“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்

மூலம்:  நிதின் ஸ்ரீதர் எழுதிய ஆங்கிலக் கட்டுரை
Siya Ke Ram: Distortions, lies, and mockery of Ramayana,  By Nithin Sridhar

தமிழில்: டி.எஸ்.கிருஷ்ணன்

போன மாதம், ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி ராமபிரானைப் பற்றிய ஒரு புதிய தொடர் ஒன்றை பெரும் விளம்பரங்களுடன் தொடங்கியது. ‘சியா கே ராம்’ என்று பெயர்சூட்டப்பட்ட அந்தத் தொடர், ராமாயணத்தை ‘சீதையின் பார்வையிலிருந்து’ சித்தரிக்கப் போவதாக சொல்லப்பட்டது. அதன் தயாரிப்பாளர் நிதின் சின்ஹா அந்தத் தொடர் மூலத்தொடரை ஒட்டியே அமைந்தது என்று கூறியிருந்தார்.  ஆனால், ஒரு மாதத்திற்குப் பின், இந்தத் தொடர் தன்னிச்சையாக ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி, வால்மீகி ராமாயணத்தின் மூலத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டது. அதுதவிர, அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்ட சீதாவின் பார்வை என்பது இன்னும் காணக்கிடைக்கவில்லை.

(இப்போது இதே தொடரின் தமிழ் வடிவம் விஜய் டிவியில் “சீதையின் ராமன்” என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது)

தொடக்கத்தில் இந்த எழுத்தாளரை தொடரின் VFX (படக் காட்சிகள்) வசீகரித்து, எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. ஆனால், போகப் போக, படக் காட்சிகள் மட்டும்தான் இந்தத் தொடரில் உள்ளது என்றும் மற்றபடி பாராட்டி எழுதுவதற்கு ஏற்ற கருத்துக்கள் ஏதும் இத்தொடரில் இல்லை என்றும் தெரியவந்தது. இத்தொடர், மூலக் கதையை திரித்தது மட்டும் இல்லாமல், நவீன  “மதச்சார்பற்ற” “முற்போக்கு” கருத்துக்களையும் அதன் மேல் திணிக்க முயற்சி செய்து, ஹிந்துக்களின் பண்டைய வரலாற்றின் ஒரு பகுதியாக, இதிகாசமாகவும் புனித நூலாகவும் கருதப்படும் ராமாயணத்தை கேலி செய்வது போல் அமைந்துள்ளது.

siya-ke-ram-tv-serial

தொடரின் முதல் பகுதியே அரசர் தசரதரையும் அரசி கௌசல்யாவையும் அழுமூஞ்சிகளாக சித்தரித்தது. தசரதர் எப்போதும் அவருடைய மைந்தர்களைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார். முதலில் ராமனைப் பற்றியும் பிறகு அவருடைய பிரிந்து சென்ற மகளான சாந்தாவைப் பற்றியும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். வால்மீகி ராமாயணத்தை ஒரு முறை வாசித்தாலே தசரதரும் சரி அரசியும் சரி அழுமூஞ்சிகளாக சித்தரிக்கப்படுவதில்லை என்பது புரியும்.

பால காண்டத்தை (11.2) எடுத்துக் கொண்டோமானால், தசரதர் நேர்மையானவராக, உண்மையானவராக, சிறந்தவராக சித்தரிக்கப் படுகிறார். எனவே, அழுமூஞ்சித் தோற்றத்திற்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை. இந்தத் தொடர், தசரதரின் மைந்தர்கள் குருகுலக் கல்வி பயிலச் சென்றபோது, அவர் பிரிவுத் துயரால் ஆழ்ந்ததாகவும் அதனால் வருந்துவதாகவும் காட்டுகிறது. ஆனால், இளவரசர்கள், குருகுலத்திற்குச் செல்ல வாய்ப்பேயில்லை, அவர்கள் அரண்மனையிலேயே கல்வி பயின்றிருக்க வேண்டும். வால்மீகி ராமாயணத்தில் அவர்களைக் குருகுலத்திற்கு அனுப்பியதாக குறிப்புகள் இல்லை. பதிலாக, ராமனும் மற்ற இளவரசர்களும் வேதங்களிலும், வில்வித்தையிலும் திறமையானவர்களாகவும் தந்தைக்கு அவர்களுடைய சேவைகளை அளிததாகவும் கூறப்படுகிறது. (1.18.27,28, 36,37)

இப்போது, சாந்தாவைப் பற்றிய கௌசல்யாவினுடைய கவலைக்கு வருவோம். வால்மீகி ராமாயணத்தில் அரசி கௌசல்யா அவரது மகளைப் பற்றி வருந்தியதாக ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா என்று இந்த எழுத்தாளர் வலைவீசித் தேடினார். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு கூடக் கண்ணில் படவில்லை.

இந்தத் தொடர் சாந்தாவை தசரதர் மற்றும் கௌசல்யாவினுடைய மகளாகக் காட்டுகிறது. ராமனையும் மற்ற இளவரசர்களையும் பெற்றெடுக்க புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தீர்மானித்து, அதற்காக ரிஷ்யசிருங்கரை வரவழைக்க திட்டமிடப்படுகிறது. அவரை மயக்கி மணந்துகொள்வதற்காக சாந்தா அனுப்பப்படுகிறாள். இப்படியாக, தசரதர் தன் மகளை, மகன்களைப் பெறுவதற்காக தியாகம் செய்கிறார். இதுதவிர சாந்தா பலவித திறமைகள் படைத்தவளாகக் காட்டப்படுகிறாள். ஆனாலும் தசரதர் அதிலெல்லாம் திருப்தியில்லாமல் ஒரு மகனைப் பெற்றெடுக்கவே விரும்புகிறார். இந்தக் காரணத்தால், சாந்தா அரண்மனை வாழ்க்கையைத் தியாகம் செய்து காட்டில் ரிஷ்யசிருங்கருடன் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இந்த விஷயம் ராமனிடமிருந்தும் மற்ற இளவரசர்களிடமிருந்தும் மறைக்கப்படுவதாக தொடரில் காட்டப்படுகிறது.

இப்போது வால்மீகி ராமாயணம் சாந்தாவைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். சாந்தா அங்க நாட்டரசரும் தசரதரின் நெருங்கிய நண்பருமான ரோமபாதருக்கு தத்துக் கொடுக்கப்படுகிறாள். இது சாந்தா சிறு குழந்தையாக இருக்கும்போதே நடந்திருக்கவேண்டும். தத்தெடுத்தலின் போது அவளின் வயது குறிப்பிடப்படவில்லை. ரோமபாதரின் அரசு கடும் பஞ்சத்தால் தவித்ததாகவும், அதைத் தீர்ப்பதற்காக ரிஷ்யசிருங்கரை தனது நாட்டிற்கு வரவழைக்க அவர் தனது அரசவை நர்த்தகிகளை அனுப்பியதாகவும் வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது (1.10.7)

அந்த ரிஷி வந்தவுடன், நாட்டில் மழை பொழிந்ததாகவும் பின்னர் ரோமபாதர் சாந்தாவை ரிஷிக்கு மணமுடித்ததாகவும் கூறப்படுகிறது (1.10.29-32). திருமணத்திற்குப் பிறகு ரிஷ்யசிருங்கரும் சாந்தாவும் அங்க நாட்டிலேயே வாழ்ந்ததனரேயன்றிக் காட்டில் வாழவில்லை (1.10.33). அதன் பின், மைந்தர்களைப் பெறுவதற்காக தசரதர், ரோமபாதரிடம் அவரது மாப்பிள்ளையான ரிஷ்யசிருங்கரை புத்திர காமெஷ்டி யாகம் செய்ய அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

எனவே, வால்மீகி ராமாயணத்தின் படி, சாந்தா அக்கால வழிமுறைகளின் படியே மணமுடிக்கப்பட்டாள் என்பதும் எந்தவித வற்புறுத்தாலோ தியாகமோ அவளின் திருமணத்தில் இல்லை என்பதும் மணத்திற்குப் பிறகு அவள் எந்தவிதத் துன்பத்திற்கும் ஆளாகவில்லை என்பதும் தெளிவாகிறது. மேலும், மகாபாரதம் கூறுவதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், சாந்தாவும் ரிஷ்யசிருங்கரும் நள-தமயந்தி போலவும் வசிஷ்டர் அருந்ததி போலவும் காதல் வாழ்வு வாழ்ந்தனர் என்று தெரிகிறது.

முக்கியமாக, சாந்தா, தசரதர் மகன்களைப் பெறுவதற்கான முயற்சியில் ரிஷ்ய சிருங்கரை மயக்குவதற்கு அனுப்பப்படவில்லை என்பது தெளிவு. மேலும் சாந்தா ரிஷ்யசிருங்கரை மணந்ததற்கும் ரிஷ்யசிருங்கர் தசரதருக்கு மைந்தர்களைப் பெறுவதில் உதவி செய்ததற்கும் சம்பந்தமேயில்லை.

ஆக, ஏன் இந்தத் தொடர் இப்படி உண்மைகளைத் திரித்து ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் எடுத்துக்காட்டுகிறது என்ற கேள்வி எழுகிறது. சாந்தா ஏன் அதனால் பாதிக்கப்பட்டவளாகக் காண்பிக்கப்படுகிறாள்? மூல நூலில் இவை எல்லாம் இல்லாத போதிலும், பெண்கள் ஓரவஞ்சனை செய்யப்படுகிறார்கள் என்பதற்கான கருவியாக, பெண்கள தியாகம் செய்வதற்காகவே பிறந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக சாந்தா ஏன் பயன்படுத்தப்பட்டிருக்கிறாள் ?

ஆணாதிக்கம், பெண்ணாடிமைத்தனம், பெண்களுக்கு எதிரான ஓரவஞ்சனை ஆகியவை தற்கால சமூகத்தில் காணப்படும் சில போக்குகளாகும். முக்கியமாக, இடதுசாரி -முற்போக்காளர்களால் எடுத்துக் காட்டப்படும் சமூகத்தின் கூறுகள் இவை. அதே சமயம்,   அனைத்தையும் உள்ளடக்கிய அறம் -கடமை மற்றும் நேர்மை- என்னும் கருத்தாக்கமே இந்தியாவின் அடிநாதமாகும். சமூகக் கூறுகள் – அவை நல்லதாக இருந்தாலும் சரி தீயவையாக இருந்தாலும் சரி – அறத்தின் அடிப்படையிலேதான் ஆராயப்படும். ஆனால், இந்தத் தொடர் அறத்தின் அடிப்படையிலான ராமாயணத்தின் மூலக் கருத்தாக்கத்தைத் திரித்து, தற்போதைய சமூகக் கேடுகளையும் இடதுசாரி-முற்போக்குக் கருத்தாக்கங்களையும் ராமாயணத்தில் திணிக்க முற்படுவது, அதன் தயாரிப்பாளர்களின் நோக்கங்களையும் தொழில்தர்மத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது

மேலும், இதுபோன்ற திரிபுகளும் இடதுசாரி முற்போக்கு திணிப்புகளும் சாந்தாவின் கதையில் மட்டும் இல்லை. தொடரில் வரும் அஸ்வமேத யாகத்தை எடுத்துக்கொள்வோம். தொடரில் தசரதர் அஸ்வமேத யாகத்தை நடத்தும் போது, முதலில் சீதை, யாகக் குதிரையை வழிமறித்து நிறுத்துகிறாள். அதன்பின் ராமன், அந்தக் குதிரை கொல்லப்படக்கூடாது என்றும் ஒரு தங்கக் குதிரைச் சிலையை வைத்து யாகத்தை நிறைவு செய்யவேண்டும் என்றும் கூறுகிறான். விலங்குகளின் உரிமையைப் பற்றியும் மரபுகளை உடைப்பதைப் பற்றியும் ஒரு சொற்பொழிவும் நிகழ்த்துகிறான் ராமன்.

ஒட்டுமொத்த கதையும் தொடரை உருவாக்கியவர்களுக்கு ஹிந்து சடங்குகளில் இருக்கும் அறியாமையைக் காட்டுவது மட்டுமல்லாது, விலங்குகளின் உரிமைகள் போன்ற நவீன கருத்துகளை ஹிந்துக்களின் நடைமுறைகள் மேல் திணிக்கும் அவர்களது அஜெண்டாவையும் தெளிவாக்குகிறது

விலங்குகளின் நலனைப் பற்றிக் கருதாது இருப்பது அறவழியல்ல. ஹிந்து நீதிநூல்கள் விலங்குகளுக்கு சேவை செய்வதை குடும்பஸ்தர்களின் கடமைகளின் ஒன்றாக எடுத்துரைக்கின்றன. (பூத யக்ஞம்). ஹிந்து நூல்கள் விலங்குகளை பிரபஞ்சத்தின் பிரிக்க இயலாத ஒரு அங்கமாக உணர்ந்து மக்களுக்கு அகிம்சையை போதிக்கின்றன (துன்புறுத்தாமல் இருத்தல்). மனு ஸ்மிருதி (5.53) மாமிசம் உண்பதை விட்டவன் 100 அஸ்வமேத யாகங்களைச் செய்த பலனை அடைவான் என்று கூறுகிறது.

அதே சமயம் அஸ்வமேத யாகம், மனித குலத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக – உலகநன்மைக்காக, ஆன்மிக, சுற்றுச் சூழல் நலன்களுக்காகச் செய்யப்படுவது. அரசரிடமிருந்த செல்வத்தை ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கச்செய்யும் ஒரு கருவியாக அது இருந்தது. குடிமக்கள், அவர்களுக்கு எந்தத் தேவை இருந்தாலும், அதைத் தானமாகப் பெற்றனர். நிலமில்லாதவர்கள் நிலத்தையும், வீடில்லாதவர்கள் வீட்டையும், பொன்னை விரும்பியவர்கள் பொன்னையும் பெற்றனர். அந்த யாகத்தினால் ஏற்பட்ட ஆன்மிகப் பலன்கள் எல்லை இல்லாதவை, அவை சமூகத்தின் ஆன்மிகச் சூழலை மேம்படுத்தப் பயன்பட்டன. இந்தக் காரணங்களாலேயே, விலங்குகளை யாகங்களில் பலியிடுவது ‘ஹிம்சை’யாகப் பார்க்கப்படவில்லை, ஏனெனில் இதனால் விலங்குகளும் நன்மையடைந்தன.

எனவே ஹிந்து சமயத்தைப் பொறுத்தவரை யாகத்தில் விலங்குகளைப் பலியிடுவது, பலியிடப்படும் விலங்குகளுக்கும் நன்மையளிப்பதால் அறமாகக் கருதப்பட்டது. அதே நேரத்தில், தோலுக்காகவும், மற்ற உபயோகங்களுக்காகவும் விலங்குகளை வளர்த்து பின் அவைகளைக் கொல்வது அதர்மமாகவே கருதப்பட்டது. ஏனென்றால் அதனால் விலங்குகளுக்கு எந்த நன்மையும் இல்லை.

முதலாவதாக, தொடரில் காட்டப்படுவது போல் வால்மீகி ராமாயணத்தில் அஸ்வமேத யாகம் நடைபெறவே இல்லை. வால்மீகியில் தசரதர் புத்திரர்களைப் பெறுவதற்காக புத்திரகாமேஷ்டி யாகத்துடன் அஸ்வமேத யாகத்தை செய்வதாக மட்டுமே உள்ளது. ஆனால் அவருக்கு புத்திரர்கள் பிறந்தபின் எந்த அஸ்வமேத யாகத்தையும் அவர் செய்யவில்லை.

இரண்டாவது, ராமன் பிறப்பதற்கு முன்னாள் தசரதர் செய்த அஸ்வமேத யாகத்தில் உண்மையான குதிரை பலி கொடுக்கப்படுகிறதே தவிர (1.14.32-36) குதிரையின் சிலை அல்ல.

மூன்றாவது, குதிரையை நிறுத்தி, கட்டிப்போடுபவர்கள் போர் தொடுக்க வேண்டும் என்ற நியதி தெரியாமல், சீதை குதிரையை நிறுத்துவதாகக் காட்டப்படுகிறது. இருந்தாலும், சீதையை ஒரு போராளியாக காண்பிக்கவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சி, தொடரில் புகுத்தப்பட்டுள்ளது.

நான்காவது, வால்மீகி ராமாயணம் ராமனை அறவழி நடப்பவனாக, அறத்தின் உருவாகக் கூறுகிறது. எனவே ராமனுக்கு குதிரையை யாகத்தில் பலியிடுவது, ஹிம்ஸையாக கருதப்படாது என்பது நான்கு தெரிந்திருக்கும். எனவே உண்மையான குதிரைக்குப் பதிலாக குதிரையின் சிலையை மாற்ற ராமன் ஆணையிடுவதாகக் கூறப்படுவது அடிப்படை இல்லாத விதண்டாவாதம். இந்த உண்மைகள் அறியாமல், இந்தத் தொடர் இடதுசாரி கருத்தாக்கங்களின் படி விலங்குகளின் உரிமைகளைப் பற்றிய சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறது !

ஐந்தாவது, இந்தத் தொடர் வசிஷ்ட முனிவர் அஸ்வமேத யாகத்தை நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு சடங்கு (‘பிரதா’) என்று கூறுவதாக சித்தரிக்கிறது. ஆனால், உண்மையில் அஸ்வமேத யாகம் ஒரு ‘பிரதா’ அல்ல. அது வேதங்களில் உள்ள, தர்மத்தின் அடிப்படையிலான ஒரு சடங்கு. எனவே அது ஒரு எளிய நம்பிக்கை என்று ஒதுக்க முடியாத ஒன்று. அரசர்கள் நாட்டு மக்களின் நன்மைக்குச் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்று அது. ஆனால், சில அற நூல்களைப் பொறுத்தவரை, கலியுகத்தில் விலங்குகளை யாகத்தில் பலியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில், யாகங்களை முறைப்படி நடத்தி விலங்குகளை மேலான பிறவிகள் அடையச் செய்யக்கூடிய திறனாளர்கள் இன்று இல்லை. இருந்தாலும் ராமன் கலியுகத்தில் பிறக்கவில்லை. அவன் திரேதா யுகத்தைச் சேர்ந்தவன். அக்காலத்தில் வசிஷ்டர், ரிஷ்யசிருங்கர் போன்ற சிறந்த தவசீலர்கள் இருந்தனர். அவர்கள் கடினமான யாகங்களை உலக நன்மைக்காகச் செய்வதில் வல்லவர்கள்.

மொத்தத்தில், அஸ்வமேத யாகத்தைப் பற்றி தொடரில் காண்பிக்கப்படும் நிகழ்வுகள் ஹிந்து சடங்குகளை திரிப்பதற்காகவும் விலங்குகளின் உரிமைகளைப் பற்றிய இடதுசாரி முற்போக்குக் கருத்துகளை திணிப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே கவனிக்க வேண்டியது, இடதுசாரி விலங்குரிமைக் கருத்துக்கள் ஹிந்து சடங்குகளின் போது மட்டும் எழுப்பப்படுகிறது மற்ற சமயங்களில் அல்ல என்பதை. (பீப் பார்ட்டிகள் ஞாபகம் இருக்கிறதா?)

அதன்பின், பிருகதாரண்ய உபநிஷத்தில் யாஞ்யவல்கியருக்கும் கர்கிக்கும் இடையேயான பிரம்மத்தைப் பற்றிய உரையாடல், இங்கே காதலைப் பற்றிய விவாதமாகக் காட்டப்படுகிறது. அதுபோல், கர்கியும் அவளைப் பற்றி சுநயனா (ஜனகருடைய மனைவி) பேசுவதும் கர்கிக்கு அக்காலத்தில் இருந்த மரியாதைக்கு நேர்மாறாக உள்ளது. அடுத்து ராட்சதர்கள், பழங்குடி மக்களாகக் காட்டப்படுகிறார்கள். இது காலனியாட்சியின்போது சில மேல்நாட்டு அறிஞர்களால் பரப்பப்பட்ட கருத்தாகும். ஹிந்து மரபுப்படி ராட்சதர்கள் மனிதர்களிடமிருந்து மாறுபட்டவர்கள். எனினும், ராம -லட்சுமணர்களுக்கும் மாரீசன்- சுபாகு தலைமையிலான ராட்சதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம், அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது ! இந்தத் தொடரை உருவாக்கியவர்களுக்கு ஆரியப் படையெடுப்பு தொடர்பான கதைகளின் தாக்கம் அதிகம் இருந்திருக்கும் போல!

siya-ke-ram2-rakshasas

ஜனகருக்கும் அவர் மனைவிக்கும் சீதையின் கல்வியைப் பற்றிய உரையாடல் ஒன்று நடைபெறுகிறது. அதில் சீதைக்குக் கல்வி அளிப்பதைப் பற்றி அவள் அன்னை மிகுந்த கவலை கொள்கிறாள். சீதை கல்வி கற்றால், திருமணத்திற்குப் பிறகு பல துன்பங்களை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறாள். இதுவும் தற்கால பெண்கல்வியைப் பற்றிய கருத்தாக்கங்களை ராமாயணத்தில் திணிக்கும் ஒரு முயற்சி.

இங்கே தரப்பட்டுள்ள நிகழ்வுகள் ஒரு மாதிரிதான். இது போன்று பல நிகழ்வுகளும் காட்சிகளும் தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை தற்கால சமூக விழுமியங்களை ராமாயணத்தில் திணிப்பது, உண்மைகளைத் திரிப்பது, பொய்களை ஜோடிப்பது.

மொத்தத்தில், ‘சீதையின் ராமன்’ ராமாயணத்தையும் ஹிந்து சடங்குகளையும் ஒட்டுமொத்தமாகக் கேலி செய்கிறது. ஆனால், அது இந்தத் திரிபுகளுக்கும் கேலிகளுக்கும் தார்மீகப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குரியது.

இந்தத் தொடர், மத நம்பிக்கைகளை புண்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதல்ல என்ற பொறுப்புத் துறப்புடன் தொடங்குகிறது. ஆனால், தொடர் செய்வது அதைத்தான். வால்மீகி ராமாயணத்தின் கூறப்பட்டுள்ளவற்றை மாற்றுவது, அதில் இல்லாத நிகழ்வுகளைப் புகுத்துவது மற்றும் முக்கியமாக ஹிந்து சடங்குகளை சிறுமைப் படுத்தி இடதுசாரி-முற்போக்குக் கருத்தாக்கங்களை ராமாயணத்தில் புகுத்துவது போன்றவற்றை செய்கிறது இத்தொடர்.

தொடரை உருவாக்கியவர்களின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால், தற்போதைய பிரச்சனைகளுக்கு சில தீர்வுகளை போதிக்க அவர்கள் விரும்பினால் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ போன்ற ஒரு புதிய புராணக்கதையை அவர்கள் தயாரித்திருக்கலாம். ஆனால், மீண்டும் மீண்டும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் குறுக்கு வழியில் சென்று வரலாறு அல்லது புராணப் பாத்திரங்களின் அடிப்படையில் டிஆர்பிக்காக தொடர்களை உருவாக்குகின்றனர். அவற்றில் மருந்துக்குக் கூட வரலாறு அல்லது புராண உண்மைகள் இருப்பதில்லை. இது ஏற்கனவே ஜோதா அக்பர் தொடரில் நிகழ்ந்தது. இப்போது ‘சியா கே ராம்’ தொடரில் நிகழ்கிறது.

வால்மீகி ராமாயணத்தில் பொதிந்திருக்கும் அறக் கோட்பாடுகளைக் கற்றுத் தரும் ஒரு நல்ல முயற்சியாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கலாம். அது பொது மக்களுக்கு பேருதவி புரிந்திருக்கும். ஆனால், தொடரின் தயாரிப்பாளர்கள் ஹிந்து மதத்தை சிறுமைப் படுத்தவும் நவீன இடதுசாரி-முற்போக்குக் கருத்துகளை பரப்பவும் இதைப் பயன்படுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள் போலும்.

இது ராமாயணத்தையும் ஹிந்து சமயத்தையும் கேலி செய்வதில்லை என்றால், வேறு எது?

16 Replies to ““சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்”

  1. ஒரு எபிசோட் கூட சமுதாயம் , சமுதாய பணி, சமூகநீதி இல்லாத கலைஞரின் “ராமானுஜர்” இருக்காதோ அதைப்போல இந்த தொடர்களிலும் புராண உண்மைகளை காண முடியாது.

  2. நவீனமாக சொல்லவேண்டுமென்று குப்பைகளை கொட்டுவது மின் அணு ஊடகங்களின் வழக்கமாகிவிட்டது. வைஷாலி என்றொரு மலையாளப்படம் அங்கதேசத்தின் வறட்சியை போக்க ரிஷ்ய சிருங்கரை அங்கதேசத்துக்கு அழைத்து வருவதைப் பற்றி . நடன மாது ஒருத்தி தன் குழுவினருடன் வனத்துக்குச் செல்கிறாள். ரோமபாதன் அவளுடைய தாய்க்கு ரிஷ்யஸ்ருங்கருக்கு மணம் முடிப்பதாக வாக்களிக்கிறார். ராஜகுரு மன்னன் மகளை ரிஷ்யஸ்ரூங்கருக்கு மணம் முடிக்கிறார்.இது எம் டி வாசுதேவன் நாயரின் கதை . தனிமனித விருப்பங்கள் அரச காரியங்களில் எடுபடுவதில்லை என்பதை அழகாக உணர்த்தியது. படைக்கப்பட்ட பாத்திரங்கள் மேல் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியது. திரிபாக கதை சொல்வதை காண சகிக்கவில்லை

  3. மிக அருமையான முயற்சி ஸ்ரீ நிதின் ஸ்ரீதர். அவரது வ்யாசத்தை தமிழாக்கம் செய்த ஸ்ரீ டி.எஸ்.க்ருஷ்ணன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். மூல நூல் சொல்லுவது என்ன…….. ஹிந்துக்காழ்ப்பு சீரியல் சொல்ல விழைவது என்ன ………… என்று அம்சம் அம்சமாக மூல நூல் சொல்லும் ராமகாதையை காண்டம்….சர்க்கம்….ச்லோகம் என குறிப்பாகக் காட்டி தோலுறித்ததற்கு நன்றிகள்.

    முற்போக்கு என்ற சாக்குப்போக்கில் ஒரு கும்பலே கிளம்பியிருக்கிறது. மூல ராமாயணக்கதையை பேசும் எந்த ஒரு நூலும் சொல்லாத ஒரு கதையை ராமாயணத்தில் இருப்பதாக வலிந்து ஏற்றி ………. ஹிந்துக்கள் போற்றும் ராமகாதையை வலிந்து இழிவு செய்ய முனைவது……… இந்த கும்பலின் லக்ஷ்யம். ஆனானப்பட்ட விக்ஞானி ஸ்ரீ ஜெயபாரதன் அவர்களே தன்னுடைய கற்பனைகளையும் தான் மண்டபத்தில் கேட்ட கந்தறகோளாதிகளையும் ……… அவற்றை கற்பனை என்று நேர்மையாகப் பகிராது ……….ராமாயண காவ்யம் சொல்லுகிறது என்று கூசாமல் பொது தளத்தில் புளுக முடியும் என்றால்……….முனைந்து ஹிந்து மதத்தை இழிவு செய்ய விழைபவர்களது புளுகுகளைப் பற்றி கேழ்க்கவும் வேண்டுமோ?

  4. நமது கலாச்சாரத்தை பற்றி வேண்டுமென்றே இவர்கள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் இவர்களை கேட்க ஆளில்லாத காரணத்தால். அப்படியே கேட்டாலும் எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் பறிக்க படுகிறது இந்தியாவில் பாதுகாப்பான சூழ்நிலை இல்லை என்று பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள்.

    ஏன் இவர்கள் அல்லவை பற்றியோ அல்லது ஏசுவை பற்றியோ இவ்வாறு முற்போக்கான தொடர் சீரியல் நிகழ்ச்சிகள் எடுக்க முடியுமா?

  5. தங்களின் விமரிசனம் மிகவம் சரியே! இவர்கள் மஹாபாரதத்தையே குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கினார்கள். இப்போது இராமாயணம் இவர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. புராணக் கதைகளுக்கு ‘காப்பி ரைட்’ உரிமைகள் இல்லாததே காரணம். அந்தக் கால கீமாயணம் போன்றதுதான் இதுவும்!

  6. ஒரு எபிசோட் கூட சமுதாயம் , சமுதாய பணி, சமூகநீதி இல்லாத கலைஞரின் “ராமானுஜர்” இருக்காதோ அதைப்போல இந்த தொடர்களிலும் புராண உண்மைகளை காண முடியாது. –
    பாலாஜி அவர்களே … புராணத்தில் தர்ம காரியங்கள் பற்றி கூறப்படவில்லையா என்ன?

  7. திரு சாரநாதன் சொல்வதுதான் சரி. உரிமை இல்லை எவருக்குமே. காரணம் புராணங்கள். இந்துக்கள் மனங்கள் புண்படுகின்றன என நீதிமன்றத்தில் வாதாடி நிறுத்தலாம். இராமாயணம் ஒன்றன்று. நூற்றுக்கணக்கானவை உள. அப்படியிருக்கும்போது எந்த இராமாயணத்தை இவர் திருத்துகிறார் எனச்சொல்லுங்கள் என்றால்? நூற்றுக்கணக்கானோர் பன்னெடுங்காலமாக எழுதிக்குமித்துக்கொண்டிருந்த போது இந்துக்களின் மனங்கள் புண்பட்டனவா என்றால்? விடைகளை மடியில் வைத்துக்கொண்டு நீதிமனறம் செல்லுங்கள்.

    அமெரிக்க நீதிமன்றமொன்றில் ஒரு இந்து வழக்குத் தொடர்ந்தார்: யோகா இந்துக்களுக்கானது. அதை வேரெவரும் பயன்படுத்தக்கூடாது என்று. நீதிமன்றம் அவ்வுரிமையைக்காட்டுக என்றதும் அவரால் பேசமுடியவில்லை. பின்னர்? பின்னரென்ன? வழக்கு தள்ளுபடிதான்.

    திரு சக்திவேல் அறியாததது என்னவென்றால், இயேசுவின் கதையை நக்கலடித்து நூல்கள் பல அக்காலத்திலிருந்து இக்காலம் வரை வந்துகொண்டேயிருக்கின்றன. டான் ப்ரான் எழுதவில்லையா நம் காலத்தில்? இந்திய கிருத்துவர்கள் மட்டுமே தீவிரமாக எதிர்ப்பதுண்டு. மற்றபடி இல்லை.

    அல்லாவைப்பற்றி, மகமதுவைப்பற்றி ஒன்றும் செய்யவியலாது. சார்லி ஹெப்டோ கேலிச்சித்திரக்காரர்களுக்கு நடந்தவை நடக்கும். திரு சக்திவேல் அப்படி இந்துமதத்தை விமர்சிப்பவர்களை போட்டுத்தள்ளிவிட வேண்டுமென்கிறாரா? விளக்கவும். எழுதினால்போதாது அதன் எதிர்கேள்விகளையும் சந்திக்கவேண்டும்!

    இராமானுஜர் வாழ்க்கை தவறாகச் சித்தரிக்கப்படுகின்றதா?எனக்குத்தெரியாது. நான் கலைஞர் டி வி சந்தாதாரரன்று. அப்படியிருந்திருந்தால் பலர் எதிர்த்திருப்பார்களே? இராமனுஜர் வழிவந்த தொண்டர்கள் நிறைய இருக்கின்றார்களே? அவர்கள்பலர் தொடர் வருவதற்கு முன் பல கேள்விகளையும் கருநாநிதியின் நேர்மையையும் ஐயப்பட்டார்கள். தொடர் வரத் தொடங்கியதும் ஒரு அரவமும் இல்லையே?

    கலைஞர்தொலைக்காட்சியில் காட்டப்படும் இராமனுஜர் இந்துக்களுக்காக வரும் தொடரே இல்லை. அது கருநாநிதியின் தொண்டர்களிடையே இராமனுஜரைப்பற்றிச் சொல்ல எழுந்த கதை. அப்படிச் செய்யக்கூடாதென்று எவருமே சொல்லவில்லையே? Where have the SriVaishanavaas gone? Why are they keeping silent? Why they don;t they protest against the serial? For answers, read below:

    இராமானுஜரின் தொண்டர்கள் செய்யாதவொன்றை கருநாநிதிதான் செய்கிறார். தொலைக்காட்சி ஊடகத்தைப் பயன்படுத்தி இராமானுஜர் யாரென்றே கேள்விப்படா தமிழகமக்களின் பலருக்கு கொண்டு செல்கிறார்.

  8. //திரு சக்திவேல் அறியாததது என்னவென்றால், இயேசுவின் கதையை நக்கலடித்து நூல்கள் பல அக்காலத்திலிருந்து இக்காலம் வரை வந்துகொண்டேயிருக்கின்றன. டான் ப்ரான் எழுதவில்லையா நம் காலத்தில்//
    திரு BSV, இரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு, முதலாவது இங்கே கடவுள்களைக் கிண்டலடிப்பது பற்றிப் பேச்சு இல்லை. இரண்டாவது, கிண்டலடிப்பது வேறு, ஆனால் இதுதான் உண்மை என்று திரிப்பது வேறொன்று. தமிழில் இந்தத் தொடருக்கு வந்த விளம்பரங்களைப் பாருங்கள். கம்பராமாயணத்தின் படி உள்ளது என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. இத் தொடரின்படிதான் கம்பனில் உள்ளதா? சொந்தக் கற்பனையில் ராமாயணத்தை எழுதலாம். ஆனால் இது மூலத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று ஒரு டிஸ்கி போட்டுவிட்டுத் தொடரலாமே.

  9. \\\ இராமாயணம் ஒன்றன்று. நூற்றுக்கணக்கானவை உள. அப்படியிருக்கும்போது எந்த இராமாயணத்தை இவர் திருத்துகிறார் எனச்சொல்லுங்கள் என்றால்? \\\

    உளுத்துப்போன……….. சாரமற்ற………….. விபரமில்லாத……………. இடதுசாரி மற்றும் முகமூடி சுவிசேஷிகளின் வாதம்…………. நூற்றுக்கணக்கான ராமாயணங்கள் என்று சகட்டு மேனிக்கு அட்ச்சுவுடுதல்.

    ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலை படைப்பாய்வுக்கு உட்படுத்திய மொழியியல் அறிஞர்கள் படைப்பாய்வியல் அறிஞர்கள் இந்த கிறுக்குத் தனமான வாதத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். வால்மீகி ராமாயணத்தின் படைப்பாய்வுக்கு எடுத்தாளப்பட்ட சம்ஸ்க்ருத மற்றும் பாஷாந்தர நூல்கள் ஒத்த கதைக்களன் உடையவை.

    வலிந்து இந்த ஒத்த கதைக்களனை சிதைப்பதற்காக வேண்டியும்…………. சித்தாந்த ரீதியாக மாறுபாடுகளை கதாபூர்வமாக விளக்க வேண்டியும் பிற்காலத்தில்…………. வெகு பிற்காலத்தில்…………. ராமாயண கதாபாத்ரங்களை எடுத்துக்கொண்டு……………. வேறு பெயரிலும்……….. அதே பெயரிலும் ………………. பற்பல நூற்கள் படைக்கப்பட்டன. அவற்றின் நோக்கமும் வேறு ………….. ஆதாலால் கதைக்களனும் வேறு.

    இப்படியான உல்டா நூற்களை வைத்துக்கொண்டு குத்தாட்டம் போட விரும்புபவர்கள் குத்தாட்டம் வேண்டுமானால் போடலாம். ராமாயணக் கதை பேசுவதாக கதை விடக்கூடாது.

    ஒத்த கதைக்களன் என்பது நூலுடைய பெருமளவினாலான கதைப்போக்கு. குறிப்பிட்ட நிகழ்வு விவரணைகள் இல்லை என்ற பாலபாடத்தையும் சொல்லி விடுதல் நலம்.

  10. நாம் ஏன் ஸ்டார் விஜய் மீது வழக்கு தொடரக்கொடது? வரலாற்று சம்பவங்களை திரித்து படம் எடுப்பதை தடுக்க சட்டம் இயற்ற முடியாதா?

  11. வழக்கு தொடுப்பதெல்லாம் இருக்கட்டும் கிருஷ்ணா? முதலில் வால்மீகி எழுதிய மூல ராமாயணம் எங்கே இருக்கிறது ? அதைக் கூறுங்கள். இப்பொழுது இருக்கும் ராமாயணம் அனைத்தும் எத்தனையோ நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக,எவ்வளவோ பேரின் கைகளை தாண்டி வந்துள்ளது, அவரவரின் மனம்போன போக்கில் எவ்வளவு இடை செருகல் இருக்குமோ யார் கண்டது? ஆகவே, 2000 ஆண்டுகளுக்கு முன்பாக வால்மிகியின் கையினால் எழுதப்பட்ட ஓலை சுவடியை கொண்டு வாருங்கள். அதற்க்கு பிறகு வழக்கு போடுவதை பற்றி யோசிப்போம்.

    பி.கு:- தற்பொழுது கார்பன் டேடிங் மூலமாக ஒன்றின் பழமையை எளிதாக கண்டுபிடித்து விடலாம். அதற்க்கான வசதியை விஞ்ஞானம் நமக்கு அளித்திருக்கிறது. ஆகவே கவனமாக ஆதாரத்தினை சேகரித்து கொண்டு வரவும். எசகு பிசகானால் நாம் தான் முக்குடைபடுவோம்.

  12. ஸ்டார் விஜய் ”டிவி மீது தொடரவேண்டிய முதல் வழக்கு ,அதன் நிதி மோசடி அயோக்கியதனங்களுக்காகவே .”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”என்ற நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான NGO களுக்கு -அந்த பாடாவதிகளுக்கு -நேயர்களின் கண்களில் விளம்பரங்களை கட்டி வாங்கிய காசை ,அள்ளி வீசி ,அதில் ஊழல் செய்து,சினிமா ”குருவி மூளை ”குஞ்சுகளின் ”பொது அறிவு’பிரவாகம் புரிய உலக மகா ”கஷ்டமான”கேள்விகளை எழுப்பி ,லட்சக்கணக்கில் கொடுத்த பணத்திற்கு ,எந்த சமூக சேவை அமைப்பு கணக்கு காட்டியது ?இந்த கடிதத்தை ‘ஒரு ரெட் அலெர்ட்’என்று எடுத்துக்கொண்டு ,விஜய் டிவி நிறுவனம் வரவு செலவு அறிக்கை வெளியிடுமா?அந்த ”ஊரான் வீட்டு நெய்க்கும் ,பொண்டாட்டி கைக்கும் ”என்ன விசாரணை?

  13. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

    \\ முதலில் வால்மீகி எழுதிய மூல ராமாயணம் எங்கே இருக்கிறது ? அதைக் கூறுங்கள். \\

    அப்படியே மலைக்க வைத்து விட்டீர்கள். வெலவெலத்து போய்விட்டது 🙂

    மோஸஸ் கொடுத்த மூல விவிலியம் எங்கிருக்கிறது? அதைக்கூறுங்கள்
    அல்லா கொடுத்த மூல குரான்-ஏ-கரீம் எங்கிருக்கிறது? அதைக்கூறுங்கள்
    இளங்கோவடிகள் தன் கையால் எழுதிய மூல சிலப்பதிகாரம், வள்ளுவர் தன் கையால் எழுதிய மூல திருக்குறள் …………….. எல்லாம் எங்கிருக்கிறது அதைக்கூறுங்கள்?

    அவை நீங்கள் சொல்வது போல கிட்டவில்லை என்பதால்……………ஒட்டு மொத்தமாக அவை அத்தனையும் டுபாக்கூர் என்று அறிவு பூர்வமாக நாம் சொல்வோமா?

    \\ இப்பொழுது இருக்கும் ராமாயணம் அனைத்தும் எத்தனையோ நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக,எவ்வளவோ பேரின் கைகளை தாண்டி வந்துள்ளது, அவரவரின் மனம்போன போக்கில் எவ்வளவு இடை செருகல் இருக்குமோ யார் கண்டது? ஆகவே, 2000 ஆண்டுகளுக்கு முன்பாக வால்மிகியின் கையினால் எழுதப்பட்ட ஓலை சுவடியை கொண்டு வாருங்கள் \\

    வால்மீகி ராமாயணம் அல்லது மஹாபாரதம் மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளான ஒரு நூல் இல்லை. விவிலியம், குரான்-ஏ-கரீம், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள்…………. இத்யாதி இத்யாதி………… இவையெல்லாமே பல நூற்றாண்டுகள் கடந்த ………………. ஆயிரத்தை தொடும் ……………. நூற்கள்.

    வால்மீகி ராமாயணம் என்ற நூலில் இடைச்செருகல்கள் உள்ளன என்பது ……………… மொழியியல் அறிஞர்கள், படைப்பாய்வு அறிஞர்கள் இவர்கள் முன்வைத்த விஷயமே. மரபார்ந்த வ்யாக்யான கர்த்தாக்களும் கூட முன்வைத்த விஷயமே தான். …………… இவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்டு ஆராய்ச்சிகள் பல செய்து………….. பற்பல hypothesis ……….. முன்வைத்து …………… அதற்கு காரணங்களை அடுக்கி …………… தங்களது கூற்றுகளை நிறுவ முனைந்த படிக்கு சில முடிபுகளை முன்வைத்துள்ளனர்.

    இவையெல்லாம் முன் நகர்ந்த பின் …………….. க்ரிடிகல் எடிஷன் என்ற முயற்சி முன்னெடுக்கப்பட்டு …………. அதில் அதுவரை செய்த ஆய்வுகள் எல்லாம் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு ………. ஆய்வு பூர்வமான முடிபுக்கு வந்துள்ளனர்.

    வால்மீகி ராமாயணம் சொல்லும் ஒட்டு மொத்த கதைக்களனில் வெவ்வேறு பாடாந்தரங்களுக்கிடையிலும் ……………… அதையொட்டி அமைந்த பாஷாந்தர நூற்களிலும் கூட………….. பெரும் ஒற்றுமையையே காண்கின்றனர்.

    நேபாள பீர் நூலகத்தைச் சார்ந்த ப்ரதி எண் : 934 என்ற ப்ரதி மிகவும் தொன்மை வாய்ந்ததாகச் சுட்டப்படுகிறது. இது பொதுயுகம் 1020 ஐ ச்சார்ந்ததாக சொல்லப்படுகிறது. (https://tamilhindu.com/2014/01/ramayana-research-in-birds-view-3/ )

    வால்மீகி ராமாயணம் எழுதப்பட்ட பின் அது எப்படி வாய்மொழியாக (ஹிந்துஸ்தான முழுதும் வாய்மொழியாக நூற்களைக் கற்று அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கும் பாரம்பர்யம் இருந்துள்ளதை எண்ணிறந்த ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்) கற்கப்பட்டு எழுத்தில் எப்படி வந்திருக்கும். இந்தப் பாதையில் இடைச்செருகல்கள் என்று புதிதாகச் சேர்ப்பது மட்டுமின்றி கழித்து இடை வெட்டல்களும் கூட சாத்யமே என்பதனை அறிஞர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆனால் ஆழ்ந்த ஆய்வின் பாற்பட்டு வால்மீகி ராமாயணம் என்ற மூல காவ்யம் சுட்டும் கதைக்களன் ………………… பாடாந்தரங்கள் ………… பாஷாந்தரங்களில் …………. அப்படியே காணப்படும் தத்யத்தையும் ஆய்வாளர்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.

    ஆய்வாளர்களின் கூற்று என்னுடைய வால்மீகி ராமாயண படைப்பாய்வு சார்ந்த நாலு பகுதிகளிலான வ்யாசத்தொடரில் பகிரப்பட்டுள்ளது.

    ஒட்டு மொத்த கதைக்களன் …………. இடைச்செருகல் என்று இதுவரை எந்த ஆய்வாளருமே சொல்லவில்லை. இடைச்செருகல் என்று கருதுவது எந்தப் பகுதிகள்………ஸர்க்கங்கள்…….ச்லோகங்கள்………..அல்லது காண்டம்…………. என்று ஆய்வாளர்கள் கருத்துப்பகிர்ந்திருக்கிறார்கள்……….. சும்மனாச்சிக்கும் கருத்துக் கந்தசாமிகளாக கருத்து தெரிவிக்காது…………. காரண காரியங்களை முன்வைத்து பெரும் ஆய்வின் பாற்பட்டு அவற்றை முன்வைத்திருக்கிறார்கள். க்ரிடிகல் எடிஷன் பதிப்பிற்குப் பிறகு கிட்டத்தட்ட இது ஒரு தெளிவான வடிவத்தையும் எய்தியுள்ளது.

    அந்த ஆய்வு முடிபுகள் கூட வரும் காலத்தில் மேற்கொண்டு கிட்டக்கூடிய மேலதிக …………… புதிய (பழைய ) சுவடி ஆதாரங்களால் ………… கேழ்விகளுக்கு உட்படுத்தப் படலாம் என்றும் கூட கற்றாய்ந்த க்ரிடிகல் எடிஷன் ஆய்வாளர்களுடைய காத்துட்டுக் கருத்து.

    வழக்கு வ்யாஜ்யத்தின் கூறுகள்…………நுணுக்கங்கள்……………அவை முற்று முழுதாகத் தனித்துறை. அத்துறை சார்ந்த நுணுக்கங்கள் தங்களுக்கு தெரிந்திருந்தால்………….. அன்பர் ஸ்ரீ க்ருஷ்ணா அவர்கள் பகிர்ந்த கருத்துடன் நீங்கள் உடன்படாததற்கு ராமாயண நூலின் தொன்மை மட்டிலும் தான் காரணமா? வழக்கு எந்த சட்ட நூலின் எந்த ஷரத்துக்களின் பாற்பட்டு ஏற்கப்படக்கூடும் அல்லது மறுக்கப்படக்கூடும் என்று அறிவுபூர்வமாக தாங்கள் தமிழ் ஹிந்து வாசகர்களுக்கு கருத்து தெரிவிக்க வேணுமாய் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    டாக்டர் சுப்ரமண்ய ஸ்வாமி அவர்கள் ஹிந்துஸ்தானத்தின் உச்ச ந்யாயாலயத்தில் ராம்ஸேது எனப்படும் ராமர் பாலம் காக்கப்பட வேண்டும் என்று வாதாடி அப்பகுதியில் கட்டுமானத்திற்கு தடை வாங்கியுள்ளார். உள்ளபடி இந்த வழக்கில் வைக்கப்பட்ட தத்யங்கள் யாவை. எந்த சட்ட நூற்களின் பாற்பட்டு வழக்காடப்பட்டது. வழக்கு விபரங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. ஆனால் தடை வாங்கியிருக்கிறார் என்பது தெரியும்.

    மற்றபடி ஹிந்துக்களின் ஒவ்வொரு மத நூற்களையும் சுவிசேஷிகளும் சுவிசேஷிகளிடமிருந்து பொட்டி வாங்கியவர்களும் முனைந்து குலைக்க விழைவது என்பது தெரிந்த விஷயமே. என்னுடைய புரிதலின் பாற்பட்டு …………… இதற்கு எதிராக வழக்காடுவதை விட ………………. நிதின் ஸ்ரீதர் செய்தது போல அறிவு பூர்வமாக………….. வால்மீகி ராமாயண மூல நூலை உதாஹரித்து முகமூடி சுவிசேஷிகளின் புளுகுமூட்டைகளை தோலுறிப்பது சரியான முறைப்பாடாக இருக்கும்.

    ம்………………. வெள்ளத்தனைய மலர் நீட்டம். எனது குறுமதிக்கு எட்டிய வரை பகிர்ந்திருக்கிறேன்.

    தமிழ் சம்ஸ்க்ருதம் வேத வேதாந்தங்கள் எல்லாம் கரைத்துக்குடித்த தாங்கள் என் வாதங்களை பீஸ் பீஸாக்கி என்ன மண்டகப்படி செய்யப்போகிறீர்களோ என்று கதிகலங்கி இதைப் பதிவிடுகிறேன் 🙂

    பி.கு :- உங்களுடைய லிஸ்டில் சட்ட வல்லுமையை சேர்க்கத் தவறியதற்கு க்ஷமா யாசனங்கள் 🙂
    கொஞ்சம் போல அது பற்றியும் விஸ்த்ருதமாக ப்ரவசனம் செய்து சிறியோங்களாகிய எம்மைப்போன்றோரை உய்விக்குமாறு(ம்) விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  14. ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”இரண்டாவது சீசன் ,பிரகாஸ் ராஜ் நடத்தியது ,தொண்ணூறு சதவீதம் என்ஜி ஒ,அவர்களின் மக்கள் சேவைக்கு சினிமா நட்சத்திரங்களின் பங்கேற்பில் ,விஜய் டிவியால் அள்ளி வழங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது .வருமான வரித்துறை கணங்களில் மண்ணைத்தூவி ,முட்டாள்களாக ஆக்கியது .சினிமா கலைஞர்களும் ,அந்த மக்கள் சேவையில் உடல் பொருள் ஆவி துறந்து ஈடுபடுவதாக ,உருகி உருக்குலைந்து போயினர்.
    முக்கியமாக,சுஹாசினி தான் என்ற எண்ணம் ஒழிய ”,நாம் ”என்ற அமைப்பை தொடக்கி சேவை செய்யப்போவதாக ,சினிமா குஞ்சுகளின் ”பொது அறிவு”பொக்கிஷத்தை அவிழ்துக்கொட்டி ஐம்பது லட்சம்,வாங்கிக்கொண்டு போனார்.{இவர்களுக்கு சேவை செய்ய தோன்றினால் ,தங்களின் சென்னை,கொடைக்கானல்,சொத்துகளை கொடுத்து விட்டு நாடு தெருவுக்கு வந்து ,ரசிகர்களிடம் நிதி வாங்குவது தானே நியாயம்?}
    அந்த அமைப்பு என்ன செய்கிறது?இதே போல்,கலைஞானி,புரட்சிதமிழன்,உள்ளிட்ட சேவை செம்மல்கள், வாயிலே வடை சுட்டு ,லட்சக்கணக்கில் கவ்விக்கொண்டு போனார்கள்,
    அந்த கருணை இல்லங்கள்,சேவை ,சேமியா செம்மல்கள்,என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
    அவர்களுக்கு ,அந்த உலக மகா கேள்வி-பதிலுக்கு, ,காசை அள்ளிக்கொடுத்த விஜய் டிவி தலைமை,என்ன அவ்வளவு அம்மாஞ்சியா?திரைமறைவில் நடந்த திருட்டு தனம் என்ன? மறைப்பது என்ன?

  15. சீதையின் ராமன் தொலைகாட்சி தொடரை நான் இதுவரை பார்த்ததில்லை ஆனால்
    அந்த தொடரின் விமர்சனத்தை tamilhindu . com மறுமொழிகள் மூலம்அறிந்துகொள்ளமுடிகிறது
    ஹிந்து மத சடங்குகளையும், சாஸ்திர சம்பிராதயங்களையும்,ஹிந்து மத கடவுள்களையும்,ஹிந்துமதசின்னங்களையும்,இழிழுவுபடுத்துவோரை
    கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும். ஹிந்துக்கள் முதலில் இதுபோன்ற நிகழ்வுகளை கண்டுகளிப்பது,கேட்பது,பார்ப்பது, உற்சாகமூட்டுவது, போன்றவற்றை அறவே நிறுத்தவேண்டும், இதுபோன்ற நிகழ்சிகள் கவனிக்கப்படாமல் விடப்பட்டாலேஅவை தானாகவே மதிப்பிளந்துவிடும்.அதே சமயம் ஆன்மிக அன்பர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு சரியான எதிர் நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்புவதன் மூலம் ஹிந்துக்கள் மனதில் உள்ள சில சந்தேகங்களுக்கு விடையாகவும், ஹிந்துக்கள் புத்தெழுச்சி பெறவும் வழி வகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *