சிதம்பர தரிசனம்

kumaragurupara                            இன்றைக்கு சுமர் 350 ஆண்டு களுக்கு முன் தென் தமிழ் நாட்டில் தூத்துக்குடி (தற்போது வ.உ.சி) மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தார் குமரகுருபரர். அவ்வூர் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகைலாயங்களில் ஒன்றாகவும் விளங்கும் பெருமை யுடையது.

                          ஐந்து வயது வரை  வாய் பேசாமல் இருந்த குமரகுருபரர் செந்தில் முருகன் அருளால் ஊமை நீங்கப் பெற்று கந்தர்கலி வெண்பா பாடினார். பின் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். சிவ ஞான உபதேசம் பெற வேண்டுமென்று தருமை ஆதீனத்தில் குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடம் துறவுநிலை யருள வேண்டினார். அவர், குமரகுருபரரை ஸ்தல யாத்திரை செய்து வரும்படி கட்டளையிட்டார். காசிக் குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமே என்று வருந்திய குமரகுருபரரைச் சிலகாலம் சிதம்பரவாசமாவது செய்ய வேண்டும் என்று பணித்தார். குருவின் கட்டளைப் படியே குமரகுருபரர் சிதம்பரம் செல்கிறார்.

சிதம்பர மும்மணிக்கோவை

சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். இது மும்மணிகளான புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்ற மூன்று மணிகள் சேர்ந்த கோவையைப் போல நேரிசையாசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை என்ற செய்யுட்களால் இயற்றப்பட்டது.

இல்லறமும் துறவறமும்

தாம் துறவு வாழ்க்கையை மேற்கொண்டாலும் இல்லறத்தின் பெருமையையும் மாண்பை யும் சிதம்பர மும்மணிக்கோவையில் விவரிக்கிறார்.

இல்லறத்தான் நல்ல நூல்களைக் கற்று, நற்குணம் நிறைந்த மனைவியோடு அன்போடு அரு ளும் சேர்ந்து இன்சொல் நிறைந்தவனாக விளங்க வேண்டும். வந்த விருந்தினரை அன்போடு உபசரிக்க வேண்டும். அடி யார்களையும் பேண வேண்டும். ஐவகை வேள்விகளான பிரமம், தெய்வம், பூதம், பித்ருக்கள், மானிடம் என்னும் 5 வகையான வேள்விகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று என்ற முதுமொழிப் படி வாழ்ந்து பிறன் மனை நயவாமல் தன் மனைவியோடு இனிது வாழ்ந்து நன்மக்கட் பேறடைய வேண்டும்.

துறவறம் –  கல்வி கேள்விகளின் மூலம் சிறந்த பேறறிவு பெற்று, அருளும், புலன்களின் வழியே செல் லாத மனவலிமையும், பேரொழுக்கமும், வாய்மை, தவம் தூய்மையும் உடையவனாகி ஓரறிவுடைய மரஞ்செடி கொடி களிடமும் அன்பும் உடையவனாக வேண்டும். கால்நடை யாகவே செல்ல வேண்டும். தோலாடை அணிய வேண்டும். துன்பம் கண்டு துவளாமல் காடும் மலையும் கடக்க வேண்டும். காற்றையும் நீரையும் உண்டு வாழ வேண்டும். பனிக்காலத்தில் நீரில் நின்றும் வெயில் காலத்தில் தீயில் நின்றும் தவம் செய்ய வேண்டும்.

இல்லறம் துறவறம் இரண்டி லுமே பல பிரச்சனைகளும் துயரங்களும் இருப்பதால் இந்த இரண்டு நிலைகளையும் கடைப்பிடிக்க மனவலிமையும் உடல் வலிமையும் இல்லாததால் மனங்கலங்கி வேறு ஏதாவது எளிய வழி இல்லையோ என்று அறிஞர்களைக் கேட்க அவர்கள் முக்தித் தலங்களான திருவாரூரில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, சிதம்பரத்தை தரிசிக்கவே முக்தி என்று சொன்னார்கள். நல்ல புண்ணியம் இருந்தால் (ஊழ்) மட்டுமே திருவாரூரில் பிறக்க முடியும். காசிக்குச் செல்வதோ மிகவும் கடினம், காடுகளைக் கடக்க வேண்டும். வழியில் பசியாகிய தீ வாட்டும். மிகவும் குளிராக இருக்கும். பலவிதமான நோய்கள் ஏற்படலாம். போய்ச் சேர நீண்ட காலம் பிடிக்கும்.

         காசியில் இறத்தல் நோக்கித் தேசம் விட்டு
         அறம்தலைத் தந்த அரும்பொருள் தாங்கிப்
         பிறன் பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு
         கழி பெருங்கானம் நீங்கி வழியிடைத்

         தீப்பசிக்கிரங்கி நோய்ப்பிணிக்கு ஒதுங்கிப்
         பல்பிணிக்கு உடைந்து செல்லுங் காலத்து
         இடைச் சுரத்து இறவாது இன்னுயிர் தாங்கிக்
         கிடைத்தனனாயின் அடுத்த நல்லொழுக்கமோடு

         உடல் விடுகாறும் அத்தட நகர் வைகி
         முடிவது கடைபோக முடிவதோ அரிதே, அதனால்
         சிற்றுயிர்க்கிரங்கும் பெரும் பற்றப் புலியூர்
         உற்ற நின் திருக்கூத்து ஒருக்கால் நோக்கிப்
         பரகதி பெறுவான் திருமுன்பு எய்தப் பெற்றனன்
                                            அளியேன்

என்று தான் சிதம்பர தரிசனம் செய்து முக்தி பெற வந்தாகச் சொல்கிறார் குமரகுருபரர்.

தில்லைத் தாமரை

நடராஜப் பெருமான் நடமிடும் பொன்னம்பலத்தைத் தரிசித்தவருக்கு அது தாமரை மலர் போல் தோன்றுகிறதாம்.

chidambaram_chitrambalamஅங்குள்ள மாடங்கள் இதழ்களாக வும், மன்றம் தாமரையின் உட்கொட்டையாகவும், விண் தோய் மாடங்களில் படியும் மேகங்கள் வண்டாகவும் காட்சி யளிக்கிறதாம். திருமகள் வீற்றிருக்கும் புண்டரீகத்தோடு நடராஜப் பெருமான் ஆடும் புண்டரீகத்தை ஒப்பிடுகிறார்.

மன்றம் பொகுட்டா, மதில் இதழா மாடங்கள்
துன்றும் புயல்கள் சுரும்பரால்—பொன்தங்கும்
நற் புண்டரீகமே ஒக்கும் நடராசன்
பொற் புண்டரீகபுரம்.

ஐவகைத் தொழில்

தூக்கிய திருவடி துணையென நம்பி வந்தவர், பெருமான் ஆக்கி, அழித்து உலகை நீக்கி, மறைத்து, அருளும் ஐந்தொழிலையும் நிகழ்த்துவதைக் காண் கிறார்.  உடுக்கை ஏந்திய தமருகக் கரம் தேவலோகத்தையும், மற்ற உலகங் களையும் தானே சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது. இதையே பின்னல் வந்த ஒரு புலவர்

ஆக்கி அழித்துலகை நீக்கி மறைத்தருளும்
ஐந்தொழில் புரிந்திடும் அம்பலவாணனே
தூக்கிய திருவடி துணையென நம்பினேன்
தூய நடராஜனே

என்று நெகிழ்ந்து பாடினார். குமரகுருபரர்,

பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பின் நானில வளாகமும்
ஏனைப் புவனமும் எண் நீங்கு உயிரும்
தானே வகுத்தது உன் தமருகக் கரமே

தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையும் வகுப்பது உன் அமைத்த பொற்கரமே
தோற்றுபு நின்ற அத்தொல்லுலகு அடங்கலும்
மாற்றுவது ஆரழல் வைத்ததோர் கரமே

ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து நின்று
ஊட்டுவதாகு நின் ஊன்றிய பாதமே
அடுத்த இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம்
கொடுப்பது முதல்வ நின் குஞ்சித பதமே

இத்தொழில் ஐந்தும் நின் மெய்த்தொழில்..

என்று போற்றுகிறார். ஐயன் ஐந்தொழில் புரிகிறான் அம்மை என்ன செய்கிறாள்? சிறு குழந்தைகளுக்குச் சில மருந்துகளை நேரடியாகக் கொடுக்க முடியாது. அதற்காகத் தாய் அந்த மருந்தைத் தான் உட்கொண்டு தன் பாலின் மூலம் மருந்தின் பயனைக் குழந்தைக்குக் கொடுப்பாள். அதேபோல உலகமாதாவான சிவகாமி அம்மையும் நடரஜப் பெருமானின் திரு நடனத்தைத் தான் தரிசித்து அதன் பயனை உயிர்கள் நுகரும் படி செய்கிறாளாம்.

குமரகுருபரரின் பெருமிதம்

பெரிய தவத்தையுடைய தொண் டர்கள் தளராமல் பலகாலம் கற்று, உணர்ந்து, தெளிந்து, செம்பொருள் இதுவென்று பலமுயற்சிகளும் செய்து வீடு பெற்றனர். நானோ அம்பலம் தரிசனம் மாத்திரம் செய்தே பிறவா நெறி பெற்றேன்!

சரியாது முயன்ற தவப்பெருந் தொண்டர்
பலநாள் ஓதிக் கலை முற்று நிரம்பி
அளவையின் அளந்து கொண்டு உத்தியில் தெளிந்து
செம்பொருள் இதுவெனத் தேறி அம்பலத்து

ஆரா அன்பினோடு அகனமர்ந்து இறைஞ்சிப்
பேரா இயற்கை பெற்றனர். யானே
சரியையிற் சரியாது கிரியையில் தளராது
யோகத்து உணங்காது, ஒண்பொருள் தூக்காது

வறிதே நின்திரு மன்றம் நோக்கிப்
பிறவா நன்னெறி பெற்றனன் அன்றே

என்று பெருமிதத்தோடு பேசுகிறார்.

nataraja_shadow

பாம்பு ஆட்டுவிக்க ஆடும் பெருமான்

அம்பலத்தாடும் நடராஜப் பெருமா னையும் சிவகாமி அம்மையையும் தரிசித்த குமரகுருபரர், அங்கு ஒரு பாம்பு ஐயனை ஆட்டுவிப்பதைக் கண்டு அதிசயிக்கிறார். இது என்ன அதிசயம்! ஐந்து இந்திரியப் பாம்புகளையும் ஆட்டுவிக்க வல்ல சித்தராகிய தில்லைக் கூத்தன் இங்கே ஒரு பாம்பு ஆட்டுவிக்க அதற்காக ஆடுகிறாரே என்று வியக்கிறார்.

பதஞ்சலி என்ற முனிவர் பாம்பு வடிவத்திலே ஐயனின் ஆடலைக் கண்குளிரக கண்டு களிக் கிறார். நடராஜப் பெருமான் பதஞ்சலி முனிவருக்காகவே ஆடல் நிகழ்த்துகிறார் என்பது வரலாறு. இதையே

ஓட்டுவிக்கக் கூட்டினை விட்டோடும் பொறியரவு
(ஐந்)தாட்டுவிக்கும் சித்தர் நீராக்கால்—கூட்டமிட்டு
மன்றாடும் உம்மை ஒரு மாசுணம் நின்றாட்டுவிக்க
நின்றாடுகின்றதென் கொல் நீர்?

என்று வினவுகிறார். மன்றில் ஆடும் மாசுணம் என்பது பதஞ்சலி முனிவரை. ஒரு பாம்பு உம்மை ஆட்டுவிக்கிறதே என்று அதிசயிக்கிறார்.

இடம் போதுமோ?

ஆடல் வல்லானைப் பார்க்கப் பார்க்க புலவருக்கு ஆனந்தமும் ஆச்சரியமும் உண்டாகிறது.

ஐயனுடைய தோள்கள் மலைகளைப்போல இருக்கின்றன வாம். திருமேனியே ஆகாயம்! திருமுடியோ மூதண்டகூடம்! வில்லோ மேருமலை! இவ்வளவு பெரிய திருமேனியுடைய பெருமானுக்கு கையைக் காலை வீசி ஆட இந்த அம்பலம் போதுமா என்ற கவலை உண்டாகிறது.

வேதண்டமே புயங்கள் விண்ணே திருமேனி
மூதண்டகூடமே மோலியாம்—கோதண்டம்
ஒற்றை மாமேரு உமாபதியார் நின்றாடப்
பற்றுமோ சிற்றம்பலம்.

இப்படித் தன் கவலையைத் தெரிவிக்கிறார் குமரகுருபரர்.

பாம்பு, கங்கை, சந்திரன்

இடம் போதுமா என்ற கவலை இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கவனமாகப் பார்க்கும் புலவருக்கு, பெருமானின் மேனியிலிருக்கும் பாம்பு, கங்கை, சந்திரனைப் பார்த்த்தும் இப்படி ஒரு கற்பனை தோன்றுகிறது.

ஐயனின் சடைமுடியிலுள்ள பாம்பு மூச்சு விடுகிறது. அந்த மூச்சுக் காற்றால் கங்கை அலையெறிகிறதாம். ஆனால் பாம்பின் கண்ணிலிருந்து உண் டான தீயால் வற்றி விடுகிறதாம். ஐயன் நெற்றிக் கண்ணிலி ருந்து படர்ந்தெழுந்த தீக் கொழுந்தால் சந்திரனிடமுள்ள அமுதம் உருகி கங்கையில் வற்றிய நீரைச் சமன் செய்து விடுகிறதாம்!

மின்வீழ்ந்தன்ன விரிசடைக் காட்டில்
பன்மாண்ட உத்திப் பஃறலைப் பாந்தள்
சிறுமூச்சிற் பிறந்த பெருங்காற்றடிப்ப
விரிதிரை சுருட்டும் பொருபுனல் கங்கை

படம் விரித்தாடும் அச்சுடிகை வாளரவின்
அழற்கண் கான்ற அவ் வாரழல் கொளுந்தச்
சுழித்து உள்வாங்கிச் சுருங்கச் சுருங்காது
திருநுதல் கண்ணில் தீக்கொழுந்தோட

உருகும் இன்னமுதம் உவட்டெழுந்து ஓடி அக்
கங்கயாற்றின் கடுநிரப் பொழிக்கும்
திங்களங் கண்ணித் தில்லை வாண!

என்று தன் கற்பனையை விவரிக்கிறார்.

இடது பாதம் தூக்கி ஆடுவது ஏன்?

அம்பலத்தான் ஆட்டத்தில் ஈடு பட்ட குமரகுருபரருக்கு ஒரு கேள்வி பிறக்கிறது. ஐயன் ஏன் இடது பாதத்தைத் தூக்கி ஆடுகிறார்? பலவிதமாக யோசனை செய்கிறார். ஒரு காரணத்தையும் கண்டு பிடிக்கிறார். ஈசனின் அடியையும் முடியையும் தேடித் திருமாலும் அயனும் வராக மாகவும் அன்னமாகவும் சென்றார்கள் அல்லவா? தனது வலது  பாதத்தைக் தூக்கி ஆடினால் திருமால் ஈசனின் திரு வடியைக் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லி விடு வார் அல்லவா? அதனால் தான் தன் இடப் பாகத்தில் வீற்றி ருக்கும் திருமாலின் தங்கையான உமா தேவியின் பாதத் தைத் தூக்கி ஆடுகிறாரோ?  இப்படி எண்ணிப் பார்க்கிறார்.

தக்கனார் வேள்வி தகர்த்துச் சமர் முடித்த
நக்கனார் தில்லை நடராசர்—ஒக்கற்
படப்பாயலான் காணப் பைந்தொடி தாள் என்றோ
இடப்பாதம் தூக்கி ஆடியவா இன்று?

என்று தன் கற்பனையை விவரிக்கிறர்.

திருவடிச் சிவப்பு

தூக்கிய திருவடியைத் தரிசித்த புலவருக்கு அதன் சிவந்த நிறத்திற்கான காரணம் என்ன என்ற ஆராய்ச்சி பிறக்கிறது. ஐயன் ஒரே அடியை ஊன்றி ஆடுவதால் அது சிவந்து இருப்பது சரியே. ஆனால் தூக்கிய திருவடியும் ஏன் சிவந்து காணப்படுகிறது? ஒருவேளை அம்மை சிவகாமவல்லி, ஐயனின் பாதங்களைப் பிடித்து விடுவதால் அம்மையின் செந்தளிர்க் கரங்களின் செம்மை நிறத்தால், இரு பாதங்களுமே சிவந்து காணப் படுகின்றனவோ? இது தான் காரணமாயிருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

patanjali-wallpaint-chidambaramபதஞ்சலியார், பதம்+சலியார் ! 

நடராஜப் பெருமான் இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிக் கொண்டிருக்கிறாரே! இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா? அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா? என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார்? பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார்! அவரோ பதம் சலியாத முனிவர்! அவர் பெருமானையும் பதம் சலியாதவராக ஆக்கி விட்டாரோ?

ஐயன் தம்மிடம் வருபவரைத்தாமாக்கும் தன்மை கொண்டவர் என்பது பிரசித்தம். ஆனால் இங்கோ பதஞ்சலி முனிவர் ஐயனையே தம்மைப் போல் பதம்+ சலியாதவர் என்றே ஆக்கி விட்டார் என்று தோன்று கிறது!

சென்றவரைத் தாமாக்கும் தில்லைச் சிற்றம்பலத்து
மன்றவரைத் தாமாக்க வல்லவர் யார்? என்றுமிவர்
ஆடப் பதஞ்சலியாராக்கினார் என் பிறவி
சாடப் பதஞ்சலியார் தாம்

என்று நயம் படப் பேசுகிறார்  குமரகுருபர முனிவர்.

குமரகுருபரரின் விண்ணப்பம்

நட்டம் பயிலும் நாதனிடம் ஒரு விண்ணப்பம் செய்கிறார் குமரகுருபரர். புலியூரில் ஆடும் ஐயனே! ஒரு விண்ணப்பம். என்று நீ அன்று நான் உன் அடிமை யல்லவா? அன்று தொட்டு இன்று வரை ‘சுழலும் பிறப்புக்கு வருந்தவில்லை. பெருங்கடலையே நீந்திக் கடக் கும் வல்லமையுடைய ஒருவன் எப்படிச் சிறிய உப்பங் கழி யைக் கடக்க அஞ்ச மாட்டானோ அதுபோல இது வரை எண்ணிலடங்காத பிறப்புக்களை யெடுத்து உழன்ற நான் இனி வரும் பிறப்புக்களுக்கும் அஞ்ச மாட்டேன்.

ஆனால் இமையா நாட்டம் கொண்ட தேவர்கள் என்னைப் பற்றிப் பேசுவார்கள். உன் திரு நடனக் கோலத்தைத் தரிசித்த பின்னும்  நான் பிறவியைப் பெற்றால் நான் அஞ்ச மாட்டேன். ஒருமுறை திரு நடனம் தரிசனம் செய்த மாத்திரத்தில் முக்தி கிட்டும் என்று வேதம் சொல் வது உண்மையல்லவா? ஆனால் ”இவன் அப்படி முக்தி பெறவில்லையே?” என்று தேவர்கள் சந்தேகப் படுவார்களே! எனக்காக இல்லாவிட்டாலும் தேவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காகவாவது எனக்கு அருள் செய்ய வேண்டும்.

வலன் உயர் சிறப்பில் புலியூர் கிழவ! நின்
பொன்னடிக்கு ஒன்று இது பன்னுவன் கேண்மதி
என்று நீ உளை மற்றன்றே யானுளேன்
அன்று தொட்டு இன்று காறும் அலமறு பிறப்பிற்கு

வெருவரல் உற்றிலன் அன்றே ஒரு துயர்
உற்றுழி உற்றுழி உணர்வதை அல்லதை
முற்று நோக்க முதுக்குறை இன்மையின்
முந்நீர் நீந்திப் போந்தவன் பின்னர்ச்

சின்னீர் கழி நீந்த அஞ்சான், இன்னும்
எத்துணைச் சனனம் எய்தினும் எய்துக!
அத்தமற்ற அதனுக்கு அஞ்சலன் யானே!
இமையாது விழித்த அமரரில் சிலர் என்

பரிபாகம் இன்மை நோக்கார், கோலத்
திருநடம் கும்பிட்டு ஒருவன் உய்ந்திலனால்
சுருதியும் உண்மை சொல்லா கொல்? என
வறிதே அஞ்சுவர் அஞ்சாது

சிறியேற்கு அருளிதி செல்கதிச் செலவே.

என்று தேவர்களைக் காரணம் காட்டி சாமர்த்தியமாக விண் ணப்பிக்கிறார்.

கேட்ட வரம்

தில்லை வாணா! எனக்கொரு வரம் தரவேண்டும். பெருங்குளிரில் அழுக்கடைந்த கந்தைத் துணியைத் தவிர உடுக்க வேறொரு துணியில்லாமல் போனாலும், படுப்பதற்கு வாயிற்புறத் திண்ணையைத் தவிர

வேறு போக்கிடம் இல்லாவிட்டாலும், கடும் பசி வேளையில் வாய்விட்டு அழுதபோதும் உப்பில்லாமல் காய்ச்சிய புல்லரிசிக் கூழ் கூடக் கொடுப்பவர் இல்லாவிட்டாலும் ஒழுக்கமும் கல்வி கேள்விகளில் சிறந்த அடியார் கூட்டத்தோடு சேரும் பேறு வேண்டும். என் உயிர் நீங்கும் அளவும் உதவி உன் பெரும் பதத்தை அருள வேண்டும். உன் திருப்பாதமே முக்தி யாதலால். அதையே வேண்டுகிறேன். ஒருவேளை நான் அறியாமையால் வேறு எதையாவது கேட்டாலும் கொடுத்து விடாதே என்று கோரிக்கை வைக்கிறார்.

மல்லலம் பொழில் சூழ் தில்லை வாணா!
வரம் ஒன்று எனக்கிங்கு அருளல் வேண்டும்
பெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி
பல தொடுத்திசைந்த ஒரு துணி அல்லது

பிறிதொன்று கிடையாதாக வறுமனைக்
கடைப்புறத் திண்ணையல்லது கிடைக்கைக்கு
இடம் பிறிதில்லையாக, கடும் பசிக்கு
உப்பின்றி அட்ட புற்கை ஊணல்லது

மற்றோர் உண்டி வாய்விட்டு அரற்றினும்
ஈகுநர் இல்லையாக நாணாளும்
ஒழுக்கம் நிறைந்த விழுப்பெருங் கேள்வி
மெய்த்தவர் குழாத்தொடும் வைக, இத்திறம்

உடல் நீங்களவும் உதவி, கடவுள் நின்
பெரும்பதம் அன்றி யான் பிறிதொன்று
இரந்தனன் வேண்டினும் ஈந்திடாது அதுவே

என்று கற்றறிந்த அடியார்கள் கூட்டத்தோடு தான் எப்பொழு தும் இருக்க அருள் செய்ய வேண்டும் என்றும் ஐயனின் திருவடித் தாமரையை அன்றி வேறெதுவும் வேண்டாம் என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார்.

chidambaram_natarajar

இந்திர பதவியும் வேண்டாம்

புலியூர்ப் பெருமானுக்கு ஆட்படுவதன்றி இந்திரபதவியும் வேண்டாமாம் இவருக்கு.

“இச்சுவை தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறுனும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!”

என்று பாடிய தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போல இவரும் தீவிரமாகப் பேசுகிறார்.திருமால் பதவியும் இவருக்குத் துச்சமே!

புனையேம் தருவுதவு பொன்னரிமாலை
வனையேம் பசுந்துழாய் மாலை—பனிதோய்
முடிக்கமலம் சூடினேன் மொய்குழலோடு ஆடும்
அடிக்கமலம் சூடினோமால்.

முடியிலே கங்கையையும், இடப் பக்கத்திலே உமாதேவியாரையும் கொண்ட சிவபெருமானு டைய அடித்தாமரையைச் சூடியதால் இந்திரலோகத்துப் பொன்னரி மாலையையும் திருத்துழாயையும் சூடமாட்டேன் என்கிறார்.

வீடுபேறு நிச்சயம்

இறைவனின் திருவடிகளே வீடு பேறு. இறைவனின் அடித்தொண்டு செய்யாத எனக்கும் அவன் தாள் நீழலின் கீழ்ப் பொலியும் சீருண்டு. ஏன் தெரி யுமா? சிற்றம்பலதில் நடனமாடும் நீலகண்டனை நான் தரிசித்ததால்! அமுதத்தை யார் உண்டாலும் அவர்கள் இற வாமை நீங்கப் பெற்று தேவர்களாகி விடுவதைப் போல், தில்லைக் கூத்தனின் திருநடனத்தை யார் தரிசித்தாலும் அவர்கள் வீடுபேறு அடைவது நிச்சயம்.

நீருண்ட புண்டரீகத் துணைத்தாள்
நிழற்கீழ்ப் பொலியும்
சீருண்டு, அடித் தொண்டு செய்யா எனக்கும்
சிற்றம்பலத்து எம்
காருண்ட கண்டனைக் கண்டனனால்
அக்கடலமுதம்
ஆருண்டனர் மற்று அவர் எவரேனும்
அமரர்களே.

இவ்வளவு பெருமைகளைப் பெற்றிருப்பதால் தான்

“சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்,
சென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ”

என்று நந்தனார் தவித்தாரோ? இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய சிதம்பரத்தை நாமும் ஒருமுறையாவது தரிசிப்போமே.

6 Replies to “சிதம்பர தரிசனம்”

  1. அம்மா, அருமை. தில்லையம்பதி சென்று அந்த சபா நாயகத்தின் திருநடனம் கண்ட பெரும் பேற்றை தங்கள் இக்கட்டுரை ஏற்ப்படுத்தி விட்டது. தாங்கள் சிவனருள் பெற்று நீடூழி வாழ பிராத்திக்கிறேன். அடியேனின் பிறப்பும் எம்பிரான் குமரகுருபரர் பிறந்த திருவைகுண்டத்தில் என்பதை எண்ணி பேருவகை அடைந்து மனதார அவர் பதம் பணிகிறேன். நன்றி.

  2. மிக அருமையான கட்டுரை. மெய்சிலிர்த்தது. அதுவும் திருவாதிரை அன்று காலையில் படித்தது மிகவும் நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது. தங்கள் தமிழ்ப்பணி மேலும் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  3. மிகவும் அருமையான கட்டுரை. எவ்வளவு நேரம் அள்ளிப் பருகினாலும் தெவிட்டாத ஆனந்தத்தை தரும் ஆடவல்லனைப் பற்றிய தங்கள் அருமையான கட்டுரை அமிழ்தாக இருக்கிறது. தங்கள் திருப்பணி தொடர்க என்று அவனை ஏத்துகிறேன்.

  4. I got the experiance of Readingu a god article im Tamil for a common manje. THANKS

  5. திரு கார்த்திகேயன் கோமதிநாயகம் அவர்களுக்கு
    நானும் திருவைகுண்டத்தில்பிறந்து குமரகுருபரர் பெயரால் விளங்கும்
    பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னால்
    பயின்றேன். என்பதைப் பெஉமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது
    தகப்பனார் குமரகுருபரர் ஆண்கள் உயர் நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி
    ஆசிரியராகப் பணியாற்றினார். எனது சகோதரர்கள் மூவரும் அதே பள்ளியில்
    பயின்று மிகப் பெரிய பதிவிகளில் இருந்து ஓய்வு பெற்றனர் என்பதையும்
    தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

    அன்புடன் ஜயலக்ஷ்மி

  6. திருச்சிற்றம்பலம்
    தில்லையம்பலம்
    சிவசிதம்பரம்
    குஞ்சிதபதம்
    நமச்சிவாய
    ஆரமுதினைக் காட்டித் தந்த இந்தக் கட்டுரை ஆசிரியருக்கு அடியேனது உளங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *