வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 2

முந்தைய பகுதி

தொடர்ச்சி..

இப்படித்தான் திமுக வினதும், பெரியாரினதும் ஒவ்வொரு கோஷமும் பொய்மையில் தோய்ந்து ஊறியவை. கோஷம் சொல்வது ஒன்று. அதன் பின்  சொல்லாது மறைக்கப்பட்டிருக்கும் அவர்களது ஆசை வேறாக இருக்கும்.1925 வரை ஈ.வே.ரா நாத்திகர் இல்லை. குடியரசு அலுவலகம் துவக்க விழாவில், பிறந்த நாளிலிருந்து நாத்திகராக இருந்த தாகச் சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவன் பேசுகிறார்:”

இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசிர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டிக்கொள்கிறேன்.”  (திருப்பாதிரிப்புலியூர் ஞானிகள் மடம் ஸ்ரீல ஸ்ரீ சிவசண்முகம் மெய்ஞான சிவாச்சாரி சுவாமிகளின் ஆசீர்வாதத்தைத் தான் பெரியார் வேண்டுகிறார்).

பிராமண வெறுப்பே சாதி ஒழிப்பாகக் கண்ட ஞானம் பிறந்தது எப்போது?

பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்ததும் பெரியார் இரங்கல் எழுதுகிறார் –

அரசியல் உலகில் அப்பெரியாருக்கும் எனக்கும் உள்ள வட துருவம், தென் துருவமெனில் அது குன்றக் கூறலாகும். நம் தமிழ் நாட்டின் தவப்பேற்றின் குறைவினால் பாப்பனர் அல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது, காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின், நமது நாட்டில் நிலமை இன்று வேறு விதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை.”

இதுவும் 1925 பெரியார். குடியரசு இதழில். அச்சாகியிருக்கும் பொன்மொழி..

 

ஒரு சில இதழ்களுக்குப் பிறகு, முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த பாரதியார் படமும் கவிதை வரிகளும் காணாமல் போயின. ஏன்?  பெரியார் நாத்திகரானார். கடவுள் இல்லவே இல்லை என்று கண்டார். பார்ப்பனர் துவேஷத்துக்குரியவர் ஆயினர். அவர்கள் இன்னும் கைபர் கணவாய் வழி வரவில்லை. அதற்கு இன்னம் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்.

இந்தக் கூத்தெல்லாம் பகுத்தறிவுப் பகலவனதும், பேரறிஞர் அண்ணாதுரை யினதும் திமுகவின் பகுத்தறிவுகள் யாரும் அண்ணாவையோ, பெரியாரையோ கேள்வி கேட்டதில்லை. இந்தக் கூத்து என்றிலிருந்து? என்று.

திமுக பிரிந்து தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்ததும், அவரை எதிர்த்து பிரசாரம் செய்தது பெரியார் தான். அவர் தேர்தலில் பிரசாரம் செய்தது பிராமண வேட்பாளருக்காக. திமுகவை எதிர்த்து.

இந்தப் பெரியாரும், அண்ணாவும் தான், கருணாநிதி முதன் மந்திரியாக இருக்கும் போதெல்லாம் அவரை தூங்க விடுவதில்லை. தினம் கனவில் வந்து அவரது முடிவுகளுக்கெல்லாம் வழிகாட்டுவார்கள். இவரைப் பீடித்திருப்பதும் திராவிட கழக ப்ராண்ட் பகுத்தறிவு தான். இன்று வரை கோபால புரம் குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் யாரும் எது பற்றியும் பதட்டம் நேரும்போதெல்லாம் கோவிலுக்கு சென்று அம்மனை வேண்டிக்கொள்ளாது இருப்பதில்லை. அம்மன் எதுக்கு இருக்கா? வேட்பாளர் மனு பதிவு செய்ய, தேர்தலில் வெற்றி பெற, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்ற, இதை விட வேறு என்ன வேலை அந்த அம்மனுக்கு? இது முரசொலியில் எங்காவது பதிவாகுமோ, இல்லை கேள்வி ஒன்றை தானா கேட்டு பதில் தந்திருப்பாரோ தெரியாது.

ஆனால், இந்த இரண்டு சொச்சம் வருஷங்களில், சமரன் இருந்த காலத்தில், செய்திகளில் சிக்கும் விஷயங்கள் சமரனில் பதிவாகியுள்ளன. அவற்றைப் படிக்கும் போது முன்னும் பின்னுமான பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால்  சமீபத்திய இரண்டு தலைமுறையினருக்கு, இவை ஏதும் தெரிந்திராது. இன்று திமுக தலைமையின் சுய பிரதாப தலைமைகளும் இவற்றைப் பற்றிப் பேசாது. தொண்டர்களும் ஏதோ செவி வழி செய்தி கேட்டிருந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள்.

அது பற்றியெல்லாம், அன்று பத்திரிகைகளோ,மற்ற கட்சித் தலைவர்களோ பேசாத விஷயங்களை சமரன் தான் பேசியது. ஆனால் அதற்கு முந்திய, பிந்திய விஷயங்களை யார் நினைவு கொள்வார்கள்? யாரும் பேசினால் யார் ஆமாம் என்று ஒத்துக்கொள்வார்கள்.? பார்ப்பன சதி என்று ஒதுக்கி விடுவது மிக சுலபமாக கைவரும் உத்தி.

பகுத்தறிவுப் பகலவன், சாதியை ஒழிக்க வந்த பெரியார், “இப்போ பறச்சிகள் எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சுட்டாளுங்க. பின்னே துணிப்பஞ்சம் வராதாய்யா?’’ என்று கேட்டதை எந்த கழக தலைமையோ தொண்டனோ கேள்வி கேட்பான்?. திருமாவளவன் கேட்பாரா? அன்று சமரன் இல்லை. மா.இளைய பெருமாள் பெரியாரிடம்,” கழிவறைகளை மனிதரே சுத்தம் செய்யும் அவலம் நீங்கவேண்டும்.” என்று சொல்ல “இவங்க தான் இதுநாள் வரைக்கு செஞ்சிட்டு வராங்க. இவங்க செய்யாட்டி வேறெ யார் செய்வாங்க. நீங்களே சொல்லுங்க” ன்னு பகுத்தறிவுப் பகலவன் பதில் சொன்னாராம்.

periyar_with_rajaji

“ஆச்சாரியார் என் நண்பர்தான். ஆனா அவர் பாப்பானாச்சே. அவர் பாப்பானுக்கு நல்லது செய்வாரா, நமக்கு நல்லது செய்வாரா?” என்று கேட்ட பகுத்தறிவுப் பகலவன், மணி அம்மையைக் கல்யாணம் செய்துகொள்ளும் தீர்மானத்தோடு, பாப்பானுக்கே சாதகமாகச் செயல்படும் அந்த ஆச்சாரியாரை ரகசியமாகப் போய் ஆலோசனை செய்வானேன்? யாரும் கேட்டார்களா? அண்ணா கேட்டார். ஏன் அவரிடம் போனீர்கள்? என்று கேட்கவில்லை. என்ன பேசினீர்கள்? என்று தான் கெட்டார். அடுத்து சில வருஷங்களில், அண்ணாவே குல்லுக பட்டர், மூதறிஞர், அரசியல் சாணக்கியர் என்று  மாறி மாறி பட்டங்கள் கொடுக்கப்படும் ஆச்சாரியரோடு அணி சேர விருந்தார். யாரும் திமுக வில் இந்த சரணாகதி ஏன் என்று கேட்டார்களா? திமுக வை விடுங்கள். ஹிந்து, சுதேசமித்திரன், முரசொலி?

சரி, கட்சிப் பணத்துக்குத் தான் ஏற்பாடு, கல்யாண ஆசை இல்லை என்றால், 26 வயசுப் பெண்ணை 70 வயசு கணவனாக நீங்கள் மணம் செய்து, அவளது அப்பருவ வாழ்க்கையைக் கெடுக்கிறீர்களே? நீங்கள் பேசிய பெண்ணுரிமை என்ன ஆகிறது? ஈரோட்டில் நிங்கள் விளையாடிய பால்ய கால விளையாட்டையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு நியாயம், மணி அம்மைக்கு ஒரு நியாயமா?” என்று கருணாநிதி கேட்கலாமல்லவா? கேட்க வில்லை. இதுபற்றி யாருக்கும் அன்று கவலை எழவே இல்லை. அவர்கள் எதிர்ப்பு எல்லாம் திராவிட இயக்கம் என்னாவது? என்று தான். இழந்த அந்தப் பதவியைப் பெறத் தானே திமுக என்று ஒரு தனிக்கட்சி. அவர்கள் தான் தனியாகப் போய்விட்டார்கள். பெரியாரையே அண்டியிருந்த வீரமணி ஏன் கேட்கவில்லை?

இந்தக் கட்டத்தில் அண்ணாவிடம் கொண்ட கோபம், அன்ணா தன்னைக் கொல்ல சதி செய்தார் என்ற பழி வேறு. இதை தாங்க முடியாத அண்ணா வழக்குத் தொடுக்க, பெரியார், பகுத்தறிவுப் பகலவன் மன்னிப்புக் கேட்டு தன் பழியை வாபஸ் பெற்றார் என்பதை எந்த திக, திமுக, ஒப்புக் கொள்ளும்?

இந்தப் பெரியார் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வழிகாட்ட வந்த காரணத்தாலோ என்னவோ, வை. கோ பேரிலும் தன்னை கொல்ல சதி செய்ததாகவோ என்னவோ ஒரு கட்டத்தில், கருணாநிதி குற்றம் சாட்டினார். அவர் தான் எப்போதும் பெரியார் வழி நடப்பதாகச் சொல்பவராயிற்றே. அந்தந்த சமயத்துக்கேற்ப கருணாநிதிக்கு கற்பனைகள் நிறையப் பெருகும்.

திமுக தேர்தலில் நின்றபோது, பாப்பானையே ஆதரித்து திமுகவுக்கு எதிராக பெரியார் பிரசாரம் செய்தது ஏன்? அன்று பெரியார் பேச்சில் எவ்வளவு ஆத்திரம், ஆத்திரத்தில் பிறந்த வசைகள். இதைப் போல ஒரு துரோகத்தை ஒரு பகுத்தறிவுப் பகலவன், ஒரு சாதி எதிர்ப்பாளன் செய்யலாமா?

இந்த மாதிரி குணமும் பொறாமையும் எரிச்சலும் பட்டு திராவிட இயக்கத்துக்கு எதிராக செயபட்ட, இந்த பெரியார் ஏன் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வந்து அரசுப் பணியில் தலையிடுகிறார்? அதை ஏன் கலைஞர் பக்தியோடு கேட்டுச் செயல்படுகிறார்.

இதை யார் அக்காலங்களில் கேட்டார்கள்? கேட்பதில்லை. ஏன்? 1971 லிருந்து தமிழ் நாட்டில் இருந்த காங்கிரஸும் சரி, மற்ற சில்லரைக் கட்சிகளும் சரி, கம்யூனிஸ்ட்டுகளையும் சேர்த்து, திமுக, அல்லது அதிமுக வை அண்டியே வாய் பொத்தி,சிரம் தாழ்த்தி, சேவக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.  ஏதோ ஒருவரை மாறி மாறி சேவகம் புரிந்தார்கள். வாய் திறக்க மாட்டார்கள். காற்றோடு போகும் சொல்லே வெளிவராத போது, எழுத்திலா பதிவார்கள்? கட்சிகளும் சரி, பத்திரிகைகளும் சரி. இப்போது தான் எல்லோரும் வாய் திறக்க, எழுத கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மகா கேவலமான வாழ்க்கை. ஏதாவது தப்பித் தவறி, திருக்குவளைக் கலைஞரை, எந்த காங்கிரஸ் காரனாவது லேசாக விமர்சித்து விட்டாலும் சரி, அன்னை சோனியா, சொக்கத் தங்கம் சோனியா, மணிமேகலை சோனியா உடனே “கலைஞரைப் போய் பார்த்து அவரைச் சமாதானம் செய்யுங்கள்” என்று ஒரு தாக்கீது அனுப்பிவிடுவார். இதற்கு சிதம்பரமோ, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனோ, தங்கபாலுவோ யாரும் விலக்கில்லை. பீட்டர் அல்ஃபான்ஸோ தான் அருகிலேயே தஞ்சம் அடைந்திருப்பவர். கவலை இல்லை. இம்மாதிரி தாக்கீது ஏதும் வராது பார்த்துக்கொள்வார். அவரது இதயத்தில் காமராஜ் இருந்த இடத்தைல் அமர்ந்திருப்பது கலைஞர். இப்படி இருக்க எந்த காங்கிரஸ் காரர் எவ்வளவு அகங்காரத்தோடும், அநாகரீக மாகவும் கழகத்தினர் பேசினாலும், வாய் பொத்தி இருக்க பழக்கப்பட்டவர், எழுத்திலும் பேச்சிலுமா நடந்த சரித்திரத்தின் பதிவு இருக்க முடியும்?

samaran-2கம்யூனிஸ்டுகளே ஒரு சமயம் அதிமுக இன்னொரு சமயம் திமுக என்று அணிசேரவோ, இல்லை ராஜ்ய சபா சீட்டுக்கோ, இல்லை சட்ட மன்ற தொகுதிக்கோ என்று அருள் வேண்டி, அம்மையாரிடமோ, திருக்குவளைக் காரரிடமோ போய் காத்திருக்க வேண்டியிருந்தால்… என்ன செய்ய? மாறி மாறி இது எத்தனை தடவை நிகழ்ந்துள்ளது! கடந்த ஒரு தலைமுறை காலத்துக்கும் மேல் அவர்கள் மார்க்ஸையும், லெனினையும் மறந்து அதன் இடத்தில் திமுக/அதிமுக வுக்கு சேர்ந்திருக்கும் அணிக்கு ஏற்ப, அம்மையாரோ, கலைஞரோ வந்து அமர, சட்ட மன்றத்தில் கை தூக்குபவர்களாக, அல்லது வெளிநடப்பு செய்பவர்களாக ஆகி விட்டார்கள். சுருக்கமாக, அவர்கள் சுயத்தை இழந்தாயிற்று. இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் (இரண்டு பிரிவுகளிலும் யார் என்பது யாருக்காவது தெரியுமா? யாராவது கவலைப் படுகிறார்களா?) இப்போது ராஜா பெற்றிருக்கும் ராஜ்ய சபா அங்கத்தினர் பதவி, சி.பி.ஐ தலைவர் உடன் வர, சிபாரிஸோடு ராஜா ஜெயலலிதாவை சந்தித்து அவர் தந்த வோட்டில் பெற்றது.

காமராஜர் இருந்த காலத்தில், கலைஞரின், அவர் அடிக்கடி, சொல்லி தம்மையே பாராட்டிக் கொள்ளும், நயத்தக்க நாகரீகமான மொழியில் “காமராஜரின் தோலை உரித்தால், நாலு மத்தளத்துக்கு ஆகும்” என்று பேசக்கேட்டவர் என் எழுத்தாள நண்பர். அதை அவர் தான் தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். அத்தகைய பண்பாளரான, கலைஞர் தான், “காமராஜ் ஒரு சகாப்தம்” என்ற தன் நூலை வெளியிடத் தகுந்தவர்” என்று கோபண்ணா என்னும் காங்கிரஸ் காரர், வேண்டிக்கொள்ள, கலைஞர் தலைமையில் வெளியிட்டு விழா நடந்தது. பதிலுக்கு கலைஞரும் கோபண்ணாவுக்கு விருது ஒன்று அளித்து அழகு பார்த்து மகிழ்ந்தார். இப்படி ஒரு சரித்திரம் இன்றைய காங்கிரஸுக்கு.

மிகச் சிறந்த பேச்சாளராக கழகத்தார் கொண்டாடும், திமுக வின் இரண்டாம் படித்தலைவரான, துரை முருகன், திமுகவினருக்கே உரிய நயத்தக்க நாகரீகமொழியில், “இந்திரா அம்மையார் கலைஞரின் விதவை மறுவாழ்வுத்திட்டத்துக்கு மனுச்செய்துகொண்டால், அம்மனுவை கலைஞர் மனிதாபிமானத்தோடு கவனிப்பார்” என்று கருணாநிதி தலைமை தாங்கிய கூட்டத்திலேயே, அவரைத் தாஜா செய்யும் நோக்கத்தில்  கருணாநிதி மனம் மகிழ அருகில் அமர்ந்து கேட்க, ஒரு யோசனையை முன்வைத்தாராம். அவ்வப்போது இருவருக்குள்ளும் உரசல் வரும்போது, இப்படி ஏதாவது பேசி தாஜா செய்வது துரை முருகன் கையாளும் உத்தி.

இப்படியான ஒரு கூட்டத்தினரிடமா, ஒவ்வொருவருடைய உண்மை வரலாறு பதிவாகும்?. நான் கழகத்தின் செயற்குழு கூட்டத்திலோ, அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் தனிப்பட்ட குலாவலிலோ, ஏன் சட்டமன்றத்தில், கருணாநிதி, மைக்கைத் தன் கைகளுக்குள் மூடிக்கொண்டோ பேசிய வற்றையோ இங்கு மேற்கோள் காட்டவில்லை. பத்திரிகைகளில் வந்தவை, அன்றன்று மறக்கப்பட்டவை, நினைவிலிருப்பவற்றைத் தான் எடுத்துச் சொல்கிறேன். அவற்றில் சில நான் என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதிலும் இந்த ப்ராண்ட் நயத்தக்க நாகரீகம் பொங்கித் ததும்பும். அவற்றைச் சொல்வது சரியல்ல. சட்ட மன்றத்தில் நடந்த மகாபாரதக் காட்சி எல்லோரும் அறிந்தது.

இன்று சுமார் ஒரு பத்து வருஷங்களாக, பத்திரிகைகள் முன்னர் இல்லாத சுதந்திர உணர்வு பெற்று எழுதுகின்றன. ஆனால் திராவிட கழகத்தின் தோற்றத்திலிருந்து, நடந்த அநாகரீகங்கள், சொல்லிலும் நடத்தையிலும், இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. அவர்கள் அறியவும் வாய்ப்பில்லை. பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள், ஒன்று அலட்சியப்படுத்தின. பின்னர் அவற்றின் இரைச்சல் அதிகமாக, இந்த சாக்கடையில் கல்லெறியத் தயங்கின. அடுத்த கட்டத்தில் இவை பலம் பெறவே, அந்த பலத்தைக் கண்டு பயந்தன.

ஒரு சிலர் தமக்கு நல்லதாக, பாராட்டத் தக்கதாகப் பட்டதைப் பற்றி எழுதின. அப்போது இவை, பார்ப்பன ஏடுகளே பாராட்ட வேண்டியதாயிற்று”. என்று சொல்லப்படும். மாறாக, கண்டனமாக இருந்து விட்டாலோ, பார்ப்பன ஏடுகளுக்கு பாராட்ட மனம் எப்படி வரும்?” என்று சொல்லப்படும்.

சமரன் இதழின் இத்தொகுப்பில், அன்றைய enfant terrible ஜெயகாந்தனின் எழுத்துக்கள் கணிசமாக உள்ளன., அனேகம் கருணாநிதியைப் பற்றியவை. அவை இந்த அரசியல் அநாகரீகத்தை, ஆபாசத்தைக் கண்டு எழும் தன் மனக்கொதிப்பை எவ்வளவு காட்டமாகக் கொட்டியிருக்கிறார் என்று சொல்லும். இளம் ரத்தம். “எந்தக் கொம்பனுக்கும்” நான் பயந்தவனில்லை என்றோ, என்னவோ அவர் அடிக்கடி சூளுரைப்பது வழக்கம் இது சமீப காலம் வரை உண்மையாகத் தான் இருந்தது. அக்காலத்தில் இப்படிப் பேசி யாரும் கால் கை சேதமடையாமல் வீடு திரும்ப முடியாது. அந்த நிலைகளுக்கு அவர் இரையானதும் உண்டு என்று சொல்லக் கேள்விப் படுகிறேன். ஆனால் இன்று, மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அல்ல, நேரே கோபால புரத்துக்குத் தான் நன்றி சொல்ல விரைந்ததாகச் சொல்லப் பட்டது. இதையும் தாண்டி, மேடையில் கலைஞர் மனம் மகிழ புகழ் மழை பொழிகிறார் என்றும் பத்திரிகைகளில் படிக்கிறேன். எந்தக் கொம் பனுக்கும் .நான்……” என்று  ஜெய காந்தன் அக்காலங்களில் பேசியது நினைவுக்கு வரலாம். இல்லையெனில் சமரனில் பதிவாகியிருப்பதைப் பார்த்து நினைவு படுத்திக்கொள்ளலாம். அது மகிழ்ச்சி தரும், கர்வம் கொள்ளத் தக்க கணங்களாக இராது. காலம் யாரையெல்லாம் என்ன அலங்கோலம் செய்து விடுகிறது!

தமிழகம் அக்காலங்களில் தன் எதிர்ப்பைக் காட்டாததும், பதிவு செய்யாததும் எத்தகைய சீரழிவுக்கு காரணமாகியிருக்கிறது என்பதை சமரன் தொகுப்பு  நமக்குச் சொல்லும். இன்று அனேகமாக பத்திரிகைகள் அன்றைய பயத்தில் இல்லை. எழுதுகின்றன. ஆனால் கட்சிகளின் தலைமைகள் வாய் திறப்பதில்லை. மத்திய அரசுடன் ஏதோ கொடுக்கல் வாங்கல் பேரத்தில் எல்லாம் சிக்கியிருக்கின்றன. கட்சிகளும் தலைமைகளும்.

எந்த சுதந்திரத்தை தலைமைகள் அன்றிலிருந்து இன்று வரை, பத்திரிகைகள் சமீப காலம் வரை இழந்திருக்கின்றன? அதன் பாதிப்புகள் என்ன? என்பதை, சுமார் இரண்டே வருஷங்கள் வாழ்ந்த சமரன் கொண்டிருந்த சுதந்திரத்தின் பதிவுகளை, இத்தொகுப்பு சொல்லும்.தன்னளவுக்கு தன் காலத்தில் கண்ட அளவுக்குச் சுட்டிக் காட்டும்.

பேசவேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும் அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது சமரன் தொகுப்பிலிருந்து தெரிய வரும்.

evr-and-sonsஇல்லையெனில் தம் உண்மையான கடந்த காலம் தெரியவராது தடுக்க, தாமே தம் வரலாற்றை தமக்குப் பிடித்த வகையில் பதிவு செய்து மகிழ்வார்கள். முரசொலியின் உடன் பிறப்பே கடிதங்களும், ஆத்திரம் தாங்காது புனைபெயரில் எழுதப்பட்டவையும் தொகுக்கப் பட்டால் எப்படி யிருக்கும்? எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருவது, ஜெயமோஹன், திராவிட இயக்கத் தலைமைகள் எழுதுவது எதுவும் இலக்கியமில்லை என்று சொன்னதற்கு, யாரும் பதில் தரவில்லை. மாறாக, முரசொலியில் யாரோ புனை பெயரில் “ நீ நாய், மலையாளத்து நரி, யானையிடமா மோதுகிறாய்…  ? ரகத்து வசைகள் தான் பிறந்தன. புனை பெயரில் யார் எழுதியிருப்பார்கள்? முரசொலியில் வசைபாட வேறு யாருக்கு தைரியம் உண்டு? இது வசையோடு போயிற்று. அக்காலங்களில் “ஆட்டோ” வீடு தேடி வரும் என்பார்கள்.

சிலர் புத்தகங்களாக எழுதியிருக்கிறார்கள். மலர் மன்னன், பி. ராமமூர்த்தி, அரவிந்தன் நீலகண்டன், சுப்பு, ம. வெங்கடேசன் கே. சி. லக்ஷ்மி நாராயணன், பழ. கருப்பையா போன்றோர். (இப்போதைக்கு நினைவுக்கு வருபவர்கள்) எழுதியிருக்கிறார்கள். ஒப்பீட்டுக்கு கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி, ஆறு பாகங்களையும் படித்துக்கொள்ளலாம். இவற்றோடு, சமரன் போன்ற, தொகுப்புகளும் வருமாயின் நம்மை கண்விழிக்கச் செய்யும். மிக முக்கியமாக குடியரசு இதழ் தொகுப்பு பற்றி ஒரு அன்பர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அது இல்லையெனில் பெரியாரின் 1925 எழுத்துக்கள், பேச்சுக்கள் பற்றி எப்படி நான் அறிந்திருக்க முடியும்?. விடுதலையையும், முரசொலியையும் யாரும் தொகுக்க முயன்றால், அதற்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வரும். “நம்ம வீட்டு சமாசாரம், நமக்குள்ளே இருக்கணும்” என்று ஒரு மந்திர வாக்கியம் பிறக்கும். தன் உண்மை முகம் வெளித்தெரிய கூச்சப்படும் முகம்.  அது தான் வரலாற்றுப் பதிவுகளின் பலம்.

.விஜய பாஸ்கரனின் சமரன் களஞ்சியம்

பதிப்பாசிரியர்: வ. மோகன கிருஷ்ணன்

தியாக தீபங்கள் வெளியீடு.

63 எச், பார்க் துகார்,

ராமாபுரம்,

சென்னை – 600 089

2 Replies to “வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 2”

  1. கம்யூனிஸ்டுகளைப்பற்றி எழுதியது சரிதான். ஜீவாவின் காலத்திலிருந்தே அவர்களின் கொள்கை வீழ்ச்சி ஆரம்பித்து இன்று காணாமலே போய்விட்டது. தா பாண்டியன், டி ராஜாவினால் கம்யூனிஸ்டுகள் என்றாலோ சந்தர்ப்பவாதிகள், சுயநலவாதிகள் என்றாகிவிட்டது.

  2. தி க நாஸ்திக ,புரட்சி கர அதிகபிரசங்கி குஞ்சுகளிடம் உள்ள கெட்ட பழக்கங்களில் தலையாயது ,இருபதாம் நூற்றாண்டில் எவையெல்லாம் மினுமினுக்கிறதோ
    அத்தனையும் அய்யா ‘பெரிய கருப்புக்கே ‘அற்பணித்துவிடும் பழக்க தோசம் .பெண் கல்வி பற்றி யோசிக்கும் போது ,ஆண்கள் மட்டும் என்னத்தை படித்துக்கிழிதார்கள்?அதிக பட்ச ஆயுள் முப்பது, முப்பத்தைந்து என்று சாவுக்கூத்திடும் வேளையில் எங்கே கலைகளும் கல்வியும் ஓங்கும் .மருத்துவம் தந்த நீண்ட ஆயுளும் ,automobile மாடர்ன் ,கண்டு பிடிப்புகளும் புழக்கத்திற்கு வந்த பிறகே ,தமிழகத்தில் சாவு பயமில்லாத உல்லாசங்கள் கூடின !அதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே அத்தனையும் கண்ட செல்வகுமார ,குமரிகளும் ,ஜமிந்தாரினிகளும்,இருபதுகளில் இங்கிலாந்து வீதிகளில் உலவியும் ,டென்னிஸ் விளையாடியும் களித்ததனரே ,அதற்கும் இவேரா வுக்கும் என்ன சம்பந்தம் ?அவர்களின் வாலிபமும் ,வசதியும் நோயில்லா மேனியும் ,அமைதியான நெடு வாழ்வல்லவா ?காந்த மேனியரை காதல்போழுதுகளில் கூட்டிவைத்தது ஆட்டோமொபைல் வசதிகளல்லவா?இத்தனைக்குகும் ராமசாமி நாயக்கரும் என்ன சம்பந்தம் ?மாத்திரைகள் கண்டு பிடித்து மக்களின் ஆயுளை கூட்டினாறா ?வீதிகளில் puncture கடை வைத்து காதர்பொழுதுகள் சிறக்க கோளாரின்றி வாகனங்கள் ஓட உதவி செய்தாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *