ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு

(ஏப்ரல் 2 – உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினம்)

ண்பருடன் ஒரு மாலைப் பொழுதில் இத்தாலிய உணவகத்துக்குச் சென்றிருந்தேன். உணவகத்தில் வேலையாட்களையும் எங்களையும் தவிர வேறெவரும் இல்லை. நுழைவாயிலுக்கு எதிர்மூலையில் இருந்த நான்கு நாற்காலிகளில் இரண்டை ஆக்கிரமித்துக் கொண்டோம்.

உறுத்தாத ஒளியமைப்பும், அமைதியைக் குலைக்காத இசையும் உற்சாகத்தைத் தூண்டின. பிராக்கலி சூப்பை ஊதிக் குடித்தபடி பல ஆண்டு கால விஷயங்களை சில மணி நேரங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முயன்று தோற்றுக் கொண்டிருந்தோம். அப்போது அந்தக் குடும்பம் அங்கு நுழைந்தது.

கணவனும் மனைவியும் நுழைவாயிலில் எதற்கோ தயங்கி நிற்க, உடன் வந்த நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் வேகமாக எங்களை நோக்கி வந்தான். எங்களை வினோதமாகப் பார்த்தபடி எதையோ சொல்ல ஆரம்பிப்பதற்குள் அவன் அப்பா அவனை அணைத்து இழுத்து வேறு பக்கம் அழைத்துச் சென்றார்.

சில நிமிடங்களில் ஓர் உறுமல் சத்தம் கேட்டது. இருக்கையில் அமர மறுத்துக் கொண்டிருந்த சிறுவனிடம் தன் கைப்பேசியை அவன் தாய் காட்ட முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பையன் சமாதானம் ஆவதாய் தெரியவில்லை.

அவனை இழுத்துப் பிடித்து அமர வைத்து அருகில் இருந்த பலூன், பையில் இருந்த சாக்லேட் என்று எதையெதையோ கொடுத்து சமாதானம் செய்ய அத்தம்பதியினர் முயன்று கொண்டிருந்தனர். அவர்கள் காட்டியதைப் பார்த்துத் தற்காலிகமாக அவன் சமாதானமாவதும், மீண்டும் அழத் தொடங்குவதும் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

கூட்டமில்லாத நேரம் என்பதால் அனைத்து சிப்பந்திகளும் வந்திருக்கவில்லை. எங்களுக்கருகில் இருந்த மேனேஜர் டெஸ்குக்கு அந்த சிறுவனின் தந்தை வந்து, “சீக்கிரம் ஒரு ஹாட் சாக்லேட் ஃபட்ஜ் வித் ஐஸ்கிரீம் கொடுங்கள்”, என்றார்.

“ஹாட் சாக்லெட் ஃபட்ஜ் கொதிக்க கொஞ்சம் நேரமாகுமே, வெறும் சாக்லெட் ஐஸ்கிரீம் கொடுக்கவா?”

“எது சீக்கிரம் கொடுக்க முடியுமோ அது”, என்று அவசரமாய் கூறியபடி தன் இருக்கைக்கு விரைந்தார்.

வந்ததும் வராததும் ஐஸ்கிரீமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னதான் அடம்பிடிக்கும் குழந்தை என்றாலும் முதலில் ஐஸ்கிரீமா? என்ன ஆகிவிட்டது இந்தக் கால பெற்றோர்களுக்கு? செல்லம் கொடுக்க ஒரு அளவு கிடையாதா?

எண்ண ஓட்டத்தை நண்பரின் பேச்சு கலைத்தது.

மெயின் கோர்ஸ் ஆர்டர் செய்ய எத்தனித்த போது மீண்டும் அந்தச் சிறுவன் கூச்சலிடத் தொடங்கியிருந்தான்.

என் கவனமெல்லாம் அந்த மேஜையில் நடப்பதைப் பார்ப்பதிலேயே இருந்தது. யதேச்சையாய் என் பார்வையை சந்தித்த அந்தப் பையனின் அம்மா, அவசரமாய் பார்வையை விலக்கிக் கொண்டாள். திடீரென்று ஓர் இறுக்கம் அவளிடம் தென்பட்டது.

”ஐஸ்கிரீம்! ஐஸ்கிரீம்!”, என்று உச்ச ஸதாயி கத்தலும், அதனைத் தொடர்ந்து கேவலுடனான அழுகையும் மாறி மாறி அவனிடம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

எதையாவது சொல்லி அவனை சமாதானப்படுத்திவிட முடியாதா என்று அந்தத் தாயின் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. அவளுடைய இறுக்கம் அதிகரித்தற்கு ஏற்ப அந்தப் பையனின் குரலும் உயர ஆரம்பித்தது. பற்களைக் கடித்துக் கொண்டு தன்னைத் தானே கிள்ளிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது பாவமாக இருந்தாலும், அந்தப் பெற்றோரின் மேல் ஏனோ கோபமாக வந்தது.

அவள் படபடவென தன் கணவனிடம் ஏதோ சொல்ல, மீண்டுமொரு முறை அவர் இருக்கையை விட்டு எழுந்து எங்களருகில் வந்தார்.

அவர் காதில் விழ வேண்டுமென்பதற்காகவே குரலை உயர்த்தி என் நண்பரைப் பார்த்தபடி, “இப்பல்லாம் குழந்தையை வளர்க்கறேன் பேர்வழினு குட்டிச்சுவராக்கராங்க”, என்றேன்.

என் நண்பர் நான் சொல்வதை ரசிக்காமல் சங்கடத்தில் நெளிவது போலத் தோன்றியது.

அந்தப் பையனின் தந்தை மீண்டும் மேனேஜர் டெஸ்கை நெருங்குவதற்கும் சாக்லெட் ஐஸ்கிரீம் வருவதற்கும் சரியாக இருந்தது. ஐஸ்கிரீமை கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு ஓடியவரைப் பார்த்த போது, இன்னும் கூட உரைக்கும்படி ஏதாவது சொல்லியிருக்கலாமோ என்று மனம் கருவியது.

ஐஸ்கிரீமை பையனிடம் கொடுத்ததுதான் தாமதம் – அந்தப் பையன் பெருங்குரலில் அழ ஆரம்பித்தான். “டோண்ட் வாண்ட்” என்ற இரு வார்த்தைகளை மட்டும் அழுதபடிச் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

எழுந்து போய் அந்தப் பையனை மிரட்டலாமா என்ற எண்ணம் எழுந்தது.

அவன் தாய் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு அவனிடம் மன்றாட ஆரம்பித்தாள்.

அவர்கள் பேசியது கேட்கவில்லை என்றாலும், ”ஹாட் சாக்லெட் ஃபட்ஜைத்தான் உண்பேன். சாதாரண சாக்லேட் ஐஸ்கிரீம் வேண்டாம்” என்று அடம் பிடிக்கிறான் என்று யூகிக்க முடிந்தது.

மீண்டுமொருமுறை அந்தப் பையன் ஐஸ்கிரீமை நீட்ட, அவன் ஆவேசமாய் அதைத் தட்டி விட்டான். கண்ணாடிக் கிண்ணம் தரையில் சிதறியது.

அந்தப் பெண் அந்தச் சிறுவனை அணைத்துத் தூக்கி அவசரமாய் வெளியில் கிளம்ப முயன்றார். அந்தப் பையன் தரையில் படுத்துக் கொண்டு பிடிகொடுக்காமல் கையையும் காலையும் ஆட்டியபடி புரண்டு அழுது கொண்டிருந்தான்.

அவன் பெற்றோர் இருவரும் சேர்ந்து ஒருவழியாய் அவனை எழுப்பினர். அவன் தன் தாயை கெட்டியாகப் பிடித்தபடி வெளியேறினான். அவன் தந்தை எங்களருகில் நின்றிருந்த சிப்பந்தியின் கையில் ஐநூறு ரூபாய்த் தாளொன்றைத் திணித்து, சிறிது நேரத்தில் வந்து சில்லறை வாங்கிக் கொள்வதாய் கூறிக் கொண்டே வாயிலை நோக்கிச் சென்றார்.

நான் சிப்பந்தியைப் பார்த்தேன். அவர் என்னருகில் நகர்ந்து வர, “எத்தனையோ விதமான கஸ்டமர்களை பார்ப்பீங்க இல்ல”, என்றேன்.

“ஆமாங்க. இவங்க அடிக்கடி வர கஸ்டமர். எப்பவும் நீங்க உட்கார்ந்திருக்கற டேபிள்-லதான் உட்காருவாங்க. இதுக்கு முன்னாடி இப்படி ஆனதில்லை.”

“பிள்ளைக்கு ரொம்ப இடம் கொடுத்து…”, என்று நான் பேசும் போதே என் நண்பர் இடைமறித்தார்.

“ஆட்டிஸம் பத்தி கேள்விப்பட்டதுண்டா?”

அந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருந்தாலும், அதன் அர்த்தம் தெரிந்தது போலவும் இருந்தது; தெரியாதது போலவும் இருந்தது.

“அந்தப் பையன் ஆடிஸ்டிக்கா இருக்கலாம்”, என்றார்.

“எப்படி சொல்ற?”

”உறுதியாச் சொல்ல நான் நிபுணன் இல்ல. கவனிச்சதை வெச்சு ஒரு யூகமா சொல்றேன்.”

“….”

“ சர்வர் சொல்றதையும் வெச்சுப் பார்த்தா, அந்தப் பையன் வந்ததும் தான் வழக்கமா உட்கார்ந்துக்கற இடத்துக்கு ஓடி வந்து இருக்கணும். அங்க நாம உட்கார்ந்து இருந்ததால அவனை வேற இடத்துக்குக் கூட்டிட்டு போக வேண்டியதா ஆகியிருக்கு.”

“இருக்கலாம். இது ஒரு விஷயமா?”

“நமக்கு இது விஷயமில்ல. ஆனால் அந்தப் பையனுக்கு பெரிய அழுத்தத்தைத் தர விஷயமா இருக்கலாம். ஒரே விஷயங்களை ஆட்டிஸம் இருக்கறவங்க திரும்பத் திரும்ப செய்ய விரும்புவாங்க. அப்படி செய்யறது அவங்களுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். புது விஷயம் திடீர்னு அவங்க மேல திணிக்கப்படும் போது அவங்களால சட்டுனு சுதாரிச்சுக்க முடியாது.”

“வேற இடத்துல உட்கார அடம் பிடிச்சவனை சமாதானப்படுத்தத்தான் ஐஸ்கிரீம் வாங்கி இருப்பாங்களோ?”

”முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்கோ. அவனுக்கு ஆடிஸம் இருக்குங்கற பட்சத்துல அவன் செஞ்சதை பிடிவாதமா வகைப்படுத்த முடியாது. புது இடத்துல உட்கார்ந்தா மிகப் பெரிய ஆபத்து உனக்கு ஏற்படப் போகுதுனு உன் மனசுல தோணிச்சுன்னா நீ அமைதியா நடந்துக்க முடியுமா?”

“…”

சிறிது நேர அமைதிக்குப் பின், “இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்?”

“என் பொண்ணோட பள்ளிக்கூடம்தான் காரணம்”

“..?”

“அவ ஸ்கூல்ல எல்லா விதமான குழந்தைகளையும் எடுத்துப்பாங்க.”

“ஆனால் ஆடிஸம் மாதிரி மூளை குறைபாடுள்ள குழந்தைகளை..”

“ஆடிஸம்-ங்கற வார்த்தை குறிக்கற எல்லாரையும் ஒரே மாதிரியாப் பார்க்க முடியாது. மூளை வளர்ச்சி குன்றியிருக்கறவங்களும் அதுல இருக்கலாம். ஐன்ஸ்டீன் அளவுக்கு புத்திசாலிகளும் அதுல இருக்கலாம்.”

“இருந்தாலும், நார்மல் குழந்தைகளோட இந்த மாதிரி குழந்தைகள் எப்படி ஒண்ணாப் படிக்க முடியும்?”

”உலகம் உன்னையும் என்னையும் நார்மல்-னு சொல்லுது. ஆனால் நீயும் நானும் ஒரே மாதிரியா இருக்கோம்? இந்தக் குழந்தைகள் தலையில் ஒரு வார்த்தையைக் கட்டி, அதனாலேயே அவங்களை ஒதுக்கத் தேவையில்லை.”

“அப்ப ஆட்டிஸம் ஒரு குறைபாடில்லையா?”

“ஆட்டிஸம் இருக்கற எல்லாரையும் குறைபாடு இருக்கறவங்களாப் பார்க்க வேண்டியத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகள் இப்ப ஆட்டிஸமை குறைபாடு-னு பார்க்காம வேறுபாடு-னு பார்க்கத் துவங்கியிருக்காங்க.”

என் மனம் அந்தப் பையனையே நினைத்துக் கொண்டிருந்தது. அவன் பதட்டம் என்னை தொற்றிக் கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

“என் பொண்ணோட ஸ்கூல்ல ஒவ்வொரு வகுப்புலையும் வழைமையான வளர்ப்புநிலைகளை (Developmental delay) அடையாத குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வரைக்கும் இருக்காங்க.”

“அப்படி இருக்கறதால அந்தக் குழந்தைகளுக்கும் மத்த குழந்தைகளுக்கும் கஷ்டமா இருக்காதா?”

“இருக்காது. சொல்லப் போனா, இந்த மாதிரி அமைப்பு நிறைய நல்ல மாற்றங்களை என் பொண்ணு கிட்ட ஏற்படுத்தியிருக்கு. வாழ்க்கை வெறும் முதல் இடத்தை மட்டும் குறி வெச்சு ஓடற மடத்தனமான பந்தயம் இல்லை-னு நான் புரிஞ்சுக்கிட்டதைவிட என் பொண்ணு சீக்கிரம் புரிஞ்சுப்பா-னு நினைக்கறேன்.”

”நன்றாகப் படிக்கும் பையனிடம் உட்கார். முதல் பத்து ராங்க்கிற்குள் வராத பையன் கூட சேராதே. ”, என்றெல்லாம் என் குழந்தைக்கு உபதேசம் செய்பவனில்லை என்றாலும் எனக்கு நண்பர் சொல்வது புதியதாக இருந்தது.

”ரெண்டு வேற நிலைகள்ல இருக்கற குழந்தைகள் ஒரே கிளாஸ்ல எப்படி இருக்க முடியும்?

“ரெண்டு நிலைகள்-னு உனக்கு யார் சொன்னா? அது உன் முன்முடிவு. ஒரு கிளாஸ்ல முப்பது குழந்தைகள் இருந்தா, மொத்தம் முப்பது நிலைகள் உண்டு. இங்கப் பிரச்னை என்னன்னா ஸ்கூலுக்குப் போறது மார்க் வாங்கவும், அடுத்த கிளாஸ்க்கு போகவும், நல்ல காலேஜ்-ல சீட் வாங்கவும்-னு நம்ம பார்வை குறுகிப் போயிடுச்சு.

“…”

“புத்தகப் படிப்பு வேற, வாழ்க்கைக் கல்வி வேற-னு நிறைய முறை நாம கேள்விப்பட்டிருப்போம். ஆனால் எவ்வளவு பேர் புரிஞ்சுகிட்டோம்-னு தெரியலை. பத்தாங் கிளாஸ் பயாலஜியும், பன்னிரெண்டாங் கிளாஸ் கால்குலஸும் இன்னிக்கு நிச்சயமா எனக்கு சோறு போடலை.”

“அது என்னவோ சரிதான். எல்லாரும் ஸ்கூலுக்குப் போனாங்கனு நானும் போனேன். எல்லாரும் எக்ஸாமுக்கு பயந்தாங்கனு நானும் பயந்தேன். எனக்கு எது பிடிச்சு இருக்கு, பிடிக்கலைனு தெரியறதுக்குள்ள முப்பது வயசாயிடுச்சு.”

“இப்படி யோசிச்சுப் பாரு. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு நோக்கத்தோட ஸ்கூலுக்கு வரலாம். அந்த நோக்கங்கள் அகடெமிக்கா இல்லாம கூட இருக்கலாம்.”

“புரியலையே”

“உதாரணமா இன்னிக்கு நாம பார்த்த பையனை எடுத்துப்போம். அந்தப் பையனுக்கு புதுச் சூழல்களை, புது மனிதர்களை பார்த்தாப் பதட்டம் ஏற்படும்-னு நினைக்கறேன். அந்தப் பதட்டம் நீங்கறத்துக்காக அவன் ஸ்கூலுக்குப் போகலாம்.”

“அவன் கிளாஸுல வந்து கூச்சல் போட்டா மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்காதா?”

“இருக்கும். ஆனால் அவன் முதல்நாள் கூச்சல் போட்டா எல்லா நாளும் போடுவான்னு நினைச்சுக்கக் கூடாது. ஒருங்கிணைப்பை ஆதரிக்கற பள்ளிகள்ல இந்தக் குழந்தைகளை எடுத்துக்கிறதுக்கு முன்னாடி நிறைய தகவல் திரட்டுவாங்க. கூட படிக்கப்போற பசங்களையும், அவங்க பெற்றோரையும் கூப்பிட்டுப் பேசி தயார்படுத்துவாங்க. ஒவ்வொரு குழந்தையோட தேவைக்கு ஏற்ப நிழல் உதவியாளர்களை (shadow) நியமனம் செய்வாங்க. தேர்ந்த special educator-ஏ டீச்சரா இருந்தா, வேற உதவியாளர் இல்லாம கூட வகுப்பை குழப்பம் இல்லாம நிர்வகிக்க முடியும்.”

autism-children-school

காலப்போக்குல அந்தக் குழந்தைகள் சுதந்திரமான வாழ்க்கையை நோக்கி நகர்வதும், இதனால் மற்ற குழந்தைகள் எல்லோரையும் அணைத்துச் செல்லும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதும் என் மனத்துள் காட்சிகளாய் விரிந்தன.

அவசரப் பட்டு நான் உதிர்த்த வார்த்தைகள் என்னை சுட்டெரிக்கத் தொடங்கின. நான் கண்களை மூடிக் கொண்டேன்.

நண்பர் என் கையைத் தொட்டு, “அந்தப் பையனை நினைச்சுகிட்டு இருக்கியா?”, என்றார்

நான் தலையைத் தாழ்த்திக் கொண்டேன்.

“இப்படியெல்லாம் ஆகலாம்-னு அவங்க தெரிஞ்சுதான் வந்து இருப்பாங்க.”

“என் வார்த்தைகள் அவங்களை நோகடிச்சு இருக்காதுங்கறியா?”

“அப்படிச் சொல்லலை. நோகடிச்சு இருக்கலாம். இப்படி ஆகக் கூடிய வாய்ப்பு இருக்குனு தெரிஞ்சும் அவங்க அந்தப் பையனை கூட்டிகிட்டு வந்ததைப் பாராட்டறேன்.”

அந்தப் பையன் முதலில் இருந்து அழுதாலும் அவன் தாய் குதூகலமாகத்தான் முதலில் இருந்தாள். அந்தப் பையனுக்கு ஐஸ்கிரீமை குடுத்துட்டா சமாதனமாகிவிடுவான் என்று நினைத்திருக்கலாம்.

“அந்தப் பையனுக்காகத்தான் வேற எதையும் ஆர்டர் பண்ணாம முதல்ல ஐஸ்கிரீமை ஆர்டர் பண்ணினாங்க. அப்படியும் அவன் ஏன் ஐஸ்கிரீம் வேணும்-னு அடம் பிடிச்சான்?”

“லாங்குவேஜ் பிராப்ளம்”

“அப்படியா? அந்தப் பையனும் பேசினா மாதிரித்தானே இருந்தது?”

“பேசற திறனும் மொழியும் ஒண்ணு இல்லை. உன்னால சீன மொழியில உள்ள வார்த்தைகளைப் பேச முடியலாம். அதுக்காக உனக்கு சீன மொழி புரியும்-னு அர்த்தம் இல்லையே. அவனுக்கு பல வார்த்தைகள் தெரிஞ்சு இருக்கலாம். இருந்தாலும் அந்த வார்த்தைகளோட முழுமையான அர்த்தம் புரியாம இருந்திருக்கலாம்.”

“…”

“வீட்டுல அம்மா ஐஸ்கிரீம் தரேன்னு சொன்னா தானே எழுந்து போய் எடுத்துக் கொடுப்பாளாயிருக்கும். இந்தக் கடைக்கு முன்ன வந்த போது வழக்கமா கொண்டு வர அங்கிள் இன்னும் கண்ணுல படலையே அப்ப எப்படி ஐஸ்கிரீம் வரும்-னு அவன் குழம்பியிருக்கலாம். வழக்கமா இடத்தைவிட்டு எழுந்திருக்காத அப்பா ஏன் எங்கேயோ போய் யார் கூடையோ பேசறார்-னு பதட்டமாகியிருக்கலாம்.”

“எந்த முயற்சியும் செய்யாம நமக்குத் தானா தெளிவாகிடற எவ்வளவோ விஷயங்களுக்குப் பின்னால் எவ்வளவு நுணுக்கம் இருக்கு!”

“உண்மைதான்.”

“அவன்கூடவே இருக்கற பெற்றோருக்கு அவனுக்கு எப்படி புரிய வைக்கணும்னு தெரியாதா?”

“அவங்களுக்குத் தெரிஞ்ச வரையில் அவங்க முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருந்தாங்க. முதல்ல கொஞ்ச நேரத்துக்கு அவன் சிணுங்கினாலும் அவன் அம்மாவோட உடல் மொழியும், பேச்சும் அவனை ஆசுவாசப்படுத்திக் கிட்டுதான் இருந்தது…”

நண்பர் மேலும் சொல்லத் தயங்கினார்.

“ம்?..”

“நான் எதாவது சொல்லி உன்னைக் காயப்படுத்திடுவேனோ-னு பயமா இருக்கு…”

“சொல்லுப்பா..”

“என் பொண்ணோட நண்பர்கள் என் வீட்டுக்கு வந்து தங்குவாங்க. அவங்க குடும்பத்தோட நாங்க வெளியில போவதுண்டு. அதுல சில குழந்தைகள் இந்த மாதிரியும் அடக்கம். அவங்களோட பழகின அனுபவத்துலதான் சொல்றேன்..”

“ஏன் சுத்தி வளைக்கற? நேராச் சொல்லு!”

“அந்தப் பையனுடைய பதட்டம் அதிகமாகாம இருக்க அவன் அப்பாவும் அம்மாவும் என்னதான் முயற்சி செஞ்சாலும் அவங்களும் மனுஷங்கதானே. நாம அவங்களையே பார்க்கறோம்-னு அவங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? ”நம்ம வளர்ப்பு சரியில்லை”-னு உலகம் நினைக்குதுங்கற எண்ணமெல்லாம் அவங்களையும் உறுத்தத்தானே செய்யும்”

எனக்கு சுரீரென்று உரைத்தது. விரும்பிச் சாப்பிடும் பாஸ்டா ஏனோ குமட்டிக் கொண்டு வந்தது.
“அவசரப்பட்டுட்டேன்”

மௌனம் எங்களைச் சூழ்ந்து கொண்டது.

“இதுக்கெல்லாம் நீதான் காரணம்-னு நினைச்சுக்காத!”

“ப்ச்…”

”வழக்கமா கிடைக்கற இடம் கிடைக்காதது, ஐஸ்கிரீமுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது, அப்பா அம்மாவோட பதட்டம், எதிர்பார்த்த ஐஸ்கிரீம் வராம வேற ஒரு ஐஸ்கிரீம் வந்தது, தான் நினைப்பதை சொல்ல முடியாததால தப்பான ஐஸ்கிரீம் வந்ததோனு வருத்தம், தன் வருத்தத்தை வார்த்தைகளா கொட்ட முடியாததால வர வெறுப்பு, அழுத்தம் – இதுல எது வேணும்னாலும் காரணமாயிருக்கலாம். நாம இங்க இல்லாம இருந்து இருந்தாக் கூட அந்தப் பையன் இப்படி நடந்துகிட்டிருந்திருக்கலாம்.”

நண்பர் என்னைத் தேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்.

”…ப்ச்..எவ்வளவு கஷ்டம் இல்ல அந்தப் பையனுக்கு…”

“அந்தப் பையனுக்கு நாலு வயசு இல்லாம ரெண்டு வயசுனு ஒரு நிமிஷம் நினைச்சுக்கோ. அவன் கத்தினது, அடம் பிடிச்சது, கீழ விழுந்து புரண்டது, கண்ணாடியை போட்டு உடைச்சது எதுவுமே உறுத்தலாப் படாது. நம்ப குழந்தைகள் ரொம்ப வேகமா வளர்ராங்க-னு எனக்குத் தோணும். என் பொண்ணு இன்னும் கொஞ்சம் மெதுவா வளர்ந்தா அவளை இன்னும் நல்லா ரசிக்கலாமேனு நான் ஏங்கறதுண்டு. இந்தப் பெற்றோருக்கு நிஜமாவே அந்த வாய்ப்பு கிடைச்சு இருக்கு. அந்தக் குழந்தையோட சின்னச் சின்ன முன்னேற்றம் அவங்களுக்கு தர்ர சந்தோஷம் நமக்கு வாழ்க்கையில கிடைக்குமாங்கறது சந்தேகம்தான்.”

“இதெல்லாம் மனசைத் தேத்திக்க சொல்லிக்கறதுதானே”

“இல்லைப்பா. உன் மனசுல இருக்கற பரிதாப உணர்ச்சியைத் தூக்கிப் போட்டுட்டு யோசிச்சுப் பாரு. அவங்களுக்கு பரிதாபத்துனால சல்லிக் காசு பிரயோஜனம் இல்லை. அவங்களுக்குத் தேவை முழு மனசோட ஏத்துக்கறதுதான்.”

“…”

“அவங்களையும் அவங்க அப்பா/அம்மாவையும் அவங்களாகவே ஏத்துக்கிறது அவங்களை நிச்சயம் ஆசுவாசப்படுத்தும்.”

நண்பர் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்தக் குடும்பம் மீண்டும் அறையின் வாயிலில் தென்பட்டது. அந்தப் பையன் மீண்டும் எங்கள் மேஜைக்கு ஓடி வந்தான்.

நான் அவனைப் பார்த்து புன்னகைத்தேன். அவன் அதைக் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

என் நண்பன் எழுந்து, “இங்க உட்காறரியா?”, என்று கேட்டான். அவன் பதில் சொல்லாமல் ஆனால் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.

என் நண்பன் என் தட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு அடுத்த மேஜையில் வைத்தான்.

நானும் நகர முயன்றேன்.

அந்தப் பையனின் தந்தை எங்களருகில் வந்தார். பையன் அமைதியாய் மிளகுப் பொடி இருந்த குடுவையை கையில் உருட்டிக் கொண்டிருந்தான்.

”நீங்க இங்க உட்காரலாம்”, என்று அந்தப் பையனின் தந்தையிடம் கூறினேன்.

அவர் புன்னகைத்தார்.

நானும் புன்னகைக்க முயன்றேன்.

Autism-pledge

லலிதாராம் நன்கறியப்பட்ட கர்நாடக இசை வரலாற்றாசிரியர்.  கந்தர்வ கானம் , இசையுலக இளவரசர் ஜி.என்.பிதுருவ நக்ஷத்ரம்  ஆகிய புத்தகங்களில் மகத்தான இசைக் கலைஞர்கள் வாழ்கையை பதிவு செய்தவர்.  கர்நாடக இசைப் பரவலுக்காக பரிவாதினி என்ற குறிப்பிடத் தக்க அமைப்பைத் தொடங்கியவர்.

Tags: , , , , , , , , , , , , , , ,

 

10 மறுமொழிகள் ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு

 1. Meenakshi Balganesh on April 2, 2016 at 11:52 am

  அருமையான பதிவு. நம்மில் பெரும்பாலோர் இதைப்பற்றி அறியாதவர்களாக இருக்கிறோம். ஆகவே நிலைமையின் நுணுக்கமான போக்குகள் பிடிபடுவதில்லை. இதுபோன்ற நான்கைந்து சிறுவர்களை நண்பர்கள், உறவினர் வீடுகளில் நான் கண்டிருப்பதால் நிலைமை ஓரளவு புரிகிறது. பெற்றோர்களின் தொடர்ந்த விடாமுயற்சியும் பிரத்தியேக கவனிப்பும் இக்குழந்தைகளைக் குணமாக்கி இருப்பதனையும் கண்டுள்ளேன்.

  விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரை மிகவும் நன்றாக அமைந்துள்ளது. நன்றி.

 2. Gopalakrishnan H on April 2, 2016 at 4:17 pm

  அருமையான பதிவு. ஒலி வடிவிலும் பதியலாமே. நன்றி.

 3. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on April 2, 2016 at 5:40 pm

  தற்காதல், தற்புனைவு என்று பலவாறு மொழிபெயர்க்கப்படும் autism என்ற இந்த மாறுபட்ட குணாதிசயம் உள்ளக்குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு குழந்தைவளர்ப்பு பெரிய சவால்தான். என்றாலும் அந்தக்குழந்தை எவ்வாறு இருக்கிறதோ அதை அவ்வண்ணமே ஏற்றுக்கொள்ளுதல் மட்டுமே ஒரே தீர்வு என்பதை ஒரு சிறுகதையைப்போல அழகாக சொல்லியிருக்கிறார் லலிதாராம் அவர்கள். அவர்களுக்குப்பாராட்டுக்கள். தமிழ் ஹிந்துவில் இதுபோன்றக் கருத்தாழம் உள்ளக் கட்டுரைகளைக் கதைகளை தொடர்ந்து எழுதவேண்டும் என்று அவரை வேண்டுகிறேன்.

 4. S Dhanasekaran on April 3, 2016 at 2:16 am

  மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள பயனுள்ள கட்டுரை.

 5. sakthipalani on April 3, 2016 at 7:26 am

  ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களைவிட அவர்களுக்கு கல்வி சொல்லி
  தரும் ஆசிரியர்கள்தான் போற்றுதலுக்குரியவர்.

 6. sandhana on April 12, 2016 at 10:59 am

  தெளிவான ,சிந்தனையை தூண்டகூடிய வகையில் உள்ளது .

 7. Subramaniam Logan on April 12, 2016 at 5:26 pm

  நெஞ்சை அடைத்துவிட்ட வார்த்தைகள் என்று இதுவரையில் கேள்விப் பட்டதுண்டு. இன்று அதனை உணர்ந்து என்னில் எனக்கே பயம் வந்துவிட்டது.மிக ஆழமான நேர்த்தியான மொழிநடை , மிக இலகுவான வெளிப்படுதல்.
  நன்றி
  லோகன்

 8. mugunthan chari on April 14, 2016 at 5:16 pm

  நல்ல பதிப்பு ! ஆணைவரும் படித்து பயன் பெற வேண்டிய கட்டுரை !

 9. Sivan on April 14, 2016 at 8:28 pm

  ஆட்டிசம் பற்றிய நல்ல பதிவு. இது ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

  1. தாய் கருவுற்றிருக்கும் போது தாய் உபயோகப்படுத்தும் அன்றாட வீட்டு உபயோக பொருட்களில் உள்ள (chemicals) தாய் வழியாக குழந்தைக்கு கடத்தப்படுகிறது. இது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
  2. குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள். இத்தடுப்பூசிகளில் உள்ள பல கூட்டுப் பொருளின் (Mercury, Aluminium, Formaldehyde) வினை ஆட்டிசத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. 2 மாதம் முதல் 3 வயதுக்குள் போடப்படும் தடுப்பூசிகள் இதற்க்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

  Vaccination is a barbarous practice and one of the most fatal of all the delusions current in our time.

  Conscientious objectors to vaccination should stand alone, if need be, against the whole world, in defense of their conviction.
  –Mahatma Gandhi

 10. AVN on September 5, 2018 at 7:58 pm

  I am very proud to say Social awareness to write above topic. This message is guide and realised what’s happen this child life

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*