கட்டாய ஓய்வு [சிறுகதை]

நாகக் கொடி பறந்த கூடாரத்தின் வாசலின் நின்றிருந்த இரண்டு காவல் வீரர்களும் கர்ணனைக் கண்டதும் ஈட்டிகளைத் தாழ்த்தினர். ஒன்பது நாள் போருக்குப் பின்னும் ஈட்டிகள் பளபளவென்றே இருந்ததை கர்ணன் கவனித்தான். சீலையை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தபோது துரியோதனன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். சகுனி காலை நீட்டி ஒரு திண்டில் சாய்ந்து கண்களை மூடி ஏறக்குறைய மோன நிலையில் ஆழ்ந்திருந்தார். துச்சாதனன் ஒரு தூணில் சாய்ந்திருந்தான். அவன் மேலாடை தரையில் கிடந்தது. அவன் கையில் இருந்த மதுக் கிண்ணம் வெறுமையாக இருந்தது. அவன் கண்கள் மிகவும் சிவந்திருந்தன. அருகே ஒரு பீடத்தில் பெரிய தாமிரக் குடுவை இருந்தது.

துரியோதனனைக் கண்டதும் கர்ணன் முகம் வழக்கம் போலவே மலர்ந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக கர்ணனைக் கண்டதும் துரியோதனனின் முகம் எரிச்சலில் முகம் சுளித்தான். ‘எல்லாம் உன்னால்தான் அறிவு கெட்டவனே!’ என்று இரைந்தான். சகுனி கண்களைத் திறக்காமலே புன்னகை புரிந்தார். கர்ணன் ‘ஆம், தவறு செய்துவிட்டேன் துரியா. இனி ஒரே வழிதான் இருக்கிறது, நீ மறுத்தாலும் அதைத்தான் செய்யப் போகிறேன். உன்னிடம் தகவல் சொல்லவே வந்தேன்’ என்றான்.

‘முட்டாளே, நமக்கு காத்திருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை! நீ என்ன, என்ன கிழித்துவிடப் போகிறாய்?’ என்று எரிச்சல் கொஞ்சமும் குறையாத குரலில் துரியோதனன் கத்தினான். ‘நீ மறுக்கக் கூடாது துரியா’ என்று கர்ணன் ஆரம்பித்தான். ‘சொல்லித் தொலை மூடா, பீடிகைக்கெல்லாம் என்ன அவசியம்!’ என்று துரியோதனன் மீண்டும் கத்தினான். கர்ணன் கனைத்தான். ‘வந்து, வந்து…’ என்று ஆரம்பித்தான், ஆனால் தொடர முடியவில்லை. சகுனியின் புன்னகை பெரிதாகியது. அந்தப் புன்னகை துரியோதனனை மேலும் சினம் கொள்ள வைத்தது. ‘பெரிய மதியூகி என்று பேர்தான், சிக்கலை அவிழ்க்க எந்த வழியும் தெரியவில்லை. இதில் புன்னகை வேறு!’ என்று இரைந்தான். துச்சாதனன் அருகே போய் அங்கே இருந்த மதுக் குடுவையிலிருந்து ஒரு கோப்பை காந்தார மதுவை ஊற்றி ஒரே மூச்சில் குடித்தான். துச்சாதனன் உடனே அந்தக் குடுவையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டான்.

bhishma-shot‘நான் மதியூகியாய் இருந்து என்ன பயன், மருகா! நான் சொல்லும் யோசனைகள் ஏற்கப்பட வேண்டுமே? கர்ணனைத்தான் தலைமை சேனாபதியாக நியமிக்க வேண்டும், பீஷ்மர் அவன் தலைமையில்தான் போரிட வேண்டும், பீஷ்மரும் துரோணரும் நீ அரசன் என்ற தோரணையில் ஆணை பிறப்பித்தால் அதை மீற மாட்டார்கள் என்று சொன்னேன், நீயும் கேட்கவில்லை, இதோ இப்போது வந்து தவிக்கும் இந்த மூடனும் கேட்கவில்லையே!’ என்றார் சகுனி.

துரியோதனன் அவர் வார்த்தைகளை பருப்பொருள் போல பாவித்து தன் கையால் அவற்றைத் தள்ளினான். ‘முடிந்து போன கதை மாமா, இப்போது என்ன செய்யலாம்? ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள், நாளுக்கு நாள் நாம் பலவீனமாகிக் கொண்டே போவதை நீங்கள் அறியவில்லையா என்ன! இந்த ஒன்பது நாள் போரில் நம் பக்கம் இரண்டு அக்குரோணி சேனை அழிந்துவிட்டது, அவர்கள் பக்கம் ஒரு அக்குரோணி சேனைதான் நஷ்டம். ’ என்றான்.

சகுனி தன் மோவாயைத் தடவிக் கொண்டார். காலை இன்னும் கொஞ்சம் நீட்டினார். துரியோதனன் சிரமத்துடன் பொறுமையாகக் காத்திருந்தான். ‘எனக்கு மூன்று வழிகள்…’ என்றார் சகுனி.

‘மூன்றா! இங்கே ஒன்றுக்கே வழியைக் காணோம் மாமா, பொறுமையை சோதிக்காதீர்கள், என்னவென்று சொல்லுங்கள்’ என்று துரியோதனன் குறுக்கிட்டான்.

சகுனி கர்ணனைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தார். கர்ணனும் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து அவரைப் பார்த்து புன்னகைத்தான். ‘நீங்களே என் யோசனையையும் சொல்லிவிடுங்கள், எனக்கு வார்த்தை எழும்ப மறுக்கிறது’ என்றான்.

சகுனி ‘ஒன்று இதோ இந்தக் கர்ணனின் வழி. இவனை அழைத்துக் கொண்டு நேராக பிதாமகரின் கூடாரத்துக்கு செல். இவன் அவர் காலில் விழட்டும். அவர் தலைமையில் போரிடுகிறேன் என்று சொல்லட்டும். அவர் சம்மதிக்கும் வரை மன்றாடட்டும். பிறகு நாளை இவன் போரில் நுழைவான், போரின் நிலை மாறிவிடும்’ என்றார்.

துரியோதனன் அவசர அவசரமாக சகுனியை மறுத்தான். ‘மாமா, கர்ணனின் கௌரவத்துக்கு குறைவு வரக்கூடாது’ என்றான். இது வரை மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த சகுனி இப்போது இரைந்தார் – ‘கௌரவம் முக்கியமா, கௌரவர்கள் முக்கியமா துரியா? இன்று நீங்கள் நூற்றுவர் இல்லை, எழுபத்து இருவர்தான்!’ என்று உறுமினார். கர்ணன் பக்கம் திரும்பினார் – ‘நீ என்ன சொல்கிறாய், கர்ணா?’ என்று வினவினார்.

‘சொல்வதற்கு என்ன இருக்கிறது மாமா? இதைச் சொல்லத்தானே நானே வந்தேன்! நீங்கள்தான் இந்த மூடனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்றான் கர்ணன். பிறகு துச்சாதனனின் கையில் இருந்த குடுவையைப் பிடுங்கி தனக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொண்டான். பாதி மூடியிருந்த கண்களைத் திறந்த கர்ணனை வியப்புடன் நோக்கிய துச்சாதனன் ‘நீ எப்போது வந்தாய் கர்ணா?’ என்று கேட்டான். மூவரும் அவனை சட்டை செய்யவே இல்லை. துச்சாதனனின் கண்கள் மீண்டும் பாதி மூடிக் கொண்டன.

‘நான் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன்’ என்று துரியோதனன் உறுமினான். சகுனி ‘இவன் என்ன சம்மதிப்பது? கர்ணா, நீ போய் பீஷ்மரைப் பார்’ என்று கர்ஜித்தார். கர்ணன் துரியோதனன் கைகளைப் பிடித்துக் கொண்டான். ‘நீங்கள் மிச்சம் இருக்கும் இரண்டு வழிகளையும் சொல்லுங்கள் மாமா, அவை எதுவும் சரிப்படவில்லை என்றால் இவன் என்ன சொன்னாலும் நான் போய் பீஷ்மர் காலில் விழுகிறேன்’ என்றான்.

‘கர்ணன் உன் உயிர் நண்பன், அவன் கௌரவத்துக்கு ஒரு குறை வர நீ சம்மதிக்க மாட்டாய், சரி. ஆனால் பீஷ்மரின் கௌரவத்துக்கு குறை வருவதையாவது ஏற்றுக் கொள். அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிடு’ என்றார். துரியோதனன், கர்ணன் இருவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கர்ணன் ‘ஆனா…’ என்று ஆரம்பித்தான். சகுனி அவனை கைநீட்டி இடைமறித்தார். ‘பெரும் வெற்றிகளை அடைய எது தடையாக இருந்தாலும் அதை நீக்க வேண்டும் என்பதுதான் ராஜநீதியின் முதல் விதி. போர் உன் களம்; ராஜநீதி என் களம். உன் களத்தில் நீ போராடு, என் களத்தில் நான். எந்த சிறந்த நிர்வாகியும் இதைத்தான் சொல்வான் கர்ணா! என் இடத்தில் பிதாமகர் மேல் பெரும் அன்பு கொண்ட விதுரன் இருந்தாலும் இதைத்தான் உங்களுக்கு சொல்வான்’ என்று கூச்சலிட்டார். அவருக்கு மூச்சிரைத்தது. துச்சாதனனை நோக்கினார். துரியோதனனே அவருக்கு ஒரு கோப்பை மதுவை கொண்டுவந்தான்.

சகுனி மதுவை கொஞ்சம் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். ‘இப்போது நடப்பது போரே அல்ல கர்ணா, வெறும் நிழல் யுத்தம்.ஒன்பது நாள் போரில் ஒரு மஹாரதி கூட இறக்கவில்லை, அப்பாவி வீரர்கள்தான் இறந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் கூட பீமன் மட்டுமே முழுமூச்சாகப் போரிடுகிறான். இரு தரப்பிலுமே போரிடுவது போல நடிக்கிறோம், அவ்வளவுதான். ஆனால் நம் வியூகங்களும் சரி, நம் பெருவீரர்களுக்கு அளிக்கப்படும் பணிகளும் சரி, அவர்களை விட பலவீனமாக இருக்கிறது, அதனால் நம் இழப்புகள் அதிகமாக இருக்கின்றன. இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஒரு மாதத்தில் நம் படைபலம் பாண்டவர் பலத்தை விட குறைந்துவிடும். நாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்றுக் கொண்டிருக்கிறோம். இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர் தலைமை சேனாதிபதி அல்லாமல் வேறு யார்? அவருடைய திறமையின்மையினால்தான் தோற்றுக் கொண்டிருக்கிறோம். திறமையற்றவரை மாற்றுவதில் என்ன் தவறு?’ என்று கேட்டார்.

துரியோதனன் தயங்கி தயங்கி ‘இருந்தாலும் பிதாமகர்…’ என்று ஆரம்பித்தான். கர்ணன அதற்குள் குறுக்கிட்டான். ‘பிதாமகர், தாத்தா என்றெல்லாம் எனக்கு எந்த உறவும் இல்லை. நான் இதை மூன்றாவது மனிதனாகச் சொல்கிறேன். பீஷ்மரை விலக்கினால் நம் படைகளின் உற்சாகம் குன்றும். துரோணர் போன்றவர்கள் போரில் முழுமூச்சாக ஈடுபடமாட்டார்கள். இவரை விலக்குவதால் நமக்கு கிடைக்கும் பயனை விட ஏற்படும் பலவீனங்கள்தான் அதிகம். இது சரிப்படாது மாமா, நான் சென்று அவர் காலில் விழுகிறேன்’ என்றான்.

துரியோதனன் ‘கொஞ்சம் இரு கர்ணா. மூன்றாவது வழி என்ன மாமா?’ என்றான்.

சகுனி ரகசியக் குரலில் ‘பாண்டவர்கள் அவரை வெல்வதை சுலபமாக்குவது’ என்றார். கர்ணன் திடுக்கிட்டான். துரியோதனன் புரியாமல் தன் புருவத்தைச் சுளித்தான். துச்சாதனன் திடீரென்று சிரித்தான். ‘அண்ணா, மது அருந்துகிறீர்களா?’ என்று கேட்டான். யாரும் அவனை பொருட்படுத்தவில்லை.

‘என்ன சொல்கிறீர்கள், மாமா?’ என்று கேட்டான் துரியோதனன். ‘உன் நண்பனுக்குப் புரியும் வகையில்…’ என்று சகுனி கையை ஆட்டினார். கர்ணன் ‘பீஷ்மர் சிகண்டியோடு போரிடமாட்டார் என்பது ஊரறிந்த ரகசியம். சிகண்டி பீஷ்மரோடு போரிட வரும்போதெல்லாம் துச்சாதனன் பிதாமகருக்கு அரணாக நின்று சிகண்டியைத் தடுத்து நிறுத்துகிறான். அப்படி பீஷ்மரை சிகண்டியிடமிருந்து பாதுகாப்பதை நிறுத்திவிடுவோம் என்கிறார் மாமா’ என்றான்.

‘ஆனால் சிகண்டியால் பீஷ்மரை வெல்ல முடியுமா?’ என்று துரியோதனன் கேட்டான். ‘பேசாமல் இந்தப் போருக்கு பிறகு நீ முடிசூட்டிக் கொள் கர்ணா, அத்தனை கௌரவர்களின் புத்தியும் உன் ஒருவனின் புத்தியும் சமம்தான்’ என்று சகுனி சிரித்தார். கர்ணன் ‘இல்லை துரியா, சிகண்டிக்கு பின்னால் நின்று அர்ஜுனன் அம்புகளைத் தொடுப்பான். ஆனால் முன்னால் நிற்பது சிகண்டிதான், அவனோடு போரிட மாட்டேன் என்று பீஷ்மர் தன் வில்லை கீழே போட்டுவிடுவார். பிறகு பிதாமகரின் இறுதி நிச்சயம்’ என்றான்.

துரியோதனின் முகம் மலர்ந்தது. ‘மாமா, அருமையான யோசனை. இன்னும் எத்தனை காலம் போனாலும் மதியூகத்துக்கு சகுனி என்று உங்கள் பெயர் நிலைத்து நிற்கும். எப்படியோ கர்ணன் களத்தில் இறங்கினால் போதும். பிதாமகர் களத்தை விட்டு நீங்குவதில் நமக்கு பெரிய நஷ்டமில்லை. ஆனால் இதில் நம் கை இருப்பது தெரியக் கூடாது, அப்படி தெரிந்தால் கர்ணன் சொல்வது போல மூத்த பெருவீரர்களின் – அதுவும் குறிப்பாக ஷத்ரியப் பெருவீரர்களின் ஊக்கம் குன்றும், அதற்காக என்ன வேண்டுமோ செய்யுங்கள்’ என்றான். பிறகு கர்ணனை நோக்கி ‘கர்ணா, ஏழு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் நிம்மதியாக உறங்கப் போகிறேன்’ என்று நகைத்தான். கம்பத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த துச்சாதனனை காலால் எற்றினான். துச்சாதனன் அரைத்தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான். ‘மாமா, காந்தார மது ஏன் எப்போதும் இத்தனை கசப்பாக இருக்கிறது?’ என்று கேட்டுக் கொண்டே குடுவையைக் கவிழ்த்து அதிலிருந்த கடைசித் துளிகளை தன் வாய்க்குள்ளேயே விட்டுக் கொண்டான் . துரியோதனன் நகைத்தான். ‘உன் கூடாரத்துக்கு சென்று உறங்கு துச்சா! நாளை உனக்கு வேலை இல்லை ஆனால் பொறுப்பு இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு கூடாரத்தின் உள்ளறை ஒன்றுக்கு சென்றான். துச்சாதனன் தள்ளாடிக் கொண்டே எழுந்து மெதுவாக நடந்து கூடாரத்தை விட்டு வெளியேறினான். எத்தனை போதை இருந்தாலும் அண்ணன் சொல்வதை உடனே நிறைவேற்றும் தம்பியை சகுனி பெருமிதத்தோடு நோக்கினார். வெளியே நின்றிருந்த காவல் வீரர்கள் துச்சாதனனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள்.

கர்ணன் யோசனையில் ஆழ்ந்திருந்தான். திடீரென்று துள்ளி எழுந்தான். ‘அர்ஜுனன் நிராயுதபாணியாக நிற்கும் பிதாமகர் மீது அம்புகளைத் தொடுப்பானா மாமா? முதல் நாளே கிருஷ்ணன் தூண்டி இராவிட்டால் அவன் களத்திலிருந்து விலகி இருப்பான். இன்று கூட அவன் முழுமூச்சாகப் போரிடாததால் கண்ணன் தன் ஆழியை எடுத்துக் கொண்டு பீஷ்மர் மீது பாய்ந்ததை நானே பார்த்தேன். ஒரு முறைதான் இந்த வாய்ப்பு கிடைக்கும், வாய்ப்பை விட்டுவிட்டால் பிதாமகர் தானே வேறு யாரையாவது தன் பாதுகாப்புக்கு நியமித்துக் கொண்டுவிடுவார்’ என்றான்.

சகுனியின் முகத்தில் மீண்டும் ஒரு விஷமப் புன்னகை மலர்ந்தது. ’வா போய்க் கொண்டே பேசுவோம்’ என்றார். வெளியே வந்ததும் ‘ஏற்கனவே கிருஷ்ணனுக்கு உலூகன் மூலம் செய்தி அனுப்பிவிட்டேன்’ என்றார். கர்ணன் ஸ்தம்பித்துப் போய் நின்றான். ‘இந்த நிழல் யுத்தத்தை முடித்து நிஜப் போரை ஆரம்பிக்கத்தான் அவனும் விழைகிறான், கர்ணா! அதனால்தான் அவனே ஆழியோடு பீஷ்மர் மீது பாய்ந்தான். நாளை சிகண்டியை துச்சாதனன் எதிர்க்கமாட்டான் என்று செய்தி அவனைப் போய் சேர்ந்துவிட்டது, அவன் பார்த்துக் கொள்வான்’ என்றார்.

wheel-by-krishna-on-bhishma

‘உங்களைக் கண்டால் சில சமயம் அச்சமாக இருக்கிறது மாமா! நல்ல வேளை நீங்கள் இந்தப் பக்கம்! துரியன் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பான் என்று எப்படி இவ்வளவு சரியாக கணித்தீர்கள்?’

சகுனி எதுவும் சொல்லாமல் ஆகாயத்தை நோக்கினார். நவமியின் நிலவை மேகங்கள் மறைத்திருந்தன. நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் பிரகாசமாகத் தெரிந்தன. அனேகமாக எல்லா கூடாரங்களிலும் விளக்குகள் அணைந்து விட்டிருந்தன. பனைமரக் கொடி பறந்த பீஷ்மரின் கூடாரத்தில் மட்டும் இன்னும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன.

‘நான் கண்ணனை அஞ்சுகிறேன் கர்ணா! அவனுக்கு நான் ஒரு மாற்று குறைவோ, அவன் மதியூகத்துக்கு முன் நான் தோற்றுவிடுவேனோ என்றுதான் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது.’ என்று சகுனி பெருமூச்சுடன் சொன்னார். இருவரும் கொஞ்ச நேரம் மௌனமாக எங்கோ வெறித்தார்கள்.

‘பிதாமகர் மாபெரும் வீரர் மாமா! அவரை இப்படி கவிழ்ப்பது வருத்தமாக இருக்கிறது’

‘ஆம் அவர் பெருவீரர்தான். உன் தலைமையில் உன் கட்டளைப்படி போரிட்டால் அவர் நமக்கு பெரும் ஆயுதமாக இருந்திருப்பார். ஆனால் ஒரு தளபதியாக அவர் தோற்றுவிட்டார் என்பதை உணர் கர்ணா!’

‘இருந்தாலும் அவர் புகழுக்கு எந்தக் களங்கமும் வராமல்…’ கர்ணன் திடீரென்று அமைதியானான். பீஷ்மரின் கூடார விளக்குகள் அணைய ஆரம்பித்திருந்தன. அவரது கூடாரத்திலிருந்து ஆறு பேர் வெளியேறியது மங்கலாகத் தெரிந்தது. அவற்றில் ஒன்று பீமனின் பேருருவம். சகுனி மெல்லிய குரலில் ‘இவர்கள் இங்கே என்ன…’ என்று புருவத்தைத் தூக்கினார்.

சகுனியின் அணுக்கனான விப்ரசேனன் சகுனியை நோக்கி ஓடிவந்தான். அவர் காதில் என்னவோ ரகசியம் பேசினான். பேசி முடித்ததும் சகுனி கசப்புடன் நகைத்தார் – ‘கவலை வேண்டாம் கர்ணா, பிதாமகரின் புகழ் இன்னும் ஓங்கத்தான் போகிறது. ஊரறிந்த ரகசியம்தான். ஆனால் அதை பீஷ்மரின் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறான் இந்தக் கண்ணன். நாளை சூதர் பாடுவார்கள் பார் – பிதாமகரே அவரைத் தோற்கடிக்கும் வழியை பாண்டவர்களுக்கு சொன்னார், இல்லாவிட்டால் அவரை வெல்ல யாராலும் முடியாது என்று!’

*******

7 Replies to “கட்டாய ஓய்வு [சிறுகதை]”

  1. புதியதொரு கோணம். சரளமான நடை! தங்கு தடையின்றி ஓட்டமாய் ஓடுகிறது.

  2. அட! இப்படியும் இருக்குமோ, என எண்ணும் படியான புதிய பார்வை! இது தான் மஹாபாரத கதை சிறப்பு.

  3. “/Really a typical and fantastic approach, to understand the war – Mahabharat”/

    ஆஹா பிரமாதம். உங்களுடைய பதிவு என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது. இதேபோல் பலர் எழுதியிருக்கும் “கதைகளையும்” படித்து புளஹாங்கிதமடைந்து மஹாபாரதப் போர், இராமாயணம், புராணங்கள், மற்றும் இத்யாதி, இத்யாதி பற்றி “புரிந்துகொள்ளவும்”.

    ஐயா, இது கதையய்யா கதை. கதைகள் பொழுதுபோக்கிற்காக.

    உங்களை புண்படுத்துவது எமது நோக்கமல்ல. இந்தப்பதிவு ஒரு வருத்தத்தில் எழுதப்பட்டது என்பதைத் தெறிவித்துக்கொள்கிறேன்.

    உங்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கங்கள்.

  4. மிகவும் அற்புதம் , மகாபாரதம் என்பது ஒரு கதை மட்டும் அல்ல, ஒரு இன்றளவும் ஒரு உயிரோட்டம் உள்ள ஒரு கதை களம் என்பதை நிருபித்து விட்டிர்கள்.

  5. கீதா சாம்பசிவம், பரமசிவம், ராஜகோபாலன், இருங்கோவேள், நாராயணன், பாராட்டுகளுக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *