மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]

பளிங்குமண்டபத்தின் புறத்தே மன்னர்மகன் உதயகுமாரன் நின்றிருந்தான். உள்ளே மணிமேகலை இருப்பது  தெரிந்தது.  அவள்மேனி விளக்கின் ஒளியைப்போலவும், மின்னிக்கொண்டிருக்கும் பொன்னால் செய்யப்பட்ட இளங்கொடியைப்போலவும் அசைந்தது. அந்தப் பளிங்குச்சுவரின் ஊடாகத் தெரிந்த அவளுடைய உருவமானது கைதேர்ந்த ஓவியனால் திரைச்சீலையில் வரையப்பட்ட சித்திரம்போலத் திகழ்ந்த்து.  தான் விளையாடுவதற்குத் திருமகள் தேர்வுசெய்த அழகிய பொம்மை ஒன்றினைப்போல மணிமேகலை விளங்கியதாக அவன் நினைத்தான். அவளது தோற்றம், ஐந்து மலர் அம்புகளை மீன்கொடித் தேரிலிருந்து இளையவர்மீது வீசும் மன்மதன் இவள் உருக்கொண்டு வெடித்துக் கிளம்பியதுபோல இருந்தது..

திரைச்சீலையில் அழகான சித்திரத்தைத் தீட்டிக்கொண்டிருக்கும்போது, அந்தச் சித்திரம் உயிர்கொண்டு எழுந்தால் ஓவியன் அடையும் பெருவியப்பினை உதயகுமாரன் அடைந்தான். தான் கண்டது சித்திரம் அல்ல, தன் சிந்தையை மயக்கும் எழிலோங்கிய மணிமேகலையின் மோக உருவம் என்பதைத் தெளிந்து உதயகுமாரன் பளிங்குமண்டபம் அருகில் சென்றான். அதன் வெளிப்புறச் சுவரைத் தனது கரங்களால் ஆசையுடன் தடவினான். அவன் கைப்படக் கைப்பட மணிமேகலை வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தாள். அவளுடைய இந்தச் செய்கை அவனுக்கு மேலும் போதை ஏற்படுத்தியது.

“சுதமதி. இது என்ன நான் கைதடவும் இடத்திலெல்லாம் படரும் ஓவியம்போலத் தோன்றும்  மணிமேகலை எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டான்.

P“கிரவுஞ்ச மலையைத் தனது வேலால் பிளந்த முருகக் கடவுளைப்போன்று இளமையும், எழிலான தோற்றமும்கொண்ட இளவரசே. மணிமேகலை தன் கண்களால் உன் அழகை அளக்கும் நோக்கமில்லாதவள். பார்த்தால்தானே பிறகு விரும்ப? அவளுடைய வாழ்வின் வினைப்பயனால் தவவாழ்க்கையை மேற்கொண்டவள். கணைபோல் பாயும் சாபங்களை அளிக்க வல்லவள். காமனை வென்ற கற்பின் திண்மையை உடையவள். தெரிந்துகொள்!“ என்றாள் சுதமதி.

“பொங்கி வரும் வெள்ளத்தைத் தடுத்துநிறுத்தி அணையெழுப்ப முடியுமா சுதமதி? அதுபோல என் உள்ளத்தில் பொங்கும் காமத்திற்கு என்னால் அணைபோட முடியாது. அவள் நேர்மையானவள் என்றால் என்ன இப்போது? அவள் நேர்மையானவளாகவே இருக்கட்டும். நான் வருகிறேன்!“

மணிமேகலையை அடையமுடியாததால் கண்களில் பற்றியெரிந்த பொறாமைத் தீயுடன் உதயகுமாரன் கிளம்ப எத்தனித்தான்.

அப்பாடா என்று சுதமதி பெருமூச்சு விட்டாள்.

போனவன், நின்று, திரும்பினான்.

சுதமதி கலங்கினாள்.

“இங்கே வா, சுதமதி “

அரச கட்டளை.

அருகே சென்றாள் சுதமதி.

“ஆமாம், உன்னை வேற்றூரிலிருந்து விஞ்சையன் ஒருவன்கொண்டு வந்ததாகக் ஊரெல்லாம் கூறுகின்றனரே! நீ யார்? உன் கதை என்ன? சொல்லு!“

“வீரக்கழல் அணிந்த வேந்தனே! உன்னுடைய சிறந்த அரசப் பாரம்பரியத்தின் கண்ணி வாழ்க. நீர் தீயவழிகளில் செல்லாத நெஞ்சை உடையவன் ஆகுக. மணிமேகலையுடன் நான் இங்கு வந்துசேர்ந்த கதையைக் கேள்”!” என்று தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

“என் தந்தை ஒரு அந்தணர் ஆவார். வடக்கில் வாழ்ந்து வந்தார். வாழ்க்கைத் துணைவியை இழந்தவர். விரதம் இருந்த பின்னரே உணவு உண்ணும் வழக்கதையுடையவர். நல்ல மழைவளத்தை அளிக்கவல்ல மூன்றுவிதமான வேள்விகளைப் புரிபவர். ஒருநாள் மாருதிவேகன் என்ற பெயருடைய — விண்வெளியில் செல்லும் விஞ்சகன் ஒருவன் என்னைக் கவர்ந்து சென்றான். நானும் அவனுக்கு உடன்பட்டுப் பிழையாக உடலுறவுகொண்டேன். என் தந்தைக்குத் தகவல் கிடைத்தது. தன் மகள் நெறியிலிருந்து வழுவியமைக்கு மனம் வருத்தப்பட்டு என்னை எல்லா இடங்களிலும் தேடத்தொடங்கினார். அப்போது ஒரு யாத்திரீகர் கூட்டம் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து தெற்குத் திசையிலுள்ள குமரிமுனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இந்தக் குமரிமுனை முன்னொரு காலத்தில் இராமன் தனது மனைவி சீதாவைத் தேடிச்சென்றபோது வானரங்களால் பாலமெழுப்பத் தேர்வு செய்யப்பட்ட இடமாகும். அவர்களுடன் சேர்ந்துகொண்டு என் தந்தை இந்தக் காவிரி பூம்பட்டிணத்திற்கு வந்தார். ஒரு வடதேசத்து அந்தணருடன் என்னை இங்கு பார்த்துவிட்டார். என்னை அன்புடன் தழுவி, கதறி அழுதார். நான் நடந்ததைச் சொன்னேன். நான் தவறிப்போனதால் மூன்று தீ மூட்டி வேள்வி புரியும் தகுதியை இழந்தவர் ஆனார். என்மீது இருந்த அன்பினால் என்னைவிட்டு அகலவும் மனமிலாமல் இந்த ஊரிலேயே பிச்சை எடுத்துப் பிழைக்கிறார்.“

“இவ்வாறு அவர் அலைந்துகொண்டிருக்கும்போது, ஒரு நாளில் கூரிய கொம்புடைய மாடு ஒன்று இவருடைய வயிற்றைக் கிழித்தது. குருதிவழியும் குடலை ஒரு அரளிமாலையைப்போலக்  கையில் ஏந்தியவாறு வலிதாளாது சமணர் பள்ளி ஒன்றில் அடைக்கலம் புகுந்து மயங்கிச் சரிந்தார். சேதிகேட்டு நான் அங்கு சென்றேன். எங்களுக்கு அங்கு இருப்பதற்குத் தகுதியில்லை என்பதை வாயினால் மொழியாமல், அங்கிகிருந்த சமணத்துறவிகள் கைச்சாடையால்  எங்களை விரட்டிவிட்டார்கள். கண்களில் நீர் பெருகியது. காப்பதற்கும், அடைக்கலம் அளிப்பதற்கும் ஒருவரும் இல்லாமல் நடுவீதியில் கலங்கி நின்றோம்.””

“பிறகு என்னவாயிற்று? எப்படித் தேறினீர்கள்?”

“திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பதுபோல ஒரு புத்ததுறவி தோன்றினார். சுட்டெரிக்கும் வெயிலிலும் குளிர்போன்ற் இனிமையான முகத்தைக்கொண்டிருந்தார். பொன்போல மின்னும் தூய ஆடையை அணிந்திருந்தார். வீடுதோறும் சென்று பிச்சை எடுக்க, ஒரு பிச்சைப் பாத்திரத்தைக் கையில் வைத்திருந்தார். எங்களுக்கு நேர்ந்த துன்பம் என்னவென்று கேட்டார். சொன்னோம். தன் கையிலிருந்த பிச்சைப் பாத்திரத்தை என் கையில் கொடுத்தார். என் தந்தையைத் தனது கரங்களால் சுமந்துகொண்டு அருகில் இருந்த புத்த துறவிகள் வசிக்கும் சங்கத்திற்கு அந்தத் துறவி எங்களைக் கொண்டுசென்றார். சிகிச்சையளித்து என் தந்தையின் உயிரைக் காப்பாற்றினார். அந்த புத்தத்துறவியின் பெயர் சங்க தருமன் என்று பின்னால் தெரிந்தது.”

“புத்த மதத்தினர் அனைவரும் இப்படித்தான்!“ என்றான் உதயகுமாரன்.

“அதையேதான் சங்க தருமனும் கூறினார். அவர்களுடைய கடவுள் இயல்பாகவே நற்குணங்களை உடையவன். குற்றமற்ற குணத்திற்கு அவன்தான் அர்த்தம். உலகில் உள்ள அனைத்தையும் அறிந்து, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவன். முக்திநிலையை இந்த உலகம் எய்துவதற்காக ஓர் உயர்ந்த குறிக்கோளுடன் தனது தருமச்சக்கரத்தை முறைப்படி செலுத்தி, உலகைக் காப்பவன். காமனை வென்ற அத்தகைய புத்தருடைய பாதங்களைப் பற்றுங்கள். அவனைப் போற்றிப் பாடுவதைத் தவிர வேறு எதுவும் அறியாதவன் என்று அந்தத் துறவி கூறினார், இளவரசே!“ என்றாள் சுதமதி.

எவ்வளவு சொல்லி என்ன பயன்?

அரசகுமாரன் இறுதியாக, “அழகிய சொற்களைப் பேசும் நங்கையே! உன்னுடைய வரலாற்றை அறிந்துகொண்டேன். ஒடிந்து விழுவதுபோன்ற இடையை உடைய இந்த அழகிய மணிமேகலையை அவள் பாட்டி சித்திராபதிமூலம் அடைவேன். இது உறுதி. இப்போது வருகிறேன்”!” என்று சோர்ந்துபோய்க் கிளம்பினான்.

உதயகுமாரன் சென்றபின் மணிமேகலை பளிக்கறைக் கதவைத் திறந்துகொண்டு நிலைதடுமாறாத பார்வையுடைய கயல்போன்ற கண்களுடன் வெளியில்வந்து நோக்கினாள். அவள் பார்வை இளவரசன் சென்ற வழியிலேயே நிலைத்திருந்தது. முகம் வாடியிருந்தது.

“என்னவெல்லாம் கூறியிருப்பான்? கற்பில்லாதவள், தூய தவமற்றவள், வருணக்காப்பு இல்லாதவள், விலைமகள் என்று என்னவெல்லாம் கேவலப்படுத்தியிருப்பானா? இவனது பழிச்சொற்கள் எதையுமே பொருட்படுத்தாமல், என் மனம் ஏன் இவன்பால் செல்கிறது? இதுதான் காமத்தின் இயல்பா? நான் துறவறக் கோலம் பூண்டுள்ளது எல்லாம் வேடம்தானா? இதுதான் உண்மையென்றால், என்னுடைய நேர்மை அழியட்டும்!“ என்று மணிமேகலை வெறுத்துப்போய்க் கூறினாள்.

சுதமதி கூறுவதற்கு என்ன இருந்தது? இத்தனை இளம்வயதில் தன்னுடைய உடல் தேவைகள் எதற்கும் விடைதேடாமல் இப்படித் துறவியாய் நிற்கும் ஓர் இளம்பெண்ணின் உள்ளம் எவ்வளவு பாடுபடும் என்பது சுதமதிக்குத் தெரியாமல் இல்லை.

அப்பொழுதில் புகார் நகரத்தில் நடைபெற இருக்கும் இந்திர விழாவினைக் காண, மணிமேகலா என்ற பெயருடைய பெண்தெய்வம் ஒன்று வான்வழியாகப் பளிக்கறை மண்டபத்தில் உள்ள பத்மபீடத்தை வணங்க வந்தது. அந்தப் பத்மபீடத்தை மூன்று முறை வலம்வந்த பின்பு வானில் ஓங்கி நின்று துதிக்கத் தொடங்கியது.

“அறிவில் சிறந்தவனே! தூய்மையானவனே! புண்ணியம் அளிப்பவனே! முன் தோன்றியப் பழமையனே! இந்த உலகில் துறவுமூலம் உயர்ந்தவனே! இவ்வாறெல்லாம் உன்னைப் புகழ்வேனோ? மானிடரிடம் தோன்றும் குற்றங்களை அழிப்பவனே! குரோதத்தைக் களைந்தவனே! முற்றும் தெரிந்த ஞானியே! காமனை வென்றவனே! அனைவருக்கும் இன்பம் நல்குபவனே! தீய ஒழுக்கத்தை வேரோடு சாய்த்தவனே! இவ்வாறெல்லாம் உன்னைப் போற்றுவேனோ? ஆயிரம் ஆரங்களைக்கொண்ட திருச்சக்கர ரேகைகொண்ட உன்னுடைய சிவந்த திருவடிகளை என்னுடைய ஒற்றை நாவினால் பாடுவது எங்கனம்? ஆயிரம் நாவுகள் வேண்டாவோ?”

இவ்வாறாக வானிலிருக்கும் ஒரு மாணிக்கப் பூங்கொடிபோன்ற் மணிமேகலா தெய்வம் நிலத்தின்மேல் எழும்பி அசைந்து நின்று தனது நாவினால் போற்றியது.

இவை இவ்வாறிருக்கப் புகார் நகரில் அந்திப்பொழுது தோன்றியது. எப்படிப்பட்ட புகார்நகரம் அது? தனது வனப்பு முழுவதையும் பாடுவதற்குப் புலமையுள்ள புலவன் ஒருவன்கூட இல்லாமல் வாடும் அழகிய பெண்ணைப்போன்று அதிக வனப்புமிக்கது. அந்தப் புகார்ப் பெண்ணின் பாதங்கள் இரண்டும் ஆழமான அகழிகளாகும். அந்த அகழிகளில் மிதக்கும் மலர்கள், அவளது காற்சிலம்புகளாகும். அந்த மலர்களில் அமர்ந்து பண்ணிசைக்கும் பறவைகளின் சிள் ஒலி சிலம்பின் ஓசையாகும். புகார்ப்பெண்ணின் இடையில் உள்ள மேகலை, அந்த ஞாயில் என்ற ஏவறைகளைக்கொண்ட  மதில்களாகும். அந்தப் புகார்ப்பெண், நகரின் கோட்டையில் உள்ள வாயிலின் இருபக்கமும் நீண்டுயர்ந்த தோரணக்கம்பங்கள் என்னும் இரண்டு தோள்களை உடையவள். தருக்கோட்டம், வச்சிரக்கோட்டம் என்று இரண்டு எதிரெதிர் அமைந்த கோட்டங்களைத் தனது மார்பகமாகக்கொண்டவள். ஆத்தி மாலையணிந்த சோழமன்னர்கள் வழிவழியாக வணங்கும் திருக்கோவில் என்னும் அழகிய முகத்தையும் உடையவள் அந்தப் புகார்ப்பெண்.

அத்தகைய புகார்ப்பெண்ணைக் காண வேறொரு பெண்ணும் வந்தாள். அவள் யார்? இந்தப் பெண் வந்தபோது ஒரு பெண் அன்னம் தன்னை மறந்து, ஒரு பெரிய தாமரைமலரில் விளையாடிக்கொண்டிருந்தது.

ஓய்வெடுக்க வேண்டுமென்று  பெண் அன்னம் கண்ணயர்ந்த பொழுது, தாமரை தனது பெரிய இதழ்களால் பெண் அன்னத்தை மூடிக்கொண்டது. துணையைக் காணாத அன்னச்சேவல் தாமரை இதழ்களைக் கிழித்துப் பெண் அன்னத்தை மீட்டு, அருகிலிருந்த தென்னங்கீற்றின்மேல் சென்று ஓய்ந்தது. கதிரவன் மறைந்ததும், பெண் அன்றில் பறவை ஒன்று மெல்லிய குரலில் வரப்போகும் மாலைப்பொழுதைத் தனது சேவலுக்கு அறிவித்தது. செந்நிறக் கால்கள்கொண்ட அன்னங்கள் உலாவும் காட்டினில், செந்நிறப்பசுக்கள் குவளை மலர்களை வயிறுமுட்ட மேய்ந்துவிட்டுக் கன்றுகளைத் தேடிச்சென்றபடி தன்னிச்சையாகத் தரையில் சொரியும் பாலானது, மேல் எழும் தூசியை அவித்தது. அந்தணர்கள் தங்களது மாலைநேர நியம வேள்விக்கான தீயை மூட்டத்தொடங்கினர். பொன் வளையல்களை அணிந்த மகளிர் தமது கரங்களில் மங்கல விளக்குகளை ஏந்தி வந்தனர். யாழ் வல்லுனர்கள் யாழ்மீட்டி மருதப்பண் இசைக்கத் தொடங்கினர். ஆடுமேய்ப்பவர்கள் தங்கள் வேய்ங்குழலை எடுத்து முல்லைப்பண்ணை இசைக்கத் தொடங்கினர். கணவனையிழந்த பெண்ணைப்போலக் கதிரவன் என்ற தன்னுடைய மணாளனை இழந்த அந்திமாலை என்னும் பெண்ணே அந்த இரண்டாவது பெண்ணாவாள். அந்த அந்திப்பெண் புகார் என்னும் நகரின் அருகில் வந்து தங்கத் தொடங்கினாள்.

***

பின்குறிப்பு: ஒரு காமுகனின் நிலை இந்தக் காதையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. ‘செவ்வியள் ஆயின் செவ்வியள் ஆகுக’ என்பது இளவரசன் என்ற பதவியில் இருக்கும் உதயகுமாரன் என்ற ஆணின் இறுமாப்பைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்தக் காலத்தில் வடக்கிலுள்லோர் தென்திசை நோக்கியும், தென்திசையில் உள்ளோர் வடக்கு நோக்கியும் சென்று புண்ணியத் தலங்களில்  நீராடுவதுபோல அந்தக் காலத்திலும் இருந்ததை மகாபாரதம் சில பாத்திரங்கள்மூலம் கூறியுள்ளது. ஆனால் இந்தக் காதையில் அதனை ஓர் அனுபவமாகவே சாத்தனார் கூறுகிறார். கூடுதலாக ஒரு தகவலையும் தருகிறார். இராமன் தனது காதல் மணவாட்டியை கானகத்தில் தொலைத்துவிட்டு தேடிச் சென்றபோது கானகத்தில் உள்ள வானரங்களின் துணையுடன் சீதை இருக்கும் இலங்கைக்குச் செல்ல கடலில் பாலம் சமைக்க இடம் தேடுகிறான். முதலில் குமரிமுனையில் இடம் தேடி அவனுக்கு வானரங்கள் உதவின என்ற இராமாயணச் செய்தி ஒன்று வருகிறது. குமரிமுனை மணிமேகலைக் காலத்திலிருந்தே புண்ணிய நீராடும் இடமாக இருந்திருந்தது என்பதை அறியலாம்.

பார்ப்பன குலத்தில் பெண்கள் கற்புநிலை பிறழ்ந்தால் தந்தைமார்களுக்கு வேள்வித்தீ மூட்டப்படும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்ற தகவலும் இந்தக் காதையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல இப்போதைய வேற்றுமதத்தைச் சேர்ந்தோரில் சிலர் தங்கள் மதத்திற்குப் பிறமதத்தினரை மாற்றுவதற்குக் கையில் எடுக்கும் விஷயம் மக்களின் நோயும் அதற்கான சிகிச்சையும் ஆகும். இது புத்தர்காலத்துப் பழைய விஷயம் போலிருந்தது. சுதமதியின் கதை இதனை நிறுவுகிறது. அந்திமாலையின் சிறப்பு, புகார் நகரின் வர்ணனை இவை புலவர் சீத்தலை சாத்தனாரின் புலமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

[தொடரும்]

3 Replies to “மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]”

  1. ///இந்தக் குமரிமுனை முன்னொரு காலத்தில் இராமன் தனது மாணவி சீதாவைத் தேடிச்சென்றபோது வானரங்களால் பாலமெழுப்பத் தேர்வு செய்யப்பட்ட இடமாகும். ///

    “இராமன் தனது மனைவி சீதாவை ….’ என்று இருக்க வேண்டும்

  2. ஐயா ,

    நம் கதைகளை இவ்வலைத்தளத்தில் எப்படி பிரசுரம் செய்யவேண்டும் ?

  3. அன்புள்ள துளஸிராமன் அவர்களுக்கு, உங்கள் படைப்புகளை ஆசிரியர் குழுவுக்கு tamizh.hindu@gmail.com என்ற மின்அஞ்சல் மூலம் அனுப்பவும். அவை பரிசீலித்து பதிப்பிக்கப் படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *