போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்

இன்றைக்கெல்லாம் மின்சாரம் இல்லாத ஒரு நாள் குறித்து சிந்திக்கவே இயலாமலிருக்கிறது. அந்த அளவுக்கு மின்சாரம் நம் வாழ்வோடு கலந்திருக்கிறது. அண்மையில் சென்னையில் ஏற்பட்ட பெரும்வெள்ள அனர்த்தத்தில் மின்சாரமற்ற நாட்களை கழிக்க நேரிட்ட போது அது எவ்வளவு சிரமமானது என்று பலரும் அறிந்திருப்பார்கள்.

நம் வாழ்வில் ஈழத்தமிழர்களாக நாம் மின்சாரமற்ற நாட்களையும், இடப்பெயர்வினையும் தொடர்ச்சியாக அனுபவித்திருக்கிறோம். ஆனால், அதனை விட சென்னையில் ஏற்பட்ட வெள்ள இடப்பெயர்வு இன்னும் சற்றே வேதனையானது தான். ஏனெனில் ஈழத்து இடப்பெயர்வில், ஒரு சில இடங்களில், ஒரு சில நேரங்களில் தவிர, பிற இடங்களில் ஒரு சில மணி நேரமாவது அவகாசம் இருக்கும். அதற்குள் எடுப்பதை எடுத்துக் கொண்டு ஓடலாம். ஆனால், சென்னையில் வெள்ளம் உயர உயர ஒன்றுமே செய்ய முடியாமல், ஓடவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டிருப்பார்கள். இதனை நினைக்கிற போதே மிகவும் வேதனையாகவே இருக்கிறது.

உண்மையில், சென்னைக்கு வெளியில் இருந்து கொண்டும்,  மக்களின் அவலத்தை முழுமையாக உணர ஏறத்தாழ இதே போன்ற துயரை அனுபவித்த மக்களாலேயே இயலும்.. ஏனெனில் ஊகித்தறியவதைக் காட்டிலும் அந்த இடத்தில் இருந்து அனுபவிப்பது மிக கடினமானது..
ஆக, இந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய சில அனுபவங்களை பகிரலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

நாம் வாழும் வடஇலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியில் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் தொட்டு, கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டு வரை மின்சாரமற்ற வாழ்வு நிலை கொண்டிருந்தது.விமானக்குண்டு வீச்சுக்களே இதற்கு முக்கிய காரணமாயின. தொலைத்தொடர்பு வசதிகள் முற்றாக இக்காலத்தில் செயலிழந்திருந்தன. நாங்கள் வாழ்ந்த வடபுலத்திற்கும் பிற பகுதிகளுக்குமான தரைவழிப்போக்குவரத்தும் இல்லாதிருந்தது. திடீரென்று நவீன உலகத்திலிருந்து ஆதிகாலம் போன்ற ஒரு உலகத்திற்கு தள்ளப்பட்டோம். ஆனால், என்ன அதிசயம் என்றால் இக்காலத்தில் மனிதவிழுமியங்கள் இப்போது நம் ஊர்களில் இருப்பதைக் காட்டிலும், மிக உயர்ந்த நிலையிலிருந்ததாக சொல்கிறார்கள்.

இப்போதெல்லாம் வட இலங்கையில் திருடர் தொல்லையால், காற்று வாங்கக் கூட, இரவில் ஜன்னலைத் திறக்க இயலாதிருக்கிறது. ஆனால், அந்தக்காலத்தில் வீட்டுக் கதவைக்கூட திறந்து வைத்து விட்டு நித்திரை செய்தார்கள். அக்காலத்தில் மா இடிக்க உரல், உலக்கையும், மா அரைக்க திரிகைக்கல்லும், கிணற்றில் நீர் அள்ள கப்பிகளும், வாளிகளும், நீரிறைக்க துலா மிதிகளும் மீண்டும் பாவனைக்கு வந்தன.

பெற்றோல், டீசல் முதலிய எரிபொருட்கள் எவையும் இங்கு கொண்டு வருவதற்கு பெருமளவு அனுமதிக்கப்படவில்லை. மண்ணெண்ணை மட்டுமே இங்கு வந்தது. மண்ணெண்ணை ஒரு லீற்றர் 200 அல்லது 300 இலங்கை ரூபாவுக்கு விற்பனையானது.  ஆனால், நீரிறைக்கும் யந்திரத்திற்கு சிறிதளவேனும் பெற்றோல் காட்டினால் தான் அது இயங்கும். எனவே, அதற்கு மாற்று வழி கண்டார்கள். அதாவது இரும்பு உலோக குழாய் ஒன்றை கடுமையாக சூடாக்கி, அதனுள் சிறிதளவு மண்ணெண்ணையை விட்டு, வருகிற ஆவியை நீரிறைக்கு யந்திரத்தின் காபரேற்றருக்கு காட்டுவார்கள். அது பெற்றோல் போல தொழிற்பட்டு, இயந்திரத்தை இயங்கச் செய்யும்.

jaffnalife (1)

 அதே போல மண்ணெண்ணை விட்டுத் தான் மோட்டார்வண்டிகள் யாவும் இயங்கின. கார் மற்றும் லாரிகள் யாவும் இப்படித்தான் இயங்கிற்று. ஓரிடத்தில் அவை நின்று விட்டால், எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் அங்கு நிற்கிற எல்லோரும் சேர்ந்து தள்ளுவார்கள். அதன் பின்னரே அது இயங்கத் தொடங்கும். அந்தக்காலத்தில் பற்றிக்கும் பெருந்தட்டுப்பாடு. மரப்பலகை ஒன்றுடன் சைக்கிள் றிம் ஒன்றை இணைத்து, சைக்கிள் டைனமோவின் முகப்புடன், சைக்கிள் ரியூப்பை இணைத்தார்கள். டைனமோவுடன் வயரை இணைத்து றேடியோவின் கொன்டன்சரை இணைப்பார்கள். சைக்கிள் றிம்மை சுழற்ற சுழற்ற டைனமோ வேகமாக சுழன்று வரும் போது உண்டாகும் மின்சாரம் மூலமே ரேடியோ கேட்டார்கள்.

தொலைக்காட்சி பார்க்கவும் இதே முறைமையே பயன்பட்டது. மண்ணெண்ணை மூலம் ஜெனரேற்றர்களை இயக்கியும் மக்கள் விசேட நாட்களில் கூடியிருந்து படம் பார்த்தார்கள். ஆனால், 1994ல் சினிமாப்படங்களை பார்ப்பதை இங்கிருந்த இயக்கம் தடை செய்து விட்டது. களவாக படம் பார்த்தவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டன.  ஒரு போத்தலில் சிறிது மண்ணெண்ணையை விட்டு, உப்பை கலந்து விடுவார்கள். மேலே சிறிய திரியை வைத்து நெருப்பு மூட்டி சுற்றி வர சிறுவர்கள் இருந்து படிப்பார்கள். இப்படிப் படித்தே பலரும் மருத்துவர்களாகவும் ஆனார்கள். யாழ்ப்பாணத்தின் பெரிய வைத்திய சாலையான போதனா வைத்தியசாலைச் சூழல் விமான குண்டு வீச்சுத் தாக்குதல் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அச்சூழலில் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரம் விநியோக்கிக்கப்பட்டது.

சில மாணவர்கள் இரவில் சைக்கிளில் மேசை, கதிரையை கட்டிக்கொண்டு போய் அச்சூழலில் மின்விளக்கில் படித்து விட்டு, காலையில் வீடு திரும்பினார்கள் என்றும் அறிய முடிகிறது.

அதே போல, அரச கட்டுப்பாட்டுப் பிராந்தியங்களில் 1987ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை அநேகமாக தினமும் பல இடங்களிலும் இரவு முழுநேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. உணவு, உடை போன்ற யாவற்றுக்கும் கப்பலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை வேறு இருந்தது. கப்பல் வரா விடின் விலை கிடு கிடு என அதிகரிக்கும். பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும்.

இதே போலவே, அடிக்கடி இடப்பெயர்வுகள் இடம்பெற்றன. சிறிய சிறிய இடப்பெயர்வுகள் அடிக்கடி நிகழ்ந்த போதிலும், 1994, 2000, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் பெரும் இடப்பெயர்வுகள் இடம்பெற்றன.  இதனை விட, குண்டு வீச்சுக்கள், விமானக்குண்டுத்தாக்குதல்கள் என்பவையும் பாரிய உயிரிழப்புக்களையும், பொருள் இழப்புக்களையும் உண்டாக்கின. அரச கட்டுப்பாட்டு பிராந்தியத்திற்கும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிராந்தியத்திற்கும் மாறி மாறி பொதுமக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். திடீரென்று முன்னேறிப்பாய்தல் என்று ஏதாவது ஒரு தரப்பு சண்டையை ஆரம்பித்து விட்டால் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டியது தான்.  திரும்;பி வருகிற போது, பல பொருட்கள் இனம் தெரியாதவர்களால் சூறையாடப்பட்டிருக்கும். வீடுகள், கட்டடங்களும் குண்டுகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், இந்த அவலங்களால் தான் ஈழத்தமிழர்கள் பெருமளவில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளை நோக்கி, உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடினார்கள். அங்கே வாழ்வையும் அமைத்துக் கொண்டார்கள். அக்காலத்தைய அவலங்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்துவதற்கு கூட, போதிய வசதிகள், மீடியாக்கள் எவையும் இருக்கவில்லை. எவ்வாறாயினும், 2009க்குப் பின்னரான மாற்றங்களால் இன்றைய யாழ்ப்பாணம் பிற இடங்களுக்கு இணையான வசதிகள் கொண்டதாக வளர்ந்து வருகிறது.

இன்றைக்கு சென்னை மக்களின் அவலத்தை போக்க இயன்ற உதவிகளை, இதே போன்ற அவலத்தை அனுபவித்த இலங்கையை சேர்ந்த வசதிபடைத்த  புலம்பெயர் மக்களும் பிறரும் இயன்ற அளவு செய்ய முன்வருவது சிறப்பானதாகும்.

2 Replies to “போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்”

  1. தயவு செய்து இலங்கையின் வடக்கு கிழக்கு மலையக மாகாணங்களில் வாழும் ஹிந்துக்கள் எவ்வாறு மத மாற்றம் செய்யப் படுகிறார்கள், இதனைப் பற்றி ஏன் ஹிந்துக்கள் கவலைப் படாது ஜடங்களாக வாழ்கிறார்கள் என்பது பற்றியும் எழுதுவீர்களா.

    வெளி நாட்டு ராஜ தந்திரிகள் வட மாகானத்திட்கு வரும்போது கிறிஸ்தவ மத குருமார்கலையே சந்திக்கிறார்கள். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வடக்கில் வாழ்ந்தாலும் அவர்களிடையே ஓர் அமைப்பு இல்லாததே இதற்குக் காரணம். ஆங்கிலம் அரசியல் சமுதாயம் போரினால் பாதிக்கப் பட்டோர் பற்றிய அறிவு விளக்கம் உதவி செய்யும் மனம் போன்றவை ஹிந்து மத குருமார்களிடையே இல்லாதது பற்றி ஏன் எவரும் கவலைப் படுவது இல்லை ? எந்த போராட்டத்தின்போதும் கிறிஸ்தவ மத குருமார்களே முன் நிற்கிறார்கள் .ஹிந்து குருமார்கள் கோவில்கள் ஏன் முன் வருவது இல்லை? சமுதாய அக்கறை இவர்களிடம் ஏன் இல்லை? இது பற்றி இவர்கள் சிந்தப்பது கூட இல்லை. இது ஏன்? தேர் இழுப்பதும் குரு பூசை செய்வதும்தான் ஹிந்துக்களின் லட்சியமா. பெருகிவரும் மத மாற்றம் இவர்களின் மூளைக்கு தெரிவது இல்லையா. கோவில் மாடுகள் போல் இவர்கள் காலம் காலமாக ஏன் வாழ்கிறார்கள். இவைகள் பற்றி தயவு செய்து எழுதுங்கள்.

  2. மனித இனத்தின் இக்கட்டான காலகட்டத்தில்தான் அவனது அறிவின்
    முழு வெளிப்பாடும், ஆபத்துக்களை கடந்து, சக மனிதனை இணைத்து கொண்டு அல்லது சக மனிதனுடன் இணைந்து கொண்டு இடர்களை வெற்றிகொள்ள முடியும்
    என்பதையே இலங்கை போரும், சென்னை வெள்ள பேரிடரும் நிருபித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *