இலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்

மிகவும் ஆச்சர்யமான முறையில், வேத சிவாகம பணி செயபவர் ஸ்ரீ தர்மசாஸ்தா குருகுல முதல்வர் பிரம்மஸ்ரீ. தா.மஹாதேவக்குருக்கள் அவர்கள். 

கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப்போர், இடப்பெயர்வு என்பவற்றுக்கு இடையிலும் குருகுலமரபு வழியில் வேதாகமக்கல்வி இன்றைக்கும் ஓரளவேனும் செழிப்புற்று உள்ளது என்றால், இன்றைக்கு இலங்கையின் பல பாகத்திலும் சிவாச்சார்யர்கள், அந்தணோத்தமர்கள் சிறப்பாக கிரியைகளை ஆற்றி வருகிறார்கள் என்றால், வேத, சிவாகம ஆராய்ச்சிகளும், இத்துறையில் புதிது புதிதாக நூல்களும் உருவாகின்றது என்றால், இந்த எழுச்சியில், இணுவில் தர்மசாஸ்தா குருகுல முதல்வர் பிரம்மஸ்ரீ. தா.மஹாதேவக்குருக்களின் பங்கும் பணியும் மிக முக்கியமானது.

தமிழகத்தில் இன்றைக்கும் காஞ்சி, திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, தருமபுரம் ஆதீனம், சீர்காழி போன்ற பல்வேறு இடங்களில் சிவாச்சார்ய வேதாகம பாடசாலைகள் உள்ளன. இதே போல, இலங்கைத்திருநாட்டிலும் மஹாதேவக்குருக்கள் அவர்கள் ஒரு பாடசாலையை நிறுவனரீதியாக அன்றி, தனது தனிப்பட்ட ஆளுமைத்திறத்தாலும் தம் குடும்பத்தவரின் ஒற்றுமையான பணிகளாலும், முழுமையான இலவசக்கல்வி முறையாக நடாத்தி வந்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான ஒரு விடயம் ஆகும்.

1994ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் பெரும்பகுதி யாழ்ப்பாண மக்கள் இடப்பெயர்வையும் பெரும் அவலத்தையும் சந்தித்தனர். இவ்வாறான ஒரு சூழலில் மஹாதேவக்குருக்கள் குடும்பமும் அவரது பாடசாலைச்சமூகமும் கூட, இதே துயரத்தை ஏற்று தென்மராட்சியின் உசன் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அங்கும் கூட, குண்டு மழைக்குள்ளும் இலவச வேத, ஆகம வகுப்புகளும், பகவத்கீதா வகுப்புகளும் நடந்தமை வியப்பானது. அந்த வேளைகளில் முன்பள்ளிப்பருவத்தில் இருந்த நானும் அந்த வகுப்புக்களில் கல்வி கற்றிருக்கிறேன்.

அன்று தொட்டு தொடர்கின்ற குருக்களுடனான இணைப்போடு, அண்மையில் குருக்கள் அவர்களை சந்தித்த போது, அவரை நேர்கண்டேன்.

********

பிரம்மஸ்ரீ தா. மஹாதேவக் குருக்கள், ஸ்ரீமதி புவனேஸ்வரி அம்மாள்

பிரம்மஸ்ரீ தா. மஹாதேவக் குருக்கள், ஸ்ரீமதி புவனேஸ்வரி அம்மாள்

உங்களுடைய குடும்பப்பாரம்பரியமே தாங்கள் வேதாகமப் பணிகளில் ஈடுபடக் காரணமா?

என்னுடைய தந்தையார் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் பரிசாரகராக (இறைவனுக்காக நெய்வேதனங்களை செய்பவர்) தன் வாழ்வியலை மிகுந்த துன்பங்களோடும் வறுமையோடும் நடத்தியவர். என்னுடைய தாயார் எமக்கு ஒன்பது வயதாயிருக்கிற போதே இறந்து விட்டார். சௌகரியங்கள் என்று எங்களுடைய இளமைக்காலத்தில் ஒன்றுமே இருக்கவில்லை. நாங்கள் தாயன்பை பெற இயலாதவர்களாக, வறுமையின் பிடிக்கு மத்தியில் வளர்ந்தோம். அதனால் நாம் நன்றாக கற்க வேண்டும் என்ற ஆவலைப் பெற்றோம்.

நான் மாவிட்டபுரம் கு.பாலசுந்தரக் குருக்கள் அவர்களிடமும், இந்தியாவின் பிரஹ்மஸ்ரீ கி.வாசுதேவ வாத்தியார் அவர்களிடமும் இன்னும் பலரிடமும் கற்றிருக்கிறேன். எனக்கு நிரம்ப குருமார்கள் என்பதையிட்டு நான் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு.

நீங்கள் பலரிடம் கற்றதாகச் சொன்னீர்கள். உங்களின் பாடசாலைக்கல்வி பற்றிக் குறிப்பிடுங்கள்.

நான் மிகச்சிறிய வயதில் வீமன்காமத்தில் உள்ள சிறுபாடசாலையில் கல்வி கற்றதுடன், உயர் தரத்தை கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரியில் பெற்றுக் கொண்டேன். இது தவிர காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றேன். இன்னும் பல்கலைக்கழகம் சென்று கற்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் நிரம்ப இருந்தது. ஆனால், எனது குடும்பச்சூழல் அவற்றுக்கெல்லாம் இடம்கொடுக்கவில்லை. எம்முடைய தந்தையார் சைக்கிளில் கோவில் கோவிலாகச் சென்று உழைத்த பணத்தை வைத்தே எமது குடும்பம் வாழ்ந்தமையால் வறுமை கல்வியைத் தொடர இடம் தரவில்லை.

நான் உயர்தரத்தில் தமிழ், சம்ஸ்கிருதம், பாளி போன்ற மொழிகளைச் சிறப்பாக கற்றேன். இத்துடனேயே அக்காலத்தில் அரசாங்க சேவையில் சேரக் கூடிய வாய்ப்பு இருந்தது. என்றாலும், அப்பொழுது என்னுடைய ஆசிரியராக இருந்த ராமையர் அவர்கள் “சுன்னாகம் சதாசிவ பிராசீன பாடசாலை”யில் சம்ஸ்கிருதம் படிப்பிக்கச் சொன்னதாலும், அதில் எனக்கு ஈடுபாடு இருந்ததாலும் அதில் ஈடுபடலானேன். சில ஆண்டுகளில் இந்த பாடசாலை இயங்காமல் போனதும் இங்கே என்னை நாடி வருகிற மாணவர்களுக்கு படிப்பிக்க வேண்டியதாயிற்று.

அவ்வாறாயின் மிகவும் சிரமப்பட்டு, திட்டமிட்டே இக்குருகுலத்தை உருவாக்கினீர்களா?

எனக்கு இவ்வாறான திட்டங்கள் ஒன்றும் இருக்கவில்லை. இதை நான் இலட்சியமாகக் கொள்ளவில்லை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒன்று திரண்டு என்னை கருவியாக்கி கொண்டு விட்டன.

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வேதபாரம்பரியத்தை வளர்த்த குருமார்கள் பலரிடமும் பழகவும் கற்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?

ஆம். நான் பிரஹ்மஸ்ரீ சீதாராமசாஸ்திரிகள், பிரஹ்மஸ்ரீ சுப்பிரம்மண்ய சாஸ்திரிகள், பிரஹ்மஸ்ரீ நாராயணசாஸ்திரிகள், கீரிமலை பிரஹ்மஸ்ரீ இராமையர் போன்ற பல வேத வித்வான்களிடமும் கற்கும் வாய்ப்பு பெற்றவன். இதனால், அவர்களது ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் ஆசிகளும் எனக்கு கிடைத்தன.

இதை விட, இந்தியாவில் இரண்டாண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்து வேதபாடங்கள், அமரம், சப்தம், சம்ஸ்கிருத வியாகரணம் (இலக்கணம்) என்பவற்றை எல்லாம் கற்க முடிந்தது.

நான் சதாசிவ பிராசீன பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த வேளையில் அங்கு நேரே வந்து நயினை ஐ.கைலாசநாதக் குருக்கள் என்னைப் பாராட்டியமையும் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி ஆகும்.

நீங்கள் தர்மசாஸ்தா குருகுலத்தை பல்லாண்டுகளாக நடாத்தி வருகிறீர்கள். எவ்வளவு மாணவர்கள் இந்த குருகுலத்தில் கல்வி கற்றிருப்பார்கள்?

எங்களுடைய குலதெய்வம் கேரளாவின் சாட்டுப்பத்தூர்பதியில் எழுந்தருளியிருக்கும் தர்மசாஸ்தா ஆகும். எங்களுடைய தாத்தா அந்தக்காலத்திலேயே சபரிமலை யாத்திரை செய்தவர். இந்த வகையிலேயே எமது குருகுலத்திற்கு தர்மசாஸ்தா குருகுலம் என்று பெயர் வைத்திருக்கிறோம்.

இந்த குருகுலத்தை நாற்பதாண்டுகளாக நடாத்தி வருகின்றோம். சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கே கல்வி கற்றிருக்கிறார்கள்.

எழுநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றதாகச் சொல்கிறீர்கள். இவர்களிடம் இருந்து பெறும் பணம் மூலம் குருகுலத்தை வளர்க்க முடிந்ததா?

நாம் எம்மிடம் கல்விக்காக வருகிற எந்த மாணவர்களிடத்தும் எவ்வகையிலும் பணம் பெறுவதே இல்லை. அதற்கு மேலதிகமாக, இலவசமாக உணவு, உடை, உறையுள் என்பவற்றையும் கொடுத்தே கல்வி கற்பித்து வந்திருக்கிறோம்.

ஏறுகின்ற விலைவாசியில் எவ்வாறு உங்களால் தனிமனித முயற்சியாக இலவசக்கல்வியைக் கொடுக்க முடிகிறது?

இதில் இறையருளே பெரிது. நம்முடைய குருத்துவப்பணிகளின் மூலம் கிடைக்கின்ற வருமானத்தின் மூலமும் கோவில்களுக்கு கிரியை நெறிப்படுத்தல்களுக்குச் செல்கிற போது கிடைக்கிற ஆச்சார்ய சம்பாவனையையும் வைத்தே இதனை செய்து வருகின்றோம்.

நீங்கள் வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்திருக்கிறீர்கள். அது பற்றிக் குறிப்பிடுங்கள்?

பதில்- இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிஸ், லண்டன், என்று பல நாடுகளுக்கும் சென்று வந்திருக்கின்றேன். அங்கெல்லாம் நடந்த ஆலய கிரியைகளில் என்னுடைய ஆலோசனைகளையும் சேவையையும் பெற்றிருக்கிறார்கள். சிறப்பாக கௌரவம் செய்திருக்கிறார்கள். 2015 ஜனவரியில் கூட, சிங்கப்பூருக்கு கும்பாபிஷேகத்திற்குச் சென்று வந்தேன்.

சிறந்த சம்ஸ்கிருத அறிவு மிக்க நீங்கள் சம்ஸ்கிருத நூற் பதிப்புக்களையும் செய்திருக்கிறீர்களா?

இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் நிரம்ப சம்ஸ்கிருத, ஆகம, பத்ததி நூல்கள் வெளிவருகின்றன. அவற்றுள் அநேகமானவை என்னுடைய ஆலோசனையை பெற்று திருத்தி, செம்மைப்படுத்தி வெளிவருகின்றன. இதை அந்த நூல்களிலேயே வெளியீட்டாளர்கள் நன்றியோடு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். என்னுடைய கைப்பிரதிகள் பலவும் இன்று அச்சேறியிருக்கின்றன.

நீங்கள் புதிதாக இலக்கிய வடிவங்களை செய்துள்ளீர்களா?

இப்பொழுது கிடைக்கிற பத்ததிகளை செழுமைப்படுத்தி, யாவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வெளிப்படுத்துவதிலேயே நான் மிகுந்த கவனம் செலுத்தி வந்திருக்கிறேன். முக்கியமாக, அகோர சிவாச்சார்யார், சத்யோஜாத சிவாச்சார்யார் போன்றவர்களின் பத்ததிகளை அடிப்படையாக கொண்டு அவற்றை தெளிவாக இளம் சிவாச்சார்யர்களும் புரிந்து கொண்டு கிரியைகளை செய்யும் விதமாக புதுப்பிரதிகளை ஆக்கியிருக்கிறேன். அவை வெளிவந்து பலருக்கும் பிரியோஜனமாக இருக்கின்றது.

அவ்வாறாயின், குறிப்பிட்ட சில நூல்களை தங்களால் செழுமையாக யாவரும் புரிந்து கொள்ளுமாறு சீரமைக்கப்பட்ட நூல்கள் என்று சொல்ல முடியுமா?

ஆம். பலவற்றைச் சொல்லலாம். ஆனால், முக்கியமாக, விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள் போன்ற மூர்த்திகளுக்கான நவகண்ட ஸ்பர்சாஹுதிகள் புரிதலற்றதாயும், மிகவும் குழப்பமானதாயும் அமைந்திருந்தன. இவற்றை சிவனுக்கே உரிய ஸ்பர்சாஹுதியை வைத்து செழுமைப்படுத்தியிருக்கிறேன். இவை இப்போது பதிப்பிக்கப் பட்டிருக்கின்றன.

eelam_adi_koneswarar_temple_kodiyetramஇதே போலவே, சிவனுடைய திரியத்திரிம்சத்குண்ட பட்ச மஹாகும்பாபிஷேக பத்ததி பிரகாரம் அம்பாள், விநாயகர், சுப்பிரம்மண்யர் போன்ற மூர்த்திகளுக்கான பத்ததியை ஒழுங்கமைத்து செழுமைப் படுத்தியுள்ளேன்.

இவற்றை விட, நம்முடைய முன்னோர்கள் சிவாச்சார்ய அபிஷேகத்திற்கும், சிவதீக்ஷைக்கும் அகோரசிவாச்சார்யருடைய மிக விரிவான பத்ததியையே பல்லாண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பத்ததியை விளங்கி செய்வது என்றால் மிகவும் கடினம். நிறைவான சம்ஸ்கிருத அறிவும், சாதுர்யமும் கொண்ட ஒருவராலேயே அப்பத்ததிக் கிரம யாகபூஜையை செய்ய முடியும். எனவே, நான் அதே பத்ததியையே யாவரும் புரிந்து கொண்டு கைக்கொள்ளும் வண்ணம் இலகுபடுத்தி எழுதியுள்ளேன். அதுவும் இப்பொழுது பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நிறையச் சொல்லலாம்.

நீங்கள் செய்து வந்த பணிகள் சில வேளைகளில் விமர்சனங்களுக்கும் உட்பட்டதை அறிந்திருக்கிறேன். அது பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆமாம்… அவை மிக சுவாரஸ்யமானவை. ஏழாலையில் வாழ்ந்த கலாநிதி கந்தையா உபாத்யாயர் மிகுந்த அறிஞர். சைவசித்தாந்த அறிவு மிகுந்தவர். தவறாமல் சிவபூஜை செய்பவர். அவர் எனது சில செயற்பாடுகளை கண்டித்து கட்டுரைகள் எழுதினார்கள். என்னை அறிவுபூர்வமாக விமர்சித்த அந்த அறிஞரை நான் ஒரு விழாவில் பேசமுயன்றும் அவர் என்னை கண்டு கொள்ளவில்லை. பிறகு, நான் நேரில் அவரது இல்லத்திற்கு சென்று பேசினேன்.

அவர் தம்முடைய கருத்துக்களை சொன்னார். நான் என்னுடைய கருத்துக்களை சொன்னேன். பல்வேறு விடயங்கள் பற்றியும் பேசினோம். கருத்துக்கள் ஏற்கப்பட்டன என்று சொல்வதற்கு இல்லையாயினும், பிறகு, என்னோடு மரியாதையோடும் அன்போடும் அவர் பழகினார்.

நீங்கள் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வேதாகமமரபை பேணி வந்திருக்கிறீர்கள். இவற்றுக்காக உங்களுக்கு கௌரவங்கள் கிடைத்ததா?

எனக்கு புங்குடுதீவில் முதன்முதலாக, “வேதசிவாகம பாஸ்கர” என்ற விருதை வழங்கினார்கள். பிறகு நிறைய விருதுகளும் பட்டங்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிடைத்தன. லண்டனுக்குச் சென்றிருந்த பொழுது “வேதவிசாரத”, “சாதகரத்னாகர” போன்ற பட்டங்களை தந்தார்கள். எனினும், நான் ஆரம்பக்காலம் தொட்டு செய்து வந்த விடயங்களை கோர்வைப்படுத்தி ஆவணப்படுத்த முயற்சிக்காததால், எனக்கு அரசு முறையிலான கௌரவங்கள் முறையாக கிடைக்கவில்லை.

வேத ஆகம பணியை கலைப்பணியாக அவர்கள் கருதாததாலும் இக்கௌரவங்களில் என்னை சேர்க்கவில்லை. இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அரச உயர்பதவியிலிருந்த ஒரு பெரியவர் இங்கே நடக்கிற சேவைகளை அறிந்து, என்னை அணுகி, படங்கள், விவரங்கள், சான்றிதழ்கள் என்று யாவற்றையும் தருமாறு பன்முறை கேட்டு வாங்கிச் சென்றார்கள். ஆனால், துரதிட்டவசமாக, அவரால் அதனை உடனே செய்ய இயலவில்லை. சிலமாதங்களிலேயே அவர் காலமாகியும் விட்டார். அவரிடம் கொடுத்தவை எனக்கு பிறகு கிடைக்கவே இல்லை.

உங்களிடம் கல்வி கற்ற மாணவர்களில் யாவரை முதன்மையாக நீங்கள் சொல்வீர்கள்?

நிரம்ப மாணவர்கள் கற்றார்கள். பல்வேறு இடங்களில் பல்வேறு நல்ல பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களில் அவர் இவர் என்று சொல்ல இயலாது என்றாலும் தெல்லிப்பளை நாராயணர் (பிரம்மஸ்ரீ நாராயண வாத்யார்), மயிலணி வரதராசர் ( அமரர். பிரம்மஸ்ரீ. ச.வரதராஜேஸ்வரக்குருக்கள்), அளவெட்டி சந்திரர் (கும்பளாவளை பிரம்மஸ்ரீ. சந்திரக்குருக்கள்) ஆகியொர் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். இன்றைக்கும் பல மாணவர்கள் புத்தெழுச்சியோடு உருவாகி வருகிறார்கள்.

வேத பாரம்பரியத்தில் நீங்கள் சிறப்பாக முன்னெடுத்த விடயம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

உதகசாந்தி ஜபம், ஏகாதசருத்ர ஜபம் போன்றவை முன்பு அரிதாகவே செய்யப்பட்டன. தாராளமாக பலரும் இவற்றை கற்கவும் பிரயோகப்படுத்தவும் வைதீக கிரியைகள் பலரும் பழகிக் கொள்ளவும் நான் இயன்ற அளவு செயற்பட்டிருக்கிறேன்.

தங்களின் புதல்வர்களும் தங்களுடைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார்களா?

இதை யாவரும் நன்கு அறிவர். என்னுடைய புதல்வர்கள், சகோதர்கள், மருமகன்மார், பேரப்பிள்ளைகள் என்று யாவரும் வேதாகம பாரம்பரியத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார்கள். நன்கு செயற்படுகிறார்கள். தாங்கள் கற்றதை பிறருக்கும் கற்பித்தும் வருகிறார்கள்.

**********

குருக்களுடன் இணைந்து அவரது குடும்ப அங்கத்தவர்களான பிரம்மஸ்ரீ. தா.சுப்பிரம்மண்யக் குருக்கள் (மணி வாத்தியார்), பிரம்மஸ்ரீ. சிவபால சர்மா, பிரம்மஸ்ரீ. ம.தானுநாதக் குருக்கள், பிரம்மஸ்ரீ. ம.சோமசுந்தரக் குருக்கள், பிரம்மஸ்ரீ. ம.ஸ்ரீவத்சாங்கக் குருக்கள் எனப்பலரும், அவர்களது பிள்ளைகளும் சேர்ந்து பெரியளவில் வேதசிவாகமப் பணிகளை செய்து வருவதை அவதானிக்க முடிந்தது.

இதே போலவே, குருக்களின் துணைவியாரான ஸ்ரீமதி புவனேஸ்வரி அம்மாள் அவர்கள் மிகச்சிறந்த இல்லத்தரசியாக, குருபத்தினியாக விளங்குகிறார். கடந்த நாற்பதாண்டுகளாக இயங்கும் குருகுலத்தில் கல்வி கற்கிற மாணவர்களுக்கு இலவசமாக உணவு தந்து தன் பிள்ளைகள் போலவே, அவர்களிடம் அன்பு செலுத்தி பேணி வந்திருக்கிறார். இன்னும் அதே பணிகளை அவர் தொடர்கிறார். தனது பதியினுடைய தர்மகார்யங்கள் யாவற்றிலும் கைகொடுக்கும் காரிகையாக, அவர் திகழ்வதை பார்க்கிற போது ஆச்சர்யமாகவே இருக்கிறது.

அதே போலவே, எந்தப்பெருமையும் இல்லாமல் மிகவும் எளிமையாகவும், இயல்பாகவும் பேசும் குருக்களின் சேவைகள் கண்டு அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றோம்.

நேர்கண்டவர்-  தி.மயூரகிரி சர்மா,  நீர்வேலி

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

17 மறுமொழிகள் இலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்

 1. க்ருஷ்ணகுமார் on March 11, 2015 at 11:56 am

  மிகுந்த நெகிழ்வளிக்கும் பதிவு பகிர்ந்துள்ள ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

  மரபைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. குரு க்ருபை, பகவத் க்ருபை, அதீத அர்ப்பணிப்பு மனப்பான்மை இவையனைத்தும் ஒருங்கே இருந்தால் தான் அது சாத்தியம். ப்ரம்மஸ்ரீ தா.மஹாதேவ குருக்கள் அவர்களைப் பற்றித் தாங்கள் பகிர்ந்த விஷயங்களிலிருந்து இது தெள்ளெனத் தெளிவாகத் துலங்குகிறது.

  தன்னுடன் மாற்றுக்கருத்து கொண்டிருந்த ஒரு அன்பரிடம் கூட பேத பாவமில்லாது பழக முனைந்தமையும்………… நிஷ்களங்கமான அன்புக்கு அந்த அன்பர் இணங்கியமையும் மிக உயர்ந்த விஷயங்கள்.

  தசாப்தங்களாக யுத்தத்தில் ஆழ்ந்திருந்த ஈழத்தில் ப்ரதிக்ரஹம் வாங்காது தன்னுடைய வருமானத்தினால் மட்டிலுமே வித்யார்த்திகளுக்கு உணவு, உடை, உறையுள் இவையனைத்தும் கொடுத்து வேதாகம சிவாசார்ய பாரம்பர்ய வித்யையை வழங்கி வந்துள்ள தம்பதிகளுக்கு அனேக கோடி நமஸ்காரங்கள்.

  நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் இந்த தம்பதிகள் தொடர்ந்து பெற கதிர்காமத்துறை கதிர்வேலனை இறைஞ்சுகிறேன்.

  இதற்கடுத்த தலைமுறைகளுக்கு இந்த உயர்வான வித்யையை போதிக்க வேண்டிய கடமை இன்றைய தலைமுறைக்கு உள்ளது. அதுவும் இறையருளால் நிறைவேறுவதாக.

 2. வ .சோமு on March 11, 2015 at 12:15 pm

  அன்புடையீர் !
  நமஸ்காரம்.
  வேத ஆகமங்களை உயிரையும் துச்சமாக நினைத்து கற்றுக்கொடுத்தது கண்ணீர்

  வரவழைத்தது. வ.சோமு– தானே –மகாராஷ்டிரா.

 3. V. Sundaresa Sharma on March 11, 2015 at 11:38 pm

  Naraskaram to shri.Mahadeva Gurukkal.
  God always with this family.

 4. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on March 12, 2015 at 3:51 pm

  ஈழத்தில் கொடுமையானக்காலத்திலும் சமயத்தினை போற்றிய வளர்த்த ஒரு சிவாச்சாரியார் அவர்களை பேட்டிகண்டு எழுதிய மயூரகிரியாருக்கு வாழ்த்துக்கள். நல்ல கேள்விகள் சிறப்பான பதில்கள். ஈழத்தில் ஹிந்து சமய்த்திற்கு குறிப்பாக வேதாகம வழியில் ஆலயவழிபாடு செழிப்பதற்கு ஸ்ரீ மஹாதேவ குருக்கள் அரும்பணி செய்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
  ஸ்ரீ குருக்களின் நெற்றியில் குங்குமத்திலகத்தினைப்பார்த்ததும் சங்கராச்சாரியாரின் பரம்பரையினர் என்று நினைத்தேன். மேலே படிக்கும் பொழுது ஆகமங்களின் அடிப்படையில் பத்ததிகளை பயன்படுத்துவதால் சிவாச்சாரியார் என்று புரிந்துகொண்டேன். இவரது நூல்கள் தமிழகத்திற்கும் பயன்படும் வண்ணம் இணையத்தில் ஏற்றுதல் நல்லது.

 5. Ramesh.Chinnaiyah on March 12, 2015 at 6:16 pm

  மிகவும் அருமையான படைப்பு. உண்மையாகவே இப்படிப்பட்ட மனித குல மாணிக்கங்கள் இந்த காலத்திலும் இருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்கவே மிகவும் மகிழ்சியாக உள்ளது. இறைவன் அருளால் ஆரம்பித்த இந்த நற்காரியம் இந்தியாவிலும் பரவி நமது கலாச்சாரமும் பண்பாடும் மென்மேலும் வளர எம் இறைவனையே பிரார்த்திப்பதோடு ப்ரம்மஸ்ரீ தா.மஹாதேவ குருக்கள் போன்ற மனித குல மாணிக்கங்கள் தோன்றி எம் நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்திட எம் ஈசனையே வேண்டுகிறேன். ஓம் நமசிவாய…

 6. Jeyashree on March 14, 2015 at 3:00 pm

  இருவரும் சாக்ஷாத் பரமேஸ்வரன் பார்வதி. அதற்கு மேல் சொல்ல onumillai

 7. அடியவன் on March 14, 2015 at 5:12 pm

  திரு மயூரகிரி சர்மா அவர்கள் எழுதும் கட்டுரைகள் நமது மதத்தின் பாரம்பரியத்தைத் தவறாமல் பதிவதாகத் திகழ்பவை.

  இந்தப் பதிவு எல்லாவற்றிலும் தலைசிறந்தது என்றே சொல்லவேண்டும். போர் நடைபெற்ற காலங்களில், போர்க்களத்தின் நடுவே வாழ்வதே கடினம் என்ற சூழலில், இலவசமாக, மாணவர்களுக்கு உணவும், இருப்பிடமும் கொடுத்து ஒரு தம்பதியினர் வேத, ஆகமக் கல்வியைக் கற்பித்திருக்கிறார்கள் என்பது வணங்கிப் போற்றவேண்டிய ஒன்று. அப்படிப்பட்ட சிரேஷ்டர்கள்தான் இந்த மதத்தை எல்லா காலத்திலும் பாதுகாத்துவந்தவர்கள். நமது காலத்தில் வாழும் அப்படிப்பட்டவர் இருப்பிடம் தெரியாமல் குடத்தில் இட்ட விளக்காக ஆகாமல், குன்றில் இட்ட விளக்காக அவர்தம் பெருமையை வெகு நேர்த்தியாகப் பதிவு செய்த சர்மா அவர்களது தொலைநோக்குப் பார்வை பாராட்டத் தக்கது.

  எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பிரம்மஸ்ரீ மகாதேவக்குருக்களுக்கும் அவரது பத்தினியாருக்கும் உரித்தாகுக.

  அவரது வேத ஆகமக் கல்விச் சேவையில் பங்கு கொள்ளும் வண்ணம் நிதி அளிக்க என்ன வழி என்பதைச் சொன்னால் பங்குகொள்ள ஏதுவாக இருக்கும்.

 8. s natarajan on March 14, 2015 at 9:02 pm

  வாழ்த்த வயதில்லை தெண்டனிட்டு வணகுகிறேன்

 9. Ramesh Srinivasan on March 15, 2015 at 2:31 pm

  மிக்க மகிழ்ச்சி. இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் இவர்களின் பணி பாராட்டுக்குரியது. எங்கள் வணக்கங்கள். அய்யா. மயூரகிரி என்பது குன்றக்குடி தலத்தின் பெயர். தாங்கள் குன்றக்குடியில் இருந்து சென்றவர்களா? ஏன் எனில் இங்கு மயூரகிரி என்ற பெயர் வழங்குவதில்லை, இறைவனை பெயரான சண்முகநாதன் என்பதே பெயராக வழங்குகிறது.

 10. Subramaniam Logan on March 16, 2015 at 4:39 pm

  வணக்கம் திரு மயூரகிரி சர்மா அவர்கள். வாழ்த்துக்கள். சரஸ்வதியும் லக்ஷ்மியும் சேர்ந்திதிருப்பதில்லை என்பதற்கு பிரமஸ்ரீ மஹாதேவ குருக்கள் நல்ல எடுத்துக்காட்டு.ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கின்றார்கள். அதைவிட வேறு என்ன வேண்டும்.
  சர்வம் சிவமயம்
  சுப்ரமணியம் லோகன்.

 11. kumar on March 26, 2015 at 5:37 pm

  ர் ஸ்ரீ தர்மசாஸ்தா குருகுல முதல்வர் பிரம்மஸ்ரீ. தா.மஹாதேவக்குருக்கள் அவர்கள் மற்றும் குருமாதாவிர்க்கும் எனது நமஸ்காரங்கள்.

  அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  குமார். ஹைதராபாத்

 12. t.raju on March 27, 2015 at 3:00 pm

  வெரி ஹாப்பி டு ஹெஅர் தி டிவினே வெடிக் குருகுல் ரன் பி ஸ்ரீ மஹடெவகூக்கல் இன் ஸ்ரீலங்கா. திஸ் இச் பொச்சிப்லெ ஒன்லி பெகுசே ஒப் கைலாசநாதர் வதோ இச் வித்தின் ஹிம். இநீத் ஹிஸ் காண்டக்ட் நோஸ். வாண்ட்ஸ் டு டாக் டு ஹிம், இ அம போம் திருவனத்தபுரம்- கேரளா.

 13. T.Mayoorakiri Sharma on April 11, 2015 at 7:13 pm

  பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்..
  சிவஸ்ரீ. விபூதிபூஷண்,
  குருக்கள் அவர்கள் சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டவர் என்பதும், ஸ்ரீவித்யா உபாசகர் என்பதும் கூட சொல்ல வேண்டியன.. ஆக, இலங்கையில் ஸ்மார்த்த சைவ பேதம் இன்று வரை இல்லை..

 14. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on April 13, 2015 at 4:51 pm

  அன்புக்குரிய மயூரகிரி சர்மா இலங்கையில் சைவ ஸ்மார்த்த பேதம் இல்லை என்பது அடியேனுக்கு விளங்கவில்லை. சிவ பூஜை செய்வோர் சைவர் பஞ்சாயதன பூஜை செய்வோர் ஸ்மார்த்தர் என்பதே நாம் இங்கே காண்கிற வேறுபாடு. சிவபெருமான் திருமால் இருவரையும் சமமாகப்பர்ப்போர் ஸ்மார்த்தர். இந்த சகுணப் பிரம்மத்திற்கு மேலாக நிர்குணப்பிரமத்தினை ஸ்மார்த்தர் கருதுகின்றனர். பரசிவத்தை மேலாகக்கருதுவோர் சைவர். சிவாகம வழி நடப்பவர் யாரும் ஸ்ரீ வித்யையை உபாசிப்பதில்லை. ஸ்மார்தர்களே ஸ்ரீ வித்தையும் பிரம்மா வித்தையும் ஒன்று என்பர்.

 15. P.G.Vaidhyanathan on December 18, 2015 at 9:38 am

  மயூரகிரி சர்மா அவர்களின் பதிவை, சமீபத்தில்தான் படிக்க நேர்ந்தது. நான் சந்தித்த சில ஈழத் தமிழர்கள், இலங்கையில் சிவா, முருக வழிபாடுதான் பிரதானம் என்றும் வைஷ்ணவர்கள் என்பவரோ, பெருமாள் வழிபாடோ மிகக்குறைவு என்றும் கூறினார்கள். இது உண்மையா? ஏன் இப்படி? தமிழ் நாட்டைப் போல் கடவுள் மறுப்பும், பார்ப்பன வெறுப்பும், ஏன், சாதி வேறுபாடும்கூட அங்கு இல்லை என்றனர். அதுவும் உண்மையா? இன்றைய நிலை எப்படி? தெரிந்து கொள்ள ஆவல்.

 16. BS on December 18, 2015 at 12:28 pm

  இக்கேள்விக்குப் பதில் சொல்வார் திரு மயூரகிரி சர்மா. எனினும் இலங்கைவாழ் தமிழரல்லா மற்றவருக்கும் தோன்றும் எண்ணங்களையும் சொல்லலாம்.

  பார்ப்பன எதிர்ப்பு:

  இரு சமூகங்களின் குணங்கள் வெவ்வேறானவை: இலங்கைத்தமிழ் சமூகத்தில் அனைவரிடம் ஒருங்கினைந‌த கட்டமைப்பு இருக்கிறது. அங்கு சாதிகள் இருந்தாலும், அவற்றின் காட்டம் குறைவே. தமிழகத்தில் அப்படி இல்லை. ஜாதிகளின் ஆதிக்கம் அதிகம்.

  60 களுக்கு முன் தமிழக சமூக வாழ்க்கையில் பார்ப்பனர்களின் ஆதிக்கமே. அவ்வாதிக்கத்துக்கு ஆன்மிகத்தில் அவர்கள் இடமும் பணியும் நன்குதவியது. பார்ப்பனர்கள் நன்றாக வாழ பிறர் தேய, பொறாமை உருவாகியது. எப்படியாவது தங்கள் பங்கைப் பெறவேண்டுமென உருவாக்கப்பட்ட ஒரு வலிய‌ கருவியே பார்ப்பன எதிர்ப்பு.

  ஆன்மிகத்தில் மட்டுமே அவர்கள் ஆதிக்கம் தொடர்ந்திருந்தால் (இன்றும் தொடர்கிறது நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்குச் சாதகாம வந்துவிட்டது) பார்ப்பன எதிர்ப்பு தோன்றியிருக்காது. என்ன செய்வார்கள்? மாணிக்க வாசகர் எங்கள் ஜாதியில்தான் பிறந்தார் என்று மார்தட்டுவார்கள்! ஆண்டாள் பார்ப்பன எதிர்ப்பாளர்களை நரிகள் என்றார் என்று இறுமாப்பு அடைவார்கள். கந்தசஷ்டி கவசத்தை எழுதியவர் அருணகிரி நாதரில்லை தெரியுமா உனக்கு? என்பார்கள். உவேசா எங்கள் ஜாதி. அவரில்லையென்றால் தமிழ் இலக்கியமில்லை எனப்பீற்றுவார்கள்.

  இவற்றால் பிறருக்கென்ன கேடு? இலக்கியமும், ஆன்மிக நூல்களும் ஒரு கவளம் சோறு ஓர் ஏழைக்குக் கொடுக்க முடியுமா? எனவே பிறர் சட்டை செய்ய மாட்டார்கள். இன்றைய உலகில் முன்செல்ல ஆன்மிகம் உதவாதென்பதால் (பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை; அருளில்லார்க்கு அவ்வுலகில்லை) மக்கள் ஆன்மிகத்தில் எவர் ஆதிக்கம் பண்ணுகிறார் என்பதைச் சட்டை செய்வதில்லை. மக்கள் கூட்டம் கோயில்களில் அலைமோதுகிறதே என நினைத்துவிடாதீர்கள்: அஃது ஆன்மிகம் இல்லை. அவசர நிலை. எதைத்தின்னால் பித்தம் போகும் என்ற மனநிலையே அது.

  ஆனால் பொது சமூகத்திலும் பார்ப்பன‌ஆதிக்கம் இருந்தபடியால் மட்டுமே, அதைத் தகர்க்க பார்ப்பன எதிர்ப்பு என்ற உளி உதவியது. எனவே சமூகக்காரணிகளே பார்ப்பன எதிர்ப்பெனலாம்.

  இப்படிப்பட்ட சமூகம் கேரளாவிலும் இலங்கையிலும் இல்லை. கேரளாவில் நம்பூதிரிகளின் ஆதிக்கம் சமூகத்தில் முற்றிலும் தகர்க்கப்பட்டு மற்ற மக்கள் முன் செல்லசெல்ல அவர்களுள் ஒருவராகப் போனார்கள். பிறமாநிலங்களின் கதையும் கிட்டத்தட்ட இப்படித்தான். அங்கு பார்ப்பனர்கள் தற்பெருமை பேசுவதில்லை. பொது சமூகத்தோடு சேர்ந்தே பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இந்திக்கு ஒன்றென்றால் ஒவ்வொரு இந்திப்பார்ப்பனருகும் முன்னிற்பார். சமற்கிருதத்துக்காக முன்னிற்பதில்லை. அச‌சமூகங்களில் ஆன்மிகமல்லா இகவாழ்க்கையில் பார்ப்ப்னர்கள் ஆதிக்கம் பண்ண இடமே இல்லை; பண்ணவும் இல்லை.

  தமிழகத்தில் தமிழ்ப்பார்ப்ப்னர்கள் தனித்தே ஆவர்த்தனம் பண்ணியது எதிர்ப்பு வராமலா இருக்கும்? ஒரு சிலரால் மட்டுமே என்பதும் மாயத்தோற்றமே. அவர்கள் அன்று செய்யாவிட்டால், இன்றும் சமூகம் அப்படியே இருந்திருந்தால், இன்னொருவர் இன்று தொடங்கியிருப்பார். முன்பை விட கடுமையாக எதிர்ப்பு வந்தே தீரும்!

  கடவுள் மறுப்பு:

  இஃதொரு பேச்சே இல்லை. ஏனெனில், எச்சமூகத்திலும் கடவுள் மறுப்பு ஒரு சிலரால் தொடரப்பட்டுக்கொண்டே இருக்கும். பொது சமூகம் தொடர்ந்து கடவுள் ஏற்புடந்தான் வாழும். தமிழகத்திலும் அவ்வாறே: ஒரு சிலரால் இருந்தது. இருக்கிறது. அச்சிலர் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்திலும் இருந்தபடியால் இரண்டையும் இணைத்து தமிழகத்தில் கடவுள் மறுப்பு பரவலாக இருக்கிறது என்ற மாயத்தோற்றம் திரு வைத்யநாதனுக்கு உருவாகிவிட அதைக்கேள்வியாக்கிவிட்டாரிங்கே!

  கடவுள் உண்டு எனபதை முற்றிலும் ஏற்ற சமூகம் இடிச்ச புளி போல இருந்த இடத்திலே இருக்கும். கேள்வியே இல்லையென்றால் வளர்ச்சியேது? கடவுள் மறுப்பு கண்டிப்பாகத் தேவை. ஆன்மிகவாதிகளை ஒரு கன்ட்ரோலில் வைக்க அஃது உதவும். எப்படி ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி தேவையோ அப்படி! ஆன்மிகவாதிகளுக்கு கொஞ்சம் கூட்டம் சேர்தாலே போதும், சுயபோதை வந்துவிடுகிறது.

  இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுவானிலும் கெடும் என்பது போல.

  பெருமாள் வழிபாடு:

  ஏனில்லை என்று எனக்கும் தெரியவில்லை. Reasons must be history based. I am no historian. Please tell me, anyone?

  Even with Shiva worship, only one variety is omnipresent among Lankan Tamil society: Saiva Siddantham. Why?

 17. சிவபாலா on May 4, 2020 at 1:25 pm

  ஸ்ரீ மயூரகிரி சர்மா அவரகளுக்கு
  வணக்கம்
  தங்களை தொடர்ப்பு கொள்வதற்கு கைபேசியே பகர்ந்து உதவவேண்டுகிறேன்.
  நன்றி
  சிவா(மலேசியா)

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*