தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்

[இக்கட்டுரை முதலில் வெளியிடப் பட்டவுடன் வாசகர்களும் அறிஞர்களும் பல தகவல் பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டினர். அவற்றை முதலிலேயே களையாது வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோருகிறோம். கர்நாடக இசையிலும் தியாகராஜ கீர்த்தனைகளிலும் புலமை வாய்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நண்பர் இக்கட்டுரையை முழுமையாகத் திருத்தி அளித்தார். அவருக்கு எமது நன்றி. நீங்கள் கீழே வாசிப்பது அந்தத் திருத்தங்களுடன் கூட வடிவம் – ஆசிரியர் குழு]

ஞானிகள், புலவர்கள், கலைஞர்கள் என்று சமுதாய நலம்விரும்பிகள் தங்களுக்கிசைந்த ஊடகங்களின்மூலம் காலந்தோறும் தம்மைக் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். அவ்வகையில் பக்தியும் இசையும் கலந்த வெளிப்பாடாக தியாகராஜரின் வாழ்க்கை அமைகிறது. காகர்ல ராமப்ரஹ்மம்-சீதம்மா தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்த அவருக்கு திருவாரூரில் உறையும் கடவுளான தியாகேசரின் பெயரையேகொண்டு காகர்ல தியாகப்ரஹ்மம் என்று பெயர் சூட்டினார்கள். இவரது தாய்மொழி தெலுங்கிலும், வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். இளவயதிலிருந்தே வால்மீகி ராமாயணத்தின் மீது பேரார்வம் கொண்டவர். தந்தை ராமனின் கதையை கதாகாலக்ஷேபம் செய்யும் போதும், தாய் புரந்தரதாசரின் பாடல்களைப் பாடும்போதும் தன்னை மறந்து அதில் லயித்துப்போகும் திர்யாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது. அவரது பாடல்களில் தியாகராஜ என்ற பெயரை முத்திரையாக பயன்படுத்தியிருக்கிறார்.

thyagaraja

தியாகராஜர் சிறுவனாக இருந்தபோது அவரது குரு சொண்டி வெங்கடரமணய்ய பல வித்வான்களின் முன் அவரை பாடவைத்தார். அப்போது பிலஹரி ராகத்திலமைந்த “தொரகுநா இடுவந்டி சேவா” என்ற கீர்த்தனையைப் பாடினார். அவரது பாடல் அனைவராலும் பாராட்டப்பட்டது. வெங்கடரமணய்யவின் தந்தை வெங்கடசுப்பையரின் முன் அவர் பாடிய காம்போதி ராகத்தில் அமைந்த “மரி மரி நின்னே மொரலிட” என்ற பாடல் அவரது ஆசியையும் பெற்றுத்தந்தது. வெங்கடசுப்பையரின் வேண்டுகோளுக்கிணங்க சுமார் எட்டுமணி நேரம் தியாகராஜர் பாடியதாக குறிப்பிடுகிறார்கள்.

தியாகராஜரை குறித்து அறிந்த தஞ்சை சரபோஜி மஹாராஜா தியாகராஜரை பாராட்டி பல பரிசுகளை அனுப்பிவைத்தார். அரண்மனைக்கு வந்து ஆஸ்தான இசைக்கலைஞர்களில் ஒருவராக இருக்கவும் அழைத்தார். பரிசையும் பதவியையும் மறுத்த தியாகராஜர் அந்த வேகத்தில் பாடியதே “நிதி சால சுகமா” என்ற கல்யாணி ராகப்பாடல்.

“மனமே அபரிமிதமான செல்வத்தால் நீ மகிழ்கிறாயா? ராமனுக்குச் செய்யும் சேவையால் மகிழ்கிறாயா? உண்மையைச் சொல், ஆசாபாசங்கள் உடைய மனிதர்களைப் பாடுவது மகிழ்ச்சியா? கடவுளைப் பாடுவது மகிழ்ச்சியா தியாகராஜா? ” என்று மனிதர்களைப் பாட விரும்பாத தன்மையை வெளிப்படுத்துகிறார். “நிதிசால சுகமா? ” மன்னரின் தவறை அவருக்குப் புரியவைத்தது. இந்தப் பாடல் இன்றும் பிரபலமான கீர்த்தனையாகப் பல கலைஞர்களாலும் பாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்த சில தினங்களில், தன் தம்பி அவமானம் செய்தவிட்டதாக நினைத்துக் கோபமடைந்த தியாகராஜரின் அண்ணன் ஜல்பேசன், தியாகராஜர் எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும், தினமும் பூஜிக்கும் ராமர் விக்கிரகத்தைக் காவிரியில் எறிந்துவிட்டார். வாழ்க்கை தொலைந்து போனதாக வருந்திய தியாகராஜர், “மனமே! அவன் [ராமன்] எங்கே? எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறான்? எப்போது மனமிரங்கி இங்கு வருவான். பிரகலாதனைக் காப்பாற்ற, ஹிரண்யகசிபுவை நிர்மூலமாக்க கடவுள் வரவில்லையா? தன்பக்தர்களைக் காப்பாற்ற அவன் ஒளிந்து கொண்டிருக்கவேண்டும்,” [“எந்து தாகி”] என்று ஒரு கீர்த்தனை பாடினார். இது புராணக்கதையைச் சான்றாகக் காட்டிக் கெஞ்சலும், கொஞ்சலுமாக அமைகிறது. சில நாட்களுக்குப் பிறகு விக்கிரகம் கிடைக்கவே அகமகிழ்கிந்து போகிறார்

தியாகராஜருக்கு ஒருமுறை திருப்பதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. கடவுளைத் தரிசனம் செய்யப்போகும் நேரத்தில் திரைபோடப்படுகிறது. அவர் வருத்தத்தோடும், உருக்கத்தோடும், “ஓ, திருப்பதி வெங்கடரமணா! திரையை நீ விலக்கமாட்டாயா? கோபத்திற்கான திரை, ஆணவம், பொறாமைக்கான திரை ஆகியவை எனக்குள்ளிருந்து எல்லாவற்றையும் மறைக்கிறது . வலைக்குள் சிக்கிக்கொண்ட மிருகம்போல மனம் தீயவைகளில் அலைபாய்கிறது. நானுன்னை எப்போதும் வணங்குகிறேன். திரையை விலக்கமாட்டாயா? “தெர தீயகராதா” என்று அவர் கீர்த்தனை இயற்ற, திரை விலகி அவருக்கு திவ்யதரிசனம் கிடைக்கிறது என்றொரு நிகழ்வு ஒரு கீர்த்தனையில் வெளிப்படுகிறது.

க்ஷீரஸாகர விஹாரா, நீகே தெலியக போதே, ராமா ராமா நீ வாரமு என்று ஆனந்தபைரவி ராகத்தில் மூன்றுகீர்த்தனைகள் மட்டுமே அவரால் பாடப்பட்டுள்ளன. அந்த ராகத்தில், “நீ பலமா நாம பலமா” என்ற கீர்த்தனை இருந்தாலும் அவருடைய கீர்த்தனையா என்பது குறித்து விவாதங்கள் உள்ளன. ஆனந்தபைரவியில் குறைவான பாடல்களை அவர் பாடியதற்குச் சுவையான பலகதைகள் சொல்லப்பட்டாலும் மிகப் பரவலாகச் சொல்லப்படும் கதையாக கீழ்வருவது அமைகிறது.

ஆனந்தபைரவி மிகப்பழமையான ராகமாகும். அந்த ராகத்தில் பல பாடல்களுண்டு. இந்த ராகத்திலமைந்த பாடல்களை திருபுவனம் சுவாமிநாதகுருக்களும் அவர் சீடர்களும் ஒருமுறை தியாகராஜர் முன்னால் இந்த ராகத்தைப் பாடினர். அந்த இசையில் மகிழ்ந்த தியாகராஜர் அவர்கள் எதைக்கேட்டாலும் தருவதாகச் சொன்னார். அவர்கள் ஆனந்தபைரவி ராகத்தில் மேலும் பாடல்களை இயற்றவேண்டாம் என்ற பொருளில் அந்த ராகத்தைத் தங்களுக்குப் பரிசாகத் தரும்படி கேட்டனர். அதை ஏற்றுக்கொண்டு அதற்குப் பிறகு ஆனந்தபைரவியில் அவர் பாடவில்லை எனச் சொல்லப்படுகிறது. இது கதையாக அமைந்தாலும், உண்மைநிகழ்வாக இருந்தாலும் இசைக்கலைஞர்கள் அன்று ஒருமித்த தன்மையில் வாழ்ந்ததற்கு அடையாளமாகிறது.

பக்தியைப் பலவகைகளில் வெளிப்படுத்துவது ஆழ்நிலைபக்தியின் அடையாளமாகும். தனக்குப் பிரியமான ராமனை நாயகன்நாயகி பாவத்தில்[மதுர பாவம்] காணும் தியாகராஜரின் அன்புக்குப் பல கீர்த்தனைகள் சான்றுகளாகின்றன. “ஓ, ராமா! ஏன் அருகில் வரமறுக்கிறாய்? அனாதையான பெண்ணுக்கு கணவனைத்தவிர வேறுயாரும் இல்லாததைப்போல நான் உன்னையே நம்பியிருக்கிறேன். மேருமலையைப்போல நீ உறுதியானவன். ஏன் என்னைக் காப்பாற்ற வரமாட்டாயா? “சேரராவதேமிரா” என்று கெஞ்சும் பாவனை வெளிப்படுகிறது.

கடவுளே!என்னுடன் பேச மாட்டாயா? நீ விரும்பியபடியெல்லாம் நான் நடந்துகொள்ளும்போது ஏன் என்மீது கோபம் கொள்கிறாய்? மற்றவர்கள் என்னைப் பார்த்துச் சிரிப்பது நியாயமாகுமா? கடவுளிடம் அன்பு செலுத்த பெற்றோர் சொல்லித்தந்தார்கள். மற்றவர்கள் என்னை வேதனைப் படுத்துகின்றனர் அவையெல்லாம் தெரிந்தும் இன்னும் எவ்வளவுநாள் நீ மௌனமாக இருக்கப்போகிறாய், தியாகராஜா? “பலுகவேமி நா தைவமா” என்று புலம்பல் பாணியில் கீர்த்தனை அமைகிறது.

அந்த நினைவின் ஆக்கிரமிப்பில் வேகத்தில் மனதைத் தூதுபோல அனுப்புவதும், கட்டளையிடுவதும் இயல்பாகிறது. அந்தப் பார்வையில்தான் “மனமே! போய் என் தெய்வத்தை வேகமாகக் கை பிடித்து அழைத்து வா! எனக்கு பேரானந்தத்தைத்தர அவனை வேகமாக அழைத்துக் கொண்டுவா [சனிதோடி தேவே]” என்று ராமனைத் தன்னிடம் அழைத்து வரவேண்டியது மனதின் கடமை என்று ஆணையிடுவதாக ஒரு கீர்த்தனை வெளிப்படுகிறது. மனதைப் பெண்ணாக்கி இயல்பாக மனிதர்கள் நடைமுறையில் எதற்கும் சொல்லும் சொற்களைப் பயன்படுத்தி, காதலை வெளிப்படுத்துவதாக ஒரு கீர்த்தனை:

“என் பணிப்பெண்–மனம் உன்னிடம் காதல் கொண்டுள்ளாள். ஆனால் நீயோ அதைப் பொருட்படுத்தாமல், அவளைக் கைப்பிடிக்காமல் இருக்கிறாய். நான் என் மனப்படுக்கையைத் தந்திருக்கிறேன். நீ ஏன் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது? நம்பிக்கையோடு நான் உன்னிடம் அன்புகாட்டுகிறேன். ஆனால் பிரமன் என் தலையெழுத்தை வேறுவிதமாக எழுதிவிட்டான் போலிருக்கிறது,’ என்று காதலை மனம்நொந்த தன்மையில் வெளிப்படுத்துகிறார். [“ராமாபி ராமா”]

“ஓ ராமா இது என்ன வாழ்க்கை, நான் ஏன் பிறந்தேன்?
எவ்வளவு நாள் நான் சகிப்பது?
நான் அவனைப் பார்க்க முடியாவிட்டால்
அவனோடு பேச முடியாவிட்டால்
இந்த வாழ்க்கையால் என்ன பயன்?
அன்போடு அவனைத் தழுவ முடியாவிட்டால் என்ன பயன்? ”

“ஏடி ஜன்மமிதி ஹா” என்ற வராளிராகத்தில் அமைந்த இந்தக் கீர்த்தனை முழுக்கமுழுக்கச் சிருங்கார ரசமுடையது. பிரிவும், வெறுப்புமான வேதனையை வெளிப்படுத்துவது. ராமனைத் தழுவாத வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று நொந்து கொள்ளும் நிலையிலமையும் இது மதுரபாவத்தின் சிறந்த வெளிப்பாட்டு கீர்த்தனையாகக் கருதப்படுகிறது.

ராமா! எப்போதும் உடனிருந்திருக்கிறாய். கையைப் பிடித்துக்கொண்டபிறகு விடக்கூடாது. பிறந்ததிலிருந்து என்னைப் பாதுகாக்கிறாய். எது நிரந்தரம், எது தற்காலிகம் என்று காட்டியிருக்கிறாய். என்னை விட்டு விடாதே [“பட்டி விடுவராது”] என்ற கீர்த்தனையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தவறுகண்டுபிடித்து மற்றவர்களைக் குறைகூறுவது மனிதனின் இயல்பான குணம். இந்தத் தன்மையில் மனிதர்கள் தம்மையே இழந்து விடுவது காலந்தோறும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. தியாகராஜர் எளிமையான விளக்கம்தந்து இதை நீக்க நினைக்கிறார்.

“ஓ ராமா! உன்னிடம் என்ன குறை இருக்கிறது? அது என் குற்றம்தான்.
தங்கத்தின் தரம் நன்றாக இல்லாவிட்டால் பொற்கொல்லனை எப்படிக் குறை சொல்லமுடியும்?
உன் மகளால் பிரசவ வலியைப் பொறுக்க முடியாவிட்டால் மருமகனை எப்படிக் குறைசொல்லமுடியும்?
என் முந்தைய பிறவிகளில் நான் நல்லவற்றைச் செய்யாதபோது கடவுளை வழிபட மறந்தபோது
என் கஷ்டங்களுக்கு நான் எப்படி உன்னைக் குறைசொல்லமுடியும் தியாகராஜன் உன் பாதம் வணங்குகிறேன்”

என்பது “மீவல்ல குணதோஷமேமி” என்ற காபி ராக கீர்த்தனையாகும்.

இதில் சாதாரண மக்களுக்கும் புரிகிற, அவர்கள் அறிந்த எளிய உவமைகள், பேச்சுவழக்குச் சான்றுகள் முன்னிறுத்தப்படுகின்றன. மனதிற்குகந்த ராமனை எந்தச் சூழ்நிலையிலும் குற்றம்சொல்ல தியாகராஜர் தயாராக இல்லை. தனது சிக்கல்களுக்கு ராமன் உதவாமல்போக, கூடியிருப்பவர்கள் காரணமா என்ற சந்தேகத்தை ராமனிடம் முன்வைப்பதாக அமையும் ஒரு கீர்த்தனை படித்து ரசிப்பதற்குரியதாகும்.

“ஓ ராமா! என்னைக் காப்பாற்றாமல் நீ விட்டுவிடுவது நியாயமா?
பக்தர்கள் உனக்கு நெருக்கமானவர்கள்
சீதாதேவி என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்றாளா?
நீண்டகாலமாக உன்னைப் பிரிந்திருந்த பரதன்,
நித்திரையை வெற்றி கொண்ட லட்சுமணன்,
உன் பாதத்தைவிட்டு நீங்காத மாருதி ஆகியோர்
எனக்கு உதவவேண்டாமென்று சொல்லி விட்டார்களோ?
பிரமன் என்பக்தியின் தரம்பற்றி உன்னிடம் சொல்லவில்லையா?
வாணி என்னைப்பற்றிச் சிறப்பாக எதுவும் சொல்லவில்லையா?
தியாகராஜா! இது என்ன? ”

“யுக்தமு காது நனு ரக்ஷிஞ்சகனுண்டேதி” என்ற ஸ்ரீ ராகக் கீர்த்தனை ராமனைக் குறைசொல்லாத, ஆனால் அவனைச் சுற்றியிருக்கும் மற்றவர்களை காரணிகளாக்குகிற நயத்தை மிக அழகாகக் காட்டுகிறது. மனவடக்கம் என்பது அவரவர் கையிலிருப்பது. அதற்கு வேறு எந்தத்தகுதியும் தேவையில்லை. “மனிதனுக்குத் தன் மனதை அடக்கத் தெரியாவிட்டால் கோயில்மணி அடிப்பதும் மலர்வைத்து பூஜைசெய்வதுமான வழிபாடு எதற்கு? வஞ்சக எண்ணம் கொண்டவன் காவேரியிலும், மந்தாகினியிலும் நீராடினால் மட்டும் கடவுள் காப்பாற்றிவிடுவாரா? காமமும், கோபமும் கொண்டு வாழ்பவன் பூஜைபுனஸ்காரங்களால் எதையும் செய்யமுடியாது தியாகராஜா” “மனஸு நில்ப சக்திலேக போதே” என்ற ஆபோகி ராக கீர்த்தனை எளிய நிலையில் சாதாரண மனிதனுக்கும் பக்தியின் தன்மையைப் புரியவைக்கிறது.

எது உண்மை பக்தி என்பதை எளிய உவமைகளில் சொல்கிற “பலமு குலமு” என்ற ஸாவேரி ராகத்திலான பிரபலமான கீர்த்தனை கீழே :

“வெறும் உடல்பலத்தால் என்னபயன்?
உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன்?
சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான்
காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா?
கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா?
ஆடு புல்தின்றால் அது உபவாசமா?
வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா?
குரங்கு காட்டில் வசிப்பதால் சந்நியாசியாகிவிடுமா?
உண்மை பக்தியைதான் ஏற்கிறான் தியாகராஜா!”

என்று எளிமையான சான்றுகளால் உயர்ந்த தத்துவத்தையும், உண்மையையும் வெளிப்படுத்துகிறார்.

இது போலவே, மனஅமைதி இல்லாதவனுக்கு மகிழ்ச்சி யில்லை [சாந்தமுலேகா சௌக்யமுலேது] என்ற தத்துவத்தை ஒரு கீர்த்தனை சொல்கிறது. “புலன்களை அடக்கிக் கொண்டவனும், தத்துவார்த்தமுடையவனும்கூட மன அமைதியில்லாவிட்டால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. சொத்து, குடும்பம் என்று வாழ்க்கை உயர்ந்தநிலையிலிருந்தாலும், வழிபாடுகள் செய்தாலும் அடிப்படையான அமைதியில்லாவிட்டால் மகிழ்ச்சியில்லை என்ற கருத்து இக்கீர்த்தனையில் வெளிப்படுகிறது. இன்றைய உலகில் இதை நம்மால் மிகஅதிகமாகப் பார்க்கமுடிகிறது. வளர்வுக்கான அடிப்படைச் சிந்தனைத்தளம் நமக்குள்ளிருக்கும்போது அதை வளர்ப்பது நம்முடையதாகிறது என்ற ஆழமான தத்துவம் அவரால் வெளிப்படுத்தப்படுகிறது.

அவருக்குச் சிவ-வைணவ பேதமில்லை. ஓம் நமோ நாராயணா என்பதிலுள்ள ’ரா’ என்பதையும், “ஓம் நமசிவாய “என்பதிலுள்ள “மா’ என்பதையும் எடுத்துக் கொண்டு “ராமா” என்னும் தாரகமந்திரத்தை அவர் ஏற்றதாகச் சொல்லப்படுகிறது. ’எவரணி நிர்ணயிஞ்சிரிரா’ என்ற தேவாம்ருதவர்ஷிணி ராகத்தில் உள்ள கீர்த்தனையில் இது வெளிப்படுத்தப்படுகிறது.

“நீ சிவனா, விஷ்ணுவா பிரம்மனா ?
சிவமந்திரத்தில் உள்ள மா,
நாராயணா மந்திரத்திலுள்ள ரா
இரண்டும் சேர்ந்த்துதான் ராமா என்பதை புரிந்து கொண்ட
மனிதர்களை இத்தியாகராஜன் நமஸ்கரிக்கிறேன் ”

என்பது அப்பாடல் பொருளாகும்.

இஷ்டதெய்வமாக ராமன் இருந்தபோதிலும் பல பாடல்களில் சிவனைப் போற்றியிருப்பது அவருடைய காழ்ப்பற்ற சிந்தனைக்கு அடையாளமாகும். “சிவசிவயெனராதா ஓரீ’, “சம்போ மகாதேவ” “தேவாதிதேவ சதாசிவா” என்பன சிவனைப் போற்றுவதாகின்றன. சூரியன், சந்திரன், நெருப்பு என்ற முக்கண்ணுடையவன்!விஷ்ணுவும், பிரமனும் சிவனைக் ’கண்டறிய’ முயன்று தோற்றனர். சிந்தனைக் கெட்டாத உயர்வுடையவன் அவன் தியாகராஜா என்று சிவனைப் பற்றிய போற்றுதல்கள் இக்கீர்த்தனைகளில் இடம் பெற்றுள்ளன.

செல்வம்தந்து, துன்பங்களை நீக்குபவன் கணபதி. பிரமனும் பிறகடவுளரும் வணங்கும் யானைமுகத்தன் என்று கணபதிபற்றிச் “ஸ்ரீ கணநாதம்”, “ஸ்ரீ கணபதி” போன்ற கீர்த்தனைகள் பேசுகின்றன.

காவிரியாறு பற்றிய கீர்த்தனைகளுமுண்டு “காவிரியாற்றின் பேரழகைப் பாருங்கள்! . மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி, பாரபட்சமின்றி அவர்களின் பாவங்களைக் கழுவி, மலையின் ஓரிடத்தில் மலைமீது அதிர்வு ஒலியோடு சீறிப்பாய்ந்தும், இன்னொரு இடத்தில் ஆறுதலாய் மென்மையாக ஓடியும், காவிரி அழகாக இருக்கிறது. பக்தர்கள் காவிரியின் இருபக்கத்திலும் நின்று வணக்கம் செய்கின்றனர் தியாகராஜா” என்று காவிரியைக் “சாரி வெடலின ஈ காவேரி” என்ற அஸாவேரி ராக கீர்த்தனையாக்குகிறார். சோழநாடும் கீர்த்தனையின் அங்கமாகிறது. உலகின் அழகான இடம் என்ற மனவெளிப்பாட்டில் “ஈ மஹிலோ ஸொகஸைன சோழசீமயந்து” என்று “முரிபெமு கலிகேகதா” என்ற முகாரி ராகப்பாடலில் போற்றியிருக்கிறார்.

அவர் கற்ற வேத, உபநிடத, புராணக்கருத்துக்கள், தத்துவார்த்தங்களை மிக எளிமையாக மக்களுக்குக் கீர்த்தனைகளில் வெளிப்படுத்துகிறார்.

“ஸோபிலு சப்தஸ்வர சுந்தருல’ என்ற கீர்த்தனை வேதங்களிலிருந்து தோன்றிய சப்தஸ்வரங்கள் வழிபாட்டிற்குரியவை என்கிறது. கலியுக மக்களின் பக்தி குறித்தும் தியாகராஜரின் கீர்த்தனை பேசுகிறது. “ஓ ராமா! பதவியின், பணத்தின்பின்னால் அலைகிறவர்களுக்கு தாரகமந்திரத்தின் சக்தி தெரியாது. சமைக்கப்பட்ட இனிய அவலின் சுவை காளைமாட்டிற்கு எப்படித் தெரியும் [கலி நருலகு மகிமலு]” என்ற கீர்த்தனை குறிப்பிடத்தக்கது. தமிழ்ச்சித்தரின் கருத்தான “சுட்டசட்டி சட்டுவம் அறியுமோ கறிச்சுவை” என்ற கருத்தைத் தியாகராஜர் “துத்தபாலருசி தெலியு சாம்யமே” என்று “எந்தமுத்தோ” என்ற பிந்துமாலினி ராகப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்.

தியாகராஜரின் கீர்த்தனைகளால்கவரப்பட்டு கோபாலகிருஷ்ணபாரதி அவரைச் சந்திக்கப் போகிறார். அந்த நேரத்தில் அவருடைய சீடர்கள் ஆபோகி ராகத்தில் ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருக்கின்றனர். அது பாரதியின் மனதைக் கவர்கிறது. தியாகராஜர்-பாரதி இடையே நடக்கும் சுவையான உரையாடல் இங்கு:

தியாகராஜர் : “நீங்கள் எந்த ஊர்? ”
பாரதி : “தாசன் மாயவரம்”
தியாகராஜர் : “அங்கே கோபாலகிருஷ்ணபாரதி என்று ஒரு சங்கீத வித்வான் இருக்கிறாராமே. உங்களுக்கு அவரைத் தெரியுமா? அவர் சௌக்யமா? ”
பாரதி : “தாசன்தான் அது”

என்று சொல்ல தியாகராஜருக்கு பெரும் வியப்பேற்படுகிறது. சில கணங்கள் அவரையே பார்க்கிறார். பின்பு

தியாகராஜர் : நீங்கள் ஆபோகி ராகத்தில் கீர்த்தனைகள் பாடியிருக்கிறீர்களா?”

பாரதி மௌனமாக இருக்கிறார். மாணவர்கள் தொடர்ந்து சிலகீர்த்தனைகள் பாடுகின்றனர். பாரதி விடைபெற்றுத் திரும்புகிறார். வழிநெடுகிலும் ஆபோகியே மனதை ஆக்கிரமிக்கிறது. இரவோடிரவாக சபாபதிக்கு வேறுதெய்வம் சமமாகுமா என்ற ஒரு கீர்த்தனையை உருவாக்குகிறார். அடுத்தநாள் தியாகராஜரைச் சந்தித்து அக்கீர்த்தனையைப் பாடிக்காட்டுகிறார்.

தியாகராஜர் : நேற்று ஆபோகி பற்றிக் கேட்டபோது ஒன்றும் சொல்லவில்லையே? ”
பாரதி : “இதற்கு முன்பு ஆபோகியில் ஒன்றும் பாடியதில்லை. நேற்று இரவுதான் பாடினேன்”

என்று பெருமையோடு பதில் தருகிறார். இது தியாகராஜரை ஆனந்தத்திற்குள்ளாக்குகிறது. இதையடுத்து பாரதியிடம் சங்கீத அறிஞர்கள் தியாகராஜரின் பஞ்சரத்னக்கீர்த்தனை போலத் தமிழில் இயற்ற வேண்டுமென்று வேண்ட அவர் ஹரஹர சிவ சங்கர கருணாகர, சரணாகதியென்று நம்பி வந்தேன், பிறவாத முக்தியைத் தரும், மறவாமல் எப்படியும் நினைமனமே உள்ளிட்ட கீர்த்தனைகளைப் பாடுகிறார்.

ஒருமுறை தியாகராஜர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதன் கோயிலருகே உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். அப்போது ரங்கநாதரின் தேர் ஊர்வலம் அந்த வீதியில் வர, அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து தோடி ராகத்தில் ’ராஜு வெடலெ’ என்ற கீர்த்தனையைப் பாடுகிறார். ஊர்வலம் வீட்டினருகே வர எதிர்பார்ப்போடு காத்திருக்க, தேர் வேறு ஒருதெருவில் திரும்பி, அசையாமல் நின்றுவிடுகிறது. ஓர் உண்மையான பக்தன் மன வருத்தம் அடைந்ததால்தான் தேர்நகரவில்லை என்று சிலர் சொல்ல அவர் தேர்முன்பு அழைத்து வரப்படுகிறார். அப்போது அவர் “வினரதநா மனவி” மற்றும் “ஓ ரங்கசாயி” என்று இரண்டு கீர்த்தனைகள் பாடுகிறார். தேர் நகர்கிறது. ஸ்ரீரங்க பஞ்சரத்னம் அப்படி உருவானதுதான். இப்படியே கோவூர் பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்னம், திருவொற்றியூர் பஞ்சரத்னம் ஆகியவை அவரால் பாடப்பட்டுள்ளன.

தியாகராஜருக்குப் பல சீடர்களிருந்தாலும் வெங்கடரமண பாகவதர், அவர் மகன் கிருஷ்ணசாமி பாகவதர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இருவரும் இணைந்துதான் தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றை உலகிற்குச் சொன்னவர்கள். தியாகராஜர் இயற்றிய மூன்று இசைநாடகங்களை நமக்கு அறிமுகப் படுத்தியவர் வெங்கடேச பாகவதர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களுரைச் சேர்ந்த நாகரத்னம்மா இசை, நடனம் இரண்டிலும் பேரார்வம் கொண்டவர். தியாகராஜரின்மீது எல்லையற்ற அன்பும், மரியாதையும் உடையவர். அவருடைய பாடல்களில் யதுகுலகாம்போதி ராகத்திலமைந்தவை அவருக்கு மிகப் பிடித்ததாகும். எனவே ’ஸ்ரீராமா ஜெயராமா ’என்ற கீர்த்தனையை எல்லா நிகழ்வுகளிலும் பாடித் தன்னையும், மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவார். ஒரு நாள் ராமபக்தனான தியாகராஜருக்கு சமாதிமண்டபம் கட்டுவது போன்ற காட்சி கனவில் நாகரத்னம்மாவுக்கு ஏற்பட்டது. அதற்குப் பிறகு தன் வசதியான வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு நிதிதிரட்டியும், உதவிகேட்டும் மண்டபம் கட்டும் பணியைச் செய்து முடித்தாள். அந்த மண்டபத்தில்தான் ஆண்டுதோறும் இன்றும் தியாகராஜர் உற்சவம் நடத்தப்படுகிறது.

மிகப் பெரிய அளவுடைய பஞ்சரத்ன கீர்த்தனைகள் மட்டுமின்றி, சிறியதான உத்சவ சம்பிரதாய கீர்த்தனைகள், திவ்யநாம சங்கீர்த்தனைகள் என்று பண்டிகைப் பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் அவர் தன் ஆழமான பக்திச் சிந்தனைகளை வெளிப்படுத்தி இருப்பதோடு சமஸ்கிருத வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

அவர் வாழ்ந்த காலகட்டத்தில், குறிப்பாகத் தஞ்சையில் இசை மற்றும் நடனத்தோடு இணைந்த இசைநாடகங்களுக்கு பெரிய அளவு வரவேற்பு இருந்தால் அந்தச் சூழலில் பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரிதம், சீதாராம விஜயம் என்ற மூன்று இசை நாடகங்களைப் படைத்திருக்கிறார் . வர்ணனைப்பாடல்கள், விளக்கப்பாடல்கள், உரையாடல்பாடல்கள், அறிமுகவிளக்கம், உரைநடைப் பத்திகளாக அவை அமைந்துள்ளன. நாடகமாக நடிக்கப்படவில்லையெனினும் அவை அபிநயத்தோடு பாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பிரகலாத பக்தி விஜயம் பக்தியையும், நௌகசரிதம் கண்ணன் கோபிகையருக்கு முக்தியைக் காட்டிய நிகழ்வையும் விளக்குவதாகும்.

சாதாரண மக்களுமறிந்த எளிய ஆனால் மனதில் பதியும் உவமைகளை பல கீர்த்தனைகளில் பயன்படுத்தியுள்ளார் வழக்கிலுள்ள பழமொழி, மரபுச்சொற்கள், அறநெறிக்கதைகள், உவமைகள், உருவகம் ஆகியவையும் பயன்படுத்தப் பட்டுள்ளன. சில சான்றுகள்;

கையில் மோர் இருக்க நெய்க்கு கவலைப்படுதல்
பாத்திரத்திற்குப் பாலின் சுவை தெரியுமா?
தலைக்கு வந்து தலைப்பாகையோடு போனது
குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுதல்
பிணத்திற்குச் செய்யும் அலங்காரம் போல
மனமே !ராஜபாதை இருக்கும்போது குறுக்குப் பாதையில் ஏன் போகிறாய்?
பாலும் நெய்யும் இருக்கும்போது சாராயத்தை ஏன் தேடுகிறாய்?
ஒரு காசுமில்ல்லாத ஏழைக்குவைரம் கிடைத்ததுபோல
கஞ்சிகூட இல்லாதவனுக்கு அமிர்தம் கிடைத்ததைப் போல,
தெருவில் ஆடுபவனுக்கு விழாமேடை கிடைத்ததுபோல

என்று உவமைகள், சான்றுச் சொற்கள் இயல்பாக வந்து விழுகின்றன.

தியாகராஜர் நாதோபாசனையாக தன் பக்தியை கீர்த்தனைகளின் மூலம் வெளிப்படுத்தி, அதிகமான உலக ஆசைகளின் விளைவையும், அதிலிருந்து விடுபடவேண்டியதன் அவசியத்தையும் காட்டுகிறார். எளிய நாமவழிபாட்டின் மூலம் அருளையடையும் உயர் தத்துவமும் அவரால் விளக்கப்பட்டிருக்கிறது. “ராமநாமத்தின் கோயில்; . உணர்ச்சி வெளிப்பாட்டில் மீரா;பக்தியில் கபீர்; இசையில் புரந்தரதாசன்; தொலைநோக்கில் நம்மாழ்வார் என்று சுத்தானந்த பாரதி தியாகராஜரைப் பல உருவங்களில் போற்றுவது குறிப்பிடத்தக்கது.

7 Replies to “தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்”

  1. கட்டுரை நன்றாக இருக்கிறது.

    இரண்டு பிழைகள். மாற்றிவிட வேண்டும்.இல்லாவிடில் எதிர்கால சமுதாயம் இதை உண்மை என்றே நம்பிவிடும்.

    //ராமபிரும்மம்–சீதாம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்த தியாகராஜர் திருவையாற்றுக் கடவுளான தியாகேசப்பெருமானின் பெயரிடப்பட்டவர்.//

    திருவையாற்று சுவாமியின் திரு நாமம் பஞ்சந‌தீஸ்வரர். தியாகராஜரின் பெயர் திருவாரூர் தியாகராஜ சுவாமியின் பெயர்.

    //தன் தம்பி அவமானம் செய்தவிட்டதாக நினைத்துக் கோபமடைந்த சரபோஜி மன்னரின் அண்ணன் ஜபேசன், தியாகராஜர் எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் ராமர் விக்கிரகத்தைக் காவிரியில் எறிந்துவிடுகிறார்.//

    ஜபேசன் தியாகராஜரின் அண்ணன். சரபோஜியின் அண்ணன் அல்ல்.மன்னர் அளித்த பொருள்களைப் பெற்றுக்கொண்டு குடும்ப வறுமையைப் போக்கியிருக்கலாமே என்பது ஜபேசனின் நிலைப்பாடு.இந்த ராமனின் மேல் இருக்கும் மயக்கத்தால்தானே உலகாயதம் தெரியாமல் தம்பி இருக்கிறான் என்ற கோபத்தில் ராமர் விக்ரகங்களைத் தூக்கி ஆற்றில் எறிந்தார் ஜபேசன்.

  2. ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் பற்றிய கட்டுரையைப் படித்த வரை, கட்டுரையாசிரியர் சுவாமிகளின் கீர்த்தனங்களிலும், இசையிலும் வல்லவராக இருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். பல பாடல்களின் கருத்துக்களைப் பொருத்தமாகக் கொடுத்திருப்பதும் பாராட்டுக் குரியது. நல்ல பாலில் ஒரு சொட்டு அழுக்கு சேர்வது போல ஒருசில குறைகளும் தென்படுகின்றன. அவற்றைச் சரிசெய்து கொள்வது நல்லது. ஸ்ரீதியாகராஜரின் வாழ்க்கைக் குறிப்பை கட்டுரை ஆசிரியர் சொல்லியிருப்பது போல அவருடைய சீடர் வெங்கடரமண பாகவதரின் வாரிசுகளான கிருஷ்ணசாமி பாகவதர், ராமசாமி பாகவதர் ஆகியோர் 1935இல் எழுதியுள்ள நூலில் சுவாமிகளின் வாழ்க்கையும், சில கீர்த்தனங்களின் ஸ்வரவரிசைப் படுத்தப்பட்டவைகளும் வெளியாகியுள்ளன. என்னிடம் இருந்த ஒரு பிரதியை தஞ்சை பஜ்ஜி திரு இராதாகிருஷ்ணன் புதிய பதிப்பு வெளியிடுவதற்காக வாங்கிச் சென்றிருக்கிறார். ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதுவோர் ஆங்காங்கே அவருடைய கீர்த்தனங்களில் காணப்படும் செய்திகளின் உண்மைப் பொருளைக் காணாமல், அதன் மேலோட்டமான கருத்தையொட்டி சில கற்பனை கதைகளை ஜோடித்து விடுகிறார்கள். அவைகளில் குறிப்பாக 1) திருப்பதியில் திரை விலகப் பாடியது 2) கோவூர் முதலியார் அளித்த பொன் முடிப்பை பல்லக்கில் கட்டி வைத்திருந்ததாகவும், வழியில் சில கள்வர்கள் அதை கொள்ளை அடிக்க முயன்றபோது ராம இலக்குவர் வந்து வில்லால் அடித்து விரட்டியத கதை 3) மன்னன் சரபோஜி அழைத்தும் போகாமல், சம்பாதிக்காமல் அவர் அழைப்பை மறுத்ததால் கோபமுற்று அவருடைய அண்ணன் ஜல்பேசன்அவர் வழிபடும் விக்கிரகங்களை காவிரியில் எறிந்ததாகவும் இப்படிப் பல கதைகள். டாக்டர் வி.ராகவன் எழுதி, சாகிதிய அகாதமி வெளியிட்டுள்ள நூலிலும் இதுபோன்ற புனைவுகளை கடுமையாக அவர் சாடியிருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தக் கட்டுரை ஆசிரியரின் கட்டுரையையும், உள்ளடக்கத்தையும் பாராட்டுவதோடு, அதிலுள்ள குறைகளையும் சுட்டினால்தான் நியாயமாக இருக்கும்.
    ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் பற்றிய இந்தக் கட்டுரையில் காணப்படும் சில பிழைகளையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    “திருவையாற்றுக் கடவுளான தியாகேசப்பெருமானின்” – திருவையாற்று ஈசனின் பெயர் ஐயாறப்பர், பஞ்சநதீஸ்வரர், பிரணதார்த்திஹரர். தியாகேசர் திருவாரூர் ஆலயத்து ஈசன்.

    “சரபோஜி மன்னரின் அண்ணன் ஜபேசன்” – ஸ்ரீதியாகராஜரின் மூத்த சகோதரர் பெயர்தான் ஜல்பேசன். ஜபேசன் அல்ல. சரபோஜியின் அண்ணனுமல்ல.

    “திரை விலகி அவருக்கு திவ்யதரிசனம் கிடைக்கிறது” – இந்தப் கீர்த்தனையின் மூலம் அவர் சொல்லும் செய்தி அவர் மனதிலுள்ள ஆசாபாசங்கள், அக்ஞானங்கள் இறைவனைக் காண முடியாமல் செய்கிறது. இந்த குணங்கள் நீங்கி நான் இறைவனைக் காணல் ஆகாதா? என்பதுதான் கருத்து. சுவாமி சந்நிதி திரை விலகுவதற்காக அல்ல. மனத்தினுள் ஆக்கிரமித்திருக்கும் ஆசாபாசங்கள் எனும் திரையைத்தான் சொல்கிறார். மேலும் சிறந்த இராம பக்தர், சுவாமி சந்நிதியில் இருக்கும் திரை ஏன் போடுகிறார்கள் என்பதும், அந்தத் திரை விலக்கினால் மட்டுமே தரிசிக்க வேண்டுமென்று தெரியாதா? அதை விலகச் சொல்வாரா?

    “ஆனந்தபைரவி ராகத்தில் மேலும் பாடல்களை இயற்றவேண்டாம்” – ஸ்ரீதியாகராஜர் போன்ற மிக உயர்ந்த மகான்களிடம் போய் சாதாரண பாடகர்கள் நீங்கள் இனி இந்த ராகத்தில் பாடவேண்டாம் என்று கேட்பார்களா? கேட்பது முறையா? தெரியவில்லை. மேலும் அந்த நாட்களில் வறுமையின் காரணமாகச் சில இசைக் கலைஞர்கள் பெரும் தனவந்தர்களிடம் தங்களுக்குப் பெயர் வாங்கித் தந்த சிறந்த ராகத்தை அடகு வைத்துவிட்டு பணம் பெறுவர் என்றும், பணத்தைத் திரும்பத் தரும் வரை கலைஞர் அந்த ராகத்தைப் பாடுவதில்லை என்பதும் தெரிய வருகிறது. ஜி.வி.ஐயர் எனும் இயக்குனர் எடுத்த “ஹம்ஸே கீதே” எனும் படத்திலும் இந்தக் கருத்து காட்சியாக வருகிறது.

    கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீதியாகராஜர் சந்திப்பு பற்றிய செய்திகளும், பாரதியார் “ஆபோகி”யில் இயற்றியுள்ள “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா” பாடல் செய்தியும் சரி. காலையில் காவிரிக்கு ஸ்நானம் செய்யச் செல்லும்போது வாயில் திண்ணையில் அமர்ந்திருந்த பாரதியாருடன் தியாகராஜர் நடத்திய உரையாடலும் சரி. உடனே பாரதியார் ஐயாறப்பர் ஆலயத்தில் நவகிரகம், ஆதி விநாயகர் ஆகிய சந்நிதிகள் அடங்கிய, தக்ஷிணாமூர்த்தியின் பார்வை படும்படி அமைந்த “தியான மண்டபத்தில்” அமர்ந்து அந்தப் பாடலை அவர் இயற்றினார் என்பது வரலாறு.

    நாமும் நமது கற்பனைக் குதிரையைச் சற்று தட்டி விட்டால் இங்கும் இன்னொரு கற்பனைக் கதையை உருவாக்க இயலும். அதாவது ஸ்ரீ தியாகராஜர் இராமபிரானையே கண்கண்ட தெய்வமாகப் பாடிக்கொண்டும், அவனுக்கு இணை யாரும் இல்லை என்று இறுமாந்திருந்த நிலையில், தில்லை நடராஜப் பெருமானையே வழிபடும் கோபாலகிருஷ்ண பாரதியார் அவருக்கு ஏட்டிக்குப் போட்டியாக தான் வழிபடும் தில்லை நடராஜனுக்கு இணை யாரும் இல்லை எனும் பொருளில் “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?” என்று பாடி அவரை வம்புக்கு இழுத்ததாகக் கூடச் சொல்லலாமே! இல்லையா? இது கற்பனையான வாதம் தான், இதில் கிஞ்சித்தும் உண்மை இல்லை.

  3. நான் எழுதி, தஞ்சை அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள “திருவையாற்று வரலாறு” எனும் நூலிலும் இதுபோன்ற சில சர்ச்சைக்குரிய பகுதிகளைச் சுட்டிக்காட்டியும், சில தவறான செவிவழிச் செய்திகளை மறுத்தும், உண்மையான வரலாற்றை எழுதியிருக்கிறேன்.

  4. அன்புள்ள K.Muthuramakrishnan மற்றும் தஞ்சை வெ.கோபாலன் அவர்களுக்கு, அந்த இரு பிழைகளும் திருத்தப் பட்டு விட்டன. சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.

  5. இக்கட்டுரை முதலில் வெளியிடப் பட்டவுடன் வாசகர்களும் அறிஞர்களும் பல தகவல் பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டினர். அவற்றை முதலிலேயே களையாது வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோருகிறோம். கர்நாடக இசையிலும் தியாகராஜ கீர்த்தனைகளிலும் புலமை வாய்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நண்பர் இக்கட்டுரையை முழுமையாகத் திருத்தி அளித்தார். அவருக்கு எமது நன்றி. நீங்கள் இப்போது வாசிப்பது அந்தத் திருத்தங்களுடன் கூட வடிவம்.

  6. இந்த கட்டுரையையும், இதன் பின்னூட்டங்களையும் ஒட்டி சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். “மகான்கள் அவதாரம் செய்கிறார்கள். மகான்கள் மக்களால் உருவாக்கப்படுவதில்லை. சாதாரண மனிதனை மகானாக உருவகப்படுத்திக் காட்டத்தான் கற்பனையான அற்புதங்களைச் சேர்க்க வேண்டும். தியாகராஜ சுவாமிகள் உலகம் ஒப்புக்கொண்ட ஒரு மகான். இராமபிரானை வணங்கி பாடிப்படி மோட்சம் அடைந்தவர். அவர் கீர்த்தனங்களில் வாழ்க்கைச் சிக்கல்கள், சவால்கள், சோதனைகள் இவற்றைச் சந்தித்தும் இருக்கிறார், சமாளித்தும் இருக்கிறார். செல்வம், புகழ், செளகரியம் இவைகளைத் தேடி அலைந்தவர் அல்ல அந்த மகான். தத்துவங்களை, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மார்க்கங்களை அவர் தன் கீர்த்தனங்களில் குறிப்பிடுவதையொட்டி, அவைகள் அவர் வாழ்வில் நடந்தது போலவும், அதற்காக அவர் அற்புதங்களை நிகழ்த்தினார் என்று சொல்வதும், எழுதுவதும் ஆதாரமற்ற செயல்பாடுகள். திருப்பதியில் திரை அறுந்து விழுந்ததற்கும், வழிப்பறி செய்ய திருடர்கள் வந்தபோது இவருக்கு உதவியவர்கள் இராம லட்சுமணர் என்பதற்கும் ஆதாரங்கள் உண்டா? இறைவனைத் தேடித் தேடி அவர் தன்னுள் இருக்கிறார் என்பதை கடைசியில் உணர்ந்த மகான்களும் உண்டு. அதைத்தான் தியாகராஜரும், “ராமா! உன்னை எங்கெல்லாம் தேடி அலைவேனடா, நீ என் வசம் ஆகமாட்டாயா?” என்று சொல்வதை அவர் ஆற்றில் இராம விக்ரகத்தைத் தான் அப்படித் தேடினார் என்று சொல்லலாமா? இந்த பாரத பூமியில் தோன்றிய மகான்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் இறைவனை உணர்ந்தவர்களே தவிர, அற்புதங்களை நிகழ்த்தி மாயாஜாலம் செய்தவர்கள் அல்ல. அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும் அப்படி இருப்பவர்களை மகான்களாகவே நாமும் வழிபடுவோம். அவர்களுக்கு அற்புதங்கள் எனும் அலங்காரம் தேவையில்லை.

  7. //இந்த பாரத பூமியில் தோன்றிய மகான்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் இறைவனை உணர்ந்தவர்களே தவிர, அற்புதங்களை நிகழ்த்தி மாயாஜாலம் செய்தவர்கள் அல்ல. அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும் அப்படி இருப்பவர்களை மகான்களாகவே நாமும் வழிபடுவோம். அவர்களுக்கு அற்புதங்கள் எனும் அலங்காரம் தேவையில்லை.//

    மிகவும் அற்புதமான மற்றும் நூற்றுக்கு நூறு சத்தியமான வாக்கியம். சித்து வேலைகளையும் நம்ப முடியாத மாய வித்தைகளையும் சனாதன தர்மம் நம்பியிருந்ததில்லை தழைத்தோங்கி நிலைத்து நின்றிருந்திருப்பதற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *