காசி[நன்னகர்]க் கலம்பகம்

குமார குருபரர்
குமார குருபரர்
காசி விஸ்வநாதர்

முக்தி தரும் முத்தலங்களுள் ஒன்றான காசித்தலத்தின் மகிமையைக் காசிக் கலம்பகம் என்ற பிரபந்தத்தின் மூலம் தெரிவிக்கிறார் குமரகுருபரர். பல வகை மலர்கள் கலந்த மாலை கதம்பம் எனப்படுவது போல பலவகையான பொருட்களும் அகம் சார்ந்த பாடல்களும், பல வகையான செய்யுட்களும் இக்கலம்பகத்தில் விரவியிருக் கின்றன.

உறுப்புகள்:  மதங்கியார், பிச்சியார், கொற்றி யார், இடைச்சியார், வலைச்சியார், என்னும் உறுப்புகள் கலம்பகத்தில் அமைந்திருக்கின்றன. மதங்கி என்பவள் வாள் சுழற்றி ஆடுபவள். பிச்சியென்பவள் சிவ வேடம் புனைந்து வருபவள். கொற்றியார் வைணவ வேடம் பூண்டவள். இப்பகுதியில் அந்தந்த மகளிருடைய தொழிலுக்குரிய செய்திகளைச் சொல்லி சிலேடையமைப்பார்கள், புலவர்கள்.

இவை தவிர மறம், குறம், சம்பிரதம், சித்து, களி ஊர், அம்மானை. ஊசல், தூது, பாணாற்றுப்படை யென்னும் உறுப்புகளும் கலம்பகங்களில் இடம் பெறும்.

மறம்:  மறச் சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தியை, ஒரு மன்னன் மணம் பேசி விடுக்க, அத்திருமுகத்தைக் கொண்டு வந்த தூதனை அம் மறச்சாதித் தலைவன் சினமுற்றுக் கூறுதல் மறம். குறத்தி குறி சொல்வது குறம்.

சம்பிரதம்.   பிறரால் செய்யமுடியாத செயல்களை தான் செய்வதுபோல ஒருவன் கூறுவது சம்பிரதம்.

சித்து.  இரசவாதம் செய்யும் வல்லமையுடைய சித்தனாகத் தன்னை ஒருவன் கூறிக்கொள்வது சித்து. இதில் இரசவாதம் சம்பந்தமான பொருள் தோன்றுவதோடு, இயல்பாக உள்ள பொருளும் தோன்றும்படி அமைக்கப் பெற்றிருக்கும். இச்செய்யுட்களில் ‘அப்பா” என்ற விளி வரும். பாட்டுடைத் தலைவனுடைய ஊரைச் சிறப்பிப்பது ஊர். மகளிர் அம்மானை ஆடுவதையும் ஊசலாடுவதையும் விவரிக்கும் செய்யுட்கள் அம்மானை ஊசல் ஆகும்.  தலைவி கிளி, அன்னம், குருகு, வண்டு இவற்றைத் தலைவனிடம் தூதாக விடுத்துத் தன் காதலைத் தெரிவிப்பது தூது.

shiva_parvati_ganesha_muruga_mangoகாப்பு.  குமரகுருபரர், காசிக்கலம்பகம் பாட விநாயகரை வேண்டுகிறார். யானை முகத்தோனை ஒரு யானையாகவே பாவித்துப் பாடுகிறார்.  யானை தனது தளையை (கட்டு) அறுக்கும். கடலைக் கலக்கும். பாகன் கட்டும் போது மீண்டும் தளைப்படும். அதேபோல் விநாயகரும் நமது பாசத்தளையைக் களை அறுப்பார். நமது பாவங்களாகிய கடலைக் கலக்குவார். பக்தர்களின் அன்பாகிய தளையில் கட்டுப்படுவார். உமாதேவி அளித்த விநாயகர் என்னும் யானை என் உள்ளத்தில் வந்து அருள் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

வாழ்த்து:  விநாயகப் பெருமானை வேண்டிய பின் விசாலாட்சி சமேதராகக் கோயில் கொண்டிருக்கும் விசுவநாதப் பெருமானை வாழ்த்துகிறார்.

கடல் சூழ்ந்த நிலமகளுக்கு அணி கலனாக விளங்கும், மேகம் பொழியும் காசி நகரில் தேவதச்சனாகிய விசுவகர்மா செய்த, விண்ணைத்தொடும் விமானத்தின்கீழ் சிற்றிடையும், பெருந்தடங் கண்ணும் கொண்ட விசாலாட்சி அம்மையோடும் சடாமுடியில் கங்கையும் விளங்க வீற்றிருக்கும் விசுவநாதப் பெருமானை வாழ்த்துகிறார், குமரகுருபரர்.

இந்த நிலத்தில் காலங்காலமாய் நிற்பனவும், தவழ்வனவும், நடப்பனவுமாய்ப் பல உயிர்கள், துன்பத்தை நீக்கும் உறுதுணையைக் காணாமல் தவிக்கின்றன. அவற்றின் துயரங்களை நீக்கி, அவற்றுக்கு கருணையோடு இரங்கி, அவை ஆனந்தக் கடலில் திளைக்கும்படி பிரணவ மந்திரத்தின் பொருளை வரையாமல் வழங்கும் உன் வள்ளல் தன்மையை வாழ்த்துகிறேன் என்று வாழ்த்துப் பாடுகிறார்.

நீர் கொண்ட கடலாடை நிலமகளுக்கு அணியான

கார் கொண்ட பொழில் காசிக் கடிநகர் குளிர்தூங்க

இடமருங்கில் சிறுமருங்குல் பெருந்தடங்கண்

இன்னமிர்தும்

சடைமருங்கில் நெடுந்திரைக்கைப் பெண்ணமிர்தும்

தலை சிறப்பக்

கண்கதுவு கடவுண் மணி தெரிந்த அமரர்

கம்மியன் செய்

விண்கதுவு பொலங்குடுமி விமானத்தின்

மிசைப் பொலிந்தோய்!

நிற்பனவும், தவழ்வனவும், நடப்பனவுமய் நிலத்துக்

கற்பம் அளவில கண்டும் உறுகளைகண் காணாமே

பழங்கண் உறும் உயிர்கள் துயர்க்கடல் நீத்துப்

பரங்கருணை

வழங்கு பரமானந்த மாக்கடலில் திளைத்தாட

உரையாத பழமறையின் முதல் எழுத்தின்

ஒண் பொருளை

வரையாது கொடுத்திடும் நின் வள்ளன்மை

வாழ்த்துதுமே

என்று முதலில் வாழ்த்துப் பாடுகிறார்.

ஐயன் கருணை பிரணவ உபதேசம்: பெருமானே! நீர்மேல் எழுத்து என்று இகழப்படும் இவ்வுடலை நீத்தவர்களுக்கு நீ பிரணவத்தை உபதேசிக்கிறாய். (காசியில் இறப்பவர்களுடைய செவியில் ஈசன் ப்ரணவத்தை உபதேசிப்பதாக காலம் காலமாக நம்பப்படுகிறது.)  

ஐயன் அணிவதோ எலும்பு மாலை. உடுப்பதோ புலித்தோலாடை. ஆனால் அவரது அடியார்கள்முன் நான்முகனும் திருமாலும் அல்லவா பணிந்துநிற்கிறார்கள்! பெருமானே முடைநாற்றம் வீசும் இந்த புழுக்கூடான உடலை உனக்குக் காணிக்கையாக அளிக்கிறோம். ஆனால் அண்ணலே! நீ அடியார்களுக்கு அளிப்பதோ ஆனந்தப் பெருவாழ்வையல்லவா?  பலகாலமாக நோற்று அருந்தவம் செய்தவர்களும் பெறுவதற்கரிய முக்தியை எலும்பு உடலைக் கொண்ட நாங்களும் பெறுவது என்ன வியப்பு! என்று இறை வனின் கருணையை வியக்கிறார்.

நீர் எழுத்துக்கு ஒத்த உடல் நீத்தார்க்கு

நீ நவில்வது

ஓர் எழுத்தே, முழுதும் அவர் எவ்வண்ணம்

உணர்வதுவே

என்பு அணிவது, உடுப்பது தோல், எம்பிரான்

தமர்கள் அவர்

முன் பணியும் பேறுடையார் திசைமுகனும்

முகுந்தனுமே

செடிகொண்ட முடைப் புழுக்கூடே

சிற்றடியோம் இடுதிரை, மற்று

அடிகள் அடியார்க்களிப்பது ஆனந்தப்

பெருவாழ்வே

பல்பகல் நோற்ற அருந்தவரும்

பெறற்கரிய பரந்தாமம்

என்புடல் விற்று அளியேமும் கொளப்

பெறுவது இறும்பூதே

என்று பெருமிதம் கொள்கிறார்.

பிச்சியார்:  பிச்சியார் என்பவள் சிவவேடம் பூண்டு வருபவள். இவள் சிவச் சின்னத்தோடு சூலமும் ஏந்தி யிருப்பாள். இவள் சொல்வது போல் கங்கை, காசி, பெருமா னின் புகழைப் பாடுகிறார் புலவர்.

கண்ணில் படும் நதிகள் எல்லாம் கங்கையாகி விடுமா? அந்த நதிக் கரையிலிருக்கும் தெய்வங்கள் எல்லாம் ஸ்தாணு (சிவன்) ஆகுமா? மற்றைத் தலங்கள் எல்லாம் காசிக்கு ஈடாகுமா? என்னுடைய ஆசையெல்லாம் என்ன தெரியுமா? இந்த உயிர் போகும்போது காசியிலுள்ள மணிகர்ணிகையில் போகவேண்டும் என்பதே. ஏன் தெரியுமா? இங்கு தானே விசுவநாதர் இறப்பவர்களின் செவியில் பிரணவ மந்திரத்தை உபதேசிக்கிறார்! இந்தப் பேற்றைப் பெற்றுவிட்டால் அப்புறம் அந்த சிவனைப் போல் பேயோடு ஆடினாலும் கவலையில்லை.

மணிகர்ணிகா காட், காசி

காணும் காணு நதிகளெல்லாம் புனற் கங்கையே,

அங்குள்ள தெய்வம் யாவையும்

தாணு எங்கள் அகிலேசரே, மற்றைத் தலங்கள்

யாவும் தடமதிற் காசியே

பூணும் ஆசை மற்றொன்றே, உடல் விடும் போது

நன் மணிகர்ணிகைப் பூந்துறை

பேணுமாறு பெற வேண்டும், அப்புறம்

பேயோடு ஆடினும் ஆடப் பெறுமே

என்று ஆசையை வெளிப்படுத்துகிறார்.

பிரமன் ஏவலாள்!  குமரகுருபரர் அடியார்களுக்கு ஒரு வழி சொல்கிறார். அடியவர்களே நீங்கள் முக்திபெற காடு சென்று காய்கனி தின்று தவம் செய்து முக்திபெறவேண்டாம். ஒரு எளிய வழி சொல்கிறேன்.  அருள்தரும் காசித்தலம் சென்று மரணமடையுங்கள். உங்களுக்கு வேலை செய்யும் சிறுவனாக பிரமதேவனே வருவார்! என்கிறார்.

முயலாமலே தவமுக்தித் திருவை

முயங்க நல்கும்

கயலார் பெருந்தடங்கண்ணி பங்கார்

அருட்காசியிலே

செயலாவது ஒன்றில்லை, வாளா

நெடுந்துயில் செய்யும் உங்கள்

பயலாகவே பணி செய்வார் புவனம்

படைப்பவரே!

அம்மை படும் பாடு:  குமரகுருபரருக்கு விசாலாட்சி அம்மையின் நிலையை எண்ணி பரிதாபமும், ஐயனின் சாமர்த்தியத்தை நினைத்துக் கிண்டலும் தோன்றுகிறது.

ஐயன் தன்னை அண்டி வந்த அடியார்களுக்கெல்லாம் முக்தி என்ற பண்டாரத்தையே (சரக் கறை) திறந்து விடுகிறார். வாரி வாரி வழங்குகிறார். ஆனால் அனந்தகோடிப் பிள்ளைகளைப் பெற்ற உலகநாயகியான விசாலாட்சி அம்மைக்கோ குடும்பம் நடத்தக் கேவலம் இரு நாழி நெல்மட்டும் கொடுக்கிறாரே. அதுமட்டுமா அந்த இரு நாழி நெல்லில் 32 தருமங்களையும் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறாரே! இது என்ன நியாயம் என்று அம்மைக்காக வக்காலத்து வாங்குகிறார். மேலும் ஐயன் அடியார்களுக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்கிறார் என்பதையும் புலப்படுத்துகிறார்.

கொள்ளையிடச் சிலர்க்கு முக்திச் சரக்கறையைத்

திறந்து கொடுத்து அனந்தகோடிப்

பிள்ளைகள் பெற்றுடைய பெருமனைக்

கிழத்திக்கே குடும்பம் பேணுகென்னா

உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில்

எண் நான்கு அறமும் ஓம்புகென்றார்

அள்ளல் வயற்காசி ஆண் தகையார்

பெருந்தகைமை அழகிதாமே

என்று ஐயனைப் பழிப்பது போல் புகழ்கிறார்.

தேவர்கள் திண்டாட்டம்:  காசித்தலத்தில் இறந்த பலகோடி உயிர்கள் சாரூபம் பெற்று விடுகின்றனவாம்! சாரூபம் பெற்ற உயிர்களோடு விசுவநாதப் பெருமானும் சேர்ந்து இருக்கும்போது, முக்கண்ணும், திருக்கரத்தில் அக்கினியும் இடப்பக்கத்தில் உமையம்மையும், சடையில் சந்திரனும் கொண்ட பெருமானை வேதமும், திருமாலும். தேவர்களும்கூட பிரித்து அறிந்துகொள்ள முடியவில்லையாம்! ஏன் எட்டுக் கண்களையுடைய பிரமதேவனாலேயேகூட கண்டுபிடிக்க முடியவில்லையே!

கண்ணிருக்கும் திருநுதலும் கனலிருக்கும்

திருக்கரமும் கலந்து ஓர் பேதைப்

பெண்ணிருக்கும் இடப்பாலும் பிறையிருக்கும்

மவுலியுமாய்ப் பிரிக்கலாகா

எண்ணிருக்கும் கணத்தொடும் ஆனந்த

வனத்திருப்பாரை எங்கே காண்பார்!

பண்ணிருக்கும் மறைகளும் எண் கண்ணனும்

அமரர் பலரும் தானே!

என்று தேவாதி தேவர்களின் திண்டாட்டத்தை விவரிக்கிறார்.

சிற்றுயிர்கள் கொண்டாட்டம்:  அவிமுத்தம் என்றழைக்கப்படும் காசிமாநகரில் இறந்த புழு பூச்சி போன்ற சிற்றுயிர்களும் கூட சாரூபம் பெற்றுவிடுகின்றனவாம்! அவை சாரூபம்பெற்ற ஆனந்தத்தில் தம்மைப்படைத்து அளித்த தேவர்களை நோக்கி, “தேவர்களே! நீங்கள் முன்பிருந்த நிலையிலேயே இப்போதும் இருக்கிறீர்கள். ஆனால் எங்களைப் பாருங்கள். நாங்கள் சாரூபம்பெற்று, உங்களைவிட மேம்பட்ட நிலையை அடைந்துவிட்டோம்! என்று தோள்கொட்டி ஆரவாரிக்கின்றன.

பல்லாண்டு தமைப் படைத்த அத்தேவரைப்

பார்த்துப் பைம்பொன்

வில்லாண்ட தோள்கொட்டி எந்தையர்

கோலவிடம் பழுத்த

அல்லாண்ட கண்டத்து எம் ஆதிப்பிரான்

அவிமுத்தத்திலே

சில்லாண்டிருந்து சிவமாய்ச் செலுஞ்

சிறு ஜெந்துக்களே

புழுவும் பூச்சிகளும் கூடக் காசியிலே இறக்க சாரூபம் பெறுகின்றன.

ஊசல்.  பெண்களை ஊசல் ஆட அழைக்கிறார் குமரகுருபரர். பெண்களே! தொண்டுகள் எதுவும் செய்யாமலேயே, மலர்களால் அர்ச்சனை எதுவும் செய்யாமல கூட இத்தலத்தில் இறக்கும் உயிர்களுக்கு சாரூப பதவி நல்கும், யானைத்தோல் போர்த்த ஐயன் வீற்றிருக்கும் காசி நகரத்தின் வளத்தைப்பாடி ஊசல் ஆடுங்கள் என்கிறார்.

தொடங்காமே பணி, மலருத் தூவாமே நல்கும்

கடங்கால் களிற்றுரியார் காசி வளம் பாடி

விடங்கான்று அகன்று குழைமேற் போய்க்

குடங்கைக்கு

அடங்காத உண்கணீர் ஆடுக பொன்னூசல்

அம்பொன் மலர்க் கொம்பன்னீர்! ஆடுக

பொன்னூசல்.

நெஞ்சுக்கு ஆறுதல்.  குமரகுருபரர் தன் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்வது போல நம் அனைவருக்கும் ஆறுதலும் அறிவுரையும் சொல்கிறார்.

”நெஞ்சே! இறுதிக் காலத்தில் எருமையில் ஏறி யமன் வருவானே என்று அஞ்ச வேண்டாம். ஒரு வழிசொல்கிறேன் கேள். மதுரையில் வந்திக்கிழவியின் பிட்டுக்காக மண்சுமந்து அரிமர்த்தன பாண்டியனால் பிரம்படிபட்ட உமைபங்கனைத், தாமரை மலர்கள் நிறைந்த வயல்களையுடைய காசி நகரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானைப் போற்றி, அவன் அடிகளில் அஞ்சலி செய். அவனடியைப் பற்றினால் கூற்றுவனுக்கு அஞ்சவேண்டாம்.

கூற்று அடிக்கு அஞ்சிக் குலையும் நெஞ்சே,

அஞ்சல், கோச்செழியன்

மாற்று அடிக்கு அஞ்சும் இடப்பாகனை,

மள்ளர் கொன்ற கருஞ்

சேற்று அடிக்கஞ்ச மலர் வயல் காசிச்

சிவக்கொழுந்தைப்

போற்று, அடிக்கு அஞ்சலி செய், பற்று

வேறு புகல் இல்லையே

கங்கையா கருங்கடலா?  காசியில் ஓடும் கங்கையாற்றில் மங்கையர்கள் நீராடும் போது அவர்கள் பூசியிருக்கும் கஸ்தூரிக் குழம்பு கரைந்து கங்கை கருங்கடல்போலக் காட்சியளிக்கிறதாம்! இந்தக் கங்கைக் கரையிலேதான் வேதங்களின் சிரசிலும் ஐந்து புலன்களையும் அடக்கியவர்களின் உள்ளத்திலும் குடியிருக்கும் விசுவநாதப் பெருமான் விசாலாட்சி அம்மையோடு காசி மாநகரில் வீற்றிருக்கிறார்.

உரைத்த நான்மறை சிரத்தும் ஐந்தவித்தவர்

உளத்தும், வண்டு ஒருகோடி

நிரைத்த பூங்கழல் நிரையவளொடு

நின்றவர் உறை கோயில்

குரைத்த தெண்டிரைக் கங்கை, மங்கையர்

துணைக் கொங்கை மான்மதச் சேற்றைக்

கரைத்து இருங்கடல், கருங்கடலாகச் செய்யும்

காசிமா நகர்தானே

என்று கங்கை கடல் போல் பரந்திருப்பதைக் காட்டுகிறார்.

குருகு, கிளி, அன்னம் தூது:  புலித்தோலை ஆடையாக அணிந்து, காசிநகரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனிடம் காதல் கொண்ட ஒரு தலைவி, தன் தவிப்பைச் சொல்வதாக இப்பாடலில் கற்பனை செய்கிறார் குமரகுருபரர்.

தானே ஒரு தலைவியாகித் தன் காதலைப் பேசுகிறார். தன் காதலைப் பறவைகளிடம் சொல்லி தூது விடுகிறாள் தலைவி

”குருகே! இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணிவதை விட்டுவிட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதேபோல சுகத்தை விடுத்தாள் என்றும் சொல். சுகம் என்றால் கிளி என்றும் பொருள். இவள் தன் தேகசுகத்தை விட்டுவிட்டாள் என்றும் சொல்லலாம். அவனையே நினைத்துக் கொண்டிருப்பதால் சரீர சுகம் பொருட்டில்லையாம்.

அடுத்ததாக அன்னத்தை தூது விடுக்கிறாள் பாலையும் நீரையும் கலந்து வைத்தால் அன்னமானது நீரைப் பிரித்துப் பாலைமட்டுமே உண்ணும். அன்னம் என்றால் உண்ணும் உணவு என்றும் பொருள். பால் பருகும் அன்னமே! நீ சென்று என் ஐயனிடம், இவள் அன்னத்தையும் உன்பொருட்டு விட்டுவிட்டாள் என்று சொல். அன்னத்தை தூதாக விடுத்தாள் என்று சொல் என்கிறாள். இவளுக்கு உண்ணும் உணவும் தேவையில்லை!

குருகை விடுத்தாள் எனக் குருகே கூறாய்

சுகத்தை விடுத்தாள் என்று

அருகு வளருஞ் சுகமே சென்றுரையாய்

நிறைநீர் தெளிந்து பால்

பருகும் அ(ன்)னமே அ(ன்)னம் விடுத்தபடி

சென்றுரையாய், படிவர் உளத்து

உருகு பசும் பொன்மதில் காசியுடையார்

வரித்தோலுடையார்க்கே

என்று நயம் பட தூது விடுக்கிறார்.

யமபயம் இல்லை:  மீண்டும் ஒருமுறை யமபயம் இல்லை என்று சொல்கிறார். திருவடிகளில் பாம்பைச் சிலம்பாக அணிந்து வேதம் என்ற குதிரையை வாகனமாகக்கொண்டு நுண்ணறிவை அளிக்கும் தலைவராகிய பெருமானைத் தரிசித்தவர்கள் தென்திசைத் தலைவனாகிய யமனிடம் செல்லமாட்டார்கள். அவர்களுக்கு யமதண்டனை இல்லை. ஏனென்றால் அந்த்த் திருவடிகள் மார்க்கண்டனுக்காக யமனையே உதைத்த திருவடிகள் அல்லவா?

வேதத் துரகர் விரகர் அகிலேசர்

பாதத்து உரகர் பரிபுரத்தார்—நாதர் இவர்

சேவடிக்கு அண்டாரே திறம் பிழைத்துத்

தென்புலத்தார்

கோ அடிக்கு அண்டாரே குலைந்து.

என்று யமபயம் தீர்க்க வழி சொல்கிறார்.

புலவர்களுக்கு அறிவுரை

நிறைவாக தன்னைப் போன்ற புலவர்களுக்கும் முக்தியடைவதற்கான வழியைக் காட்டு கிறார்.

செந்நாப் புலவர்களே! முக்தி பெறு வதற்கான உபாயத்தைக் கேளுங்கள். என்னுடைய புன்மொழி கள் வேப்பம் பழமும், கடுக்காயும் போல கசப்பை உடையன வாக இருந்தாலும் அதையும், தேனைப்போலப் பாவித்து நான் சொன்ன புன்மொழிகளையும் முக்கண் ஐயன் திருச் செவி மடுத்து எனக்கருள் செய்தான். அதனால் முழுநலம் கொடுக்கும் முக்தி பெறுவதற்குரிய வழியைக் கேளுங்கள். நீங்கள் இன்னிசைப் பாடல்கள் புனைந்து அப்பரமனை நாத்தழும்பேற ஏத்துங்கள்.

காசிக் கடிநகர் புரக்கும் கண்ணுதற் செல்வன்

வேம்பும் கடுவும் தேம்பிழியாகச்

செஞ்செவி கைப்ப யான் தெரித்த சின்மொழி

அஞ்செவி மடுத்தாங்கு அளித்தனன். அதனால்

வேத்தவை வியப்ப விரைத்தேன் பில்கும்

தேத்தமிழ் தெரிக்கும் செந்நாப் புலவீர்!

செந்நெறி வினவுதிராயின் இன்னிசைப்

பாத்தொடுத்து அடுத்த பரஞ்சுடரை

நாத்தழும்பிருக்க ஏத்துமினீரே

குமறகுருபரர் சொல்லும் உபாயத்தை கைக் கொண்டு நாமும் பரஞ்சுடரை நாத்தழும்பேறப் போற்றுவோம்

***      ***      ***

3 Replies to “காசி[நன்னகர்]க் கலம்பகம்”

  1. தங்கள் பணி மிகவும் போற்றத்தக்கது.பணி சிறக்க வாழ்த்துக்கள்

  2. தமிழின் தலையாயக்கவிஞர்களில் ஒருவரான ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் இயற்றிய அரிய காசிக்கலம்பகத்தினை மிக அருமையாக அறிமுகம் செய்திருக்கிறார் அம்மையார் ஜயலக்ஷ்மி அவர்கள். அவருக்கு நம்முடையப்பாராட்டுக்களை சொல்வோம். கலம்பகம் என்ற இலக்கியத்தின் பல்வேறு உறுப்புக்களை மிகத்தெளிவாக எடுத்துரைத்து அம்மையார் காசிக்கலம்பகத்தில் அடிகள் சொல்லும் சிவபெருமானின் பெருமை மற்றும் காசி நகரத்தின் சிறப்பையெல்லாம் அவரது கற்பனை நயத்தோடு இயைந்து சொல்லியிருக்கிறார் அம்மையார். அவர்கள் தொடர்ந்து தமிழில் இலக்கியத்தில் காணப்படும் பக்திச்சுவையை கவித்துவத்தோடு நம்முடையத் தமிழ் ஹிந்து தளத்தில் எழுதவேண்டுகிறேன்.

  3. அம்மையீர்,
    மிகவும் அருமையான எழுத்து; படைப்பு . கலம்பகத்தினை அழகாக விளக்கி முழுமையான ஒரு கட்டுரையை அளித்தமைக்கு மிக்க நன்றி. படித்து உளம் மகிழ்ந்தேன். இன்னும் இது போன்ற இலக்கிய நயம் வாய்ந்த கட்டுரைகளை எழுத வேண்டுகிறேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *