வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

பிரிக்ஸ் மாநாட்டில் மோடி

இந்திய அரசில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பிரதிபலிப்பு கடல் கடந்தும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. முந்தைய அரசுகள் போலல்லாது, இந்தியாவின் வல்லமையை உலகிற்கு உணர்த்துவதும், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிப்பதும் பிரதான நோக்கமாகக் கொண்ட அரசாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இருப்பதே இதற்குக் காரணம்.

மோடி பிரதமரானவுடன் அவர் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதை சுற்றுலா நோக்குடன் எள்ளி நகையாடுவோர் உள்ளனர். ஆனால், வெளிநாட்டுப் பயணங்களின் பயன்பாடு பற்றி அறியாத, வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியில் கொண்டுள்ள பங்களிப்பை அறியாதவர்கள் தான் அவ்வாறு பேசுவர்.

மோடி பயணம் செய்துள்ள நாடுகளின் பட்டியலைக் காணும் எவரும், தெளிவான இலக்குடன் அவரது பயணம் அமைந்து வருவதை உணர்வர். அவரது முதல் வெளிநாட்டுப் பயணம், நமது நெருங்கிய நட்பு நாடான பூடானுடன் (2014, ஜூன் 16-17) நிகழ்ந்தது. அதன்மூலம், தனக்கு மிகவும் நம்பிக்கையான பூடான் நாட்டின் மீது சீனாவின் வல்லாதிக்கம் செலுத்த முடியாதவாறு பாசவலையை இறுக்கியது இந்தியா.

அடுத்து பிரிக்ஸ் மாநாட்டிற்காக பிரேசில் நாட்டிற்கு (2014, ஜூலை 13-16) மோடி சென்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய வளரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் மோடியின் பேச்சுகள் அனைத்தும் உலக கவனத்தைக் கவர்வதாக இருந்தன. மோடியின் ஆலோசனைப்படி, பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. உலகின் வல்லரசு மனோபாவத்திற்கு வலுவான தடையாக இந்திய- பிரேசில் உறவு இருக்கும் என்பதை உலகுக்கு அந்த மாநாடு உணர்த்தியது. தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் (UNASUR) பல தலைவர்கள் இந்த மாநாட்டிற்கு வந்ததும், அவர்கள் இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்ததும் முக்கியமான நிகழ்வுகளாக அமைந்தன.

காண்க: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!

நேபாள நாடாளுமன்றத்தில்  மோடி
நேபாள நாடாளுமன்றத்தில் மோடி

 

அதையடுத்து, இந்தியாவின் மிக நெருக்கமான கூட்டாளியாக இருந்திருக்க வேண்டிய, அதேசமயம் (2014 ஆக. 3-4) நம்மிடம் இருந்து வெகுவாக விலகிப் போயிருக்கும் நேபாளத்திற்கு மோடியின் பயணம் அமைந்தது. நேபாள நாட்டிற்கு இந்தியா அறிவித்த பல கோடி கடனுதவிகள், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் பங்களிப்பிற்கான ஒப்பந்தங்கள் ஆகியவை, நேபாளத்துடனான நமது உறவை வலுப்படுத்தின. குறிப்பாக இந்திய எதிர்ப்பையே நோக்கமாகக் கொண்ட மாவோயிஸ்ட் தலைவர் பிரசாண்டாவே கூட மோடியின் வருகையையும் அதனால் விளைந்த நன்மைகளையும் வரவேற்றார்.

இந்தப் பயணத்தில் மோடியின் இலக்காக ‘4-சி’ (4 Cs — cooperation, connectivity, culture, constitution) என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. அதாவது, பிராந்தியக் கூட்டுறவு, இருதரப்பு போக்குவரத்து இணைப்பு, கலாச்சார உறவு, அரசியல் சாசன உருவாக்கம் ஆகியவையே அவை. நேபாளம் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தாது என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்திலேயே குறிப்பிட்ட மோடி, கலாச்சார ரீதியாக இரு நாடுகளிடையிலான உறவை மேம்படுத்த வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் உள்ள தெளிவான அரசியல் சாசனம் போல நேபாளத்திலும் வரையறுக்கப்பட்ட அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்ற மோடியின் அறிவுரையை நேபாள அரசியல்வாதிகள் ஏற்றனர். இதற்கு உதவுவதாக இந்தியா அறிவித்தது.

நேபாளத்துடன் மோடியின் பயணம் அத்துடன் முடியவில்லை. அதே 2014-ஆம் ஆண்டில் நவம்பர் 25-27-இல் காத்மண்டுவில் நடைபெற்ற தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (SAARC) மாநாட்டிலும் மோடி கலந்து கொண்டார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்தும் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. காத்மண்டிலிருது புதுதில்லி வரையிலான ‘பசுபதி எக்ஸ்பிரஸ்’ என்ற பேருந்து சேவை துவக்கிவைக்கப்பட்டது. தவிர, மின்னுற்பத்தித் திட்டங்களில் முதலீடு, தொழில்நுட்ப உதவி, பாதுகாபு விவகாரங்களில் ஒத்துழைப்பு, நேபாளத்தில் இந்திய நாணயப் பயன்பாடு ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

ஜப்பான் பிரதமருடன் மோடி
ஜப்பான் பிரதமருடன் மோடி

நான்காவதாக மோடி பயணம் செய்த நாடு ஜப்பான் (2014, ஆக 30- செப். 3). இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் சீனா தொடர்ந்து நெருடலான அண்டை நாடாக உள்ள நிலையில், ஜப்பான் பயணத்தை சீனாவுக்கு எதிரான ராஜதந்திரப் பயணமாக மோடி அமைத்துக் கொண்டார். அவரது பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவில் ஜப்பானின் முதலீட்டை அதிகரிப்பதே. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் ஜப்பானின் பங்களிப்பை அதிகப்படுத்துமாறு மோடி வேண்டுகோள் விடுத்தார். ஜனநாயகம், மக்கள் பெருக்கம், பொருள்களின் தேவை ஆகிய (3D- Democracy, Demography, Demand) வர்த்தகத்தின் மூன்று அடிப்படைத் தேவைகளும் இந்தியாவில் உள்ளன என்றார் மோடி. இந்தியாவின் ‘புல்லட் ரயில்’ திட்டங்களில் பல்லாயிரம் கோடி முதலீட்டுடன் தொழில்நுட்ப உறவை அளிக்க ஜப்பான் சம்மதம் தெரிவித்தது.

இந்தியாவில் நேரடி அன்னிய முதலீட்டை இரண்டு மடங்காக அதிகப்படுத்தவும், பாதுகாப்பு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகிவற்றில் தேவையான உதவிகளைச் செய்யவும் ஜப்பான் உறுதி அளித்தது. இதன்மூலமாக இந்தியாவின் வியூக அடிப்படையிலான உலக பங்குதாரராக ஜப்பான் மாறியுள்ளது.

அடுத்து ஐ.நா.சபைக் கூட்டத்தை முன்னிட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் சென்ற பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் (2014, செப் 26- 30) இரு நாடுகடையிலான உறவில் பல பாய்ச்சல்களை நிகழ்த்தியது. அமெரிக்க விசா மறுக்கப்பட்ட நபரான மோடிக்கு அமெரிக்காவில அளிக்கப்பட்ட பிரமாண்டமான சிவப்புக் கம்பள வரவேற்பு, இந்தியாவின் எதிர்கால முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதாக இருந்த்து. குறிப்பாக இந்தியப் பிரதமர் மோடிக்கு நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அளித்த மகத்தான வரவேற்பு அமெரிக்கர்களே நம்ப முடியாததாக இருந்தது. அதை அமெரிக்க அதிபர் ஒபாமாவே ஒப்புக்கொண்டார். மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது, அந்நாட்டு அதிபர் ஒபாமாவுடன் இணைந்து மோடி எழுதிய கட்டுரை ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் வெளியானது.

ஐ.நா.சபையில் மோடி
ஐ.நா.சபையில் மோடி

இரு நாடுகளிடையிலான வர்த்தக ஒத்துழைப்பு, இரு நாட்டுத் தொழிலதிபர்களிடையிலான கூட்டுறவு, இந்திய வம்சாவளியினருக்கு வாழ்நாள் விசா, பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பில் ஒருங்கிணைப்பு, இந்தியாவில் முதலீட்டை அதிகரித்தல் ஆகிய அம்சங்களில் மோடியின் பயணம் இதுவரையில்லாத பல சிகரங்களை எட்டியது.

அடுத்து 18 நாடுகள் அங்கம் வகிக்கும் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (East Asia Summit -EAS) ) மாநாட்டிற்காக மியான்மர் சென்றார் மோடி (2014, நவ. 11- 13). இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான மியான்மர் (பர்மா) சில காலமாக சீனாவுடன் அதிக உறவு பாராட்டி வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் பல பிரிவினைவாதிகளின் தளமாகவும் மியான்மார் மாறிவிட்டது. இந்த நிலையை மாற்ற மோடி தனது பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டார். கலாச்சார ரீதியிலான இரு நாடுகளின் பிணைப்பைச் சுட்டிக்காட்டிய மோடி, அந்நாட்டு அதிபர் தெயின் செயின் உடன் இருதரப்பு நல்லுறவு கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார். இரு நாடுகளிடையிலான போக்குவரத்து மேம்பாடு, பௌத்த அடிப்படையிலான கலாசாரப் புத்துணர்வு, வர்த்தக அபிவிருத்தி தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடினர். மியான்மரின் இயற்கை எரிவாயு சுரங்கங்களில் இந்திய முதலீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வரவேற்பு
மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வரவேற்பு

அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜி-20 (Group of Twenty Countries- G-20) நாடுகளின் மாநாட்டிற்காக பிரிஸ்பேன் சென்ற மோடி (2014, நவ. 14- 18) அங்குள்ள இந்திய வம்சாளியினரிடையே சிட்னியில் நிகழ்த்திய உரை ஆஸி. மக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. இரு தரப்பு வர்த்தகத்தை இரு மடங்கு அதிகரிப்பது, இந்தியாவின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களில் ஆஸ்திரேலியாவின் முதலீட்டை அதிகரிப்பது, ஆஸி.யின் இயற்கை வளங்களைப் பயன்படுத்த சுரங்கங்கள் அமைப்பது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டுறவு, சுற்றுலா போன்ற 10 அம்சங்கள் தொடர்பாக ஆஸ்திரேலியாவுடன் உறவை மேம்படுத்த மோடி முயற்சி மேற்கொண்டார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா சென்ற இந்தியத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ஜி-20 நாடுகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இந்தியாவின் கருத்துகளை மோடி பிரிஸ்பேனில் தெரிவித்தார்.

அடுத்து ஃபிஜி தீவுகளுக்கு (2014 நவ. 19) சென்ற மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் 37 சதவிகிதம் உள்ளனர். இரு நாடுகளிடையே கடந்த 30 ஆண்டுகளாக கனத்த மௌனத்துடன் கூடிய முறுக்கம் இருந்து வந்த நிலையில், அதை மாற்ற தனது பயணத்தை மோடி பயன்படுத்திக்கொண்டார். சீனாவின் நெருங்கிய அண்டை நாடான, பசிபிக் பிராந்தியத் தீவான ஃபிஜியுடனான இந்தியாவின் உறவு பலவகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்குள்ள சர்க்கரை ஆலைகளின் மேம்பாட்டிற்காக 75 மில்லிய டாலர் கடன், ‘டிஜிட்டல் ஃபிஜி’ திட்டத்திற்கு 70 மில்லியன் டாலர் (மொத்தம் ரூ. 145 கோடி) கடனுடன் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை அறிவித்த மோடி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார். மோடியின் வருகை இருதரப்பிடையே ஆக்கப்பூர்வமான நல்லுறவுக்கு வித்திட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் பைனிமராமா குறிப்பிட்டுள்ளார்.

பிஜி தீவில் மோடி
ஃபிஜி தீவில் மோடி

இந்த வெளியுறவுப் பயணங்களின் தொடர்ச்சியாக, 2015-இல் பிரதமர் மோடி சென்ற நாடுகள் செஷல்ஸ், மொரீசியஸ், இலங்கை. இம்மூன்று நாடுகளும் ஹிந்து மகா சமுத்திரத்திலுள்ள தீவு நாடுகள். மோடியின் பயணத் திட்ட்த்தில் இருந்த மாலத்தீவு, அந்நாட்டில் நிலவும் அரசியல் குழப்பங்கள் காரணமாக ரத்தானது. இதனை, மாலத்தீவு அரசு மீதான கண்டனமாகவே அந்நாட்டு ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன. மோடியின் பயணம் ரத்தானது, மாலத்தீவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இந்தியா அளித்துள்ள அதிர்ச்சி வைத்தியமாகக் கருதப்படுகிறது.

செஷல்ஸ் நாட்டில் (2015 மார்ச் 10-11) பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர், பாதுகாப்பு ஒத்துழைப்பு, நீர்வள ஆய்வு, வர்த்தக மேம்பாடு, ரூ. 450 கோடி கடனுதவி உள்ளிட்ட ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. இந்திப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயபட உறுதி ஏற்றன. ஆளில்லா உளவு விமானம் ஒன்றையும் தனது பயணத்தின்போது செஷல்ஸ் நாட்டிற்கு வழங்கினார் மோடி. தவிர இந்திய அரசால் வழங்கப்பட்ட கடலோரக் கண்காணிப்பு ரேடாரின் செயல்பாட்டையும் மோடி துவக்கிவைத்தார்.

ஆஸ்திரேலியாவில் மோடி
ஆஸ்திரேலியாவில் மோடி

அடுத்து இந்தியாவுடன் மிகவும் இணக்கமான நாடான மொரீசியஸ் (2015 மார்ச் 11-13) சென்றார் மோடி. அங்கு மொரீசியஸின் கடலோரப் பாதுகாப்பிற்காக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ”பாராகுடா’ ரோந்துக் கப்பலின் சேவையை மோடி துவக்கி வைத்தார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி, மொரீசியஸில் இந்தியாவால் ஏற்கனவே அமைக்கப்பட்ட கணினித் தொழில்நுட்ப நகரம் போல மற்றொரு நகர உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்தியா- மொரீசியஸ் நாடுகளிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்த உருவாக்கப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அந்நாட்டு அரசுக்கு நாடாளுமன்ற உரையில் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கருப்புப்பண முதலைகளின் புறவழிச்சாலையாக இத்திட்டம் மாறிவிட அனுமதிக்கக் கூடாது. அதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

மொரீசியஸ் நட்டின் பிரசித்தி பெற்ற கங்காதால்கோ மலையிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்ட மோடி, இத்தீஈவிலுள்ல இந்திய வம்சாவளியினரின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தார். அந்நாடில் ஹிந்தி மொழியை ஊக்குவிக்கும் அரசையும் மோடி பாராட்டினார்.

இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் மோடி .
இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் மோடி .

இறுதியாக அவர் நமது தொப்புள் கொடி உறவு நாடான இலங்கைக்கு (2015 மார்ச் 13-14) சென்றார். அவருக்கு அநாட்டு அரசால் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்த உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் சென்றுள்ளார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோருடனான மோடியின் சந்திப்பு எளிமையாகவும், ஆத்மார்த்தமாகவும் அமைந்திருந்தது.

உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டிற்கும் இந்தியாவுக்கும் உள்ள கலாச்சார உறவை மேம்படுத்துவதில் அதிக கவனம் கொடுப்பவரான மோடி, இலங்கை வாழ் புத்த மத மக்களின் பெருமிதங்களுள் ஒன்றான அநுராதபுரம் பௌத்த விகாரத்திற்கு சென்று வழிபட்டார். பேரரசர் அசோகனின் மகள் சங்கமித்திரையால் அங்கு நடப்பட்ட போதி மரத்தையும் அவர் வழிபட்டார். புத்த பிக்குகளின் ஆசியையும் அவர் பெற்றார். இது அந்நாட்டு பௌத்த மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுதியுள்ளது.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, உள்நாட்டுப்போரில் வென்ற இலங்கை அரசைப் பாராட்டினார். அதேசமயம், போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலத்தைக் காக்க வேண்டிய பொறுப்பை அந்நாட்டு அரசுக்கு மோடி நினைவுபடுத்தினார். ‘இலங்கை வாழ் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ வழி செய்யுங்கள்’ என்று அந்நாட்டு மன்றத்தில் வெளிப்படையாகப் பேசிய மோடியின் உரையை ஈழத் தமிழ்த் தலைவர்கள் பலரும் பெரு மகிழ்வுடன் வரவேற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மோடிக்கு உற்சாக varavERpu
யாழ்ப்பாணத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு.

ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1989) வலியுறுத்திய இலங்கை அரசமைப்பில் 13-வது சட்டத் திருத்தத்தை விரைவில் அமலுக்குக் கொண்டுவர வேண்டும்; கூட்டாட்சியே நாட்டை உயர்த்தும் என்று தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமர் பேசியதை அநாட்டு சிங்கள அரசியல்வாதிகளும் வரவேற்றுள்ளனர். இலங்கையுடன் வர்த்தக மேம்பாடு, பாதுகாப்பு நல்லுறவு, தமிழ் மக்கள் வாழ்க்கை மேம்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற வகையிலும் மோடி பேச்சு நடத்தினார். இதன் எதிரொலிகள் வரும் நாட்களில் தொடரும் என நம்பலாம்.

இலங்கைப் பயணத்தின் முக்கிய அங்கமாக யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் மோடி, அங்கு இந்தியாவால் கட்டப்பட்ட 27,000 வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் விழாவில் பங்கேற்றார். அப்போது மேலும் 47,000 வீடுகள் அங்கு கட்டித் தரப்படும் என்று மோடி அறிவித்தது தமிழ் மக்களுக்கு பெருமகிழ்ச்சி ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்தில் இந்தியா அளித்த ரூ. 60 கோடியில் கட்டப்பட்ட கலாச்சார மையத்தையும் மோடி திறந்துவைத்தார். பிறகு நகுலேஸ்வரத்திலுள்ள கோயிலிலும் மோடி வழிபாடு நடத்தினார்.

சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் மோடி.
சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் மோடி.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தலைவர்கள், வடக்கு மாகான முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோருடனும் மோடி ஆலோசனை நடத்தினார். உள்நாட்டுப்பொறின்போது சிதிலமடைந்த 250 கிமி. நீளமுள்ள வடக்கு பிராந்திய ரயில்பாதை இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது அதில் மதுசாலை- தலைமன்னாரிடையிலான ரயில் போக்குவரத்தை மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் இலங்கை மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இனப் பிரச்னையால் தத்தளிக்கும் இலங்கைக்கு இந்திய முன்னுதாரணத்துடன் கூடிய நல்லுறவுப் பண்பாட்டை விளக்குவதாக மோடியின் பயணம் அமைந்தது என்று அந்நாட்டுப் பத்திரிகைகள் புகழ்ந்துள்ளன.

இவ்வாறாக, மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இலக்குடன் கூடியதாகவும், ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மேலும் உலக அரங்கில் வலுப்படுத்துவதாகவுமே அமைந்து வருகின்றன.

இந்த ஆண்டில் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சீனா, ரஷ்யா, சிங்கப்பூர், துருக்கி நாடுகளுக்கு மோடி செல்லவுள்ளார். இரு தரப்பு வர்த்தகம், பாரதீய கலாச்சார உறவு, பாதுகாப்பை மேம்படுத்துதல், இந்தியாவில் செல்வந்த நாடுகளின் முதலீடு, சிறிய நாடுகளுக்கு இந்தியாவின் உதவி என மோடியின் பயணத் திட்டத்தில் தெளிவான வரையறைகள் காணப்படுகின்றன.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும்.

3 Replies to “வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை”

  1. மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் புரிந்தவர்களுக்கு ஒரு புயல், புரியாதவர்களுக்கு என்றுமே புதிர். பகைவர்களுக்கு சிம்ம சொப்பனம். அதனால் தான் எதிரி கட்சியினர் என்ன சொல்வதென்றே தெரியாமல் ஏதோ புல்மபலிலேய காலம் தள்ளி வருகிறார்கள் இலவு அரசர் ராகுல் ஆளையே காணோம். அய்யா ஈ.வீ.கே.எஸ். இலங்கோவா ..காவல் நிலையத்தில் புகர் தாங்கப்பா .

  2. /////ராகுல் ஆளையே காணோம்//////

    அந்த Rahul Khan(தி) வேறு எங்கும் போகவில்லை. Veninsula நாட்டை சேர்ந்த அவரது அருமை Girl friend VERONIQUE CARTELL ஐ பார்க்க சென்றிருப்பார்.(குறிப்பு:— தனக்கு ஒரு காதலி உள்ளார் என்ற பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துள்ளார்.ஆதாரம்:—– இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 28-4-2004) இளவரசருக்கும் 1 1/2 கழுதை வயதாகிறதல்லவா? (அவர் பிறந்தது 1970 என்றால் அவருக்கு என்ன வயசு என்று calculation போட்டு கொள்ளுங்கள்) எத்தனை நாளைக்குதான் ஆசையை அடக்கிவைப்பது? இதையெல்லாம் சொல்லிகொண்டா போகமுடியும்? அதனால்தான் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டார்.Mr Rahul! Enjoy yourself! தூள் கிளப்பு.

  3. எல்லாம் சரிதான். ஆனால் திலிப் காந்தி மாதிரி BJP MP சிகரெட்டைப் பற்றிய உளறல்கள் மற்ற நாடுகள் நம்மை மீண்டும் ஏளனம் செய்ய வைத்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *