வேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்

வேதங்கள் ஒருகாலத்தில் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தது. எல்லோரும் கற்க வேண்டிய நூலாக வேதங்கள் இருந்தன.

வேதங்களில் வரும் சுலோகம் இது :

ஓம்

யதேமாம் வாசம் கல்ணாணீமாவதானி ஜனேப்ய: I

ப்ரஹ் மராஜன்யாப்யாம் சூத்ராய

சார்யாய ச ஸ்வாய சாரணாய I

ப்ரியோ தேவானாம் தக்ஷிணாயை

தாதுரிஹ பூயாஸமயம் மே காம:

ஸம்ருத்யதாமுப மாதோ நமது II

யஜுர் வேதம் 26-2

மனிதர்களே, இறைவனாகிய நான்,

ப்ரஹ்மராஜன்யாப்யாம் – பிராமணர், க்ஷத்திரியர்

அரியாய  – வைசியர்

சூத்ராய – சூத்திரர்

ச – இவர்களுடன்

ஸ்வயா ச -அவரவர் மனைவி, மக்கள், சேவகர்கள் முதலியோருடன்

அரணாய ச – உத்தம குணங்களோடு கூடிய மிக க்கீழானநிலையில் பிறந்தோர் ஆகவுள்ள

ஜனேப்ய: – மேற்கூறிய எல்லா மனிதர்களுக்குமாக

இஹ – இவ்வுலகில்

இமாம் – என்னால் வெளிப்படுத்தப்பட்டதும்

கல்யாணீம் – இன்பம் தருவதும் ஆகிய

வாசம் – நான்கு வேதரூபமான வாணியை

ஆவதானி – நான் உபதேசம் செய்கின்றேன். அவ்வாறே நீங்களும் நன்கு உபதேசம் செய்வீர்

தாது – தானம் செய்வோர் ஆகிய சத்சங்கத்தினர்

தேவானாம் – வித்வான்களுக்கு

தக்ஷிணாயை – தக்ஷிணை அதாவது தானம் முதலியவற்றை அளிப்பதால்

ப்ரிய: – உலகினரால் விரும்ப ப்படுகின்றவர்

பூயாஸம் – ஆவர்

மே – என்னுடைய

அயம் – இந்த

காம: – விருப்பம்

ஸம்ருத்யதாம் – சிறப்பான முறையில் மேலும்மேலும் நிறைவேறட்டும். அன்றியும்

மா – எனக்கு

அத – இந்த மறைவான சுகம்

உப நமது – காணிக்கையாக வந்து சேரட்டும். நீங்களும் இவ்வாறே செய்து இத்தகைய விருப்பம் நிறைவேறி சுகம் பெறுவீராக.

கருத்துரை : இம்மந்திரம் உபமாலங்காரம். பரமாத்மா எல்லா மனிதர்களுக்கும் உபதேசம் செய்கிறான். நான்கு வேதரூபமான நன்மைகள் நிறையச் செய்கின்ற வேதவாணியை எல்லா மனிதர்களின் நன்மைக்காக நான் உபதேசம் செய்திருக்கின்றேன். நான் விருப்பு வெறுப்பின்றி எல்லோரும் வேண்டியவனாக இருப்பதுபோல் நீங்களும் இருப்பீர். அவ்விதம் செய்வதால் உங்களுக்கு எல்லாச் செயல்களும் வெற்றி அடையும். நிறைவுறும்.

(சுவாமி தயானந்தரின் யஜுர்வேத பாஷ்யத்திலிருந்து)

இப்படி எல்லோருக்கும் அருளப்பட்டதுமான, எல்லோருக்கும் பொதுவானதுமான வேதங்கள் இடையில் ஒரு காலத்தில் வேதம் கேட்பதற்கு சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை இல்லை; அனுமதி இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. கேட்பதற்கே உரிமை இல்லை என்று சொல்லும்போது படிப்பதற்கு நிச்சயமாக அனுமதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்த அவலநிலையைச் சரிசெய்வதற்கு பல்வேறு இந்து சமூக சீர்திருத்த இயக்கங்கள், இந்து சமூக சீர்திருத்தவாதிகள் பாரத தேசத்தில் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருந்தனர். ஸ்ரீராமானுஜர், சுவாமி விவேகானந்தர் என்று இந்து சமூக சீர்திருத்தப் பரம்பரை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தொடர்ந்து இந்து சமூகம் மாறுதலுக்கு உட்பட்டே வந்திருக்கிறது. இந்த மாறுதல்களை சில எதிர்ப்புகளோடு ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறது என்று சொல்லும்போது ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்து சமூகத்தின் பெருவாரியான ஆதரவுகளோடு ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

மறைக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வேதங்கள் எல்லோருக்கும் பொதுவானதாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலை இந்து சமூகத்தில் தோன்றியிருக்கிறது.

நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அறிஞர், மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன் என்பவராவார். வேதங்களோடு கடோபநிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். அவர் தமது “சதபதபிராமணம்’ என்னும் யஜுர்வேத சதபத கதைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூலை, ஹரிஜனப் பெருமக்களின் பாதகமலங்களில் அர்ப்பணம் செய்திருக்கிறார்.

mr_jambunathan-256x300

“ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயஸ்சித்தம் செய்துகொள்ள விரும்புகிறோம் என வாக்குறுதி செய்து இவ்வேத நூலை உங்கள் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள்தான் இவ்வேதங்களைப் படித்து பாரதநாடு மாத்திரமில்லை, பூலோகமுழுவதும் பிரச்சாரம் செய்து மறுபடியும் தர்மஸ்தாபனம் செய்ய வேண்டும்……… இந்நாடு, பூலோகம் முழுவதும் புனிதவேதம் விரிந்து தலையோங்க நீங்களே அதற்கேற்ற கங்கையைக் கொண்டுவர முடியுமென இதை நான் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்” என்று குறிப்பிடுகிறார்.

இதற்கான பெருமுயற்சிகளில் ஆர்யசமாஜம் முதலான இந்து சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஈடுபட்டு வந்திருக்கின்றன. இந்த மாறுதலை இந்து சமூகம் பெருவாரியான ஆதரவோடு ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறது. இதன் நீட்சியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீதத்தாகிரி மகராஜ் ஆஸ்ரம் வேதங்களை எல்லோருக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

entrance

தெலங்கானா மாநிலத்தில் மும்பை நெடுஞ்சாலை அருகில் உள்ள பர்திபூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது ஸ்ரீஸ்ரீஸ்ரீதத்தாகிரி மகராஜ் ஆஸ்ரமம். இந்த ஆஸ்ரமத்தில் ஸ்ரீதத்தாகிரி மகராஜ் வேத பாடசாலை இயங்கி வருகிறது. இந்த ஆஸ்ரமம் 55 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.

Dattagiri Maharaj

இந்த ஆசிரமத்தை உருவாக்கியவர் ஸ்ரீதத்தாகிரி மகராஜ் அவர்கள்.  அவருடைய இயற்பெயர் நாகேந்தரய்யா. இவர் 1922ல் கர்நாடகா, தெலுங்கா எல்லையில் உள்ள மேடக் மாவட்டத்தில் மனூர் பகுதியில் பிறந்தார். சிறிய வயதிலேயே பல சித்தி வேலைகளை கைவரப் பெற்றவர் என்று கருதப்படுகிறது. 12வருடங்களாக தண்ணீர் மட்டுமே பருகி தபஸ்களில் ஈடுபட்டார்.

இந்த ஆசிரமத்தில் தாமாக முன்வந்து வேதபாடசாலையில் சேர்ந்து பயில விரும்புபவர்களுக்கு வேதங்கள் மற்றும் மந்திரங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் அவர்கள் விரும்பினால் அர்ச்சகர்களாக ஆகலாம் என்று கூறுகிறார் அதன் தலைமை குருவாகிய சித்தேஸ்வர சுவாமிஜி அவர்கள்.

Dattagiri Vedic patashala 5

வேத பாடசாலையில் மாணவர்களாக சேர்வதற்கு  மதம் மற்றும் ஜாதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இந்து மதத்தில் வழக்கமாக பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருந்துவருகின்றனர். அந்த மனநிலையை மாற்றுவதற்கான முயற்சியில் இந்த ஆசிரமம் இயங்கிவருகிறது.

இந்த ஆசிரமத்தில் உள்ள வேதபாடசாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மார்பள்ளி மண்டலத்தில் நார்சாப்பூர் பகுதியில் இருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த நவீன் நாய்க் என்னும் மாணவன் வேதங்ளைப் பயின்று வருகிறான். 2015 ஏப்ரல் மாதத்தில் 14 வயதை எட்டியுள்ள நவீன் நாய்க் உயர் ஜாதி ஆதிக்கம் உள்ள இந்தத்துறையில் அர்ச்சகராகப் பணியாற்றத் தொடங்க உள்ளார்.

Dattagiri Vedic patashala 2

குரு சித்தேஸ்வர சுவாமிஜியுடன் நவீன் நாய்க்

நவீன் நாய்க் கூறும்போது, ‘எட்டாம் வகுப்புவரை படித்துள்ளேன். நான் அர்ச்சகராக ஆக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், இந்த ஆசிரமத்துக்கு வரும்வரையில் எங்குமே என்னை அர்ச்சகராக்க எவரும் முன் வரவில்லை. ஏறக்குறைய ஓராண்டாக இந்த ஆசிரமத்தில் பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த வேதபாடசாலையில் படித்து முடிக்க இன்னும் மூன்று ஆண்டுகள் ஆசிரமத்தில் இருப்பேன்’ என்று கூறுகிறார்.

சமுதாயத்தில் மிகவும் அடித்தட்டுப் பின்னணியிலிருந்து நவீன் வந்துள்ளார். அவர் தந்தை ராஜூநாய்க் தினக்கூலித் தொழிலாளி ஆவார். என்றாவது ஒரு நாள் தன் மகன் அர்ச்சகர் ஆவான் என்பதை உறுதிபடுத்துவதற்காக அவரும் சமூக அமைப்பில் போராடி வருகிறார்.

நவீனுக்கு வேதபாடசாலையில் பயிற்றுவித்த குருவாகிய சித்தேஸ்வரா சுவாமிஜி கூறுகையில், எங்கள் மாணவர்களிலேயே மிகவும் திறமையான மாணவன் நவீன். வேகமாக வேதங்களைக் கற்றுக் கொண்டான். இந்த வேதபாடசாலையில் குறிக்கோளாக உள்ள எங்களுடைய நோக்கமெல்லாம் அனைவரும் சமமாக  இருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைப் பருவத்தில் பயில விரும்பும் எவருக்கும் மதம், ஜாதி குறுக்கிடக்கூடாது. தற்பொழுது 60 மாணவர்கள் வேத பாடசாலையில் படித்து வருகிறார்கள். வரும் கல்வி ஆண்டில் மேலும் 30 மாணவர்களை சேர்க்க உள்ளோம். ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும். வேதபாடசாலையில் நான்கு ஆண்டு காலத்துக்கு கற்பிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.

சித்தேஸ்வரா மேலும் கூறும்போது, குழந்தைப்பருவத்திலேயே படிக்கும் ஆர்வம் உள்ளவர்களா என்பதை மட்டுமே தகுதியாக வைத்துள்ளோம். மற்றவையெல்லாம் இரண்டாம்பட்சம் தான். மனிதனிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், படிக்கவேண்டும் என்றால், அதில் என்னவிதமான பொருளாதார பயன் கிடைக்கும் என்று  எண்ணி, அப்படி பொருளாதார பயன் இல்லை என்றால் படிப்பதற்கு முன் வருவதில்லை என்பதுதான்.

அதன்படியே அறிவையும் பெறுகிறான். இங்கு மதம் கற்பிக்கப்படுவதில்லை. மனித நேயம்தான் கற்பிக்கப்படுகிறது. மனிதன் எல்லோருமே இரத்தம், சதை, எலும்பு ஆகியவைகளைக் கொண்ட வர்கள் தான் என்பதைப் புரிந்து கொள்ள வைப்பது தான். எவருமே உயர்ந்தவரும் அல்லர். தாழ்ந்தவரும் அல்லர். இந்த கருத்துகளை குழந்தைகளிடையே கொண்டு சென்று, அவர்கள் வாழ்வில் என்றும் கடைசி வரையிலும் மறவாமல் இதை பின்பற்ற வேண்டும் என்றுதான் கற்பிக்கப்படுகிறது என்று கூறினார்.

வேதபாடசாலையில் கிறித்தவர் மற்றும் முசுலீம் பட்டதாரிகளும் வேதங்களைப் படிக்கும் ஆர்வத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக ஒன்றை மட்டும் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா எப்படி மறுபடியும் எழுச்சி பெறும்? இந்த கேள்வியை சுவாமி விவேகானந்தரிடம் அவருடைய சீடர் கேட்டார்.

Swami_Vivekananda_Jaipur

அதற்கு சுவாமிஜி கூறுகிறார் :’…….இதுவரையில் பிராமணர்கள் சமயத்தைத் தங்கள் கைகளுக்குள் வைத்திருந்தார்கள். காலத்தின் மாறுதலுக்கு முன்னால் அவர்களால் நிற்க முடியவில்லை. எனவே இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருமே சமயத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். அவர்கள் மனத்தில், பிராமணனுக்கு எந்த அளவு சமயத்தில் உரிமை உள்ளதோ அந்த அளவு அவர்களுக்கும் உரிமை உண்டு என்பதை உறுதிப் படுத்துங்கள். நெருப்பைப் போன்று ஆற்றலைத் தரும் இந்த மந்திரத்தைச் சண்டாளர்கள் முதல் அனைவருக்கும் கொடுங்கள். அதோடுகூட அவர்களுடைய வாழ்க்கைக்கு வேண்டிய தேவைகளான வியாபாரம், விவசாயம் முதலியவை பற்றியும் எளிய முறையில் சொல்லித் தாருங்கள். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் உங்கள் கல்வி நாசமாகப் போகவேண்டிய கல்வி. உங்கள் பண்பாடு நாசமாகப் போகவேண்டிய பண்பாடு. நீங்கள் படிக்கும் வேதங்களும் வேதாந்தங்களும் நாசமாகப் போக வேண்டியவை.’

சுவாமி விவேகானந்தர் சொன்னதுதான் இந்து சமுதாயம் செய்ய வேண்டியது. எவ்வளவு விரைவில் செய்துவிட முடியுமோ அவ்வளவு விரைவில் இந்து சமூகம் செய்ய வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் பாரத நாடு முழுவதும் நடைபெற வேண்டும்.

இந்த சமூக சீர்திருத்தத்தை பெருவாரியான இந்துக்கள் ஏற்று வருகிறார்கள் என்பதுதான் சற்று ஆறுதலான விஷயம். இந்த ஆஸ்ரம் போல் பாரத தேசத்தில் உள்ள எல்லா ஆஸ்ரமங்களும் மடங்களும் செயல்பட்டால் நிச்சயம் இந்து சமூகம் மேன்மை அடையும்.

ஆதாரங்கள்

1. http://www.thenewsminute.com/article/how-vedic-school-telangana-breaking-caste-and-religious-barriers

2. http://www.dattagirimahayogi.com/history/dattagiri-maharaj/

3. நூல் : சுவாமி விவேகானந்தருடன் உரையாடல்கள், விவேகானந்த கேந்திரா பிரகாசன் டிரஸ்ட், பக்.49

Tags: , , , , , ,

 

15 மறுமொழிகள் வேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்

 1. கருப்பையா on May 13, 2015 at 2:39 pm

  விடுதலைக்கு நன்றி.

  நல்ல அறியாத தகவல்கள்.

  அருமையான கட்டுரை

 2. Geetha Sambasivam on May 13, 2015 at 2:49 pm

  ஏற்கெனவே தினசரிகள் வாயிலாக இந்தச் சிறுவனைக் குறித்துப் படித்தேன். முழு விபரமும் இன்று அறிந்து கொண்டேன். இத்தகைய தொண்டுகள் மேன்மேலும் தொடர்ந்து வளரட்டும். ஆற்றல் பெருகட்டும். வாழ்த்துகள்.

 3. J Venkat on May 13, 2015 at 4:25 pm

  இந்த சமூக சீர்திருத்தத்தை பெருவாரியான இந்துக்கள் ஏற்று வருகிறார்கள் என்பதுதான் சற்று ஆறுதலான விஷயம். இந்த ஆஸ்ரம் போல் பாரத தேசத்தில் உள்ள எல்லா ஆஸ்ரமங்களும் மடங்களும் செயல்பட்டால் நிச்சயம் இந்து சமூகம் மேன்மை அடையும். —————-நன்றி திரு வெங்கடேசன் அவர்களே. அருமையான கட்டுரை.

 4. Dr.A.Anburaj on May 13, 2015 at 4:30 pm

  எனது குலதெய்வம் திருச்செந்தூா் வட்டம் நயினாா் பத்து அருளமிகு பொனவண்ட அய்யனாா் ஆலயம் ஆகம். 99மூ மக்கள் நாடாா் சாதியினரே தலைக்கட்டு செலுத்தி வருகின்றாா்கள்.ஆனால் இதன் அா்ச்சகா் ஒரு யாதவா். தற்சமயம் புஜை செய்து வரும் புசாாியின் அப்பா மிகந்த சிரமங்களுக்கிடையே புஜை விதிகளைக் கற்று சமஸ்கிருதத்தில் அா்ச்சனை மற்றும் வழிபாடுகளைச் செய்கிறாா்.தன் மகனுக்கும் கற்றுக் கொடுத்துள்ளாா். மகன் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் உதவியுடன் கொஞசம் பயிற்சி பெற்றுள்ளாா். இழந்ததைப் பெற வேண்டும். பிற சாதி மக்களுக்கு மறுக்கப்பட்ட சமய கல்வியை வலிந்து பெற வேண்டும்.

 5. இராஜராஜன் on May 13, 2015 at 6:09 pm

  வேதங்கள் இந்த கட்டுரையை இயற்றியவர் அனேகமாக பார்ப்பனராக இருப்பார். இல்லையென்றால் அவரால் ஆரிய பார்ப்பனிய இந்து மதத்தின் சகல நூல்களை கற்க முடியாது. இதை அமல்படுத்தும் வகையில் புராணங்கள் சான்றுகள் உள்ளன. இராமாயணத்தில் இராமர் ஒரு சூத்திரன்யாகம் செய்வதை இராமர் அவனை கொலை செய்த தவிர்ப்பார். இச்எ

 6. க்ருஷ்ணகுமார் on May 13, 2015 at 6:19 pm

  வேதாத்யயனம் செய்யும் ஸ்ரீ நவீன் நாயக் என்ற அந்தக் குழந்தையின் முகத்தில் கல்விக்களை சொட்டுகிறது. சாந்த முகபாவம்.

  மிக அருமையான வ்யாசம்.

  தஷிண பாரதத்தில் அனைத்து சமூஹத்தினருக்கும் வேதம் கற்றுத் தரும் பணியினை ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி அவர்களது ஆச்ரமும் ஸ்ரீ ராமக்ருஷ்ண மடமும் நெடுநாட்களாகச் செய்து வருகின்றன. தமிழகத்தில் ஸ்வாமி சித்பவானந்தா அவர்களது ராமக்ருஷ்ண தபோவனத்திலும் அனைத்து மக்களுக்கும் வேதம் கற்றுத்தரப்படுவதாக அறிகிறேன். ஸ்வாமி தத்தகிரி மகராஜ் அவர்களது ஆச்ரமத்திலும் இச்செயல்பாடு என இன்னொரு ஸ்தாபனத்தைப் பற்றி அறிதலில் மகிழ்ச்சி.

  உத்தரபாரதம் முழுதிலும் ஆர்ய சமாஜத்தினர் பல தசாப்தங்களாக அனைத்து மக்களுக்கும் ……………. குறிப்பாக இருபாலருக்கும்………… வேதம் கற்றுத்தருகின்றனர்.

  யோக குரு ஸ்வாமி ராம்தேவ் மஹராஜ் அவர்கள் ஆர்ய சமாஜத்திலிருந்தே வேதாத்யயனமும் சம்ஸ்க்ருதமும் கற்றவர்.

 7. sridhar on May 13, 2015 at 6:36 pm

  arpudham. thodarattum indha melaana pani.

 8. Rama on May 14, 2015 at 7:26 am

  @இராஜராஜன்
  New troll on the block!

 9. Ramesh Srinivasan on May 14, 2015 at 1:02 pm

  முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். விஜயவாடாவுக்கு வடக்கே, அனைவரும் கடவுளைத் தொட்டு வணங்கலாம். ஆனால் பூஜை சமயங்களில் மட்டும் பரம்பரைப் பூசகர்கள் பூஜை செய்வார்கள். ஆனால் கிருஷ்னைக்குத் தெற்க்கே, பரம்பரைப் பூசகர்கள் மட்டுமே பூஜை செய்வார்கள். இரண்டு, இந்தப் பரம்பரைப் பூசகர்கள் எல்லாம் அந்தணர்களாக இருந்தாலும், எல்லா அந்தணர்களும் கருவறை நுழைய முடியாது. அது மட்டும் இன்றி, இந்த பூசகர்கள் அந்தணர்களில் கீழ் சாதியாகவே பார்க்கப் படுகிறார்கள். அவர்களுக்கு பெண் கொடுப்பதும், எடுப்பதும் கிடையாது. ஆனால், இந்தப் பரம்பரை பூசகர்கள்தான் கோவிலை
  விடாது காத்து வந்திருக்கின்றனர். படை எடுப்பின்ப்து சிலைகளைத் தூக்கிக் கொண்டு ஒட்டிப் பாதுகாத்துள்ளனர். ஆகவே யார் வேண்டுமானாலும் பூசை செய்வது வேறு. கோவிலை பரம்பரையாய்ப் பாதுகாத்து, வருமானம் இல்லாதபோதும் கைவிடாது பாதுகாப்பது வேறு. ஆகவே எந்த மாற்றமும் முழுமையாக இருக்க வேண்டும்.

 10. S.Subramaniam on May 14, 2015 at 1:17 pm

  திரு ராஜராஜன், எனக்கு தெரிந்த வரை இந்த கட்டுரையை எழுதிய திரு வெங்கடேசன் அவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர். அவர் ஈ வே ரா வின் மறுபக்கம் என்ற நூலையும் எழுதி உள்ளார்.

 11. g ranganaathan on May 16, 2015 at 4:21 pm

  இறை வனை அறிய ஜாதி ஒரு தடையில்லை என்பது ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் வாழ்க்கையாலே அறியலாம் . தமிழ்நாட்டில் திராவிட விஷ கிருமிகளால் பரப்ப பட்ட சம்ஸ்க்ருத வெறுப்புணர்வு இரு தலைமுறைகளை அழித்து விட்டது . சம்ஸ்க்ருத பாரதி நடத்தும் வகுப்புகளில் பாடம் நடத்துபவர்கள் பெரும்பான்மையினர் பிராமணர்கள் அல்லர் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நல்ல முயற்சி நாடெங்கும் பரவ வேண்டும்

 12. N.Subramanian on May 16, 2015 at 4:39 pm

  அறிஞர், மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன் என்பவராவார். வேதங்களோடு கடோபநிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். அவர் தமது “சதபதபிராமணம்’ என்னும் யஜுர்வேத சதபத கதைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூல் இப்பொழுது எங்கு கிடைக்கும் என்று தெரிவிக்கவும்
  நன்றி

 13. Dr.A.Anburaj on May 19, 2015 at 3:10 pm

  அன்புள்ள Ramesh Srinivasan வணக்கம். ஒவவொரு சாதியிலும் பொருளாதாரத்தில் உயா்கல்வியில் முன்னேறியவா்கள் பின்தங்கியவர்களை மதிக்காமல் நடப்பதற்கு கடவுள் தத்துவம் காரணமல்ல.நான் சாா்ந்த நாடாா் சமூகத்தில் பனை ஏறம் மக்களை மற்றவா்கள் -நிலஉடைமை நாடாா்கள் மதிக்காமல் ” தீண்டாமை” கடைபிடித்து வருகின்றாா்கள்.பனைஏறியவர்கள் எல்லாம் பனை தொழிலை துறந்துவிட்டு பிற தொழில்கள் செய்து இன்று பொருளாதாரத்திலும் கல்வியிலும் மிகவும் முன்னேறிவிட்டாா்கள். விளைவு பனைஏறி முன்னோா்கள் குடும்பத்தில் நிலஉடைமை நாடாா்கள் பெண் கொடுக்க எடுக்க முன்வந்து விட்டாா்கள்.அதுபோல் கொவ்வொறு சாதியிலும் இதுபோன்ற நிலைமைகள் உள்ளது. ஒரு பொிய சிவாலயத்தில்- திருநெல்வேலிக்கு 46 கிமீ தள்ளி உள்ளது – புசை செய்யும் பிறாமண பையன்கள் 7 பேருக்கு பெண் கிடைக்கவில்லை.எனெனில் அா்ச்சகராகப் பணியாற்றும் பிறாமணா்களை திருமணம் செய்ய பிறாமண பெண்கள் விரும்புவதில்லை. மேற்படி 7 பேருக்கும் சொந்த வீடு, விவசாய நிலங்கள் மற்றும் வருமானம் போதிய அளவில் உள்ளது-மாதம் ரூ 25000).இருப்பினும் பெண் கிடைக்கவில்லை. ஒவ்வொரு இந்தியன் உள்ளத்திலும் இந்துவின் உள்ளத்திலும் ” விவேகானந்த தீபத்தை” ஏற்ற வேண்டும்.அது அற்புதம் செய்யும்.

 14. Dr.A.Anburaj on May 19, 2015 at 3:27 pm

  திருநெல்வேலி மாவட்டம் உவாி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் ஏராளமான இந்துக்களுக்கு குல குடும்ப தெய்வமாக உள்ளது. இக்கோவில் தயாதிகள் யாரும் மதம் மாறிப் போகவில்லை. இந்த கோவிலை நிா்வகிப்பது நாடாா் குடும்பமே இருப்பினும் வழிபாடு உாிமை அனைவருக்கும் உண்டு. பிற்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் இது போன்ற ஆலயங்களுக்குச் செல்லும் பழ்க்கத்தை உருவாக்க வேண்டும். இங்கு அா்ச்சகா்கள் உண்டு. ஆனால் தீண்டாமை கிடையாது.மிகுந்த தெய்ச சாந்தியத்தை இந்த ஆலயத்தில் உணரலாம். பிறாமணம்கள் வெறுப்பு என்பது என்றம் பலன் தராது என்பதை இன்று அனைவரும் உணா்ந்துள்ளாா்கள்.

 15. Ranga on May 24, 2015 at 9:21 pm

  அருமையான பதிவு. இது போன்று தமிழகத்தில் இருக்கின்றனவா என்பதை பற்றியும் விரிவாக எழுதுமாற வேண்டுகிறேன்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*