தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!

அமிதாப் தாகுர்- நூதன் தாகுர் தம்பதி
அமிதாப் தாகுர்- நூதன் தாகுர் தம்பதி

அரசியல் அதிகார மமதையில்  குடிமைப்பணி அதிகாரிகளை இஷ்டத்துக்கு பந்தாடும் போக்கு சில மாநிலங்களில்  அதிகரித்து வருகிறது.  ஐஏஎஸ் அதிகாரிகளும் ஐபிஎஸ் அதிகாரிகளும் தான் நாட்டின் நிர்வாக இயந்திரத்தில் முக்கிய அச்சாணிகள். சமீபகாலமாக அரசியல் அரைவேக்காடுகளால் இந்த நிர்வாகப் பதவிகள் கேலிக்கூத்தாகி வருகின்றன.  இது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

நமது ஜனநாயகம் என்னும் மண்டபம் நான்கு தூண்களின் மீது நிற்கிறது. முதலாவது தூண் சட்டத்தை நிறைவேற்றும் நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களும். இரண்டாவது தூண் நிர்வாகத் துறை. மூன்றாவது நீதித் துறை. நான்காவது ஊடகத் துறை. இவற்றில்  அரசியலுடன் நேரடியான தொடர்புடையவை நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களும். தேர்தல் அரசியலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே இந்த மன்றங்களை ஆள்கிறார்கள். நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதும், அவற்றைக் காத்தலும் இவர்களின் அடிப்படைப் பணிகள். இந்த மன்றங்களில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஆளும் கட்சியாகிறது. மற்றவை எதிர்க்கட்சிகள் ஆகின்றன.

மக்களால், மக்களுக்காக, மக்களே ஆள்வது என்பதே ஜனநாயகத்தின் பொருள். இதைப் புரிந்துகொள்ளாத  அகந்தை கொண்டவர்களின் கரங்களில் அதிகாரம் சிக்கும்போது, ஆட்சி நிர்வாகத்தில் சிக்கல்கள் முளைக்கின்றன. அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் துறை அதிகாரி ஒருவர் மாநில முதல்வரின் விரோதத்தை சம்பாதித்ததால் பந்தாடப்படுவதை இந்தக் கண்ணோட்டத்தில் தான் காண வேண்டும். சொல்லப்போனால், இத்தகைய சம்பவங்கள் உ.பி.யில் மட்டும் நிகழவில்லை. தில்லி, ஹரியாணா. கேரளா, தமிழகம் எனப் பல மாநிலங்களிலும் இத்தகைய காட்சிகள் காணக் கிடைக்கின்றன.

ஆட்சியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் எந்தச் சட்டம் இயற்றினாலும், எந்தத் திட்டங்கள் தீட்டினாலும், அவற்றை மக்களிடையே நடைமுறைப்படுத்துவது, ஜனநாயகத்தின் இரண்டாவது தூணான  நிர்வாகத் துறை தான். இந்தியாவின் அரசு நிர்வாகம் பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், நிர்வாக இயந்திரத்தின் மைய விசையாக இருப்பவை இந்திய குடிமைப்பணி சேவைகளே. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட சேவைப்பணிகளில்  உள்ளவர்களே அரசு நிர்வாகத்தை தலைமை தாங்கி செம்மையாக நடத்துகிறார்கள். இதற்காகவே, குடிமக்களில் மிகச் சிறந்தவர்கள் கடினமான பலகட்டத் தேர்வுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு  ஆளுமை, ஆளுகைப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

அசோக் கெம்கா
அசோக் கெம்கா

இந்த நிர்வாகத் தலைமை முறை ஆங்கிலேய ஆதிக்கத்தில் நாடு இருந்தபோது உருவாக்கப்பட்ட  முறையாகும். அரசை நடத்த தலைமைப்பண்பும் உயர் தகுதிகளும் கொண்ட ஊழியர்களின் தேவை ஏற்பட்டபோது பிரிட்டிஷ் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஐசிஎஸ் படிப்பே நமது இன்றைய இந்திய குடிமைப்பணிகளின் முன்னோடி. இதற்கு வித்திட்டவர், நமது கல்விமுறையைப் பாழாக்கிய அதே லார்டு மெக்காலே பிரபு தான்.   பிரிட்டனில் இருந்த நிர்வாக முறையின் ஆக்கப்பூர்வமான அம்சங்கள் இந்தியாவுக்கு வந்துசேர மெக்காலே உதவினார். அதேசமயம், இந்தியாவுக்கே உரித்தான பாரம்பரிய நிர்வாக முறைகள் காணாமல் போகவும் அவர் அதன்மூலம் வித்திட்டார்.

1864-இல் பிரிட்டிஷ் அரசுக்கு அவர் சமர்ப்பித்த அறிக்கையில், “இந்தியாவை ஆள சிறந்த அறிவாற்றலும் மதிப்பீடுகளும் கொண்ட இளைஞர்கள் குடிமைப்பணிக்கு அவசியம்” என்று குறிப்பிட்டிருந்தார். ஐசிஎஸ் படிப்பு உருவாக அந்த அறிக்கையே காரணம். இந்த ஐசிஎஸ் படிப்பை முடித்துவிட்டு, அதனால் கிடைக்கும் அரசுப் பதவியையும் அதிகாரத்தையும் துறந்து விடுதலைப்போரில் ஆகுதியானவர்  தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

நாடு விடுதலை பெற்ற பிறகு, ஐசிஎஸ், இந்திய குடிமைப்பணிகள் என்று மாற்றம் பெற்றது. இதில் முதன்மையானவையாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகியவை உள்ளன. ஐஏஎஸ் ஆட்சி நிர்வாகத்திலும், ஐபிஎஸ் காவல் நிர்வாகத்திலுய்ம் ஐஎஃப்எஸ் வன நிர்வாகத்திலும் உதவிகரமாக உள்ளன. (17 பிரிவுகளில் மத்திய குடிமைப்பணி சேவைகள் உள்ளன). நமது நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்த குடிமைப்பணி சேவைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார் நாட்டின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேல்.  நேர்மை. நடுநிலைமை, உயர் தகுதிகள் கொண்டவர்கள் இந்தப் பதவிகளை அலங்கரிக்கும்போது ஆட்சி நிர்வாகம் செம்மையுறும்.

ஆட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசர்கள் என்றால், இந்த நிர்வாகிகள் அமைச்சர்கள் போன்றவர்களாவர். ஆட்சியை யார் அமைத்தாலும் வழி நடத்துபவர்கள் இவர்களே. இந்த உண்மைகள் தலைக்கணம் பிடித்த அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் மீது புகார் கூறிய காரணத்தால் பாலியல் புகார் சுமத்தப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரியான அமிதாப் தாகுரின் கதை அப்படிப்பட்டது தான்.

துர்க்காசக்தி நாக்பால்
துர்க்காசக்தி நாக்பால்

அமிதாப் தாகுர் 1992-ஆம் வருட ஐபிஎஸ் அணியைச் சார்ந்தவர். கான்பூர் ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்று பிற்பாடு குடிமைப்பணித் தேர்வில் தேறியவர். இவர் தனது காவல் பணியுடன் சமூக விழிப்புணர்வுப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். அதன் காரணமாகவே,  தனது பணிக்காலமான 18 ஆண்டுகளில் 22 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவரது மனவி நூதனும் மனித உரிமைப்போராளி. இருவரும் இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005-ஐ  மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் களப்பணியாற்றியுள்ளனர். தவிர, அதிகார வர்க்கம் மக்களிடம் நம்பகத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று தனியொருவராக பல பணிகளில் ஈடுபட்டவர் அமிதாப். இந்த தம்பதி தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கொண்டு இதுவரை 500-க்கு மேற்பட்ட ஆர்.டி.ஐ. மனுக்களைச் செய்துள்ளது. தவிர, பொதுநல வழக்குகள் தொடுப்பதிலும் இவர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநில அரசியல்வாதிகளுக்கு அமிதாம் தாகுர் தொல்லை தருபவராக இருந்ததில் வியப்பில்லை. குறிப்பாக,  முதல்வர் மாயாவதியின் ஆட்சிக் காலத்திலும் இவர் மீது அரசு பகைநோக்குடனேயே இருந்து வந்தது. தற்போது ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசின் ஊழல்களுக்கு எதிராக சில பணிகளில் ஈடுபட்ட அமிதாப் தாகுர் முதல்வரின் வில்லன் பட்டியலில் சேர்ந்தார்.  போதாக்குறைக்கு, மாநில சுரங்கத் துறை அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதியின் ஊழல்கள் குறித்து மாநில லோக் ஆயுக்தாவில் நூதன் தாகுர் கடந்த டிசம்பரில் புகார் செய்ய, சமாஜ்வாதி கூடாரம் வெகுண்டது.

சகுந்தலா காம்லின்
சகுந்தலா காம்லின்

அதற்கு பதிலடியாக, அமிதாப் தாகுர் மீது ஒரு பெண்னை பாலியல் புகார் சொல்லச் செய்து (ஜனவரி மாதம்) மிரட்டியது அகிலேஷ் அரசு. ஆனால், அமிதாப் பணியவில்லை. தற்போது ஐ.ஜி. அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்ட அவரை எதுவும் செய்ய முடியாமல் தவித்தது அரசு. தனது மகனுக்கு உதவ எண்ணிய முலாயம் சிங் யாதவ் அமிதாப்பை தொலைபேசியில் மிரட்ட, அதையும் பதிவு செய்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் அமிதாப். அதுதொடர்பாக ஜூலை 11-இல் காவல் துறையில் அமிதாப் புகாரும் செய்தார்.

உடனடியாக, பழைய பாலியல் புகார் வழக்கு தூசு தட்டப்பட்டு, அமிதாப்  மீதான கடும் நடவடிக்கைக்கு அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். அதன் விளைவு, ஜூலை 12-இல் அவரது பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து மத்திய உள்துறையிலும் மத்திய பணியாளர் தீர்ப்பாயத்திலும்  முறையிட்டிருக்கிறார் அமிதாப்.

சமூக விழிப்புணர்வுப் பணிகளிலும் ஊழல் எதிர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டதால் பந்தாடப்படும் அமிதாப் தாகுர் தற்போது இந்திய குடிமைப்பணி அதிகாரிகளின் மனக்குமைச்சல்களின் அடையாளமாகி இருக்கிறார். தன் மீதான புகார்களை மத்திய புலனாய்வுத் துறையே விசாரிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அகிலேஷ் யாதவ் இவ்வாறு அதிகார வர்க்கத்திடம் அத்துமீறுவது புதிதல்ல. 2013-இல் கான்பூர் துணை ஆட்சியராக இருந்த துர்க்காசக்தி நாக்பால் என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி மாநில அமைச்சர் ஒருவரின் மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்ட காரணத்தால் பந்தாடப்பட்டார். நொய்டாவில் மசூதி ஒன்றை இடித்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனால் ஐஏஎஸ் அதிகாரிகளிடையெ பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பிற்பாடு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கே தலையிட்டதால் அவரது பணிநீக்க உத்தரவு வாபஸானது.

உ.பி. முதல்வர் அகிலேஷ் மட்டுமல்ல, ஹரியாணா முதல்வராக இருந்த பூபிந்தர் சிங் ஹூடா (காங்கிரஸ்), சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில மோசடிகளை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்காவை 2013-14  காலகட்டத்தில் பலவகைகளில் கொடுமைப்படுத்தினார். ஆயினும் கெம்கா நிலைகுலையவில்லை.

ரிஷிராஜ் சிங்
ரிஷிராஜ் சிங்

தமிழகத்திலும் கூட இத்தகைய நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு சரியான உதாரணமாக, ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் மத்தியப் பணிக்கு செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தைச் சொல்லலாம்.

குடிமைப்பணி அதிகாரிகள் அனைத்திந்திய  சேவை (ஏஐஎஸ்) அல்லது மத்திய குடிமைப்பணி சேவை (சிசிஎஸ்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் சேரலாம். அனைத்திந்திய சேவையில் சேர்வோர் மாநில அரசுகளின் கீழும், மத்திய சேவையில் சேர்வோர் மத்திய அரசுப் பணிகளிலும் ஈடுபடுவர். சமீப காலமாக, மாநில அரசுகளின் வெறுப்பூட்டும் போக்கால் மத்தியப் பணிக்கு மாறத் துடிக்கும் குடிமைப்பணி அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆட்சிகள் மாறும்போது முந்திய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் ஓரம் கட்டப்படுவது இயல்பாகிவிட்டது. இதற்கு அதிகாரிகளின் தரவீழ்ச்சியும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. எனினும் திமையான அதிகாரிகள் பலர் முக்கியத்துவம் அற்ற பதவிகளில் அமர்த்தப்படுவதும், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவதும், குடிமைப்பணி சேவையின் நோக்கத்தையே சிதைக்கின்றன.

அர்ச்சனா ராமசுந்தரம்
அர்ச்சனா ராமசுந்தரம்

அண்மையில் யூனியன் பிரதேசமான புதுதில்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குடன் மோதியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆளுநர் நியமித்த அதிகாரி சகுந்தலா காம்லின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதுடன் தன்னிச்சையாக அதிகாரிகளை நியமனம் செய்து பெரும் குழப்பம் விளைவித்தார் கேஜ்ரிவால். இறுதியில் உள்துறை அமைச்சகம் தலையிட்டு, ஆளுநரின் அதிகாரமே உச்சபட்சமானது என்று கூறவேண்டி வந்தது.

சில வாரங்களுக்கு முன் கேரளாவில் மாநில அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் வந்தபோது எழுந்து வணக்கம் சொல்லாத குற்றத்தைப் புரிந்ததாக, அம்மாநில கூடுதல் டிஜிபி ரிஷிராஜ் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.  மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல என்பதை காங்கிரஸ் தலைவர்கள் மறந்துவிட்டனர். இத்தகைய நிகழ்வுகள் நமது அரசு தலைமை நிர்வாகிகளை நிலைகுலைச் செய்கின்றன. இத்தகைய வெறுப்பூட்டும் அரசியல் செயல்பாடுகளுக்கு எதிரானதாகவே, 56 ஐஏஎஸ் அதிகாரிகள் புதுதில்லி யூனியன் பிரதேசத்திலிருந்து மத்திய பணிக்கு இடமாற்றம் கோரினர்.

ஜனநாயகத்தின் முதல் இரு தூண்களிடையே நடைபெறும் உரசல்கள் நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது. இதைத் தடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. ஏனெனில், குடிமைப்பணி அதிகாரிகள் எங்கு பணி புரிந்தாலும், அவர்கள் மத்திய அரசுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்களே மத்திய- மாநில உறவுகளையும் உறுதிப்படுத்துபவர்கள். எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும். தற்போது தென்படும் விரிசல்கள் பெரும் விலகலாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு.

8 Replies to “தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!”

  1. மத்திய பிரதேச மருத்துவர் ஆனந்த ராய் பணி மாற்றத்தை இக்கட்டுரையில் சேர்க்க வேண்டாமா?

  2. மனைவி மக்கள் இல்லாத நபர்கள் குடிமை பணியில் அமர்த்தவேண்டும் இதுதான் தீர்வு

  3. நண்பர் ராம்கியின் கேலி புரிகிறது. நமது பிரச்னை இது தான். ஏதாவது ஒரு பிரச்னை பற்றிப் பேசும்போது வேறு ஒரு விஷயத்தை வம்படியாகக் கேட்டு திசை திருப்ப முயல்வது. இவர்களைத் தான் ’இணைய அரட்டையாளர்கள்’ என்று ஜெயமோகன் சொல்வார்.

    இந்தக் கட்டுரை குடிமைப்பணி அதிகாரிகள் பற்றியது என்பதை உணராமல், கேலி செய்திருக்கிறார் ராம்கி. இவருக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால், இத்தகைய விஷமக்காரர்களுக்கு ஆரம்பத்திலேயே சரியான பதில் சொல்லாவிட்டால், அதையே தனது பெருமிதமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதால் தான் இந்தப் பதில். ம.பி.யில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மருத்துவ அதிகாரி ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது ராம்கிக்கு தெரியுமா?

    மத்தியப் பிரதேச ’வியாபம்’ ஊழல் தனிக்கதை. அதுபற்றி தனிக்கட்டுரை (உண்மையில் அது ஒரு தொடர் கட்டுரை) தயாரித்து வருகிறேன். 1990 முதல் ம்.பி.யில் நிகழ்ந்த ஊழல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவரே சௌகான் தான். ஆனால், அவர்தான் தற்போது ஊடகங்களால் துரத்தப்படுகிறார். விரைவில் எனது கட்டுரை தமிழ் ஹிந்துவில் வெளியாகும்போது, அதன் மூலக்கதைகளைப் புரிந்து கொள்வீர்கள்.

    ஒரு கதை உண்டு. பேருந்தில் ஜேப்படி செய்தவன் இறங்கி ஓடும்போது “திருடன் திருடன்… பிடியுங்கள்’’ என்று கூச்சலிட்டுக் கொண்டே ஓடிய கதை தான் திக்விஜய் சிங்கின் மிரட்டல்களைக் காணும்போது நினைவுக்கு வருகிறது. துர்திர்ஷ்டவசமாக, இதைக் கேட்க வேண்டிய – வியாபம் ஊழலின் விஷ வித்தான திக்விஜய் சிங்கின் பின்புலத்தை விசாரித்து வெளிப்படுத்த வேண்டிய- ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. திக்கி ராஜாக்கள் தப்ப வசதியாக பாஜக மீது எல்லோரையும் போலக் கல்லெறிய நான் தயாரில்லை.

    ’ராம்கி’ என்ற பெயரில் ஒளிந்துகொண்டு எழுதும் சகோதரருக்கு இதுவே எனது விளக்கம்.

    -சேக்கிழான்

  4. சபாஷ் சேக்கிழான் நான் என்னை கண்டடையுமுன் நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள். நான் ராம்கியில் ஒளிந்திருக்கும் ராம்கியே தான்! நன்றி. நீங்கள் வ்யாபம் புலனாய்வுக் குழுவில் சேரலாம்.
    கண்டிப்பாக உங்கள் கட்டுரைக்காகக் காத்திருக்கிறேன்.முடியுமானால் இவற்றிற்கு பதில் கூறுங்கள்.
    ஆனந்த ராய் ஆர் எஸ் எஸ் தன்னை ஒதுக்குவதாகப் பெட்டியளித்ததை படித்தீர்களா?
    அவரும் அவர் மனைவியும் மாநில அரசால் பந்தாடப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்!
    ஆஷிஷ் சதுர்வேதியின் பாதுகாப்பிற்கு அலைக்கழிப்பு ஏன்?
    பல்லாண்டுகள், பல ஐயத்திற்கிடமான மரணங்கள், பல்லடுக்கு ஊழல், பத்தாண்டு முதல்வர்!! அவர், வாதத்திற்காக, ஊழலற்றவர் எனக்கொண்டாலும் தகுதியற்றவர் என்பதை மறுக்க முடியுமா?
    காங்கிரஸ் மதவாத பூச்சாண்டி காட்டி ஓட்டு வேட்டை ஆடுவதைப் போன்று நீங்கள் காங்கிரசையே பூச்சாண்டியாகக் காட்டுங்கள் உங்கள் பங்குக்கு! நஷ்டம் எனக்கல்ல!!

  5. //மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல என்பதை காங்கிரஸ் தலைவர்கள் மறந்துவிட்டனர்.//

    காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல. பிஜேபி மற்றும் அணைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல என்பதை மறந்துவிட்டனர். அதனால்தான் கருப்பு கண்ணாடி அணிந்து மோடியை வரவேற்ற அதிகாரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார்கள்.

  6. //கருப்பு கண்ணாடி அணிந்து மோடியை வரவேற்ற அதிகாரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார்கள்/

    நண்பர் கிரிஷுக்கு, பிரதமரின் பாதுகாப்பு / நிகழ்ச்சி ஏற்பாடுகளில் சில கட்டுப்பாடுகள் (protocol) உள்ளன. அந்தக் கட்டுப்பாட்டில் ஒன்று அரசு அதிகாரிகளின் ஆடை அணிகலன் (dress code) தொடர்பானது. அது மீறப்பட்டதால் தான் குறிப்பிட்ட அதிகாரிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மோடிக்கு மரியாதைக் குறைவு எதுவும் அந்தச் சம்பவத்தில் இல்லை.

  7. ndianexpress.com/article/india/india-others/shivraj-singh-chouhan-proposed-to-cancel-my-transfer-in-lieu-of-stopping-vyapam-campaign-alleges-whistleblower/

    ஆர் எஸ் எஸ் காரரின் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *