மீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)

“மீனாம்பா பாட்டி காலம் ஆகிவிட்டது.  அவ போய்ச்சேந்துட்டா.  நீ ஒரு முழுக்குப்போட்டுடு.” என்ற என் அம்மாவின் கார்டைப் பார்த்ததும் என் கண்கள் பனித்தன.  மேலே எழுதிய எழுத்துக்கள் தெரியாமல் மறைந்தன.  மீனாம்பா பாட்டிதான் எவ்வளவு அதிர்ஷ்டம்கெட்டவள்!  உறவுக்குச் செய்துசெய்தே ஓய்ந்து உருக்குலைந்துபோனவள் அவள்!  என் தொண்டை அடைத்தது.  என் நினைவு பின்னோக்கிச்சென்றது…

paatti4எனக்கு நினைவுதெரிந்து பார்த்ததில் இருந்து, கடைசித்தடவை பார்த்துவிட்டு  வந்ததுவரை மீனாம்பா பாட்டி மாறவே இல்லை.  அதே மழித்த மொட்டைத்தலை, உடம்பைச் சுற்றிய அழுக்கேறிய, ஆனால், தண்ணீரில் நனைத்துத் துவைத்துக்கட்டிய பழுப்பேறிய வெள்ளைப்புடவை.  பறக்கப்பறக்கப் பார்க்கும் பார்வை.  நடக்கும்போது இங்குமங்குமாக உதறும் கைகள்.  இருபது ஆண்டுகளாக மாறாத வடிவம்…

“கண்ணா!  இதுதான் என் அக்கா.  உன் பெரியபாட்டி.  நமஸ்காரம் பண்ணிக்கோ.” என்று என் தாய்வழிப்பாட்டி எனக்கு ஆறுவயது இருக்கும்போது மீனாம்பா பாட்டியை அறிமுகப்படுத்தியது நன்றாக நினைவில் இருக்கிறது. அவர்களை வணங்கி எழுந்ததும் என் கண்ணில் பட்டது அவர்களுடைய மழித்ததலைதான்.

முதன்முதலாக ஒரு அந்தணக் கைம்பெண்ணைப் பார்க்கிறேன் நான்.  அவர்கள் கைம்பெண் என்று அறியும் அறிவுகூட எனக்கு இல்லை.  எனக்குள் தோன்றியது இதுதான்.  ஏன் இவர்கள் மொட்டை அடித்து இருக்கிறார்கள்?

“பெரியபாட்டி, நீ எந்த கோவில்லே மொட்டை போட்டே?  என்ன வேண்டுதல்?” என்று கேட்டதும், என் பாட்டி, “பெரியவாளை இப்படியெல்லாம் கேட்கக்கூடாது!” என்று கண்டித்ததும் நினைவுக்கு வருகிறது.

“ஒரு அல்பாயுசுல போன பாவிக்காகத்தான்…” என்று மீனாம்பா பாட்டி அலுத்துக்கொண்டதும் என் காதில் ஒலிக்கிறது.

“அல்பாயுசுல போன பாவி யாரு?” என்று நான் குழந்தைத்தனமாகக் கேட்டததற்கு, “என் ஆம்படையான் பாவிதான்.  நான் பெரியவள் ஆகறதுக்குள்ளையே குளத்துலே விழுந்து போய்ச்சேந்துட்டான்.  என் மஞ்சள், குங்குமம், தலைமயிர் எல்லாத்தையும் எடுத்துண்டு, மொட்டச்சியா விட்டுட்டுப் போயிட்டான்.” என்று மீனாம்பா பாட்டி வரட்டுச்சிரிப்புடன் கூறியதும், என் பாட்டி, “அக்கா.  ஒரு சின்னக்குழந்தை கிட்ட என்னத்தைதான் சொல்றதுன்னு இல்லையா?” என்று கடிந்துகொண்டதும் கேட்கிறது.

அப்பொழுது அதற்குப் பொருள் எனக்குப் புரியவில்லை.  புரியும் வயது வந்தவுடன் நான் திடுக்கிட்டுப்போனேன்.  அறியாவயதில் திருமணம்.  ஒரே ஆண்டில் குளத்தில் நீந்திக்குளிக்கச்சென்ற கணவன் நீரில் மூழ்கி இறந்துபோனான்.

பருவம் வந்ததும், சுமங்கலிகளை அழைத்து, மஞ்சள் நீராட்டி, பட்டுப் புத்தாடை உடுத்தச்செய்து சீராட்டவில்லை.  மகிழ்ச்சியாகச் சிரித்து, பாட்டுப் பாடி, நல்வாழ்த்துக்கூறி, வாழ்த்திப் புகழவில்லை.

mp3 (2)மாறாக, நாவிதரை வீட்டுக்கு அழைத்து, தலைமயிரை மழிக்கச் செய்து, அமங்கலிகளைக்கொண்டு, வெள்ளை ஆடை உடுத்திவிட்டு, ஓவென்று அழுதார்கள்.  “பாவி மகளே, இப்படி ஆய்விட்டியே!  இனி யாராத்தில் இடிசோறு திங்கப்போறியோ!” என்று சுமங்கலியான அவளது அம்மா கதறினார்களாம்.

தன் மகளை விதவைக்கொலத்தில் பார்த்து நெஞ்சு உடைந்த என் பாட்டியின் அப்பா, ஒரே ஆண்டில் போய்ச்சேர்ந்தாராம்.  தாயும், மகளும், ஒரேமாதிரி மழித்ததலையுடனும், வெள்ளை உடையுடனும் வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பார்களாம்.

கைம்பெண்களான தாயும், மகளும், என் பாட்டியின் அண்ணா வீட்டில் காலத்தைக் கழிப்பார்களாம்.

எந்த உறவினர் வீட்டிலும், நல்ல நாள்களில் என்ன வேலை என்றாலும், தாயும் மகளும் சேர்ந்து செல்வார்களாம்.  வேலையைச் செய்துவிட்டு, யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருப்பார்களாம்.

என்  தாத்தா வாங்கிய ஒரு வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு வேலைசெய்வதற்காக வந்தபோதுதான் மீனாம்பா பாட்டியை முதன்முதலாகப் பார்த்தேன்.

மங்குமங்கென்று வேலை பார்த்த மீனாம்பா பாட்டியிடம் ஒரு கெட்டகுணம் உண்டு.  மடி, விழுப்பு ரொம்பப் பார்ப்பாள். பிரம்மச்சாரிக்கு விழுப்புக் கிடையாது என்று என் பாட்டி எப்போதோ சொன்னதை  நினைவில் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே மீனாம்பா பாட்டியைத் தொடுவேன்.

“பழிகாரா, ஏண்டா விழுப்போட என்மேல விழறே!  என் மடி போச்சேடா!” என்று கத்துவாள்.  அதுகூட எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

“பெரியபாட்டி!  உன் மடி உன்கிட்டதான் இருக்கு.  அது எங்கேயும் போகலை.” என்று மறுபடியும் சீண்டுவேன்.

என்னை அடிக்கவென்று ஒரு சின்னக்குச்சியை வைத்திருப்பாள்.  அதை எடுத்து ஒளித்து வைத்துவிடுவேன்.  குச்சியைத் தேடுவாள்.

“என்ன பெரியபாட்டி தேடறே?” என்று கேட்டால், “முதுகைச் சொறிஞ்சுக்க ஒரு குச்சி வச்சிருந்தேன்.  அதக் காணம். “ என்று இழுப்பாள்.

“இதுதானா அது?” என்று ஒன்றும் தெரியாதவன்போல அந்தக் குச்சியை எடுத்துக் காட்டுவேன்.

“ஆமாம். கொடு.” என்பாள்.

“வெவ்வெவ்வே!  என்னை அடிக்கத்தானே வச்சிருக்கே!  தரமாட்டேன்.  வேணும்னா உன்கையாலே அடி.” என்று கிண்டல் செய்வேன் – மடி, விழுப்பு பார்க்கும் மீனாம்பா பாட்டி என்மேல் கைவைக்கமாட்டாள் என்ற தைரியம்.

“அநியாய சாமர்த்தியம்டா நோக்கு.  என் ராஜாவாச்சே! நெஜமாவே முதுகை அரிக்கறதுடா.  கொடுத்துடுடா கண்ணா!” என்று தாஜா செய்வாள்.

“நான் வேணும்னா சொறிஞ்சுவிடறேன்.  பாட்டிக்கும் நான்தான் சொறிஞ்சுவிடுவேன்.” என்று மிஞ்சுவேன்.

“பரவாயில்லே.  நான் ஸ்நானம் பண்ணத்தான் போறேன்.  சொறிஞ்சுவிடு.” என்று முதுகைக் காட்டுவாள்.

“பெரியபாட்டி, ஏன் நீ ரவிக்கையே போடறதில்லை?” என்று என் சந்தேகத்தை ஒருநாள் அவளிடம் கேட்டேன்.

“சின்ன வயசிலேயே என் தலையைச் செரைச்சாச்சு.  ரவிக்கை ஒண்ணுதான் பாக்கி.  இனிமே என் அழகிலே மயங்கி, எந்த ராஜகுமாரன் வரப்போறான்!” என்று வரட்டுச்சிரிப்பு ஒன்றை உதிர்ப்பாள்.

“பெரியபாட்டி, நீ சின்ன வயசிலே எப்படி இருப்பே? அழகா இருப்பியா?  எல்லோர் போட்டோவும் இருக்கே, உன்போட்டோ மட்டும் எங்கேயும் காணோமே?” என்று கேட்டேன்.

“ஆமா, ஆமா, இனிமே என்னை போட்டோ எடுத்து, பெண்பார்க்கக் கொடுத்தனுப்பணுமா?  மொட்டச்சிக்கு அழகு ஒண்ணுதான் கொறையாக்கும்?” என்று அலுத்துக் கொள்வாள்.  எனக்கு மீனாம்பா பாட்டி ஏன் இப்படிப் பேசுகிறாள் என்றே புரியாது.

என் பாட்டியிடம் கேட்டால், “உனக்கு வாய் ரொம்பப் பெருகிப்போச்சு.  பெரியவாகிட்ட என்ன பேசறதுன்னே தெரியலை.” என்று என்னையே திட்டுவாள்.

நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து ஊரில் இருந்த என் மாமாத்தாத்தா,  அதாவது மீனாம்பா பாட்டியின் தம்பியின் வீட்டுக்கு ஒரு தடவை விசேஷத்திற்காகச் சென்றிருந்தேன்.

பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றபோது, என் மாமாத்தாத்தா இரைந்துகொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

“இப்படியா ஈரம் சொட்டச்சொட்டத் துணியை உணத்தறது?  நீ ஒரு தரித்திரம் வந்துசேர்ந்தது போறாதா?  இன்னும் வேற வரணுமா?” என்று மீனாம்பா பாட்டியை வைதுகொண்டிருந்தார்.

“வயசாச்சுடா.  கையிலே தெம்பு இல்லே.  நன்னா இறுக்கிப் பிழிய முடியலேடா.  எனக்கு என்ன பிள்ளையா, குட்டியா?  இல்லே நாட்டுப்பொண்ணுதான் இருக்காளா, கொஞ்சம் பிழிஞ்சு உணர்த்துடீன்னு சொல்லறதுக்கு.  கட்டை வேகறவரைக்கும் நானேதானே செய்துக்கணும்.”  மீனாம்பா பாட்டியின் குரல் தழுதழுப்பது எனக்குக் கேட்டது.  அது என் மனதையே அறுத்தது.

“வாடா கண்ணா!  எப்படா வந்தே?  ஆத்துலே பாப்பா (என் அம்மாவின் பெயர்), அப்பா, பாட்டி தாத்தா எல்லோரும் சௌக்யமா?” என்று என் மாமாத்தாத்தா கேட்டதற்கு பதிலே சொல்லாமல், கூடத்தில் ஈரம் சொட்டச்சொட்டத் தொங்கிக்கொண்டிருந்த மீனாம்பா பாட்டியின் வெள்ளைப்புடவையை எடுத்து, புழக்கடையில் நன்றாகப் பிழிந்துவிட்டு, கொடியில் உலர்த்தினேன்.  கொண்டுவந்திருந்த பையைத் திறந்து, என் துண்டை எடுத்து, கீழே சிந்தியிருந்த தண்ணீரைத் துடைத்தேன்.

“இப்படி அதிகப்பிரங்கம் பண்ணி, அவமனசை ஏண்டா கெடுக்கறே!  தினமும் நீயா அவ புடவையைப் பிழிஞ்சு உணர்த்தப்போறே?  பாப்பா உனக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து, கெடுத்துத் தொலைச்சுட்டா!” என்று அலுத்துக்கொண்டார், என் மாமாத்தாத்தா.  முரடன் என்று எனக்குப் பெயர் இருந்ததால் மேலே ஒன்றும் பேசாமல் விட்டுவிட்டார்.

யாரோ கேவும் குரல் கேட்டது.  சென்று பார்த்தால் மூலையில் அமர்ந்துகொண்டு வாயைப் பொத்திக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள் மீனாம்பா பாட்டி.

என்னைக்கண்டதும் புடவைத்தலைப்பால் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழ முயற்சித்தாள்.

“வேண்டாம் பெரியபாட்டி.  மாமாத்தாத்தாவுக்கு ஏதோ கோபம்.  அதை உன்மேல காட்டிட்டா.  நீ ஏன் அதுக்கு அழறே!”  என்று சமாதானம் சொன்னேன்.

“இல்லேடா கண்ணா.  சாமி என் தம்பிதானே.  அவன் திட்டினா எனக்கு என்ன காச்சா தொங்கப்போறது? அது இல்லேடா?” என்று விம்மினாள்.

“பின்னே!”

“எனக்குப் பிள்ளை இல்லையே!  அவன் இருந்திருந்தா இப்படி இடிசோறு திங்கவேண்டி இருக்காதேன்னு நிறையத்தடவை நெனப்பேன்.  சாமி கத்தினபோது நீ ஒண்ணுமே பேசாம, என் பொடவையப் பிழிஞ்சு ஒணத்தினியே, அப்பவே எனக்கு மனசு நெறஞ்சுபோச்சுடா.  அதுதான் தன்னையும் அறியாம அழுகை வந்துடுத்து.  பிள்ளை இல்லேன்னு இனி மனசு வருத்தப்பட மாட்டேண்டா.  பகவானாப் பாத்து நான் பிள்ளையா குட்டியான்னபோது, உன்னை அனுப்பிவச்சு என் மனசுல இருந்த அந்தக் கொறையை நீக்கினானே, அதுவே போறும்.  நீ தீர்க்காயுசா இருப்பே.”  கையை என் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தாள்.

அன்று மாலை நான் நான்கு பார் சோப்புகளைத் துண்டம் செய்து, அவளிடம் கொடுத்தபோது, “ஏன்?” என்பதுபோல என்னைப் பார்த்தாள்.

“பெரியபாட்டி.  உன் புடவைலே அழுக்கு ஒட்டிண்டு இல்லே.  அழுக்குலேதான் உன் புடவை ஒட்டிண்டு இருக்கு.   அதுக்குத்தான் இந்த சோப்புக் கட்டிங்க.  வெறுன்ன தண்ணீல நனைச்சுநனைச்சு ஒணத்தவேண்டாம்.  சோப்புப் போட்டே துவை.”

மீனாம்பா பாட்டி ஒன்றுமே பேசவில்லை.  நன்றியுடன் சோப்புக் கட்டிகளை வாங்கி வைத்துக்கொண்டாள்.

பள்ளிப்படிப்பை முடித்து,  வேறூரில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன.  இதற்குள் மீனாம்பா பாட்டியை பத்துப் பன்னிரண்டு தடவை பார்த்திருப்பேன்.  சில சமயம் சோப்பு வாங்கித்தா, தலைவலித் தைலம் வாங்கித்தா என்று கேட்பாள்.  வாங்கிக் கொடுப்பேன்.

ஒருதடவை விடுமுறையில் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

“மாமா குடும்பத்தோட மெட்ராஸ் போய்ட்டா!” என்றாள் என் அம்மா.

“என்ன விஷயமாம்?”

“எவ்வளவு நாள்தான் உழைச்சுக்கொட்ட முடியும்? வயசாயிடுத்து இல்லையா?  மெட்ராஸ்ல இருக்கற மூத்தபிள்ளை கூப்பிட்டான்.  அதுதான் போயிட்டா!”

“பெரியபாட்டியையும் மெட்ராசுக்கு கூட்டிண்டு போயிட்டாரா?”

“நன்னாயிருக்கே, நீ சொல்றது!  கண்ணும் தெரியலை, கடையும் தெரியலை.  மொசைக் தரைன்னு தெரியாம, ஏதோ கொட்டி இருக்குன்னு பொறுக்க ஆரம்பிச்சுடுவா.  அவ ஆசாரம் மெட்ராசுக்கு லாயக்குப்படுமா?  அதுதான்…” இழுத்தாள் அம்மா.

புருவங்களை உயர்த்தினேன்.

“என்னடா அப்படிப் பாக்கறே?”

“மீனாம்பா பாட்டி எங்கேதான் இருக்கா?”

“அதுதான் வயசானவாளுக்கு, பிள்ளை குட்டி இல்லாதவாளுக்கு மாசம் முப்பது ரூபா கவர்மின்ட்டுலே கொடுக்கறாளே, அதுக்கு ஏற்பாடுசெஞ்சுட்டுத்தான் மாமா போயிருக்கா.  பக்கத்து கிராமத்திலே, உன் சின்னப்பாட்டி இருக்காளே, அங்கேதான் இருக்கா.”

“சின்னப்பாட்டியா மீனாம்பா பாட்டியை வச்சுண்டு இருக்கா?”

“இல்லேடா.  மீனாம்பா பாட்டி தனியாத்தான் இருக்கா.”

“எப்படிமா இது?  உடம்புல தெம்பு இருக்கறவரைக்கும் உங்க எல்லோருக்கும்தானே உழைச்சுக்கொட்டினா!  இப்ப ஒங்க யாராலையும் அவளைப் பார்த்துக்க முடியலையா?”  பொருமினேன் நான்.

“உனக்கு ஒண்ணும் தெரியாது.  தெம்பு இருக்கவரைக்கும் மாமா குடும்பத்துக்குத்தான் உழைச்சா.  அவரே அவளை விட்டுட்டுப் போயிட்டா.  நமக்கு உழைச்சானு சொல்றியே.  நாம சும்மாவா விட்டோம்?  அப்பப்ப ஏதாவது வாங்கித்தானே கொடுத்தோம்!”

“கூலி கொடுத்தோம்னு சொல்றியாம்மா?”

“ஒனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தியாப் போச்சு.  இனிமே ஒன்னோட என்னால பேசமுடியாது.” என்று போய்விட்டாள் அம்மா.

ஏதோ ஒன்று உந்தவே, நான் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு மீனாம்பா பாட்டி இருக்கும் கிராமத்திற்குச் சென்றேன்.  என்வயதுள்ள, என் ஒன்றுவிட்ட மாமா ராஜுதான் எட்டடிக் குச்சான ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்றான்.

“பெரிம்மா, பெரிம்மா!” என்று சொல்லிக்கொண்டே  கதவைத் திறந்தான்.

“ஆரு வந்திருக்கா?” என்று மெல்லிய குரலில் கேட்டவாறே, தரையில், ஒரு பலகையைத் தலைக்கு வைத்திருந்த மீனாம்பா பாட்டி கையை ஊன்றிக்கொண்டு எழுந்திருந்தாள்.

“நான்தான் பெரியபாட்டி, கண்ணன் வந்திருக்கேன்..” என்று உரத்த குரலில் சொன்னேன்.

கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப் பார்த்த மீனாம்பா பாட்டி இனம்கண்டுகொண்டாள்.

“வாடாப்பா, கண்ணா, வா.” என்று அன்புடன் சொன்ன அவள் பொங்கிப்பொங்கி அழுதாள்.

“பாத்தியாடா, என் நெலமைய?  அநாதப் பொணமா இருக்கேண்டா.  உடம்புலே தெம்பு இருந்தபோது என் ஒழைப்பு எல்லோருக்கும் தேவையா இருந்துது.  மீனா, வாடீம்மா, நீ இல்லாம ஆத்திலே ஒரு விசேஷம் நடக்கமுடியுமா அப்படீம்பா.  இப்போ – நான்தான் சக்கையாப் போயிட்டேனே.  அதுதான் தூக்கிப்போட்டுட்டா.”

மீனாம்பா பாட்டியின் அழுகை ஓயவில்லை.  என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

நான் என்ன சொல்லி அவளைச் சமாதானப் படுத்துவேன்?

“பெரியபாட்டி, நீ கொஞ்சநாள் பொறுத்துக்கோ.  நான் படிச்சு முடிச்சதும் உடனே வேலையைப் பார்த்துப்பேன்.  நான் உன்னைக் கொண்டு என்னோட வச்சுக்கறேன்.  நான் சீக்கிரமே கல்யாணம் செஞ்சுக்கறேன்.  என் பொண்டாட்டி உன்னை நன்னாப் பார்த்துப்பா.”  உணர்ச்சி வேகத்தில் என்னிடமிருந்து வார்த்தைகள் பெருக்கெடுத்தன.

“இது போதும்டா, கண்ணா. நீ நல்ல குணவதியான பொண்ணைக் கல்யாணம் செஞ்சுண்டு நூறுவருஷம் நன்னா இருப்பே.  ஒன் பொண்டாட்டி தொங்கத்தொங்கத் தாலியைக் கட்டிண்டு நூறு வருஷம் சுமங்கலியா இருப்பா.  ஒன் புள்ளை, குட்டிகளெல்லாம் ஒன்னை நன்னாப் பாத்துக்குவா.

mp1 “எம் மனக்கொறையைத் தீர்த்துட்டேடா, கண்ணா.  இந்தக் கட்டை கண்ணைமூடி, காட்டிலே என்னை எரிக்கறச்சே, என் நெஞ்சு வேகுமோ, வேகாதோன்னு நெனப்பேன்.  இனிமே அப்படி நெனைக்கமாட்டேன்டா.  எம் மனசு நெறஞ்சுபோச்சுடா, கண்ணா!  எப்ப ஈஸ்வரன் கூப்படறானோ அப்ப நிம்மதியா போய்ச்சேருவேன்.  ஏன்னா, என் நெஞ்சு வெந்துடும்டா.” என்றவள் தயங்கி, என்னிடம் கேட்டாள்.

“கண்ணா, என்னால பிழிஞ்சு ஒணத்தவே முடியலடா.  இப்ப நார்ப்பட்டுன்னு ஒண்ணு செய்யறாளாமேடா.  அதைப் பிழியவே வேண்டாமாண்டா.  வெறுன்ன நனைச்சுப்போட்டாலே ஒணந்து போகுமாமே.  எனக்கு ரெண்டு நார்ப்பட்டு பொடவை வாங்கித் தரியாடா?”

“கட்டாயம், பெரியபாட்டி. கட்டாயம்.  நான் ஊருக்குப் போயி வாங்கி அனுப்பறேன்.”

என் கையில் இருந்த ஐம்பது ரூபாயை அவளிடம் கொடுத்துவிட்டு, என் மாமன் ராஜுவை அவளுக்கு அவ்வப்போது உதவி செய்யுமாறு சொல்லிவிட்டு ஊர் வந்துசேர்ந்தேன்.

முதல் வேலையாக, இரண்டு வெள்ளை நார்ப்பட்டுப் புடவைகளை வாங்கி, என் அம்மாவிடம் கொடுத்து, மீனாம்பா பாட்டியிடம் சேர்த்துவிடச் சொல்லிவிட்டு கல்லூரிசெல்ல ரயில் ஏறினேன்.

அதுதான் நான் மீனாம்பா பாட்டியைக் கடைசியாகப் பார்த்தது. இரண்டு மாதங்கள்கூட ஆகி இருக்காது.

கண்கள் உலர்ந்து, என் அம்மா மேலே எழுதியிருந்த வரிகள் தெளிவாகின.

“நீ கொடுத்துவிட்டுப் போன நார்ப்பட்டுப் புடவைகளைச் சார்த்தித்தான் மீனாம்பா பாட்டியைத் தகனம் செய்தார்கள்.”

 ***

 

12 Replies to “மீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)”

  1. அரிசோனன் அவர்களே, இது கதையல்ல. வாழுகின்ற அல்லது வாழ்ந்து முடிந்த ஒருத்தியின் உண்மைக் கதை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற இளம் வயதில் விதவையான பெண்கள் மற்றவர்களுக்கு உழைத்து ஓடாகப் போனதைப் பார்த்தவன் நான். இவர்களில் பலரும் உங்கள் கதையின் நாயகி ‘பாட்டி’ போன்றவர்கள், அவர்கள் பருவம் அடையும் முன்பே பத்து வயதில் விதவையாகி அடுத்தவரை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு வந்தவர்கள். ஒரு சிலர் சொந்த பிள்ளைகளிடம் அன்பு இல்லாமல் பெண்ணே கதி என்று அவர்களுக்கு உழைத்துவிட்டு, சக்கையான பின்பு மகனிடம் தஞ்சம் கேட்டு வந்த கிழவிகள் என்று பல ரகம் உண்டு. என்ன இருந்தாலும் அவர்கள் வாழ்க்கை ஒரு துன்பக் கேணி தான். உங்கள் கதை கண்களில் நீரை வரவழைத்து விட்டது, நல்ல கிழவிகளை எண்ணி. இதிலே வஞ்சனை, சூது, பாரபட்சம் கொண்ட கிழவிகளும் உண்டு என்றாலும், பொதுவாக நோக்குகையில் பெரும்பாலானோர் உங்கள் கதா நாயகி போல பிறருக்கு உழைத்து ஓடாகிப் போனவர்களே. அவர்கள் இரக்கத்துக்குரியவர்களே. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  2. கண்களில் நீரை வரவழைத்த கதை. என் பெரியம்மாவின் நினைவு வந்தது.

  3. கண்கள் பனிக்க படித்தேன் ..என் அத்தை நினைவு வந்தது . அவர்களும் இதே நிலைமையில் வாழ்ந்து மறைந்தார்கள் ..என்ன உடையிலும் முடியிலும் சற்றே மனம் இறங்கி விட்டுவிட்டார்கள் ..பாவம் இன்னும் பாவம் ஏனன்றால் அவளுக்கு நான்கு பெண்கள் …நாலு பெண்களையும் கரையேற்றிய நன்றிக்காக தன் தம்பியின் (என் அப்பா) குடும்பத்திற்கும் கல்யாணம் ஆனபின் அவள் பெண்களின் குடும்பத்திற்கும் மாறி மாறி உழைத்து 92 வருடம் ஆசாரம் மடி விடாமல் ஒருவேளை மட்டும் நாட்டு கறிகாய் செய்தால் மட்டும் சாப்பிட்டு ஓட்ட ஓட்ட பட்டினிக்கிடந்து உழைத்தாள்.இவளை போன்று இன்னும் எத்தனை பாட்டிகளோ அத்தைகள் இந்நாட்டில்…பெயர் – இது ஒரு தர்ம கர்ம பூமி ..

  4. சுமார் 50 வருடங்களுக்கு முன்பு எங்கள் குடும்பத்திலும் இப்படி இரு பாட்டிகள் இருந்தனர். 5 வயதில் இவர்களை பார்த்தேன். என் 15 வயதில் இவர்கள் மறைந்து போனார்கள். ஆனால் அவர்களின் தியாகம் என்னுள் உறைந்து விட்டது. எங்கள் குடும்பத்து இந்த பாட்டிகள் கொடுத்து வைத்தவர்கள். கஷ்டமோ நஷ்டமோ இவர்களை எங்கள் மாமா கடைசிவரை கவனமாக பார்த்து கொண்டார். அந்த நாற்பட்டு, சொவ்காரம் எனும் சோப்பு…ஒ …பழைய நினைவுகள். நானும் என் பாட்டிகளிடம் இப்படித்தான் மடி, அம்மாடி என்று விளையாடுவேன்.

  5. எனது தாயாரை கண் முன் நிறுத்தியதைப்போல் உணர்ந்து கண்களில் கண்ணீர் துளிர்த்தது .நெஞ்சு பாரமாகியது

  6. பெண்களை நம் வாழ்வின் சரிநிகர் சமம் என்று எண்ணாத ஆண் ஆதிக்க சமுதாயத்தின் விளைவே இத்தகையக் கைம்மைக் கோலத்தின் வெளிப்பாடு. பெண்மையை எந்த நிலையிலும் போற்றுவோம் .

  7. மீனாம்பா பாட்டி போன்ற கைம்பெண்கள் அனுவித்த தொல்லைகள் கணக்கில. பல அக்ரஹாரங்களின் பின்புற ரேழிகளுக்கும் ,மூலைகளுக்கும் வாயிருந்தால் அவை அவர்களின் துன்பங்களுக்காகக் கண்ணீர் வடித்திருக்கும். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் அடுத்தவர் தயவில் வாழவேண்டிய நிலை இருந்தது. முதன்முதலில் எந்தப்புண்ணியவான் தன் விதவை மகளுக்குக் கல்வி தந்து வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பளித்தாரோ அவர் விதவைப்பெண்களின் கண்ணீருக்கு அன்றே முற்றுப்புள்ளி வைத்தார்.உண்மையில் உங்கள் கதையைப் புனைவு என்று என்னால் நம்பமுடியவில்லை.கண்ணீரை வரவழைத்த உண்மைக்கதை.என் கண்ணீர்த்துளிகளை மீனாம்பா பாட்டிக்குச் சமர்ப்பிக்கிறேன்.எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி ,சிங்கப்பூர்

  8. மனதை கனக்க வைக்கும் கடந்த கால நிதர்சனங்கள். அறிந்தவர் தெரிந்தவர் வீட்டிலெல்லாம் தூரத்து சொந்தமாக இப்படி பாட்டிமார்கள் உண்டு. ஆனால் நிர்க்கதியாகப் போகும் ஒரு ஜீவனை நினைத்தால் நெஞ்சு மிகவும் கனக்கிறது. முதியவர் இல்லங்களில் இருக்கும் இந்த பாட்டிமார் தாத்தாமார் கைகளைத் தொட்டால் கூட அவர்கள் நம் கைகளைப் பிடித்துக்கொள்வதில் இருக்கும் வாஞ்சை அளவிட முடியாதது. யாரேனும் தங்களிடமும் பேசமாட்டார்களா என்ற ஏக்கம் அவர்கள் குரலில் தென்படும். காசிமாநகரத்தில் காசிவாசத்துக்காக இருக்கும் பல பாட்டிமார்களைப் பார்த்திருக்கிறேன். மனதைப் பிழிய வைத்து விட்ட சம்பவங்களால் ஆன ஒரு விவரணம் இந்த மீனாம்பா பாட்டியைப் பற்றியது.

    தமிழகத்தில் அம்மாளு அம்மாள் என்று ஒரு மாத்வ ஸ்த்ரீ பற்றி நினைவுக்கு வருகிறது. இந்த அம்மாளும் பால்ய விதவை. ஆனால் கண்ணன் இந்த அம்மாளை தன்னுடைய யசோதைத் தாயாராக ஆக்கிக் கொண்டானோ அல்லது இந்த அம்மாள் கண்ணனையல்லால் வேறு புகலிடம் இல்லை என்று அவனில் புகுந்தாளோ கண்ணனுக்கே வெளிச்சம். வாத்ஸல்ய பாவம் பொங்க தன் தாய்மொழியாகிய கன்னடத்தில் அம்மாளு அம்மாள் கண்ணன் மீது எழுதியுள்ள பாடல்கள் தமிழகத்தில் வாழும் கன்னடம் பேசத்தெரிந்த பக்தர்கள் மத்தியில் ரொம்ப ப்ரபலம்.

  9. மீனாம்பா பாட்டிகளின் நிலை கொடியது. கூட்டுக்குடும்பம் இருந்த காலத்தில் அவர்களுக்கென்று ஏதோ ஒரு ஆதரவு இருந்தது. இன்று அதுவும் இல்லை. முதியோர் இல்லம் தான்.
    அம்மாளு அம்மாள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். பரம பக்தையான அவர் தன் குடும்பத்தின் ஆதரவில் கடைசி வரை இருந்தார் .

    அது போன்ற உதாரணங்களும் பேசப் பட வேண்டும்.

  10. ஏன் சித்தியின் கதை idhedhaan. kadaisiyil, 80 vayadhil, தஞ்சாவூர் காமாக்ஷி அம்மன் கோவிலில் பிச்சை yedutthaar. பின்பு ஏன் அண்ணனின் udhaviyaal, அவர்கள் கணவர் veettaridam, கோர்ட்டு moolamaaka, மாதம் 400 petru, காளஹஸ்தியில் உள்ள viduthiyil சேர்த்து vittar. 90 வயதில் காலம் aanaar.

  11. சேவைக்கு ஒரு சகோதரி எனும் தலைப்பில் சிஸ்டர் சுப்புலட்சுமி பற்றிய ஒரு தொடர் நீண்ட நாட்களுக்கு முன்பு கல்கி இதழில் வெளிவந்தது. இது இளம் வயதில் விதவையாகி விட்ட சுப்புலட்சுமியை எவ்வாறு அவள் தந்தை படிக்க வைத்து அவரை , மற்ற இளம் விதவைகளின் வாழ்வில் வழிகாட்டச் செய்கிறார் என அழகுற விவரிக்கப்பட்டிருக்கும். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். யாராவது வெளியிட்டுள்ளனரா எனத் தெரியவில்லை. தெரிந்தால் பகிர்ந்து கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *