திருவாரூர் நான்மணிமாலை -1

வெவ்வேறு வகையான நான்கு மணிகளைத் தொடுத்தமைத்த மாலைபோல வெண்பா, கட்டளைக் கலித்துறை. ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா, என்பவை முறையாக அமைய நாற்பது செய்யுள்கள் பாடுவது நான்மணிமாலை எனப்படும். திருவாரூர் நான்மணிமாலையில் திருவாரூரின் சிறப்புகள் பேசப்படுகிறன. இம் மாலையில் அகத்துறைச் செய்யுட்கள் பல நிறைந்திருக்கின்றன. தலைவி சொல்வதாகவும், தோழி சொல்வதாகவும் சில செய்யுள்கள் உள்ளன.

திருவாரூர்ச் சிறப்பு:

திருவாரூருக்குக் கமலாலயம் என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. கமலையில் பிறந்தாலே முக்திகிட்டும் என்றும் சொல்வார்கள்.  .திருவாரூரின் சிறப்பை சேக்கிழார் இப்படி வருணிக்கிறார்.

வேத ஓசையும் வீணையின் ஓசையும்

சோதி வானவர் தோத்திர ஓசையும்

மாதர் ஆடல் மணி முழவோசையும்

கீத ஓசையுமாய்க் கிளர்வுற்றதே

 அந்த நகரமே இனிய ஓசைகளால் நிரம்பப் பெற்றிருந்தது என்கிறார். ஒரு பசுவின் துயரத்திற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இடத் துணிந்த நீதி தவறாத மநுநீதிச் சோழன் ஆண்ட நகரம் இது.

THIYAGARAJARசிதம்பரம் திருக்கோயிலில் புதைக்கப்பட்டிருந்த தேவார திருப்பதிகங்களைக் கண்டெடுத்து இந்த நகரத்தில் கோயில் கொண்டிருக்கும் தியாகேசருடைய சந்நிதியில் ஏற்றுவித்தார் அபயகுலசேகரச் சோழன்.  அவற்றை பதினோறு திருமுறைகளாக வகுத்தார். அதன்பின் சேக்கிழாரின் பெரிய புராணத்தையும் பன்னிரண்டாவது திருமுறையாக ஏற்றுவித்தார்.

திருவாரூர் கமலாலயம்

இது மட்டுமல்ல சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத்தொகையை அருளிச் செய்த தேவாசிரிய மண்டபமும் இங்கே உள்ளது. சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் மணிமுத்தா நதியில் இட்ட பொன்னை, பரவை நாச்சியாருக்கு எடுத்து அளித்த கமலாலயம் என்னும் திருக் குளமும் இங்குதான் விளங்குகிறது.

இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய திருவாரூரைப்பற்றி குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். ஊருக்குள் நுழையும் முன்பே அகழி, கோட்டை, மதில், கொடி, சோலைகள் இவற்றை யெல்லாம் பார்த்து விட்டுப் பின் கோயிலுக்குள் செல்வோம்.

 அகழி:

KUMARA GURUPARAR
குமரகுருபரர்

திருவாரூருக்குள் நுழையுமுன் அங்குள்ள அகழியைத் கடக்கவேண்டுமே! அந்த அகழி கடல் போல் தோற்றமளிக்கிறது. மேகங்கள் அந்த அகழியைக் கடல் என்று நினைத்து அதில் படிகின்றன. சிவந்த கண்களையுடைய யானைகளும் அந்த அகழியில் படிகின்றன. வீரர்கள் யானைக்கும் மேகங்களுக்கும் வேற்றுமை தெரியாமல் இரண்டையுமே சங்கிலிகளால் பிணைக்கிறார்கள். தாங்கள் படிந்த அகழியில் யானைகள் இருப்பதை அறிந்த மேகங்கள் விரைவாக நீங்குகின்றன. இந்த அகழியில் காகங்கள் கூட்டமாகப் பறக்கின்றன. இந்தக் காட்சி உக்கிரகுமாரபாண்டியன் மேகங்களைச் சிறை பிடித்து வந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டு கிறது குமரகுருபரருக்கு. பாடலைப் பார்ப்போம்

 நவமணி குயின்ற நாஞ்சில் சூழ் கிடக்கும்

உவளகம் கண்ணுற்று உவாக்கடல் இது எனப்

பருகுவான் அமைந்த கருவி மாமழையும்

செங்கண் மால் களிறும் சென்று படிய

வெங்கண் வாள் உழவர் வேற்றுமை தெரியார்

வல்விலங்கிடுதலின், வல்விலங்கு இதுவெனச்

செல்விலங்கிட எதிர் சென்றனர் பற்றக்

காகபந்தரின் கைந்நிமிர்த்து எழுந்து

பாகொடும் உலாவிப் படர்தரு தோற்றம்

   நெடுவேல் வழுதி நிகளம் பூட்டிக்

கொடு போதந்த கொண்டலை நிகர்க்கும்

என்று ஒரு புராண நிகழ்ச்சியையும் குறிப்பிடுகிறார்.

கொடிகள் காட்டும் அறிவுரை:

திருவாரூர் மதில்களில் மணிகள் பதிக்கப்பெற்றிருக்கின்றன. உயர்ந்த மணிமாடங்களில் கொடிகள் பறக்கின்றன.  அந்த மணிமாடங்கள் எவ்வளவு உயரம் என்றால், அந்த மாடங்களில் பறக்கின்ற கொடிகள் சந்திரமண்டலம்வரை சென்று துளைக்கின்றன. ஆனால் சந்திரன் இதற்காக அந்தக் கொடிகள்மேல் கோபம் கொள்ளாமல் அக்கொடிகளுக்கு அமுதம் பொழிந்து, அக்கொடிகளின் வெப்பத்தை ஆற்றி உதவி செய்கிறதாம்.

கொடியவர்கள் தங்களுக்கு எவ்வளவு கொடுமை செய்தாலும், அறிவுடையோர்கள் அவர்களின் கொடுமையை மன்னித்து அருள் செய்வார்கள் அல்லவா? இதைத்தான் அந்தக் கொடிகள் உணர்த்துகின்றனவாம்

 விண்தொட நிவந்த வியன் துகில் கொடிகள்

மண்டலம் போழ்ந்து மதி அகடு உடைப்ப

வான் நிலா அமுதம் வழங்கி அக்கொடிகள்

   வேனிலிற் பயின்ற வெப்பம் அது ஆற்றுபு

கொடியார் எத்துணைக் கொடுமை செய்யினும்

மதியார் செய்திடும் உதவியை உணர்த்தும்

   பன்மணி மாடப் பொன் மதிற் கமலைக் கடிநகர்

   வைப்பினிற் கண்டேம்

என்று அந்த மாடங்களையும் கொடிகளையும் நமக்குக் காட்டுகிறார்.

 சோலைகள்:

திருவாரூரிலுள்ள சோலைகள் வழியாகச் செல்கிறோம். சோலைக் காட்சிகள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. இந்தச் சோலையில் பாக்கு மரங்களில் ஊஞ்சல்கட்டி பெண்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். கமுக மரங்களில் முத்துக்கள் உண்டாகும். இந்தப் பெண்கள் ஊஞ்சலை வீசிவீசி ஆடும் ஆட்டத்தில் அம்மரங்களிலிருந்து முத்துக்கள் விழுகின்றன. பாக்குக் காய்களும் விழுகின்றன. ஊஞ்சலாடும் இப்பெண்களின் கழுத்தழகை இக்கமுகு கவர்ந்து கொண்டு விட்டதே என்று அப்பெண்கள் வருந்துகிறார்கள். கமுகிலிருந்து விழும் அம்முத்துக்கள் அப்பெண்களின் கண்ணீர் முத்துக்கள் போலிருக்கிறதாம்.

நெட்டிலைக் கமுகின் நெடுங் கயிறார்த்துக்

   கட்டு பொன்னூசல் கன்னியராட அப்

பைங்குலைக் கமுகு பழுக்காய் சிந்த

வெண்கதிர் நித்திலம் வெடித்துகு தோற்றம்

கந்தரத்தழகு கவர்ந்தன இவையென

அந்திலாங்கு அவர் ஆர்த்தனர் அலைப்ப

   ஒண்மிடறு உடைந்து ஆங்கு உதிரம் சிந்தக்

கண்முத்து உகுத்துக் கலுழ்வது கடுக்கும்.

 கழைக்கூத்தாடி:

இன்னும் கொஞ்சதூரம் செல்கிறோம். மற்றுமொரு அழகான சோலை! இந்தச் சோலையிலும் கமுக மரங்கள். இம்மரங்களில் முல்லைக்கொடிகள் படர்ந்து மேலேசென்று தலைவிரித்தாற்போல் கிளைகள்தோறும் மடங்கித் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

அவை அருகிலிருக்கும் வாழை மரங்களிலும் படருகின்றன. அக்கமுக மரங்களின்மேல் நீண்ட தோகையையுடைய மயில் ஆடிக்கொண்டிருக்கிறது.

பெண் குரங்குகள் தமது கைகளில் பலாப்பழங்களைத் தூக்கிக்கொண்டு வருகின்றன. அப்போது சுழன்றுவரும் ஒரு ஆண்குரங்கு நன்கு பழுத்த பலாப்பழத்தைத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு வருகிறது. அதைப் பெண் குரங்குகள் பின்தொடர்கின்றன. இதைக் கண்ட அந்தக் குரங்கு கமுகமரத்திலிருந்து தாவி, வாழைமரத்தின்மேல் படர்ந்திருக்கும் முல்லைக் கொடியில் போய் உட்காருகிறது.

இதைப் பார்க்கிறார் குமரகுருபரர்.

அவருக்குக் கழைக்கூத்தாடி நினைவு வருகிறது. கமுகமரத்தைப் பார்த்தால் கழைக்கூத்தாடி நட்டுவைக்கும் நீண்ட கம்பமும், வாழைமரங்கள் சுற்றிலும் அடிக்கப்பட்ட முளைகளாகவும் முல்லைக்கொடிகள் கயிறுகளாகவும், கமுகமரத்தின்மேல் ஆடும் மயில் கம்பத்தின்மேல் ஆடும் பெண்ணாகவும் தோன்றுகிறது. பலாப்பழங்களைக் கையில் எடுத்துத் தாக்கும் பெண்குரங்குகள் பறையடிப்பவராகவும், தலையில் பலாப்பழத்தைக் கொண்டுசெல்லும் ஆண்குரங்கு கயிற்றின்மேல் குடத்தோடு செல்லும் கழைக்கூத்தாடியாகவும் தோன்றுகிறது.இரண்டையும் ஒப்பிட்டுப் பாடியிருப்பதைப் பார்ப்போம்.

பழுக்காய் தூக்குப் பச்சிலைக் கமுகில்

செடிபடு முல்லைக் கொடி படர்ந்தேறித்

தலைவிரித்தன்ன கிளை தொறும் பணைத்து

மறிந்து கீழ் விழுந்து அந்நறுந்துணர்க் கொடிகள்

நாற்றிசைப் புறத்து நான்றன மடிந்து

    தாற்றிளங் கதலித் தண்டினில் பரவ அப்

பைங்குலைக் கமுகில் படர்சிறை விரித்தொரு

   நெடுந்தாள் மந்திகள் குடங்கையில் தாக்கி

முட்புறக் கனிகள் தாக்கக் கொட்டிலும்

வானரமொன்று வருக்கைத் தீங்கனி

தானெடுத்து ஏந்துபு தலைமேற் கொண்டு

மந்திகள் தொடர மருண்டு மற்று அந்தப்

பைந்துணர்க் கொடியில் படர்தரு தோற்றம்

வடஞ்சூழ்ந்து கிடந்த நெடும் பெருங்கம்பத்து

அணங்கனாள் ஒருத்தி ஆடினள் நிற்பப்

பெரும்பணை தாங்கி மருங்கினர் கொட்டக்

குடம் தலை கொண்டு ஒரு கூன்கழைக் கூத்தன்

வடம்தனில் நடக்கும் வண்ணமது ஏய்க்கும்.

 மாடங்களில் திரிவேணி:

திர்வேணி சங்கமம், பிரயாகை

திருவாரூரிலுள்ள மாடங்களின் சிறப்பைச் சொல்லவந்த குமரகுருபரர் அங்கே திரிவேணி சங்கமம் நிகழ்வதைக் காட்டுகிறார். அந்த நகரிலுள்ள அழகிய பெண்கள் வாழும் மாடங்களில் வைரங்கள், நீலமணிகள், சிவந்தரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றனவாம். அம்மணிகளிலிருந்து வெளிப்படும் ஒளி இருளை விரட்டியடிக்கின்றன. அது மட்டுமல்லாமல் அவை அங்கே பிரயாகையில் நிகழும் திரிவேணி சங்கமத்தைத் திருவாரூரிலும் நிகழ்த்துகின்றன.

கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்று நதிகளும் கூடுவதையே திரிவேணி சங்கமம் என்று சொல்லுகிறோம். திரிவேணி சங்கமக் காட்சி குமரகுருபரரை மிகவும் ஈர்த்திருக்க வேண்டும். தனது பாடல்களில் இக்காட்சியை மிகவும் அழகாக வருணித்திருக்கிறார். வெண்மை நிறமுடைய வைரமணிகள் கங்கையையும். நீலநிறமுடைய மணிகள் கறுப்புநிறமுடைய யமுனையையும், செம்மணிகள் சிவந்த நிறமுடைய சரஸ்வதியையும் ஒத்து திரிவேணி சங்கமம், அம்மாடங்களில் நிகழ்வதைக் காட்டுகிறார் குமரகுருபரர்.

 புரிகுழல் மடந்தையர் பொன்னெடு மாடத்து

ஒண்கதிர் வயிரமும் தண்கதிர் நீலமும்

சேயொளி பரப்பும் செம்மணிக்குழாமும்

மாயிருள் துரந்து மழ கதிர் எறிப்பச்

சுரநதி முதல் வரநதி மூன்றும்

திருவ நீண் மறுகில் செல்வது கடுப்ப

 என்று திருவாரூர் தெருவீதிகளில் திரிவேணி சங்கமத்தைக் காட்டுகிறார்.

சோலையில் நரசிங்கஅவதாரம்:

திருவாரூரில் பலாமரச் சோலைகள் நிறைய இருந்திருக்கவேண்டும். இந்தச் சோலைக்குள் நுழைவோம். இந்தச் சோலை சூரியன்கூட நுழையமுடியாதபடி அவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது. காவலர்களுக்குப் பயந்து மரத்தில் ஒதுங்கிய பெண் குரங்கு அங்கிருந்த வருக்கைப் பலாப்பழத்தைக் கண்டதும் கூறிய பற்களால் அப்பழத்தைப் பிளந்து மடியில் வைத்துக்கொண்டு அப்பழத்தை வகிர்ந்து தன்நகங்களால் பொன்னிறச் சுளைகளைச் சாப்பிடுகிறது. இதைப் பார்த்த குமரகுருபரருக்கு நரசிம்ம அவதாரம் நினைவுக்குவருகிறது.

பலாப்பழம் இரணியனையும் அதன் உள்ளிருக்கும் சக்கை, இரணியனின் குடலையும், சுளைகள் அவனுடைய நிணத்தையும் குரங்கு நரசிங்கமூர்த்தியையும் நினைவூட்டுகிறது. இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

ஒண்கதிர் பரப்புஞ் செங்கதிர்க் கடவுள்

வெயில் கண்டறியா வீங்கிருட் பிழம்பில்

புயல் கண் படுக்கும் பூந்தண் பொதும்பில்

காவலர்ப் பயந்து பாதபத்து ஒதுங்கிய

இருவேறு உருவில் கருவிரன் மந்தி

பொன்னிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை

முன்னுறக் காண்டலும் முளை எயிறு இலங்க

மடித்தலத்து இருத்தி வகிர்ந்து வள்ளுகிரால்

தொடுத்த பொற்சுளை பல எடுத்து வாய்மடுப்பது

மானிட மடங்கல் தூணிடைத் தோன்றி

ஆடகப் பெயரினன் அவுணன் மார்பிடந்து

நீடு பைங்குடரின் நிணம் கவர்ந்து உண்டென

இறும்பூது பயக்கும் நறும்பணை மருதத்து

அந்தணார்  ஊர் எந்தை பெரும

என்று தியாகேசரைப் போற்றுகிறார்.

[தொடரும்]

 ***   ***   ***

6 Replies to “திருவாரூர் நான்மணிமாலை -1”

  1. ஆஹா சுந்தரர் பிறந்த ஆரூரை அதன் அழகை கவிச்சக்கரவர்த்தி குமரகுருபர் எவ்வளவு அருமையாக வர்ணித்திருக்கிறார்? அதை மிகச்சிறந்த சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார் ஜெயலக்ஷ்மி அம்மையார்
    திருவாரூக்கு செல்லவேண்டும் எனவிரும்பும் அடியேனுக்கு இந்தக்கட்டுரையே ஆரூர் தஆளும் தியாகராசன் அருளைக்கூட்டுகிறது. சஆரூர் அமர்ந்த அரசே போற்றி.

  2. அம்மையீர், மிக அருமையான பதிவு. பொருளும் அருளும் செறிந்த தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி. வளர்க தங்கள் தமிழ்ப்பணி.

  3. சுந்தரர் சோழநாட்டிலுள்ள திருவாரூரில் அவதரித்தாரா?

    அவரைத் தடுத்தாட்கொண்டது நடுநாட்டில் உள்ள திருவெண்ணெய் நல்லூருக்கு அருகில் உள்ள தடுத்தாட்கொண்டூர் அல்லவா?

    “பித்தா” என்று இறைவன் அவருக்கு அடியெடுத்துக் கொடுத்தது திருவெண்ணெய் நல்லூரில் அல்லவா?

    சுந்தரரின் அவதாரத்தலம் – தடுத்தாட்கொண்டூர், திருவெண்ணெய் நல்லூர் – இவற்றில் ஒன்றாகத்தானே இருக்க முடியும்?

    திரு ஆரூரன், அங்கேயே பிறந்த (பிறந்திருந்தால்?) நம்பி ஆருரை ஆட்கொள்ள இருவருமாகவா அத்தனைத் தொலைவு சென்றிருப்பார்கள்?

  4. மிகவும் அருமையான படைப்பு .ஸ்ரீ குமரகுபர பாடல்கள் சுவை சேர்கின்றன. நன்றி எங்கள் திருவாரூர் அருமை பெருமைகளை சொல்வதற்கு.

  5. அடியவன் அவர்களுக்கு நன்றி. தவறுக்கு மன்னிக்கவேண்டும். தம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்திப்பெருமான் அவதாரத்தலம் திரு நாவலூர். ஆறுமுக நாவலர் பெருமான் இப்படி அதை சொல்கிறார்.
    “பின்பு ஆலாலசுந்தரர், பூமியிலே புண்ணிய பூமியாகிய பரதகண்டத்திலே, தமிழ் வழங்கும் நிலமாகிய தென்னாட்டைச் சேர்ந்த திருமுனைப்பாடி நாட்டிலே, திருநாவலூரென்னுந் திருப்பதியிலே, ஆதிசைவரென்னுஞ் சிவப்பிராமண குலத்திலே, சடையனாரென்னுஞ் சிவாசாரியாருக்கு அவருடைய மனைவியாராகிய கற்பிலே சிறந்த இசைஞானியார் என்பவரிடத்திலே, ஆன்மாக்கள் சைவசமயமே சற்சமயமென்று உணர்ந்து அதன் வழி ஒழுகி உய்யும்பொருட்டு, திருவவதாரஞ்செய்தருளினார். திருவவதாரஞ்செய்த அப்பிள்ளையாருக்கு நம்பியாரூரர் என்று நாமகரணஞ் செய்தார்கள்”
    https://www.shaivam.org/baktas/nayanmar/nayanmar-sundarar.htm.

  6. மதிப்பிற்குரிய சிவஸ்ரீ. விபூதிபூஷண் அவர்களுக்கு
    அகந்தையற்ற நிலையில் மன்னிக்கவும் என்ற தங்களுக்கு எனது பணிவான சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அடியேனும் பிழையாகத் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவெண்ணெய் நல்லூரை நடுநாட்டில் அமைந்ததாக எழுதி விட்டேன், எழுதிய பின்னரே அதை உணர்ந்தேன். பிழைபொறுத்து மன்னிக்கவும்.

    திருமுனப்பாடிநாடு சமயக் குரவர் நால்வரில், அப்பர் பெருமான் திருவாமூர்), சுந்தரர் (திருநாவலூர்) ஆகிய இருவரை நம்மை நன்னெறிப் பட்டுத்த அருளியது என்பது சிறப்பு.

    இரண்டு தலங்களும் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்தமை இன்னொரு ஒற்றுமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *