பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12

மற்ற பகுதிகளை இங்கே  வாசிக்கலாம்.

தொடர்ச்சி.. 

வெண்மையான மணல் காணும் இடமெல்லாம் குன்றுகளாகக் குவிந்துகிடந்தன. உள்ளே செல்லச்செல்ல அழகிய பூஞ்சோலைகள் இருப்பது தெரிந்தது.. அழகிய குளத்துக் குளிர்ந்தநீரில் சிற்றலைகளின் நடுவே விதவிதமாக நீர்ப்பூக்கள் நிறைந்திருந்தன. மணிபல்லவத் தீவிற்கு குறைச்சல் ஒன்றும் இல்லை என்று எண்ணியபடி மணிமேகலை உலாவினாள்.

மணிமேகலா தெய்வம் தன் முன்தோன்றி தன்னிடம் கூறியவற்றை நினைத்துப்பார்த்த  மணிமேகலை தனது வாழ்வை முன்பே எழுதப்பட்ட நாடகத்தின் ஒரு பகுதியைப்போல உணர்ந்தாள். பூப்பெய்திப் பெண்ணாக மலரும்வரையில் எதைப்பற்றிய சிந்தனையுமின்றி வேளைதவறாமல் உண்டு, விளையாடி, கலைகள் பயின்று வந்தவள்தான் அவள்.

தாய் மாதவி பெரிய போராட்டத்திற்குப்பின் கணிகையர் வீதியிலிருந்து கிளம்பி, புத்தத்துறவிகள் வாழும் இடத்திற்கு வந்துசேர்ந்தபோது அதன் அர்த்தம் புரியாமல் இருந்தாள்.  தாய்க்கோழி தன் குஞ்சுகளை வல்லூறிடமிருந்து காப்பதுபோல மாதவி தன்னை உதயகுமாரன் கைகளிலிருந்து காக்கப் போராடியதை நினைத்து வியந்தாள்.

சலனப்பட்ட தனது உள்ளத்திற்கு மணிமேகலா தெய்வம் ஒரு விடை கூறிவிட்டது. இன்னும் என்னவெல்லாம் தன் வாழ்வில் நடைபெறப்போகிறதோ என்ற வியப்பு மேலிட்டது அவளுக்கு.

அவ்வியப்பு அதிகமாகும்படி, கடவுள்போன்று தோற்றமளிக்கும் தீவதிலகை என்ற பெண்தெய்வம் அவள்முன் தோன்றினாள்.

“வளையல்கள் குலுங்க நடந்துவரும் பொற்கொடிபோன்ற பெண்ணே! மரக்கலம் கவிழ்ந்து அதிலிருந்து தப்பி வந்தவளைப்போலத் தோற்றமளிக்கும் நீ யார்? உன் பெயர் என்ன?” என்று கேட்டாள் தீவதிலகை.

“எந்தப்பிறவியில் நான் யாரென்று கேட்கிறாய்?” மணிமேகலை எதிர் கேள்வி கேட்டாள்.

தீவதிலகை பதில் ஏதும் கூறாமல் மணிமேகலையைப் பார்த்து முறுவல் பூத்து நின்றாள். மணிமேகலையின் முன்பு பத்மபீடம் தோன்றி மறைந்திருக்க வேண்டும். இவள் மற்ற மானிடப் பெண்கள்போலன்றி உயர் நிலையை அடையப் பெற்றவள் என்பது அந்த முறுவலில் தெரிந்தது.

“நீ யார் என்ன என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும் நீ கேட்ட கேள்விக்கு விடையளிக்கிறேன். நான் முந்தைய பிறவியில் ஒரு தேசத்தில் குறுநிலப் பகுதி ஒன்றை ஆண்டுவந்த இராகுலன் என்பவனின் மனைவி இலக்குமியாக இருந்தேன். இந்தப் பிறவியில் ஆடலில் சிறந்து விளங்கும் மாதவி என்ற கணிகையின் மகளாகப் பிறவி எடுத்துக் காவிரிபூம்பட்டினத்தில் வசித்துவருகிறேன். எங்கள் குலதெய்வம் மனிமேகலா என்னை இத்தீவினில் கொண்டுவைத்துள்ளது. பெருமைமிக்க புத்தரின் பத்மபீடத்தைக் இங்கே கண்டு என் பிறப்பின் இரகசியம் அறிந்துகொண்டேன். இதுதான் என் கதை. அழகிய பெண்ணே, நீ யார்? உன் கதை என்ன கூறு,“ என்றாள் மணிமேகலை.

“என் பெயர் தீவதிலகை. அருகில் இரத்தினதீபம் என்ற தீவு ஒன்று உள்ளது. அங்கிருக்கும் உயர்ந்த மலைச்சிகரத்தில் புத்தபெருமானின் பாததடங்கள் உள்ளன. பிறவி எனும் பெருங்கடலைக் கடப்பதற்கு ஒரு தோணியைப்போன்றவை அத்திருவடிகள். நான் அவற்றை வலம்வந்து வணங்கிவிட்டு வந்திருக்கிறேன். நான் இந்தத் தீவின் காவல்தெய்வம். தேவர்களின் தலைவன் இந்திரனால் புத்தபீடத்திற்குக் காவலாயிருக்க அனுப்பி வைக்கப்பட்டவள்.. அறநெறியில் ஒழுகி நிற்பவர்களுடைய கண்களுக்கு மட்டுமே தென்படும் இந்தப் பீடம் சாதாரணமானதல்ல. இதன்முன் நிற்பவர்களுக்குப் பண்டையபிறவி முழுவதும் தெரியவரும்.” என்ற தீவதிலகை, “மேலும் ஓர் அற்புதம் உண்டு,” என்று புதிர் போட்டாள்.

“இன்னும் இதுபோன்ற அதிசயங்கள் இன்னும் எத்தனை உள்ளதோ?” என்று மணிமேகலை மருகினாள்.

“சொல்கிறேன் பெண்ணே, கேள். இந்தப் பீடத்தின் எதிரில் கோமுகி என்ற குளிர்ந்த நீரையுடைய பொய்கை ஒன்று உள்ளது. இளவேனிற்காலத்தில் ஆதவன் வைகாசி மாதம் இடபராசியில் இருக்கும்போது, கார்த்திகை நட்சத்திரத்தை முதலாவதாகக் கணக்கில்கொண்டு ஆருடக் கணக்குப்போடும்போது, பதின்மூன்று நட்சத்திரங்களை விட்டுவிட்டு,  நடுவிலுள்ள விசாக நட்சத்திரத்தில் புத்தர்பெருமானுடன் ஆதவன் இனைந்து காணப்படும்போது அந்தப் பொய்கையின் முன் சென்றுநின்றால், ஆபுத்திரன் என்பவனது கைகளில் இருந்த அமுதசுரபி என்ற அட்சய பாத்திரம் தோன்றும்.“ என்றாள்.

மணிமேகலைக்கு வானசாத்திரக் கணக்கு எதுவும் தெரியாது. மாதவியாகப் பார்த்து இன்று விசாகம், இன்று பூர்ணிமை என்று சொன்னால் கேட்டுக்கொள்வாள்.

“இன்று அதே விசாக நட்சத்திரம்கூயடிய நல்லநாள். பொழுதும் அதே பொழுது. எனவே இப்போது உன் கைகளில் அந்த அமுதசுரபி என்னும் அட்சயப்பாத்திரம் வந்துசேரும். அந்தப் பாத்திரத்தில் இடப்பட்ட அன்னம் வறியவர்களுக்கு எவ்வளவு அள்ளிக்கொடுத்தாலும் குறையாத தன்மைகொண்டது. நறுமணமலர்கள் சூடிய பெண்ணே! நீ இந்தப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, உன்னுடைய ஊருக்குச் சென்று, அங்கிருக்கும் அறவண அடிகளிடம் இதன் கதையைக் கேட்டு அறிந்துகொள்.“

மணிமேகலை தீவதிலகையுடன் சென்று, கோமுகிப் பொய்கையை வலம்வந்து அதன்முன் நின்று வணங்கினாள்.

“பெறுவதுபோல உன் கரங்களைக் குவித்துவைத்துக்கொள்,“ என்றாள் தீவதிலகை.

வெளியில் ஓர் அசைவு தெரிந்தது. பெரிய ஓடு ஒன்று அவளுடைய கைகளில் தோன்றியது. மணிமேகலையின் முகம் மலர்ந்தது. உடல் சிலிர்த்தது. உடனே புத்தர் பெருமானைப் போற்றிப் பாடத்தொடங்கினாள்.mani1

“மாரன் என்ற பகைவனை வென்ற வீரனின் திருவடிகள் வாழி. மானிட உயிர்களின் தீயகுணங்களில் ஒன்றான பகைமையை வேரோடு சாய்த்தவனின் பொன்னடிகள் வாழி. அறநெறிகூறும் பெரியவனின் அடிகள் வாழி. சொர்க்கப் பதவி வேண்டாம் என்று மறுத்தவனின் புண்ணிய அடிகள் வாழி. சிந்தனைக்கு அப்பாற்பட்டவனின் திருவடிகள் வாழி. அறியாமையை அகற்றி அறிவுக்கண்ணைத் திறக்கும் அண்ணலின் திருவடிகள் வாழி. தீய ழிகளைச் செவியாலும் கேளாதவனின் தூய அடிகள் வாழி. சத்தியம்தவறாத நாவினை உடைய கருணைக்கடலின் தூய அடிகள் வாழி. நரகர்களின் துன்பத்தை நீக்கும்பொருட்டு நரகலோகம் சென்றுவந்த நின் பொன்னடிகள் வாழி. நாகங்களின் துயர்நீக்க கருடனுக்கு அறநெறி போதித்த அண்ணலின் பொன்னடிகள் வாழி. உன்னை வாழ்த்தி வணங்குவது என்று தொடங்கினால் அதற்கு ஓர் எல்லையே இருக்காதுக! ஐயனே நீவிர் வாழி!“  என்று கூறிவிட்டுப் போதிமரத்தின் அடியில் வீற்றிருந்த புத்தபெருமானின் பாதங்களைச் சிந்தையில்கொண்டு மனமுருக வேண்டிவணங்கினாள்.

“பசியின் கொடுமையைப்பற்றிக் கூறுகிறேன், கேள்!” என்றாள் தீவதிலகை.

மணிமேகலை செவி மடுத்தாள்.

“பசி, தான் பற்றியவர்களின் உயர்ந்த குடிப்பிறப்பினை அழிக்கும். வாழ்வெனும் மகாநதியைக் கடக்கத் தெப்பமாக விளங்கும் கல்வியைக்கூடப் பசியானது உதவாமல் செய்துவிடும். மானம் என்னும் நல்ல அணிகலனை வீசியெறியும். பெருமை பீற்றிக்கொள்ளும் அழகைச் சிதைக்கும். வீட்டுப்பெண்டிரோடு வீதியில்கொண்டு நிறுத்தும். அத்தகைய கொடிய பசி என்னும் துன்பத்தை நீக்கியவர்களின் புகழைப் பாடும் அளவிற்கு என் நாவிற்குத் திறன் கிடையாது.

“ஒருசமயம் புல்லும் மரமும் புகையும்மளவுக்கு அனல் வாட்டத் தொடங்கியது. எங்கும் வெப்பம். மழைவளம் குன்றியது. உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் உண்பதற்கு உணவின்றித் தவிக்கத் தொடங்கின. அரசபதவியைத் துறந்து பிராமணனாக மாறிய விசுவாமித்திர மகரிஷி அந்த வறியநிலைக்குத் தள்ளப்பட்டு உணவின்றி வருந்தினார். எங்கு தேடியும் உணவெதுவும் சிக்காமல் முடிவில் ஒரு இறந்த நாயின் ஊனினைத் தின்னும் நிலைமைக்குத் தள்ளபட்டார். அந்த உணவை உண்பதற்கு முன்னர், மரபின்வழிகுறித்து, தேவர்களுக்கு அர்ப்பணம் செய்யத் தொடங்கினார். நெகிழ்ந்துபோன இந்திரன் அவர்முன் தோன்றி, வற்றாத மழைவளத்தை வழங்க, மன்னுயிர் பிழைத்தன. பயிர்கள் செழித்தன.

“வறுமையைத் தாங்கிக்கொள்ளும் வளமைபெற்றவர்களுக்கு உணவளிப்பவர்கள் காசுக்காக அறத்தை விற்கும் வணிகர்கள் போலாகிறார்கள். ஆற்றமுடியாத பசித்துயரத்தில் உழலும் வறியவர்களின் பசியைத் தீர்ப்பவர்களின் வழியில்தான் உலகமக்களுக்கான அறநெறிகள் அமையும். இவ்வுலகில் வாழும் வறியவர்களுக்கு உணவளிப்பவர்கள் உயிர் அளிப்பவர்களாகவே கருத்தப்படுவர். இந்த அமுதசுரபியைப் அடைந்ததால் நீ உயிர் அளிக்கப்போகும் வள்ளலாக மாறிவிட்டாய். மாசற்ற நல்ல அறத்தைப் பூண்டிருக்கிறாய்.” என்றது அப்பெண் தெய்வம்.

மணிமேகலை தனது முந்தைய பிறவியில் தனக்கு நேர்ந்த மேலும் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தாள்.

“தீவதிலகை தெய்வமே. போன பிறவியில் என் கணவன் இராகுலன் திட்டிவிடம் என்ற கொடிய நஞ்சுடைய அரவம் தீண்டி உயிரிழந்தான். நானும் வெந்தணல் மூட்டி உயிர்துறக்க எண்ணிய நேரம் எனக்கு ஒரு கனவு வந்தது. சாதுசக்கரன் என்ற சாரணரின் பசியைப்போக்க அவருக்கு நான் உணவு அளிப்பதைப்போலக் கனவுகண்டேன். அதன் பயனோ என்னவோ எனக்கு இந்தப் பிறவியில் இந்த அமுதசுரபி கிடைத்துள்ளது.” என்றாள்

தீவதிலகை முறுவலித்தாள்.

மணிமேகலை மேலும்  தொடர்ந்தாள்.

“உயர்ந்த நாவல்மரங்கள் மிகுதியாகக் காணப்படுவதால் நாவலந்தீவு என்று அழைக்கப்படும் என்னுடைய தேசத்தில் நல்லறங்கள்செய்வதால் வளமையான வாழ்வினைப்பெற்று மாடமாளிகைகளில் வசிக்கும் செல்வந்தர்கள் நிறைய உள்ளனர். அந்தச் செல்வந்தர்களின் இல்லங்களின்முன் நின்று நைந்துபோன கந்தல் ஆடைகளை அணிந்து, மழை வெயில் பாராமல் நிற்கவும் முடியாமல் பிச்சைகேட்டு அழைக்கவும் நாணப்பட்டுப் பசியில்வாடும் வறியவர்கள் பலர் உள்ளனர். பெற்ற குழந்தை பசியால் வாடியவுடன் ஈன்ற தாயின் முலைக்காம்புகள் தானே சுரப்பதுபோல, வறியவர்களின் பசிப்பிணியைக் கண்டு இந்த அட்சய பாத்திரமானது தானே உணவு சுரக்கச்செய்யும் திறனை நேரில் காண விழைகிறேன்.” என்றாள்.

“நல்லவேளை எனக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்தினாய்,” என்று கூறிய தீவதிலகை, மேலும் தொடர்ந்தாள், “இந்தப் பாத்திரத்தின் மற்றொரு திறனையும்  கூற மறந்துவிட்டேன், கேள். அறத்தின் கண் ஒழுகும் தன்மையுடைய அறவோர்களில் சிறந்தவர்கள் முதன் முதலில் இதில் உணவிட்டால் மட்டுமே இந்த அமுதசுரபி வற்றாமல் சுரக்கும் திறனை அடையும். இதனை அறிந்துகொண்டு நீ உன்னுடைய ஊருக்குப் புறப்படு,“ என்றது.

மணிமேகலை தீவதிலகையை வணங்கியபின், அமுதசுரபியைக் கைகளில் ஏந்தியபடி புத்தபெருமானின் பத்மபீடத்தை வலம்வந்து வணங்கினாள். அதன்பின், மணிமேகலா தெய்வம் ஓதிய மந்திரத்தை உச்சரித்தாள்.

தனது உடல் எடையற்றதுபோல மாறுவதை உணர்ந்தாள்.

வான் வழிசென்று தன்னுடைய சொந்தமண்ணான புகாரை அடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டதும், உடலானது பெருவெளியில் காற்றைக் கிழித்தவண்ணம் விண்ணில் பறக்கத்தொடங்கியது. கீழே வெகு தொலைவில் கடல் பெரும் பரப்பில் விளங்கியதைக் கண்டாள். மேகக் கூட்டங்களின் நடுவில் செல்வது அவளுக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

சுதமதிக்கு மணிமேகலா தெய்வம் கூறியதற்கு ஏற்ப ஏழு நாட்கள் சென்றதும், கவலையுடன் இருக்கும் தன் தாய் மாதவி, சுதமதி இருவரின் முன்சென்று நின்றாள்.

“மணிமேகலை! என் கண்ணே! எங்கேயம்மா போய்விட்டாய்? உன்னைக் காணாது இந்த ஏழுநாட்களும் நான்பட்ட வேதனையைச் சொல்லிமாளாது. சுதமதிமட்டும் இங்கு வந்து உன்னை மேகலா தெய்வம் மணிபல்லவத் தீவில் கொண்டு வைத்திருக்கிறது என்ற சேதியைச் சொல்லியிராவிட்டால் நான் உயிர் துறந்திருப்பேன்” என்றாள்.

மணிமேகலை தனது தாயின் வாயித் தனது தளிர்க்கரங்களால் மூடி, ”அப்படிஎதுவும் செய்யக்கூடாது. இந்த ஏழு நாட்களில் என்னென்ன அதிசயங்கள் நடந்தது என்று கேளுங்கள்,“ என்றாள்.

“சொல்லு, மணிமேகலை! அப்படி என்ன காணக்கூடாத கேட்கக்கூடாத அதிசயங்கள்?” என்றாள் சுதமதி.

“பசியாறினாயா, மணிமேகலை?” என்று வினவினாள் அன்னை.

“முற்பிறவியை அறியும் திறன்பெற்ற எனக்கு எதற்கம்மா உணவு? அஹஹ்ஹா!“ என்று மாதவி ஒரு நாடக நடிகையைப்போல முழங்கினாள்.

“இது என்னடி புதுத் திறன் உன்னிடம்? விவரமாகச் சொல்!“ என்றாள் சுதமதி.

முப்பது யோசனை தொலைவில் இருந்த மணிபல்லவத் தீவில் தன்னை மணிமேகலா தெய்வம் வைத்ததிலிருந்து அமுதசுரபிபெற்றதுவரையில் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள்.

“தாயே! நீங்கள் இருவரும் முற்பிறவியில் இரவிவர்மன் என்ற மன்னனுக்கும், அவனுடைய கோப்பெருந்தேவியான அமுதபதி என்பவளுக்கும் எனக்கு மூத்த சகோதரிகளாகப் பிறந்தவர்கள். இந்தப் பிறவியில் எனக்கு அன்னையாகவும், தோழியாகவும் பிறந்துள்ளீர்கள். உங்களைத் தொழுகிறேன்,” என்று அவர்களது மலரடிகளை வணங்கினாள்.

“தீவினைகளால் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவித் துன்பம் உங்களுக்கு ஒழிந்து போகட்டும். இங்குள்ள அறவண அடிகளைச் சந்தித்து, உங்களுடைய முற்பிறப்பினைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள். என் கையிலிருக்கும் இந்தப் பாத்திரத்திற்கு அமுதசுரபி என்பது பெயர். ஆபுத்திரன் என்பவன் வழியாக என் கையை வந்தடைந்துள்ளது. இதனையும் வணங்குங்கள்,”  என்று அதனை ஓர் உயர்ந்த பீடத்தில் வைத்தாள்.

மற்ற இருவரும் அதனை மலர் தூவி வணங்கினர்.

“அம்மா! நாம் மூவரும் இந்த அமுதசுரபியை எடுத்துக்கொண்டு அறவண அடிகளைக் கண்டு வணங்கிவிட்டு வருவோம்.” என்றாள்.

மூவரும் அங்கிருந்து கிளம்பி, அறவண அடிகளைச் சந்திக்கச் சென்றனர்.

பின்குறிப்பு: திட்டிவிடம் என்ற பெயரில் கொடிய நாகம் ஒன்று இருந்ததுபற்றிய குறிப்பு வருகிறது. விசுவாமித்திரர் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சி இதுவரையில்  புராணங்கள் குறிப்பிடாத  நிகழ்ச்சியாகும்.

சாதுசக்கரன் என்பவரைப்பற்றிய குறிப்பு வருகிறது. இவன் ஒரு சாரணன், வானில் திரிபவன்  என்று மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கூறுகின்றன. சாரணர் என்ற சொல்  இங்கே ஓர் இனத்தின் பெயரைக் குறிக்கும் சொல்லாக எடுத்தாளப்பட்டுள்ளது. சாரண்ரை இரு காப்பியங்களும் நக்கச் சாரணர் என்ற அடைமொழியுடனே  அழைக்கின்றன. நக்க என்ற வேர்ச் சொல்லிற்குக் கருப்பு என்று பொருள். இதனால்தான் நக்கர் வசிக்கும் இடம் நக்காவரம் எனப்பட்டு, ஆங்கிலேயரின் மொழிமாற்றத்தால் நிகோபார் ஆனது. நக்கர் என்ற பெயர் நீண்டு நாகர் என்ற சொல்லாக ஆகியிருக்கக்கூடும். இந்த நாகருக்கும் தமிழர்களுக்கும் இன உறவு இருந்திருக்கலாம். இந்த நக்கர் என்ற சொல் negro, niggerபோன்ற இணைப்பெயர்கள் உருவாகக் காரணமாய் இருந்திருக்கலாம். நக்கன் என்றால்  ஆடையற்றவன் என்ற பொருளும் தமிழில் உண்டு. அருகன், சிவன்போன்றவர்கள் நக்க என்ற அடைமொழியுடன்  அறியப்பட்டவர்கள். திருமுறையில் சிவன் நக்கு அரையன் என்றே விளிக்கப்படுகிறார். நக்க சாரணர் என்று கூறப்படும் சாதுசக்கரன் என்பவர் புத்தமதக் கொள்கை பொருந்திய பொன் ஆழியைக் கையில்கொண்டு வான்வழி செல்லும் தன்மையை உடைய முனிவர் எனறு கூறப்படுகிறது.

[தொடரும்]

===============

2 Replies to “பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12”

  1. தங்களது இப்பதிவு தனக்கு பல செய்திகளை அறிந்து கொள்ள வழி தந்தது மென்மேலும் இவ்வாறு செய்திகளை பதிவு செய்ய வேண்டுகிறேன் . தங்களது இப்பணிக்கு எனது நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *