மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

மாதவிதொடுத்த மாலைகளை மணிமேகலை எடுத்துக் குடலில் வைக்கும்போதுதான் வசந்தமாலை கிளம்பிச் சென்றாள். தன்னைப்பற்றியும், பொய்யாகக் களவாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, மதுரையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட தனது தந்தையைப்பற்றியும், தனது இன்னொரு தாயான கண்ணகியின் சீற்றத்தையும்பற்றியும் தன் அன்னை மாதவி கூறிய அனைத்தையும்  மணிமேகலை கேட்டுக்கொண்டிருந்தாள்.

இன்னும் மலராத தனது வாழ்வுகுறித்த அச்சம் அவள் நெஞ்சினில் மூண்டது. கணிகையர் இல்லங்களில் பிறந்த பெண்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒருவழி பாட்டி சித்திராபதி கூறுவதுபோல சகல கலைகளையும் கற்றுக்கொண்டு பேர்பெற்ற கணிகையாக ஆடம்பரவாழ்வு வாழலாம், அல்லது அம்மாவைப்போல இளம்வயதில் துறவு மேற்கொண்டு புத்தபிக்குணியாக சமயவிற்பன்னர்களுடன் ஊர் ஊராக மதம்பரப்பச் செல்லலாம். இரண்டுமே ஒரு பெண்ணிற்கு இரண்டு உச்சங்களைத்தொடும் வாழ்க்கை. இதற்கு இடையில் ஒரு வாழ்க்கை உள்ளது. உரியபருவத்தில் காதல்மணவாளன் ஒருவனைக் கைப்பிடித்து, வேதியர் வேள்விவளர்த்து, தீவலம்வந்து, இல்லறம்தொடங்கும் வாழ்க்கையே அது.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

சிறந்த இல்லறத்தில் வாழும் பெண்களுக்கு அந்த இல்லறத்தைவிட முக்திகொடுக்கும் பேறு வேறு ஏது? ஒன்றா, இரண்டா, வாழ்க்கைக்கு எத்தனை நல்ல செய்யுள்களை அந்தப் பொய்யாமொழிப் புலவர் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்? வாழ்க்கைத் துணைநலம், விருந்தோம்பல் — இந்தப்பிறவியில் தன்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வாழ்க்கை அது. தந்தையும் கண்ணகித்தாயும் உயிருடன் இருந்தாலாவது அவர்களை அண்டி வாழலாம். ஆனால் இருவரும் இறந்துபட்ட பின்பு, இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு தன்மேல் பரிதாபப்பட்டு, ஒருவன் வந்து கடிமணம்புரிவான் என்பதில் மணிமேகலைக்கு நம்பிக்கையில்லை. ஏன் தனக்காக இன்னொருவன் பரிதாபப்படவேண்டும்? மாதவித்தாய் அப்படிப்பட்ட பெண் அல்லவே! அவளது ஊடலின் காரணமே தன்னக வெளிப்பாடுதானே? பிறகு ஏன் தான்மட்டும் அடுத்தவன் பரிவைவேண்டிக் காத்திருக்கவேண்டும்? இருப்பினும் வாழ்வின் கால ஓட்டத்தின் நீளம் அவளை வெருட்டியது. அவளையறியாமல் கண்களில் ஆறாக நீர் கிளம்பி, கீழே தொடுக்கபட்டிருந்த மாலைகளில் விழுந்தது.

மாதவி நிமிர்ந்து மணிமேகலையின் முகத்தைப் பார்த்தாள்.

“பேதைப் பெண்ணே! எதற்காக கண்ணீர் வடிக்கிறாய்?””

தனது முந்தானையை இழுத்து, மணிமேகலை முகத்தைத் துடைத்துக்கொண்டாள். மாதவி தனது சிவந்த கரங்களால் மணிமேகலையின் கண்களைத் துடைத்து, மையைத் திருத்திவிட்டாள்.

“எத்தனைமுறை சொல்லியிருக்கிறேன், நீ எதற்கும் கலங்கக்கூடாது என்று? பெண்களின் பலவீனம் கண்ணீர் இல்லை, மணிமேகலா! உறுதியும், கற்புமே அவர்களுடைய பலம். நீ ஒரு பலவீனமான கோழையாக இருக்கவிரும்புகிறாயா? அல்லது கற்பின் திண்மையுடன் ஒரு சிறந்த பிக்குணியாக இருக்கவிரும்புகிறாயா?”

“நம்மைப்போன்ற் பெண்களுக்கு கற்பின் திண்மை எங்கிருந்து அம்மா வரும்?”

“எனக்கு வரவில்லையா? சான்றாக உன் தாய் உன் கண்முன் தெரியவில்லையா? மனதின் உறுதியை எப்போதும் இழக்கக்கூடாது, மணிமேகலா”!”

“உனக்கென்னம்மா? நீ தந்தையுடன் ஒரு நயமான இல்லறவாழ்வை வாழ்ந்துவிட்டாய். என்னையும், என்போன்ற பருவத்தில் உள்ள கணிகையர்வீதிப் பெண்களையும் எடுத்துக்கொள். எங்களுக்கு வேறுகதி ஏது?””

மணிமேகலையின் வினாவிற்கு விடைகிடைக்காமல் மாதவி சிறிதுநேரம் தடுமாறிப்போனாள். மனமுவந்து, புத்தசமயத்தை தழுவித் துறவுவாழ்க்கை வாழ்வது என்பது வேறு, வேறுகதி இல்லையென்ற நிலைக்குத் தள்ளப்பட்டு துறவுவாழ்வை மேற்கொள்வது என்பது வேறல்லவா? ஆசையே மீண்டும்மீண்டும் பிறவிகளைக் கொடுப்பதாக அல்லவா அந்தப் போதிதரும புத்தர் பெருந்தகை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்! ஆசைகளை மென்மேலும் வளர்த்துச்செல்லும் இல்லறவாழ்க்கை வேண்டாம் என்று தன் மகளைத் தான் பலவந்தப்படுத்த முடியாதுதான்.  ஆனால் இப்போது இவள் வாழ்க்கையை நேர்படுத்தாவிடில் தனது காலத்திற்குப் பின்பு மீகாமன் இல்லாத கப்பலைப்போல மணிமேகலை தடுமாறக்கூடாது.

 ‘அதனால்தான் கண்ணே உன்னைத் துறவியாக மாற்றச் சம்மதித்தேன்,’ என்று உள்ளுக்குள் புழுங்கினாள் மாதவி.

வாழ்க்கை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருவேறு கூறாக ஏன் அமைந்துவிட்டது? இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்து வைத்துச் சென்றது யார்?

“சரி அதைப்பற்றிப் பிறகு பேசுவோம். உன் கண்ணீர்த் துளிகள் பட்டு, இந்தப் பூமாலைகள் புனிதம் இழந்துவிட்டன பார், மணிமேகலா! மீண்டும் மலர்வனம் சென்று, புதிய மலர்களைப் பறித்துக்கொண்டு வா. புதிய மாலைகள்தான் தொடுக்கவேண்டும்!“ என்றாள் மாதவி.

மலர்வனத்திற்கு மணிமேகலையை மாதவி தனியாக அனுப்பப்போகிறாள் என்றதும், அருகிலிருந்த சுதமதி பதறிவிட்டாள்.

“மலர்வனத்திற்கு மணிமேகலையைத் தனியாக அனுப்புவதா? வேண்டாம். சொன்னால் கேளுங்கள். இவள் அடிக்கடி தன்னுடைய தந்தைக்கும், கண்ணகி தாய்க்கும் நேர்ந்த அவலத்தை எண்ணியெண்ணிக் கண்ணீர் வடிப்பாள். நீலமலர்களைத் தாங்கிய தண்டினைப்போல அவள் கண்ணீர்க்கோடுகள் தெரியும். இது போதாதா, காமவேள் தனது மலர்க்கணைகளை கீழே போட்டுவிட்டு ஓட? அவன் கதியே இதுவென்றால் உறுதியில்லாத ஆடவர்கள் இவளைக் காணநேர்ந்தால் என்ன ஆவது? இவளைத் திரும்பிப்பார்க்காதவனைச் சோதனைசெய்தால் அவன் நிச்சயம் ஒரு பேடியாகத்தான் இருப்பான். வேண்டாமம்மா, இவளைத் தனியாக அனுப்பவேண்டாம்.””

“ன்ன பேசுகிறாய், சுதமதி? இளம்வயதுப் பெண்கள் ஆடவர் கண்களிலேயே படக்கூடாது என்றால் பிறகு பெண்கள் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கத்தான் வேண்டுமா? மேலும் இவள் துறவிக்கோலம் பூண்டவள்தானே?” என்றாள் மாதவி, சீற்றத்துடன்.

“என் கதை அறிந்துமா மாதவி நீங்கள் இவ்வாறு கூறுவது?””

“அப்படி என்ன கதை சுதமதி, உன்னுடையது?” என்றாள் மணிமேகலை ஆவலுடன். இப்போது அவள் கொஞ்சம் சிந்தைதெளிந்திருந்தாள்.

“இருபிறப்பாளர் என்று அறியப்படும் பார்ப்பணகுலத்தில் கௌசிகன் என்ற பார்ப்பணருக்கு மகளாக, காராளர் ஆட்சிசெய்யும் சண்பை என்ற ஊரில் பிறந்து, இளம்பருவம் எய்தியிருந்தேன். இதேபோன்று அப்போதும் புகார்நகரில் இந்திரவிழா எடுக்கப்பட்டு, ஊரெல்லாம் கோலாகலமாக இருந்தது. பல்வேறு தேசத்திலிருந்து மக்களும், தேவர்களும், வானவர்களும் கூடியிருந்தனர். இந்தப் பெருவிழாவைக் காண விஞ்சையன் ஒருவன் வந்தான். மாருதிவேகன் என்பது அவனுடைய பெயர். மலர்வனத்தில் மலர்கொய்யும் என் அழகில்மயங்கி, என்னைத் தன்னுடன் கொண்டுசென்று இன்பம்துய்க்க விரும்பினான். நானும் உடன்பட்டேன். கண் இமைக்கும் நொடியில் எல்லாம் முடிந்துவிட்டது. காரியம் முடிந்ததும் என்னை விட்டுவிட்டு அவன் பறந்துபோய்விட்டான்.”

“அடப்பாவி!“ என்றாள் மாதவி.

“இதற்குதான் மணிமேகலையைத் தனியாகச் செல்லவேண்டாம் என்றேன். மேலும் மலர்வனத்திற்குத் தனியாகச் செல்லுதல் முறையன்று.“

“ஏன்?” என்றாள் மணிமேகலை.

“இலவந்திகையைச் சுற்றியுள்ள இடத்தில்தான் மலர்வனம் உள்ளது. இலவந்திகையின் பெரிய மதிலை அடுத்து, பெரிய மரக்கம்புகளை நட்டு, குளிர்ந்த மலர்களைப் பரப்பிப் பந்தல்கள் போட்டிருப்பார்கள். இராஜாங்கத்தின் பாதி வேலையாட்கள் அங்குதான் இருப்பார்கள். இருபத்தெட்டு நாளும் இந்திரனுக்குரிய விழா என்பதால் விழா எடுக்கப்படும் இடத்திற்குத் தேவர்களை அன்றி மக்கள் செல்லமாட்டார்கள். மேலும் அங்கு தேவர்கள் கொண்டுவந்த வாடாத மலர்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலைகள் மிகுதியாக அடுக்கி வைக்கப்பட்டிற்கும். காவலுக்குப் பூதம் ஒன்றும் இருக்கும். அந்த பூதத்திடம் சிக்கிக்கொண்டால் நமது கதி அதோகதிதான். இதை அறிந்தவர்கள் அந்த மலர்வனம் செல்லமாட்டார்கள்.””

“அந்த மலர்வனம் வேண்டாம். வேறு வனங்களே இல்லையா, இந்தப் புகார் நகரில்?”” என்றாள் மாதவி.

“ஓ! இருக்கிறதே, மாதவியம்மா! தனது சிறகை விரித்துப் பரப்பியபடி கதிரவன் அருகில் சென்றதால், தனது சிறகுகளை இழந்த சம்பாதி என்ற கழுகு வாழ்ந்த சம்பாதிவனம் உள்ளது. காவிரியின் தந்தையான கவேரன் என்ற மன்னன் இருந்த கவேரவனம் உள்ளது. ஆனால், அத்தகைய வனங்களில் வயதுமுதிர்ந்த, காலத்திற்கு மிகவும் முற்பட்ட பெண்தெய்வங்கள் உள்ளதால் மக்கள் அந்த வனங்களுக்குச் செல்ல அஞ்சுவர்.”

“என்ன இது, சுதமதி? ஒவ்வொரு மலர்வனத்தைப்பற்றியும் ஒவ்வொரு கதை கூறுகிறாய்? அப்படியென்றால் புத்ததேவனுக்கு மாலைகள்தொடுக்கத் தேவையான மலர்களைப்பறிக்க ஒரு மலர்வனம்கூடவா இந்த நகரில் இல்லை?”

“ஒ இருக்கிறதெ! அருளும், அன்பும்கொண்டு இந்த உலகத்து உயிர்களை உய்விக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தையுடைய பகவான் புத்தரின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து, பல குளிர்ந்த வண்ணமலர்கள் பூக்கும் மலர்வனம் ஒன்று உள்ளது. அதன் பெயர் உவவனம்.“

அந்த உவவனம் குறித்து அறிய மற்ற இருவரும் ஆவலானார்கள்.

சுதமதி மாதவியைப் பார்த்து உவவனத்தின் சிறப்புகளை மேலும் விவரிக்கத் தொடங்கினாள்.

“மரங்களும், பூஞ்செடிகளும், மலர்க்கொடிகளும் கதிரவனின் வெப்பம் பூமியில் தெரியாமல் அடர்ந்திருக்கும் வனம் அது; அந்த உவவனத்தில் ஒரு பளிங்கு மண்டபம் உள்ளது. அதன் அமைப்பு மிக விநோதமானது. உள்ளே இருப்பவர்கள் யாரென்று வெளியிலிருந்து பார்த்தால் தெரியும். ஆனால் உள்ளே இருப்பவர்கள் பேசுவதைக் கேட்க இயலாது. அப்படி ஓர் அமைப்பினைக்கொண்ட மதில்களால் எழுப்பப்பட்ட பளிங்குமண்டபம் அது.””

“ஆச்சரியமாக இருக்கிறதே!“ என்றாள் மாதவி.

“பிரகாசமாக வெளிச்சம்தரக்கூடிய தூயமாணிக்கக்கற்கள்மூலம் அந்த மண்டபம் ஒளிவிட்டுக்கொண்டிருக்கும். அந்த மண்டபத்தினுள் ஒரு தாமரை பீடிகை உள்ளது. அதன் பீடத்தில் அரும்புகளை வைத்தால் எத்தனை நாட்கள் ஆயினும் அவை மலராமல் அரும்புகளாகவே இருக்கும்.”

“உண்மையாகவா?” என்ற மணிமேகலையின் குரலில் பேதைமை இருந்தது.

“அந்த அரும்புகளை வண்டுகள்கூட மொய்க்காது. அட! இன்னொரு சேதி சொல்லமறந்துவிட்டேன். நாம் எந்தத் தெய்வத்திற்கு மலர்களைக் காணிக்கையாக இடவேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்தத் தெய்வத்தை மனதில் தொழுதபடி இந்தப் பத்மபீடத்தில் மலர்களை வைத்தால் அந்த மலர்கள் நாம் நினைக்கும் தெய்வங்களில் பாதங்களைச் சென்றடையும்.”

“இது எப்படி நடைமுறைப்படும்?” என்றாள் மாதவி.

“சொல்கிறேன். ஒரு செயலைச் செய்யவேண்டும் என்ற நினைப்பு எதுவுமில்லாமல் செய்யப்படும் செயலின் விளைவு ஒருவனை நிச்சயமாக வந்துசேரும் என்று நம்புவர்கள் வருத்தப்படும்படியும், நினைப்பின்றிச் செய்யும் செயல்களின் விளைவு ஒருவனை வந்துசேராது என்று எண்ணுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும் வகையிலும், முன்பு மயன் எனப்படும் தச்சன் அமைத்த தாமரைப் பீடம் அது.  எனவே, இதுபோன்ற அதிசயங்கள் நடைமுறைப்படுவதில் வியப்பேதும் இல்லை”.”

“ஓ! இவ்வளவு சேதிகள் அந்த உவவனத்தில் இருக்கிறதா? தெரியாமல்போயிற்றே?” என்றாள் மாதவி.

“இதனால்தான் அவளைத் தனியாக அனுப்பவேண்டாம் என்றேன். வா, மணிமேகலா! நானும் உன்னுடன் உவவனம் வருகிறேன்,“ என்று சுதமதியும் மணிமேகலையுடன் கிளம்பினாள்.

இருவரும் தேரோடும் பெரியவீதியில் நடந்து உவவனம்நோக்கிச் சென்றனர்.

அப்போது அங்கு ஒரு சமணத்துறவி தோன்றினார். அவர் தோளில் ஒரு உறி தொங்கிக்கொண்டிருந்தது.  அந்த உறியில் நீர்நிரம்பிய குண்டிகை(கமண்டலம்) இருந்தது. கையில் நன்குதிரண்ட நீண்ட பிரம்பு ஒன்று இருந்தது. அரந்தாணம் என்ற அருகன் கோவிலிலிருக்கும் துறவியாவார் அவர். சமணத்துறவி என்பதால் அவர்கள் வழக்கப்படி ஆடையையும் நாணத்தையும் (தான் என்ற அகந்தையின்மையால் இங்கே ‘நான்’ இல்லை) துறந்திருந்தார். கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய கிருமிகள் தான் நடந்துசெல்வதால் அழிந்துவிடுமோ என்று அவற்றிற்காக வருத்தப்பட்டு ஏங்கிச் சென்றுகொண்டிருந்தார். உண்ணாநோன்பிருப்பதால் மெலிந்த தேகத்தை உடையவராகவும், நீராடாத மேனியை உடையவராகவும் விளங்கினார்.

அங்ஙனம் வந்துகொண்டிருந்த சமணத்துறவியை ஒரு கள்ளுண்ட மனிதன் எதிர்கொண்டான். அவன் குரலில் ஒருவித எள்ளல் துலங்க, “அடிகளே, வாருங்கள். என்னுடைய வணக்கங்கள். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். ‘இந்த உயிர் உடலில் புகுந்து எத்தனை அவதிப்படுகிறது? அப்படிப்பட்ட உயிர் புழுக்கமான அறையில் அடைபட்டு அவதிப்படாதவண்ணம் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் இன்பத்தைதையும், அதற்கும் மேலாக பிறப்பற்ற முக்தி நிலையினையும் தரவல்லது இந்தக் கலத்தில் இருக்கும் கள்,’ என்று என்னுடைய தலைவன் ஒருவன் கூறினான். தென்னம்பாளையின் மடலைக் கீறியதால் சொட்டும் இந்தத் தேறலைப் பருகுவதால் கொலைபாதகம் வந்துசேருமா, என்ன? நீங்கள் சொல்லுங்கள், அறிய தவமுடைய சான்றோரே! இந்தக் கலயத்திலுள்ள கள்ளைப் பருகி, உண்மையைக் கண்டு, எனக்கு உரையுங்கள். நான் சொல்வது தவறென்றால் என்னையும், கள்ளையும் புறந்தள்ளுங்கள். இந்தாருங்கள், குடியுங்கள்.!” என்று அந்தக் குடிகாரன் சமணத் துறவியை வழிமறித்தான்.

அவன் பின்னால் பலர் நின்று அவனையும் துறவியையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

மணிமேகலையும் சுதமதியும் இருவரையும் கடந்து சென்றனர்.

இன்னொரு வேடிக்கையான மனிதன் எதிர்பட்டான். அரளிப்பூமாலை ஒன்றை அணிந்திருந்தான். அதற்குமேலே எருக்கம்பூமாலை ஒன்றையும் அணிந்துகொண்டிருந்தான்.  துண்டுத் துணிகளை மரக்குச்சிகளால் சேர்த்துக் கட்டபட்டிருந்த மேலாடை அணிந்திருந்தான். மேனிமுழுவதும் திருநீறும் சந்தனமும் பூசிக்கொண்டிருந்தான். போவோர்-வருவோரிடம் வீணான வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தான். ஒருசமயம் அழுதான்; தொழுதான்; அரற்றினான்; கூவினான். மற்றொரு சமயம் ஓடினான்; பிறகு ஒரு ஓரமாக நின்றுகொண்டே இருந்தான்; தனது நிழலைப் பார்த்துவிட்டு அதனுடன் சண்டைக்குச் சென்றான். அவனுடைய இந்தப் பித்துக்குளித்தனங்களை கண்டு மனம்வருந்தி அவன் பின்னர் பலர் கூடியிருந்தனர்.

மணிமேகலையும், சுதமதியும் அவர்களையும் கடந்து சென்றனர்.

அவனுக்கு சுருண்ட தாடி இருந்தது. கருமையான கூந்தல் இருந்தது. தனது இதழ்களில் சாயம் பூசிக்கொண்டு பவளம்போன்ற சிவந்த  இதழ்களில் வெண்ணிறப் பற்கள் தெரியும்படியான முறுவல் பூத்து நின்றது. அவன் கண்கள் ஒளிமிகுந்து, இமைகளில் மயிர்க்கால்கள் மிகுந்து தெரியுமாறு ஒப்பனை செய்துகொண்டிருந்தான். வெள்ளைச் சங்கினால் செய்யப்பட்ட தோடுகளைக் காதில் அணிந்திருந்தான். கரியதாய் வளைத்து எழுதப்பட்ட புருவம் பிறைபோன்ற அழகிய நெற்றியில் நன்கு இலங்கியது. விரல்களில் செஞ்சாயம் பூசிக்கொண்டிருந்ததால், அவை காந்தள் மலர்களைப்போலத் தெரிந்தன. மார்பில் செய்திருந்த ஒப்பனை காரணமாக அவன் முலைகள் எடுப்பான தோற்றத்துடன் விளங்கின. அகலமான அல்குலையும், துடியிடையையும் அவன் கொண்டிருந்தான். அத்தகைய தோற்றத்தையுடைய பேடிமகன் ஒருவன் கூத்தாட ஆரம்பித்தான். நீள்விசும்பு அளந்த நெடியோனாகிய திருமாலின் மகனான காமவேள், முன்நாளில் வாணர்கள் தனது மகன் அநிருத்தனை சிறைபிடித்துச் சென்றபோது, அவனை மீட்கும்பொருட்டு, தன்னை ஒரு பேடிபோல வேடமிட்டு ஆடிய கூத்தினை அந்தப்பேடி ஆடிக்காட்டினான். அந்த ஆட்டத்தைக் காண பலர் கூடிநின்றனர்.

மணிமேகலையும் சுதமதியும் அவர்களையும் கடந்து சென்றனர்.

வீடுகள் எல்லாம் செங்கற்களாலும் சுண்ணாம்பினாலும் எழுப்பபட்டிருந்தன. மதில்கள் உயர்ந்து மாடங்கள் ஓங்கிய மாளிகைகள் மிகுந்து காணப்பட்டன. ஒவ்வொரு மாளிகைச் சுவர்களிலும் சுண்ணாம்பு, வண்ணப்பொடிகள்கொண்டு  வானவர், விலங்குகள், பறவைகளையும், இயற்கைக் காட்சிகளையும் திறமைமிக்க ஓவியர்களைக்கொண்டு வண்ணச் சித்திரங்களாகத் தீட்டியிருந்தனர். அத்தகைய கண்கவர் ஓவியங்களை வாய்பிளந்து ஒரு கூட்டம் பார்த்து நின்றுகொண்டிருந்தது.

“அங்கே பார், மணிமேகலா!“ என்று சுதமதி ஆச்சரியத்துடன் கூவினாள்.

சுதமதி காட்டிய இடத்தில் ஒரு பாலகன் நின்றுகொண்டிருந்தான்.

அந்தக் குமரன், தங்கத்தில் செய்த மணிக்கோவை ஒன்றை அணிந்திருந்தான். அவனது தாய் அவன் தலைமுடியில் வெண்கடுகை அரைத்துப் பூசியிருந்தாள். அந்த முடியைத் துக்கிக்கட்டி, ஒரு சிண்டு போட்டிருந்தாள். அந்தச் சிண்டில், கொக்கியால் கோர்க்கப்பட்ட மூன்று சரங்களையுடைய ஆரம் ஒன்று ஆடிக்கொண்டிருந்தது. பிறைச்சந்திரனைப்போன்று ஒரு சந்திரகலை அவன் உச்சிமுடியில் தொங்கிக்கொண்டிருந்தது. சிவந்த வாயினால் அது அர்த்தம் புரியாமல் மழலைச் சொற்களில் பேசியவண்ணம் இருந்தது. அந்தக் குமரன் வாயிலிருந்து ஒழுகிய ஜொள்ளு நீரானது அவன் கழுத்தில் அணிந்திருந்த ஐம்படைத் தாலியை நனைத்துக்கொண்டிருந்தது. எதை மறைக்கவேண்டுமோ அதை மறைக்காமல் சுற்றப்பட்ட ஆடை மணிக்கோவைகளுடன் அசைந்தாடிக்கொண்டிருந்தன. பாலகன்தானே? உடை ஒழுங்காக அணிந்தாலும் அவசரமாக சுற்றிக்கொண்டு வந்தாலும் அழகாகத் தோன்றுவான் என்ற தாய்மார்களின் இறுமாப்பினால் அவ்வாறு தோன்றினான் போலும்! அவனுடைய தாயானவள் அந்தப் பாலகனை அள்ளி எடுத்து, ஒரு விளையாட்டுப் பொன்தேரின் உச்சியிலிருந்த பொம்மை யானையின் பிடரியில் அமர்த்தினாள். உடனே கூடிய நான்கைந்து பெண்கள், “ஆலின் கீழ் அமர்ந்துள்ள பரமசிவனின் மகனான பாலமுருகனுக்கு விழா எடுக்கப்போகிறோம்! அனைவரும் வாருங்கள்”!” என்று உற்சாகக் குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

இருவரும் உவவனம் அருகில் வந்துவிட்டனர். திடுமென்று ஒரு கூட்டம் அவர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டது. முன்பொரு காலத்தில் விராடதேசத்தில் பேடி உருவில் இருந்த அர்ஜுனனை அறிந்துகொண்ட மக்கள் அவனைச் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்ததுபோல நின்றது.

“நன்றாக இருகின்றதம்மா, மாதவி செய்த காரியம்!“ என்றாள் ஒருத்தி.

“சும்மா தகதகன்னு மின்னுகிறாள். இவளுக்கு தவக்கோலம்போட்டுப் பார்க்கிறாளே இவளுடைய தாய்? நன்றாகவா இருக்கிறது?” என்றாள் மற்றொருத்தி.

“இந்த மலர்வனதிற்குள் மணிமேகலை நடந்துசென்றால் நீர்ப்பொய்கையின் அருகில் விளையாடும் அன்னங்கள் இவளது நடையழகில் மயங்கி தம் நடை தளர்ந்துபோய்விடாதா?” என்றாள் மற்றொருத்தி.

“அங்கே தோகை விரித்தாடும் மயில்கள், இவள் எழிலைக் கண்டு இவளிடம் அழகுக்குறிப்பு கேட்பதற்கு வந்துநிற்கும்”!” என்று ஒருத்தி கூறியதும் மற்ற பெண்கள் கொல்லென்று சிரித்தனர்.

“பைங்கிளிகள் மழலைமொழி பேச, இவளிடம் பாடம்கற்கப் போட்டி போடும்.“

“சும்மா சொன்னதையே சொல்லாதீர்கள். இவள் அழகுகிற்கு உவமை கூறவே முடியாது!“ என்று ஒருத்தி முற்றுப்புள்ளி வைத்தாள்.

நெஞ்சத்தில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய புண்படும் பேச்சினைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் மணிமேகலை சுதமதியுடன் உவவனதிற்குள் நுழைந்தாள்.

மரங்கள் அடர்ந்த வனமாகத் திகழ்ந்தது, அந்த உவவனம்.

குரா, வெண்கடம்பு, குருத்து, கொன்றை, மஞ்சாடி, வகுளம், செம்மையான அடிமரம்கொண்ட வெட்சி, நாரத்தை, நாகம், புன்னை, பிடவக் கொடி, செம்முல்லைச் செடி, வளைந்த முல்லை உடைய தாழை, வெட்பாலை, செருந்தி, மூங்கில், அசோகு, வேங்கை, பெரிய செண்பகம், செந்தழல்போல மலர்கள் நிறைந்த முருக்கைமரம் என்ற இத்தனை மரங்களும் மலர்களைச் சொரிந்து, அந்த வனமானது ஒரு தேர்ந்த ஓவியனின் நேர்த்தியான சித்திரம்போல விளங்கியது.

அந்தப் பேரியற்கை மணிமேகலையை இருகரம்கூப்பித் தொழச்செய்தது. மணிமேகலை அந்த வனத்தைத் தொழுதுவிட்டு சுதமதியுடன் மலர்கொய்ய உள்ளே நுழைந்தாள்.

பின்குறிப்பு : சற்று பெரிய காதைதான். இந்தக் காதையில் ஒரு நகரத்தின் தன்மைகள் சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது. பலவிதமான மக்கள் இங்கே சொல்லப்பட்டிருக்கின்றனர்.  அன்றாட மக்களின் நடைமுறைகள், பழக்க வழக்கங்கள், தோற்றம், நம்பிக்கைகள் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளன.

இலவந்திகை என்ற இடத்தை பற்றி ஒரு குறிப்பு உள்ளது. நூலாசிரியர் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது அந்த இடம் ஒரு பொய்கையாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அரச மக்கள் நீராடும் இடம். அதற்குரிய அலங்காரங்களுடன் விளங்கும் என்பதால் அதனைச்சுற்றி நெடிய மதில் எழுப்பட்டுள்ளது என்று கூறுவதிலிருந்து அறியலாம். காவேரியின் தந்தை காவேரமன்னன் என்பவனைப்பற்றிய குறிப்பு காணப்படுகிறது. சென்ற காதைகளில் காந்தன் என்ற மன்னன் காவேரியைக் குடகிலிருந்து தமிழகத்திற்குக்கொண்டுவந்த சேதியைப் பார்த்தோம். மாருதவேகன் என்ற கந்தர்வனிடம் கற்பிழந்த பார்ப்பணப்பெண்ணைப்பற்றி இந்தக்காதையில்  கூறப்படுகிறது. வானவர் இருபத்தெட்டு நாட்களும் அங்கு வந்து இருப்பார்கள் என்பதனை இப்போது நடக்கும் பூசைகளில் தேவர்களை அவர்களுக்குரிய மந்திரங்கள்மூலம் ஆவாகனம் செய்வதைக்கொண்டு விளங்கிக்கொள்ளலாம். அதேபோல இறைவனுக்குப் படைக்கப்பட்ட மாலைகளைப் பார்த்தாலே சதுக்கப்பூதம் பிடித்துக்கொள்ளும் என்பதும் ஒருவகை அச்சமூட்டுதலாக இருக்கவேண்டும். ஏனெனில் அத்தைகைய பூதங்கள் இப்போது எங்கே சென்றன என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா? சடாயுவின் சகோதரனான சம்பாதியைப்பற்றிய குறிப்பும் கூறப்பட்டுள்ளது.

கூரியர்[Courier] சேவைசெய்வதுபோல ஒரு பத்மபீடத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. காலவெள்ளத்தின் ஓட்டத்தில் இதுபோன்ற் கட்டுக்கதைகள் நில்லாமல் போகும் செயல்மூலம், இப்போது உலவும் குருட்டுநம்பிக்கைகளை எதிர்க்கப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதைத் தவிர, இவற்றைக் குறித்து அதிகமாக கவனம்செலுத்த வேண்டாம். குடிகாரன், பித்தன், மழலையர் குறித்த தகவல்கள் இந்த நூற்றாண்டு வரையில் செல்லுபடியாகும் சேதியாக உள்ளது.

அந்தக் காலத்தில் மக்கள் தங்கள் மாளிகைகளின் வெளிச்சுவரில் வண்ண சித்திரங்களைத் தீட்டி வைத்திருந்தனர் என்பது தெரிய வருகிறது..

(தொடரும்)

2 Replies to “மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]”

  1. அறியாத பல தகவல்கள். அருமை. கதை விறுவிறுப்பாகவும் அதே சமயம் அரிய தகவல்களுடன் செல்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *