ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14

தன்முன்பு மணிமேகலை வைத்த அமுதசுரபியைப் பார்த்து அறவண அடிகள் முறுவலித்தார்.

யார் இந்த ஆபுத்திரன்? எதனால் அவனுடைய அமுதசுரபியை மணிமேகலை கொண்டுவர வேண்டும்? அவளுடைய தற்போதைய வாழ்வின் போக்கு மர்மங்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறதே!’என்ற சிந்தனை ஓட்டங்களுடன் சுதமதி அறவண அடிகள் கூறப்போவதைக் கேட்க ஆவலானாள்.

“எத்துணை திறம்பெற்ற பாத்திரம் தெரியுமா இந்த அமுதசுரபி, மணிமேகலை? இதன் திறம்பற்றிக் கூறவேண்டுமானால் ஒரு நெடுங்கதையைக் கூறவேண்டியிருக்கும்” என்றார் அறவண அடிகள்.

“பொழுது போகவேண்டுமல்லவா? கூறுங்கள்!“ என்றாள் சுதமதி.

சுதமதியின் தொடைமீது மாதவி தட்டினாள். அதன் பொருள் பெரியவர்களிடம் இவ்வாறு பேசக் கூடாது என்பதாகும்.

“சிறியவள்தானே? விடு மாதவி. சில நேரங்களில் அவர்களது நடவடிக்கை பெரியவர்களைவிட மேம்பட்டதாக இருக்கும்,“ என்றார் நகைமாறாமல்.

“நீங்கள் கூறுங்கள், அடிகளே!” என்றாள் மணிமேகலை, வினயத்துடன்.

“வாரணாசி என்று அறியப்படும் காசிநகரத்தில் அபஞ்சிகன் என்ற ஓர் அந்தணன் இருந்தான். அவன் ஆரணம் என அறியப்படும் வேதத்தை ஓதுவிக்கும் தொழிலாகக்கொண்டவன் என்பதால் ஆரண உவாத்தி (உபாத்தியாயன் என்பதன் திரிபு) அபஞ்சிகன் என்று அறியப்பட்டவன். அவனுடைய மனைவியின் பெயர் சாலி. கற்புநெறி தவறி, அந்தப் பார்ப்பினி தனது கணவனுக்குத் தவறு இழைத்துவிட்டாள். அதன்பின், அவளுக்குக் குற்ற உணர்ச்சி மிகுந்தது. தான் செய்த குற்றத்திற்குப் பிராயச்சித்தமாக என்னசெய்வது என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தபோது தீர்த்தயாத்திரை செல்லும் கூட்டம் ஒன்று குமரிக் கடலுக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தது. அவளும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். நெடுங்கால யாத்திரை என்பதால் அவளது சூல் மெல்லமெல்ல வளர்ந்து நிறை கர்பிணியாகிவிட்டாள். ஒருநாள் இரவு எவருக்கும் தெரியாமல் ஒரு மறைவிடத்தில் சிசுவைப் பெற்று இறக்கிவைத்தாள். கை கால்களை நீட்டி உதைத்து அழுத குழந்தைக்கு வயிறுநிரம்ப முலைப்பால் அளித்தாள். பிறகு அந்தச் சிசுவைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த தோட்டத்திற்குள் சென்றாள். புற்கள்நிறைந்த மெத்தென்ற பரப்பில் அந்தக் குழந்தையைக் கிடத்தினாள்.

‘வா’ என்று கை நீட்டி சிரித்து அழைக்கும் குழந்தையை மறுத்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

சிறிதுநேரம் சென்றது. ஒருமுறை ஊட்டிய தாயின் அமுதால் வாழ்நாள் முழுவதும் சிசுவின் பசி அடங்குமா என்ன? மீண்டும் பசித்தது. தனக்கு அமுதூட்டிய தாயை அங்கும் இங்கும் தேடியது. முனகியது.  “.ஊ, ஆ,” என்று அழைத்தது. கல்நெஞ்சம் படைத்த தாய் வரவில்லை. பசித்தவுடன் குழந்தை அழத் தொடங்கியது.

சிசுவின் குரல் கேட்ட பசு ஒன்று ஓடி வந்தது. சிசுவின் வாயில் வழியுமாறு தனது பாலைச் சொறிந்தது. ஆவின் பாலை உண்டு வயிறு நிரம்பிய சிசு அழுகையை நிறுத்தியது. பசு தனது கழுத்தை வளைத்து சிசுவை நாக்கால் நக்கிக் கொடுத்தது.

இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்படப் பசி நேரத்தில் சிசு அழத் தொடங்கியதும் எங்கிருந்தாலும் அதன் குரல்கேட்டு ஓடிவரும் பசு பாலைப் பொழிந்து அதன் பசியைப் போக்கும். இது இப்படியே ஒருவாரம் தொடர்ந்தது.

அப்போது வயனங்கோடு என்ற ஊரைச் சேர்ந்த பூதி என்ற அந்தணன் ஒருவன் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தவன் சிறுகுழந்தையின் பசித்து அழுவதையும் அதற்குப் பசு ஒன்று பால் வழங்குவதையும் கண்டான்.

“என்ன அதிசயம்!  அந்த மாட்டுக்குத்தான் அந்தக் குழந்தையிடம் எவ்வளவு ப்ரீதி?     இப்படிக் குழந்தையைப் போட்டுட்டு பெத்தவ எங்கே போய்த் தொலைஞ்சா?“  என்று உடன்வந்த அவன் மனைவி வியந்துபோனாள்.

“அசடு! பெத்தவ இருந்தா இப்படிக் குழந்தையைப் பாலுக்கு அழவிடுவாளா? பசுவும் வந்து பால் கொடுக்குமா?” என்றான் அந்த மறையோன்.

“அப்போ அந்தக் குழந்தை அனாதைன்னு சொல்கிறீர்களா?”

“அனாதை இல்லை. இனிமேல் நாமதான் அதுக்குத் தாய்-தந்தை. இத்தனை வருஷம் குழந்தையில்லாமல் இருந்தோமே, இனிமேல் இதுதான் உங்கள் குழந்தை என்று அந்த ஆண்டவன் அருளிய குழந்தை,” என்று அந்தணன் சொன்னதும் அவன் பத்தினி ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அள்ளிக்கொண்டாள்.

தன் குலம் தழைக்க நம்பி பிறந்துவிட்டான்” என்ற பெரிய உவகையுடன் அந்தணன் அந்தக் குழந்தையைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.

நாள் பார்த்துப் ஆபுத்திரன் என்ற பெயர் சூட்டினார்கள். உரிய பருவத்தில் அவனுக்கு முப்புரிநூல் அணிவிக்கும் யக்நோபவீதம் என்ற பூணூல் வைபவத்தை நடத்தி வேதம்பயில்விக்க அந்தணர்களிடம் அனுப்பினர். வேதம்பயிலும் அந்தண இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்து சாத்திரங்களையும் அவன் கற்றுக்கொண்டான். கல்வியிலும் மறை ஓதுவதிலும் சிறந்து விளங்கினான்.

அன்றொருநாள் ஆபுத்திரன் வழியில் போய்க்கொண்டிருந்தபோது ஓர் அந்தணர் வீட்டில் வாயிலில் பந்தல் போடப்பட்டிருந்தது.

“ஏதாவது விசேடமாயிருக்கும்,” என்று எண்ணிய ஆபுத்திரன் பார்வையை உள்ளே ஓடவிட்டான். பெரிய வேள்விக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. சுடுமணலால் புனையப்பட்ட பெரிய யாககுண்டம் ஒன்று தெரிந்தது. மூட்டைமூட்டையாகச் சமித்துக் குச்சிகளும், பசுஞ்சாணத்தில் செய்த எருவாட்டிகளும் அடுக்கிவைக்கபட்டிருந்தன. தரையெங்கும் அழகிய கோலங்கள் போடப்பட்டிருந்தன. வேள்விக்கூடத்தின் தூண் ஒன்றில் பசுமாடு ஒன்றைக் கட்டியிருந்தார்கள்.

அந்தப்பசு மாட்டின் கொம்பில் பூ சுற்றியிருந்தார்கள். அதன் உடல் முழுவதும் மஞ்சள் பூசப்பட்டிருந்தது. நெற்றியில் நீளமாகச் சிந்தூரம் தீட்டபட்டிருந்தது.  முதுகில் ஒரு புதுத்துணி போர்த்தபட்டிருந்தது. இவ்வளவு அலங்காரம் செய்திருந்தும் அதன் கண்களில் மகிழ்ச்சி இல்லை. வேடுவர்கள் துரத்திவரும்போது மருண்டுநிற்கும் மானின் அச்சம்நிறைந்த கண்களைப்போல அதன் கண்கள் விளங்கின. அதன் மேனி பயத்தில் விதிர்த்தபடி இருந்தது. சட்டென்று ஆபுத்திரனுக்கு விளங்கியது. இது வேள்விப்பசு.  ஆவின் பாலைக் குடித்துவளர்ந்த ஆபுத்திரனுக்கு அந்தப் பசுவின் துயரநிலை மனதை  வருத்தியது. உடனே அந்தப் பசுவை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அந்த இடத்திலேயே இரவு வரும்வரை தங்கியிருந்தான். பகலில் கொண்டுசென்றால் தனது செயல் தடுக்கப்படும் என்பதால் இரவு வந்ததும் ஒருவருக்கும் தெரியாமல் பந்தலுக்குள்  நுழைந்து தூணில் கட்டபட்டிருந்த பசுவின் கயிற்றை அவிழ்த்து, அதைத் தனது இருப்பிடத்திற்குக் கொண்டுசென்றான். வேள்விச் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பசுவைக் காணாமல் அந்தணர்கள் வழியெல்லாம் தேடிக்கொண்டிருக்கும்போது ஆபுத்திரன் அந்தப் பசுவடன் செல்வதுகண்டு அவனை வழிமறித்தனர்.

“இந்த அர்த்தராத்திரிவேளையில் கையில் பசுவைப் பிடித்துக்கொண்டு போகக்கூடாத வழியில் போகும் நீ பையனா. இல்லை புலையனா? எதற்காக எங்கள் வேள்விப்பசுவை இப்படித் திருடிக்கொண்டு செல்கிறாய்?” என்று கேட்ட்னர்.

அந்தக் கூட்டத்தில் ஓர் அந்தணன் கையில் நீண்ட கழி வைத்திருந்தான். அந்தக் கழியால் ஆபுத்திரனை அடித்தான்.

“அடியாத மாடு மட்டுமில்லை மனிதனும் பணியமாட்டான். வாயைத் திறந்து சொல்லுடா” என்று அடித்தபடி கேட்டான்.

அந்தப்பசுவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஆபுத்திரனை அடித்துக் கேள்விகேட்ட அந்தணனின் வ்யிற்றைத் தனது கூரிய கொம்பினால் கிழித்து, ஆபுத்திரனின் கயிற்றுப் பிடியிலிருந்து விடுபட்டு, அருகில் இருந்த காட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடிமறைந்தது.aputhran

ஆபுத்திரன் அந்த மறையோர்களைப் பார்த்து, “வேள்வி என்று கூறி பசுவைப் பலிகொடுப்பது முறையாகுமா? நீங்கள் போடும் புல்லைத் தின்றுவிட்டு  வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத்  தேவையான பாலை அளிக்கும் அந்தப் பசுவை வதைக்கலாகுமா? பாவமில்லையா அது? இந்தப் பசுமீது உங்களுக்கு எதற்காக இவ்வளவு சினம்? முற்றும் அறிந்த அந்தணர்களே, பதில் கூறுங்கள்!” என்றான்.

“யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டாய்? நாங்கள் யார் தெரியுமா? அழகிய அணிகளுடன் விளங்கும் பொன் சக்கரத்தைத் வலக்கரத்தில் சுழலவிட்டுக்கொண்டிருக்கும் ஆதி கடவுளான மகா விட்டுணு, தனது நாபியில் தோன்றிய பிரமனுக்கு வாழ்வின் நெறிகளை உபதேசித்தான். பிரும்மன் அதனை மனுவிற்குச் சொன்னார். மனு எங்களுக்கு உரைத்தான். மனுதர்மம் பிறழாமல் நடக்கும் வைதீக பிராமணர்களான எங்களுக்கு நீ உபதேசம்செய்ய வந்துவிட்டாயா? நிலைபெற்ற உள்ளத்தைக் கொள்ளாமல் தடுமாறும் சிந்தனை உடைய அற்பச் சிறுவனே! நீ மானிட சாதியைச் சேர்ந்தவன்போலத் தெரியவில்லை. அந்த மாட்டுக்குப் பிறந்தவன்போல புத்தியில்லாமல் பிதற்றுகிறாய். நீ மனிதனா என்றுகூட ஐயமாக இருக்கிறது. மாட்டுக்குப் பிறந்தவனே!” என்று இகழ்ந்தனர்.

“அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசகம்பளன்,“ என்றான் ஆபுத்திரன் பதிலுக்கு.

“என்ன உளறுகிறாய்?” என்று அவர்கள் அதட்டிக் கேட்டனர்.

“உங்களுடைய ரிஷிமூலம் சொல்லக் கிளம்பினால் ஒருநாள் போதாது. பசுவிற்கு மகனாகப் பிறந்தவன் அசலன் என்ற ரிஷி; மான் பெற்றெடுத்த ரிஷி சிருங்கி; புலிக்குப் பிறந்தவன் விரிஞ்சி என்ற ரிஷி. வானுலகும் வணங்கும் கேசகம்பளன் என்ற ரிஷி ஒரு நரிக்குப் பிறந்தவன் என்பதை மறந்து விடாதீர்கள், நான்மறை ஓதும் வைதீகப்பிராமணர்களே! முதலில் குற்றம்கூறும் முன்னர் உங்கள் குறைகளைத் தெரிந்துகொண்டு குற்றம் கூறுங்கள் “ என்றான் ஆபுத்திரன்.

“வாயை மூடுடா, அதிகப்பிரசங்கி. எங்களுக்குச் சொல்லவந்துட்டான்,” சீறினார் ஒருவர்.

“இவன் பிறப்பு லட்சணம் நமக்குத் தெரியாது?” என்று எள்ளி நகையாடினார் இன்னொருவர்.

“இவன் கதை என்ன ஓய்? முதலில் அதைச் சொல்லும்” என்று தூண்டினார் வேறொருவர்.

இரண்டாவதாகக் கூறியவர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார் “ஒரு தீர்த்தயாத்திரைக் கூட்டத்தில் நானும் ஒருவனாகப் போயிருந்தேன். கன்யாகுமரி போய் அம்பாளைத் தரிசித்து பாவத்தைத் தொலைச்சிட்டு வரப் போயிருந்தோம். நடக்கமுடியாமல் சிரமத்துடன் ஒரு பார்ப்பனத்தி கூடவந்தாள்.  இந்தப் பக்கம்மாதிரித் தெரியவில்லை. யாரென்று விசாரித்தேன். காசியிலிருந்து வருவதாகவும், பேரு சாலியென்றும் சொன்னாள். ஏது எதுக்கு இவ்வளவு தூரம் வந்திருக்கிறாளென்று கேட்டேன்.”

“அதுக்கு அவள் என்ன சொன்னாள்?” என்றார் தூண்டியவர்.

“காசி நகரில் எங்காத்துக்காரர் வேத உபாத்தியாயம் செய்துகொண்டு இருக்கிறார். நானும் அவருக்குப் பத்தினியாத்தான் வாழ்ந்துவந்தேன். என்னோட போறாதகாலம் கற்புநெறி பிறழ்ந்து அவருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டேன். பண்ணின பாவத்திற்குக் குமரிக்கடலில் குளிக்க எண்ணிக் கிளம்பி இந்தத் தீர்த்தயாத்திரைக் கும்பலுடன் சேர்ந்துகொண்டேன் என்றாள்.“ என்ரு சொல்லிவிட்டு இரண்டாமவர் சிரித்தார்.

“ஓ! கதை அப்படிப் போகிறதா?”

கேட்டவரும் பூடகமாகச் சிரித்தார்.

“ ‘பொன்தேர்கொண்ட பாண்டியன் செழியன் என்பவனது தென்மதுரை நகரைக் கடந்து சிறிது தூரம் சென்றபின்பு ஒரு மாடுமேய்க்கும் கோவலர்களின் குடியிருப்புப் பகுதி வந்தது. நிறைமாத கர்ப்பமான எனக்குப் பேறுகால வலி எடுத்தது. நள்ளிரவு வேறு. நான் அருகிலிருந்த ஆளரவமற்ற தோட்டத்தில் குழந்தையை ஈன்று, அதன் முகத்தில்கூட விழிக்காமல் அங்கிருந்து அகன்றுவிட்டேன். அப்படிப்பட்ட பாவியாகிய எனக்குப் பாவவிமோசனமே கிடையாது,’ என்று கூறி அழுதாள். அந்தப் பாவியின் மகன்தான் இந்த ஆபுத்திரன். சொல்லவேண்டாமென்றுதான் இருந்தேன். சொல்லவைத்துவிட்டான்.” என்றார்.

ஆபுத்திரன் அவர்களுடைய வசைமொழிகளைக் கேட்டு ஆத்திரம் கொள்ளாமல் புன்னகைத்தான்.

“பாரு, பாரு, வெட்கங்கெட்டவன். தன் பிறப்பிற்கும், தாயின் நடத்தைக்கும் வருந்தாமல் சிரிக்கும் அழகைப் பாருங்கள்,” என்றார் ஒரு முதியவர்.

“உங்கள் குலத்திற்கு மூத்தவர் என்று கருதப்படும் வசிட்டமுனியும், அகத்திய முனியும் பிரம்மனுக்கும், தேவகணிகையான திலோத்தமைக்கும் பிறந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? நான் சொல்லவில்லை உங்கள் சாத்திரம் கூறுகிறது இவர்கள் பிறப்பைப்பற்றி. அது பிழையில்லை என்றால் என் தாய் சாலிசெய்ததும் பிழையில்லை. சொல்லுங்கள் வேதங்களில் சிறந்த அந்தணர்களே” என்றான்.

“வாய்க்கொழுப்பைப் பார். இத்தனை திமிர் ஓர் அந்தணனுக்குக் கூடாது,” என்றார் முதியவர்.

“இவன் கொழுப்புத் தெரிந்துதான் இவனுடைய தகப்பனார் பூதி இவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்போல.“ என்றார் வேறொருவர்.

அங்கே வைதீக அந்தணர்கள் வைத்ததே சட்டமானது. சபை கூடியது. ஆபுத்திரனின் செயல் விசாரணைக்கு வந்தது. பசுவைக் களவாடியது குற்றம் எனத் தீர்ப்பானது. இனி ஒருவரும் அந்த ஊரில் அவன் அன்னத்திற்காக ஓடு ஏந்தி வரும்போது பிச்சை இடக்கூடாது என்று முடிவானது. அவன் தந்தையும் அவனை வீட்டைவிட்டு  வெளியேற்றினார்.

“அடப் பாவமே!“ என்றாள் மாதவி.

“ஆமாம் வைதீக அந்தணர்களை எதிர்த்து யாரால் உயிர்வாழ முடியும்?” என்றாள்சு தமதி.

“அவர் கூறும்போது குறுக்கே பேசாதீர்கள். அறவண அடிகளே! நீங்கள் மேலே கூறுங்கள்,” என்றாள் மாதவி.

“அப்புறம் என்ன? ஊர்மக்கள் அவன் ஓட்டில் அன்னத்திற்கு பதில் கற்களை இட்டனர். ஒருநாள் இரண்டுநாள் என்றால் பசி பொறுக்கலாம். வாழ்நாள் முழுவதும் முடியுமா? வெறுத்துப்போன ஆபுத்திரன் உணவு தேடி மதுரை நகரை நோக்கிச் சென்றான்.

“அங்கு சிந்தாதேவி என்று அறியப்படும் கலைமகள் சரஸ்வதியின் கோவில் ஒன்றை அடைந்தான். அங்குள்ள மண்டபத்தில் தங்கினான். அனைத்து  வீதிகளிலும் பிச்சை பாத்திரத்தை ஏந்தி வீடுவீடாகச் சென்று பிச்சை எடுத்தான். அப்படிப் பெற்றுவந்த பிச்சை உணவினை வைத்துக்கொண்டு, ‘கண் பார்வையற்றவர்களே! காது கேளாதவர்களே! கால்கள் முடமாகிப் போனவர்களே! ஆதரவற்றவர்களே! நோய்வாய்ப்பட்டவர்களே! வாருங்கள் அனைவரும் வாருங்கள். உங்களுக்காக மிகுதியான உணவைப் பிச்சையாகக்கொண்டு வந்துள்ளேன்,’ என்று அனைவரையும் கூவி அழைத்து, அவர்களுக்கு உணவளித்து, அதன் பிறகு எஞ்சியதைத் தான் உண்டு, அந்தப் பிச்சைப் பாத்திரத்தை தலைக்கு அணையாகக்கொண்டு உறங்கினான். இவ்வாறாக ஆதரவற்றவர்களுக்கு உற்ற துணைவனாகத் தனது காலத்தை ஆபுத்திரன் மதுரையில் கழித்தான்,” என்ற அறவண அடிகள், “அவன் கதை முடியவில்லை.” என்றார்.

2 Replies to “ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14”

  1. மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

    இந்தத்தொடருக்கு பேச்சு வழ்க்குத் தமிழ் உகந்தது அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய பிராமண ‘slang’ அன்று இருந்ததா என்று தெரியாத நிலையில், ‘எங்காத்துக்காரர்’ என்றெல்லாம் எழுதுவது in bad taste.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *