ஓர் இதழியல் கனவு…

September 11, 2015
By
மகாகவி பாரதி (நினைவு தினம்: செப். 11)

மகாகவி பாரதி
(நினைவு தினம்: செப். 11, 1921)

.

ரு பத்திரிகை செய்தியுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்தபோது, அவரது உடலை நல்லடக்கம் செவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தார் கணேசன் என்ற தொழிலாளி. கபரிஸ்தானில் குழி தோண்டுவது தான் அவரது தொழில். ஊரெல்லாம் கலாமின் புகழ் பாடிக் கொண்டிருந்தபோது, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் தில்லி பதிப்பில், கலாமின் உடல் நல்லடக்கத்துக்காக குழி தோண்டிய தொழிலாளியின் நேர்காணல் முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. யாரும் அறியாத, அடையாளமற்ற ஒருவரின் நேர்காணல் முக்கியமான நாளிதழில் முதல் பக்கம் வந்தது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இதே போன்ற ஒரு நிகழ்வு அமெரிக்காவிலும் நடைபெற்றது. 1963-ல் அந்நாளைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி கொல்லப்பட்டபோது, அவருக்காக சவப்பெட்டி தயாரித்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவரின் பேட்டி அமெரிக்க நாளிதழ் ஒன்றில் வெளியானது. கென்னடியின் நல்லியல்புகளை அந்த நேர்காணலில் அழுகையுடன் பட்டியலிட்ட அந்தத் தொழிலாளியின் நேர்காணல், அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, ‘கண்ணுக்குப் புலப்படாத இதழியல்’ (INVISIBLE JOURNALISM) என்ற வார்த்தை உருவாகக் காரணமானது. அத்தகைய வரவேற்பு, கலாமின் நல்லடக்கத் தோழருக்குக் கிடைக்காமல் போனது ஏன்?

ஏனெனில், இங்கு இதழியல் தடம் மாறிவிட்டது. இங்கு பரபரப்பை விற்பதும், பக்கத்தை (தொலைக்காட்சி என்றால் நொடிகளை) பணமாக்குவதும் தான் இதழியல் ஆகிவிட்டிருக்கிறது. தடுமாறும் நமது இதழியலாளர்களுக்கு அதிகாரத் தரகர் நீரா ராடியாவின் ஒலிப்பேழைகள் சாட்சியமாக இருக்கின்றன.

நமது இந்திய ஊடகங்கள் முன்னேர் உழுததை பின்னுழும் பின்னேர் போல ஆங்கில ஊடகங்களின் நகலாக்கம் ஆகிவிட்டன. ஆயினும், ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸின் நல்லதொரு செய்தி தமிழகத்தில் கூட பரவலாகத் தெரிய வரவில்லை. இதிலும்கூட, நமது ஊடகங்களுக்கு தெளிவான ஒரு தேர்விருக்கிறது. இந்தச் செய்தி வந்தால் நமக்கென்ன லாபம் என்ற அணுகுமுறையே இங்கு எல்லாச் செய்திகளையும் தீர்மானிக்கிறது. அதுதான் பிரச்னை.

இந்திய- பாக். போரின் பொன்விழா கொண்டாட்டம்

இந்திய- பாக். போரின் பொன்விழா கொண்டாட்டம்

ஹைதராபாதில் ஓர் உதவி காவல் ஆவாளர் இருக்கிறார். அவரது பெயர் சையத் மொய்னுதீன். அவர் வேலைக்குச் செல்லும்போது நான்கு பாட்டில்களில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு செல்வார். சாலையில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் அன்றாடம் ஈடுபடும் அவர், அந்த வழியே பெட்ரோல் இல்லாமல் வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாகவே தன்னிடமுள்ள பெட்ரோலை வழங்குகிறார். இந்தச் சேவையை அவர் பல்லாண்டுகளாக செய்து வருகிறார். இந்தச் செய்தி ஹைதராத்திலேயே நிறையப் பேருக்குத் தெரியுமா என்பது சந்தேகம். பெட்ரோல் நிலையம் வைத்துள்ள செல்வந்தரின் குடும்பத் திருமணத்துக்கு வந்தவர்களை புகைப்படம் எடுத்து வெளியிடும் பத்திரிகைகளை வேண்டுமானால் நாம் அடிக்கடி பார்த்திருக்கலாம்.

நமது ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கிற்கு சமீபத்திய உதாரணம் ஒன்று உண்டு. 1965-ல் இந்தியா மீது போர் தொடுத்த பாகிஸ்தானை நமது வீரர்கள் அளப்பரிய உயிர்த் தியாகத்தால் வென்று அந்த நாட்டுக்கு நல்ல பாடம் கற்பித்தனர். அந்தப் போரைத் தொடர்ந்து நடைபெற்ற தாஷ்கண்ட் பேச்சுவார்த்தையில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியையும் நாம் அநியாயமான முறையில் இழந்தோம். ஆயினும் நமது ராணுவத்தின் வலிமையை உலகிற்கு பறைசாற்றிய நிகழ்வு 1965 இந்திய-பாக். போர் எனில் மிகையில்லை.

அந்தப் போரின் பொன்விழா ஆண்டை தற்போதைய மத்திய அரசு கொண்டாடியது. அப்போது நிகழ்ந்த இரு விரும்பத் தகாத நிகழ்வுகள் நமது தர வீழ்ச்சியை வெளிப்படுத்தின. முதலாவதாக, இந்தக் கொண்டாட்டத்தை முன்னாள் ராணுவவீரர்கள் புறக்கணித்தது. ‘ஒரு பதவி- ஒரே ஓய்வூதியம்’ என்ற அவர்களின் கோரிக்கை தொடர்பான போராட்டங்களைத் தொடர்ந்து அரசு பேச்சு நடத்திக் கொண்டிருந்த நிலையில், அரசை நிர்பந்திக்கும் விதமாக, இந்தக் கொண்டாட்டங்களை முன்னாள் ராணுவ வீரர்கள் புறக்கணித்தனர். தங்கள் முந்தைய போர் வெற்றி குறித்த பெருமிதத்தை இவ்வாறு அவர்கள் விலை பேசலாமா? இதை எந்த ஊடகமும் கேட்கவில்லை. மாறாக, இந்த வெற்றி விழா நடந்ததாகவே பல முன்னணி தொலைக்காட்சி ஊடகங்கள் காட்டிக் கொள்ளவில்லை.

அவர்களுக்கு ஒளிபரப்ப அதைவிட மிக முக்கியமான செய்தி கிடைத்துவிட்டது. கலாசாரச் சீர்கேட்டின் உதாரணமான இந்திராணி முகர்ஜி என்ற பெண்மணி தனது மகளையே கௌரவக்கொலை செய்துவிட்டார். அவரது முதல் கணவர் யார்? இரண்டாவது கணவர் யார்? மூன்றாவது கணவரின் மகனுக்கும் இந்திராணியின் முதல் கணவரின் மகளுக்கும் என்ன உறவு இருந்தது? அவரது மகள் ஷீனா போரா எப்படிக் கொல்லப்பட்டார்? இவை தான் இந்திய-பாக் போரின் பொன்விழா நாளில் விலாவாரியாக ஒளிபரப்பப்பட்டன.  இது இரண்டாவது வருத்தத்திற்குரிய விஷயம்.  இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் மற்றொரு ஊடக மன்னர் என்பது குறிப்பிட வேண்டிய அதிமுக்கிய விஷயம்.

முன்னாள் ராணுவத்தினரின் ஒரே பதவி- ஒரே ஓய்வூதியம் போராட்டம்

முன்னாள் ராணுவத்தினரின் ஒரே பதவி- ஒரே ஓய்வூதியம் போராட்டம்

இந்திய – பாக். போரின் பொன்விழாவை இருட்டடிப்புச் செய்யும் அளவுக்கு ஒரு குற்றவியல் நிகழ்வு கிடைத்தால் போதும். நமது ஊடகங்கள் நரகலைத் தின்னும் பிராணி போலத் தான் அலைகின்றன. அதனால் தான், பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்,  ‘நமது தொலைக்காட்சி ஊடகங்கள், இந்திய- பாக். போர் பொன்விழாவைப் புறக்கணித்துவிட்டன’ என்று வருந்தினார்.

இதுவாயினும் பரவாயில்லை. தமிழின் முன்னணி தேசிய நாளிதழான தினமணி ‘தேவையற்ற கொண்டாட்டம்’ என்று 1965 வெற்றியையே விமர்சித்து தலையங்கம் எழுதியது. தினமணியே இந்த நிலையில் இருந்தால், மற்றவர்களைப் பற்றிச் சோல்ல வேண்டியதில்லை. போர் நினைவுச் சின்னம் அமைப்பதாக அறிவித்த மோடி அரசு அதை மறந்துவிட்டு, போரின் பொன்விழா நடத்துவது அர்த்தமற்றது என்றது தினமணி. ஆனால் உண்மை என்ன?

தில்லியில் இந்தியா கேட் அருகே ராணி பூங்கா பகுதியில் போர் நினைவுச் சின்னமும், போர் அருங்காட்சியகமும் ரூ. 400 கோடி மதிப்பில் அமைப்பது என்று 2014 ஆகஸ்ட் 21-ல் ராணுவத் தளபதிகள், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் அடங்கிய கூட்டத்தில் முடிவானது. அதற்கான நடவடிக்கைகள் தற்போதும் தொடர்கின்றன. ஆனால், அரசு ஒதுக்கிய ரூ. 100 கோடி திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்று தினமணி கூறுகிறது. எந்த ஒரு செய்தியையும் வெளியிடும் முன் சரிபார்ப்பது பத்திரிகை தர்மம் அல்லவா? தவறான தகவலை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அரசின் நல்ல நோக்கத்தை விமர்சிப்பதை, இதழியலின் தடுமாற்றம் என்றுதானே கொள்ள வேண்டும்?

கடந்த செப்டம்பர் 3 அன்று கம்யூனிஸ்டு சீனா, இரண்டாம் உலகப்போரில் தனது வெற்றியின் 70-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. அது உலகம் முழுவதும் முக்கிய செய்தியாகப் பரவியது. அந்த விழா சீனாவின் தற்போதைய ராணுவ பலத்தையும் வெளிப்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் தான் ஒரு நாட்டின் கௌரவமாக அமைந்து, அந்த நாட்டை வலுப்படுத்துகின்றன. இதை போர்வெறியாகக் கருத வேண்டியதில்லை. உலகம் முழுவதிலுமே இத்தகைய நிலைப்பாடு தான் அனுசரிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் தான் தேவையற்ற கொண்டாட்டமாக இது காணப்படுகிறது. நமது ஊடகங்களின் பார்வைக் கோளாறு தான் இதற்குக் காரணம்.

நமது ஊடகங்கள் ஆரம்பகாலத்தில் அற்புதமான தேசத் தலைவர்களால் வழிநடத்தப்பட்டன. நாட்டின் விடுதலை வீரர்கள் பலரும் பத்திரிகையாளர்களே. பாலகங்காதர திலகர், சித்தரஞ்சன் தாஸ், மகாகவி பாரதி, பிபின் சந்திர பால், சுதேச மித்திரன் சுப்பிரமணிய அய்யர், மகாத்மா காந்தி, நேரு, கோகலே, கோவிந்த ரானடே,  அரவிந்தர், வ.வே.சு.அய்யர், வ.உ.சி,  … தொகுத்தால் பட்டியல் நீளும். ஆனால், இன்று சுயநலக் கும்பல்களின் கரங்களில் சிக்குண்ட பதுமையாகிவிட்டது இந்திய ஊடகத் துறை. இவர்களுக்கு நல்ல செய்திகள் கண்ணுக்குத் தெரிவதில்லை; நாட்டின் நலனைக் கேள்விக்குள்ளாக்கும் அநாவசிய செய்திகளுக்கு இவை இடமளிக்கத் தயங்குவதுமில்லை.

அப்துல் கலாம்- கனவு நனவாகுமா?

அப்துல் கலாம்- கனவு நனவாகுமா?

மறுபடியும் கலாமிடமே வருவோம். அவர் ஒருமுறை இஸ்ரேல் சென்றிருந்தார். தலைநகர் டெல் அவிவில் அவர் தங்கியிருந்த விடுதி அருகே பெரிய குண்டுவெடிப்பு. அதில் சிலர் இறந்த தகவல் கலாமுக்கு கிடைத்தது. மறுநாள் அந்த நாட்டின் பத்திரிகைகளில் மேற்படி செய்தியைத் தேடினார். நம் நாட்டில் என்றால் அந்தச் செய்தி தான் முதல் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். ஆனால், இஸ்ரேல் பத்திரிகைகளில் அந்த செய்தி ‘கண்ணுக்குத் தெரியாத மூலை’யில் (INVISIBLE CORNER OF NEWSPAPER) பிரசுரமாகி இருந்தது. அதேசமயம், விவசாயத்தில் சாதனை புரிந்த ஒரு விவசாயி குறித்த செய்தி தான் தலைப்புச் செய்தியாக முதல் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.

இதை அப்துல் கலாமே பல நிகழ்ச்சிகளில் கூறி இருக்கிறார்.  ‘நமது ஊடகங்களும் இஸ்ரேல் பத்திரிகைகள் போல ஆக்கப்பூர்வமாக மாறுவது எப்போது?’ என்று அடிக்கடி அவர் கேள்வி எழுப்பி வந்தார்.

நமது நாட்டை வலுப்படுத்தும் ’கண்ணுக்குப் புலப்படாத’ செய்திகள் நமது ஊடகங்களில் பிரதானமாக இடம் பெறும் நாள் எந்நாளோ? ‘கண்ணுக்குத் தெரியாத மூலை’யில் எப்போதேனும் இடம்பெறும் அத்தகைய செய்திகள் நமது ஊடகங்களில் முதன்மை பெறும்போது தான், நாடு நலம் பெறும்.

அதற்காக கலாம் போல இப்போதைக்கு நாமும் கனவு காண்போம்.

.

(இன்று தமிழ்த்தாயின் தலைமகன்,

தமிழ் இதழியலின் முன்னோடி

மகாகவி பாரதியின் 94-வது நினைவு நாள்).

.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

18 மறுமொழிகள் ஓர் இதழியல் கனவு…

 1. அருமையானக்கட்டுரை. நமது நாட்டினுடைய ஊடகங்களும் சரி நமதுமாநிலத்தில் உள்ளவையும் சரி நல்ல உயர்ந்த விடயங்களை மக்களுக்குக் கொண்டு செல்லாமல் தரங்கெட்ட செய்திகளைக்கொண்டு செல்கின்றன என்பதை சேக்கிழார் மிக அழகாக ஆதாரத்தோடு கட்டுரையாக வரைந்துள்ளார். பாராட்டுக்கள். இது ஏன் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று ஊடகங்கள் சொல்வதற்கு வாதிடுவதற்கு வாய்ப்பில்லை. ஊடகங்களை யார் தமதுக் கரங்களில் வைத்திருக்கிறார்கள். யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்று பார்க்கவேண்டும். பணத்தாசைமட்டும் கொண்டக் குறிக்கோளற்றவர்கள் ஒரு புறமும். இடதுசாரிகள் போலிமதச்சார்பின்மைவாதிகள் ஒருபக்கம். கிறிஸ்தவ மதமாற்றும் மிஷ நரிகள் ஒரு பக்கம் என்று மூன்று தரப்புகளை நாம் கவனிக்கமுடிகிறது. பாரதிய தேசபக்தத்தரப்பு என்று ஒரு வலுவான ஊடகத்தரப்பைக்காணவே முடியவில்லை. சில பஜனை கோஷ்டி(அடியேன் நாம சங்கீர்த்தனங்களை உயர்ந்த சாதனம் என்று ஏற்றுப்போற்றுபவனே எனினும்) ஊடகங்கள் உள்ளன. அவற்றுக்கு அரசியல் பண்பாட்டு நிலைப்பாட்டில் தெளிவில்லை. ஆகவே தேசபக்தர்கள் ஒன்றிணைந்து ஒளி-ஒலி அச்சு ஊடகங்களை உருவாக்கவேண்டும். இல்லாவிட்டால் பப்ளிக் ஒபீனியன் மேக்கர்களால் தேசியத்துக்கும் ஆபத்துவரும். ஹரஹர மஹாதேவ சிவசிவ.

 2. U.VENKATESAN on September 11, 2015 at 5:42 pm

  அருமையான செய்தி .

 3. கோ. ஆலாஸ்யம் on September 11, 2015 at 6:14 pm

  சமூக அக்கறை என்பதைப் பற்றிய அக்கறை மன்னனிடமும் இல்லை! அதனால் மக்களிடமும் இல்லை!
  என்ன செய்வது பள்ளிப் பாடங்கள் அப்படி!

  இன்னும் நூறு கலாம்கள் வேண்டும் இந்த அழுக்கு முலாம்களை தேய்த்தெடுக்க!

 4. somu.v. on September 11, 2015 at 6:38 pm

  Very Interesting Article! V.Somu.

 5. Manuel Jesudasan on September 11, 2015 at 8:49 pm

  மிக அருமையான கட்டுரை. கட்டுரையாளரின் துணிவை பாராட்டுகிறேன்.

 6. ஒரு அரிசோனன் on September 12, 2015 at 4:26 am

  ஊடகங்கள் — ஊ[ழல் பிடித்த செய்திகளை வளர்க்கும் இருப்பி]டங்கள்! வேறென்ன சொல்ல!

 7. சுதேசி நா. ஆறுமுகம் on September 12, 2015 at 7:17 am

  இன்றைய இதழ்களின் வெளிபாடு தன்மை அழகாக சொல்லியிருக்கிறார் சேக்கிழார் .
  இன்று புனைப்பெயர்கள் வைப்பவர்கள் கூட தன்னை தாழ்த்தி கொண்டு பரதேசி. அடிவருடி. என்று வைத்துக்கொள்கிறார்கள்.. தன்மீதே தன்னம்பிக்கையற்று இவர்கள் மற்றவர்களையும் நன்பிக்கையற்ற நபர்கள் ஆக்க முயற்சிப்பதும. இந்த தேச முன்னோடிகளை குறிப்பிடாமல் சில ஆண்டுகளுக்கு முன் புரட்சி செய்தவர்கள் என்ற கணக்கில் அவர்களை தன் புனை பெயர்களால் கொள்வதும். நீண்ட நெடிய எல்லா கதாபாத்திரங்களையும் உள்ளடக்கிய தர்ம சிந்தனை கொண்ட நம்மவர்களையும் நாம் அவர்களின் வழி தோன்றல் எனக் கூறிப்பிடுவது கூட நமது புதிய சிந்தனையாளர்களுக்கு தர்ம சங்கட்டமான நிலையில் உள்ளனர். குறிப்பாக மகாபாரத நகுலன் பற்றி சொல்ல வேண்டும் என்றால் … மிகப்பெரிய வானியல் சாஸ்திரம கற்றவர் அவரிடம தனது குடும்ப எதிரியான துரியோதனன் வந்து போருக்கு நாள் குறித்து கேட்டவுடன் சிறிதும் முகம் சுளிக்காமல் தன் சகோதரர்களையே அழிக்க சரியான நாள் குறித்து கொடுத்த தர்மவன் நகுலன். இந்த நகுலனை மிகப்பெரிய புரட்சியாளராக புதிய சிந்தனையாளர்களாக சித்தரிக்கபடுபவர்கள் காட்டுவதில்லை இவரின் பெயரால் கூட தன்னை அறிமுகம செய்து கொள்ளுவதில்லை……….. ஆனால் தன் தேசத்திற்கு எதிராகவே போர் செய்த பலபேர் புனைப்பெயர்களாக வலம் வருகின்றனர்…. இதுதான் இக்கால சிந்தனை

 8. sundarsvpr on September 12, 2015 at 12:08 pm

  உபயோகமான பொருள்களை உபயோகிப்பதில் உச்சவரம்பு உள்ளான. நல்லது ஆனால் தொலைகாட்சியில் நிகழ்ச்சிகளுக்கு வரம்பு இல்லை பண்டிகை நாட்களில் தொலைகாட்சி நிகழ்வுக்குள் முழுமையாக திரைப்படம் சம்பந்தப்பட்டது தான் பண்டிகையின் சிறப்பு அம்சம் ஒரு துளி கிடையாது இந்த மனோபாவம் மாறாதவரை நாளிதழ்களில் செய்திகளை பொழுது போகாமல் பணி ஓய்வு பெற்றவர்கள்மட்டும் வரி விடாமல் படிப்பார்கள்

 9. R.Krishnamoorthy on September 12, 2015 at 12:10 pm

  கணேசனின் பேட்டியை இந்தக்கட்டுரையோடு சேர்த்து வெளியிட்டிருக்கலாம், ‘இந்து ‘ படிக்காதவர்கள் தெரிந்துகொள்ள வசதியாக.

 10. க்ருஷ்ணகுமார் on September 12, 2015 at 12:52 pm

  மிக அருமையான தகவல் தொகுப்பிற்கு வாழ்த்துக்கள் ஸ்ரீ சேக்கிழான். மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அவர்களுடைய சித்திரத்தைத் தலைப்பில் தாங்கிய வ்யாசத்தில் அவரது நினைவு நாளருகாமையில் அன்னாருடைய இதழியல் பங்களிப்புகளைப் பற்றிய கருத்துக்களும் இடம்பெறுமோ என ஆவலுடன் வாசித்தேன். அந்நினைவுகளைத் தனியாகத் தொகுத்து வழங்குங்கள்.
  ஊடகங்கள் முழுதும்…………… கொலைவெறி பிடித்த இடதுசாரிகள் மற்றும் தேசத்தை விற்றுக்காசாக்க விழையும் பரங்கிய ஆப்ரஹாமிய மிஷ நரிகள்………… இவர்களது கைக்கூலிகளால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள போது ……………..அண்டைய நிலப்பரப்புடனான யுத்தத்தில் தேசம் பெற்ற மாபெரும் வெற்றியைத் தேசம் கொண்டாட விழைந்ததை………….. இந்த பரங்கி மிஷ நரிகளின் கைக்கூலிகள் ஏறெடுத்தும் பார்ப்பார்கள் என்று நினைப்பது கூட மதிஹீனமே.

  உளுத்துப்போன போலி இடதுசாரி மேட்டிமை மிஷ நரிகளுக்குக் காவடி தூக்கி …………..சைவம், வைஷ்ணவம், ஜைனம், பௌத்தம், சீக்கியம், நாட்டார் வழிபாடுகள் இவற்றை உள்ளடக்கிய ஹிந்து மதத்தை……….. வேணமுட்டும் இழிவு செய்து……….. அதற்காக பரங்கிப் பிச்சைக்காசில் வயிறு வளர்க்கும் தொழிலைக் கூசாது செய்வது தானே ஊடகச் செயல்பாடு.

  பச்சைப்புளுகுகள், அரை உண்மைகள் என்று செய்திகளைத் திரித்து தொடர்ந்து தேச விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது தானே இந்த ஊடக வழிமுறை.

  நமது தள வாசகர்கள் பலருக்கும் அறிமுகமாக இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் கடந்த மாதத்தில் ஊடகங்கள் பரப்பிய புளுகுமூட்டைகள் என்னென்ன அதற்கு எதிரான சரியான செய்திகள் என்ன என்று ஊடகங்களின் முகத்திறையைக் கிழிக்கும் ஒரு தொகுப்பு கடந்த ஓரிரு மாதங்களாக http://www.opindia.com என்ற இணையதளத்தாரால் தொகுக்கப்பட்டு வருகிறது. இந்த இணையதளம் இதுவரை அறிமுகமாகாத வாசகர்கள் இதை வாசித்துப் பார்க்கவும்

 11. S Dhanasekaran on September 12, 2015 at 1:25 pm

  பாரதி “வாழ்க நீ எம்மான் எந்த வையத்து நாட்டில் எல்லாம் “.

 12. S Dhanasekaran on September 12, 2015 at 1:32 pm

  எனது முந்தைய பதிவில் உள்ள ‘எந்த’ என்ற வார்த்தையை ‘ இந்த’ என்று படிக்கவும். நன்றி.

 13. BS on September 12, 2015 at 7:59 pm

  The masthead above looks beautiful.
  Your layout artist has a good color sense and knows how to collage images correctly.
  Convey my appreciation to him, couldn’t you?

 14. edwin on September 12, 2015 at 10:01 pm

  very important and useful article slowly we are loosing all the good aspects
  in our society May God bless our people and nation

 15. g ranganaathan on September 13, 2015 at 5:00 pm

  திரு சுப்ரமண்யம் சுவாமி அவர்கள் Presstitue என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். அது முற்றிலும் இந்திய ஊடகங்களுக்கு பொருந்தும். சவுதி அரேபியா தூதரக அதிகாரியின் பாலியல் வன்கொடுமை பற்றி எந்த தொலைக்காட்சியும் விவாதிக்கவில்லை. ஏனெனில் சிறுபான்மையினரை புண் படுத்தக்கூடாது. இறைச்சி தடை பற்றி கூக்குரலிட்டு கொண்டு இருக்கின்றன

 16. கோ.கார்த்திகேயன்- ஈரோடு. on September 14, 2015 at 1:04 pm

  அருமையான கண்ணோட்டம். தங்களது எழுத்து, உங்கள் ஆதங்கந்தை மட்டுமல்ல, இதழியலில் தங்களுக்கு உள்ள ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது. செயல்படத்
  தூண்டும் தங்கள் எழுத்துப் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.

 17. ramamurthy on September 15, 2015 at 9:03 pm

  இக்கட்டுரையின் அனைத்து கருத்துகளும் சிறந்தவை. அவைகளை வெளிபடித்திய அன்பருக்கு என் வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள். இன்றைய தமிழ் வூடகங்கள் குறிப்பாக தொல்லைக்காட்சி வூடகங்கள் முதன்மை படுத்தும் விடயங்கலாவது 1) சினிமா சார்ந்த செய்திகள், 2) சினிமா vip நபர்களை சார்ந்த அல்லது அவர்களின் குடும்பம் சார்ந்த செய்திகள், 3) சினிமா நபர் anchor செய்யும் நிகழ்சிகள், 4)திரைப்படங்கள் வுருவக்கும் செய்திகள் 6) கிசுகிசுப்புகள் என்று காலை-இரவு வரை பார்வையாளர்களுக்கு வழங்குகின்றன. நம் இளைஞர் மற்றும் குடும்பத்தினர் பெரும்பாலனோர் ஈர்க்கப்பட்டு சினிமா மோகம் என்ற வலையில் சிக்கி திளைக்கின்றனர். இன்றைய சமூக வோட்டத்தில் எந்த ஈடுபாடும் இல்லாமல் அந்நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கின்றனர். தமிழ் வூடகங்கள் எந்த அளவுக்கு சிந்தனை திறன்களை வளர்க்கின்றன என்று நாம் வருத்தப்படும் நிலையில் வுள்ளோம். கலை, அறிவியல் முன்னெற்றம், பொருளாதாரம், சமூகம், உலக நிகழ்வுகள், விவசாயம், நீராதாரம், சுற்று சூழல் ஆகிய செய்திகளோ, நிகழ்சிகளோ மிக மிக குறைவாகவே உள்ளன. நொடிகளை பணமாக்கும் நோக்கமே இதற்கு காரணம். இதில் வெற்றி காண எளிதான வழி சினிமா செய்திகளை முன்னிறுத்துவதே.

 18. Karthick rajendran on September 15, 2015 at 11:18 pm

  நிஜமாய் நிஜத்தை பேசிய கட்டுரை…நன்றி

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*