விவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்

ஆம் ஆத்மி கட்சியின் “நிலக் கையகப் படுத்துதல் மசோதா” எதிர்ப்புப் பேரணியில் ‘கஜேந்திர சிங்’ என்ற ராஜஸ்தானை சேர்ந்த ஒரு ஏழை விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   அந்த இந்தியக் குடிமகனின் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

திடீர் மழையினால் ஏற்பட்ட பயிர் நாசத்துக்கு நிவாரணம் வழங்கத் தவறிய அரசை கண்டித்தே அவர் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஜேந்திர சிங்கின் நிலத்தைக் கையகப்படுத்தாமலேயே பிஜேபி இரண்டு லட்சம் ரூபாயும், ஆம் ஆத்மி கட்சி 10 லட்சமும், காங்கிரசும் சில லட்சங்களும் நிவாரணமாக கொடுத்துள்ளன. பிஜேபி அரசு வெறும் 2 லட்ச ரூபாய் கொடுத்தது நியாயமா? ஒரு மனித உயிரின் விலை அவ்வளவுதானா? என்றெல்லாம் கேள்விகளும் எழுந்துள்ளன.

விவசாயி கஜேந்திர சிங்கின் இந்த நிலைக்கு நிலக் கையகப் படுத்துதல் மசோதாவோ அல்லது பிஜேபியோ தான் காரணமா? ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்க்கலாம், மேலே படியுங்கள்.

பொதுவாகவே ஊடகங்கள் முன்பு நாடகம், சர்க்கஸ் எல்லாம் நடத்தும் கேஜ்ரிவால் அன்று காலை, “பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த தர்ணாவை பார்க்க அனுமதி மறுக்கப் படவேண்டும்” என்று போலீசைக் கேட்டுக் கொண்டுள்ளார். எதனால் அவரின் இயல்புக்கு நேர்மாறாக இவ்வாறு கூறினார்? ஊடகங்கள் பார்க்கக்கூடாத வகையில் அவர் என்ன செய்ய திட்டமிட்டிருந்தார்?

farmer-suicide-1

விவசாயி கஜேந்திர சிங் மரத்தில் அமர்ந்திருந்த புகைப்படத்தைப் பார்த்தால், அவர் சாதாரண விவசாயிபோல் தோற்றமளிக்காமல், கையில் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பத்தைக் கையில் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. தற்கொலை முடிவோடு மரத்தில் ஏறும் ஒருவர் துடைப்பத்தை கையில் எடுத்துகொண்டு ஏறுவாரா? அவரை ஏற்றிவிடவோ, அல்லது அவர் ஏறியபின் அவரிடம் இந்தத் துடைப்பத்தைக் கொடுக்கவோ ஆம் ஆத்மியினர் உதவியிருக்க வாய்ப்பு அதிகம் அல்லவா?

farmer-suicide-2அறிவியல்பூர்வமாகப் பார்த்தால், மனமுடைந்ததால் செய்துகொள்ளும் தற்கொலைக்கு உடலில் மோனோமைன் ஆக்ஸிடேஸ் என்ற என்சைம் அதிகரித்தலும், அதன் உந்துதலும் காரணம். ஆனால் முன்கூட்டியே தற்கொலைக்கான கடிதத்தை எழுதிய பின்தான் கஜேந்திர சிங் மரத்தில் ஏறியிருக்கிறார். ஆகவே இது திடீர் மனமாற்றம், மோனோமைன் ஆக்ஸிடேஸ் உயர்வு என்று சொல்லமுடியாது. சிலநாட்களாக பயிர்கள் அழிந்ததால் மனமுடைந்து அவர் இருந்ததாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆனால் அவர் உட்கார்ந்து இருக்கும் கம்பீரமான தோரணை அவர் உடைந்த மனநிலையில் இல்லை என்ற சந்தேகத்தையே தூண்டுகின்றது. ஆகவே, இது திடீரென்ற தற்கொலை முடிவும் இல்லை, அல்லது முன்கூட்டியே இருந்த மன அழுத்தத்தால் செய்திருக்கவும் வாய்ப்பில்லை.

