ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…

 “எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில் இறந்தகாலம் குறித்த பெருமிதம், நிகழ்காலம் குறித்த வருத்தம், வருங்காலம் குறித்த பொற்கனவுகள் நிறைந்துள்ளனவோ, அந்த தேசம்தான் உயர்வடையும்’’

-என்று கூறுவார் மகரிஷி அரவிந்தர்.

அரவிந்தர்
அரவிந்தர்

இந்தப் பொன்மொழி நாட்டுக்கு மட்டுமல்ல, நமது நாட்டைக் கட்டமைத்திருக்கும் ஹிந்துப் பண்பாட்டுக்கும் பொருந்தும்.

இமயம் முதல் குமரி வரை வியாபித்துள்ள இந்த பரந்த பாரத தேசத்தின் ஆன்மா பண்பாட்டில் தான் ஒளிந்திருக்கிறது. அதனால் தான், சுமார் ஆயிரம் ஆண்டுகால அந்நியப் படையெடுப்புகள், ஆதிக்கங்களையும் மீறி, உயிர்ப்புடன் விளங்கும் பழமையான நாடாக பாரதம் விளங்குகிறது.

யூப்ரடிஸ், டைகரிஸ் நதிக்கரையில் தோன்றிய சுமேரிய நாகரிகம் (மெசபடோமியா)  மறைந்துவிட்டது. எகிப்தில் தோன்றிய நைல் நதி நாகரிகம் பிரமிடுகளாகத் தொக்கி  நிற்கிறது. கிரேக்க, ரோமப் பேரரசுகள் ஐரோப்பாவைக் கட்டியாண்ட நிகழ்வுகள் பழங்கதைகள் ஆகிவிட்டன. இன்று அக்கதைகள் ஹாலிவுட் திரைப்படங்கள் எடுப்பதற்கான வெறும் திரைக்கதைகள் மட்டுமே. இவை அனைத்தும் சுமார் 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. ஆனால், இவற்றின் எச்சங்களே இன்று நம்மிடையே எஞ்சியிருக்கின்றன. மஞ்சள் ஆற்று நாகரிகம் என்று சொல்லப்படும் சீன நாகரிகம் மட்டுமே ஓரளவு இன்றும் உலகில் உள்ளது.

ஆனால், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று புகழப்படும் தமிழர்தம் பண்பாடு இன்றும் இளமைப் பொலிவுடன் வீற்றிருக்கிறது. உலகின் பழமையான நாகரிகங்களுள் ஒன்றாகக் கூறப்படும் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் இடைவிடாத தொடர்ச்சியாக பாரதம் மிளிர்கிறது. இவ்வாறு நம்மை பிற நாடுகளிடமிருந்து வேறுபடுத்துவது எது?

பகவத் கீதையை பார்த்தனுக்கு கண்ணன் உரைத்து 5,300 ஆண்டுகள் கழிந்துவிட்டன. பாரத காலக் கணக்கீட்டின்படி, நாம் இதுவரை 4 யுகங்களைக் கடந்திருக்கிறோம். இவற்றை தோராயமாகக் கணக்கிட்டால் அவற்றின் காலம் தற்போதைய பூமியின் வயதுடன் ஒத்திருப்பதாக நிலவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆக உலகின் மிகப் பழமையான மனித குலத்தின் சந்ததிகள் நாம் தான். நமக்குப் பின் பல நாடுகளில் உருவான நாகரிகங்கள் மாயமாகிவிட்டாலும், நாம் என்றும் இளமை குன்றாத தன்மையோடு, உலகிற்கு ஆனந்தமான பாதையைக் காட்டக் காத்திருக்கிறோம்.

நம்மிடையே குறைகள் இல்லாமல் இல்லை. ஜாதி வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட சீர்கேடுகள், நாட்டை அரிக்கும் ஊழல்கள், எனப் பல குறைகள் நம்மை பலவீனப்படுத்துகின்றன. ஆயினும் நம்மை ஏதோ ஒரு சக்தி ஒருங்கிணைத்து காத்து நிற்கிறதே, அந்த சக்தி எது?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்: ஹிந்துப் பண்பாடு.

ஆதியில் இதற்கு இந்தப் பெயர் இல்லை. ஆனாலும் சநாதன தர்மமாக நம்மை இது வழி நடத்தியது. ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று சொல்லும் தொல்காப்பியம் (தொல் -1:1). சொல்லில் என்ன இருக்கிறது? இனிய சுவையை உணர இனிப்பு என்ற வார்த்தை தேவையில்லை. அதுபோலவே, நமது பெருமிதத்துக்குரிய ஹிந்துப் பண்பாடும் வார்த்தைகளுக்குள் அடங்குவதல்ல.

ஆயினும் தற்கால உலக நியதிப்படி சில அளவுகோல்களை நாம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. கால, தேச வர்த்தமானங்களை நாம் பின்பற்றும்போது, சில அடிப்படைக் கேள்விகளுக்கு நாம் விளக்கம் அளித்தாக வேண்டும். அதில் ஒன்று நமது பண்பாட்டின் கால ஒழுங்கு என்ன? இதன் மக்கள் புழங்கிய நிலப்பரப்பின் விஸ்தீரணம் என்ன? இதன் காலப்பழமைக்கு ஆதாரம் என்ன? இந்த மக்களின் இலக்கியங்கள் என்ன? இவை போன்ற கேள்விகள் மானுடவியல் ஆய்வாளர்களால் எழுப்பப்படும். எந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, இந்த விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது.

அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.

ஹிந்துப் பண்பாடு: ஒரு விளக்கம்

நமது பண்பாட்டின் வயது காலத்துக்குள் குறுக்க இயலுவதல்ல. மார்க்சியக் கண்ணோட்டத்தில் வரலாற்றை அணுகினாலும் கூட, நமது வரலாறு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது. பண்பாடு ஜீவநதி என்றால் அதன் நதிக்கரை ஓரச் சுவடு தான் வரலாறு.

Portrait of Bharathi
மகாகவி பாரதி

நமக்குக் கிடைத்த பழம்பெரும் இலக்கியங்களின் அடிப்படையில் நமது பண்பாடு 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுவர் மொழியிலாளர்கள். உலகின் பழமையான இலக்கியங்களுள் ஒன்றான மகாபாரதத்தின் காலம் பொது யுகத்துக்கு முந்தைய 4,000. அதற்கு முந்தையது ராமாயண காப்பியம். இந்த இரு சமஸ்கிருத நூல்களும், நம்மை வழிநடத்தும் பண்பாட்டுக் கருவூலங்களாக இன்றும் திகழ்கின்றன.

வடமொழியாம் சமஸ்கிருதத்துக்கு இணையான தென்மொழி தமிழிலும் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் கிடைத்துள்ளன. இவ்விரு மொழி இலக்கியங்களும் ஒத்த கருத்தை வெளிப்படுத்துவது, நாடு முழுவதும் பரவியியிருந்த சிந்தனைச் செழுமையின் வெளிப்பாடு. ‘வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்’ என்பது திருநாவுக்கரசர் திருமொழி. (தேவாரம்- 7104). மொழியை அதாவது சிந்தனையை இறைவனாகவே வணங்கிய பெருமைக்குரியவர்கள் நாம்.

‘தர்மார்த்த காம மோக்‌ஷம்’ என்று வாழ்வின் நிலைகளை நான்காக சமஸ்கிருத நூல்கள் வகுத்திருப்பதையே, தமிழில்  ‘அறம், பொருள், இன்பம்,. வீடு’ என்று நாம் பயின்று வந்திருக்கிறோம்.  ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கணியன் பூங்குன்றன் (புறம்- 192) சொன்னது உபநிடத வாக்கியத்தின் பிரதி அல்லவா? ‘வசுதைவ குடும்பகம்’ (மகோபநிததம்- 6: 71-73) என்று உலகையே ஒரு குடும்பமாக அரவணைத்த பாரதப் பண்பாட்டின் வெளிப்பாடல்லவா அது?

இந்த பாரத தேசத்தின் பண்பாடு எப்படிப்பட்டது என்பதை மகாகவி பாரதி தனது ‘ஸ்வசரிதை’யில் குறிப்பிடுகிறார்:

கம்பனென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,

காளிதாசன் கவிதை புனைந்ததும்,

உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்

ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,

நம்பருந்திறலோடொரு பாணினி

ஞால மீதில் இலக்கணங் கண்டதும்,

இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின்

இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்,

 

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,

தெய்வ வள்ளுவன் வான் மறை செய்ததும்,

பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும்,

பேரருட்சுடர் வாள் கொண்டு அசோகனார்

பிழைபடாது புவித்தலம் காத்ததும்,

வீரர் வாழ்த்த மிலேச்சர் தம் தீயகோல்

வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்…

பண்பாடு என்பதன் அம்சங்கள் யாவை என்பதும் இக்கவிதையில் புலப்படுகிறது. மானுடத் தன்மை, இலக்கியச் செழிப்பு, விஞ்ஞான வளர்ச்சி, மொழியியல் சிறப்பு, தத்துவ சாரம், சமயம், நீதிநூல்கள், நல்லாட்சி, பொறையுடைமை, தன்மானம், வீரத்தின் விளைநிலம் ஆகிய அம்சங்கள் உயர்ந்த பண்பாட்டின் சில அம்சங்கள். இவற்றில் பாரதம் உயர்ந்தோங்கி இருந்ததற்கு ஒவ்வொரு துறையிலும் முத்தான மாதிரிகளையும் தனது கவிதையில் காட்டி இருக்கிறார் பாரதி.

ஹிந்துப் பண்பாடு: நேற்று…

நேற்றின் மீது தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம். பலகோடி மூதாதையரின் உழைப்பால் அமைந்த உலகம் இது. காடு திருத்தி, கழனியாக்கி, வாய்க்கால் வெட்டி நீர் பாய்ச்சி, வரி விதித்து, நாடு காத்து, சமயம் போற்றி, கலைகள் வளர்த்து, பாதுகாப்புக்கு அரண் அமைத்து, சந்ததி பெருக்கி, செல்வம் சேர்த்து,…. நமது முன்னோர் நடை பயின்ற அதே பாதையில் தான் நாமும் நடை பயில்கிறோம். பண்பாடும் அதன் ஓர் அம்சமே.

நமது பண்பாடு மிகப் பழமையானது என்பதற்கு நால் வேதங்களும் சங்க இலக்கிய தமிழ் நூல்களுமே ஆதாரம். மிகப் பண்பட்ட சமுதாயத்திலிருந்து மட்டுமே இத்தகைய அற்புதமான இலக்கிய வளம் தோன்ற முடியும்.  ‘நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ (புறம்- 195) என்று பாடுவார் சங்கத் தமிழ்ப் புலவர் நரி வெரூஉத் தலையார். என்ன ஒரு உயரிய கருத்து. பிறரை காஃபிர் எனவும் பாவி எனவும் அழைக்கும் ‘செமிட்டிக்’ மதநேயர்களுக்கு இந்த எண்ணம் நெஞ்சில் முளைக்குமா?

rameshwaram1
ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

நமது ஆலயங்கள் சிற்பக் கருவூலங்கள். அவற்றின் கட்டடக் கலை நம்மை வியக்க வைக்கிறது. ராமேஸ்வரம் கோயிலும் மதுரை மீனாட்சி கோயிலும் தஞ்சைப் பெரிய கோயிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலும், மாமல்லபுரம் குடைவரைக் கோயில்களும் காணும்போதே புல்லரிக்கிறது. எத்தனை சிரத்தையும், உழைப்பும் கலை உணர்வும் கொண்டிருந்தால் இந்தக் கோயில்கள் அங்கு எழுந்திருக்கும்?

தமிழகத்தில் மட்டுமே இத்தகைய முழுமையான சிற்பக் கருவூலங்களைக் காண முடியும். வடக்கு நோக்கி நகர நகர, சிதைந்த ஹளபேடு சிற்பத் தொகுதிகளும், காஷ்மீரின் கோயில் இடிபாடுகளும் நாம் கடந்துவந்த பயங்கர வரலாற்றுப் பக்கங்களை நினைவு படுத்துகின்றன.

வாழ்வின் உன்னதத்தை இல்லறம் – துறவறம் என்று இரு கூறாகப் பிரித்து, போற்றி வளர்த்தவர்கள் நாம். கஜுரேஹா கோயிலின் சிலைகள் காட்டுவது இன்பவியலிலும் நம் முன்னோர் களித்த தருணங்களை வெளிப்படுத்துகிறது. கோனார்க் கோயிலும், காசி விஸ்வநாதர் ஆலயமும், கங்கைப் படித்துறைகளும், நமது அனுபவம் செறிந்த பக்தியின் வெளிப்பாடாக மிளிர்கின்றன.

இன்று நாகரிகம் பேசும் பல நாடுகளில் இழை, தழைகளை உடையாக உடுத்துக்கொண்டு விலங்குகளை கல்லாயுதத்தால் மக்கள் வேட்டையாடிக் கொண்டிருந்த காலத்தில், பாரதத்தில் மிக உயர்ந்த பண்பாடு விளங்கி இருக்கிறது. நெசவிலும் கூட எத்தனை நுண்ணிய தொழில்நுட்பங்கள்;  ஆயுதங்களில் எத்தனை வகைகள்! இங்கு தான் எத்தனை பண்பட்ட மொழிகள்! அத்தனை மொழிகளிலும் எத்தனை இலக்கியங்கள்!

காஷ்மீரில் பிறந்தவனும் குமரியை காணாமலேயே அறிந்திருந்தான். காமரூபத்தில் (இன்றைய அசாம்) பிறந்தவனும் காந்தாரத்தை (இன்றைய ஆப்கானிஸ்தான்) அறிந்திருந்தான். போக்குவரத்து வசதிகள் நவீனமாக இல்லாத அந்தக் காலகட்டத்திலேயே நாடு முழுவதும் அப்படியொரு பிணைப்பு இருந்தது. கடாரமும், செஞ்சீனமும், யவன தேசமும் பாரதத்தில் கிடைக்கும் செல்வத்துக்காக ஓடோடி வந்தன.

இங்குதான் தட்சசீலமும் நாளந்தாவும் காஞ்சியும் பல்கலைகளை உலக மாணவர்களுக்கு வழங்கின. வானியல், ரசாயனம், மருத்துவம், வேளாண்மை, உலோகவியல், கணிதம், விலங்கியல், இசை, நடனம் எனப் பல சாஸ்திரங்களிலும் கரை கண்டிருந்தவர்கள் நாம். வாழ்வின் நிலையாமையை உணர்ந்த மகாவீரரும் மகான் புத்தரும் போதித்த சமயக் கொள்கைகள் நம் குருதியில் கலந்தோடுகின்றன. நாயன்மாரும் ஆழ்வாரும் மகாபக்தர்களும், கிருஷ்ண பக்தர்களும், வீரசைவர்களும், சீக்கிய சிங்கங்களும் பரப்பிய பக்திப் பெருக்கு இன்றும் நாட்டில் ஆன்மிகமாகப் பெருகி நிற்கிறது.

உலகம் முழுவதற்கும் நமது பாரதம் முன்னுதாரண தேசமாக இருந்த காலம் அது. நமது பண்பாடு அனைவரையும் வரவேற்றது. உலகில் பல நாடுகளில் அகதிகளாகத் துரத்தப்பட்ட மக்களுக்கு புகலிடம் தந்து ஆதரித்த பண்புக்கு உரிமையானவர்கள் நாம். யூதர்களும், பார்சிகளும் ஜொராஸ்ட்ரியர்களும் எந்த விகல்பமும் இன்றி இங்கு வாழ வகை செய்த பண்பாடு நம்முடையது.

இதையே தனது சிகாகோ உரையின் கன்னிப்பேச்சில் குறிப்பிட்டார் சுவாமி விவேகானந்தர்:

“உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்..”

ஆனாலும் நமது பெருந்தன்மை நம்மைக் காக்கவில்லை. நாம் அடிமைப்பட்டோம். நமது போர்க்குணம் மழுங்கடிக்கப்பட்டதன் விளைவே நமது வீழ்ச்சிக்குக் காரணம் என்பார் சுவாமி விவேகானந்தர். அது மட்டுமல்ல, பேரரசுக் காலங்கள் முடிவுற்று சிற்றரசர்களின் கும்பலாக நாடு மாறிப்போனபோது, ஒற்றுமையின்மையும் சுயநலமும், மட்டு மீறிய கேளிக்கைகளும் நாட்டை பலவீனப்படுத்தின. அதன் விளைவாகவே நாம் அந்நியர்களிடம் அடிமைப்பட நேர்ந்தது.

இவை அனைத்தையும்விட முக்கியமான காரணம் தீண்டாமை என்ற பெயரில் நமது சமுதாயம் செய்த மாபெரும் பாவம். சமூகத்தின் ஒருதரப்பு மக்களை அவர்களின் பொருளாதார நிலையையும் தொழிலையும் கருதி ஒதுக்கிவைத்ததன் கொடிய பாவச்சுமையே நமது வீழ்ச்சிக்குக் காரணம்.

பொ.யு.பி. 700-ஆம் ஆண்டில் நம் நாட்டின் வட மேற்கு பகுதி இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் தாக்கப்பட்டது. அதேகாலகட்டத்தில் தென்னகத்தில் சோழப் பேரரசு கோலோச்சியது. அதன் பின்னும் வட பகுதியில் தொடர்ந்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பு படர்ந்துகொண்டிருந்த வேளையில் தென்னகத்தில் நாம் சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருந்தோம். அதாவது, நமது தேசம் குறித்த அரசியல் உணர்வு மங்கிப் போயிருந்தது.

அடுத்து போர்ச்சுக்கல், நெதர்லாந்து, ஃபிரான்ஸ், பிரிட்டன் எனப் பல ஐரோப்பிய நாட்டினரின் வேட்டைக் களமானது பாரதம். அப்போது நாம் முற்றிலும் ஒழுங்கையும் நம்பிக்கையையும் இழந்திருந்தோம். இறுதியில் ஆங்கிலேயர்களின்  காலனி நாடாக அடிமைப்பட்டோம்.

Shivaji
வீரசிவாஜி

ஆக்கிரமிப்புக்கு எதிரான சிவாஜி, மகாராணா பிரதாப் சிங், குரு கோவிந்த் சிங் போன்ற குரல்கள் இல்லாமல் இல்லை. அவை இன்றும் நமது பெருமித நினைவுகள். ஆயினும் நாடு தழுவிய அளவில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குவதாக அவை அமையவில்லை.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து 200 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போராடியதால், நாடு 1947-இல் சுதந்திரம் பெற்றது. அதற்குள் நாட்டில் பரவிய இஸ்லாமிய அடிப்படைவாதத்தால், நாடு இரண்டாகப் பிளவுபட்டது. அதுவரை, அனைத்து மதங்களையும் சமமாக நேசித்த நமக்கு பேரிடியாக இஸ்லாமியர்களின் நேரடி நடவடிக்கைகள் அமைந்தன. தவிர, கிறிஸ்தவ மதமும் ஆண்டவர்களின் ஆதிக்கப் பின்புலத்துடன் அழுத்தமாக வேரூன்றியது. இவற்றின் தொடர் விளைவுகளை இன்றும் நாம் அனுபவிக்கிறோம். 

ஹிந்துப் பண்பாடு: இன்று 

இன்றைய ஹிந்துப் பண்பாட்டுக்கு கால வரையறையாக, 1947-க்குப் பிறகு என்று வைத்துக் கொள்ளலாம். இன்று நமது பண்பாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது. ஒருபுறம் அயல் மதத்தவரின் தாக்குதல்கள். மறுபுறம் நாகரிகம் என்ற பெயரில் கீழ்த்தரமான மேலை நாட்டுப் பழக்கங்களின் ஊடுருவல். இன்னொருபுறம் நாட்டு மக்கள் தொகையில் சிறுகச் சிறுக எண்ணிக்கைபலம் குறைந்துவரும் ஹிந்து ஜனத்தொகை. இவை அனைத்துக்கும் மேலாக, சிறுபான்மை- பெரும்பான்மை என மக்களை மதரீதியாகப் பிரித்து வாக்குவங்கி அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளின் (பாஜக நீங்கலாக) விஷம விளையாட்டு.

நாடு சுதந்திரம் பெற்றபோது ஹிந்து மக்கள் தொகையின் சதவீதம் 90 சதவீதத்துக்கு மேல் இருந்தது, இன்று 80 சதவீதமாக மாறியிருக்கிறது. இழந்த சதவீதம் அந்நிய மதங்களின் சதவீத அதிகரிப்பாக மாறி இருக்கிறது. இதே நிலை தொடருமானால், இன்னமும் 50 ஆண்டுகளில் இந்தியாவும் வஹாபிய இஸ்லாமியத்துக்கு உள்பட்ட நாடாக மாறி ரத்தக்களறியைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.

கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக்கொண்டு உலக அளவில் எதிரெதிராகச் செயல்படுகின்றன. இந்தியாவிலோ இவ்விரு மதத்தினரும் இணைந்து ஹிந்துப் பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். அரசியல்ரீதியான ஆளுமை இன்று ஹிந்துக்களின் வசம் இருந்தாலும், மதச்சார்பின்மை என்ற பெயரில் சிறுபான்மை மதத்தினர் வைத்ததே சட்டம் என்ற நிலை இன்னமும் தொடர்கிறது. அவர்களுக்கு உதவும் துரோகக் கூட்டங்களாக மார்க்ஸியம் பேசும் இடதுசாரிகளும், சோஷலிசம் பேசும் அரசியல்வாதிகளும், காந்தியம் பேசும் காங்கிரஸ்காரர்களும் செயல்படுவது கவலை அளிக்கிறது.

தீண்டாமையை ஒழிக்க ஹிந்து இயக்கங்கள் மேற்கொண்ட தீவிரப்பணிகளால் அது மட்டுப்பட்டுள்ளது. என்றாலும் கிராமப்புறங்களில் அதன் கொடிய தன்மை இன்னமும் நீங்கிவிடவில்லை. தீண்டாமை முற்றிலும் நீங்காதவரை ஹிந்து ஒற்றுமை என்பது கானல்நீரே. அதுவரை அயல் மதங்களின் ஆதிக்கமும் முற்றுப் பெறாது.

K B Hedgewar
டாக்டர் ஹெட்கேவார்

1925-இல் நாகபுரியில் டாக்டர் ஹெட்கேவார் என்ற தீர்க்கதரிசி துவக்கிவைத்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மட்டும் தற்போது இல்லையென்றால், இந்த நாடு எந்தக் கதிக்கு ஆளாகியிருக்கும் என்று கற்பனையே செய்ய முடியவில்லை. இன்று சங்க பரிவார இயக்கங்களின் அர்ப்பணமயமான உழைப்பால், தேசிய அரசியலில் ஹிந்துத்துவம் முதன்மை பெற்றிருக்கிறது. ஆயினும் நாம் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் பல மடங்காக நம் முன் விரிந்து கிடக்கிறது.

கோயில் வழிபாடுகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால், அது சுயநலமாக மாறி வருகிறது. அரசியலில் ஊழல் தாண்டவமாடுகிறது. வாக்களிக்க லஞ்சம் பெறுவதென்பது மக்களில் தொடங்கி மக்கள் பிரதிநிதிகள் வரை பரவிவிட்டது. இத்தகைய சுயநலத்தின் கொடிய விளைவால்தான் நாடு முற்காலத்தில் அடிமைப்பட்டது என்பதை நாம் மறந்துவிட்டோம்.

மக்களின் வரிப்பணத்தை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தாமல் தரையில் படுத்திருந்த சாணக்கியர் அளித்த அர்த்தசாஸ்திரத்தை நாம் மறந்துவிட்டோம். பசு இழந்த கன்றுக்காக மகனை தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழனை நீதிமன்றத்தில் சிலையாக்கிவிட்டு, அதே இடத்தில் ஜாதிரீதியாக பூசலிடுகிறோம். ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று போராடிய முத்துராமலிங்கர், அம்பேத்கர் போன்ற தலைவர்களையும் சாதிக்குள் சிறைப்படுத்திவிட்டு, அவர்களின் சிலைகளுக்கு காவல் நிற்கிறோம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய பண்பாட்டை மறந்து பேருந்தில் செல்லும் பெண்ணை பலாத்காரம் செய்யும் காமுகர்களின் நாடாக மாறி வருகிறோம். நமது தர வீழ்ச்சி மிகவும் செங்குத்தானது.

ஹிந்துப் பண்பாட்டின் தற்போதைய நிலை, நன்கு அலங்கரிக்கப்பட்ட நோயாளியின் இதயம் போல துடித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் இன்னமும் இதயம் நிற்காமல் துடிப்பதே நம் முன்னோர் செய்த பெரும் பேறு.

இந்தச் சீரழிவுக்கு என்ன காரணம்?

நமது பெருமைகள் இளம் தலைமுறைக்கு சொல்லித் தரப்படவில்லை. மாறாக நம்மை நாமே கழிவிரக்கத்துடன் பார்க்கும் தாழ்வு மனப்பான்மையே நாம் தற்போது கற்கும்  ‘மெக்காலே’ கல்வியால் விதைக்கப்பட்டு வருகிறது. இதைத்தான் மகாகவி பாரதி, தனது ஸ்வசரிதையில் குறிப்பிட்டுப் புலம்புவார்.

 “…அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து

ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்;

முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்,

மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்

பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்,

பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்.

என்ன கூறி மற்றெங்ஙனுணர்த்துவேன்

இங்கிவர்க் கெனது உள்ளம் எரிவதே.”

-என்று ‘கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்…’ கவிதையின் அடுத்த பத்தி வரிகளாக எழுதியிருப்பார் பாரதி.

மன்னராட்சிக் காலத்தில் மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழியாவர். இப்போது குடியாட்சிக் காலம். இப்போது மக்கள் எப்படியோ அப்படியே மன்னர் அமைவார். அதாவது நமது மக்கள் சுயநலத்தில் உழலும் வித்தகர்களாகவும் பண்பாட்டை மறந்த பித்தர்களாகவும் மாறும்போது, நமக்குக் கிடைக்கும் கல்வியாளர்களும், இதழாளர்களும், எழுத்தாலர்களும், நிர்வாகிகளும், அரசியல்வாதிகளும், தலைவர்களும் அவ்வாறே அமைவர். அவர்கள் வேற்றுக் கிரகங்களிலிருந்து குதிப்பவர்கள் அல்லவே?

நமது தரவீழ்ச்சி ஹிந்துப் பண்பாட்டுக்கு அபாயமாக உருவெடுத்து வருகிறது. இதை மாற்றியாக வேண்டும் என்று நாட்டுநலம் கருதுவோர் விழைகின்றனர். காட்டிக் கொடுக்கும் கயவர்களும் கூட்டிக் கொடுக்கும் கீழோர்களும் இருக்கும் வரை எந்தப் பண்பாடும் ஷீனமடையவே செய்யும். புகழோங்கிய ஹிந்து பண்பாடும் அதனால் விளைந்த பாரதமும் அழிந்து விடுமா? பலகோடி மக்களின் செந்நீராலும் கண்ணீராலும் காக்கப்பட்ட ஜீவஜோதி அணைந்து விடுமா? வரலாற்றின் திடுக்கிடும் திருப்பத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

ஹிந்துப் பண்பாடு: நாளை

நாளை புலரும் என்ற நம்பிக்கை தான் மனிதனை வாழவைக்கிறது. இரவு வரும் பகலும் வரும். இன்ப துன்பங்கள் மாறி மாறி வரும். ஹிந்துப் பண்பாட்டுக்கு சோதனைகள் வந்திருப்பது உண்மைதான். ஆனால், வேதனையடையத் தேவையில்லை என்பதற்கு உதாரணமாக சில துருவ நட்சத்திரங்கள் தென்படுகின்றன.

Modi PM
பிரதமராக மோடி பதவிப் பிரமாணம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நரேந்திர மோடி நாட்டின் பிரதமர் ஆவார் என்று யாரும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. ஆனால் நடந்திருக்கிறது. இன்று நாட்டின் சரிபாதி மாநிலங்களில் பாஜக ஆளுகை சாத்தியமாகி இருக்கிறது. மீதமுள்ள மாநிலங்களிலும் அக்கட்சியின் வளர்ச்சி நம்பிக்கை அளிக்கிறது.

நாடு முழுவதிலுமே ஹிந்து இயக்கங்களின் செல்வாக்கு பெருகி வருகிறது. மாணவர் இயக்கம் என்றால் அகில பாரத வித்யார்த்தி பரிஷத், தொழிற்சங்கம் என்றால் பாரதீய மஸ்தூர் சங்கம், அரசியல் கட்சி என்றால் பாரதீய ஜனதா கட்சி, என பல துறைகளிலும் ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட அமைப்புகளே முதன்மை வகிக்கின்றன. தியாக மயமான வாழ்க்கையாலும் கட்டுப்பாடான வாழ்க்கை முறையாலும் உருவான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்களால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி வீண் போய்விடாது.

இன்று உலக அரங்கில் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கொடிய கரம் பல நாடுகளில் சேதத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு தூபமிடுவதாக கிறிஸ்தவ நாடுகளின் திரை மறைவுச் செயல்கள் அமைந்திருக்கின்றன. இப்போதுதான் அமைதியை உலகுக்கு உபதேசிக்கும் தகுதி கொண்ட மதத்தின் தேவை உணரப்படுகிறது. அதற்குத் தகுதியுடையது ஹிந்து மதம் மட்டுமே. ஏனெனில் இயல்பிலேயே ஆதிக்க குணம் அற்ற ஹிந்து மதம் உண்மையில் ஒரு மதமே அல்ல. இது நமது பண்பாட்டின் முகம்.

Swami_Vivekananda_Jaipur
சுவாமி விவேகானந்தர்

வருங்காலங்களில் மதப்பரப்பலுக்காகவும் மத ஆட்சிக்காகவும் உலகில் சிந்தப்படும் ரத்தம் அதிகரிக்காமல் தடுக்கும் திறம் பாரதத்துக்கு மட்டுமே உண்டு. மீண்டும் சிலுவைப்போர்களும் பிறைக்கொடியுடன் கழுத்தறுக்கும் அவலங்களும் நிகழாமல் தடுக்க உலகம் ஹிந்துப் பண்பாட்டையே எதிர்நோக்குகிறது. ஆனால், அதற்குத் தகுதியானவர்களாக நாம் விரைவில் மாறியாக வேண்டும்.

இன்றுள்ள நாட்டின் சூழலும் உலகச் சூழலும் விரைவில் மாறும் என்பதற்கான சமிக்ஞைகள் தென்படத் துவங்கிவிட்டன. இதைதான் பாரதம் உலக குருவாகும் என்று சுவாமி விவேகானந்தர் அன்றே கூறிச் சென்றார்.

 “மிருகபலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக அமைதி,  அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும் ….. புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள்.  இந்தக் காட்சியை பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்”

-என்பார் சுவாமி விவேகானந்தர். அருளாளர்களின் வாக்கு தவறாது. தியாகியரின் சமர்ப்பண வாழ்வு வீண் போகாது. இறைவனால் படைக்கப்பட்ட இந்நாடு காலவெள்ளத்தில் மூழ்கி விடாது.

இன்று உலகம் முழுவதிலுமே இந்திய வம்சாவளியினரின் செல்வாக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் செல்வாக்கும் பெருகி வருகின்றன. அவர்கள் நமது அமைதித் தூதுவர்களாக பல நாடுகளில் ஆர்ப்பாட்டமின்றி அமர்ந்திருக்கிறார்கள். இனி குறையொன்றுமில்லை.

தேசத்தில் தற்போது காணப்படும் சீரழிவுகளைத் தடுக்கத் தேவையான செயல்பாடுகள் தான் தேவை. நமது ஹிந்துப் பண்பாட்டின் பெருமிதம் உணர்த்தப்பட்டாலே குற்றங்கள் குறையும். வேடங்கள் வெளிறும். அதற்கான முனைப்பான பணிகளில் ஈடுபடுவோரே இன்றைய தேவை.

நாளை நமதே. இது நமது நன்னம்பிக்கை. அதற்காக வானை அன்னாந்து கனவு கொண்டிருந்தால் மாற்றங்கள் நிகழாது. அதனை நடத்திக் காட்டும் செயலூக்கம் மிகுந்தவர்களே நமது தேவை.

புத்தனைப் போலே பாசம் விடுத்தே

சுகனைப் போலே போகம் வெறுத்தே

நாட்டுத் தொண்டிலே பித்தராகிடும்

பக்தர்தம் படை வேண்டும்…

மாபெரும் தியாகியர் படை வேண்டும்…

-இது ஹிந்துப் பண்பாடு நமக்கு அளித்த மகத்தான உணர்வு. அனைத்து விஷங்களையும் முறியடிக்கும் அமுத வலிமை இதற்குண்டு.

.

9 Replies to “ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…”

  1. திரு சேக்கிழான் அவர்களின் ஹிந்து பண்பாட்டின் முக்கால நிலை குறித்த கட்டுரை ஹிந்து பண்பாட்டின் மீது அவரது அக்கறையை காட்டுகிறது, நன்றி.
    ஹிந்து பண்பாடு, ஹிந்து கலாச்சாரம்,ஹிந்து இலக்கியம், ஹிந்து வாழ்வியல்முறை,
    போன்றவற்றை அவ்வளவு எளிதாக மாற்றிவிடவோ,அழித்துவிடவோ,முடியாது.
    அப்படி மாற்றமுடியும் என்றால் பகவான் புத்தர் அவதரித்து போதனை செய்ய ஆரம்பித்த போதே இந்து மதம் தன் நிலையை இழந்திருக்கும்.இந்து மதத்தில் இருந்து உருவான புத்த மதம் தன்னிலை கரைந்து இந்து மதத்திலே மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டது அல்லது இந்து மதத்தை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. இந்துமதத்திற்கு வரக்கூடிய தாழ்வு நிலை அல்லது ஒருசில வருட தடுமாற்றம் என்பது அதன் அன்பு, பணிவு, பொறுமை, கருணை, சகிப்புத்தன்மை,பிறரை அரவனைத்துச்செல்லுதல்,போன்ற நற்பண்புகளால் வரக்கூடிய தொல்லைகள் அவ்வளவே ,
    அதுவும் இந்து மத பண்பாடும் கலை இலக்கிய உணர்வு போன்றவை நிரம்பிவழியும் பொழுது
    பாத்திரத்திலிருந்து வெளிவரும் பொருட்களையே பிறர் அழிக்கவோ, தாக்கவோ முற்படுகின்றனர்.
    இந்த நிலையை கண்டுதான் திரு.சேக்கிழான் அவர்கள் கவலை கொள்கிறார்.அப்படி கவலை கொள்ள தேவையில்லை இதுபோன்ற சமயங்களில் ஸ்ரீ ராமன், ஸ்ரீ கிருஷ்ணன்,ஆதிசங்கரர்,மத்வர், ராமானுஜர்,
    போன்ற அவதாரபுருஷர்கள் தோன்றி நிரம்பிவழியும் இந்துமத உணர்வுகள் வீணாகவண்ணம்,பாத்திரத்தை பெரிதாக்கிவிட்டுபோவார்கள் நன்றி.

  2. “வெட்ட வெளியன்றி மற்று வேறு தெய்வமில்லை” சிவவாக்கியர்.

  3. வடக்கு திசைநோக்கிய ஸ்ரீ அருள் மிகு செல்லியார அம்மனின் ஆலைய வாஸ்து சாஸ்திரமும் , அம்மனுக்கு எத் திசையில் பரிவார பைரவர் மற்றும் விநாயகர் நிர்மாணிக்க வேண்டும் என்பதையும் வரைபடத்துடன் ச்தபதிகளோ ,ஆன்மிக அன்புபவவுள்ளவேர்கள் தயவு கூர்ந்து தெளிவுபடுத்தும்படி பணிந்து கேட்டு கொள்கிறேன்

  4. //“வெட்ட வெளியன்றி மற்று வேறு தெய்வமில்லை” சிவவாக்கியர்.//

    சிவவாக்கியர் மிக அருமையாக உண்மையை சொல்லியிருக்கிறார். கால வெளி, சுத்த வெளி என்பதுதான் கடவுள்.

  5. பிறரை காஃபிர் எனவும் பாவி எனவும் அழைக்கும் ‘செமிட்டிக்’ மதநேயர்களுக்கு இந்த எண்ணம் நெஞ்சில் முளைக்குமா? சத்தியமா முளைக்காது. ஆனால் இவ்வளவு உயரிய இலக்கியங்களும் மத நூல்களும் சகமனிதனை தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்று ஒதுக்கி வைத்தது எவ்வாறு? இந்த சிந்தனை செமிட்டிக் மத நேயர்களுக்கு உங்கள் அளவிற்கு இல்லையே ஏன்? என்றேனும் இது குறித்து சிந்தித்தது உண்டா?

  6. Spell bound.. கண்ணீர் மட்டுமே மிளிர்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *