மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 2

<< முந்தைய பகுதி

ஆத்மன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான், எல்லாமே ஆத்மா ஆத்மன்தான் என்பது —  வேதங்களில் குறிப்படப்படும் “அஹம் ஏவ ப்ரஹ்மன் [நானே பரம்பொருள்]” என்பதை அடிப்படையாகக் கொள்கிறது.

அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிப் பார்க்கும் உணர்வு விழித்திருக்கும் நிலைக்கே உரித்தானது என்று நிறுவுகிறது.

இனி அது எவ்வாறு கூறப்படுகிறது என்பதைக்கண்ணுறுவோம்…

MMU 4

ஸ்வப்னஸ்தா4னோ அந்தப்ப்ரக்ஞ: ஸப்தாங்க ஏகோநவிம்சதிமுக2: ப்ரவிவிக்தபு4க் தைஜஸோ த்3விதீய: பாத3:    ||                                            — 4

கனவுநிலையில் உள்ளறிவானவன், ஏழுறுப்புகளும், பத்தொன்பது வாய்களுமுள்ளவனும்.  நுட்பப்பொருள்களை விரும்பும் தைஜஸன் இரண்டாம் பகுதியாகிறான்.                                                              — 4

பதவுரை: தைஜஸ: – தைஜஸன் [என்ற]; த்3விதீய: பாத3: –  இரண்டாம் பகுதியானவன்; ஸ்வப்னஸ்தான: – கனவில் நிலைபெற்றவன்; அந்த: ப்ரக்ஞ: – உள்ளுணர்வானவன்; ஸப்தாங்க: – ஏழு உறுப்புகளால் ஆனவன்; ஏகோநவிம்ஸதிமுக2: – பத்தொன்பது வாய்கள் படைத்தவன்; ப்ரவிவிக்தபு4க் – நுண்ணுணர்வால் அறியப்படும் பொருள்களை அனுபவிப்பவன்.

விளக்கம்:  ஆத்மனின் இரண்டாம் பகுதிக்கு தைஜஸன், அதாவது ஒளிமயமானவன் என்ற பெயர் இடப்பட்டுள்ளது. ஏன் என்னும் கேள்வி எழுமுன்னரே அவன் உள்ளுணர்வானவன் என்று விடையும் கொடுக்கப்படுகிறது.

Vaiswanaranவிழித்துக்கொண்டிருக்கும்போது நாம் வெளி உறுப்புக்களான கண், காது, மூக்கு போன்றவாய்களால் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அறிகிறோம் —  நமக்குள் இருக்கும் ஆத்மன் அறிகிறான்.  உறங்கும்போது, வெளியுறுப்புக்கள் வேலை செய்வதில்லை.  வெளியுறுப்புக்கள் மூலம் அறிந்துகொண்ட விஷயங்கள் நுண்ணறிவாகக் கனவுலகில் காணப்படுகின்றன.

Thaijasanஎனவே, கனவுலகில் ஆத்மன் அனுபவிப்பது எல்லாமே நுண்ணறிவால்தான்.

உதாரணமாக, கனவில் ஒருவன் பயணிக்கலாம்.  ஒரு வினாடிக்குள் அவன் உலகத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குச் சென்றுவிடலாம்.  நனவுலகில் கற்பனையாக இருக்கும் அது, கனவுகில் ஒரு நிஜம்போலத் தோற்றமளிக்கிறது.

நனவுலகில் வெளி உறுப்புகள் மூலம் உள்ளப்படும் அனைத்தும் கனவுலகில் நுண்ணுணர்வாக உள்ளப்படுகின்றன.  ஆயினும் உடல் எந்த மாற்றத்திற்கோ உட்படுவதில்லை.  கனவில் நம்மை ஒரு மிருகம் கடித்துக் குதறலாம், ஆனால் உடலில் எந்த வலியும் ஏற்படுவதில்லை.  வெளியுலகில் நடக்கும் அனைத்தையும் ஆத்மன் கனவுலகிலும் அனுபவிக்க இயலுவதால், நனவுலகில் சொல்லப்பட்ட அத்தனை உறுப்புகளும், வாய்களும் தைஜஸனுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கனவில் காண்பது அனைத்தும் மனத்தாலேயே காணப்படுகிறது, கேட்கப்படுகிறது, உணரப்படுகிறது.  அவை வெளி உலகத்தின் பதிவுகளே!

தைஜஸன் —  அதாவது, ஒளிமயமானவன் என்று ஏன் அழைக்கப்படுகிறான்?

அவன் சாட்சியாக அனைத்தையும் அறிதல் திடப்பொருள்களாக அல்ல – ஒளிரும் வடிவங்களாகவே.  வைஸ்வாநரன் வெளியில் காணும் திடப்பொருள்களால் அறிந்தால், தைஜஸன் எண்ணங்களாகவும், பதிவுகளாகவுமே அறிகிறான்.

ஆதலால் அவனது அனுபவங்கள் நுட்பமாக, சூட்சுமமாகவே இருக்கின்றன.

ஆத்மனின் மற்ற இரண்டு நிலைகள் என்ன?  அவன் எப்படி அறிகிறான்?  எப்படி உணர்கிறான், எதை, எப்படி அனுபவிக்கிறான்?

அதை அடுத்த சுலோகம் சொல்கிறது…

MMU 5

யத்ர ஸுப்தோ ந கஞ்சன காமம் காம்யதே ந கஞ்சன ஸ்வபனம் பஸ்யதி  தத்ஸுஷுப்தம் ஸுஷுப்தஸ்தா2ன ஏகீபூ4த: ப்ரக்ஞானக4ன ஏவாநந்த3மயோ ஹ்யானன்த3பு4க் சேதோமுக2: ப்ராக்ஞஸ்த்ரீதீய: பாத3:                                          — 5

எங்கு தன்னறிவில்லாதவன் [உறங்குபவன்] ஒரு விருப்பத்தையும் விரும்புவதில்லையோ, ஒரு கனவையும் காண்பதில்லையோ, அது ஆழ்ந்த உறக்கநிலை [சுஷுப்தி ஆகிறது].  ஆழ்உறக்கநிலையில் [இருக்கும் ஆத்மன்] ஒன்றாகவே ஆனவனாகவும், அறிவின் குவியலாகவும், ஆனந்தமே உருவாகவும், ஆனந்தத்தை அனுபவிப்பவனாகவும், அறிவே முகமாவும் [கனவுக்கும் நினைவுக்கும் பாலமாக], அறிவாளியாகவும், மூன்றாம் பகுதியாகவும் இருக்கிறான்.       — 5

பதவுரை: யத்ர – எங்கு;  ஸுப்த:[ஆழ்ந்து உறங்கும்] தன் நினைவு இல்லாதவன்;  காமம் கஞ்சன ந காமயதே – ஆசைப்படு[ம் பொருள்களில்]தலில் சிறிதும் விருப்பபடுவதில்லையோ;  ஸ்வபனம் கஞ்சன ந பஸ்யதி – கனவுகள் சிறிதும் காண்பதில்லையோ;  தது – அது;  ஸுஷுப்தம் – ஆழ்உறக்கநிலை [ஸுஷுப்தம் ஆகிறது];  ப்ராக்ஞ: – அறிவாளியான [ஆத்மன்];  ஸுஷுப்தஸ்தா2ன – ஆழ்உறக்கநிலையில்;  ஏகீபூ4த: – ஒன்றாகவே [எதிலிருந்தும் வேறுபடாமல்] இருக்கிறான்;  ப்ரக்ஞானக4ன ஏவ; – [அனைத்து] அறிவின் குவியலாகவே;  ஆநந்த3மய: ஹி – ஆனந்தத்தின் உருவமாகவே;  ஆனன்த3பு4க் – மகிழ்ச்சியைத் துய்ப்பவனாக;: சேதோமுக2: – அறிவையையே முகமாகவும்கொண்டு [கனவுக்கும் நினைவுக்கும் பாலமாக/கதவாக]; த்ரீதீய பாத3 மூன்றாம் பகுதியாகிறான்.

விளக்கம்:  இந்தச் செய்யுளில் ஆழ்உறக்கநிலை, அல்லது ஸுஷுப்தி விவரிக்கப்படுகிறது.  மனிதன் உறங்கும்போது இருவிதமான உறக்கநிலைகளில் இருக்கிறானென்று அறிவியல் சொல்லுகிறது. கனவுகளுடன் கூடிய உறக்கத்தை REM (Rapid Eye Movement) sleep என்றும், கனவுகளில்லா உறக்கத்தை NREM (Non-Rapid Eye Movement) sleep என்றும் உறக்க வல்லுனர்கள் பிரித்திருக்கிறார்கள்.

மேலும், கனவில்லா உறக்கத்தில் எண்ணங்கள், நினைவுகள் இருக்கின்றன, ஆனால் அவை சிதறல்களாக இருக்கின்றன என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இதையே மாண்டூக்ய உபநிஷத்து அறிவின் குவியல் என்று குறிப்பிடுகிறது.

அதுமட்டுமா, ஆழ்ந்த உறக்கத்தில் உடல் தன்னை பண்டை நிலைமைக்குத் திரும்பக்கொணர்கிறது என்றும் அறிவியல் கூறுகிறது.  கட்டற்ற மகிழ்ச்சி நிலையில் இருக்கும்போது உடல்நலம் தேறுகிறது என்பதை நாம் அறிவோம்.  ஆகவே, ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தமாக இருக்கும்பொது உடல் அன்றாடம் ஏற்படும் தேய்மானத்தைச் சரிசெய்கிறது.

இன்னும் ஒன்று —  ஆழ்உறக்க நிலையிலிருக்கும்போது ஆணவம் [ego] மறைகிறது.  அங்கு ஐம்புலன்களின், ஐயுறுப்புகளின் தொடர்பும் தாற்காலிகமாக விட்டுபோகிறது.  அங்கு நாம் மறைந்துவிடுகிறோம் — நமது பெயர், நமது உள்ளறிவு, நமது விருப்புவெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு ஏழை செல்வந்தர் என்ற நினைப்பு, வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, — இவை எல்லாமே மறைந்துதான்போய்விடுகின்றன.  அப்படிப்பட்ட நிலையில் ஏகீபூ4த”மாக, ஒன்றிப்போன நிலையில் இருக்கிறோம் என்பதே உண்மை.

நமது துயர்கள், இடுக்கண்கள், தேவையற்ற பூசல்கள் நாம் விழித்திருக்கும்போதும், கனவுகாணும்போதும்தானே உண்டாகின்றன!  தூங்குபவருக்கு அது ஏது!

அந்தநிலையில் நாம் துய்ப்பது ஆனந்த – மட்டற்ற மகிழ்ச்சி நிலைதானேdreamless sleep

ஆத்மனின் மூன்றாம் பகுதி சேதோமுகன் என்றும் சொல்லப்படுகிறது. ஆத்மனின் இப்பகுதியை நம் மனத்தின் விழிப்புநிலை — விழித்திருக்கும்போது நாம் பெறும் பட்டறிவாகத் தோன்றும் அனுபவங்கள் – இவைதான் விழிப்புக்கும் கனவுநிலைக்கும் இடையே உள்ள கதவு என்றும் அறியலாம்.

மேலும் இந்நிலையில் இருக்கும் ஆத்மனை ஏன் சிறந்த அறிவாளி என்று கூறவேண்டும்?

விழித்திருக்கும் நிலையிலும், கனவுலகில் இருக்கும் நிலையிலும் ஆத்மனின் அறிவு மாறுபாட்டை உடையதாகவே இருக்கிறது.  அதாவது விருப்பு-வெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு, ஏழை-செல்வந்தர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற நினைப்பு, வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, இவை எல்லாமே இருக்கின்றன.

ஸுஷுப்தி [ஆழ்உறக்க] நிலையில் இருக்கும்போது இந்த அறிவுக்கு எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை.  எல்லாமே ஒன்றுதான். ஆக அறிவு அறிவாகவே, மாறுபாடுகள் இன்றி, வெளிஉலக அனுபவங்களால் ஏற்பட கலப்பு இல்லாமல் தூய அறிவாகவே உள்ளது. இப்படி இருக்கும் ஆத்மனை அறிவாளி என்றே மாண்டூக்ய உபநிஷத்து அறிவிக்கிறது.

இப்படி ஆழ்உறக்க நிலையில் இருக்கும் இந்த ஆத்மன் யார்?

அடுத்த செய்யுளில் விளக்கம் கிடைக்கிறது…

MU 6

ஏஷ ஸர்வேஸ்வர: ஏஷ ஸர்வக்ஞ எஷோஅந்தர்யாம்யேஷ யோனி: ஸர்வஸ்ய பிரப4வாப்யயௌ ஹி பூ4தானாம்  ||                                                                       — 6

இவர் எல்லாவற்றிற்கும் இறைவன், இவர் அனைத்தையும் அறிந்தவர், அனைத்துக்கும் இவர் உள்ளில் இருப்பவர், உண்டானது, உண்டானவைக்கும், அழிபவைக்கும்   இவரே மூலத்தானம்.        – 6

பதவுரை: ஏஷ – இவரே;  ஸர்வேஸ்வர:அனைத்துக்கும் இறைவன்;  ஏஷ – இவரே;  ஸர்வக்ஞ: – அனைத்தும் அறிந்தவர்;  ஏஷ – இவரே;  அந்தர்யாமி – உள்ளே இருந்து இயக்குபவர்;  ஏஷ – இவரே;  ஸர்வஸ்ய யோனி: – அனைத்துக்கும் உற்பத்தித்தானம்;  பூ4தானாம் – உயிரினங்களுக்கேல்லாமே பிரபவ அப்யயௌ ஹி – தோற்றமும் முடிவுமாகவே [இருக்கிறார்].

விளக்கம்:  ஆழ்உறக்கநிலையில் இருக்கும் ஆத்மனின் சிறப்பியல்புகள் இச்செய்யுளில் விளக்கப்படுகின்றன.  இவர் அனைத்துக்கும் இறைவன், இவர் அனைத்தையும் அறிந்தவர், அனைத்துக்கும் பிறப்பிடமாக இருக்கிறார், அதுபட்டுமன்றி, அனைத்துயிர்களின் தோற்றமும், முடிவுமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் ஆத்மன் — அசைவின்றி, , தூய அறிவாக, எண்ணங்களின் குவியலாக இருக்கும் ஆத்மன், மேற்சொன்ன தொழில்களை எப்படிச் செய்ய இயலும் என்ற கேள்வி பிறப்பது நியாயம்தானே!

நமக்குத் தெரிந்தவரை, ஜீவாத்மாவும் – உயிர்களுக்குள், உடலுக்குள் இருந்து நம்மை ஆட்டிவைக்கும் ஆத்மா என்று நம்மால் உணரப்படும் ஒன்றும் — இறைவனும் [பரமாத்வாவும்] வெவ்வேறு என்றே எண்ணுகிறோம்.  இந்த உபநிஷத்தைப் பொறுத்தவரை யாவும் ஒன்றே!  ஒரே சத்தியமான ஒன்றேதான் இறைவன்.  அந்த இறைவனின் ஒரு பகுதியே ஆத்மன்.  அந்த ஆத்மனின் ஒரு பகுதியே —  மூன்றாம் நிலையில் இருக்கும் ப்ராக்ஞனே பரம்பொருளான இறைவனின் ஒரு பகுதி என்று மாண்டூக்ய உபநிஷத்து உரைக்கிறது. ஏனெனில் அனைத்துமே பரம்பொருள் என்று இரண்டாம் செய்யுளில் சொல்லப்பட்டது.

அப்படியானால், உயிர்கள் [ஜீவாத்மா] அனைத்துமே இறைவனிடமிருந்து பிரித்தறிய இயலாதவை ஆகின்றன. 

அது எப்படி இயலும்?

கடலில் இருக்கும் நீரில் ஒரு திவலையைத் தனியாகப் பிரிததெதேடுத்தாலும், அதைக்கூறுபோட்டு ஒரு நீரணுவாகப் பிரித்தாலும், அது அக்கடலின் ஒரு பகுதியே!

எனவே, மாபெரும் கடலை இறைவன் என்றால், அக்கடலான இறைவனின் [பரம்பொருள் – பரப்பிரம்மம்] பிரிவுகளே ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படும் கனவு நிலையில் இருக்கும் அத்மனின் ஒரு பகுதியும், விராட் என்று சொல்லப்படும் நனவு நிலையில் இயங்கும் ஆத்மனின் ஒரு கூறும் ஆவார்கள்.

இந்த ஈசனே அனைத்துக்கும் முதன்மையானவன்.  இவன் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறான்.  இவன் அறியாததொன்றும் இல்லை;  இவன் எல்லா உணர்வும்களையும் கடந்து —  இருமை நிலைகளைக் கடந்து [இன்பம்-துன்பம்; மகிழ்வு-துயரம்; இனிமை-கடுமை] ஆனந்தநிலையில் லயித்திருக்கிறான்.

இதிலிருந்து  நாம் இன்னொன்றையும் அறிந்துகொள்ளவேண்டி இருக்கிறது.  இறையறிவு பொருள்களை அறிவதால் ஏற்படுவதல்ல;  உணர்ந்து அறிவதால் ஏற்படுவதல்ல;  எந்தவொரு அறிவும், உணர்வும் அனைத்தறிவு ஆகாது.

நாம் வெளியுலகில் இருக்கும் எதை அறிந்து உணர்ந்தாலும், அவற்றின் தன்மையை அறிந்துகொண்டாலும், அவற்றின் மீது எப்பொழுதும் முழுக்க முழுக்க கட்டுப்பாட்டைச் செலுத்த இயலாது.

“அறிவு சக்தி” என்று சொல்லப்பட்டாலும், அது சக்தி ஆகாது.   வெளி அறிவு – நமது ஐம்புலன்களினாலும் அறியப்படும் அறிவு —  நமது ஐயுணர்வுகளினாலும் அறியப்படும் அறிவு முழுச் சக்தியையும் நமக்கு வழங்குவதே இல்லை.

உயிர்கள் விழித்திருக்கும் நிலையில் இருக்கும்போது அதன் அறிவு ஐம்புலன்களினால் கிடைக்கும் ஒன்றே!  இறைவனின் அறிவு உள்ளுணர்வாகும்.   எனவேதான் அவர் கடவுள் —  உள்ளத்தைக் கடந்தவர் என்று உள்ளப்படுகிறார்.

இறைவனிடமிருந்துதான் அனைத்தும் தோன்றுகின்றன;  அவனுல்லேதான் அனைத்தும் அடங்குகின்றன.

அவனின் சக்தியில் ஒருசிறு பங்கே நமக்குக் கிடைக்கிறது.  அதைத்தான் நாம் நனவுலகிலும், கனவுலகிலும் கையாளுகிறோம்.

ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம்.

அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை.  அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம்.

அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் கிடைக்கும் ஆனந்தத்தை ஆயிரம்கோடி பொற்காசுகளாலும் அடைய இயலாது.  உறக்கம் வராமல் விழித்திருக்க நம்மால் இயலுமா?  ஆயிரம் கோடி பொற்காசுகள் தருகிறேன், ஒரு ஆண்டு உறங்காமல் இரு என்றால் இருக்க இயலுமா?  அந்த ஆழ் உறக்க நிலையில் நாம் இறைவனுடன் ஒன்றுகிறோம்.  இறைவனாகவே ஆகிவிடுகிறோம்…

[வளரும்]

Tags: , , , , , , , , , , ,

 

14 மறுமொழிகள் மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 2

 1. ஆனந்த் சாகர் on August 22, 2015 at 12:10 pm

  திரு.அரிசோனன்,

  உங்களின் உபநிஷத் விளக்க கட்டுரை தொடர் அருமையா இருக்கிறது. பாராட்டுக்கள். அத்வைத தத்துவம் உண்மையான யதார்த்தத்தை சொல்கிறது. அந்த கருத்தையே இந்த மாண்டூக்ய உபநிஷத்தும் கூறுகிறது. அருமை. நம் பாரத திரு நாட்டில் எத்தனையோ ஆன்மீக ஆசான்கள் வாழ்ந்து, ஆன்மீக உண்மைகளை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். மேலும் உலகின் பல பகுதிகளிலும் பல ஆன்மீக குருமார்கள் வாழ்ந்திருக்கிறார்கள், இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள், இனிவரும் காலங்களிலும் பற்பல ஆசான்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்.

 2. ஒரு அரிசோனன் on August 23, 2015 at 6:42 am

  நன்றி ஆனந்தசாகர் அவர்களே,

  //அத்வைத தத்துவம் உண்மையான யதார்த்தத்தை சொல்கிறது. அந்த கருத்தையே இந்த மாண்டூக்ய உபநிஷத்தும் கூறுகிறது//

  மாண்டூக்கிய உபநிஷத்திற்கு கௌடபாதர் நூறு குறள் பாக்களில் காரிகை [விரிவுரை] எழுதினார். அவரே ஆதிசங்கரரின் பரமகுரு. ஆதிசங்கரர் அத்துவைதத்தை நிலைநாட்டினார் என்பதை நாடே அறியும்.

  இதனால், மாண்டூக்கிய உபநிஷத்தே அத்துவைதக் கொள்கைக்கு வித்து என்று ஆன்றோர்கள் கூறுகிறாகள்.

 3. ஆனந்த் சாகர் on August 24, 2015 at 10:46 am

  ஒரு அரிசோனன் அவர்களே,

  //ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம்.//

  //அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை. அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம்.//

  //அந்த ஆழ் உறக்க நிலையில் நாம் இறைவனுடன் ஒன்றுகிறோம். இறைவனாகவே ஆகிவிடுகிறோம்//

  மேலே கூறப்பட்டவை முற்றிலும் உண்மை. ஆழ் உறக்கத்தின்போது நம்முடைய வெளி மனம்/பௌதீக மனம் செயல்படுவதில்லை. ஆழ் தியானதின்போதும் நாம் இந்த நிலையை அடைகிறோம். அந்த நிலையில் நம்முடைய ஆழ் மனம் பரம்பொருளுடன் ஒன்றிணைந்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நம்முடைய ஆழ் மனம் எப்பொழுதும், சர்வ சதா காலமும் பரம்பொருளுடன் ஐக்கிய நிலையிலேயே இருக்கிறது. நம்முடைய பௌதீக மனம்தான் அந்த ஐக்கிய நிலையை நாம் உணராதபடி செய்கிறது. எனவே ஒவ்வொரு உயிரும் ஆழ் மன மட்டத்தில் என்றென்றும், எப்பொழுதும் பரம்பொருளுடன் ஒன்றிணைந்தே இருக்கின்றன.

 4. C.N.Muthukumaraswamy on August 24, 2015 at 6:03 pm

  //ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம்.//

  //அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை. அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம்.//
  அறிவு என்பது யாது? ஒன்றை விடயிப்பதுதானே? நனவிலும் கனவிலும் உயிர் கருவிகளுடன் கூடி புறப்பொருள்களை விடயித்து ஐம்புலன் உணர்ச்சியை அடைகின்றது. கருவிகள் நீங்கிய பொழுது ஆழ் உறக்க நிலை அடைகின்றது. கருவிகள் நீங்கிய நிலையில் நான் ஆனந்தத்தில் இருந்தேனா? அறியாமை என்னும் இருளில் கிடந்தேனா.? உறங்கி விழித்தபின் நன்றாக உறங்கினேம் என்று எனக்கு உணர்த்தியது யாது? மீண்டும் கருவிகள் கூடியதனால் அல்லவா அவ்வறிவு பெற்றேன். அறிவற்ற சடம் போலக் கிடக்கும் நிலையினை ஆனந்த நிலையெனலாமா? கள்ளுண்டு மயக்கத்தில் இருப்பவனுக்கும் விடத்தால் மூர்ச்சித்திருப்பவனுக்கும் ஆழுறக்கமாகிய சுழுத்தில் இருப்பவனுக்கும் இடையில் வேற்றுமை என்ன? உறுதியாக இதுஅத்துவிதமல்ல.

 5. ஆனந்த் சாகர் on August 26, 2015 at 6:34 pm

  திரு.சி.என்.முத்துகுமாரசாமி,

  விடயிப்பது என்றால் என்ன பொருள்? நான் தமிழ் அறிஞர் அல்ல. எனக்கு இந்த வார்த்தையின் பொருள் தெரியவில்லை. சாதாரண தமிழில் எழுதினால் என்னை போன்ற பாமரர்களுக்கு புரியும்.

  //அறிவு என்பது யாது? ஒன்றை விடயிப்பதுதானே? நனவிலும் கனவிலும் உயிர் கருவிகளுடன் கூடி புறப்பொருள்களை விடயித்து ஐம்புலன் உணர்ச்சியை அடைகின்றது//

  உடல்மூலம் ஐம்புலன் உணர்ச்சி வழியாக மட்டும் நாம் அறிவை பெறுவதில்லை. உடலுக்கு அப்பாற்பட்ட ஆன்ம நிலையில் நாம் அறிவை பெறமுடியும். உண்மையாக சொல்வதென்றால், நம் ஆன்மாவுக்கு அனைத்தும் தெரியும். நம்முடைய பௌதீக மனம்தான் அதை நாம் அறியாதபடி மறைக்கிறது.

  // கருவிகள் நீங்கிய பொழுது ஆழ் உறக்க நிலை அடைகின்றது. கருவிகள் நீங்கிய நிலையில் நான் ஆனந்தத்தில் இருந்தேனா? அறியாமை என்னும் இருளில் கிடந்தேனா.? உறங்கி விழித்தபின் நன்றாக உறங்கினேம் என்று எனக்கு உணர்த்தியது யாது? மீண்டும் கருவிகள் கூடியதனால் அல்லவா அவ்வறிவு பெற்றேன்.//

  ஆழ்ந்த உறக்கத்தில் நம்முடைய பௌதீக மனம் செயல்படாமல் இருப்பதால் ஆழ்மனம் கடவுளுடன் ஒன்றிணைந்து இருக்கும் நிலையில் நாம் பேரானந்த நிலையை அனுபவிக்கிறோம். இந்த அனுபவம் உடல் சார்ந்தது அல்ல. மாறாக அது நம்முடைய ஆன்மா அனுபவிக்கும் ஆனந்தம். இந்த நிலை இருளோ, அறியாமை நிலையோ அல்ல. மாறாக அந்த நிலை அனைத்தையும் அறியும் நிலை, பேரறிவு நிலை.

  // அறிவற்ற சடம் போலக் கிடக்கும் நிலையினை ஆனந்த நிலையெனலாமா? கள்ளுண்டு மயக்கத்தில் இருப்பவனுக்கும் விடத்தால் மூர்ச்சித்திருப்பவனுக்கும் ஆழுறக்கமாகிய சுழுத்தில் இருப்பவனுக்கும் இடையில் வேற்றுமை என்ன? உறுதியாக இதுஅத்துவிதமல்ல.//

  பௌதீக மனதின் சிந்தனை ஏதும் இல்லாத நிலை, அது எந்த வழி முறை மூலம் பெற்றிருந்தாலும், ஒரே நிலை தான்.

 6. C.N.Muthukumaraswamy on August 27, 2015 at 8:12 am

  //உடல்மூலம் ஐம்புலன் உணர்ச்சி வழியாக மட்டும் நாம் அறிவை பெறுவதில்லை. உடலுக்கு அப்பாற்பட்ட ஆன்ம நிலையில் நாம் அறிவை பெறமுடியும். உண்மையாக சொல்வதென்றால், நம் ஆன்மாவுக்கு அனைத்தும் தெரியும். நம்முடைய பௌதீக மனம்தான் அதை நாம் அறியாதபடி மறைக்கிறது// எல்லாவற்றையும் அறியும் ஆன்மாவுக்கு இந்த உடலுக்குள் மாட்டிக் கொண்டோமென்றால் நம்முடைய எல்லாம் அறியும் அறிவு சுருங்கி விடுமே, மனம் என ஒன்று வந்து நம் அறிவை மறைத்துவிடுமே என்ற அறிவு ஏன் தோன்றவில்லை. இந்த உடம்பு முதலியன ஆன்மாவுக்கு எப்படி வந்து சேர்ந்தன?

 7. C.N.Muthukumaraswamy on August 27, 2015 at 8:24 am

  /ஆழ்வுறக்கத்தில் ஆன்மா இருளில் மூழ்கி இருந்ததா? கடவுளிடம் இருந்தத? பௌதீக மனதின் சிந்தனை ஏதும் இல்லாத நிலை, அது எந்த வழி முறை மூலம் பெற்றிருந்தாலும், ஒரே நிலை தான் / பௌதீக மனத்திச் செயல்படாதிருக்கச் செய இதுபோன்ற எத்தனையோ எளிய வழிகள் இருக்க, ஆன்மீகவாதிகள் இயமம் நியமம் முதலிய ஞான சாதனைகளையும் குருவருளையும் நாடிச் செல்லவேண்டும் எனக் கடினமான விதிகளை வகுப்பது எதற்கோ? ஆன்மாவுக்கும் பிரமத்திற்கும் வேறுபாடு இல்லையெனின், பிரமம் ஒளியா இருளா? ஆழ் உறக்கத்தில் ஆன்மா அனுபவிப்பது இருளா ஒளியா? ஆன்மப் பிரகாசத்தின்முன் பாச இருள் நிற்கமுடியாது.

 8. க்ருஷ்ணகுமார் on August 27, 2015 at 11:01 am

  பேரன்பிற்குரிய ஸ்ரீ ஆனந்த்சாகர், ஸ்ரீ அரிசோனன் மற்றும் முனைவர் ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் அவர்களுடைய கருத்தாழம் பொதிந்த உரையாடலைக் கவனித்து வருகிறேன்.

  மிக அருமையான பொருள் பொதிந்த உரையாடல்.

  *விடயித்த* என்று முனைவர் ஐயா உபயோகித்த சொல்லிற்குப் பொருள் *நுகர்தல்* என யூகிக்கிறேன். எனது யூகம் தவறாக இருந்தால் அது திருத்தப்படுவதில் மிக்க மகிழ்ச்சி அடைவேன். முனைவர் ஐயா அவர்கள் தன்னுடைய வழக்கப்படியே தூய தமிழ்ச்சொற்களை உபயோகித்து எழுதுகையில் புதிய தமிழ்ச்சொற்கள் அந்த கருத்துக்களில் வந்தால் நாம் பயன் பெறுவோம் என்பது என் புரிதல். ஐயா அவர்களிடம் நமக்குப் பொருள் புரியாத புதிய தமிழ்ச்சொல்லைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். அதை நாம் மேற்கொண்டு நமது கருத்துப் பரிவர்த்தனங்களில் உபயோகிக்கவும் செய்யலாமே. நிற்க இது என் தனிப்பட்ட கருத்து.

  நிற்க.

  அவஸ்தா த்ரயம் என்று மூன்று நிலைகளைப் பற்றிக் கேட்டிருக்கிறேன்.

  ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுஷுப்தி……….

  விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ் உறக்க நிலை.

  நான்காவதான துரீயாதீதம் என்ற ஆனந்த நிலை இவற்றினின்று வேறுபட்டது என அறிகிறேன்.

  அன்பின் ஸ்ரீ ஆனந்த் சாகர் ஐயா, முனைவர் ஐயா அவர்களுடன் தாங்கள் நிகழ்த்திய உரையாடல்கள் மிகவும் பொருள் பொதிந்தது. இவற்றில் நான் புரிந்து கொண்டதைப் பகிர்கிறேன். என்னுடைய புரிதலில் பிழை இருக்குமானால் திருத்துங்கள்.

  ஒவ்வொரு உயிரும் எந்தவொரு நிலையிலும் பரம்பொருளில் ஆழ்ந்தே இருக்கின்றன. பௌதீக மனம் ………. அல்லது அனாதி அவித்யை ………. இந்த ஒன்றிருத்தலை அறியாத படிக்கு நம்மை மயக்கச் செய்கிறது. இந்தக் கருத்தில் வேறுபாடுகள் இல்லை என்றே உணர்கிறேன்.

  ஆழ்நிலை உறக்கம்………… ஸுஷுப்தி ………… என்ற நிலையில் கர்மேந்த்ரியங்களும் ஞானேந்த்ரியங்களும் ஆன்மாவில் லயித்து விடுகின்றன.

  ஆனால் இது ஆனந்தம் என்ற நிலை ஆகாது என்றே முனைவர் ஐயா சொல்ல வருகிறார்கள்.

  ஏன்?

  ஆழ்நிலை உறக்கத்தில் அனுபவம் என்று ஏதும் இல்லை. ஆழ்நிலை உறக்கத்தில் இருந்து மீண்டு விழிப்பு நிலைக்கு வந்த பின்னரே நாம் ஆழ்நிலை உறக்கத்தில் இருந்தோம் என்ற ப்ரக்ஞை வருகிறது.

  ஆனந்த நிலை என்பது அனுபூதியுடன் கூடியது. அதாவது மெய்யறிவுடன் கூடிய ஒரு நிலை.

  ஆழ்நிலை உறக்கம் என்ற நிலை பேரமைதி கொண்டது துக்கமின்மையைக் கொண்டது என்று சொல்லலாமே ஒழிய ……….. அந்த நிலையில்………. அந்த நிலை நீடிக்கும் வரையில் ………… எந்த ஒரு அனுபூதியும் இல்லாமல் போகையிலே ………… எந்த ஒரு நுகர்தலும் இல்லாது போகையில்………ஆனந்தம் என்பது அனுபவித்தல் என்ற நுகர்தலை உடைத்ததாகையால்………

  ஆழ்நிலை உறக்கம் என்ற நிலை………ஆனந்தம் என்ற அனுபூதியை………. நுகர்தலைக் ……கொண்டதில்லையாதலால்……… அந்த நிலையை ஆனந்த நிலைஎன்று சொல்ல முடியாது என்று முனைவர் தன்னுடைய விளக்கத்தின் மூலமாக உணர்த்துவதாக அறிகிறேன்.

  என்னுடைய புரிதல் தவறாக இருந்தால் அதில் உள்ள பிழையை சுட்டி திருத்துங்கள்.

 9. ஆனந்த் சாகர் on August 27, 2015 at 11:39 am

  //எல்லாவற்றையும் அறியும் ஆன்மாவுக்கு இந்த உடலுக்குள் மாட்டிக் கொண்டோமென்றால் நம்முடைய எல்லாம் அறியும் அறிவு சுருங்கி விடுமே,//

  ஆன்மா எங்கும் எதிலும் வியாபித்திருக்கிறது. ஆன்மாவே எல்லாமுமாக இருக்கிறது. இருப்பது எல்லாமே ஒரே ஆன்மாவின் பல வகையான வெளிப்பாடுகள். அது தோற்றமோ மறைவோ இல்லாமல் என்றும் இருப்பது. எனவே அதன் அறிவு எந்த வகையிலும் குறைவதில்லை.

  // மனம் என ஒன்று வந்து நம் அறிவை மறைத்துவிடுமே என்ற அறிவு ஏன் தோன்றவில்லை.//

  பௌதீக வாழ்க்கையை அனுபவிப்பதற்காக பௌதீக மனதை ஆன்மாவே உருவாக்கி இருக்கிறது. பௌதீக மனம் பௌதீக உடல்/உலகம் சார்ந்து சிந்திக்கும். நாம் விழிப்பு நிலையில் இந்த மனதைக்கொண்டே சிந்திக்கிறோம்,செயல்படுகிறோம். இந்த மனதுக்கு ஆன்மாவை/ஆன்ம உலகை பற்றி தெரியாது. அதனால்தான் சாதாரண விழிப்பு நிலையில் ஆவி உலகத்தை பற்றியோ ஆன்மாவை பற்றியோ நமக்கு எதுவும் தெரிவதில்லை. ஆனால் நம் ஆன்மாவுக்கு அதனுடைய பௌதீக அனுபவம் உட்பட அனைத்தும் தெரியும்.

  //இந்த உடம்பு முதலியன ஆன்மாவுக்கு எப்படி வந்து சேர்ந்தன?//

  நம் உடம்பு உட்பட பௌதீக பிரபஞ்சம்/பிரபஞ்சங்கள் அனைத்தும் ஆன்மாவின் கற்பனையில், எண்ணத்தில் உருவாகி அதிலேயே இருக்கின்றன.

 10. ஆனந்த் சாகர் on August 27, 2015 at 3:42 pm

  //பௌதீக மனத்திச் செயல்படாதிருக்கச் செய இதுபோன்ற எத்தனையோ எளிய வழிகள் இருக்க, ஆன்மீகவாதிகள் இயமம் நியமம் முதலிய ஞான சாதனைகளையும் குருவருளையும் நாடிச் செல்லவேண்டும் எனக் கடினமான விதிகளை வகுப்பது எதற்கோ?//

  இயல்பான ஆழ்ந்த உறக்கமும் ஆழ்நிலை தியானமும் உடலுக்கு எந்த தீங்கும் செய்வதில்லை, மாறாக அவை உடல் நலமுடன் இருக்க செய்கின்றன. ஆனால் மற்ற வகைகளான விஷம் உண்டோ, போதை பொருளை உட்கொண்டோ அடையும் தன்னிலை மறந்த செயல்களால் உடல் நலம் கெட்டுவிடும். எனவே இந்த செயல்களை தவிர்க்க வேண்டும். இப்படி அடையும் தன்னிலை மறந்த நிலையை தியானதின்மூலம் அடையும் பிரபஞ்சத்தோடு இணையும் உணர்வோடு ஒப்பிடமுடியாது. தியானத்தின் மூலம் கடவுளோடு ஒன்றிணையும் அனுபவம் பெறுவது சிறந்த வழிமுறை. எனவே தான் ஆன்மீகவாதிகள் தியானம் செய்வதை பரிந்துரைக்கின்றனர். தியானம் செய்வது மிக எளிதானது. ஆன்மீக குருக்களிடமிருந்து(ஆசான்கள்) பல விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குரு அவசியம் இல்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குரு இருக்கிறார். நாம்தான் அந்த குரு!

  // ஆன்மாவுக்கும் பிரமத்திற்கும் வேறுபாடு இல்லையெனின், பிரமம் ஒளியா இருளா?//

  பிரம்மம் ஒளிமயமானது.

  // ஆழ் உறக்கத்தில் ஆன்மா அனுபவிப்பது இருளா ஒளியா?//

  ஆழ் உறக்கத்தில் நாம் நம் உடலைவிட்டு வெளியே சென்று, விழிப்படையும்போது உடலுக்குள் வந்துவிடுகிறோம்.

  // ஆன்மப் பிரகாசத்தின்முன் பாச இருள் நிற்கமுடியாது.//

  பாசம்(அன்பு) இருள் இல்லை. அது ஒளியின் ஒரு அங்கமே.

 11. S Dhanasekaran on August 27, 2015 at 4:06 pm

  சைவம் , அத்வைதம் இரண்டும் வேறுபட்டவை. அவை ஒருங்கிணையும் பொதுப் புள்ளி எதேனும் உண்டா என்று முனைவர் முத்துக்குமாரசுவாமி போன்றோர் விளக்கிடல் நன்று .

 12. ஆனந்த் சாகர் on August 28, 2015 at 1:50 pm

  //சைவம் , அத்வைதம் இரண்டும் வேறுபட்டவை. அவை ஒருங்கிணையும் பொதுப் புள்ளி எதேனும் உண்டா என்று முனைவர் முத்துக்குமாரசுவாமி போன்றோர் விளக்கிடல் நன்று .//

  ஹிந்துமத தத்துவங்களில் சைவம், வைணவம் என்பது வேறு தளம், த்வைதம்(duality), அத்வைதம்(non -duality ) என்பது வேறு தளம்.

 13. ஆழ்ந்த உறக்கம் சுழுத்தி அதாவது சுஸூப்தி என்று சொல்லப்படுகிறது. கருவிழி அசையாத தூக்கம் என்பது இதுவே. கருவிழி அசைவது கனவில் நடப்பதால் அது அறைகுறைத்தூக்கம் எனவே உடலுக்கு ஓய்வு முழுமையாகக்கிடைப்பதில்லை. ஆகவே ஆழ்ந்த தூக்க நிலையில் நாம் கடவுளுடன் ஒன்றிவிடுவது நடப்பதில்லை. துரியம் கடந்து துரியாதீத நிலையில்தான் அகம் ப்ரம்மாஸ்மி என்ற ஒன்றிய நிலை சாத்தியம். ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசாயர் சொல்லியிருப்பது போல நாம் எப்போதும் இறையாவே இருக்கிறோம். வீரசைவம் லிங்காங்க சாமரஸ்யம் பேசும். சிவமாகிய மஹாலிங்கத்தின் அங்கமாக எப்போது நாம் இணைந்தே இருக்கிறோம் என்பதே அது. ஆனால் அதை நாம் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைப்பற்றி இருப்பதால் உணரமுடிவதில்லை. ஜபம், த்யானம் முதலிய சாதனைமூலம் குருவருள் துணைக்கொண்டும் தத் துவ மசி மஹாவாக்கிய ஆராய்ச்சியாலும் நாம் மேலான துரியாதீத நிலையில் பாவனாதீத நிஷ்டைக்கூடி திரிபுடி நீங்கி சிவத்தோடு ஒன்றிடலாம். சிவசிவ

 14. அத்வைதமும் சைவமும் வேறு என்று தனசேகர் என்ற அன்பர் சொல்லியுள்ளார். இரண்டும் ஒன்றும் புள்ளி எங்கே என்று கேட்டுள்ளார். சமயம் என்ற வகையில் சைவம் வரும். தத்துவம் என்ற வகையில் த்வைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் ஆகியவேதாந்த அணுகுமுறைகள் வரும். சைவசமயத்தில் பாசுபதம், சித்தசித்தாந்தம் என்ற நாத்சைவம், காஸ்மீரசைவம், சிவாத்வைதம், வீரசைவம், சைவசித்தாந்தம் என்ற ஆறு பிரிவுகள் இன்னும் சிறப்பாக உள்ளன. சைவத்தில் வேதத்தினை முழுமையாக ஏற்கும் பிரிவுகளும் உண்டு. வேத நெறிக்கு இயையாத தாந்த்ரீக மரபுகளான கபாலாம், லகுலம், பாசுபதம், மாவிரதம், போன்றவையும் சைவத்தில் உண்டு. சைவசித்தாந்தம் அத்வைதத்தினைப்பேசுகிறது. அது வைதீகசுத்தாத்வைதம் எனப்படும். ஆன்மாவும் இறையும் ஒன்றாய், வேறாய் உடனாய் உள்ளன என்பதே சுத்தாத்வைதம் ஆகும். வீரசைவர் நமது உயிருருக்கு உயிராய் இறைவன் உள்ளான் என்பார். தமிழ் சைவத்தின் மூல குரு நாதர் திருமூலர் மஹாவாக்கிய ஆராய்ச்சியைப்பேசுகிறார். தத்துவ மஸிவாக்கியத்தினை எப்படி செய்வது என்று மிகத்தெளிவாக சொல்கிறார். துவம் தத் அசி என்று சொல்லி ஆன்மா ஆன்மாவுக்கு ஆன்மாவான சிவன் அதற்கும் ஆதாரமான பரன் ஆகியவற்றை ஆய்ந்து அறிய வழிகாட்டுகிறார். அவரது மஹாதத்துவ ஆராய்ச்சி முறை சங்கரருடைய கேவலாத்வைத முறையிலிருந்து வேறுபட்டது. அதைத்தான் சசிவண்ணபோதம் மற்றும் குமாரதேவரின் சாஸ்திரக்கோவையில் காண்கிறோம். சைவத்தில் வேதாந்த சித்தாந்த சமன்வயம் பேசப்படுகிறது. கேவலாத்வைதிகள் எப்போதும் இருப்பது பிரம்மம் மட்டுமே என்று சாதிக்கிறார்கள். சைவர்கள் ஆன்மா, இறை, பாசம் மூன்றும் நித்தியம் என்றாலும் முக்தி நிலையில் ஒன்றாய் சாயுஜ்யம் அத்வைதம் சாத்தியம் என்றார்கள். சித்தாந்திகள் வேதாந்தத்தினை நூல்களைப்புரிந்துகொள்ளலாம். வேதாந்திகள் சித்தாந்த நூல்களின் தாத்பரியத்தினை உணரலாம். ஆனால் அபிராஹாமியர்கள் இவற்றைப்புரிந்துகொள்ளல் சாத்தியம் இல்லை. அபிராஹாமியத்தினை விட்டு வெளியவந்தால் மட்டுமே சாத்தியம். சிவோஹம் சிவோஹம் சிவஸ்வரூபோஹம்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*