கஜேந்திர சிங் தூக்கில் தொங்கி மரத்திலிருந்து இறக்கப்பட்ட சமயம், பேசிக்கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவரான குமார் விஸ்வாஸ் “என்ன நடந்தது?” என்று கேட்டு பரிதவிக்காமல், “ஆள் காலியா” அல்லது “போய்ட்டானா” என்பது போல் ‘லடக் கயா’ என்று வினவியது Zee News வீடியோ வில் பதிவாயுள்ளது. இது அவருக்கு முன்கூட்டியே இது நடக்கும் என்று தெரிந்திருந்ததா? என்ற சந்தேகத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சந்தேகம் ஏற்படுத்துக் கூடிய விஷயங்கள், வீடியோவில் பதிவாகக் கூடாது என்பதால்தான் கேஜ்ரிவால் ஊடகங்களை அனுமதிக்க வேண்டாம் என்றாரா? என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது

மற்றொரு ஆம் ஆத்மி தலைவரான சிஸோடியாவிடம் காலை 11 மணி அளவில் தற்கொலை செய்து கொண்ட கஜேந்திர சிங் பேசியதாக அவரின் குடும்பத்தினரே கூறியுள்ளார்கள். இது நாம் நிச்சயம் மேலும் புலனாய்வு செய்தேயாக வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது.

ஆகவே இனி ஆம் ஆத்மி தலைவர்களிடமிருந்து நம் பார்வையை விவசாயி கஜேந்திர சிங் பக்கம் திருப்பலாம்.

‘கஜேந்திர சிங் எழுதிய’ தற்கொலைக் குறிப்பில் இருக்கும் கையெழுத்து அவருடையதன்று என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லை, அந்தக் கடிதத்தில் ‘உபேந்திர சிங்’ என்று எழுதி பின் ‘கஜேந்திர சிங்’ எனத் திருத்தப் பட்டுள்ளது. யாரவது தன் பெயரையே பிழையோடு எழுதுவார்களா? இவ்விரண்டு மட்டுமே அந்தக் கடிதம், கஜேந்திர சிங் எழுதியது இல்லை என்பதை நிரூபிக்கிறது.

farmer-suicide-3

 

கஜேந்திர சிங்கின் உறவினரான சுரேந்திரசிங் , “அவர் மனோதிடமுடையவர், நிச்சயம் தற்கொலை செய்துகொள்ளக் கூடியவர் அல்ல. அவரை இந்தப் பேரணியில் யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள்”, என்று தெரிவித்துள்ளார். கஜேந்திர சிங்கின் குடும்பத்தினர், அவரின் வயற்காடு பருவம் தவறிய ஆலங்கட்டி மழையினால் சேதமடைந்திருந்தாலும்
, அவர் பண நெருக்கடியிலோ அல்லது கடனிலோ மூழ்கியிருக்கவில்லை என்று சொல்கின்றனர்.

கஜேந்திர சிங் விவசாயத்தை மட்டுமே நம்பி இல்லை. அவர் கிரீடம் போன்ற ராஜபுதன பாரம்பர்ய முண்டாசு/தலைப்பாகை செய்து விற்கும் தொழில் செய்துள்ளார். அவர் வியாபாரத்திற்கு ஒரு வெப்சைட்டும் வைத்துள்ளார்.   – இந்தப் பக்கத்தில் கீழே அவர் பெயர் உள்ளது. பல போட்டோக்களில் அவர் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்வதுபோல் போட்டோக்கள் உள்ளன. அவரின் போட்டோக்களை பார்க்கும் யாரும் அவர் ஏழை விவசாயி என்ற எண்ணத்தைக் கைவிடுவார்கள். மேலும் அரசியல் மூலம் உயரவும் முயற்சி செய்துள்ளதும் தெரியவருகிறது.

‘தெஹ்ரீர் சதுக்கத்தில் நடந்தது போல ( 2011ல் எகிப்திய மன்னருக்கு எதிராக நடந்த 850 பேர் கொல்லப்பட்ட போராட்டம்) செய்தால் நமக்கு பெரும் அனுதாப அலை கிடைக்கும்’ என்று கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே நயவஞ்சக அறிவுரை கூறப்பட்டிருந்ததாக இந்த விடியோவிலும் , மற்றும் அதை அவர் செய்ய திட்டமிட்டதாக இந்த விடியோவிலும் தெரிகிறது. இந்த வீடியோக்களை கேஜ்ரிவால் மறுக்கவில்லை. ஆகவே இதுமாதிரியான ஒரு சம்பவத்தை உருவாக்க கேஜ்ரிவால் முயற்சி செய்தது உண்மையே. தற்கொலை செய்ய கஜேந்திர சிங் ஆயத்தமானதும், ஆம் ஆத்மியினர் கைதட்டி ஆர்ப்பரித்ததாக காவல்துறை பதிவு செய்துள்ளது.

போன பத்தியில் நிறுவப்பட்டுள்ளது போலின்றி வெறுமனே இது நாடகமாக, ஸ்டன்ட்டாக செய்யபட்டிருந்தாலும் கூட, கேஜ்ரிவால் தொலைக்காட்சிகளை கவர் செய்யக் கூப்பிட்டிருப்பார். ஆனால் அவர் ஏன் ஊடகங்களை விலக்கக் கோரவேண்டும்? ஏன் தற்கொலை நடந்தபின்பும் கேஜ்ரிவால் 20 நிமிடம் தொடர்ந்து பேசினார்?

farmer-suicide-kejriwal

 

மேற்கூறியவற்றில், தற்கொலை கடித்தை  தவிர எதையுமே சட்டப்படியான ஆதாரமாகக் கருத முடியாது. வெறும் சந்தேகங்கள்தான். ஆனால் இந்த சந்தேகங்களே காவல்துறையின் புலனாய்வை வழிநடத்தப் போகின்றன.

டெல்லி காவல்துறை, ஆம் ஆத்மி கட்சி மீது   தற்கொலைக்குத் தூண்டியதாகவும், காப்பாற்ற முயன்ற போலீசாரை ஆம் ஆத்மி தொண்டர்கள் தடுத்ததாகவும் 306, 186 ஆகிய செக்ஷன்களில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

கேஜ்ரிவால் இனி அனேகமாக அழுகை, உடல் நலக்குறைவு , ஆம் ஆத்மி பெண் தொண்டர்கள் மீதான பாலியல் தாக்குதல், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல், என்று புதிய நாடகங்களை உருவாக்கி திசை திருப்பி இந்த படுகொலையை மறைக்க முயற்சிக்கக் கூடும். பிஜேபியோ, காவல்துறையினர் ஆம் ஆத்மி கட்சியினர் மீது கைது  நடவடிக்கை எடுத்தால்  மக்களின் அனுதாப அலை ஏற்படும் என்று அமைதி காக்கக் கூடும்.

‘கஜேந்திர சிங் விவசாயிகள் இழப்பீடு’ என்று புது திட்டத்தை ஆரம்பித்து இறந்தவருக்கு மரியாதை செலுத்துவதாக அறிவித்திருக்கிறது ஆம் ஆத்மி. ஆம் ஆத்மி கட்சி அரசியல் வித்தைகளில், மக்களின் மனதை உருக்கும் நாடகம் நடத்துவதில் ஈடு இணையற்றவர்கள் என்பது பலருக்குத் தெரிந்த விஷயமே. ஆம் ஆத்மி கட்சியின் நாடகங்கள் பலவகைப்படும். முட்டை, தக்காளி எறிதலில் முளைவிட்டு, இங்க் தெளித்து வளர்ந்து, தர்ணாவில் பூத்துக் குலுங்கிய கட்சி அது. ஆனால் இப்போதைய தர்ணாவின் பரிணாம வளர்ச்சி நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் (தற்)கொலை செய்யும் அளவுக்கு கீழ்த்தரமாகியுள்ளதா??

மேலும் சான்றுகள்:

http://zeenews.india.com/news/india/farmer-who-committed-suicide-at-aap-rally-was-in-touch-with-manish-sisodia_1583446.html

https://twitter.com/ANI_news/status/591066028320260096

http://www.hindustantimes.com/india-news/rajasthan-farmer-s-family-members-say-suicide-note-was-not-in-his-handwriting/article1-1340191.aspx

http://timesofindia.indiatimes.com/india/Gajendra-Singhs-death-Family-blames-AAP-brother-says-Kejriwal-responsible/articleshow/47025543.cms

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/farmers-death-gajendra-singhs-family-blame-aap-delhi-administration/articleshow/47024952.cms

 

 

 

Tags: , , , , , , , , , , , , , , ,

 

11 மறுமொழிகள் விவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்

 1. Geetha Sambasivam on April 27, 2015 at 3:21 pm

  உண்மை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். அந்த இடத்தில் சிசிடிவி காமிரா ஏதேனும் இருந்திருந்தால் உண்மை வெளிப்படலாம்.

 2. "Honest Man" on April 27, 2015 at 4:23 pm

  2011-2013 ல் காங்கிரஸ் தான் மத்தியில் ஆட்சியில் இருந்தது அப்போது 39533 (எழுத்தால் முப்பத்து ஒன்பதாயிரத்து ஐநூற்று முப்பத்து மூன்று) விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஏதோ மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் விவசாயிகள் தற்கொலை நடப்பதாக நாடகம் ஆடுகிறார்கள்.

 3. க்ருஷ்ணகுமார் on April 27, 2015 at 8:22 pm

  மிகவும் தர்க்கபூர்வமாகத் தகவல்களைக் கட்டமைத்து இந்த வ்யாசத்தை பகிர்ந்துள்ள ஸ்ரீ கார்கில் ஜெய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  \\ ‘கஜேந்திர சிங்’ என்ற ராஜஸ்தானை சேர்ந்த ஒரு ஏழை விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த இந்தியக் குடிமகனின் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள். \\

  ‘கஜேந்திர சிங்’ என்ற ராஜஸ்தானை சேர்ந்த ஒரு **அன்பர்** தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பல்தொழில்களில் ஈடுபாடுள்ள இந்த அன்பருடைய ஒரு முக்யமான தொழில் விவசாயமும் என்றே தெரிய வருகிறது. அந்த இந்தியக் குடிமகனின் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

  \\ “ஆள் காலியா” அல்லது “போய்ட்டானா” என்பது போல் ‘லடக் கயா’ என்று வினவியது Zee News வீடியோ வில் பதிவாயுள்ளது. \\

  **லடக் கயா**……… தொங்கி விட்டானா……. என்று நேரடியான பொருள். மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட ஏதோ முன்னாலேயே திட்டமிட்ட ஒரு நிகழ்வை ஸ்ரீ குமார் விச்வாஸ் அவர்கள் விசாரிக்குமுகமாகவே தோன்றுகிறது.

  அராஜகம் செய்தல், நாடகமாடுதல்……… இவையெல்லாம் ஆப்புக்கட்சியின் செயல்பாடுகளே என்பது பொதுமக்கள் அறிந்த விஷயம் தான். ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக வேண்டி இந்த அளவுக்கு ஒரு உயிருடன் ஆப்புக்கட்சி விளையாடி அதன் மூலம் க்யாதியை அறுவடை செய்ய முயலும் என்று யாரும் யோசித்திருக்கவும் முடியாது.

  ஸ்ரீ யோகேந்த்ரயாதவ் மற்றும் ஸ்ரீ ப்ரசாந்த் பூஷன் போன்றோர் தரப்பிலிருந்து இந்த சம்பவம் பற்றி இதுவரை ஏன் மௌனம் சாதிக்கப்பட்டு வருகிறது என்பதும் மர்மமே.

  \\ ஏன் தற்கொலை நடந்தபின்பும் கேஜ்ரிவால் 20 நிமிடம் தொடர்ந்து பேசினார்? \\

  மிகவும் இழிவான செயல். ஸ்ரீ கேஜ்ரிவால் இதற்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஆனால் புலீஸ் விசாரணைக்குப் பிறகே முழு விபரங்களும் தெரிய வரும்.

  ஹிந்துத்வ இயக்கங்களின் தரப்பிலிருந்து WAR OF PERCEPTION கடந்த ஒரு வருஷமாக எப்படி கையாளப்பட்டு வருகிறது? பரங்கிய ஆப்ரஹாமிய சர்ச்சுக்கு விலைபோயுள்ள……… தேச விரோத என் ஜி ஓ வலைப்பின்னலின் ஒரு அங்கமாக……. செயல்படும் ஐந்தாம்படையான MAIN STREAM MEDIA வினை ஹிந்துத்வ இயக்கங்கள் சரியான படிக்கு எதிர்கொள்கிறார்களா என்பது கேழ்விக்குறிய விஷயம்.

  பூதாகாரமாக வெகுஜன ஊடகங்கள் முன்வைக்கும் எதிர்மறைக்கருத்துக்கள் திறமையாகவும் ஆழமாகவும் தர்க்கபூர்வமாகவும் மறுதலிக்கப்படாவிட்டால் அது பெரும் பின்னடைவாக இருக்கும்.

 4. kargil Jay on April 27, 2015 at 8:42 pm

  Readers,
  just in case the webpage link does not work, The suicide victim’s webpage is here: http://jaipurisaffe.com/contact_us.html or http://jaipurisaffe.com . You can decide.

 5. kargil Jay on April 28, 2015 at 8:32 am

  நன்றி ஸ்ரீ க்ருஷ்ண குமார் .

  ‘ஒரு பிரஜை’ என்றோ ‘அன்பர்’ என்றோ ஆரம்பிக்காததற்குக் காரணம், நம் அனுமானம் அவர் ஏழை விவ்யசாயி என்பதே. கடைசியில்தான் அவர் பிசினஸ்மேன் என்று ஊர்ஜிதம் பண்ணிவிட்டோமே, அதை ஏன் சொல்லணும்?.

  நீங்கள் சொல்லிய மற்ற திருத்தங்கள் சரியானவை.நன்றி .

 6. சாய் on April 28, 2015 at 10:43 am

  சிங் ஏழை அல்ல,வெற்றிகரமான ஒரு தொழிலதிபர் என்று சமூக வலை தளங்களில் அடிபடுகிறது.
  அவர் இதற்கு முன் காங்கிரஸ் உறுப்பினர்; தற்போது ஆப்புக் கட்சிக் காரர் என்பதும் தெரிய வருகிறது.
  “பிணத்தை வைத்து அரசியல்…” பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது .
  http://www.mediacrooks.com/2015/04/boiling-dead.html
  இன்னும் ஆப்பை நம்பும் படித்த முட்டாள்கள் நம் எல்லோருக்கும் சேர்த்தே ஆப்பு வைக்கிறார்கள்.
  ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் பல பிரச்சினைகளை செய்ய பல அந்நிய மற்றும் உள்ளூர் சிப்பாய்க் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக திரு சுவாமி அவர்களும் கூறி வருகிறார்.
  எது எப்படி போனாலும் ,தங்களிடம் உள்ள அதி நவீன கணிப்பொறியை/தொலைக்காட்சிப்பெட்டியை வைத்து வெகுஜன ஊடகங்களை மட்டும் பார்த்து , அந்தப் பச்சைப்பொய்களை வேத வாக்கியமாக நம்பும் படித்த முட்டாள்கள் என்று விழித்துக் கொள்வார்களோ அன்றைக்குத்தான் காங்கிரஸ் மற்றும் அதன் டூப்புக் கட்சியான ஆப்புக் கட்சியிலிருந்தும் நாட்டுக்கு விடுதலை .

  சாய்

 7. "Honest Man" on April 28, 2015 at 10:48 am

  //////பூதாகாரமாக வெகுஜன ஊடகங்கள் முன்வைக்கும் எதிர்மறைக்கருத்துக்கள் திறமையாகவும் ஆழமாகவும் தர்க்கபூர்வமாகவும் மறுதலிக்கப்படாவிட்டால் அது பெரும் பின்னடைவாக இருக்கும்.//////

  திரு கிருஷ்ணகுமார் அவர்களே! எப்படி மறுதலிக்க வேண்டும்? அதற்கான வாய்ப்புக்கள் என்ன? அப்படி இருந்தால் அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும்? கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா? (குறிப்பு:- பெரும்பின்னடைவு இனிமேல் வரபோவதில்லை. ஏற்கனவே வந்து விட்டது. அதனால்தான் பிஜேபி தமிழ்நாட்டில் தலை தூக்க மறுக்கிறது.) RSS பெயரை கேட்டாலே ஏதோ பாம்பை பாதையில் கண்டது போல மக்கள் அலறுகிறார்கள். காரணம் நம் எதிரிகள் வைக்கும் குற்றசாட்டுகளுக்கு சரியான முறையான ஆணித்தரமான பதில்களை முன் வைக்க (((தமிழ்நாட்டில்))) தகுதியான ஆளில்லை, ஒரே ஒரு பத்திரிக்கையும் இல்லை, ஒரே ஒரு டிவி சேனலும் இல்லை. இவற்றின் மீது கவனம் செலுத்த சம்பந்தப்பட்ட எவருக்கும் அக்கறை இல்லவே இல்லை. எல்லாம் இந்துக்களின் தலை எழுத்து. யாரை நொந்து கொள்ள?

 8. ரங்கன் on April 28, 2015 at 2:42 pm

  // RSS பெயரை கேட்டாலே ஏதோ பாம்பை பாதையில் கண்டது போல மக்கள் அலறுகிறார்கள். //

  இதற்குக் காரணம் 70 வரை நேரு, இந்திரா தான் இந்தியா என்று இருந்தது. அப்போது எனக்கு சிறிய வயது.
  எங்கள் பக்கத்துக்கு வீட்டுக்கார மாமா அதி தீவிர நேரு பக்தர் – அதைவிட அதி தீவிர RSS வெறுப்பாளர் .
  அரக்கன் என்று திட்டுவார். எதிர் வீட்டுக் குழந்தைக்கு உணவு ஓடும்போது அதன் தாயார் ‘ RSS ராக்ஷசன்கிட்டே பிடிச்சு கொடுத்துவிடுவேன் ஒழுங்க சாப்பிடணும் ‘ என்று சொல்லி பார்த்திருக்கிறேன். அதை விட்டு பள்ளிக்குப் போனால் ( 1967 என்று நினைக்கின்றேன் )​ அந்த வாத்யார்கள் ‘ காந்தியைக் கொன்ற பூதம்டா RSS என்றுதான் சரித்திர பாடத்தைச் சொல்லிக் கொடுத்தார்கள். நாங்கள் எல்லாம் அந்த சிறு வயதில் இது ஏதோ பேய் பிசாசு என்று எண்ணி அவஸ்தைப் படுவோம்.

  கல்லூரி முடிந்து சென்னைக்கு வந்து சேர்ந்த போதுதான் RSS பற்றிய உண்மையான செய்திகள் கிடைத்தன. அதுவும் திரும் ரமேஷ் பதங்கே வின் புத்தகத்தைப் படித்த பிறகுதான் தெளிவு ஏற்பட்டது.

 9. க்ருஷ்ணகுமார் on April 28, 2015 at 6:35 pm

  அன்பின் ஸ்ரீ ஹானஸ்ட்மேன்

  \\ திரு கிருஷ்ணகுமார் அவர்களே! எப்படி மறுதலிக்க வேண்டும்? அதற்கான வாய்ப்புக்கள் என்ன? அப்படி இருந்தால் அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும்? கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா? \\

  ஹிந்துத்வ இயக்கங்களிடம் வெகுஜன ஊடகங்கள் வேண்டும். கொஞ்சம் கொஞ்சம் முன்னேற்றம் இதில் காணக்கிட்டுகிறது. ப்ரிண்ட் மீடியாவில் இன்னமும் கிணத்தில் போட்ட கல் தான்.

  சுதர்ஷன் ந்யூஸ் என்று ஒரு ஹிந்தி சேனல் ஹிந்துத்வ சார்பு சேனல்.

  இண்டியா டிவி மற்றும் ஜீ ந்யூஸ் இரண்டு ஹிந்தி சேனல்களும் ஓரளவுக்கு (முற்று முழுதாக இல்லையென்றாலும்) ஹிந்துத்வ சார்புடையவை.

  நாலு ஆங்க்ல சேனல்களும் முற்று முழுதாக பரங்கி சர்ச்சினால் இயக்கப்படுகிறது. காங்க்ரஸுக்கும் கம்யூனிஸ்டுக்கும் சாமரம் வீசுபவை. இவற்றில் பாஜக ஹிந்துத்வ இயக்க சார்பாக பங்கு பெறும் பேச்சாளர்களை தொடர்ந்து பரிசீலிக்க வேண்டும். முதலில் மீனாக்ஷி லேகி, நிர்மலா சீதாராமன் போன்ற வெட்டொன்று துண்டு ரெண்டுன்னு பேசும் …………. கருத்துத் தெளிவுடையவர்கள் இருந்தார்கள்.

  அதுவும் அபிஷேக் மனு சிங்க்வி, மணிசங்கர ஐயர் (இவர் மட்டும் கொஞ்சம் தத்தக்கா பித்தக்கா பேர்வழி) போன்றோரை எதிர்கொள்கையில் கூர்மையாக பதிலளிப்பவர்களும் பதட்டமடையாமல் பதில் சொல்பவர்களும் தேவை.

  தமிழ் சேனலில் தந்தி டீவியும் புதிய தலைமுறையும்………….நடத்துவது விவாதம் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து மட்டும் தான்…………ஒரே சவுண்டு தான். எப்போதாவது தான் பார்ப்பதுண்டு.

  சோஷல் மீடியா ….. வின் ஆளுமையை குறைத்து மதிப்பிடாதீர்கள். வெகு ஜன ஊடகத்துக்கு கொஞ்சமாக வெக்கம் மானம் சூடு சொரணை ………… இதையெல்லாம் அவ்வப்போது உறைக்கும் படிக்கு வெட்ட வெளிச்சமாகச் சொல்வது சோஷல் மீடியா………….அவ்வப்போது இதுகளுக்கு கொஞ்சம் உரைக்கவும் செய்கிறது.

  அரசியல் ரீதியாக இதை எப்படி ஸ்ட்ரேடஜைஸ் செய்வது என்பதனை ………………. ஆழ்ந்த அரசியல் அனுபவம் உள்ளவர்களே தீர்மானிக்க முடியும்……. அந்த அளவு அனுபவம் எனக்கு இல்லை.

  கவலையற்க. ஹிந்துத்வ இயக்கங்கள் அடிபட்டு அடிபட்டுத் தான் கற்றுக்கொண்டு முன்னகர்கின்றன. தமிழகத்தில் ஹிந்துத்வ இயக்கங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம். மிக அதிகம்.

 10. ஜெயக்குமார் on April 28, 2015 at 10:41 pm

  இந்திய அரசியல் கட்சிகளில் மிகவும் கொடூரமான கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது. என்ன செய்தாவது, அதற்கு விலையாக எவ்னோ ஒருவனின் உயிராக இருந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் அளவு கீழிறங்கி உள்ளனர்.

  ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை வெற்று நாடகங்களை மட்டுமே நடத்தி மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு ஆட்சியை பிடிக்கும் வரை வந்துள்ளது.

  அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற தலைவர்களும், காங்கிரஸின் சில தலைவர்களும் சேர்ந்து பாஜகவை வீழ்த்த இந்த புதிய கட்சியை தொடங்கி இறுதிவரை நாடகங்களாலேயே நடத்தி அதன் உச்சகட்டமாக ஒரு கட்சித்தொண்டனயும் கொன்றுள்ளனர்.

  அர்விந்த் கேஜ்ரிவாலின் நடவடிக்கைகள் கண்கானிக்கப்பட வேண்டும். நிதி வரவுகளின் ஆதாரங்களின் மீதும் கண்கானிப்பு தொடர வேண்டும்.

  நாளை ஆட்சியைப் பிடிக்க ஹிந்து முஸ்லிம் கலவரங்களைக்கூட செயற்கையாக உருவாக்கும் அளவு நாடகங்களை நடத்தத்தெரிந்த கீழ்த்தரமான புத்திக்கு சொந்தக்காரர் இந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால்.

  திரு நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கமும், நீதிமன்றமும் டெல்லி போலிஸாரின் உதவியுடன் உண்மையிஅ வெளிக்கொண்டுவருவார்கள் என்பதே நமது நம்பிக்கை.

  அருமையாக நடந்ததை காரண காரியத்துடன் விளக்கிய கார்கில் ஜெய் பாராட்டுக்குரியவர். தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

 11. சான்றோன் on April 29, 2015 at 8:27 pm

  எப்படிப்பட்ட ஈவு இரக்கமற்ற , கொலைகார , பயங்கரவாத கும்பலை ஆட்சியில் அமரவைத்துள்ளோம் என்பதை டெல்லி மக்கள் இனியேனும் உணர்வார்களா என்பது தெரியவில்லை…..

  அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு ……காரணம் , வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்யச்சொன்னாலே அதை பெரிய குற்ற‌ம் போல க‌ருதும் பொறுப்பற்ற‌ சோம்பேறி அரசு அதிகாரிகளையும் , சிறுபான்மையினர் என்ற பெயரில் நீக்கமற நிறைந்துள்ள வங்கதேச அகதிகளையும் கொண்ட மாபெரும் சேரிதான் டெல்லி….

  அடுத்த தேர்தல் வரை காத்திருந்தால் காரியம் கைமிஞ்சிப்போய்விடும்…..அதற்காக ஆட்சியை கலைப்பதிலும் பலனில்லை… ராஜ்ய சபாவில் ஒப்புதல் பெற்றாலும் கூட மேற்குறிப்பிட்ட காரணங்களால் இந்த கும்பலே மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும்…..
  எனவே மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக மூன்று முக்கியமான காரியங்களை செய்யவேண்டும்…

  1. வங்கதேசத்தில் இருந்து டெல்லியில் ஊடுருவியுள்ள அகதிகளை அடையாளம் கண்டு வெளியேற்ற‌வேண்டும்….குறைந்தபட்சம் அவர்களின் ஓட்டுரிமையாவது ரத்து செய்யப்பட‌வேண்டும்….
  2. தன்னார்வத்தொண்டு நிறுவன‌ங்கள் என்ற பெயரில் செயல்படும் தேசவிரோத என்.ஜி.ஓக்களை உடனடியாக தடை செய்யவேண்டும்…. அவர்களின் வங்கிக்கணக்குகளை முடக்கி , அவர்களுக்கு வரும் நிதியை தடை செய்ய வேண்டும்….

  3. ஆம் ஆத்மியின் முன்னணித்த‌லைவர்களன மனிஷ் சிசோடியா உள்ளிட்ட முன்னாள் நக்சலைட்டுகளின் கடந்த கால குற்ற‌ நடவடிக்களை தோண்டி எடுத்து சிறையில் தள்ள வேண்டும்….

  இந்த மூன்றையும் செய்தாலே ஆம் ஆத்மி ஒழிந்துவிடும்….இதைச்செய்யாவிட்டால் தேசம் மிகப்பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும்….

  விஷப்பூண்டுகளை வள‌ரவிடுவது எளிது..அவற்றைஅழிப்பது மிகவும் கடினம்….
  ஆரம்ப காலத்தில் கழகங்களை காமராஜர் மிகக்குறைவாக எடைபோட்டார்… ஜனநாயகம் என்ற பெயரால் வளர அனுமதித்தார்…. ஒரு கட்டத்தில் அவராலேயே அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை… அதன் பலனை தமிழகம் இன்றுவரை அனுபவித்து வருகிறது…

  அதே த‌வறை பாஜகவும் செய்யகூடாது….. கட்சிஅரசியலை விட தேசத்தின் பாதுகாப்பு மிக முக்கியம்….

  எதை முன்னிட்டும் ஆம் ஆத்மி போன்ற தேசவிரோத , பயங்கரவாத கும்பலை வளர அனுமதிக்கக்கூடாது…..

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*