தகுதி யாருக்கு? [சிறுகதை]

அந்த பாலசன்னியாசி மிகவும் சக்தி மிக்கவர், அவர் முகத்தைப் பார்த்தாலே எல்லாக் கஷ்டங்களும் பறந்துபோகும், அப்படி ஒரு சாந்தமான முகம், அவர் முன்னால் இருந்தாலே போதும், உலகநினைப்பே மறந்து போகிறது, அவர் பேசவே வேண்டாம், அவர் பார்வையிலேயே துயரங்கள் கதிரவன்முன் மறையும் பனிபோல மறைந்துபோகும் என்று பேசிக்கொண்டார்கள்.

அது காளிமுத்து காதிலும் விழுந்தது.

என் துயரத்திற்கும், எனது மனச்சுமைக்கும், ஆற்றாமைக்கும் இந்தப் பாலசன்னியாசியால் ஒரு முடிவு வருமா என்று அவர் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது.  அவரை ஒரு நடை சென்று பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று நினைத்துக்கொண்டார்.

எப்பொழுது அவரைச் சென்று பார்ப்பது?

நாமென்ன பெரிதாக வெட்டியாமுறித்துக்கொண்டா இருக்கிறோம், உடனே சென்று பார்த்துவிடுவோமெ என்று உடனே முடிவெடுத்தார் காளிமுத்து.

ஒரு சந்நியாசியைப் பார்க்கப் போகிறோம், வெறுங்கையுடனா செல்வது என்று நினைத்தவர், எதிரில் உள்ள கடையில் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வாங்கி எடுத்துக்கொண்டார்.  வேகுவேகென்று நடந்து பாலசன்னியாசியின் ஆசிரமத்தை அடைந்தார்.

அங்கு ஒரே கூட்டம்.  மக்கள் இங்குமங்கும் புற்றீசல்கள்போல நடைபயின்றுகொண்டிருந்தனர்.  அனைவரின் முகத்திலும் ஒரு ஏமாற்றம் குடிகொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும், பரிவுடன் ஒருவரிடம், “என்ன ஆச்சு?  ஏன் எல்லாப்பேரும் இப்பிடி ஒரு நிலைகொள்ளாம உலாத்திக்கிட்டு இருக்கீக?  உங்க முகமெல்லாம் சூம்பிக் கெடக்கே?  என்னாங்க அது?” விசாரித்தார்.

அவரைத் திரும்பிப் பார்த்து, “அதுவுங்களா!  இன்னிக்கு பாலசன்னாசி, திடுதிப்புன்னு மவுன விரதத்துலே ஆழ்ந்துட்டாராம்.  ஆரையும் பாத்துப் பேசாம இருக்காராம்.  அவருகிட்டப் பேசி, தங்க தும்பத்தைச் சொல்லனுமிண்டு வந்த அத்தினி பேருக்கும் ஏமாத்தமாப் போயிடுச்சு.  அவரு எப்ப வாயத் திறந்து பேசறது, இவுக எப்ப அவருகிட்ட தங்க குறையச் சொல்லறது, அவரு எப்ப இவுகளுக்கு ஒரு வழியச் சொல்லறது?  அதுதான் கதி கலங்கி, என்ன செய்யனுமிண்டு தெரியாம உலாத்திக்கிட்டு இருக்காக.” என்று அவரும் தன் வழியைப் பார்த்து நடக்க ஆரம்பித்தார்.

காளிமுத்துவின் தலையில் புழுக்குடைந்தது.

இன்று பாலசன்னியாசியைப் பார்க்கவே முடியாது போய்விடுமா?

“என்னாங்க, அப்ப பாலசாமியைப் பாக்க முடியாதா?” என்று சென்றவரைத் துரத்திச்சென்று விசாரித்தார்.

“ஏம் முடியாது?  வேணுங்கற வரைக்கும் பாலசாமி இருக்கற எடத்துலே ஒக்காந்துக்கிட்டு இருக்கலாம்.  பாலசாமி மவுனவிரதத்துலே ஒக்காந்துட்டா நாள்கணக்குலே, ஏன் வாரக்கணக்குலகூடப் பேசமாட்டாரு. போங்க, போய் பாலசாமியைப் பாத்துட்டு வாங்க.  அவரு பேசினாத்தான் அதிசயம்.”  என்று நடக்க ஆரம்பித்தார்.

காளிமுத்து தயங்கியவாறு பாலசன்னியாசி அமர்ந்திருக்கும் கூடத்திற்குள் நுழைந்தார். நூறிலிருந்து நூற்றிருபத்தைந்து பேர்கள் இருக்கக்கூடிய அக்கூடத்தில் இருபது, இருபத்தைந்து பேர்களே அமர்ந்திருந்தனர்.  ஓரிருவர் எழுந்திருந்து வெளிவரத் துவங்கினர்.  அவர்களுக்கு வழிவிட்டவாறு உள்ளே நுழைந்தார் காளிமுத்து.

வயது பதினாறு-பதினேழு இருந்தாலும் குழந்தை போன்ற முகவெட்டு, மிகவும் அமைதியான, தனக்குள்ளே ஆனந்தத்தை உணர்வதுபோன்ற ஒரு முகபாவம்.

திடுமென்று, உலகத்திலேயே பாலசன்னியாசியும், தானும் ஆகிய இருவர் மட்டும் இருப்பதைப்போல உணர்ந்தார் காளிமுத்து.

இங்கே வா என்று அந்தப் பாலசன்னியாசி தன்னை அழைப்பதைப்போல உள்ளுணர்வு தூண்டவே,  அவரது கால்கள் அவரையும் அறியாமல் முன்னே இழுத்துச் சென்றன.

கைகள் வாழைப்பழச் சீப்பை அவரிடம் நீட்டின.

நீயே வாழைப்பழத்தை உரித்து எனக்கு ஊட்டிவிடக்கூடாதா என்று தன்னை வினவுவதுபோல உணர்ந்தார்.

அவரது விரல்கள் ஒரு வாழைப்பழத்தைப்பிய்த்து, அதை உரித்து நீட்டின.

திறந்த பாலசன்னியாசியின் வாயில் வாழைப்பழத்தைச் சிறிது சிறிதாக விண்டு ஊட்டினார் காளிமுத்து. உதடுகளின் ஓரத்தில் நின்ற சிறு துகளைத் தன் மேல்துண்டால் ஒத்தி எடுத்தார்.

மேலும் இரண்டு வாழைப்பழங்கள் ஊட்டப்பட்டன.  தோல்களைத் தனது மேல்துண்டுகளில் முடிந்துவைத்துக்கொண்டார்.

தலையசைப்பு கிடைக்கவே, அருகில் அமர்ந்துகொண்டார்.

“என்ன வேண்டும்?” என்பது போல பாலசன்னியாசியின் புருவங்கள் உயர்ந்தன.

“சாமிக்கு மவுனவிரதம் இல்லையா!  என்கிட்ட பேச முடியுமா?” என்று கேட்கத் தோன்றியது.  நா புரளமறுத்தது.

“உன் மனதிலேயே சொல்லு.  எனக்குப் புரியும்.” என்று காளிமுத்துவின் காதுகளில் சொற்கள் ஒலித்தன.

“சொல்றேன்!” என்று மனதிற்குள் எண்ணத்துவங்கினார் காளிமுத்து.

“சாமி!  என் சொந்த ஊரு திருமயத்துக்கு ரெண்டு கல்லு கெழக்கால இருக்கற கடியாபட்டிங்க.  நான்தான் வீட்டுக்கு மூத்த புள்ளைங்க.  என்கூடப் பொறந்தது எட்டு பேருங்க. அடுத்தடுத்து ஆறு பொட்டப்புள்ளங்க, கடசியா ரெண்டு தம்பிங்க.  இத்தன கூடப்பொறந்தவங்க இருக்கறச்சே நாந்தாங்க விட்டுக்கொடுத்துப் போகணுங்க.

“ஆறு தங்கச்சிடா ஒனக்கு, அப்பாருகூட ஒழச்சு நீதான் அதுங்களைக் கரையேத்தணும், தம்பிகளை நீதாண்டா நல்லாப் படிக்கவச்சு நல்லா வாழவைக்கனுமிண்டு ஆத்தா சொல்லுவாங்க. அதுனால பத்து வயசுலே பள்ளிக்கூடத்துக்கு புள்ளி வச்சுட்டு, நாயனாவோட கொல்லுப்பட்டறைக்கு வந்து சுத்தியும், சம்மட்டியும் புடிக்க ஆரம்பிச்சேனுங்க.

“எங்க சக்திக்கு ஏத்தபடி மூணு தங்கச்சிகளுக்கு கண்ணாலம் செஞ்சு கொடுத்தொமுங்க.  ஒருநாள், ஒலைல நான் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கறபோது, ‘டேய் காளி, நெஞ்சு அடைக்குதுடா, கொஞ்சம் தண்ணி கொடுடா!’ன்னு நாயனா தீனமான கொரல்ல கூப்படறது கேட்டுச்சுங்க.  எதுவும் எங்கிட்ட கேக்காத மனுசனாச்சே, தண்ணி வேணுமிண்டு கேக்குறாகளே, நெஞ்சவேற அடைக்குதுங்களாகறளே அப்படீன்னு பதறிப்போயி, ஒலைக்கு காத்தடிக்கறதை விட்டுப்போட்டு ஓடிவந்து பாத்தா, நாயனா சாஞ்சு கேடந்தாருங்க.  மூச்சுபெச்சில்லே.

‘வண்டிலே எத்தி, ஆசுபத்திரிக்கு ஏத்திட்டுப்போறதுக்குள்ளே அவரு காலம் முடிஞ்சுபோச்சுங்க.

“ரொம்பக் கசுட்டப்பட்டு இன்னும் ரெண்டு தங்கச்சிமாருக்கு கண்ணாலம் பண்ணி வக்கரதுக்குள்ளே என் தாவு தீந்து போச்சுங்க.

“அப்ப பாத்து, என் ஆத்தா டேய் காளி, ஒனக்கும் முப்பது வயசத் தாண்டிடுச்சு.  எனக்கும் தள்ளாட்டமாப் போயிட்டு வருது அப்பாரும் போயிட்டாருடா காளி, நான் கண்ணை மூடறதுக்குள்ள .நீயாத்தாண்டா ஒரு கண்ணாலம் கட்டிக்கவோணும்னு கெஞ்சினாங்க.  நாலு பசங்க இருக்கறபோது நான் எப்படி கண்ணாலம் கட்டிக்க்கினு, புள்ளகுட்டி பெத்துக்கறதுங்க?  ஆனா தளந்துபோன ஆத்தாவைப் பாத்துக்க பொறுப்புள்ள பொட்டப்புள்ள வூட்டுல வேணாமுங்களா? தங்கச்சிமாரு இருக்காகளேன்னு நீங்க கேக்கலாம்.  ஆனா, அவுக இன்னூத்தன் வூட்டுக்குப் போறவுகதானே சாமி!  அதுனால நானு தூரத்து உறவுல அனாதையா இருந்த ஒரு போட்டப் புள்ளயக் கண்ணாலாம் கட்டிக்கிட்டேன்.

“அதுகிட்டே கண்டிசனாச் சொல்லிப்புட்டேன் சாமி, ‘ஏய் புள்ளே, தங்கச்சியைக் கரையேத்திப்புட்டு, ரெண்டு தம்பிகளுக்கும் வழி பண்ணினாத்தான் நமக்கு குழந்த குட்டி எல்லாம்.  அதுவரை அந்த நெனப்பே உனக்குக் கூடாது!’ அப்பிடீன்னு.  அது பத்தரமாத்துத் தங்கம் சாமி.  எதுத்து ஒரு வார்த்த பேசலே.  ஒங்க இஸ்டம்தான் என் இஸ்டம் அப்படீன்னுட்டா.

“என் கடமைய முடிக்க ஏழெட்டு வருசம் ஆயிப்போயிட்டுது, சாமி.  நமக்குன்னு ஒரு குளந்தை வேணாங்களா அப்பிடீன்னு அப்பத்தான் எனக்கு நாபகப்படுத்தினா அவ, சாமி.  குழந்தையும் பொறந்துச்சு.  அதை என் கையில தூக்கிக் கொடுத்துட்டு, இதையும் நீ காப்பாத்துடா காளின்னு அவ பூவும் போட்டுமா போய்ச் சேந்துட்டா.

“மொத தபா நான் அசந்துபோயி ஒக்காந்துட்டேன்.” காளிமுத்துவின் மனம் மனைவி மறைந்த துக்கத்தை எண்ணிப் பார்த்துச் சிறிது அமைதி காத்தது.

“பிறகு என்ன ஆயிற்று?”  என்று அவர் காதில் ஒலித்த சொற்கள் நின்றுபோன அவர் நினைவோட்டத்தைத் தூண்டின.  மௌன உரையாடல் மீண்டும் துவங்கியது.

“எத்தனை நாளுதான் சொம்மா ஒக்காந்துக்கிட்டு இருக்கறது, சாமி?  மெதுவா மனசத் தேத்திக்கிட்டு, பிசாசு மாதிரி கொல்லுப்பட்டறைலே உழைச்சேன்.  ஆனா சாமி, எந்தத் தங்கச்சிகளுக்காகவும், எந்தத் தம்பிகளுக்காகவும் நானும் எங்க நாயனாவும் உழைச்சோமோ, எவுங்களைக் கரையேத்தனுமின்னு நானும், எம்பொஞ்சாதியும், ஏழெட்டு வருசமா ஒரே வூட்டுல இருந்து தனிச்சு நின்னோமோ —  அவுக யாரும் எம்பச்சப்புள்ளைக்கு ஒருவேளை கஞ்சி காச்சி ஊத்தலே சாமி.

“நான்தான் அவனை அப்பனாவும், ஆத்தாவாவும் இருந்து வளத்தேனுங்க.  நானு இருக்கற எடந்தான் – அது என் குடிசையோ, கொல்லுப்பட்டறையோ – அதுதான் அவனுக்கு வீடா இருந்துச்சுங்க!  கூடப் பொறந்ததுதான் இல்லேன்னு ஆயிப்போச்சு, மலை மாதிரி ஒரு ஆம்பள சிங்கம் எனக்குப் புள்ளையாப் பொறந்திருக்கான், வயசான காலத்துல என்னவச்சுக் கஞ்சி ஊத்துவான்னு பேய் மாதிரி ஒழச்சேனுங்க.  ஏதோ நான் கும்படற கடியாபட்டி தலைவிரிச்சான் காளியம்மன் புண்ணியத்துல அவனும் நல்லபடியா வளந்து, நல்லாப் படிச்சானுங்க.  காரைக்குடி காலேசிலே படிக்க கவர்மின்ட்டு ஒதவித்தொகைகூட கெடச்சுதுங்க, சாமி.

“நல்லாப் படிச்சு, காரைக்குடியிலே பெரிய வேலைலே சேந்தானுங்க.  அங்கேயே காலேசில கூடப்படிச்ச வேறசாதி புள்ள ஒருத்தியைக் கண்ணாலம் பண்ணிக்கறேன்னு சொன்னானுங்க.  நானும், சாதியென்ன சாதி, கூடப் பொறந்ததுகூட  வுட்டுட்டுப் போயிட்டுதுங்களே, அவனாச்சும் இசுட்டப்பட்ட பொண்ணைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு, சந்தோசமாக இருந்தாச் சரிதான்னு நெனச்சேனுங்க.

“அது பணக்கார வூட்டுப்புள்ளைங்க.  அவங்களுக்கு காரைக்குடிலே பெரிய ஊடுங்க.  காரு, டிரைவர்னு,  வேலைக்காரங்க, சமயக்காரங்க அப்புடீன்னு – எனக்கு ஒரே மலைப்பா இருந்துதுங்க.  அவங்க ஒரு நாளைக்குச் செலவு பண்ணற துட்டை நானு ஒரு மாசம் உசுரைக் கொடுத்து கொல்லுப்பட்டறையிலே ஒழச்சாலும் சம்பாதிக்க வழியில்லைங்க.  அந்த பொண்ணு போடற துணி ஒண்ணை வாங்கிக் கொடுக்கக்கூட எனக்கு வக்கு இல்லீங்க.

“கண்ணாலத்துக்கு அப்பால ஒங்க புள்ள எங்க வூட்டுலதான் இருக்கணும்னு கண்டிப்பாச் சொன்னாங்க.  எம்புள்ளகூட கொஞ்சம் சொணக்கம் காட்டினானுங்க.  நான்தான் அவனாவது என்னமாதிரி தும்பப்படாம, நல்ல சொகப்பட்டாச் சரிதான்னு நெனச்சேனுங்க.  ஒரு வார்த்தைக்குக்கூட நீங்களும் எங்ககூட இருங்க ஐயான்னு அவிகளும் ஒரு சொல்லு சொல்லலீங்க, எம்மயனும் நாயனா, நீங்களும் எங்ககூட வந்துடுங்கன்னு கூப்படலீங்க.  அவுக வூட்டு நாய்க்குப் போடற தீனில பத்துல ஒரு பங்கு தீனியா நானு தின்னுடுவேனுங்க, சொல்லுங்க சாமி, பாப்போம்!

“ஆனா, எம்பொறவிதான் ஒழச்சு ஓடாப்போறதுக்குன்னே இருக்கு, அவனாவது சொகமா இருக்கட்டும்னு நெனச்சு சரின்னு சொல்லிட்டேனுங்க.”

காளிமுத்துவின் கண்களில் நீர் தாரையாக வழிந்தது.  மேலே எண்ண இயலாமல் நெஞ்சை அடைத்தது.

“ஏன் நிறுத்திவிட்டாய்?  சொல்லத்தானே, உன் துன்ப மூட்டையை என்னிடம் இறக்கிவைக்கத்தானே வந்தாய்!  ஏன் முழுச் சுமையையும் இறக்கிவைக்காமல் இன்னும் சுமந்து திரிய ஆசைப்படுகிறாய்?”  என்று பாலசன்னியாசியின் கண்கள் அவரை வினவின.

“முடியலீங்க சாமி, முடியலே!”  மனதிற்குள் அழுதார் காளிமுத்து.

“இவ்வளவு தூரம் சொல்லிவிட்டாய்.  மீதியையும் சொன்னால்தானே அமைதி கிடைக்க வழிபிறக்கும்?  உன் மனச்சுமை நீங்கும்!  கடைசி ஒருசில அடிகளை உன்னால் எடுத்துவைக்க முடியாதா?  மேலே செல்!  இன்னும் சொல்!” என்று அவரைத் தூண்டின பாலசன்னியாசியின் சொல்லாத சொற்கள்.

“கண்ணாலம் பெரிசா நடந்து முடிஞ்சுச்சு, சாமி.  எம்மயனும் அவன் பொஞ்சாதி, மாமனார், மாமியார், அவங்க சொந்தக்காரங்ககூட காரேறிப் போயிட்டானுங்க.  நாயனா, நீ கடியாபட்டிக்கு எப்பப் போவே, எப்படிப் போவே அப்படீன்னு ஒரு வார்த்தைகூட கேக்கலீங்க.  மனசு ஒடிஞ்சு போச்சுங்க.

“நான் அஞ்சு கிளாசுக்கு மேல படிக்காத பொறம்போக்குதாங்க.  ஆனா, என் குடும்பத்துக்கு, கூடப்பொறந்ததுகளுக்கு, எனக்குப் பொறந்ததுக்கு என் உசிரக்கொடுத்துதான் ஒழச்சேனுங்க.  என்னவச்சுக் கஞ்சி ஊத்துவான்னு நம்பினவன்கூட என்னைக் கடைசீல கருவேப்பல மாதிரித் தூக்கிப் போட்டுடுப்போனதுதாங்க மனசு தாங்கலே.  அவனுக்கு புள்ள – அதுதாங்க எனக்குப் பேரப்புள்ள பொறந்ததுன்னு கேள்விதானுங்க.  அவனும் நாயனா, ஒம்பேரப்புள்ள இதுதான்னு கொண்டுவந்து காட்டலீங்க, வந்து பாருங்கன்னு சொல்லவும் இல்லீங்க சாமி.FotoSketcher - villager

“கண்ணாலத்துலதாங்க நான் அவனைக் கடைசியாப் பாத்தது.  அப்பறம் பாக்கவே இல்லீங்க, சாமி!  மருமகப் பொண்ணும் எனக்கு ஒருவேளைச் சோறு போடலீங்க சாமி”

அமைதியாகிவிட்டார் காளிமுத்து.

“என்னைக் கேட்கவந்த கேள்வியைக் கேட்காமல் நிறுத்திவிட்டாயே, கேள்!” என்று மௌனஒலி மீண்டும் அவர் உள்ளத்தில் ஒலித்தது.  அமைதிப்புன்னகை தவழும் பாலசன்னியாசியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

“கேக்கறேன் சாமி, கேட்டுப்புடறேன்.  அதுக்குத்தானே உங்களைப்பாக்க வந்தேன்.” என்று மனதுள் கேள்வியை எழுப்பினார் காளிமுத்து.

“சாமி, நான் அல்லாருக்கும் நன்மையத்தானே செஞ்சேன்?  அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன்?  இல்லையே சாமி!  நாலு வார்த்தை அன்பாப் பேசுங்கனுதானே நானு நெனச்சேன்.  அது தப்பா சாமி?  அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி!  அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன்?  பத்து வயசுலேந்து மத்தவகளுக்காத்தானே நானு கொல்லுப்பட்டறைலே வெந்தேன். அங்கே காஞ்சுபோன மனசுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இனிமையா ஏன் சாமி ஒரு சொல்லு நான் கேக்கலே?  இதுதான் சாமி என் கேள்வி!  எனக்குப் பணம், காசு, சொத்து எதுவும் வேணாம்.  நல்ல சொல்லுதான் சாமி வேணும்.   அது எப்ப சாமி கெடைக்கும்?”

மௌனம் கலைந்தது.

“வேளை வந்துவிட்டது.  அதுவும் இப்போதே வந்துவிட்டது!”

கணீர் என்ற குரல் அவர் காதுகளில் கேட்டது. தலைகுனிந்து நின்றிருந்த அவர் முதலில் கவனித்தது, தான் இருக்கும் இடம், கூடத்தின் நுழைவாயில் அருகே என்பதும், பாலசன்னியாசி அருகே தான் செல்லவில்லை என்பதும்தான்.

அப்படியானால்…

… இதுவரை நடந்ததாகத் தாம் நினைத்தது, பாலசன்னியாசிக்கு அருகே சென்று வாழைப்பழத்தை ஊட்டியது, அவர் தன்னிடம் பேசியதாக உணர்ந்தது, தான் மனத்தளவில் அவருடன் அளவளாவியது – இது எல்லாம் தனது நினைப்புதானா, தனது ஏக்கத்தின் பிரதிபலிப்புதானா?

தன்னை யாரோ தழுவிக்கொள்ளும் உணர்வு ஏற்பட்டதும் முழுவதும் கண்களைத் திறந்து பார்த்தார் காளிமுத்து.  பாலசன்னியாசிதான் அவரைத் தழுவியபடி நின்றுகொண்டிருந்தார்.

உரத்த, அனைவரையும் ஈர்க்கும், அமைதியில் ஆழ்த்தும் குரலில் பேச ஆரம்பித்தார் பாலசன்னியாசி. 

சுற்றி இருந்த அனைவரும் அவர் சொல்வதை கவனத்தைச் சிதறவிடாமல் கேட்டனர்.

“என்னருகில் வந்ததாக இவர் நினைத்தார்;  ஆனால் நான்தான் இவர் அருகில் வந்து நின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  இவர் எனக்கு வாழைப்பழத்தை ஊட்டிய அன்பையும், தன் மேல்துண்டில் தோலியை முடிந்துவைத்த பண்பையும் நீங்கள் கண்டீர்கள்.  எனது மௌனத்தைக் கலைத்து இவருடன் நான் உரையாடியதையும்,  நான் கேட்ட கேள்விக்கு இந்த முதியவர் கேட்ட பதிலையும் நீங்கள் அனைவரும்தான் கேட்டீர்கள்!

“இவ்வுலகப் பற்றைத் துறந்து, தனித்திருந்து, தவவாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று இருந்த என்னை இதுவரை சம்சாரியாக, நிறையப் பேர்களுடன் இருக்க வைத்துவிட்டான் எம்பெருமான்.  ஓட நினைக்கும் என்னைத்தேடி நீங்கள் இத்தனை பேர் வருகிறீர்கள்!  அமைதியைத் தேடும், அன்பை விரும்பி வரும் அனைவருக்கும் அதைக் கொடுக்க பற்றை விட முயலும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

“உழைத்து ஓடாய்த் தேய்ந்த இந்த மனிதர் அன்பைத் தவிர வேறு எதையும் யாருக்கும் கொடுக்கவில்லை. இன்னும் அனைவருக்கும் குறையாத அன்பைக்கொடுக்கவே இவர் விரும்பி நிற்கிறார்.  இந்த இடத்தில் இவரை அன்றி வேறு யார் உங்களுக்கு உண்மையான, எடுக்க எடுக்க, அள்ளஅள்ளக் குறையாத அன்பைக் கொடுத்துவிடப்போகிறார்கள்?

“ஆக, ஓடநினைக்கும் நான் இங்கு இருப்பது முறையல்ல.  என்னை விட்டுவிடுங்கள்.  இங்கு இருந்து அன்பைத்தேடி வருபவர்க்கு அன்பை நல்கத் தகுதி உள்ளவர் இவர் ஒருவர்தாம்.”

காளிமுத்துவின் கைகளைப்பற்றி அழைத்துச்சென்று, தான் அமர்ந்திருந்த பீடத்தில் அமர்த்திவிட்டு, “உங்கள் கேள்விக்கு விடை இப்பீடம்தான்.  இங்கு இருந்து, அன்புக்கு ஏங்கித்தவித்து வரும் அனைவருக்கும் உங்கள் அன்பைக்கொடுத்து, அன்பே சிவமாக இருங்கள்!” என்று வெளியே நடந்தார் பாலசன்னியாசி.

 

**********************

 

 

11 Replies to “தகுதி யாருக்கு? [சிறுகதை]”

  1. மனதைத் தொட்ட கதை. இன்றைய சமுதாயத்தில் காளிமுத்து போன்றோர் பல்ர் உள்ளனர். கதையை விட கதையின் மொழிநடை என் மனதைத் தொட்டது.

  2. அருமையான கதை… நெஞ்சை நெகிழ வைக்கிறது.

    மனிதமும் கலாச்சாரமும் மிகுந்த படைப்பிற்கு மிக்க நன்றிகள்.

  3. கதை போல் தெரியவில்லை. இன்று நிறைய பேருக்கு கிடைக்கம் அனுபவம்தான் இதன் கரு.

  4. மிகவும் அருமை. துற்வறத்தை விட இல்லறமே சிறந்தது என்பதை மிக அழகாக உணர்த்தி விட்டீர்கள்.

  5. கண்களில் நீரை வரவழைத்து அடிமனத்தைத் தொட்ட இதுமாதிரி எனது வாழ்க்கையில் எவ்வளவோ .எல்லாம் அவன் செயல். அனுபவ பூர்வமான வாசகங்கள்

  6. எத்தகைய அருமையான உணர்வு பூர்வமான கதை. மிகச்சிறந்த மொழி நடை. சமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கதை. இத்தகைய படைப்பு தந்த திரு அரிஸோனனுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள்.

  7. உள்ளத்தைத்தொட்ட கதை அதுவும் கதை என்பதை விட வாழும் வாழ்க்கை முறை என்பதை கூறுகிறது.

  8. எளிமையான விவரணை. ஆற்றொழுக்குப் போன்ற கதை நகர்வு.

  9. கதை அல்ல. மனித வாழ்க்கையையே அணுவணுவாகப் பிட்டுக்காட்டி நெகிழ்த்தி விட்டீர்களே! வாழ்த்த வார்த்தைகள் இல்லை! பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *