கால்குலஸ் வாழ்க்கை

டிசம்பர் மாதக்குளிர் என்பதை விட, வறண்ட காற்றே அன்று காலையில் அதிகம் தாக்கியது. குப்பையுடன், இலைகள் உதிர்ந்து அதீதமாகச் சுழன்று வாசலில் புழுதிவாரி அடித்திருந்தது.

வாசலில் சரளைக்கற்களில் சரசரத்து நின்ற டோயோட்டோ ஃபார்ச்சூனரில் இருந்தவாறே கருப்பசாமி கையசைத்து அழைத்தான். “ரெடியா இருக்கேல்ல? வண்டில ஏறு நம்ம ராகவன் சாருக்கு ரொம்பவே முடியலையாம். ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்ந்துருவம், என்ன?”

ராகவன் சார்…

மெலிந்த , உயர்ந்த தேகம். கருகருவென சுருட்டை முடி. கொஞ்சம் முதுகு வளைந்தாற் போல நடை. கல்லூரியில் மேல்நிலைக் கணித வகுப்பு எடுப்பவர். இளநிலை இயற்பியலில், அவரை ஒரு செமஸ்டர் , எங்களுக்கு எடுக்கச் செய்திருந்தனர்.

கால்குலஸ், தொடர்கள், என்பனவற்றில் எங்களது பயம் நிஜமானது. ஒரு மண்ணாங்கட்டியும் தலையில் ஏறவில்லை. சார்புகள், ஃபங்ஷன்ஸ் என்று தொடங்கும் எதுவும் நினைவில் வராமல் முதல் வார இறுதியில் அவர் வைத்த டெஸ்ட்டில் பலரும் தோற்றிருந்தோம்.
அன்றைய வகுப்பு இறுதியில் என்னையும், கருப்பசாமியையும் வேறு இரு மாணவர்களையும் அழைத்தார். “ சாயங்காலம் என் ரூம்ல வந்து பாத்துட்டுப் போங்க” என்றார்.

வெங்கட் ராகவன் பி.ஹெச்டி என்று பலகை மேசையில் இருக்க, யானை தண்டிக்கு இருந்த பல புத்தகங்கள் மேசையில் அடுக்கியிருந்தார். “ உக்காருங்க” என்றார். நாங்கள் நின்று கொண்டேயிருந்தோம்.

“அட, உக்காருங்க. மரியாதையெல்லாம் மனசுல இருந்தாப் போறும். என்னப்பா, மேத்ஸ் புரியலையா?”

உட்கார்ந்த தைரியத்தில் சாமி தொடன்ங்கினான் “ சார், இந்த நம்பர் கணக்கெல்லாம் புரியுது. கரெக்டா போட்டுறுவம். இந்த சார்புகள், உறவுகள், எஃப் ஆஃப் எக்ஸ் f (x)ந்னு ஒரு இடத்துல எழுதறீங்க. சமக்குறிக்கு அந்தப்பக்கம் திடீர்னு g(x) ஜி ஆஃப் எக்ஸ்னு எழுதறீங்க. எப்ப எஃப் , ஜி ஆச்சு? தெரியமாட்டேங்குது. ஏன் எழுதறீங்க? எஃப் நா என்ன,ஜி ந்னா என்ன? தெரியாம எழுத வேண்டியிருக்கு”

அவர் புன்னகைத்தார். “ நாலு மார்க்” என்றார். வெங்கட் ராகவன் சாரின் ஒரு சிறப்பு அம்சம் அது என்று சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரு கேள்வி – அது எந்த வகையாக இருந்தாலும், அதற்கு வரும் ஒரு பதில் அவருக்கு சரியாகப் பட்டால், அதற்கு மார்க் கொடுப்பார். பத்து மார்க் என்பது மிகச் சரியான விடை. வெகு சிலரே அதனை எடுத்திருக்கிறார்கள்.
கருப்பசாமி வெற்றியுடன் புன்னகைத்தான். நாலு மார்க்.. நாப்பது சதவீதம்..பாஸ்..யப்பாடி.

“இந்த குழப்பம் ரொம்ப முக்கியம். இதுல எதோ சரியில்லைன்னு ஒனக்கு உறுத்தறது பார்… அதுவே விடைக்கு கொண்டுபோய் விட்டுறும்.” சாய்ந்து அமர்ந்துகொண்டார் ராகவன்.

“உலகத்துல எல்லாமே சார்புதான், உறவுதான். எதிரிகூட நமக்கு உறவுதான்… எதிரி என்ற அளவில். எல்லாரும் ஒருவரையொருவர் சார்ந்துதான் இருக்கோம். ஒன்றுமே சார்ந்து இல்லாமல் ஒருவரும் இல்லை. உயிர் வாழும் அனைத்தும் காலத்தைச் சார்ந்து இருக்கின்றன. இடத்தைச் சார்ந்து இருக்கின்றன. ஆனா, இந்த இடமும், காலமும் எதனைச் சார்ந்து இருக்கு? “

நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.

“தைரியமா யோசி. பயப்படாதே. தப்பா பதில் வந்தாலும் பாராட்டுவேன். முயற்சிக்கிறே பார்…அதுவே பெரிய விசயம். கணக்கு உன்னைச் சார்ந்து இருக்கு. நீ கணக்கோடு போராடும்போது, நீ கணக்கைச் சார்ந்து இருக்கிறாய். அந்த சார்பு முக்கியம். இதுதான் அந்த எஃப். கணக்கு என்பதை X எக்ஸ்-னு வைச்சுக்குவோம். உன் வெறுப்பு என்பதை Y ஒய்-ன்னு வைச்சுக்குவோம். அப்ப உன் கணக்கு சார்ந்த வெறுப்பு ஒய் என்பது எஃப் ஆஃப் எக்ஸ். Y= F(X) ”

நாற்காலியின் முன்னே அமர்ந்தோம். எதோ பிடிபடுவது போல. இருந்தது..ஆனா இல்ல.

அவர் என்னைப் பார்த்தார். “ நீ அந்த சியாமளாவைப் பார்த்து ஜொள்ளு விடுவதை நான் பாத்திருக்கேன். அந்த காதலை ஜி g ந்னு வைச்சுக்குவோம். சியாமளாவின் புன்னகையை எக்ஸ் Xனு வைச்சுக்குவோம். உன் மனசோட குரங்குக் குதியை Y ஒய்-ன்னு வைச்சுக்கிட்டா, இப்ப ஈக்வேஷன் சொல்லு பாப்போம்”

கருப்பசாமி கெக்கே பிக்கேவெனச் சிரித்தான். வெளிய வந்ததும் அவனை அறைய வேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

அவர் ஒரு காகிதத்தில் X,Y என இரு செங்குத்துக் கோடுகளை வரைந்தார். “ இப்ப சியாமளாவோட புன்னகை அதிகரிக்க அதிகரிக்க, உன் படபடப்பு அதிகரிக்கிறது. இதை ஒரு சாய்மான நேர்க்கோடு காட்டும். அந்த கோடு , 45 டிகிரி கோணத்துல இருந்தா, இரு அதிகரிப்பு விகிதமும் சமம். y=mx

இப்ப, உனக்கு அவளோட கலியாணம் ஆயிருச்சுன்னு வை.. அட, சிரிக்காதே. சும்மா நினைச்சுக்குவோம். அதுக்கப்புறம் அவ சிரிச்சா உனக்கு அலுப்பு தட்டும். அவ பேசப்பேச, உன் படபடப்பு குறைஞ்சுகிட்டே வரும். திருமணம் வரை ஏறிக்கிட்டே வந்த Y ஒய், திருமணம் என்ற புள்ளியில் தலைகீழாத் திரும்புது . இப்ப இதனை ஒரு பாதி ஸைன் அலை அல்லது பொத்தம் பொதுவா ஸைனுஸாய்டல் அலைன்னு சொல்லலாம்”

calculus__math_teacher

அன்று இரவு எட்டு மணிக்கு அவர் அறையிலிருந்து நாங்கள் வெளி வந்தபோது, கணக்கு ஓரளவு நட்பாயிருந்தது. பயம் குறைந்திருந்தது. என்னடே மக்கா? என்று கணக்கின்,தோளில் கைபோடும் அளவு பரியச்சமாயிருந்தது.

ரோல்ஸ் தியரம் என்பதை அவர் அடுத்த கிளாஸில் விளக்கியது அப்படியே மனதில் பதிந்தது. “ இரு எல்லைகளுக்கு நடுவே மேலும் கீழுமாக வரும் சார்பலை ஒன்றுக்கு இரு புள்ளிகளில் ஒரே அளவு இருப்பதாக வைத்துக்கொண்டால், அந்த புள்ளிகளுக்கு நடுவே ஒரு புள்ளியில், அச்சார்பலைக்கு வகையீடு கிட்டாது மாறிலியாயிருக்கும்”

மற்றவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கையில், கருப்பசாமி எழுந்து போய் விளக்கமளித்தான் “ ஒரு பாக்டீரியா காய்ச்சல், சரியா மூணு மணி நேரத்துக்கு ஏறி, இறங்குதுன்னு வைச்சுக்குவோம். ஆறு மணி நேரத்துக்குள்ள, ரெண்டு தடவை 104 டிகிரி போயிருக்குன்னா, காய்ச்சல் இடையே ஒரு நேரத்துல மேலயும் போகாம கீழயும் இறங்காம அப்படியே இருந்திருக்கும். சரிதானே சார்?” என்றான்.

“அஞ்சு மார்க்” என்றார் ராகவன், புன்னகையுடன். கால்குலஸை வாழ்வில் பல தருணங்களிலும் பார்க்க வைத்த ஒரு நிகழ்வாக அது அமைந்தது. நான் மேல் படிப்பிற்கு வெளியே போனேன். கருப்பசாமி சி.ஏ-க்குப் படித்து, ஊரில் பெரிய ஆடிட்டராக இருக்கிறான்.

”சாரோட மனைவி அஞ்சு வருசம் முந்தி இறந்துட்டாங்க. அது பெரிய அடியா அவருக்கு விழுந்துருச்சு. பேசறதை வெகுவாகக் குறைச்சுகிட்டார். எதாவது பாசுரம், பஜனைன்ன்னு போவார். உடல் தளர்ந்ததுல, அதுவும் நின்னு போச்சு”

“அவர் பையன்? ஒருத்தன் உண்டே? நம்ம கூட கிரிக்கெட் விளையாட வருவானே? சம்பத்..சம்பத்-தானே அவன் பேரு?”

“சம்பத்து,அமெரிக்காவுல செட்டில் ஆனாண்டா. இவரைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தான். ஆறுமாசம் பையன்கூட இருந்துட்டு வர்றேன்ன்னு சொல்லிட்டு இவர் ஒருமாதிரியா தெளிஞ்சு வந்ந்தாரு பாத்துக்க. கிளம்பறதுக்கு ஒரு வாரம் முன்னாடி, அமெரிக்காவுல கார் ஆக்ஸிடெண்ட்ல அவன் போயிட்டான்.”

“அடப்பாவமே “என்றேன் திகைத்து.

“ஒருமாதிரி சித்தம் கலங்கிறுச்சு. தனியா வீட்டுல அவரால இருக்க முடியலைன்னு பாத்து, நானும் ராதாவும் ஒரு ப்ளான் பண்ணோம். நம்ம ஜோ இருக்காம்லா? அவன் ஒரு பழைய பங்களாவை வாங்கிப்போட்டு முதியோர் இல்லம் வைச்சிருக்கான். அங்க போய் இவரைச் சேத்துவிட்டுட்டோம். இருக்காரு அங்கிட்டு.. சரி. நீ வந்திருக்கியே, பாத்துட்டுப் போலாம்னு…”

“அவருக்கு நினைவு இருக்குமா?” என்றேன்.

“சான்ஸே இல்ல. யாரையுமே ஞாபகமில்ல. அருணாச்சலமா? எப்படா வந்தே?ண்னுவார் ஜோ-வைப் பாத்து.”

வீட்டின் உட்புறம் , ஒரு அறையில் கட்டிலின் அருகே நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். உடல் வற்றிப்போய், கைகளில் நரம்புகள் புடைத்து, அசாதாரணப் பளபளப்பில் தோல் மினுங்க, அவரைப் பார்க்கையில் என்னமோ செய்தது.

“சார், கருப்பசாமி வந்திருக்கேன்” என்றான் காதருகே சென்று. ”யாரு?” என்றார் அவர் தீனமாக . அவன் மீண்டும் சொன்னான். என்னை அறிமுகப் படுத்தினான்.

அவர் தலை குனிந்து, ஏதோ அடையாளம் நினைவுக்கு வந்தவராய், உதடுகள் சிரிப்பதாக கோணிக்கொள்ள, ஏதோ பெயரை முனகினார். அது எனது பெயரல்ல.
“சம்பத்து வந்திருக்கானா?” என்றார் திடீரென.

கருப்பசாமி தயங்கி “இல்ல சார்” என்றான்.

அவர் நடுங்கும் விரல்களால் நெற்றியில் மெல்ல அடித்துக்கொண்டார் “ அவன் எப்படி வருவான்? இருந்தவனை நான்னா தொலைச்சுட்டு நிக்கறேன். அவளைத் தொலைச்சேன். அப்புறம் அவனைத் தொலைச்சேன். என்னை எப்பத் தொலைக்கப் போறேனோ?”

என்ன சொல்வதென்று தெரியாமல் நான் திகைத்து நின்றிருந்தேன். அவர் நிமிர்ந்து எனக்குப் பின்னால் சுவரில் மாட்டியிருந்த திருவரங்கனின் திருவுருவப் படத்தைப் பார்த்தார்.

“அபத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகருளானே”

”இல்ல சார்” என்றேன், முன்னே சென்று. “ உங்க பிறவி அரும் பிறவி. எத்தனை பேரை வாழ வச்சிருக்கீங்க? நீங்க சொல்லிக்கொடுத்த ரோல்ஸ் தியரம்தான் வாழ்க்கைன்னு எப்பவோ எங்களுக்குப் புரிஞ்சுபோச்சு. எப்ப நடுவுல தேங்கி நின்னாலும் நினைச்சுக்குவேன்.. “ வாழ்க்கையைத் தொடங்கறப்போ சூனியம். முடியறப்போ சூனியம். அப்ப இடையில ஒரு இடத்துல மாறாது நிற்கும். அதுக்கப்புறம் மாறும்..மேலேயோ, கீழேயோ.. ஆனா மாறும். இந்த ரோல்ஸ் தியரம், நீங்க சொல்லிக்கொடுத்தது. பொய்க்கலை, பொய்க்காது. உங்களுக்கும் மாறும் சார். “

“ரோல்ஸ் தியரம்” என்றார் ஒரு உள்ளூறும் உவகையுடன். “ரோல்ஸ் தியரம்னா சொன்னே? அதைவிட பொதுவா லக்ராஞ்சி தியரம்னு சொல்லியிருக்கலாம். காஷி-தியரம் சொல்லியிருக்கலாம். ம்ம். நீ சொன்னது சரிதான்.. இரு இடங்கள்லயும் ஒரே அளவுன்னா, ரோல்ஸ் ..சரிதான்”

கருப்பசாமி மவுனமாக நின்றிருந்தான். அவனை அருகில் அழைத்து காதோடு ஏதோ முணுமுணுத்தார். கருப்பசாமி குனிந்து நின்றான். அவன் முதுகு குலுங்கியது. சட்டென திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டான்.

“அதிருஷ்டசாலிடா நீ” என்றான் உதடுகள் துடிக்க…“ ‘பத்து மார்க்”-ங்கறாரு சார்”

அவர் பாதங்களைத் தொட்டு கலங்கிய கண்களில் ஒற்றிக்கொண்டேன். ” ஜென்ம சாபல்யம் சார். இது போதும். நீங்க சொல்லிக்கொடுத்த கால்குலஸ்ல வர்ற மாதிரி. வாழ்வில் அகடு ,முகடு வரும். மினிமம், மேக்ஸிமம்.. இது எனது மேக்ஸிமா பாயிண்ட்”

இருவரையும் அழைத்தார். நடுங்கும் கைகளை எங்கள் தோள்களில் வைத்து, அரங்கன் படத்தை மீண்டும் பார்த்து நடுங்கிய குரலில் சொன்னார் “அருமையாய் இவர்கள் தந்தாய் அரங்கமா நகருளானே”

கருப்பசாமி தேம்பித் தேம்பி அழுததை நான் அதுவரை கண்டதில்லை.

******

(சுதாகர் கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

sudhakar_kasturiசுதாகர் கஸ்தூரி  இணையத்தில் தொடர்ந்து பலதரப்பட்ட  சுவாரஸ்யமான செறிவான பதிவுகளை எழுதிவருபவர். 6174, 7.83 ஹெர்ட்ஸ்  ஆகிய இரண்டு அறிவியல் புதினங்களின் ஆசிரியர்.

நெல்லைத் தமிழின் வண்ணங்கள் மணக்க எழுதும்  தூத்துக்குடிக்காரரான சுதாகர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

Tags: , , , , , , , , ,

 

7 மறுமொழிகள் கால்குலஸ் வாழ்க்கை

 1. Gopalakrishnan H on April 8, 2016 at 12:07 am

  arumaiyaana katturai. naane ezhidhiyadhaippoala irukku. mikka nanri.

 2. sakthipalani on April 8, 2016 at 8:28 am

  மனிதனின் உடல் இந்த உலகில் வெகுநாள் வாழ்வதில்லை அவனது அனுபவமும்,
  அறிவும் மட்டுமே வாழ்க்கைக்கு பிறகும் பிறருக்காக வாழ்ந்துகொண்டு இருக்கிறது
  இக்கதையில் வரும் திரு ராகவன் அவர்களும் அப்படி ஒரு மனிதரே.

 3. Geetha Sambasivam on April 8, 2016 at 1:01 pm

  என்ன சொல்லிப் பாராட்டுவது? மனதில் வெகு நாட்கள் நீடிக்கும் கதை. கண்ணீரோடு தான் படிக்க முடிஞ்சது! கதையை நல்லா இருக்குனு சொல்லிட்டுச் சும்மாப் போறது வெறும் வார்த்தை. மறக்கமுடியாமல் நெஞ்சில் தங்கி இருக்கும் கவிதை இது! கதை அல்ல!

 4. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on April 8, 2016 at 5:21 pm

  கண்களைப்பனிக்கவைத்தக்கதை. இது கதையாய் இருக்காது நிஜமாகத்தான் இருக்கவேண்டும். முனைவர் ராகவன் போன்ற ஆசிரியர்களால் இன்னமும் நமது நாட்டில் கல்வி வாழ்கிறது, வளர்கிறது, நாடும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. கருப்பசாமி மற்றும் கதைசொன்னவர் போன்ற மாணவர்களால் ஆசிரியர்களின் உன்னதமும் புலனாகிறது. ஸ்ரீ சுதாகர் கஸ்தூரி இதுபோன்ற உறவுக்கதைப்பின்னல்களை இங்கே தமிழ் ஹிந்துவில் படைக்கவேண்டுகிறேன்.

 5. S Dhanasekaran on April 9, 2016 at 2:56 am

  கணிதத்தில் உயர் கல்வி பெற்றவன் என்ற முறையில் இச் சிறுகதையின் தளத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. எங்கள் பேராசிரியர் திரு. பஞ்சாபகேசனையும் மற்றும் பிற பேராசிரியர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். கண்ணீரை வரவழித்த கதை. கல்வி வள்ளல்கள்காலத்தைக் கடந்து இந்த ஞாலத்தில் வாழ்க!

 6. mugunthan chari on April 14, 2016 at 5:11 pm

  This is one story I can connect with it totally ! What is the relation between Calculus and Human Life ! The way it is narrated and taken along ….AMAZING !!!! After a long time my eyes have started shedding tears without my knowledge and control !!

 7. R.Ganesan on July 8, 2016 at 4:54 pm

  இந்த கதையையும் அப்போது திரு.சுதாகர்த்தான் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். மிக மிக அருமை. மனதை தொடும், கனக்க வைக்கும் கதை. அதிலும் சில ஆசிரியர்களின் அணுகுமுறை என்றுமே மனதை விட்டு அகலாது. எனக்கும் இப்படி சில ஆசிரியர்கள் அமைந்தனர். அதிலும் தற்போது 93 வயது நிரம்பிய எனது ஆரம்ப பள்ளியின் பிரின்சிபாலை தற்போது பாண்டியில் சென்று சந்தித்து வந்தேன். ஆனால் அவரது நினைவும் சரி அந்த மிடுக்கும் சரி குறையவே இல்லை. அவரைத்தான் நினைவு படுத்தியது இந்த கதை.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*