கம்பராமாயணம் – 66 : பகுதி 2

கம்பராமாயணம்-66 முழுவதையும் மின்-நூல் வடிவில் pdf கோப்பாக இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

ravivarma_rama_sita_lakshmana_small

ஆரணிய காண்டம்

சாப விமோசனம் பெற்ற விராதன் என்ற அரக்கன் இராமனைத் துதித்தல்

தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகின், ஐய!
நீ அறிதி எப்பொருளும்; அவை உன்னை நிலை அறியா;
மாயை இது என்கொலோ? வாராதே வர வல்லாய். (23)

(அடியார்க்கு) வருதற்கு அரியவர் போலிருந்து மிக எளியவர்போல் வரும் வல்லமை உடையவனே! தன் தாயைத் தெரிந்து கொள்ளாத கன்று இல்லை. அதுபோல் தாயும் தன் கன்றை அறிந்து கொள்ளும். ஐயா! எல்லா உலகங்களுக்கும் தாய் ஆனதால் எல்லாப் பொருள்களையும் நீ அறிகிறாய். ஆனால் அப்பொருள்கள் உன் தன்மையை அறிவதில்லை. இது என்ன மாயமோ?

தண்டகாரண்யத்து முனிவர்கள் அரக்கரால் ஏற்படும் அல்லலைச் சொல்லுதல்

‘உருளுடை நேமியால் உலகை ஓம்பிய
பொருளுடை மன்னவன் புதல்வ! போக்கிலா
இருளுடை வைகலெம்; இரவி தோன்றினாய்;
அருளுடை வீர! நின் அபயம் யாம்’ என்றார். (24)

(உருளுடை – சுற்றிச் செல்லும்; நேமி – சக்கரம்; வைகல் – நாட்கள்)

எங்கும் சுற்றிச் செல்லும் ஆணைச் சக்கரத்தால் உலகம் முழுவதையும் காத்த தசரதனின் புதல்வனே, நீக்கமுடியாத துன்பமாம் இருள் கொண்ட நாட்களை உடையவர்களாயிருக்கிறோம். கதிரவன் போல நீ வந்து எழுந்தருளினாய். அருளுடைய வீரனே, உனக்கு நாங்கள் அடைக்கலம் என்று (அம்முனிவர்கள்) கூறினர்.

இராமன் முனிவர்களுக்கு அபயம் அளித்துக் கூறுதல்

‘ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும்,
யாவர்க்கு ஆயினும் எளியவர்க்கு ஆயினும்,
சாவப் பெற்றவரே, தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார். (25)

(ஆ – பசு; தகை வான் – பெருமை மிக்க விண்ணுலகம்)

“பசுக்களைக் காப்பதற்கானாலும், தவம் உடைய அந்தணர்களைக் காப்பதற்கானாலும், ஏழைகளைக் காப்பதற்கானாலும், எவர்களைக் காப்பதற்கானாலும், உதவி செய்து, அதனால் இறக்கப் பெற்றவர்களே விண்ணுலகில் வாழும் தேவர்களும் தொழுது வணங்கக் கூடிய தேவர்களாவர்”.

அகத்திய முனிவரை சந்தித்து ஆசி பெறுதல்

நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான்;
அன்று, அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால்,
‘நன்று வரவு’ என்று, பல நல் உரை பகர்ந்தான்-
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான். (26)

(நெடியோன் – திருமாலாகிய இராமன்; தழீஇ – தழுவிக் கொண்டு; பகர்ந்தான் – கூறினான்; இயம்பி – கூறி; இசை – புகழ்)

அங்ஙனம் நின்ற அகத்தியரை, அங்கே வந்த இராமன் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான். அப்பொழுது, எக்காலத்தும் உள்ளதாகிய இனிய தமிழின் இலக்கணங்களைக் கூறிப் புகழ் பெற்ற அகத்திய முனிவரும், இன்பக் கண்ணீர் விட்டவராய் அன்பினால் தழுவிக் கொண்டு, ‘நல்வரவு’ என்று பல நல்லுரைகளை இனிதாகச் சொன்னார்.

மூக்கை இழந்த சூர்ப்பணகை கரனிடம் புலம்புதல்

‘கண்டு நோக்கரும் காரிகையாள் தனைக்
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் விழுந்தேனை, வெகுண்டு அவர்
துண்டம் ஆக்கினர் மூக்கு‘ எனச் சொல்லினாள். (27)

(காரிகையாள் – பெண்; கோக்கு – அரசனுக்கு; விண்டு – பாய்ந்து)

எங்கும் காண இயலாத அழகுடைய அப்பெண்ணை (சீதையை), இலங்கையில் வாழும் அரக்கர்க்கு அரசனான இராவணனுக்காக எடுத்துக் கொண்டு போவேன் என்று சொல்லி, அவள் மேல் பாயக் கிளம்பிய என்னை, அந்த இராமலக்குவர்கள் சினந்து, என் மூக்கை அறுத்தார்கள் என்று கூறினாள்.

மாரீசன் இராவணனுக்கு புத்திமதி கூறுதல்

நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார், நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று ஒருவற்காய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர் தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார் எவர்? ஐயா! (28)

(நாரம் – அன்பு; வாரம் – வரி; தாரம் – மனைவி; ஈரும் – அழிக்கும்; கண்டகர் – கொடியவர்)

“தம் மீது அன்பு பூண்டவர்களின் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்கள், நீதி நெறிக்குப் பொருந்தாத வரிப் பொருளைக் குடிமக்களை வருத்திப் பெற்றவர்கள், பிறர் ஒருவருக்கு உரிமையாய் அவர் இல்லத்திலே வாழும் மனைவியை வசப்படுத்திக் கொண்டவர்கள் எனப்படும் இவர்களை தருமமே சின்னா பின்னமாக்கி அழித்து விடும் என்று நீ அறிவாய். ஐயா, கொடியவர்கள் எவர் தப்பிப் பிழைத்துள்ளார்?’

இராமனும் சீதையும் மாயமானைப் பார்த்தல்


நோக்கிய மானை நோக்கி, நுதி உடை மதியின் ஒன்றும்
தூக்கிலன், ‘நன்று இது ‘என்றான்; அதன் பொருள் சொல்லல் ஆகும்;
சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது, தேவர் செய்த
பாக்கியம் உடைமை அன்றோ! அன்னது பழுது போமோ? (29)

(நுதி – கூர்மை; தூக்கிலன் – சீர்தூக்கிப் பார்க்கவில்லை; சேக்கையின் அரவு – பாம்புப் படுக்கை)

எதிரில் விழித்து நின்ற மாயமானைக் கண்டபின், இராமன் கூரிய அறிவின் துணை கொண்டு எதனையும் சீர்தூக்கிப் பார்க்கவில்லை. “மான் மிக அழகியது” என்று தானும் கூறினான். அதன் பொருளைச் சொல்லவும் ஆகுமோ? அரவணைத் துயிலில் இருந்து நீங்கி மண்ணுலகில் வந்து பிறந்தது தேவர்கள் ஆற்றிய புண்ணியம் அல்லவா? அப் புண்ணியம் வீணாகிப் போகுமோ?

இராமன் அம்பினால் மாய மாரீசன் கதறி வீழ்ந்து மடிதல்

நெட்டு இலைச் சரம் வஞ்சனை நெஞ்சு உறப்
பட்டது; அப்பொழுதே பகு வாயினால்
அட்ட திக்கினும் அப்புறமும் புக
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன். (30)

நெடிய இலை வடிவம் கொண்ட இராமனின் அம்பு வஞ்சகம் நிரம்பிய (மாரீசன்) நெஞ்சில் சென்று தாக்கியது. அந்தக் கணமே, பிளவுபட்ட வாயினால் எட்டுத் திசைகளிலும் அதற்கு அப்பாலும் (சீதா லட்சுமணா என்று) கூவி மலை விழுவது போல (தன் இயற்கை வடிவம் கொண்டு) வீழ்ந்தான்.

சீதையைத் தேடிவரும் இராமலக்குவரிடம் வீழ்ந்து கிடக்கும் ஜடாயு கூறுதல்

“வடுக்கண், வார் கூந்தலாளை, இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை, எதிர்ந்து, எனது ஆற்றல் கொண்டு
தடுத்தனென், ஆவது எல்லாம்; தவத்து, அரன் தந்த வாளால்
படுத்தனன்; இங்கு வீழ்ந்தேன்; இது இன்று பட்டது ‘‘ என்றான். (31)

(வார் – நீண்ட; ஏகுவானை – செல்பவனை; அரன் – சிவபெருமான்; படுத்தனன் – வெட்டி வீழ்த்தினான்)

“மாவடுப் பிளந்தது போன்ற அழகிய கண்களையும், நீண்ட கூந்தலையும் உடைய சீதையை இராவணன் நிலத்தோடு எடுத்துக் கொண்டு செல்லும் போது, அவனை எதிர்த்து, எனது ஆற்றலின் துணை கொண்டு, ஆன மட்டும் தடுக்க முனைந்து போர் செய்தேன். இறுதியில் அவன் தவ வலிமை கருதிச் சிவபெருமான் அவனுக்கு அளித்திருந்த வாளினால் என்னை வெட்டி வீழ்த்தினான். இங்கே விழுந்து விட்டேன். இன்று இவ்வாறு நிகழ்ந்தது” என்று (சடாயு) கூறினான்.

இராமன் நீர்க்கடன் செய்ய, ஜடாயு மோட்சம் அடைதல்

மீட்டு இனி உரைப்பது என்னே? விரிஞ்சனே முதல மேல், கீழ்,
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம்;
பூட்டிய கைகளால், அப் புள்ளினுக்கு அரசைக் கொள்க என்று,
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே! (32)

(மீட்டு – இனிமேல்; விரிஞ்சனே – பிரம்மனே; பூட்டிய – இணைத்த; புள்ளினுக்கு அரசு – பறவைகளின் அரசனாகிய ஜடாயு; ஊட்டிய – உண்ணக் கொடுத்த; ஐயன் – திருமால்)

இனிமேல் வேறு என்ன சொல்ல வேண்டும்? பிரமனை முதலாகக் கொண்டு உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எடுத்துக் காட்டப் பட்ட எல்லா உயிரினங்களும் (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தி மகிழ்ந்தவை போலாயின. அந்தப் பறவைகளுக்கு அரசனாகிய ஜடாயுவைக் கருதி ‘ஏற்றுக் கொள்க’ என்று கூறி, தன் கைகளை இணைத்து இராமன் சமர்ப்பித்த அந்த நல்ல நீர், அனைத்து உயிர்களுக்கும் இறைவனாகிய திருமால் (தானே) உட்கொண்ட நீரைப் போன்றதாயிற்று.

இராமனால் வதைபெற்று சாப விமோசனம் அடைந்த கபந்தன் துதி செய்தல்


ஈன்றவனோ எப்பொருளும்? எல்லைதீர் நல் அறத்தின்
சான்றவனோ? தேவர் தவத்தின் தனிப்பயனோ?
மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ?
தோன்றி, அருவினையேன் சாபத் துயர் துடைத்தாய்! (33)

(சான்றவனோ – சாட்சியோ; கவடு – கிளை, பிரிவு)

எல்லாப் பொருள்களையும் படைத்தவன் நீதானோ? முடிவில்லாத நல்ல அறத்துக்குச் சாட்சியாக இருப்பவன் நீதானோ? தேவர்கள் மேற்கொண்ட தவத்தின் ஒப்பற்ற பயனாக இருப்பவன் நீதானோ? (பிரமன், திருமால், சிவன் என்ற) மூன்று பிரிவாகக் கிளைத்து எழுந்த மூலப் பரம்பொருள் நீதானோ? நான் இருக்குமிடத்துக்கே நின் எளிமையால் வந்து காட்சியளித்து, போக்குதற்கு அரிய வினையுடைய என் சாபத்தின் துன்பத்தைத் தீர்த்து விட்டாய்.

sugriva_fighting_vali

கிட்கிந்தா காண்டம்

அனுமன் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளல்

‘மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன். (34)

(மஞ்சு – மேகம், நளிர் இரும் – குளிர்மிக்க; தேம்பா – வாடாத; கஞ்சம் – தாமரை; செய்ய – சிவந்த)

“நீலமேகம் போலத் திரண்டு அமைந்த அழகிய மேனியனே! காணும் பெண்கள் யாவர்க்கும் நஞ்சு என்று சொல்லத் தக்கதாகி, குளிர்மிக்க பனியிலும் வாடாத தாமரை மலர்கள் போன்று சிவந்த கண்களை உடையவனே! நான் வாயுதேவனுக்கு அஞ்சனா தேவியின் வயிற்றில் பிறந்தேன். என் பெயர் அனுமன்”.

இராமனைக் கண்டு சுக்கிரீவன் வியத்தல்


தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ;
ஆறுகொள் சடிலத்தானும், அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது ‘என்றே. (35)

(ஆறு – கங்கை; சடிலத்தான் – சடைமுடியன்; அயன் – பிரமன்)

“தேவர்களுக்கு எல்லாம் கடவுளாகிய தேவதேவனே, (திருமாலே) தம் உருவம் மாறி, இந்தப் பிறவியை எடுத்து, மானிடர் ஆகி வந்திருக்கிறார். அதனால், கங்கையைச் சடையில் கொண்ட சிவபிரானும், பிரமனும் என்று இவர்கள் முதலாக வெவ்வேறாக உள்ள தேவர் கூட்டத்தையெல்லாம் மனித குலம் வென்றுவிட்டது அல்லவா?” என்று தெளிந்தான்.

சுக்கீரவன் வாலியால் தனக்கு நேர்ந்த துன்பம் கூறி சரண்புகுதல்

‘முரண் உடைத் தடக்கை ஓச்சி, முன்னவன், பின் வந்தேனை,
இருள் நிலைப் புறத்தின் காறும், உலகு எங்கும் தொடர, இக் குன்று
அரண் உடைத்தாக உய்ந்தேன்; ஆர் உயிர் துறக்கலாற்றேன்,
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம் ‘என்றான். (36)

(முரண் உடை – வலிமையுடைய; தடக்கை – பெரிய கை; ஓச்சி – ஓங்கி; காறும் – வரையிலும்; அரண் – பாதுகாப்பு; உய்ந்தேன் – பிழைத்தேன்)

வலிமையுடைய பெரிய கையை ஓங்கிக் கொண்டு, என் அண்ணன் வாலி, அவனது உடன்பிறந்த தம்பியாகிய என்னை இருட்டுக்கு இருப்பிடமாகிய இவ்வுலகத்திற்கு அப்புறம் வரையிலும், உலகெங்கும் பின்தொடர்ந்து துரத்த, இம்மலையையே பாதுகாப்பாகக் கொண்டு உயிர் பிழைத்தேன். உயிரை விடுவதற்கும் முடியாதவனாகிய நான், உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குரிய தருமம் என்றான்.

இராமன் சுக்கிரீவனிடம் நட்புப் பூண்டு அபயம் அளித்தல்

‘மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என் இன் உயிர்த் துணைவன் ‘என்றான். (37)

(செற்றவர் – வருத்தியவர்; கிளை – உறவு, சுற்றம்)

சுக்கிரீவனே! மேலும் இனிச் சொல்ல என்ன இருக்கிறது? விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உன்னை வருத்தியவர் என்னை வருத்தியவராவர். தீயவராகவே இருந்தாலும் உன்னோடு நட்புக் கொண்டவர்கள் எனக்கும் நண்பராவர். உன் உறவினர் எனது உறவினராவர். என் அன்புள்ள சுற்றத்தினர் உனக்கும் சுற்றத்தினராவர். நீ எனது இனிய உயிர் போன்ற நண்பன்’ என்றான்.

வாலி தன் மீது பட்ட அம்பில் இராமநாமத்தைப் பார்த்தல்

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான். (38)

(மும்மை சால் – மூன்றாகப் பொருந்திய; தமர்க்கு – தம்மவர்களுக்கு; நல்கும் – அளிக்கும்; பதத்தை – சொல்லை; இம்மை – இப்பிறவி; செம்மை – சிறப்பு)

மூன்று என்னும் தொகை பொருந்திய உலகங்கள் யாவற்றிற்கும் (வானம், பூமி, பாதாளம்) ஆதாரமாக உள்ள மந்திரத்தை, தன்னை வழிபடும் அடியார்களுக்கு முழுவதுமாகத் தன்னையே அளிக்கும் ஒப்பற்ற சிறப்பு மிக்க சொல்லை, இந்தப் பிறவியிலேயே எழுவகைப் பிறப்புக்களாகிய நோய் வராமல் தடுக்கும் மருந்தை, இராமன் என்ற சிறப்புப் பொருந்திய திருநாமத்தை தன் கண்களினால் (அந்த அம்பில்) தெளிவாகப் பார்த்தான்.

வாலி இராமன் மீது குற்றம் சாட்டுதல்

‘வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று; பகை அன்று; பண்பு ஒழிந்து
ஈரம் அன்று இது; என் செய்தவாறு நீ? (39)

இராமா! (நீ செய்த இச்செயல்) வீரம் அன்று. விதிமுறைக்கு ஒத்ததும் அன்று. உண்மையைச் சார்ந்ததும் அன்று. உனக்கு உரிய இப்பூமிக்கு என் உடல், சுமையும் அன்று. உனக்கு நான் பகைவனும் அல்லன். (அங்ஙனமிருக்க), நீ உன் பெருமைக் குணம் நீங்கப் பெற்று இரக்கம் இல்லாமல் இச்செயலைச் செய்தது எதற்காக?

இராமன் வாலிக்கு விடையிறுத்து அறநெறியின் தன்மை கூறுதல்

‘இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்;
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி ‘என்றான் மனு நீதியான். (40)

(இனையது – இத்தன்மையது; வினையினால் – செயல்களால்; அனைய – அப்படிப்பட்ட)

“(நான் இதுவரை கூறியபடி) உண்மை இத்தன்மையது ஆதலால், எந்தக் குலத்தில் பிறந்தவராயினும், அவர்கள் எல்லோர்க்கும், மேன்மையும் கீழ்மையும் அவரவர் செய்யும் செயல்களாலேயே வரும். (வானர குலத்தில் பிறந்திருந்தாலும், உனது பெரும் அறிவால்) அதை நீ நன்கு உணர்ந்திருந்தும், பிறன் மனைவியின் கற்பு மாண்பினை அழித்தாய்” என்று உரைத்தான், மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்.

பிழையுணர்ந்த வாலி இராமாவதார தத்துவத்தை சுக்கிரீவனுக்கு உணர்த்துதல்

‘மறைகளும், முனிவர் யாரும், மலர் மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும் துணிபொருள், தனி வில் தாங்கி,
அறை கழல் இராமன் ஆகி, அற நெறி நிறுத்த வந்தது;
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய்! (41)

(துறைகளின் – சாத்திரங்களின்; அறைகழல் – ஒலிக்கின்ற கழல் [கழல் என்பது ஆடவர் காலில் அணிவது]; இறை – சிறிதும்; சங்கை – சந்தேகம்)

வேதங்களும், எல்லா முனிவர்களும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும், மற்ற சாத்திரங்களின் முடிபுகளும் தேர்ந்து சொல்லுகின்ற பரம்பொருள், (பகைவரைத்) தண்டிக்கும் வில்லை ஏந்திக் கொண்டு, ஒலிக்கின்ற கழலணிந்த இராமனாக, உலகில் அறநெறியை நிலை நிறுத்துவதற்காக அவதரித்துள்ளது. ஆலோசனையில் சிறந்தவனே! இந்த உண்மையை ஒரு சிறிதும் சந்தேகம் இல்லாமல் மனத்தில் கொள்வாய்.

அங்கதனை இராமன் ஏற்றுக் கொள்ள வாலி பரமபதம் அடைதல்

தன் அடி தாழ்தலோடும் தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி, ‘நீ இது பொறுத்தி ‘என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். (42)

(தாழ்தலோடும் – வணங்கியதும்)

(அங்கதன்) தன் திருவடிகளில் விழுந்து வணங்கிய அளவில் தாமரைக் கண்ணனாகிய இராமன் (அவனை அடைக்கலமாகக் கொண்டதற்கு அறிகுறியாக) தனது அழகிய உடைவாளை நீட்டி, ‘நீ இதனை ஏற்றுக் கொள்வாய்’ எனப் பணித்தான்; ஏழுலகங்களும் இராமனைத் துதித்தன. வாலி தனது பூத உடலை விட்டு, இறந்து, வானுலகிற்கும் அப்பாற்பட்டதான உயர்ந்த மோட்சத்தை அடைந்தான்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

கம்பராமாயணம் – 66 (தேர்ந்தெடுத்த அறுபத்தாறு பாடல்கள்)

தொகுப்பு, உரை: ஜடாயு

kambar1கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய தமிழின் ஒப்புயர்வற்ற காவியமான கம்பராமாயணத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. இதனை முழுவதுமாக அல்லது பகுதிகளாகக் கூடக் கற்பது என்பது, தொடர்ந்த வாசிப்பையும், உழைப்பையும் கோரும் ஒரு பணியும், ஒரு வாழ்நாள் முழுவதற்குமான கல்வியும், நற்பேறும் ஆகும். பல்வேறு பணிகளுக்கிடையில் அதனை மேற்கொள்ளுதல் என்பது ஆர்வமுடையவர்கள் பலருக்கும் கூடக் கடினமான ஒன்று.

இந்த மிகச் சிறிய தொகுப்பு, கதைப் போக்கின் தொடர்ச்சியையும், முக்கியமான கட்டங்களையும் பாடல்கள் தரும் உணர்வெழுச்சியையும் கருத்தில் கொண்டு, இராமகாதையின் அமுதச் சுவையை முதல்கட்டமாக அறிமுகப் படுத்தும் நோக்கில் செய்யப் பட்டுள்ளது.

இராமாயண பாராயணம் என்ற வகையில் பக்தியுணர்வுடன் இப் பாடல்களை ஓதிப் பயன்பெறலாம். கதைச் சொற்பொழிவுகளில் எடுத்தாளலாம். தமிழார்வம் உள்ள குழந்தைகள் இந்தப் பாடல்களை மனப்பாடம் செய்ய ஊக்குவிக்கலாம்.

இப்பாடல்களை எனது 6 மணி நேர இராமாயண உரையிலும் அந்தந்த இடங்களில் கூறி விளக்கியுள்ளேன்.

கம்பராமாயணம் முழுவதும் உரையுடன் tamilvu இணையதளத்தில் கிடைக்கிறது. பெங்களூர் கம்பராமாயண வாசிப்பு இயக்கம் வாரந்தோறும் நடத்தும் வகுப்புகளின் முழுமையான வீடியோ பதிவுகள் யூட்யூபில் கிடைக்கின்றன.

கம்பராமாயணத்தை விரிவாகக் கற்க அனைவருக்கும் இது ஒரு தூண்டுகோலாக அமையட்டும்.

One Reply to “கம்பராமாயணம் – 66 : பகுதி 2”

  1. ஐயா வணக்கம். மீண்டும் மீண்டும் படிக்க படித்தனை மனப்பாடம் செய்ய தூணடும் அருமையான பாடல்களின் தொகுப்பு.இராமனை தாயாக்கிய விளக்கம் அற்புதம். நன்றி பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *