ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

an11an9ஆறுமுகநாவலர் பெருமான் தமிழுக்கும் சைவத்திற்கும் செய்த பணிகள் மிகப்பெரியன. 1822ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 1879ஆம் ஆண்டு டிசம்பர் 05ஆம் திகதி சிவப்பேறு பெற்றவர்.

ஆக, நாவலர் பெருமானின் ஜனனதினமும் (மார்கழி அவிட்டம்) , குருபூஜை நாளும் (கார்த்திகை மகம்) அமைகின்ற இக்காலத்தில் நாவலரின் பணிகளை சிறிது சிந்திப்பது பொருத்தமானதாகும்.

ஐம்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்த இவரது பணிகள் பல்திறப்பட்டன. ஆயினும் தமிழுக்குச் செய்த பணிகளில் பாமரரும் புரிந்துகொள்ளும் விதமாக தமிழ் இலக்கியங்களை அதன் இனிமை குன்றாமல் வசனநடையில் அச்சேற்றியமையே பெரிதும் சிறப்பாகப் போற்றப்படுவதாகும்.

an1ஆறுமுகநவாலர் பெருமானின் எழுத்துநடைச் சிறப்பு குறித்து சம்ஸ்கிருத பண்டிதர் கோப்பாய் ச.பஞ்சாக்ஷரசர்மா என்ற பெரியவர் எழுதிவைத்திருந்த ஆச்சர்யமான குறிப்புகள் சிலவற்றைப் படித்தேன். அவற்றில் சிலவற்றை இங்கு பதிவுசெய்கின்றேன்.an5

யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் பெருமானும் அவருடைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் பலரும் தாம் உபயோகிக்கும் சொற்களையும், வாக்கியங்களையும் சிறுபிழையுமின்றி எழுதுவதில் மிகவும் விழிப்புடன் இருந்தனர்.

ஆனால், இவ்விடயத்தில் அக்காலத்தில் தமிழக அறிஞர்களைவிட ஈழத்தறிஞர்களே அக்காலத்தில் முற்பட்டிருந்தனர்.

தமிழோடு கலந்துவிட்ட, வடமொழிச் சொற்களை அவற்றின் சரியான உருவத்தோடும் பொருளோடும் அறிந்துகொள்வதற்காக அவர்களிற் பலர் வடமொழியிலும் குறைந்தளவாவது பயிற்சிபெற்றிருந்தனர்.

சிவசங்கரபண்டிதர், செந்திநாதையர், சிவானந்தையர் முதலிய அக்காலத்தவர்கள் வடமொழியில் பெரும் புலமையுடையவர்களாக தமிழை வளப்படுத்தினர்.

இவ்வளவோடு அமையாது, வேறு மொழிகளிலும் பல அறிஞர்கள் புலமையோடு விளங்கியிருக்கிறார்கள். முக்கியமாக இவர்களில் பலருக்கும் ஆங்கில அறிவு சிறப்பாக இருந்திருக்கிறது.

ஆறுமுகநாவலர் பெருமானாரே தமது இளமைக்காலத்தில் யாழ்ப்பாணம் மெதடிஸ்ட் ஆங்கிலப்பாடசாலையில் கல்விகற்பிக்கிறபோது, பேர்சிவல் பாதிரியாருடன் இணைந்து விவிலியத்தை (பைபிளை) ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, அவர்களுக்கு இலௌகீக வாழ்வியலுக்கு ஆங்கிலமும், சமயம், தத்துவம், சோதிடம், வைத்தியம் போன்ற ஆன்மீக மற்றும் இலௌகீக துறைகளுக்கு வடமொழி அறிவும் பயன்பட்டது. அக்காலத்தில் பன்மொழிப்புலமையாளர்கள் பலராலும் போற்றப்பட்டன.

ஆக, இந்தக்காலத்தினைச் சேர்ந்த நாவலர் பெருமானார் தாம் எழுதுவதில் பிழை நேர்ந்துவிடக்கூடாது என்று விழிப்பாயிருந்ததோடு தாம் பதிப்பிக்கும் நூல்களில் ஓர் அச்சுப்பிழையும் வந்துவிடக்கூடாதென்று விழிப்புடன் இருந்தார்.

அக்காலத்தில் கண்டனப்பிரசுரங்களை வெளியிடுவது பிரபலமாக இருந்தது. நாவலனார் பிறரைக் கண்டிக்கும்போது அவர்கள் வெளியிட்ட நூல்கள், பத்திரங்களில் உள்ள பலவகைப் பிழைகளையுங்கூட எடுத்துக் காட்டிக் கண்டித்தார்.

உதாரணமாக, நாவலர் தாம் எழுதிய ‘போலியருட்பா மறுப்பு’ என்ற கட்டுரையில், அக்காலத்தில் வெளிவந்த பிரபலமான ஒரு நூலில் தாம் கண்ட பலவகைப்பிழைகளையும் எடுத்துக்காட்டி திருத்தங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.an1o

பிழை – திருத்தம்

சுழிமுனை- சுழுமுனை

சொற்பனம்- சொப்பனம்

கேழ்க்க- கேட்க

பிராரத்துவம்- பிராரத்தம்

மயேசுரன்- மகேசுரன்

கசமார்க்கம்- சகமார்க்கம்

நூல்களறிவிக்கமாட்டாது- நூல்கறிவிக்கமாட்டா

போயவிடத்துவான்மா- போயவிடத்தான்மா

நாவலர் சரிதம் ஒன்றை எழுதிய, திரு.த.கைலாசபிள்ளை அவர்கள் ‘வடமொழிகளின் இயல்பறியாமையினாலும் ழகர, ளகரங்களின் பேதமறியாமையினாலும் சொற்களைப் பிழைப்படுத்தி வழங்கிவந்திருக்கிறார்கள். ஏடுகள் எழுதுகிறவர்களும் மேன்மேலும் பிழைகளை உண்டாக்கிவிட்டார்கள். இவைகளாலே தமிழ்ச் சொற்களினுடைய உண்மையான சொரூபம் தெரியாமற்போயிற்று” என்று எழுதி பிழையாக வழங்கும் சிலசொற்களையும் அவற்றின் சரியான சொரூபங்களையும் காட்டியுள்ளார்.an2

உதாரணமாக, கற்பூரம், குங்கிலியம், பருதி, அருணம், சிகப்பு, உத்தராயனம், கத்திரித்தல் என்று எழுதுவதெல்லாம் தவறு. இச்சொற்களின் சரியான வடிவம் முறையே, கர்ப்பூரம், குங்குலியம், பரிதி, அரிணம், சிவப்பு, உத்தராயணம், கத்தரித்தல் என்று காட்டியுள்ளார்.

நாவலர் வழிவந்த சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் விளம்பரப்பத்திரங்களில் காணப்பட்ட பிழைகளையும் தம் மாணவருக்குக் காட்டித் திருத்துவித்துப் பயிற்சியளிப்பது வழக்கம். அக்காலத்தைய பேரறிஞர் ஒருவர் சிரார்த்தம் என்று பிழையாக எழுதிய போது, சிர+அர்த்தம்- தலையின் பாதி என்று பொருள்படுமாதலில் அது பிழை என்றும் சிரத்தையோடு செய்யப்படுவது என்று பொருள்தரும். சிராத்தம் என்பதே சரியென்றும் எழுதித் திருத்தியவர் புலவர். இவ்வாறு திருத்தப்பட்ட அறிஞர் மஹாமஹோபாத்யாயர் என்ற பட்டம் பெற்றவர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.an6

இவ்வாறு பிழைகாணும் ஆற்றல் காரணமாக குமாரசுவாமிப்புலவர் “தோஷஜ்ஞர்” என்று போற்றப்பட்டவராவர்.

நாவலரும் அவர் வழி வந்த நல்லறிஞரும் திருத்தி வளர்த்த நம் தமிழ்மொழி இப்போது சிதைக்கப்பட்டு வருவது கொடுமையானது. பத்திரிகைகள் முதலிய ஊடகங்களிலேயே பல எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சிலரது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் வேற்றுமையுருபுகளை பெயருடன் சேர்க்காமற் பிரித்தெழுதுவது போல, தமிழில் எழுத முயல்வது தெரிகின்றது. புதிது புதிதாக பல மரபுகள் உருவாகின்றனவா? என்று ஐயமுண்டாக்குவதுபோல பலரது எழுத்துநடை உள்ளது.

செலவீனம், அருகாமை, ஈமைக்கிரிகை, சரிகை, கிரிகை, நினைவாஞ்சலி, சிகிட்சை, சுயேட்சை, நலன்புரிச்சங்கம், போன்ற பல விநோதமான சொற்கள் இப்போது ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.

ஆனால், தமிழ் பாதுகாவலர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் சிலருக்கு ஜ,ஸ,ஷ,ஹ முதலிய கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதுவதுதான் பெருந்தவறாகக் கண்ணிற் படுகின்றது. கண்டிக்கவுந் தூண்டுகின்றது.

இது குறித்து வடசொல்லையும் திசைச்சொல்லையும் தமிழுரை நடையிற் சேர்த்தெழுவதுபற்றி நாவலர் எத்தகைய கருத்துடையவராயிருந்தார் என்று அறிவது மிகப்பயனுடையதாகும்.  நாவலர் பெருமான் பிறமொழிச் சொற்களையும் எடுத்தாண்டு எழுதியதற்கான காரணத்தை அறிவதும் பயனுள்ள செயலாகும்.an4

தீக்ஷிதர், பஞ்சாக்ஷர செபம், இரண்டு லக்ஷம் ரூபா, வருஷந்தோறும், சிவதூஷணம், மத்தியஸ்தம், ஞானஸ்நானம், ஸ்ரீ சற்குருநாத சுவாமிகள், போன்ற பல வடமொழிச் சொற்களும், கிறிஸ்து சமயம், வெஸ்லியன் மிஷன், புரொடெஸ்டாண்டு, கம்மிஷனர், கோட்டுப்பிறக்கிராசி முதலிய பிறமொழிச் சொற்களும் பொதுமக்களின் வழக்கிலிருந்தமையால் இவற்றை உருத்திரிக்காமலே நல்லறிவுச்சுடர் கொளுத்தல், யாழ்ப்பணச் சமயநிலை என்னும் நூல்களில் எழுதியிருக்கிறார் நாவலர்.

an3தமிழிலக்கண நூல்கள் பலவற்றைப் பிழையறப் பரிசோதித்துப் பதிப்பித்த நாவலருக்கு வடசொற்களை ‘வடவெழுத்தொரீஇ’ எழுத வேண்டுமென்ற விதி தெரியாதா? காலதர், சேர்ந்தாரைக் கொல்லி என்னும் பழைய சொற்களையும் பரிதிமாற் கலைஞன், வெண்ணெய்க் கண்ணன், என்னும் புதிய சொற்களையும் போன்று, தனித்தமிழில் ஏன் மொழிபெயர்த்தெழுத அவர் முயலவில்லை?

அவர் தமது அறிவாற்றலைப் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக எதையும் எழுதினாரல்லர். தமது எண்ணத்தை வெளியிடவே- நாடெங்கும் பரப்பவே- பேசினார், எழுதினார்.

சிவபூசையும் சிவாலய வழிபாடுமாகிய இரண்டுமே நாவலர் தமது ஆன்மீக நலங்கருதிச் செய்தவை. வாழ்நாள் முழுவதும் அவர் செய்த மற்ற செயல்களெல்லாம் பொதுமக்களின் நன்மைக்காகவே செய்யப்பட்டன. துமக்களிற் பெரும்பாலோர் ஆரம்பக்கல்வி மாத்திரமே பெற்றவர்கள். அதுவும் அற்றவர்கள் பலர். அவர்களுக்காக எழுதிய அறிவிப்புக்கள், வேண்டுகோள்கள், கண்டனங்கள் ஆகியவை அவர்கள் விளங்கிக் கொள்ளக்கூடிய எளிமைவாய்ந்த நடையில் எழுதப்பட்டன.

an8பொதுமக்கள் வழங்குகின்ற சொற்களிலுள்ள பிழைகளைத் திருத்திவிடுவதுதான் செய்யத்தக்கதென்றும், மொழிபெயர்த்து உருமாற்றம் செய்து விட்டால் அவர்கள் அவற்றை விளங்கிக்கொள்ளமாட்டார்கள் என்றும் அவர் கருதினார். இது தமிழ்ச்சொல்லா, பிறசொல்லா என்று பாராமல் இது சரியான சொல்லா, பிழையான சொல்லா என்றும், இது எல்லோருக்கும் விளங்குமா, விளங்காதா என்றும் ஆராய்ந்து எழுதினாரென்பது நன்கு தெரிகின்றது.

நிறைவாக, கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவது குறித்தும் ச..பஞ்சாக்ஷரசர்மா இப்படிப் பதிவு செய்கின்றார்.

“அதாவது ஸ,ஷ,ஜ முதலிய கிரந்த எழுத்துக்கள் வடஎழுத்துக்களென்று சொல்லப்பட்டாலும், உண்மையில் இவை வடநாட்டு எழுத்துக்களல்ல, திராவிட மொழியாளர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தனித்தனியே வேறுபட்ட எழுத்துக்களை உபயோகிப்பவர்களாயினும் உச்சரிப்பைப் பொறுத்தவரையில் ஐம்பத்தொரு எழுத்தொலிகளைக் கொண்ட வடமொழி நெடுங்கணக்கையே கைக்கொள்ளுபவர்கள். இக்காரணத்தால் இவர்கள் வடமொழியை அதற்குரிய நாகரி எழுத்தைப் பயின்று எழுதும் சிரமமின்றித் தத்தம் தாய்மொழி எழுத்திலேயே எழுதிக் கொள்ளும் வசதியுடையவர்கள்.

முப்பது எழுத்துக்களால் வடமொழியைச் சரியாக எழுத முடியாமல் இடர்ப்பட்ட தமிழர் தமது உபயோகத்திற்காகத் தமிழெழுத்துக்களின் உருவமைப்பில் ஆக்கிக்கொண்ட எழுத்துக்களே கிரந்த எழுத்துக்கள். பல்லவ மன்னரும், பின்வந்த மூவேந்தரும், பிறரும் தங்கள் சாசனங்களை எழுத இந்தக் கிரந்த லிபியை உபயோகித்தனர். திருமூலரின் திருமந்திரப் பாக்களிலும் இவற்றுட் சில இடம்பெற்றிருக்கின்றன. பிற்காலத்தில் ஆறுமுகநாவலரும் சமகாலத்து அறிஞரும் தேவையானபோது இவ்வெழுத்துக்களை கையாண்டிருக்கிறார்கள்.

an13தமிழகத்தில் தமிழர்கள் தமக்காக ஆக்கிப் பயன்படுத்திய இவ்வெழுத்துக்களை — இவற்றின் தேவை இன்றும் இருக்கும் போது –அவற்றை அன்னியம் என்று ஏன் தள்ள வேண்டும்?”

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட, ச..பஞ்சாக்ஷரசர்மா அவர்களின் இந்த எழுத்துக்கள் இன்றைக்கும் எழுத்துநடை, சரியாக தமிழ் எழுதுவது, நாவலர் பெருமானின் தமிழ்நடை என்பன குறித்து சிந்திப்பதற்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளன.

வடஇலங்கையில் உருவான மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவராக விளங்கிய ச..பஞ்சாக்ஷர சர்மா பன்மொழிப்புலமையாளரும், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என்று காத்திரமான படைப்புக்களை தமிழுக்கு தந்தவருமாவார்.

Tags: , , , , , , , , , ,

 

6 மறுமொழிகள் ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

 1. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on December 2, 2015 at 2:00 pm

  வைதீக சைவசமயம், சைவசித்தாந்தம், தமிழ் மொழி ஆகியவற்றின் மீது பற்றும் பக்தியும் கொண்ட அனைவருக்கும் ஒரு ஆதர்ச புருஷர் ஈழத்த்துப்பெரியார் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் என்றால் மிகையன்று. இன்றைக்கும் இன்னல்களின் நடுவே கிறித்தவமதமாற்றிகளின் தீவிரசெயல்பாடுகளின் நடுவிலும் ஈழத்து தமிழ் மக்கள் சைவத்தின் மீது பற்றொடு இலங்குகின்றார்கள் என்றால் ஸ்ரீலஸ்ரீ நாவலர் அவர்களின் பெரும்பணியின் விளைவினால்தான். சிறந்த தமிழ் அறிஞராக இருந்ததோடு பல பெரும் அறிஞர்களையும் உருவாக்கிய மஹானுபாவர் ஸ்ரீலஸ்ரீ நாவலர் பெருமான். சைவத்தை வைதீகத்திலிருந்து பிளக்கமுனையும் அத்துணை அபிராஹாமிய சார்பு தீயசக்திகளுக்கும் பதிலடி தருவதற்கு ஸ்ரீலஸ்ரீ நாவலர் அவர்களும் அவரைத்தொடர்ந்து வந்த அறிஞர்களின் நூல்களும் வலுவான வாதங்களை ஆதாரங்களைத்தருகின்றன.
  என்றாலும் வர்ணம், சாதி போன்றவற்றில் ஸ்ரீலஸ்ரீ நாவலருடைய கருத்துக்கள் சற்றும் ஏற்புடையவை அல்ல.சைவசமயிகள் வர்ணாசிரமத்துக்கு உட்பட்டு இயங்கவேண்டிய அவசியம் கிடையாது என்பது நெடுங்காலம் சைவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையாகும். இன்றைய சூழலில் வர்ணமுறையை முற்றிலும் நிராகரித்தல் அவசியமாகும். ஸ்ரீலஸ்ரீ நாவலர் பெருமான் கருத்துக்களில் வர்ணம் சாதி சார்ந்த கருத்துக்களைக்கடந்து சைவம் பாரததேசத்தில் தழைத்தோங்கவேண்டும். மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

 2. கார்த்திக்கரன் on December 2, 2015 at 9:31 pm

  //தமிழிலக்கண நூல்கள் பலவற்றைப் பிழையறப் பரிசோதித்துப் பதிப்பித்த நாவலருக்கு வடசொற்களை ‘வடவெழுத்தொரீஇ’ எழுத வேண்டுமென்ற விதி தெரியாதா? //

  ஏன் தொல்காப்பியருக்குத் தோன்றியிருக்காதா, மொழிநடை ஏந்து (வசதி) கருதி சமற்கிருதப் பலுக்கத்தையும் (உச்சரிப்பையும்), எழுத்துக்களையும் புகவிடலாமே என்று? பின்பு ஏன் அவ் விதியைக் கூறி வரம்பீடு செய்தார்?

 3. RV on December 3, 2015 at 11:25 pm

  நாவலர் எழுதிய ‘சைவ தூஷணப் பரிகாரம்’ என்ற புத்தகம் பற்றி ஒரு பதிவு – https://siliconshelf.wordpress.com/2014/05/07/ஆறுமுக-நாவலர்-எழுதிய-சைவ/

 4. rishi on December 10, 2015 at 6:17 pm

  நாவலரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றி எழுதிய நூல்களை எங்கு வாங்கலாம் ?
  தயவு செய்து அறிவிக்கவும்.

  வெளி நாடுகளில் நாவலர் குரு பூஜை செய்பவர் களிடம் கூட ஒரு நூல் கூடக் கிடையாது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காது வெறும் விளக்கமற்ற பூஜைகள் செய்யும் சைவர்கழ்தான் வெளி நாடுகளில் வாழ்கிறார்கள். இதனால்தான் மத மாற்றம் இலகுவாக நடக்கிறது . வெளி நாட்டு கிறிஸ்தவ சர்சுகளில் முக்கால்வாசிப் பேர் மதம் மாறிய இந்துக்கள்தான் . இன்னும் சில வருடங்களில் சைவக் கோவில்கள் எல்லாம் மூடப் படும் நிலையே உள்ளது. இதனைப் பற்றி கோவிலுக்குப் போகும் படித்த பெரியவர்கள் கூடக் கவலைப் படுவதில்லை . இன்னொரு நாவலர் வந்தால்தான் இந்த சைவர்களை திருத்தலாம் .

  இங்கு இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்பிகிறேன் . சென்னையில் மழையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி புரிய இலங்கை வடமாகாண சபை முயன்ற போது
  யாழ்ப்பணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் -தமிழர் ஒருவர் – இந்தியா வெளிநாடுகளில் இருந்து உதவியை எதிர்பார்க்க வில்லை என மறுப்பு அறிவிப்பு வெளி இட்டுள்ளார். சென்னை தமிழனே சென்னை மக்களுக்கு எதிர் . என்ன உலகமடா.

 5. M.S.Muthali on October 4, 2016 at 7:19 pm

  ஆறுமுகம் பிள்ளை என்ற மலையாள வம்சாவளி யாழ்ப்பாணத்தவர் ஆங்கிலேயர்களின் அடியாளாகி அவர்களின் இந்து எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு பலவகையிலும் கை கொடுத்தார். நல்லூர் முருகன் கோவிலில் அவர் செய்த அட்டகாசங்கள் அவரை நல்லூர்ரை விட்டே துரத்தின. ஆங்கிலேயர்கள் இன்றுள்ளது போல எல்லோருக்கும் பிரசுரிக்கும் உரிமையை வழங்கவில்லை. ஆறுமுகம் பிள்ளைக்கே வழங்கினார்கள். கந்த புராணத்து பாயிரத்தில் செங்குந்தர் புகழ் சொல்லும் சகல பந்திகளையும் நீக்கி சிதம்பரத்தில் அச்சிட்ட கந்த புராணமே இன்றுள்ளது. வெள்ளாளர் என்ற சாதி வெள்ளையர்களுக்கு எப்போதும் விசுவாசாமாக இருப்பார்கள் என்று ஆறுமுகம் பிள்ளை கொடுத்த வாக்கு இப்போதும் நடை முறையில் உள்ளது. யாழ்ப்பாணத்தவர்கள் இன்றும் கிறிஸ்தவ பாதிரிகளின் அடிமைகளாகவே உள்ளனர். தமிழ் தேசியம் என்பது கிறிஸ்தவர்களின் சொத்தாகியுள்ளது. மன்னாரில் பாடல் பெற்ற தலமாகிய திருகேதீஸ்வரத்தானின் நிலத்தை கத்தோலிக்க கும்பல் பிடுங்கியுள்ளது. அது பற்றி என்த யாழ்ப்பாணத்தானும் வாயே திறக்கவில்லை.முதலில் யாழ்ப்பாணத்தில் இந்துக்கள்தான் தமிழர் என்பதை நிலை நாட்டி விட்டு மிகுதியை பேசலாம். சமீபத்தில் நடந்த “எழுக ” தமிழ் என்ற கூத்தில் பாதிரிக் கும்பல்களே அதிகளவில் வந்து கூத்தாடினார்கள். புத்தர் சிலை வந்தால் அலறும் தமிழர்கள் சிலுவைகள் முழைத்தால் வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள்.

 6. இந்துமத தத்துவுங்கள் சைவ வைணவம் கோட்பாடுகள் இவைகளை பற்றிதெரிந்துகொள்ள ஆவலைத்தூண்டியது ஆறுமுக நாவலரின் நூல்கள்தான். இவரின் இந்துமத கருத்துகள் கட்டுரைகள் நூல்கள் அனைத்தும் படிக்கபடிக்க இந்துமதத்தின்மேல் மரியாதையும் மன அமைதியும் கிடைக்கிறது இந்துவாக பிறந்ததில் பெருமைகொள்வோம் ஓம் நமச்சிவாய

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*