பிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ

lee-kuan-yew-singapore‘சிங்கப்பூரை வாழ வைக்க வேண்டிய கடமை யாருக்கும் இல்லை’ என்று சொன்னவர் சென்ற வாரம் காலமான  சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ. சிங்கப்பூர் என்கிற ஒரு ஊர் சிட்டுக்குருவியைப் போன்றது. சிட்டுக்குருவி பறப்பதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லாத பறவை. இருந்தாலும் பறக்கிறது. அதுபோல ‘சிவப்புப் புள்ளி’ ( ரெட் டாட் ) என்று அழைக்கப்படும் சிங்கப்பூரும் தனி நாடாகத் திகழ எந்தத தகுதியும் இல்லை. இருந்தாலும் எல்லா முரண்களையும் தடைகளையும் மீறிச் சிட்டுக்குருவியைப் போல உலக வானில் சிறந்து விளங்குகிறது என்றால் அதற்குக் காரணம் லீ குவான் யூவே.

சிங்கப்பூர் தனி நாடாக வாழ வேண்டும் என்றால் அது தன்னிறைவு பெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் காற்று ஒன்றைத் தவிர இயற்கை வளங்கள் எதுவும் இல்லை, தண்ணீர் உட்பட. ஆனால் இப்படி இருப்பினும் இன்று உலகின் தலை சிறந்த, ஊழலற்ற, மக்களுக்குச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளித்துள்ள நாடாகச சிங்கப்பூர் திகழ்கிறது என்றால் அது ஹாரி என்று சிறு வயதில் அழைக்கப்பட்ட லீ குவான் யூ என்கிற தன்னிகரில்லாத் தலைவனின் முயற்சியாலேயே என்று கூறலாம்.

காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மலேசியா வெளியேறிய போது சிங்கப்பூரும் அத்துடன் இணைந்திருந்தது. ஆனால் தன் மக்களிடையே மத ரீதியாக வேறுபடுத்திப் பார்த்த மலேசியாவிலிரிந்து 1965ல்  பிரிய வேண்டிய சூழல். ஏற்பட்டது. நிலையில்லாத அந்தக் காலகட்டத்தில் துணிந்து முடிவெடுத்து சிங்கப்பூர் என்னும் ஒரு தனி நாட்டை உருவாக்கினார் திரு லீ. ஆனால் சென்னையைவிட சிறிய நில அளவேயுள்ள தீவான சிங்கப்பூர் தனி நாடாக இயங்க மலேசியாவும், இந்தோனேசியாவும் அனுமதிக்குமா என்கிற கேள்வி அனைவர் மனதிலும் இருந்து வந்தது.

அங்குதான் லீயின் மதி நுட்பமும் சாதுர்யமும் மிளிர்கின்றன. இங்கிலாந்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார் லீ. இங்கிலாந்தின் இராணுவம் கணிசமான ஆண்டுகள் சிங்கப்பூரில் நிருத்தப்படும்  என்பதே அந்த யுக்தி. அந்த நேரத்தில் தனது இராணுவ பலத்தைக் கூட்டவும், பொருளியலில் ஒரு ஸ்திரத்தன்மையை அடையவும்  அது வழி வகுக்கும் என்கிற இராஜ தந்திர உபாயம் லீயால் முன்வைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அதனை ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று அழைக்கலாம்.

1965ல் தனி நாடான சிங்கப்பூரின் முதல் சட்டம் ‘அரசுப்பணியாளர் நேர்மைச் சட்டம்’. லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகக் கடுமையான குற்றங்கள் என்று அறிவிக்கப்பட்டன. லீயின் நெருங்கிய நண்பர்கள் கூட இந்தச் சட்டத்தில் இருந்து தப்ப முடியவில்லை. இன்று லஞ்சம் என்ற பேச்சே இல்லாமல் இருக்கிறது என்றால் அதற்கு சிங்கப்பூரர்கள் லீயிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

தனி நாடானவுடன் மக்கள் உழைப்பு அதிகமாகத் தேவைப்பட்டதால், அரசு அலுவலகங்கள் அனைத்தையும் குளிர் வசதியுடன் அமைத்தார் லீ. மழையும் வெயிலும் அதிகம் உள்ள சிங்கப்பூரில் மக்கள் அலுவலகங்களில் அதிக நேரம் இருப்பதை விரும்பி அதிகம் உழைத்தனர். நாடு வளர்ந்தது.

அக்காலகட்டத்தில் எந்த நாடும் செய்யத் துணியாத ஒரு செயலை லீ  செய்தார். இஸ்ரேலின் ஆரம்ப நாட்களில் அந்த நாட்டை எந்த உலக நாடும் அங்கீகரிக்காத நேரத்தில், துணிந்து அதனை அங்கீகரித்து அந்நாட்டுடன் நால்லுறவை ஏற்படுத்தினார். அதனால் சிங்கப்பூர் அடைந்த நன்மைகள் ஏராளம். நீர் வள மேலாண்மை, இராணுவ உடன்பாடுகள் முதலியன இவ்விரு நாடுகளுக்குள்ளும் ஏற்பட்டன.

பல்லின மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நாடான சிங்கப்பூரில் நேர்மையான மதச்சார்பின்மை திகழக் காரணம் லீ. சீன, மலாய், தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலத்தில், இவற்றுடன் ஆங்கிலத்தையும் உட்புகுத்தி நான்கு மொழிகளையும் தேசீய மொழிகளாக்கினார் லீ. அரசின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆங்கிலத்தில் செய்யப்பட ஆவன செய்தார்.

விடுதலை அடைந்த சில ஆண்டுகளில் சீனர்களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே ஒரு கலவரம் ஏற்பட்டது. மக்களிடம் ஒற்றுமை ஏற்படுத்த கூட்டு இராணுவப் பயிற்சியே சரியான வழி என்று கண்டறிந்து 18 வயது நிரம்பிய அனைத்து சிங்கப்பூர் ஆணும் இரண்டாண்டுகள் கட்டாய இராணுவ சேவை ஆற்ற வேண்டும் என்னும் உயரிய திட்டம் கொண்டு வந்தார் திரு.லீ.

lee-kuan-yew-young-singapore
தகரக் கொட்டகைகளிலும் பன்றிகள் உலவும் கழனிகளிலும் இருந்த பல அடித்தட்டு சிங்கப்பூரர்கள் இன்று வானளாவிய கட்டடங்களில் வாழ்கின்றனர். அவர்களில் 97% பேர் வீட்டுரிமையாளர்களாக இருப்பதற்கு லீயின் ‘வீடமைப்புக் கழக’ அணுகுமுறையே காரணம். கட்டாய சேம நிதி என்னும் திட்டம் மூலம் மக்களைச் சேமிக்கத்  தூண்டி நாட்டின் வீட்டு வசதியைப் பெருக்கினார் லீ. சேம நல நிதியின் மூலம் அரசின் பொருளியல் உயர்ந்தது. மக்களின் செல்வமும் உயர்ந்தது.

சர்வதேச அளவில் சீனாவின் ஆளுமையைச் சமன் செய்ய இந்தியா என்கிற யானையின் பலமும் தேவை என்று உணர்ந்து இந்தியாவை ஆசியான் அமைப்புக்குள் கொண்டு வர முயன்று வெற்றி கண்டார். சீனாவின் வளர்ச்சியை 40 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து அத்துடன் நல்லுறவை வளர்த்தார். ஷாங்காய் என்கிற ‘ஆசியாவின் மன்ஹாட்டன்’ நகரம் உருவாக அந்நாளைய சீனத் தலைவர் டெங் சீ பிங்ற்கு உதவினார். அந்த நன்றியைச் சீனா இன்றும் நினைவில் கொண்டுள்ளது.

அதே நேரத்தில்  அமெரிக்காவுடனான நல்லுறவை மேம்படுத்தப் பெரு முயற்சி செய்து அமெரிக்க நிறுவனங்கள் சிங்கப்பூரில் காலூன்றவும், அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தங்கள் ஏற்படவும் காரணமானார். அமெரிக்க சீன நல்லுறவு ஏற்படவும் அவ்விரு நாடுகளுக்கிடையே தூது சென்று வெற்றியும் கண்டார். அவர் மருத்துவமனியில் அனுமதிக்கப்படும் வரையில் எல்லா உலகத் தலைவர்களும் அவரிடம் ஆலோசனை பெற வரிசையில் நின்றது உலகம் வியந்த உண்மை.

அமெரிக்காவின் வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்பதைக் கூர்ந்து கவனித்தார் லீ. கணிதம், அறிவியல் முதலானவற்றில் அதிகத் தகுதி வாய்ந்த மக்களின் தங்கு தடை அற்ற குடியுரிமையே காரணம் என்று அறிந்து அதனை சிங்கப்பூரிலும் செயல்படுத்தினார்.ஒரே தலைமுறையில் ஒரு நாட்டை மூன்றாம் தர வரிசையில் இருந்து முதல் தர வரிசைக்குக் கொண்டு வந்தார் திரு. லீ. கட்டுப்பாடில்லாத ஜன நாயகம் மக்களுக்குப் பயனளிக்காது, மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்டுப்பாட்டுடன் கூடிய ஜன நாயகமே மக்களை மேம்படுத்தும் என்கிற சித்தாந்தத்தை முன் வைத்து அதில் வெற்றியும் கண்டார் திரு. லீ.

சிங்கப்பூருக்கு முன்னர் விடுதலை அடைந்த, பல இயற்கை வளங்கள் கொண்ட நாடுகள் இன்னமும் மூன்றாந்தர வரிசையிலேயே இருக்கையில், எந்த வளமும் இல்லாத ஒரு சிறிய தீவு உலக அளவில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறது என்றால் அது லீ குவான் யூ என்னும் தனி மனிதனின் தீட்சண்யப் பார்வையே என்பதில் சந்தேகம் இல்லை.

நாடு உயர மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார் லீ . வீட்டுப் பிள்ளைகள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும் என்று அவரது அரசு அறிவித்தது. அதன் பலன் இன்று கல்லாத சிங்கப்பூரரே இல்லை என்கிற நிதர்சனம்.

சிங்கப்பூரையும் லீயையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன. ஊழல் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிற அளவிற்கு அவரது சொந்த செயல்பாடுகள் இருந்தன என்பது அல்ல அவரது வெற்றி; அவ்வாறே அந்நாட்டு மக்களையும், மற்ற தலைவர்களையும் உருவாக்கியுள்ளார் என்பதே அவரது வெற்றி. ஒரு மனிதன் தன வாழ்நாளில் கடைப்பிடித்த கொள்கைகள் எவ்வளவு கடினமானவையாக இருப்பினும் அக்கொள்கைகளை அனைவரும் பின்பற்றும்படி செய்வது ஒரு மிகப்பெரிய தீர்க்கதரிசியால் மட்டுமே முடிந்த செயல். லீ ஒரு தீர்க்கதரிசி.

நாட்டின் நல்லெதிர்காலம் தன்னுடன் முடிந்துவிடாமல் இருக்க இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்களும் தன்னைப் போன்ற இயல்புகளும் பண்புகளும் கொண்டவர்களாகவே  இருக்கப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார் லீ. மக்களவை உறுப்பினர்களை கொக்ககோலா, ஷெல் முதலிய நிறுவனங்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உத்திகளைக் கொண்டு தேந்தேடுத்தார். நாட்டை ஒரு சிறந்த நிறுவனம் போல் நடத்த வேண்டும்; அதே நேரத்தில் அது அதீதமான மனித நேயம் கொண்டதாகவும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திரு.லீ. அதில் பெரிய அளவில் வெற்றியும் கண்டார்.

‘நான் செய்தவை எல்லாம் நல்லவையே என்று கூறவில்லை; ஆனால் அவை அனைத்துமே மிக உயர்ந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்டவை என்பதில்  எனக்கு எந்த ஐயமும் இல்லை’, என்று பலமுறைகள் கூறியுள்ளார் ஆணித்தரமாக மனதில் பட்டதை உரைக்கும் குணம் கொண்ட திரு லீ. ‘உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவது’ அவரிடம் இல்லாத ஒரு குணம். மற்றவர்களிடமும் அவர் அதையே எதிர் பார்த்தார்.

‘எனது சிங்கப்பூர் எந்த சித்தாந்தத்தின் படியும் உருவாக்கப்படவில்லை. பல முயற்சிகள் செய்தோம். சில வெற்றி கண்டன. சில தோல்வியுற்றன. நாட்டு மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடிய எந்த முயற்சியையும் செய்வதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை’, என்று சித்தாந்த ரீதியான கட்டுக்கள் எதுவும் இல்லாத ஒரு தலைவராகவும் அதே நேரத்தில் ஒரு பழுத்த யதார்த்த வாதியாகவும் திகழ்ந்தார் திரு.லீ.

உலகில் எந்த நாட்டிற்குச் சென்று வந்தாலும் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதும் மிகப்பெரிய நிம்மதியும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படுவதை நீண்ட நாள் சிங்கப்பூர்வாசி என்கிற விதத்தில் நான் உணர்ந்திருக்கிறேன். அந்த உணர்வுகளுக்குக் காரணம் லீ கட்டமைத்த சிங்கப்பூர் என்னும் நம்பமுடியாத உண்மை என்பது எனக்குத் தெரியும்.

‘என்னைக்  கல்லறையில் இறக்கும் போது கூட சிங்கப்பூருக்கு ஏதாவது தீங்கு நடப்பதை உணந்தால் உடனே உயிர்த்தெழுவேன்’ என்று முழங்கிய திரு,லீ, தனது 91வது வயதில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார்.

சிங்கப்பூர் வடிவில் லீ வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கட்டுரையாசிரியர்  மென்பொருள் வல்லுனர், தமிழார்வலர், இணைய எழுத்தாளர். சிங்கப்பூரில் வசிக்கிறார்.  ஃபேஸ்புக் பக்கத்திலும், தனது வலைப்பதிவிலும் தொடர்ந்து  எழுதி வருகிறார்.

6 Replies to “பிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ”

  1. ஆம், இந்த உலகில் இவர் போன்றதொரு மனிதன் இருந்திருக்கவில்லை… புரட்சிகளும், மாற்றங்களும், மறுமலர்ச்சி களும் கொணர்ந்தவர் என்று பலரை வரிசைப் படுத்தினாலும் அவர்களில் இருந்து இவர் தனித்தும் உயர்ந்தும் நிற்கிறார் என்றால் அது மிகையாகது.

    மாற்றங்களையும், மறுமலர்ச்சி களையும் கொண்டுவந்தவர்களின் செயல்பாடுகள், அதனை அவர்கள் உருவாக்கப் பயணித்த பாதைகள் சற்று நெருடலாகவும் இருந்திருக்கிறது… அதற்கு பல உயிர்களும் பல குடிகளும் பலியாகியும் இருக்கிறது…. இன்னும் சொன்னால் அவர்களின் நோக்கம் உயர்வாக இருப்பதாக எண்ணி அதன் பயன் பெரிதும் பயனில்லாமலும் போயிருக்கிறது அல்லது அது தனிப்பட்ட அந்த நபர்களின் பொருளாதாரத்தையோ அல்லது புகழையோ உயர்த்தவே குறிக்கோளாக கொண்டு அதுவே பயனாகி இருக்கிறது.

    தொடர்ந்து வளர்ந்து சூழலுக்குத் தகுந்தமாதிரி பாதையில் நெளிவு சுளிவோடும் வேக நிதான விவேகத்தோடும் தூரப் பார்வையோடும், வேறெதற்கும் அஞ்சாது தர்ம நியாயம் மாத்திரமே அச்சாணியாக கொண்டு பவனித்த அற்புதத் தேரின் பயணமே இவரின் பயணம்.

    நாட்டின் பாதுகாப்பு வளம் நாட்டு மக்களின் நன்மை, சமதர்மம் இவைகளே இவரின் மூச்சாக இருந்தது அதற்கு பங்கம் செய்ய வரும் எவரையும் இவர் மேற்கூறிய முன்னைய தலைவர்களைப் போல கொன்றோ அல்லது கண்டு கொள்ளாது விட்டோ அல்லது அவர்களையும் திருப்தி செய்ய தான் விரும்பாததையும் ஏற்று சமாளித்தோ ஒரு போதும் இவர் இந்நிலையை இந்நாடு எட்டச் செய்ய வில்லை… மாறாக, இவரின் நோக்கத்திற்கு உயரிய, தூர நோக்குப் பார்வை கொண்ட விருப்பு வெறுப்பில்லா சமதர்ம நோக்கிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பங்கம் செய்ய போகிறார் ஒருவர் என்றால் அவரின் உல் நோக்கத்தைத் தெள்ளத் தெளிவாக புரிந்துக் கொண்டு, அவரின் பின் புலத்தை நன்கு ஆராய்ந்து அவரின் பலவீனங்களை சரியாகப் புரிந்துக் கொண்டு அவர்கள் தங்களை நல்லவர்ககளாக காண்பித்துக் கொள்ளும் பித்தலாட்டக் காரர்கள் என்பதை அவர்களின் செயல்பாடுகளில் இருக்கும் பெரும் தவறுகளுக்கான மூல காரணத்தை கண்டு பிடித்து அதை முளையிலே கில்லி எரிய ஆயுதம் எடுக்கவில்லை.. மாறாக நீதி மன்றத்தின் முன்பு நிறுத்தி அவர்களின் முகத்திரையை கிழித்து அவரகள் மீண்டும் வேஷம் போட்டு திரியாவண்ணம் வேரோடு பிடுங்கி அதுவும் சட்டத்தின் துணையோடு வரம்பு மீறாமல் அப்படியே ஓரங்கட்டி தனது நக்கமும் பயணமும் சிறக்க முனைந்தவர் அதனாலே நான் கூறினேன் இவரைப் போன்ற ஒருத் தலைவர் இருந்ததில்லை. அது இந்த உலகம் தோன்றியதில் இருந்தே… அப்படி இருப்பாராயின் அது ரகு ராமனாகத்தான் இருந்திருக்கணும்…

    இவரும் அப்படிப் பட்ட இராம ராஜ்ஜியத்தைத் தான் செய்து நடத்தி அப்படியே தொடரவும் செய்து இருக்கிறார்.

    அப்படிப் பார்க்கையில் இதற்கு முந்திய உலகத் தலைவர்களில் தனித்தும் சிறந்தும் இருக்கிறார் என்பது புலனாகும்.

    தந்து வெறும் 35 ஆம் வயதில் பிரதமர் பதவிக்கு வந்த இளைஞர் இத்தனை தூரம் சரியாக பயணித்ததன் வெளிப்பாடே இன்று உலகம் காணும் சிங்கப்பூர். இந்த மகான், ஒரு செல்வகுடியில் பிறந்தவர், லண்டனில் சட்டம் பயின்றவர்.. அங்கேயே மேலை நாடுகளில் இருந்து தன்னை கவனித்துக் கொண்டு இருந்திருக்கலாம். மாறாக பிறந்த நாட்டிற்கு வந்து இந்த சேற்றில் இருக்கும் குடிசைகளை மாளிகைகளாக்க, மக்களை கல்வி என்னும் அறிவுக் கண்களை திறக்கச் செய்து ஏழேழு ஜன்மத்திற்கும் அவர்கள் அந்த அறிவை சுமக்க வழி செய்ய தெருவில் இறங்கி கூட்டியும் பெருக்கியும் பல இரவுகள் நண்பர்களோடு தூங்காமல் விழித்திருந்து தனது கனவை நினைவாக்கிய செயற்கரிய செய்த இந்தப் பெரியவர் இந்த உலக வரலாற்றில் தனித்தும் சிறந்தும் நிற்பவர். அவரின் பாராளு மன்றத் தொகுதியில்.. அவர் எந்தக் குடிசையை அகற்றிவிட்டு தனது கனவுக் கோட்டையான (pinnacle@Duxton) 50 மாடி குடியிருப்பை அந்த இடத்தில் ஏற்படுத்தி அங்கே என்னைப் போன்ற சாமானியனும் குடும்பத்தோடு இன்பமுற வாழச் செய்த, அந்த கர்ம யோகியை நினைத்து பெருமை கொள்வதோடு அப்பேர்ப் பட்ட மிக உயர்ந்த மனிதர் வாழ்ந்த பூமியில் நானும் வாழ்வதை எண்ணி பெருவைகையும் கொள்கிறேன்.

    “உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
    உள்ளத்துள் எலாம் உளன்.”

  2. லீ குவான் யூவை நான் ராமன் வடிவில்தான் காண்கிறேன். சிங்கப்பூரில் ஒரு ராமராஜ்ஜியத்தை ஸ்தாபித்து, சாதி சமய மொழி பேதமின்றி, அனைவரின் முன்னேற்றத்திற்காகவும், தனது நாட்டின் நல்வாழ்வுக்காகவும் உயர்த்த மகானாகத்தான் அவர் எனது கண்ணுக்குத் தெரிகிறார்.

    அப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவை சிங்கப்பூர் போல சாதி, சமய, மொழி வேறுபாடின்றி, அனைவரையும் ஒருமைப்படுத்தி, முன்னேற்றினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். என் கனவு நனவாகுமா?

  3. அருமையான வ்யாசம் வழங்கிய ஸ்ரீ ஆமருவியப்பன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    ஸ்ரீ லீ அவர்களிடம் காணப்படும் தலைமைப்பண்புகள் பலவற்றை இன்று ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்களிடம் காணக்கிட்டுவது ஹிந்துஸ்தானமும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது.

    ஊழலின்மை.

    நேர்மையான மதச்சார்பின்மை.

    \\ கட்டுப்பாடில்லாத ஜன நாயகம் மக்களுக்குப் பயனளிக்காது, மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்டுப்பாட்டுடன் கூடிய ஜன நாயகமே மக்களை மேம்படுத்தும் என்கிற சித்தாந்தத்தை முன் வைத்து அதில் வெற்றியும் கண்டார் திரு. லீ. \\

    லீ அவர்கள் சிங்கப்பூரை முன்னேற்றுவதில் வெற்றி பெற பெரும் காரணிகளாக மேற்கண்ட கூற்றுகளைக் காண்கிறேன்.

    மிக அருமையான கருத்துக்கள். ஹிந்துஸ்தானத்தின் மிக முக்கியமான ப்ரச்சினையே கட்டுப்பாடற்ற ஜனநாயகம் என்ற பேரில்………… மக்கள் நலத்திட்டங்கள் எவற்றையும் செயல்படுத்த முடியாத படிக்கு அரசியல்……….. அரசியல் வ்யாதிகளின் ஆதரவுடன்……….. பரங்கிப்பணத்தில் கொழிக்கும் என் ஜி வோக்கள்…………….இவர்களுடைய கட்டுடைக்க முடியாத ஒரு வலைப்பின்னல்……….தேசத்தை முன்னேற விடாது ………….. தனிப்பட்ட நபர்கள் பிச்சைப்பரங்கிப்பணத்தில் செல்வச் செழிப்புடன் இருக்க வழி வகை செய்தமை.

    நூற்றுக்கணக்கான என் ஜி வோக்கள் ஹிந்துஸ்தானத்தில் கணக்கு வழக்குகளை ஒழுங்காக வைத்திருக்காத படிக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

    உலகத்தின் வெற்றி அடைந்த தேசங்களின் வெற்றிக்காரணிகளை ஹிந்துஸ்தானத்தின் நடைமுறைகளுக்கேற்ப அமல் செய்வதில் ஸ்ரீ நரேந்த்ரபாய் முனைப்பாக இருப்பது தெரிகிறது.

    தங்களுடைய பல பகிர்வுகளை தமிழ் ஹிந்து தளத்தில் எதிர்பார்க்கிறேன்.

  4. சிங்கப்பூர் இன்று இவ்வளவு வளரந்திருக்கிறது என்றால் லீ வான் யூ தான் முதல் முழு காரணம். உலகிலேயே தான் விநியோகிக்கும் குடி தண்ணீருக்கு ‘முழு உத்திரவாதம்’ கொடுக்கும் ஒரே அரசு சிங்கப்பூர் அரசுதான். ஆசிரியம் என்னவென்றால்,.சிங்கப்பூருக்கு குடிதண்ணீர் வருவது மலேசியாவில் உள்ள ஜோகர் பஹ்ரு என்ற இடத்திலிருந்து. அதை சுத்திகரிப்பு செய்து தன் மக்களுக்கு விநியோகிக்கிறது. ஒருவர் தனக்கு வந்த வியாதி தண்ணீரால் வந்த வியாதி (WATER BORNE DISEASE) என்று சாட்சியங்களை அளித்தால் அரசு அவருக்கு நஸ்டஈடு கொடுக்கும். லீ வான் யூ புகழ் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

  5. I am indeed astounded to know Mr. Lee was only 35 when he launched his vision of a new Singapore. His vision was noble, practical and ruthless. I agree totally that unlimited and indisciplined democracy is as evil as no democracy. Is it possible to expect an Indian Lee who would clear the stables and run the country with his goal of RamRajya? But I do realise that India is equal to 50 Singapores and we need a leader with the calibre of 50 Lees. I wonder if it ever be possible to find some 100 selfless, honest and hardworking individuals who would forget their religion, caste, party, family etc and work for the welfare of the country? I do believe that those 100 individuals would certainly be remembered as we do in the case of Mr. Lee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *