுள்ள ஓர் வாழ்வை அமைத்துக்கொண்டு முறையான சம்பள உத்தியோகத்திற்கு தேடட்டும் என்று ஆயிரக்கணக்கில் இமெயில் அனுப்பியும் சீந்த நாதியில்லை .அதே ஜெயா அரசியல்ரீதியாக ஊனமாகிபோனார்,என்றதும் அமைச்சரிகளின் ஒப்பாரி ஊரை கூட்டுகிறது !சென்னை பல்கலையில் m a இங்கிலீசு ,ஆராய்ச்சி படித்த என் அனுபவம் இந்த இலட்சணம் ,அரசாங்க பணிகளை அடைபவர்கள் பணக்கார பிள்ளைகள் !தின்ற பிரியாணி செறிக்க வெற்றிலை சீவல் கொடுப்பது .
    அதிமுக,திமுக உறவு ஒரு வகையில் நாயையும் ,பேயையும் போன்றது.நாய் காணாமல் பேயிக்கு இருப்பு இல்லை ,பேயை கண்டு குறைக்காமல் பேயிக்கு பெருமையேயில்லை .மக்கள் என்ன அதிமுக அடிமைகளா?

  9. திரு முத்துக்குமார் அவர்களின் கணிப்பு சரி எதற்கெடுத்தாலும் அந்நிய முதலீடு என்ற மோடி அரசின் செயல்பாடு எதிர்காலத்தில் இந்திய அரசை பெரும் சுழலில் சிக்கவைக்கும் என்றே தோன்றுகிறது

  10. அதிமுக ,திமுக,உறவு தாயும் பிள்ளையும் போன்றது .ஒருவரின்றி ஒருவருக்கு வாழ்கை இல்லை ,அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் .எனவே நாயும் பேயும் போல .நாய் கண்டு உரைக்காமல் பேயுக்கு புவிமிசை இருப்பு இல்லை .பேயை கண்டு குறைக்காமல் ,நாய்க்கு பெருமையே இல்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *