மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11

மணிமேகலை அந்தப் பத்மபீடத்தின் முன்பு மெளனமாக நின்றாள். உண்மையில் இந்தப் பீடம் முற்பிறவியினைக் கூறும் வல்லமை பெற்றதுதான். இது புத்தனுடைய பத்மபீடம் அல்லவா! முற்பிறவி குறித்து மட்டுமன்றி முற்பிறவியில் பிரும்மதருமன் கூறியதுபோல அனைத்தும் தனக்கு இப்பிறவியில் நிகழ்ந்தது குறித்து வியப்பெய்தினாள். மீண்டும் மணிமேகலா தெய்வம் தன்முன்னே தோன்றி, மேலும் சில ஐயங்களைத் தெளிவிக்குமா என்ற கேள்வி அவளுள் எழுந்தது.

அந்தக் கேள்வியின் விடைபோல — பூங்கொடி காற்றில் தவழ்ந்து வருவதைப்போல — மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் முன்பு காற்றுவெளியில் அசைந்தபடி தோன்றினாள்.

மணிமேகலை தனது முற்பிறப்புக் குறித்துக் கவலையுற்று அழுததைக் காணநேரிட்ட மணிமேகலா தெய்வம் புத்தபீடத்தைப் பார்த்து இருகரம் குவித்தவண்ணம், “நல்ல உணர்வுகள் அனைத்தும் மழுங்கியநிலையியல் உயிர்கள் எல்லாம் அறச்செய்திகளைக் கேட்டுப் பயனுறுவதற்கு உண்டான செவிகள் வெறும் துளைகளாகப்போய்விட்ட நேரத்தில் இந்தப் பூமண்டலத்தின்மீது தோன்றும் கதிரவனைப்போல நீ தோன்றினாய். அறிவின் ஒளியே! உன் பாதங்களைப் பணிகிறேன்!” என்று வணங்கினாள்.

“உன் வடிவாகவே தோன்றும் இந்தச் சிறப்புமிக்க ஆசனத்தை நாவினால் ஏற்றித் தலைமேல் கொண்டுள்ளேன். உள்ளமெனும் தாமரையில் கொலுவிருக்கச் செய்துள்ளேன். என்னுடைய துயரங்களைக் களைவாய்!“ என்று கூறி மீண்டும் அந்தப் பீடத்தை வலம்வந்து வணங்கினாள்.

மணிமேகலா தெய்வத்தை ஒரு பூங்கொடி தரையில் விழுந்து புரள்வதைப்போல விழுந்து வணங்கிய மணிமேகலை, “தெய்வமே! நீதான் என்னை இந்தத் தீவின்கண் கொண்டுவைத்தாய். அதனால்தான் நான் என்னுடைய முந்தைய பிறவி குறித்துத் தெளிவான சேதியை அறிந்துகொண்டேன். என்னருங் கணவன் இப்பிறவியில் எங்கு எவராகத் தோன்றியிருக்கிறான் என்பதைக் கூறு,” என்றாள்.

“இலக்குமியே, கேள். முற்பிறப்பில் உன் கணவனுக்கு உன்மீது தீராத மையல் இருந்தது. ஒருமுறை நீயும் அவனும் ஒரு பூஞ்சோலையில் ஒதுங்கியிருந்தீர்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக நீ அவனுடன் ஊடல் கொண்டிருந்தாய். அவனுக்கோ உன்மீதிருந்த காமம் அடங்கவில்லை. உன் ஊடலைத் தீர்க்கும் பொருட்டு அவன் உன் காலடியில் வணங்கி நின்றான். அந்தச் சமயம் இருவரும் நிலைமறந்திருந்தீர்கள். அப்போது சாதுசக்கரன் என்ற பெயருடைய சாரணன் ஒருவன் — வான்வெளியில் பறந்துசெல்லும் திறன்பெற்றவன் — மனிபல்லவத்தின் அருகில் இருக்கும் இரத்தின தீபம் என்ற தீவினில் வசிப்பவன் — பௌத்த மதத்தின் சின்னங்களில் ஒன்றான ஓம் மணி பத்மேஹூம் என்ற மந்திரத்தை, வட்டவடிவில் செய்யப்பட்ட பொன்னாலான சக்கரத்தட்டில் பொறித்து, அதனைச் சுற்றிக்கொண்டே சகல இடங்களுக்கும் சென்று புத்தரின் அறவுரைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுபவன் — மதிய நேரப்பொழுதில் நீங்கள் இருந்த சோலையில் தோன்றினான்.

“வறுமையுற்றதால் மெலிந்ததுபோன்ற இடையினை உடைய நீ அவனைக்கண்டு, நாணமேற்பட்டு பதறிப்போய் எழுந்தாய்.

“நீ சட்டென்று விலகியதும் இராகுலனுக்குக் கோபம் ஏற்பட்டது. ‘வந்தது யார்? ஏன் இப்படிச் சட்டென்று எழுந்து விட்டாய்?’ என்று கேட்டான். நீ சட்டென்று அவன் வாயை உன் விரல்களால் மூடி, ‘வான்வழி வந்த முனிவரைப் போற்றுவதற்குக் கஞ்சத்தனம் பிடிக்காதீர்கள்,’ என்று கணவனை எச்சரித்துவிட்டு, வந்திருந்த முனிவரின் பாதங்களில் அவனுடன் விழுந்து வணங்கினாய். புத்தபிரானின் அன்பனாகிய அந்த முனிவனைப் பார்த்து, ‘சுவாமி! நாங்கள் உங்கள் பாத்தியதைக்குப் பேறு பெற்றோம். வாருங்கள், நல்ல ஆசனத்தில் அமருங்கள். இளைப்பாற குளிர்ந்த நீரும், பசியாற சிறந்த அமுதும் தருகிறோம் ஏற்றுக் கொள்ளுங்கள்,’ என்றாய்.

“அந்தச் சாரணனும், ‘தாயே! தாருங்கள் ஏற்றுக் கொள்கிறோம்,’ என்று கூறி உன்னை வாழ்த்தியருளினான். அவனுடைய வாழ்த்து உன் பிறவித் துன்பத்தை முற்றிலும் அறுத்து, இனிமேலும் உனக்குப் பிறப்பில்லாமல் செய்துவிட்டது!”

மணிமேகலை வியந்து நின்றாள்.

பிறவி என்பது நாம் கேட்டு வருவதில்லை. ஆனால் பிறந்தபின் இந்த மண்ணுலகில் வாழ்தல் என்பது நம் கையில்தான் உள்ளது. வாழ்வின் விளிம்பில் நிற்கும் ஒருவனுக்கு மறுபிறவி இல்லை என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆயினும், வாழ்வின் தொடக்கத்தில் நிற்கும் பேதைப்பெண் மணிமேகலைக்கும் தனக்கு மறுபிறவி இல்லை என்பதை மணிமேகலா தெய்வம் கூறியதும் மனதில் உவகை பொங்கியது.

“நன்றி, தெய்வமே! இருப்பினும் முற்பிறவியில் என் கணவனாக வந்த இராகுலன் இப்பிறவியில் எந்தப் பிறவி எடுத்துள்ளார்?” என்று கேட்டாள்.

“உவவனத்தில் உன்னைப் பின்தொடர்ந்து வந்த மான்னர்மகன் உதயகுமாரன்தான் முற்பிறவியில் உன் கணவனான இராகுலன்!” என்றது அந்தப் பெண்தெய்வம்.

ஒரு நிமிடம் மணிமேகலைக்கு ஒன்றும் ஓடவில்லை. ‘இவன் பழிச்சொற்கள் எதையுமே பொருட்படுத்தாமல் என் மனம் ஏன் இவன்பால் செல்கிறது? இதுதான் காமத்தின் இயல்பா? நான் துறவறக் கோலம் பூண்டுள்ளது எல்லாம் வேடம்தானா?’ என்று சுதமதியிடம் தான் கேட்ட கேள்விகள் நினைவில் எழுந்தன.

இதற்கு மணிமேகலா தெய்வம் என்ன விளக்கம் சொல்லப்போகிறது?

“கந்தசாலி தெரியுமா உனக்கு?” என்று தெய்வம் மணிமேகலையைக் கேட்டது.

எதற்கு இப்போது இப்படி ஒரு கேள்வி என்று விழித்தபோதிலும், மணிமேகலை பதில் கூறினாள். “தெரியும். உயர்ரக நெல்வகை “

“உயர்ந்த விதை நெல்லாகிய கந்தச்சாலி பயன்தர, அதிலிருந்து நாற்றுகள் கிளம்பி நல்ல அறுவடையை அளிக்க வேண்டும். அதைவிட்டு வெம்மையான பாலைவனத்தில் வெந்து மாவாகி உதிர்ந்து விட்டால் என்ன பயன்? அதைப்போல, புத்ததர்மத்தின் வழிநின்று இந்த உலகிற்குப் பயன்தரவேண்டிய நீ முற்பிறவியின் தொடர்ச்சியாக உதயகுமாரன் பின்னால் மனதை அலையவிட்டால் என்ன செய்வதென்றுதான் உன்னை இங்குக்கொண்டுவந்து விட்டேன்.” என்றது.

மணிமேகலைக்கு வாழ்வின் பொருள் மெல்லமெல்லப் புரியத் தொடங்கியது.

“இன்னும் கேள், மணிமேகலை!“ என்றது பெண் தெய்வம்.

வாழ்வின் மர்மம் ஒவ்வொன்றாக முடிச்சு அவிழ்கிறதோ?

manimekala deity“முற்பிறப்பில் உனக்குத் தாரை, வீரை இரண்டு சகோதரிகள் இருந்தனர். இருவரும் அங்க தேசத்தில் இருக்கும் கச்சயம் என்ற குறுநிலப் பிரதேசத்தை ஆளும், கழல் அணிந்த கால்களையுடைய துச்சதன் என்ற மன்னனை மணம்புரிந்துகொண்டனர். ஒருநாள் இருவரும் தம் கணவனோடு அருகில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் சுற்றுலா சென்று மகிழ்ந்து, அகன்ற கங்கையாற்றின் அருகில் இருந்தனர்.

“சிறந்த வேள்விமானும், தான் புரியும் வேள்விகளால் தனது பாவங்களைக் கரைத்தவருமான அறவண அடிகள் என்ற பெயருடைய அருந்தவசி ஒருவர் அப்போது அங்கே வந்தார். அவரைக் கண்டதும் துச்சதன் ஓடோடிச் சென்று அவர் பாதங்களை வணங்கி, ’தேவரீர்! தாங்கள் இங்கு வந்த காரணம் என்ன?’ என்று வினவினான்.

“அதற்கு அந்த மாமுனி, ‘ஆதிமுதல்வனாகிய புத்த பெருமான் இந்த உலகம் உய்யவும், மக்களின் துயர் நீக்கவும், விலங்கினங்கள் தம்முள் பகைமை பாராட்டமல் இருக்கவும், அறநெறிகளை உரைப்பதற்காகவும் இந்த மலைக்கு வந்ததால் இதற்குப் பாதபங்கஜகிரி என்ற பெயர் வழங்கலாயிற்று.’ என்றுரைத்து ஆசிநல்கினார். அன்று அந்த அறவண அடிகளை வீழ்ந்து வணங்கி அருளாசி பெற்றதால் இப்பிறவியில் அவர்கள் இருவரும் மாதவியாகவும், சுதமதியாகவும் பிறந்து உனக்குத் துணையாக உள்ளனர்,” என்றது.

மணிமேகலை அந்தப் பெண்தெய்வத்தை மீண்டும் ஒருமுறை கைகூப்பித் தொழுதாள்.

“மணிமேகலை! உன்னுடைய இந்தப் பிறவி அறம்புரிய ஏற்பட்ட பிறவி. அறத்தின் தன்மையை அறிந்துகொண்டாய். முற்பிறப்பு இரகசியங்களைத் தெரிந்துகொண்டாய். மற்ற மதத்தினர் தங்கள் சமயக் கருத்துகளையும் கூறக் கேட்கப்போகிறாய். பகுத்து ஆராய்ந்து, பல்வேறு சமயத்தினர் கூறும் கருத்துகள் எல்லாம் பொய்மையானது என்று நீ வாதாடி வெற்றிபெறப்போகும் அந்த நாளில் ஒருவரும் நீ பெண் என்பதாலும், உன் இளமை வனப்புடையது என்பதாலும், தத்தம் மதக்கருத்துகளை உன்னிடம் மனம்திறந்து கூறமாட்டார்கள். எனவே, உனக்கு அவர்களை வெல்ல வேறு ஒரு உபாயம் சொல்கிறேன். நீ வேறுவடிவம் அடைந்து வான்வெளியில் செல்லும் திறன் பெற்றாலன்றி உனக்கு இது சாத்தியப்படாது. இந்த மந்திரத்தை உபதேசிக்கிறேன். இதன் மூலம் நீ வேற்று உருவம் அடையலாம்; வான்வெளியில் பறந்து செல்லலாம்.” என்று அந்தப் பெண்தெய்வம் கூறியது.

“கூறுங்கள்,“ என்று பணிந்தவளுக்கு அரும்மந்திரம் ஒன்றை ஓதியது அப்பெண் தெய்வம்.

“இன்று நல்ல நாள். சந்திரன் நாள்தோறும் வளர்ந்து, தன் கலைகளை மீண்டும் பெற்று, முழு வடிவை அடைந்த பூர்ணிமை தினம். நீ இந்தப் பத்மபீடத்திலிருக்கும் புத்தபெருமானை வணங்கிவிட்டு உன் ஊர் போய்ச்சேர்,“ என்று கூறிவிட்டு, மணிமேகலா தெய்வம் வான்வெளியில் சென்றது.

மீண்டும் அந்தப்பெண்தெய்வம் தோன்றியது.

“ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். மானிடர்களின் கொடிய பிணி அவர்களது பசியாகும். அந்தப் பசிப்பிணி போக்கும் அரிய மந்திரமும் என்னிடம் உள்ளது. அதனையும் உனக்கு உபதேசிக்கிறேன்,” என்று மேலும் ஒரு மந்திரத்தை உபதேசித்துவிட்டு அகன்றது.

பின்குறிப்பு: இக்காலத்தில் நெல் இரகங்களுக்குப் பெயர் இடுவதுபோல அந்தக் காலத்திலும் நிகழ்ந்ததன் அடையாளமாக, கந்தசாலி என்ற நெல்லின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கழல் அணிந்த கால் என்ற குறிப்பு இங்கு மீண்டும் ஒருமுறை வருவதால் செருப்பு அணிவது அக்காலத்தில் மரியாதைக்குரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். புத்த மதத்தின் மறுபிறவித் தத்துவத்தைக்கொண்டு இளம்பெண்ணான மணிமேகலைக்கு அவளது யௌவனம் காரணமாக உதயகுமாரன்மீது ஏற்படும் மையலை திசைதிருப்பிவிடும் சீத்தலை சாத்தனாரின் கவித்துவம் இங்கு வியந்து பார்க்கவேண்டிய ஒன்றாகும்.

[தொடரும்]

One Reply to “மந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11”

  1. சத்தியப்பிரியன்
    “கழல் அணிந்த கால் என்ற குறிப்பு இங்கு மீண்டும் ஒருமுறை வருவதால் செருப்பு அணிவது அக்காலத்தில் மரியாதைக்குரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும்”.
    சரியல்ல கழல் என்பது வீரக்கழல் ஆண்கள் காலில் அணிந்த பொன் வெள்ளி ஆபரணம் கழல் ஆகும். வீர ஆஞ்சனேயர் அதை அணிந்திருக்கின்றார். சிவபெருமானும் கழல் அணிந்தவராகவே போற்றப்படுகின்றார். வீரத்தின் சின்னம் கழல். தண்டை எனப்படுவதுவும் அதுவும் ஒன்றா வேரா என்பது தெரியவில்லை.
    https://vaiyan.blogspot.in/2015/09/pattinappalai-44.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *