சிவநெறி – சமய அவிரோதம்

சமயப் பன்மை

கடவுள் ஒருவரென்றால் ஒன்றுக்கொன்று மாறுபட்ட சமயங்களும் பிணங்கும் சமயக் கொள்கைகளும் அவற்றைக் கூறும் சமயத் தத்துவநூல்களும் குருமார்களும் இருப்பதேன்?  சைவ சித்தாந்த சாத்திர தோத்திர நூல்கள் இக்கருத்தை ஆராய்கின்றன; மாறுபட்ட சமயக் கொள்கைகளுக்கிடையில் அடிப்படை ஒற்றுமையை காணும் முயற்சியையும் மேற்கொள்கின்றன.

உலகில் வழங்கும் சமயநெறிகளுக்கெல்லாம் தாயாகவும் புகலிடமாகவுமிருக்கும்  இறைவன் ஒருவனே;  அம்முதல்வன் அறிவினால் மிக்க சமயநெறிகள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக மெய்ம்மை ஒழுக்கங்களை வகுத்தருளி உலகங்களையெல்லாம் தத்தம் சமய ஒழுங்கு நெறியில் பிறழாதவாறு நிலைபெறச் செய்கின்றான். சிவநெறியின் இக்கருத்து,

“ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்

தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன்”

எனவரும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் வாக்கால் நன்கு விளங்கும்.

“உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனி பேதம், நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்,” என்றார், திருஞானசம்பந்தர்.saiva saints

அதாவது, முழுமுதற் பொருளாகிய சிவம் எல்லா உயிர்களிடத்தும் சாதி-மத-இன-யோனி வேறுபாடின்றி உயிருக்கு உயிராய்க் கலப்பினால் அதுவாகவே இருக்கின்றதென்பது கருத்து.

.           ”விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ்செய்து, எரிவினாற் சொன்னாரேனு மெம்பிராற் கேற்றதாகும்,” என்றார் அப்பரடிகள்.

”ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்” (6.18.10) என்பதும் அப்பரடிகள் வாக்கு.  இதனால் பரம்பொருளுக்குத் தனியே ஒருவடிவமில்லை என்பதும்  அன்பர் நினைத்த வடிவே அவருக்கு வடிவென்பதும் அவ்வடிவிலன்றித் தனக்கெனவொரு வடிவில்லை என்பதும் பெறப்படும்.

. “மனக்கோள் நினக்கென வடிவு வேறிலையே”

என்பது பரிபாடல்.4.

 “தென்னாடுடைய சிவனே போற்றி;  எந்நாட்டவர்க்குமிறைவாபோற்றி” ,

என்றார், வாதவூரடிகள்.

பூவுலகில் தென்னாடு தவிர ஏனைய பகுதிகளில், வெவ்வேறு சமயங்களில் ஒழுகுபவர்க்கு அவ்வச் சமயத்தவர்கொண்ட முதற்பொருளாகிய இறைவனாக, சித்தாந்த சைவர்களுக்கு அவ்வச் சமயத்தவர் கூறும் இலக்கணங்களையெல்லாம் உள்ளடக்கிய வேறாகிய விரிந்த இலக்கணத்தையுடையது, சிவம் என்பதும் அடிகள் கருத்து.

“தர்க்கமிடும் தொன்னூற் பரசமயந்தொறும் அதுவதுவே நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து,” என்பது,  குமரகுருபர சுவாமிகளின் திருவாக்கு. [திருச்செந்தூர் கந்தர்கலிவெண்பா 18]

சமயநூல்கள் ஒன்று சொன்னபடி மற்றொன்று சொல்லாமல், அததுவும் ‘தான் சொல்வதுதான் உண்மை’ என்று வாதப் பிரதிவாதங்களால் சாதிக்கின்றன.  சமயவாதிகள் தங்கள்தங்கள் பக்குவத்திற்கேற்ப ஓரொரு சமயத்தை, இதுவே ‘உண்மைச் சமயம், இச்சமயத்தைக் கூறும் இதுவே மெய்ஞ்ஞானநூல்’ என்று நம்பிச் சாதிக்கும்படியாகச் செய்வதுவும் ஒரு பெருந்தெய்வத்தின் செயலே.  தன்னுடைய சமயநூலே உண்மையைக் கூறுகின்றது என ஒருவன் நம்பினால்தான் அந்தநூல் வழிநின்று அந்த நூல்வழி சாதகம்செய்து அந்தநூல் கூறும் சாத்தியத்தைப் பெறமுடியும். எனவே, பரசமயந்தொறும் அதுவதுவே நன்னூல் என அந்தச் சமயத்தவருக்குத் தெரிவிப்பதும் இறைச்செயலே என்பது குமரகுருபர சுவாமிகள் கருத்து.

மெய்யுணர்தல் வழியே சிவநெறி அவிரோதம் காண்கிறது.  “செய்வினை, அதனைச் செய்பவன், அதனால் விளையும் புண்ணிய பாவங்கள், அதனைச் செய்தவனுக்கே ஊட்டும் இறை,” என, இந்த நான்கும் உண்டு என நம்பி வாழ்பவன் எந்தத் தேசத்தவனாகினும், எச்சமயத்தவனாயினும், எக்கோலம் கொண்டவனாயினும் சைவனே எனக் கொள்ளுவது சிவநெறி.

            “செய்வினையும் செய்வானும் அதன்பயனும் சேர்ப்பானும்

மெய்வகையால் நான்காகும் வித்தபொருள் எனக்கொண்டே

இவ்வியல்பு சைவநெறி யல்லவற்றுக் கில்லையென

உய்வகையாற் பொருள்சிவனென் றருளாலே உணர்ந்தறிந்தார்”

 என்றார், சேக்கிழார்.

சேக்கிழார்
சேக்கிழார்

இக்கொள்கையுடையோன் எவ்விடத்தில் எச்சமயத்தைச் சார்ந்தவனாயினும் சைவனே என்பது இதன் பொருள்.

இந்த உண்மையை அறிந்த பௌத்தமதத்தினராகிய சாக்கிய நாயனார் தம்கோலத்தையும் சமயத்தையும் துறவாமலேயே சைவராக இருந்தமையை,

            “துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவந்

தன்னைமிகும் அன்பினான் மறவாமை தலைநிற்பார்”

(பெரியபுராணம், சாக்கிய நாயனார், 5,6)

சமயங்களுள் அவிரோதம் அல்லது சமயச் சண்டை உண்மையை அறிய உதவாது என்பது ஞானியர் கொள்கை.

புத்தம், சமணம் என்ற சமயங்களைத் தோற்றுவித்த முதற் குரவராகிய புத்தர்,மகாவீரர் என்ற பெருமக்கள், அவ்வச்சமயநெறியில் நின்ற மக்கட் சமுதாயத்தாரால் தத்தம் தெய்வமென விரும்பிப் போற்றப்படும் தெய்வநிலை பெற்றவர்கள்;  அவர்கள் உலகனைத்தையும் இயக்கும் பேரறிவுப் பொருளாகிய முழுமுதற்கடவுளின் திருவருட் பண்பினை விரும்பிப் போற்றும் தெளிவுபெற்றவர்கள் என்று சிவநெறியினர் கொள்வர்.  இக்கொள்கையினை,

“மூடிய சீவரத்தர் முதுகட்டையர் மோட்டமணர்

நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்”

என்றும்,

“மூடியசீவரத்தர் முதிர்பிண்டியர் என்றிவர்கள்

தேடிய தேவர்தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான்” 

எனவரும் திருப்பாடல்களில் திருஞானசம்பந்தர் அறிவுறுத்துகின்றார்.

சமயங்களுள் ‘அவிரோதம்’ கோட்பாட்டை வலியுறுத்தி அதனையொரு சமயநெறியாக வலியுறுத்தியவர், பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார்.

அவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர்.  அதாவது எல்லாச்சமயங்களையும் விருப்பு வெறுப்பு இன்றிச் சமமாகப் பாவித்தலென்பது பொருள்.

“ஓது சமயங்கள் பொருளுணரும் நூல்கள்

ஒன்றோடொன்று ஒவ்வாமல் வுளபல; இவற்றுள்

யாதுசமயம் பொருள்நூல் யாதிங்கென்னில்

இதுவாகும் அதுவல்ல தெனும் பிணக்கதின்றி

நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண

நின்றதுயாதொரு சமயம்  அதுசமயம் பொருள்நூல்”

                                                                           (சிவஞானசித்தியார் 265)

எல்லாச் சமயத்தார் கூறும் பொருளியல்புகளும் தனித்தனி ஒவ்வோரிடத்தே அமைந்திருக்க, அவையனைத்தையும் ஒருங்குசேர்த்துக் காணநின்ற சமயம் எதுவோ அதுவே உண்மைச் சமயமாகும் என்றும் அந்தச் சமயப் பொருளை உணர்த்தும் நூலே உண்ம நூலாக வேண்டும் எனவும் சித்தாந்தம் கருதுகின்றது.[i]

இந்தக்கருத்தில் சமய சமரசம், சமயச்சகிப்பு என்னும் பேச்சுக்கே இடமில்லை. சமரசமும், சகிப்பும் தன்னைக் காட்டிலும் குறையுடைய ஒன்றினிடத்தே காட்டும் பரிவேயன்றி, வேற்றுச் சமயத்தின் கொள்கையை அறிந்து, அதற்குரிய உண்மை மதிப்பை அளிக்கும் நிலை அவற்றில் இல்லை.

            பத்து என்னும் எண்ணில் ஒன்று இரண்டு முதலியனவும் அடங்கும்; அவையின்றிப் பத்தில்லை. ஆயினும் ஒன்றோ, இரண்டோ, பத்தாகாது. அதுபோல உண்மைச் சமயத்தில் எல்லாச் சமயக் கொள்கைகளும் அடங்கும். எல்லாச் சமயங்களும் உண்மையையே கூறுகின்றன; ஆனால் அவை முழுமையான உண்மை அல்ல.

            சமயத்தத்துவம் முற்றும் உணர்ந்த ஞானியர், வேறுபடும் சமயங்களிலெல்லாம் வேற்றுமை காணாமல் ஒற்றுமையே கண்டனர். தாயுமானார்,

“வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்

விளங்குபரம் பொருளே!  நின் விளையாட் டல்லான்,

மாறுபடுங் கருத்தில்லை; முடிவின் மோன

வாரிதியின் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா!”

என்றார்.

ருசமயம் சொன்னபடி மற்றொருசமயம் சொல்லாமல், எல்லாச் சமயக் கொள்கைகளும் வேறுபட்டுக் கிடத்தலின் “வேறுபடும் சமய மெல்லாம்” என்றார்; எல்லாச் சமயங்களிலும் விளங்குபவன் ஒருமுதல்வனேயாகலின்,’விளங்கு பரம்பொருளே’ என்றார்; ஆன்மாக்களின் கன்மத்துக்கும் பக்குவத்திற்கும் ஏற்றபடி முதல்வனே சமயங்களை வகுத்துவைத்தான் ஆதலால், ‘விளையாட்டல்லால் மாறுபடுங் கருத்தில்லை’ என்றார்;  எல்லா நதிகளுக்கும் சமுத்திரம் இடங்கொடுத்திருப்பதுபோல எல்லாச் சமயங்கட்கும் முதல்வன் இடங்கொடுத்திருக்கின்றமையின் , ‘வாரிதியின் நதித்திரள் போல வயங்கிற்று’ என்றும், எல்லாச் சமயங்களிலும் முதல்வனின் உண்மையைக் காண்பவர்களுக்குச் சமய விரோதம் தோன்றாது, வீணான தர்க்கவாதத்திற்கு அங்கு இடமில்லை என்பார், ‘மோன வாரிதி’ (அமைதிக்கடல்) என்றார்.  ‘மோனம் ஞான வரம்பு’ என்பது ஔவையார் வாக்கு.

சமயங்களுக்குள் பொதுக் கருத்து

சமயநூல்கள் பலவும் ஒன்றோடொன்று ஒவ்வாத பொருள் கூறினாலும் தமிழ்ச் சான்றோர் அம் மாறுபட்ட கருத்துக்களிடையே ஒரு அடிப்படை ஒற்றுமையை, ஒத்த கருத்தினைக் கண்டனர். அந்த ஒத்த கருத்துத் தற்போத நீக்கம் என்பது.

‘யான், எனது,’ எனும் செருக்கே தற்போதம்.

‘யான், எனது’ என்னும் தன்னலமே தற்போதம். உண்மைச் சமயமார்க்கம் தற்போத நீக்கத்தை வலியுறுத்தும்.

திருவள்ளுவர் 2தெய்வப் புலவர் திருவள்ளுவர் ,

                 “யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

                  குயர்ந்த வுலகம் புகும்”

 எனும் திருக்குறளில் வலியுறுத்திய கருத்தினையே  சமயப் பொதுமையாகச் சாந்தலிங்க அடிகள் கருதுகிறார். சமயங்களுள் ‘அவிரோதம்’ என்னும் கோட்பாட்டைக் கண்டு வலியுறுத்தி, அதனையொரு சமயநெறியாக நூல் செய்தவர் பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார். ‘அவிரோத உந்தியார்’ எனும் அந்த நூலில் உண்மைச் சமயம் எது எனக் கூறுகின்றார்.

                ‘பல சமயத்தவரும் முத்திக்குரிய மார்க்கமாகப் பலவகை நிட்டைகளைக் கூறுகின்றனர். எந்த சமயத்தினர் கூறும் யாதொரு நிட்டையேனும் ஆத்மாவினது தற்போதத்தைக் கெடுத்துச் சிவத்தோடு இரண்டறக் கலப்பிக்குமாயின் அந்நிட்டைகளும் எமக்கு அவிரோதமே ‘  என்பது அடிகளார் கருத்து.

             “எம்மதத் தோரெவ் வகைநிட்டை சொல்லினும்

              சம்மத மேயெமக் குந்தீபற

               தற்போத மாய்க்குமே லுந்தீபற”

       சமயநூல்களில் கருமகாண்டம் ஞானகாண்டம் எனும் இரு பிரிவுகள் உள்ளன. கருமகாண்டம் என்பது ஒருசமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் கைக்கொண்டொழுக வேண்டுவனவற்றைக் கூறும். இவை சமய ஆசாரம் அல்லது சமய ஒழுக்கம் என்றும் பேசப்படும். சமயச் சடங்குகள் எல்லாம் இதில் அடங்கும்.  சமயங்களின் வேற்றுமைகளுக் கெல்லாம் பெரும்பாலும் கருமகாண்டமே காரணம்.

          கன்மகாண்டம் ஆன்மாக்களின் கன்மத்தளவில் உண்டாகிய பருவ பக்குவ வேறுபாடுகளுக்கேற்ப வேறுபடும். அதனால் ஒப்பற்ற வீட்டினுக்கு வழி ஒருவிதமாக அன்றி இறைவன் அருளிய வேதம் பலவிதமாகக் கூறும்.

           சமயங்களின் கருமகாண்டங்களில் அத்தகைய வேறுபாடு தோன்றினாலும் ஞானகாண்டங்களிலெல்லாம் தற்போத நீக்கமே கூறுதலினால்  பல்வகை மார்க்கங்களும் கூறும் நெறி ஒன்றே என்பது அடிகளார் கருத்து.

                   “வேதம்பல் பக்குவ மோர்ந்தொரு வீட்டினுக்

                     கோதும்பல் லாற்றானு முந்தீபற

                     உண்மைகண் டார்க்கேக முந்தீபற.”

          அனைத்து மதங்களிலும் மார்க்கங்களிலும், சடங்குகளாகவும் சாதிகளாகவும் வேறுபாடுகள் உள்ளன. அவை கன்மகாண்டத்துக்கு உரிய கற்பனைகளாகும். அவை பிறப்பிறப்பாகிய சூழலையே தரும்.  ஞானமார்க்கம் ஒன்றே மீண்டும் பிறவாத வீட்டினை அளிக்கும். சாதிசமயங்கள் ஞானமார்க்கத்தால் அழிவன.

             சமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம். அதனால் வெற்றி தோல்வி அவனவன் கற்ற கல்விவலியினாலும் வாதத் திறமையினாலும், வாதிக்கேயன்றி மதத்துக்கில்லை.

எல்லாச்சமயத்தின் இயல்பும் அறிந்த ஞானிகள் அவற்றின் முடிபுகளை உள்ளபடி உணர்ந்து எச்சமயத்தையும் அபிமானிக்காது, சமயாச்சார சடங்குகளை விட்டு நீங்குவர். சமயங்களுள் விரோதம் அல்லது சமயச் சண்டை உண்மையை அறிய உதவாது என்பது ஞானியர் கொள்கை.

ஞானியர் ஏதாவதொரு சமயத்தைச் சார்ந்து ஒழுகினும் மனத்தில் அச்சமயத்தில் பற்றொழிந்து தாமரை இலைத் தண்ணீர்போலவும், புளியம்பழமும் ஓடும் கூடியிருத்தல்போல இருப்பர் என்கிறார் சாந்தலிங்க அடிகளார்.

“ நீங்கா தெவற்றொடு நின்ற்றாலும் நெஞ்சிடைத்

தாங்கான்மெய்ஞ் ஞானியென் றுந்தீபற

சலமரை யாதியொத் துந்தீபற. (34) 

ருவிக்(தத்துவக்) கூட்டங்களிலேயே சமயக் கூட்டங்க ளடங்குதலின் மத நீக்கங் கூறப்பட்டது. “சைவமுத லாவளவில் சமயமும் வகுத்துமேற் சமயங் கடந்த மோன சமரசம் வகுத்த நீ,” என்று தாயுமானார் உண்மை ஞானம் சமய அபிமானம் கடந்தது என்பது பெறப்பட்டது.  ஒருசமயத்தின்மேல் கொள்ளும் அளவுகடந்த அபிமானமும் பந்தம் எனப்பட்டது.

                  “வாதமுஞ் சமய பேதமுங் கடந்த

                                       மனோலய வின்பசா கரமே

                      ஏதுமொன்றறியேன் யாதுநின் செயலே

                                     யிறைவனே யேகநா யகனே”

பட்டினத்தடிகள் கூறுமாறு, பரம்பொருள் அனுபவிப்பார்க் கொன்றாகவும் அல்லாதார்க்குப் பலவாகவும் இருக்கும்.

அவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர்.  அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள்.

ஞானியர் எம்மதத்து நூல்களிலும்  கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை என்கின்றது, அருட்பிரகாசம் என்னும் நூல்.

“எடுத்தவெம் மதமெந் நூல்கள் யாவையுந் தமதா யாங்கு

வடித்தநற் பொருளே கொண்டு வளம்பட மகிழ்வ தல்லாற்

படுத்தொரு பொருளைப் பற்றிப் பாங்கினா லதிலொ துங்கிப்

பிடித்தது பிடித்துக் காதும் பேதைமை பெரியோர்க் கின்றே”

“எய்த வெளிதா மிறையரு ளில்லையேல்

எய்த வரிதா மியாவர்க்கு- மெய்தெளிந்தால்

எம்மார்க்கத் தோடுமிகலற் றிருக்குமதே

சன்மார்க்க மாகுநெறி தான்”

(அமுத சாகரம்)

முடிவுரை.

  1. கடவுள் ஒருவரே யெனினும் சமயங்கள் பலவாக இருப்பதற்கு ஆன்மாக்களில் பக்குவம், அறிவு ஆகியவற்றில் காணப்படும் வேறுபாடே காரணம்.
  2. கடவுள் ஞானியரின் அறிவுக்கறிவாக இருந்து உணர்த்தினாலும், ஞானியர் தம்முடைய அறிவுக்கு உட்பட்டே , இறைவன் உணர்த்திய உண்மையை அறிந்துகொண்டனர். தாம் வாழும் சமூகத்திற்கு எது வேண்டுமோ அதனை உணர்த்தினர். ஞானியர் கூறியது நூல் ஆயிற்று. அந்த ஞானியையும் அவர் கூறிய நூலையும் பின் பற்றினோர் தனித்தனைச் சமயிகள் ஆயினர்.
  3. சமயச் சண்டைகள் அறிவற்றன, பயனற்றன எனக் கண்ட ஞானியர் பலசமயங்களையும் ஆராய்ந்து பொதுவான அடிப்படையைக் கண்டு வலியுறுத்தினர்.
  4. தற்போத நீக்கமே எல்லாச் சமயங்களுக்கும் அடிப்படை எனக் கண்டனர்.
  5. தற்போத நீக்கமே சமய அவிரோதம்; அதாவது சமயங்களிடையே பட்சபாதம் இன்மை. அதுவே பரம ஞானம்.
  6. தற்போத நீக்கம் உலகியற்கையை வெல்லுதலாகும்.

தற்போதம் நீங்கியோர் சமய விரோதமின்றி அனைத்துயிர்களிடத்தும் கடவுள் நிலையைக் கண்டோராவர்..

***   ***   ***

7 Replies to “சிவநெறி – சமய அவிரோதம்”

  1. சமய அவிரோதம் என்பது சமயங்களை அவரவர்கள் சரியாக அறிந்து கொள்ளாததால் வந்த விளைவு . சமயங்களை சரியாக அறிந்துகொள்ளமுடியாதவர்கள் இறைவனை
    எப்படி அறிந்துகொள்ளமுடியும்!

  2. இத்தளத்திற்கு மிகவும் வேண்டிய கட்டுரை இது.

    இது போக, இக்கட்டுரை வைக்கும் மையப்பொருளான சமயங்களின் வேறுபாடான சிந்தனைகள் அனைத்தும் பரம்பொருளில் ஒரு வடிவத்தையே ஞானியர்கள் அவற்றுக்குள் ஒற்றுமை காண்பர் என்பது பற்றி.

    இச்சமயக்கொள்கைகளின் வேறுபாடுகளை வெறும் தத்துவம் சார்ந்த நிலையில் பார்த்தல் முழுமையாகாது. உளவியல் நிலையிலும் இருந்து பார்க்கவேண்டும். சமயவியலாளர் இந்நிலை பக்கமே போவதில்லை.

    உளவியல் ரீதியில் ஒரு மனிதன் எதை ஏற்கிறானோ அதை அவன் முழுமையாக நம்ப வேண்டும். அப்படியெனில் மட்டுமே அவன் ஈடுபாடும் அவன் செயல்பாடும் முழமை பெறும். அது அவனுக்கு ஆன்ம திருப்தியைத் தரும். சமயம், கடவுள் என்று வரும் போது அத்திருப்தி அவசியம். அரைமனதாகவும், முழ நம்பிக்கையில்லாமல் செய்யும் எச்செயலும் ஒருவனுக்கு நிம்மதி தாரது. ஆன்மிகவாழ்க்கை நாடகமாக இருக்க முடியாது.

    மாறாக, அவன் பத்தில் இதுவும் ஒன்று என்று நினைத்துவிட்டால், ஏன் அந்த பத்தில் இந்த ஒன்றை மட்டும் நான் எடுக்கவேண்டும்? என்று சிந்தித்தாக வேண்டும்; ஏன் அப்பத்தில் இன்னொன்று எப்படியிருக்கிறது என்று போய் பார்க்கலாமே ? என்று ஒன்றிலிருந்து பத்து வரைக்கும் இறங்கி பார்த்துபார்த்து, அவன் குழம்புவான். இறுதியில் நாத்திகமே பிரச்சினையில்லாததது போல என்றுதான் போவான். மனம் நிலைகொள்ள. ஆர்வத்துடனும் ஆத்மார்த்ததுடனும் உள்செல்ல அனுபவிக்க அப்ப‌த்தில் ஒன்றுதான் உண்மை என்று அவன் கொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது . அந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க அப்பத்தில் ஒவ்வொன்றாக ஆராயந்து பார்த்து அம்முடிவை எடுக்கலாம். இது எல்லாருக்கும் சாத்தியமன்று. காரணம், நேரம் ஈடுபாடு எல்லாமே வேண்டும். திருமழிசையாழ்வார், பல சமயங்களைச் சென்று ஒவ்வொன்றாக முழுமையாக அனுபவித்து இறுதியில் திருமாலே உண்மைப் பரம்பொருள் என்று கண்டுகொண்டேன் என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் மற்றவை பொய்களாகும் என்றும் சொன்னார். அவரைப்போன்ற ஞானியருக்கு ஆன்மிகத்தேடல் முழுனேர வேலை. பொதுமக்களுக்கு முடியாது. எனவே கொடுக்கப்பட்ட மதத்தை, கொடுத்தோர் உண்மையென்று சொன்னதை ஏற்கிறார். அப்படி ஏற்றலே சரியாகும் என்று உளவியல் படி என்று மேலே விளக்கினேன்.

    நம்மாழ்வார், அவரவர் மதங்களை அவரவர் ஆதமார்த்தமாக அனுபவிக்கும்போது அவரவர் தெய்வம் அவரவருக்குப் பலனைத் தருமே என்று திருவாய்மொழி முதற்பத்தில் சொல்லிவிட்டு, பின் திருவாய்மொழி உள்ளே பரம்பொருள் திருமால் மட்டுமே என்று நிருவுகிறார்.

    சமய வேறுபாடுகள் தொடரும். அவ்வேறுபட்ட சமயங்களில் ஒன்றை மட்டுமே உண்மையென ஏற்றலே பாமரனுக்கு நன்று. மற்றபடி, சமயச்சண்டைகளை எப்படி எதிர்கொள்வது என்றால், அவன் பிறமதங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றி என‌க்கென்ன கவலை? அவர்கள் வழிகள் அவர்களுக்கு உண்மையாகவே இருந்துவிட்டு போகட்டும் அது என்னைப் பாதிக்காது ஏனெனில், என் வழியே எனக்கு உண்மை – என்று வாழ்வதுதான்.

    சமூகத்தில் சச்சரவு பிணக்குகள் எழாமலிருக்க ஒவ்வொருவருக்கும் தங்கள்தங்கள் வழிகளில் போக முழு உரிமை உண்டு என்று உணர்வும் புரிதலும் இருந்து செயல்பாட்டால் மட்டும் போதும்.

    ஒன்றிலிருந்து பத்துவரை தனித்தனியாகவும் நிற்கும். சேர்த்தும் நிற்கும். தனித்தனியாக நிற்பதே சமய அணுகுமுறையில் நன்று. சமயங்கள் வெவ்வேறானவை. ஒன்று சேரவியலா. வேறுபாடுகளுக்குள் ஒற்றுமை இருப்பது Great men think alike என்ற முதுமொழிக்குள் வரும். Commonalities are accidental.

    – Bala Sundara Vinayagam

  3. அருமையானக்கட்டுரை. முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றி. அவிரோதம் என்பது சைவ நெறியின் தன்மை என்பதை முனைவர் ஐயா மிக அழகாக ஆழமாக எடுத்துரைத்திருக்கிறார். ஐயா அவர்களுக்கு எமது நன்றிகள். அவிரோத உந்தியார் என்று ஒரு அற்புதமான நூலை பேரூர் சாந்தலிங்க அடிகள் எழுதியுள்ளார். அந்த நூலை வாசிக்கும் உணர்வு இந்தக்கட்டுரையைப்படிக்கும் போது ஏற்படுகிறது. அவிரோதம் என்பது வேதாந்திகளுக்கும் உரியது. அதனாலேதான் வேதாந்த சித்தாந்த சமன்வயம் பேசுகிற ஸ்ரீ சாந்த லிங்க அடிகள் போன்ற அருளாளர்கள் அதைவலியுறுத்துகிறார்கள்.
    ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஐயா தெளிவாக சொல்லியுள்ள எமது நிலை சகிப்புத்தன்மை அல்ல மாறாக அதைவிட உயரிய அவிரோதம் என்பது இன்றைய தேசிய அரசியலில் ஹிந்துத்துவத்துக்கும் ஹிந்துக்களுக்கும் எதிரான சக்திகளுக்கு சரியான பதிலாகவும் அமைந்திருக்கிறது. ஸ்ரீ ராஜிவ் மல் ஹோத்ரா சொல்வது போல் ஹிந்துக்கள் அபிராஹாமியர்களாகிய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், நேருவியர்கள் மற்றும் மார்க்சியர்கள் ஆகியோரிடம் எதிர்பார்ப்பது சகிப்புத்தன்மை அல்ல. மாறாக பரஸ்பர மரியாதையைத்தான். இன்னும் சொல்லப்போனால் எம் சத்குருமுதல்வர் ஸ்ரீ ஸ்ரீ சாந்தலிங்க அடிகள் சொல்வதுபோன்ற அவிரோத மனப்பான்மையைத்தான். ஸ்ரீ சாந்தலிங்கர் தாண்மலர்கள் வாழ்க

  4. ஐயா வணக்கம்,

    அடியேன் உங்களை போல் அறிவு பெற்றவன் அல்லேன். என் சிற்றறிவிற்கு எட்டிய படி பட்சபாதம் பாராமை என்பதை அத்வைதம் என உங்கள் கட்டுரை மூலம் அடியேன் புரிந்து கொண்டேன். ஒரு வேளை எனது புரிதல் சரி ஆகின், ஒரு ஐயம். அத்வைதம் என்ற சித்தாந்தத்தின் மூல கோட்பாடு பரம் பொருள் ஒன்றே சத்தியம் மற்றவை என்று ஒன்று இல்லை, பன்மை என்ற பேச்சுக்கே அங்கு இடம் இல்லை. அப்படி இருக்க தாங்கள் தங்கள் கட்டுரையில் பட்சபாதமின்மை என்ற ஒரு கருத்தை முன் வைத்து பல எடுத்துகாட்டுகள் கூறி இருப்பது முரண்பாடாக தோன்றுகிறது.

    மேலும் எனது புரிதல் தவறு, தாங்கள் பட்சபாதமின்மையை முன்னிறுத்தி சமையங்களுக்குள் உள்ள ஒற்றுமைகளை விளக்க முற்சித்திருந்தால் தாங்கள் சைவ சமைய நூல்களை தவிர பல சித்தாந்த நூல்களின் குறிப்புகளையும் காண்பித்திருந்தால் உங்கள் கட்டுரையின் சுவை குன்றாது இருந்திருக்கும்.

    மன்னிக்கவும் – இந்த நிலையில் இக்கட்டுரை சைவ சமயத்தை பரப்பும் பதிவாக மட்டுமே அடியேனுக்கு தோன்றுகிறது.

  5. அன்பர் பி எசு

    எசப்பனாரின் கருத்துக்கள் எசகுபெசகாகவே தான் இருக்க வேண்டுமோ?

    \\ இத்தளத்திற்கு மிகவும் வேண்டிய கட்டுரை இது. \\

    இதனால் எசப்பனார் சுட்ட விழையும் சூக்ஷ்மார்த்தம் என்னவென்பது அந்த பரலோகத்தில் இருக்கும் ஏக இறைவனுக்கே புரியும் போல.

    \\ சமூகத்தில் சச்சரவு பிணக்குகள் எழாமலிருக்க ஒவ்வொருவருக்கும் தங்கள்தங்கள் வழிகளில் போக முழு உரிமை உண்டு என்று உணர்வும் புரிதலும் இருந்து செயல்பாட்டால் மட்டும் போதும். \\

    இது ரொம்ப ரொம்ப சரி தான். ஹிந்துக்களைப் பொறுத்த வரையிலும் ஒரே நூலில் கட்டப்பட்ட …………….. வெவ்வேறு வேற்றுமைகளிக்கிடையேயும் மிகப் பலமாக ஒற்றுமைகளையும் தன்னகத்தே கொண்ட ஹிந்து மதத்தின் வெவ்வேறு சமயங்களைப் பொறுத்த வரைக்கும் இந்த வாசகம் மிகவும் சரி தான்…………………… ஆனால்!!!!!!!!!!!!!!!!!

    பைபளும் குரானும் சொல்லும் ஏக இறைவன் மட்டிலும் தான் இறைவன். அவனுக்கு ஆட்படாதவர்களிடம் வலியச் சென்று …………… ஒன்று அவர்களை அந்த ஏக இறைவனுக்கு ஆட்படுத்த வேண்டும் அல்லது அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற …………… கோட்பாடுகளை உடைய ஆப்ரஹாமிய மதங்களும்………… அவற்றை அந்தக் கோட்பாடுகளின் படி ஒழுகி …………இந்த உலகத்தில் உள்ள மாற்று மதத்தவருக்கு இடைவிடாது உலகளாவி சொல்லொணா ஹிம்சைகளை பல சதாப்தங்களாகக் கொடுத்து வரும் ஆப்ரஹாமியரும் இருக்கும்வரை………. பிணக்குகள் மட்டிலும் இருக்காது………. அதையொட்டிய படுபயங்கரமான பேரழிவுகளும் கூட இருக்கும்.

    அடுத்தவருக்கு அடுத்தவர் வழியில் போக உரிமை உண்டு என்பது ஹிந்து மதத்தைப் பொறுத்த மட்டிலும் தான் உண்மை. மாற்று வழியில் செல்லுபவர்களுக்கு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்தாக வேண்டும் என்பது ஆப்ரஹாமியக் கருத்தாக்கம். ஆப்ரஹாமியம் உலகத்திலே என்று மாற்று மதத்தவர்கள் அவர்களது மதங்களை ஒழுக உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று சித்தாந்த ரீதியில் ஏற்க விழைகிறதோ …………… அன்று ஒருக்கால் பிணக்குகள் உலகத்தில் குறையத் தொடங்கலாம். ஆனால் அது ஆக்ஸிமாரான்.

  6. ///ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஐயா தெளிவாக சொல்லியுள்ள எமது நிலை சகிப்புத்தன்மை அல்ல மாறாக அதைவிட உயரிய அவிரோதம் என்பது இன்றைய தேசிய அரசியலில் ஹிந்துத்துவத்துக்கும் ஹிந்துக்களுக்கும் எதிரான சக்திகளுக்கு சரியான பதிலாகவும் அமைந்திருக்கிறது.///

    சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களின் இந்தக் கருத்து மிக ஆழ்ந்த பொருள் பதிந்தது. இக்கருத்து வெறுமே தேசிய அரசியலுக்கு மட்டும் அல்ல, மனிதகுலத்துக்கே பெரும்பயன் அளிக்க வல்லது.

    இக்கருத்தேதான் நமது அடிநாதம்:

    எல்லோரும் இன்புற்றிருக்க இருப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரனே – தாயுமானவர் அருளிய பராபரக்கண்ணி

    சர்வே லோகோ சுகினோ பவந்து,
    சர்வே பவந்து சுகினஹ்,
    லோகா சமஸ்தா சுகினோ பவந்து,- என்று வெவ்வேறு சொற்களில் அதேகருத்தை ஒவ்வொரு வேதமும் வலியுறுத்துகிறது

    உலகெங்கும் “எமது நிலை சகிப்புத்தன்மை அல்ல மாறாக அதைவிட உயரிய அவிரோதம்” என்ற நிலையை எய்துவது ஒன்றுதான் அமைதியைக் கொடுக்கும்.

    ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  7. //அடுத்தவருக்கு அடுத்தவர் வழியில் போக உரிமை உண்டு என்பது ஹிந்து மதத்தைப் பொறுத்த மட்டிலும் தான் உண்மை. மாற்று வழியில் செல்லுபவர்களுக்கு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்தாக வேண்டும் என்பது ஆப்ரஹாமியக் கருத்தாக்கம். ஆப்ரஹாமியம் உலகத்திலே என்று மாற்று மதத்தவர்கள் அவர்களது மதங்களை ஒழுக உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று சித்தாந்த ரீதியில் ஏற்க விழைகிறதோ …………… அன்று ஒருக்கால் பிணக்குகள் உலகத்தில் குறையத் தொடங்கலாம். ஆனால் அது ஆக்ஸிமாரான்.//

    இசுலாமியர்கள், கிருத்துவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி கட்டுரையில்லை. இந்து ஞானியர்கள் எப்படி கொண்டார்கள் என்பது பற்றியே கட்டுரை. கட்டுரையின் கருத்தே இங்கு விவாதிக்கப்படுகிறது.

    இந்து ஞானியர்களிலும் கட்டுரை சைவ சித்தாந்தம் போற்றும் ஞானியர்கள் பற்றி மட்டுமே பேசுகிறது சைவ சிந்தாந்த ஞானியர்களைப்பற்றி மட்டுமே கட்டுரையாளருக்கு ஆழந்த புலமையும் பற்றும் இருப்பதால், அவர்களை மட்டுமே அரக்க பரக்க‌ பேசுகிறார்; வியப்பொன்றுமில்லை

    பிறமாநிலங்களிலும் ஞானியர்கள் இதே கருத்தை மக்களுக்குச் சொல்லி, அதனால் போற்றப்படுகிறார்கள். கபீர் (அல்லா, ஈஸ்வர் தேரே நாம்), நாராயண குரு (ஒரே கடவுள்; ஒரே சாதி; ஒரே மக்கள்) இன்னும் பலர் இந்தியாவில் தோன்றி இப்படி சொல்லி மறைந்திருக்கிறார்கள். அவர்கள் காலங்களிலும் இந்து, முசுலீம்கள் பிணக்குகள் நீங்காமல் இருந்தன‌. கபீர் இறுதிச்சடங்கில் கூட இவருக்கு ஈமக்கிரியைகள் எப்படி பண்ணுவது? இந்துவாகாவா? இசுலாமியராகவா? என்று சீடர்கள் சண்டையிட்டு இறுதியில் அவர் சடலத்தை மூடியிருந்த‌ துணியை எடுத்தபோது ரோசாப்பூக்கள் மட்டுமே இருந்தன என்பது அவர் சரிதம்.

    இங்கு சைவசிந்தாந்த ஞானிகள் கூறும் கருத்துக்கள் ஒன்றும் புதியனவே அல்ல. நான் சொல்லிய கருத்துதான் புதியது: பல மதக்கருத்துக்களை ஒன்றிணைத்து, அல்லது அவற்றில் கூறிய கருத்துக்கள் எல்லாம் ஒரே கடவுளையே காட்டுவது என்றறிந்து வாழ்வது. இது சமூக ஓற்றுமைக்கு ஒரு நல்வழி என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. ஆனால், ஆன்மிக வாழ்க்கைக்கு சரி வராது. ஞானியர் வழியும் பாமரன் வழியும் ஒன்றாகா.

    ஞானியரைப்போல ஆன்மிக எல்லையை நாம் எட்டவே முடியாது. எல்லாரும் பட்டிணத்தார் ஆக முடியுமா|? வள்ளலார் ஆக முடியுமா? ஆகத்தான் வேண்டுமா? ஓர் எளிய குடும்பஸ்தனாக வாழ்ந்து மறைந்தால், இறைவன் நம்மை நகரத்தில் வைத்து வாட்டுவான் என நினைப்பது இறைவனின் இழிவுபடுத்துவதாம்.

    ஆகவே, ஞானியர் காட்டும் நிலையை அடைந்தால் மட்டுமே சமூகத்தில் இணக்கம் வரும் என்பதும் சரியில்லை. ஞானியர் எண்ணிக்கை சிலவே. பாமரர் எப்படி வாழ்கிறார்கள் எனபதே சமூகத்தைத் தீர்மானிக்கும். அதாவது பாமரனின் நிலையிலிருந்து மக்கள் ஒற்றுமையாக வாழ முடியும் எனபதே என் முடிபு.

    பாமரனின் மனம் நிலைகொள்ள மதம் அவனுக்கு மிகவும் அவசியம். கட்டுரை காட்டும் வழியில் அவன் செல்லும் போது மனம் நிலை கொள்ளாது. மேலும், நிலையற்ற தன்மைகள் நிறைந்த இகவாழ்க்கை அவனை வாட்டும்போது இக வாழ்க்கையில் ஒரு நிலையயும் நிறைவையும் தரும் ஊன்று கோல் ஆக மதம் இருக்க வேண்டும். அதற்கு ஒரு தனி மதம் அவனுக்கு வேண்டும். அஃது எம்மதமாகவும் இருக்கலாம்; ஆனால், அஃதொரு ஒரு தனிப் பொருளாக; தனித்தன்மை கொண்டதாகவே இருக்க வேண்டும். அம்மதத்திலும் எம்மதத்தில் கருத்துக்கள் உள; எம்மதத்தில் கருத்துக்கள் அம்மதத்தில் உள; மறுக்கவில்லை. ஆனால், அவற்றை நினைத்தோ ஆராயப்புகுந்தோ அவன் சென்றால், அவனுக்கு மதவாழ்க்கை இல்லை. பண்டிதரின் ஆன்மிகம் இன்டலக்சுவல் (intellectual). பாமரனின் மதம் ஸ்பான்டேனியஸ் (spontaneous). ஆராயும் மத வாழ்க்கை மென்மேலும் லவுகீக வாழ்க்கையிலே பாமரனை நிலைகொள்ள வைத்தால் அதன் கேடான விளைவுகளை சமூகம் எதிர்கொள்ள வேண்டும். தவறுதலாக புரியப்பட்ட மதவாழ்க்கை பலரை தற்கொலைக்குக் கொண்டுவிடும்.

    எனவே நம்மாழ்வார் காட்டிய வழியே சரியான வழி: அவரவர் அவரவர் தெயவங்களை வணங்குங்கள். அத்தெய்வம் நுமக்கு நன்மை தரும். இப்பாசுரத்தின் புதைபொருட்கள் பல: விரிப்பின் பெருகும். விளக்க‌ இது மேடையன்று.
    எம்மதமோ அம்மதம் நல்வழி காட்டும் அதை நன்கு ஒழுகும்போது, எல்லாரையும் உடன்பிறவா சஹோதர்களாகப்பார்த்து வாழ வழி வகுக்கும்.

    இம்மதம் அப்படி கிடையாது. அம்மதம் இப்படி கிடையாது என்ற பேச்சு இங்கு பொருந்தாப் பொருள். நான் பேசுவது பாமரனை மையப்பொருளாக வைத்தே; கட்டுரை பேசுவது ஞானியரை மையப்பொருளாக வைத்தே.

    காயதல் உவத்திலின்றி சிந்தியுங்கள்: என் கருத்துக்கள் புரியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *