பாகுபலி: திரைப்பார்வை

August 4, 2015
By

கொடுக்கப் பட்ட பில்டப்புகளுக்குக் கொஞ்சமும் ஏமாற்றமளிக்காமல் பிரம்மாண்டத்தில் அசத்திவிட்டது பாகுபலி. பெங்களூரில் தமிழ் வடிவம் திரையிடப்பட்டுள்ள சில தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்து ஓடுகிறது என்றால் தெலுங்கு வெர்ஷனைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஒரு அம்புலிமாமா கதையை அதன் இந்தியத் தன்மை சிறிதும் குறையாமல், ஹாலிவுட் படங்களுக்கு நிகரான கிராபிக்ஸ், அனிமேஷன், மற்றும் விசேஷ எஃபெட்க்டுகளுடன் மிகப் பெரிய தூரிகையில் சித்தரித்திருப்பதில் இயக்குனர் ராஜமௌலி முழுவெற்றி அடைந்திருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் நமது விழிகளை விரியவைக்கும் விஷுவல்கள் அலையலையாக வந்து மோதுகின்றன. மலையருவியும், மகிழ்மதி நகரமும் கண்முன்னே எழுந்து வருகின்றன. திரிசூல வியூகம், மகாபாரத யுத்தமோ என்று எண்ண வைக்கும் படை மோதல்கள் என 40 நிமிடத்திற்கு மேல் தொடரும் நீண்ட போர்க்காட்சியில் ஒரு கணம் கூட தொய்வு இல்லை. மற்ற பலவீனங்களை எல்லாம் கூட, இந்தப் படத்தின் உண்மையான ஹீரோவான “காட்சி” பின்னுக்குத் தள்ளி விடுகிறது என்றே சொல்லவேண்டும். ‘சினிமா’ என்பது அடிப்படையில் *காட்சி ஊடகம்* என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறார் ராஜமௌலி.

Bahubali-1

பிரபாஸ், ராணா தக்குபாடி இருவரும் நாயகன், வில்லன் பாத்திரங்களை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஆனாலும், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் நடிப்பு தான் அதைவிடவும் ஜொலிக்கிறது. தமன்னாவின் அழகுகள் திரையில் தளும்பி காளையர்கள் கனவுகளைத் தின்பதற்கு அப்பால், அந்தப் பாத்திரத்திற்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. அனுஷ்கா சங்கிலியில் கட்டப் பட்டு அழுது அரற்றி வீணாகிறார்.

படத்தின் குறைபாடுகளாக நான் கருதுபவை:

இந்தப் படத்தின் காவிய, புராணத் தன்மைக்கும் காட்சிகளின் பிரம்மாண்டத்திற்கும் சிறிதும் ஈடுகொடுக்காத, மரகதமணி என்கிற எம்.எம்.கீரவாணியின் மிகச் சராசரியான, செவ்வியல் தன்மை சிறிதும் அற்ற mediocre இசை.

கதை நிகழும் மற்ற நிலப்பரபுகளுக்கு ஒவ்வாமல், காட்சிகள் அதீதமாக இருக்கவேண்டும் என்ற துருத்தலால், சம்பந்தமே இல்லாமல் பனிக்காடுகளையும் பனிப்புயலையும் காண்பிப்பது.

ஒரு flow இல்லாமல் சடாரென்று வந்து சப்பென்று நின்று விடும் முடிவுக் காட்சி ஒரு மிக மோசமான எடிட்டிங் சொதப்பல். இறுதி வசனத்தில் ஒரு “சஸ்பென்ஸை” வைத்து அடுத்த பகுதி வரை காத்திருங்கள் என்று போடுவது, இது வரை உலகத்தில் எந்த சீரியல் திரைப்படங்களும் செய்யாத, அசலான தெலுங்கு சினிமா உத்தியாக இருக்கக் கூடும் 🙂 அஸ்லம் கான் என்பவர் வரும் காட்சி அப்படியே தொங்குகிறது. அடுத்த பகுதியில் அவரை எங்காவது இணைத்து விடும் எண்ணம் என்றால், இந்தக் காட்சியை அந்தப் படத்தில் ஃப்ளாஷ்பேக்காக காண்பிக்க வேண்டுமேயன்றி இந்தப் படத்திலேயே கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. சீரியல் திரைப்படங்களின் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையான தனிக்கதையாக இருக்கவேண்டும் என்ற ஆதார விதியையே இயக்குனர் மறந்து விட்டிருக்கிறார்.

நல்ல சாகச திரைப்படங்களில் கவர்ச்சியும் கிளாமரும் அப்பட்டமாக இருப்பதில்லை, நடிகையின் ஆளுமையிலோ அல்லது காட்சிகளில் மறைமுகமாகவோ தான் இருக்கும். ஆனால், அடிப்படையில் தெலுங்குப் படம் தான், பயப்படாம பாருங்க என்று சொல்வது போல, கவர்ச்சி ததும்பும் டூயட் பாடல், மதுபானச் சாலையில் ஒரு item song எல்லாவற்றையும் வைத்து இயக்குனர் படத்தைக் கீழே இறக்கியிருக்கிறார். மற்றபடி குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த படத்தில் இந்தக் காட்சிகள் கூச வைக்கின்றன.

தமிழ் வடிவம்:

மாஹிஷ்மதியை மகிழ்மதியாக, பல்லாளனை பல்வாள் தேவனாக எல்லாம் ஆக்கியது சரி.. ஆனால் “சிவு” என்பதை ஏன் பல இடங்களில் அப்படியே சொல்லிக் கொல்ல வேண்டும்? அதை “சிவா” அல்லது “சிவன்” என்று மாற்ற மறந்து விட்டதா?

சிவலிங்கத்தைத் தூக்கி வரும் சிலிர்ப்பூட்டும் காட்சியில், தெலுங்கில் பின்னணியில் ‘சிவதாண்டவ ஸ்தோத்திரம்’ முழங்கி, அந்தக் காட்சியே மெருகேறுகிறது. அதை அப்படியே தமிழில் போட ஏன் தயக்கம்? சம்ஸ்கிருத சுலோகங்கள் தமிழ்ப் படங்களில் வந்ததே இல்லையா என்ன? அதற்குப் பதிலாக, சோகையாக எழுதப் பட்ட ஒரு தமிழ்த் திரைப்பாடலைப் போட யார் யோசனை தந்ததோ தெரியவில்லை.

மதன் கார்க்கியின் வசனங்கள் ஓகே. ஆனால் ‘பகடைக்குப் பிறந்தவன்’ என்ற கேவலமான சாதிய வசையை சம்பந்தமே இல்லாமல் ஒரு போர் வீரவசனமாக எழுதும் மனநிலை எப்படிப் பட்டது என்று யோசிக்க வேண்டும்.

bahubali-3அரசியல் அவதானிப்புகள்:

இந்தப் படத்தில் வீர நாயகர்களின் சித்தரிப்பு இந்துத்துவத்தை மறைமுகமாக பிரசாரம் செய்கிறது என்று சில முற்போக்குகள் புலம்புகிறார்கள். இது நாள் வரை அமர் சித்ரகதா படக்கதைகளிலும், அம்புலிமாமாவிலும் நமது இதிகாச புராணங்களிலும் இல்லாத எந்த விஷயத்தை இந்தப் படம் காண்பித்து விட்டது என்று இப்படிக் குதிக்கிறார்கள் தெரியவில்லை. ஹாலிவுட் சினிமாவின் பிரம்மாண்டத்துடன் போட்டி போடும் வகையில் ஒரு இந்திய இயக்குனர், இந்துக் கலாசார குறியீடுகளுடன் ஒரு படம் எடுத்து அது வெற்றியடைவதைக் கண்டு அவர்கள் படும் வயிற்றெரிச்சல் தான் இதில் தெரிகிறது. இந்தப் படமும் இதன் நாயகனின் “புஜபல பராக்ரமங்களும்” இப்போது ரசிக்கப் படுவதன் காரணம் நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றியும் அவர் மீதான நாயக வழிபாடும் தான் என்று டி.எம்.கிருஷ்ணா ஒரு கட்டுரையில் பயங்கரமாக காமெடி செய்கிறார். சரி, இரண்டு வருடம் முன்பு வந்திருந்தால், இப்படம் இதே அளவு ரசிக்கப் பட்டிருக்காதா என்ன?

அவந்திகாவின் “துகிலுரிதல்” காட்சியைக் கண்டு பெண்ணியவாதிகள் பொங்குகிறார்கள். அந்தக் காதல் காட்சியை கட்டாயம் இதைவிட நளினமாகவும் மென்மையாகவும் எடுத்திருக்கலாம் தான். ஆனால், முரட்டு ஆணாதிக்க மனநிலை என்றெல்லாம் கூறுமளவிற்கு அது அவ்வளவு மோசமாக இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை, அதுவும் பொதுவாக இந்திய மசாலாப் படங்கள் இத்தகைய காட்சிகளைக் காட்டும் விதத்துடன் ஒப்பிடும்போது.

காலகேயர்கள் என்ற கூட்டத்தினரை வினோத பாஷை பேசும் கருப்பர்களாக காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம். அதில் கட்டாயம் ஒரு இனவாதக் குறியீடு இருக்கிறது. இந்தப் படத்தில் மட்டுமல்ல, சமீபகாலங்களில் வரும் காமிக்ஸ் புத்தகங்கள் தொலைக்காட்சி தொடர்களில் கூட அரக்கர்களையும் முரட்டுக் கூட்டத்தினரையும் முற்றிலும் கருப்பாக சித்தரிக்கும் போக்கு உள்ளது. இது கண்டனத்திற்குரியது.

மொத்தத்தில், இந்தப் படத்தின் மாபெரும் வணிக வெற்றியும் புகழும் அதற்குத் தகுதியானதே. பாகுபலி இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்ற அளவில் கொண்டாடப் படவேண்டிய படம் என்பதில் சந்தேகமில்லை.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

Tags: , , , , , , , , , , , , , , , ,

 

7 மறுமொழிகள் பாகுபலி: திரைப்பார்வை

 1. BS on August 4, 2015 at 4:53 pm

  It is a flim for chldren.

 2. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on August 4, 2015 at 4:59 pm

  அன்புக்குறிய ஜடாயு அவர்களின் விமர்சனம் நன்று. இன்னமும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். அடியேன் இன்னமும் படத்தினைப்பார்க்கவில்லை. இங்கே தியேட்டர்கள் இல்லை.
  ஸ்ரீ ஜடாயு
  “பல்லாளனை பல்வாள் தேவனாக எல்லாம் ஆக்கியது சரி”. வீர பல்லாளனை தமிழில் வீரவல்லாளன் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஒரு துறையில் வல்லவன் என்பதைக்கன்னடத்தில் பல்லேன் என்றுதான் இன்னமும் சொல்கிறார்கள். வரலாற்றுப்படங்களுக்கு வசனம் எழுதுகிறவர்களுக்கு கொஞ்சம் வரலாறுதெரிந்திருந்தால் நல்லது.

 3. Dr.Umesh on August 4, 2015 at 8:01 pm

  பாஹுபலி அருமையான குரைகளே காணமுடியாத காவியம். cecil b edemile க்கு வாரிசாக ராஜ் மௌலி கொடுத்திருக்கும் இப்படம் இநியத்திரைஉலகையே உலகின் வியப்புமிக்க தரத்திற்க்கு கொண்டு செல்லும். மரகதமணியின் இசை என்னை எங்களை புளகாங்கிதமடைய செய்தது. நிறைகள் நிறைய இருப்பதனால்தான் இன்னும் housefull ஆகஓடிக்கொண்டு இருக்கின்றது. இப்படத்தை போய் குறை சொல்லலாமா? நன்றி

 4. BS on August 5, 2015 at 6:05 pm

  ////அவந்திகாவின் “துகிலுரிதல்” காட்சியைக் கண்டு பெண்ணியவாதிகள் பொங்குகிறார்கள். அந்தக் காதல் காட்சியை கட்டாயம் இதைவிட நளினமாகவும் மென்மையாகவும் எடுத்திருக்கலாம் தான். ஆனால், முரட்டு ஆணாதிக்க மனநிலை என்றெல்லாம் கூறுமளவிற்கு அது அவ்வளவு மோசமாக இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை, //

  பெண்ணியவாதிகள் மட்டுமல்ல; பெண் என்பவள் உடலும் உள்ளமும் சேர்ந்தவள் எப்படி ஆணைப்போலவே அப்படியே என்ற உணர்வு கொண்டோரும் பொங்குவர்.

  பெண் போராளிகளாகக்கூடாது. தனக்கோ, தன்னைச்சார்ந்த அப்பாவிகளுக்கோ நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராகப் போராடக்கூடாது. அனைத்தையும் தேமே என்று வேடிக்கை பார்த்துவிட்டு உண்டு உறங்கி கண்டு களித்து ஆணுக்கு இரவு விருந்தாகி வாழ்க்கையை முடிக்கவேண்டுமென்று நிலைபாடு உடையோருக்கு எவ்வித தார்மீகக்கோபமும் வராது.

  தங்கள் நாட்டைவிட்டு விரட்டப்பட்டு அநாதைகளாக காட்டில் ஒளிந்து வாழும் நிர்கதியான அவல நிலையை எதிர்த்து அஃதை எப்படியாவது முறியடித்து நம் நாட்டை மீட்டெடுப்போம் என உறுதி கொண்டு வாழவேண்டிய மக்களிள் ஆணென்ன? பெண்ணென்ன? விடுதலப்புலிகளில் பெண்கள் இல்லையா? இந்திய விடுதலைப்போரில், பெண்கள் போராடவில்லையா?

  அவர்களிடம் போய், நீ ஒரு உடல் மட்டுமே; உனக்கெதற்கு இங்கு வேலை? நீ ஆணுக்கு மட்டும் அவனுக்குத் தேவையான போது இரையாக இருந்தால் போதுமே! என்று சொல்லி, சீவி முடித்துச் சிங்காரித்து வீட்டு வாயிலில் காத்திருக்கவேண்டும் என்று இந்திய விடுதலைப்போரில் பங்கு பெற்ற பெண்கள் – ஆசாத் அலி, கேபடன் லட்சுமி, தில்லையாடி வள்ளியம்மை போன்றோரிடம் சொன்னால் எப்படியிருக்கும்/

  அதைத்தான் இப்படம் செய்கிறது! நீ ஒரு அழகி. உன் போராளி ஆடையைக்களைந்துவிட்டு நீராடி புத்தாடை உடுத்திவிட்டால் நீ பேரழகி. அப்போதுதான் நீ என் காதலி. ஓர் ஆணின் போகப்பொருளாக உன்னுடலைத்தந்து இன்பம் காண வேண்டிய நீ ஏன் போராளியாகி உன் வாழ்க்கையை அழித்துக்கொள்கிறாய் என்று சொல்வதுதான் அத்துகிலுரியும் காட்சி.

 5. nikhil on August 9, 2015 at 9:27 am

  Waste of money everything atleast in film making is pioneered by the west. We only replicate it and then project it as our own. with Naivitybeing abundant in india all of it is bought

 6. பாஸ்கரன் on September 9, 2015 at 10:09 pm

  கனமான கதையே இல்லையே அய்யா முழுமையான திரைப்படம் பார்த்த உணர்வும் வரவில்லையே…
  வ. பாஸ்கரன்

 7. BABUBAGATH on October 6, 2015 at 8:44 am

  முரடர்கள் , அரக்கர்கள் கருமை நிறம் என்றால், கருமை நிறக் கண்ணா ! என்ற வரிகள் யாரைக் குறிப்பது ? கட்டுரையாளரின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*