கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22

மணிமேகலை கண்களைத் திறந்து பார்த்தாள்.  சென்றநாள் முழுவதும் உதயகுமாரன் வருகைக்குப் பயந்து, தான் சம்பாபதி கோவிலில் மேற்கு வாயிலை நோக்கி இருந்த கம்பக் கடவுளின் கீழே தரையில் படுத்து உறங்கியது நினைவில் எழுந்தது. எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். கோவிலுக்குள் ஒருவரும் இல்லை. சம்பாதியும் உபரி தெய்வங்கள் மட்டும்தான்.

கம்பத்தில் வீற்றிருந்த தெய்வம் அசைவது போலிருந்தது. அதன் முகத்தை மணிமேகலை உற்றுநோக்கினாள்.

“நேற்று நடந்தது எதுவும் தெரியாமல் இப்படித் தூங்கிவிட்டாயே!” என்றது தெய்வம்.

“அப்படி என்ன விசேடமாக நிகழ்ந்தது?” என்று கேட்டாள் மணிமேகலை.

கம்பத்தில் தெய்வம் அடைபட்டிருந்த இடத்தின் நீள அகலத்தில் மாற்றம் எதுவுமின்றிக் கம்ப தெய்வத்தின் உதடுகளும் கண்களும் மட்டும் அசைவுற்றுப் பேசியது, மணிமேகலைக்கு முதலில் விந்தையாகவும் பிறகு அதுவே பழகியும் போய்விட்டது.

“நேற்று இளவரசனுக்கு விஞ்சையன் வாளினால் மரணம் என்று விதி எழுதியிருந்தது.”

“ஆ!” என்றாள் மணிமேகலை.

“முன்பே நிச்சயிக்கப்பட்ட நிகழ்வை மாற்றவல்லவர் யார்?”

“அப்படி என்ன நடந்தது தெய்வமே, கூறு. எனக்கு உடலெல்லாம் நடுங்குகிறது!”

“உன்னைக் காண அரசிளங்குமரன் இரவு இங்கே வந்தான். நீயோ காயசண்டிகையின் வடிவில் இருக்கிறாய். உன்னைத் தேடி காயசண்டிகையின் கணவன் விஞ்சையனும் வந்துவிட்டான். தோற்றப் பிழையில் சினம்கொண்ட விஞ்சையன் உதயகுமாரனை வாள்வீசிக் கொன்றுவிட்டான். அம்பலத்தின் வெளியில் இளவரசன் கொலையுண்டுகிடக்கிறான்.” என்றது.

மணிமேகலை வெளியில் ஓடினாள்.

கைகள் இரண்டும் வெட்டப்பட்டு உதயகுமாரன் கோரமாக இறந்துகிடந்தான். மணிமேகலையின் விழிகளில் கண்ணீர் ஆறாக வழிந்தது.

“முற்பிறவியில் உங்களைத் திட்டிவிடம் என்ற அரவம் தீண்டி உயிர் இழந்ததும் நானும் தாளமாட்டாது நெருப்பில் இறங்கி என்னை மாய்த்துக்கொண்டேன். உவவனத்தில் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்தபோது எனக்கு உங்கள் மேல் கோபம் வராமல் போனதன் காரணத்தை என் முற்பிறவி இரகசியம் மூலம் அறிந்துகொண்டேன். உங்கள்பால் என் உள்ளம் சென்றுவிடக்கூடாது என்பதால் மணிமேகலாதெய்வம் என்னை மணிபல்லவத் தீவில்கொண்டுவிட்டது. ஐயோ! இதென்ன கொடுமை இப்படிக் குருதி வெள்ளத்தில் கிடக்கிறீர்களே?” என்று அரற்றினாள்.

“காதலனே! பிறப்பவர்கள் இறத்தலும், இறந்தவர்கள் பிறப்பதும், அறச்செயல்கள் அமைதி அளிப்பதையும், பாவச்செயல்கள் துன்பம் கொடுப்பதையும் உனக்கு எடுத்துச் சொல்வதற்காகவே நான் காயசண்டிகையின் உருவை அடைந்தேன். ஐயகோ! விஞ்சையனின் கோபம் அவன் வாளில் இறங்கியதோ? உன் தீவினையின் பயன் விஞ்சையன் வாள்மூலம் கிடைத்துவிட்டதா? இது காணப் பொறுக்கவில்லையே!” என்று கதறி அழுதாள் மணிமேகலை.

“மணிமேகலை!” என்று உள்ளேயிருந்து கம்ப தெய்வத்தின் குரல் கேட்டது.

அழுது சோர்வுற்றிருந்த மணிமேகலை தனது விழிகளைத் துடைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

“கயல் விழிகளை உடையவளே! அல்லிமலர் மாலையணிந்த இளவரசன் பின்னால் செல்வதை விடு. போன பிறவியில் அவன் உனக்குக் கணவன் ஆனதும், நீ அவனது பிரிவைச் சகியாததும் உண்மைதான். இது என்ன ஒரு பிறப்போடு நின்றுவிடும் செயலா, சொல்! இன்னும் எத்தனை பிறவிகள் இப்படியே தொடரப் போகிறாய்? எனக்கு இப்பிறவி ஒன்று போதும் என்று கூறியது பொய்யா? அவன் பின்னால் சென்றுகொண்டே இருந்தால் உன் பிறவி முடிவுக்கு வருவது எங்கனம்? சொல்,” என்று கேட்டது அந்தப் பெண்தெய்வம்.

“பெண்தெய்வமே! உன்னை வணங்குகிறேன். அவன் செய்த பாவம் என்ன? முற்பிறவியின் பயனாக அவன் என்னைப் பின்தொடர்ந்தான். தீவினைப் பயனாக விஞ்சையன் வாளினால் வெட்டுப்பட்டு இறந்துகிடக்கிறான். உனக்கு இத்தனை விஷயங்களும் தெரியும்தானே? அப்படித் தெரிந்திருந்தும் நீ என்னைத் தடுக்கிறாய். இதன் காரணங்கள் உனக்குதான் தெரியும். என்னவென்று சொல்லு. கேட்கக் காத்திருக்கிறேன்” என்றாள் மணிமேகலை அரற்றியபடி.

“உன்னிடம் சில கேள்விகளைக் கேட்கிறேன். மணிபல்லவத் தீவில் உன் முற்பிறவி குறித்து அறிந்துகொண்டாய் அல்லவா?”

“ஆமாம்,” என்றாள் மணிமேகலை.

“நீயும் உதயகுமாரனும் முற்பிறவியில் கணவன் மனைவிதானே?

“ஆமாம்”

“தரும தத்தன் யார்?

“புத்தத் துறவி. இந்தப் பூவுலகில் புத்தபிரான் பிறக்கப்போவதை முன்கூட்டியே தீர்க்கதரிசனத்தின் மூலம் கூறியவர்”

“உனக்கு நினைவிருக்கிறதா, மணிமேகலை? போனபிறவியில் நீங்கள் இருவரும் இணைந்திருக்கும்போது பிரம்மதத்தன் உங்களைக் காண வந்தார். நீங்கள் அவருக்கு ஆசனம் கொடுத்து உபசரித்துவிட்டுப் பரிசாரகனிடம் மறுநாள் அவருக்கு நல்ல உணவு சமைக்கச் சொன்னீர்கள்”

“ம். கொஞ்சம் கொஞ்சம் நினைவில் இருக்கிறது. மீதியை நீயே கூறு,” என்றாள் மணிமேகலை.

“அன்று இரவு துறவி உங்கள் இல்லத்தில் தங்கினார். மறுநாள் அதிகாலையில் அந்தப் பரிசாரகன் உணவை வட்டில்களில் இட்டுக்கொண்டு மகிழ்ச்சியுடன் வந்தான். சோர்வின் காரணமாக அயர்வுற்றுக் கீழே விழுந்தான். அவன் கலயங்களில் கொண்டுவந்த உணவுப் பதார்த்தங்கள் மண்ணில் வீழ்ந்து சாப்பிடமுடியாமல் ஆயின.”

“பிறகு?”

“முன்பிறவியில் உன் கணவனாக இருந்த மன்னன் இராகுலனுக்குக் கண்ணைமறைக்கும் கோபம் ஏற்பட்டது. பிரம்மதத்தனுக்குப் படைத்த உணவு இப்படி வீணானதே என்று ஆத்திரம்கொண்டு தனது வாளை உருவி கணநேரத்தில் அந்தப் பரிசாரகனைக் கொன்றுவிட்டான்.”

“அட, கடவுளே!”

“செய்வதைச் செய்துவிட்டு இறைவன் பார்த்துக் கொள்வான் என்று எண்ணுபவன் முட்டாள். ஒரு பிறவியில் ஒருவன் செய்த தீவினையின் பயன் ஒன்று அந்தப் பிறவியிலேயே அவனுக்கு அதற்கான பலனைக் கொடுக்கும். இல்லையென்றால் மறுபிறவியில் தேடிவரும்.  நல்ல நோக்கத்துடன் ஒருவன் தீவினை செய்தாலும் அதன் பயன் அவனை வந்தடையாமல் போகாது. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அதன் பலனை செய்தவனுக்கு அளிக்காமல் தீவினை ஓயாது. புரிந்ததா?”

மணிமேகலைக்கு இப்போதுதான் விளங்கியது.

“அந்தத் தீவினையின் பயனாகத்தான் இந்தப் பிறவியில் உதயகுமாரன் வெட்டுண்டு கிடக்கிறான்.” என்றது கம்ப தெய்வம்.

“இதற்கு முடிவுதான் என்ன?” என்றாள் மணிமேகலை.

“ முடிவா? இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இன்னும் பார் என்னவெல்லாம் நடைபெறப் போகிறதென்று”

“வருவது உரைக்கும் வல்லமை உடைய தெய்வம் நீ என்பதை அறிவேன். எனக்கு இனி நிகழப்போவதைக் கூறு,” என்று மணிமேகலை தெய்வத்தைத் தூண்டிவிட்டாள்.

“அரசனுக்குக் கோபம் வரும். ஆன்றோர்களிடம் யோசனை கேட்பான். பிறகு இந்தக் கொலைக்கு நீயும் ஒரு காரணம் என்று உன்னையும் கைது செய்வான்.”

“என்னையுமா?” என்று மணிமேகலை பதறினாள்.

“விஷயம் உன் தாய் மாதவி மூலம் அறவண அடிகளின் செவிகளுக்குப் போகும். அறவண அடிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உன்மேல் உள்ள பிரியம் காரணமாக இராசமாதேவி உன்னுடைய சிறைக்காவலை இரத்து செய்வாள்.”

“என் தவறு இதில் எதுவும் இல்லையே?”

“ஆத்திரம் கண்ணை மறைக்கும்போது புத்தி யோசிக்கும் திறனை இழந்து விடுகிறது.”

“அது உண்மைதான். பிறகு என்ன நேரிடும்?”

“நீ அறவணர் பாதங்களைத் தொழுது ஆபுத்திரன் தற்சமயம் அரசாளும் சாவகதேசம் செல்வாய். அங்கு அவனிடம் அறமொழிகளைக் கேட்பாய். அவன் பெரிய கப்பலில் மணிபல்லவத் தீவிற்குக் கிளம்புவான். நீ அவனுடன் வான்வழியாக மணிபல்லவம் செல்வாய். தீவதிலகை என்ற பெண்தெய்வத்திடம் தன் முற்பிறவி குறித்து அறிந்துகொண்டு ஆபுத்திரன் சாவகம் திரும்புவான். நீ ஆண்போல வேடமிட்டுக்கொண்டு வஞ்சி மாநகரம் செல்வாய்” என்றது.

“ஆண் வேடமா?”

“ஒரு பெண் துறவியாகப் போய் நின்றால் உன் வாதங்களை எவர் கேட்பார் மணிமேகலை?” என்ற கம்பத்தெய்வம் மேலும் தொடர்ந்தது

 “தங்கள் கடவுள்தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள மொத்த உயிர் தொகுப்புகளுக்கும் மூலகாரணம் என்று கூறும் மதத்தினரும், உருவமற்ற எங்கள் இறைவன் உருவுடைய பிற உயிர்களைப் படைக்கிறான் என்போரும், தமக்கு நேரும் இன்னல்களை ஒரு நோன்பாக மகிழ்வுடன் ஏற்று அதன்மூலம் இன்பமாகிய முக்தி கிடைக்கும் என்று கூறும் சமயத்தினரும், பஞ்சபூதங்களின் சேர்க்கையே இந்தப் பிரபஞ்சம் உண்டாவதற்குக் காரணமே அன்றி, கடவுள் எவரும் இல்லை என்று கூறும் சமயத்தினரும், தங்கள் மதங்கள் குறித்துப் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் முன்வைக்கும் வாதத்தை அன்று நீ கேட்க நேரிடும். அதற்கு நீ மறுவாதம்வைக்க வேண்டாமா?”

“நிச்சயமாக.”

“பஞ்ச பூதங்களின் சேர்க்கை மட்டும்தான் உண்மை, அறம் குறித்த வாதங்கள் எல்லாம் பொய் என்று ஒருவன் முழங்குவான். அவனை நீ மறுப்பாய்.  முற்பிறவி, மறுபிறவி என்ற தத்துவத்தின் உண்மைப் பொருள் அறிந்த நீ அவனை எள்ளி நகையாடுவாய். நீ சிரிப்பதைப் பார்த்ததும் அவனுடைய அகங்காரம் தூண்டப்பட்டு உன்னிடம் நகைத்ததன் காரணம் கேட்பான். உனக்கு மணிபல்லவத் தீவில் நிகழ்ந்ததைக் நீ கூறுவாய். அவனும் விடாமல் அந்தத் தெய்வம் உன்னை மயக்கிவிட்டதால் இவ்வாறு பிதற்றுவதாகக் கூறுவான். ஆனால் நீ அவன் வாதத்தை மறுக்கவேண்டும்”

“எப்படி?”

“ஒருவன் செய்யும் தீவினை அவனை அடுத்த பிறவியில் வந்த சேராது என்று நம்பிக்கொண்டிருப்பது தவறு என்று அவனிடம் கூறு. நிறுவச் சொல்லுவான். அவன் போன்றவர்கள் மரம், கல், செடி போன்றவை பேசா என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள். கம்பத்தில் உள்ள கடவுளும், சித்திரத்தில் எழுதிய தெய்வமும் பேசாது என்று நம்புபவர்கள். அவர்களையெல்லாம் நீ எதிர்த்து வாதம்செய்யவேண்டும்.”

மணிமேகலை துவதிகன் என்ற பெயருடைய அந்தத் தெய்வத்தைக் கூர்ந்து கவனித்தாள்.

“கடந்தகாலம் வருங்காலம் என்று எக்காலங்களிலும் புகழுடன் விளங்கும் இந்தப் பழைய நகரமான புகாரில் கொடியுடன் விளங்கும் தேர்கள் செல்வதற்கென்று அமைக்கப்பட்ட வீதியிலும், பன்னெடுங்காலமாக ஓங்கி உயர்ந்த மரங்களை உடைய மன்றங்களிலும், பன்னெடுங்காலமாகப் பேணப்பட்டு வரும் நீர்த் துறைகளிலும், அம்பலங்களிலும், மன்றங்களிலும் சுதைமண்கொண்டும், கற்களிலும், மரங்களிலும் காவல் தெய்வங்களாகக் கைவினைஞர்கள் வடித்துவைக்கும் தெய்வங்கள் பேசும். ஊரில் உள்ளவர் செய்யும் குற்றங்களைத் தட்டிக் கேட்கும். இல்லையா?”

“ஆமாம்” என்றாள் மணிமேகலை.

“இவ்வளவு ஏன்? என்னைப் பற்றி உனக்குத் தெரியும்தானே?”

“நீ பேசும் தெய்வம் என்பதை அறிவேன்.. ஆயின் உன் பண்டைய வரலாறு அறியேன்” என்றாள் மணிமேகலை.

அந்தத் தெய்வம் தன் கதையைக் கூறத்தொடங்கியது.

“நான் தெய்வ கணங்களுள் ஒன்று. துவதிகன் என்று எனக்குப் பெயர். நல்ல முதிர்ந்த மரத்தில் செய்த பாவையில் மயன் என்னை ஆவாகனம் செய்தான். நான் அன்றிலிருந்து இங்கேயே இருக்கிறேன். என்னைத் தொழும் மக்களை என்னவென்று சொல்வது? அவர்கள் அறிந்திருக்கும் விஷயம் வானில் உள்ள தேவர்கள்கூட அறிந்திருக்க மாட்டார்கள். எனக்கு ஒரு சிநேகிதன் இருந்தான். சித்திரசேனன் என்பது அவன் பெயர். இது எப்படித்தான் இந்த ஊர் மக்களுக்குத் தெரிந்ததோ? நான் அவனுடன் இங்கே சுற்றினேன் அங்கே சுற்றினேன் என்று கூடவே வந்தவர்களைப்போலப் பல கதைகள் கூற ஆரம்பித்தனர். அவர்களை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பூக்கள்கொண்டும் நறும்புகைகொண்டும் என்னை ஆராதித்துப் போற்றிப் பாடுவதால் நான் அவர்களுக்கு வருவதைக்கூறும் கடவுளாக மாறினேன்.” என்றது.

“நல்லது. எனக்கு தெய்வமொழி எதுவும் தெரியாது. நான் தெரிந்துகொள்ளவேண்டியது எல்லாம் நீ பாதியில் நிறுத்திவைத்திருக்கும் என் கதைபற்றி மட்டும்தான்” என்றாள்.

“பெரிய பஞ்சம் ஒன்று ஏற்படப்போகிறது. முற்றிலும் மழையின்றி உயிர்கள் மடியப்போகின்றன. பொன்மதிலால் சூழப்பட்ட காஞ்சிநகரம் தனது அழகை இழக்கப்போகின்றது. நீ பதறிப்போய் சம்பாதிதெய்வத்திடம் கொடுத்துவைத்திருக்கும் அமுதசுரபியை வாங்கிக்கொண்டு, அறவண அடிகளுடனும், உன்னைச் சேர்ந்தவர்களுடன் காஞ்சி நகரம் செல்வாய். உன்னுடைய ஆண்வேடத்தைக் களைந்து மீண்டும் மணிமேகலையாகி, உன் அமுதசுரபியால் ஆங்குள்ள மக்களின் பசிப்பிணியைப் போக்குவாய். உன் பழவினை காரணமாக அங்கு பலநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன..

“நீ ஆபுத்திரனுடன் சென்று பிற சமயத்தினர் கூறியவற்றை உள்வாங்கி அதன் சாரத்தை அறவண அடிகளிடம் கூற இருக்கிறாய். அதன்பிறகு அவர் உனக்குப் பல தர்ம சிந்தனைகளைக் கூறுவார். தவத்தையும் தருமைத்தையும் சார்ந்து தோன்றும் பனிரெண்டு நிதானங்களைப் பற்றியும், பிறவியறுக்கும் தருமம்பற்றியும் தனக்கே உரியவகையில் கூறுவார். உலகமக்களின் பாவம் என்னும் இருள் அகல ஞாயிறுபோலத் தோன்றிய புத்தன் கூறிய அறநெறிகளைப் பாதுகாக்க வேண்டி பல பிறவிகள் எடுத்து இந்த நகரத்திலேயே தங்கியிருப்பேன். அவர் உன்னையும் உன் தாய் மாதவியையும் அவருடன் தங்கியிருக்கக் கோருவார். உங்களைப் பல்லாண்டு தவறின்றி வாழ வாழ்த்துவார். உன்னுடைய மனப்பாலான துறவறம் பூண்டு அறநெறி கற்கவேண்டும் என்பது நிறைவேற வாழ்த்துவார்.”

மணிமேகலை இருகரம் குவித்து அந்தக் கந்திற் பாவையைத் தொழுதாள்.

பாவை தனது உரையைத் தொடர்ந்தது.

“மணிமேகலா உன்னால் இயன்ற அளவு தர்ம காரியங்களைப் புரிந்துவிட்டு காஞ்சி மாநகரில் உன் மரணம் நிகழும்.” என்றது மணீமேகலா தெய்வம்.

“பிறந்தோர் இறத்தல் முறைதானே தெய்வமே?” என்றாள் மணிமேகலை.

“அதுவல்ல மணிமேகலை. இனிவரும் பிறப்புகளில் உனக்குப் பெண் பிறவி இருக்காது. வடக்கில் அவந்தி தேசத்தில் பிறக்கின்ற பிறவிகள் எல்லாவற்றிலும் ஆண் பிறப்பெடுத்து நல்லறத்தைக் கடைபிடிப்பாய்.  புத்தரின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவனாகத் திகழ்ந்து நிருவாணநிலையை எய்தப் போகிறாய்!” என்றது.

மணிமேகலை பதில் ஒன்றும் கூறவில்லை.

“உன்னிடம் கூறுவதற்கு மேலும் ஒரு செய்தி உள்ளது. உன்னுடைய குலத்தில் தோன்றிய ஒருவனைக் கடலிலிருந்து காப்பாற்றியதால், மணிமேகலா தெய்வம் உங்கள் குலதெய்வமானது. உன்னுடைய முந்தைய பிறவியில் சாதுசக்கரன் என்ற முனிவனுக்கு உணவளித்தாய் என்பதனைத் தெரிந்திருந்த மணிமேகலா தெய்வம் உன் நன்னெறி பிறழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே உன்னை மணிபல்லவத் தீவில்கொண்டுவைத்தது. புரிந்து கொள்” என்றது.

துவதிகன் என்ற அந்தக் கந்திற்பாவை கூறியதைக் கேட்டதும் இதுவரையில் மணிமேகலையிடம் நிலவிய மனக்குழப்பம் மறைந்தது.

இரவு முடிந்து கதிரவனின் கிரணங்கள் உறங்குவோர்களை எழுப்பும் கரங்களைப்போல நீண்டன.

பின்குறிப்பு:

‘பாங்கியல் நல்லறம் பலவுஞ் செய்தபின்
கச்சிமுற் றத்து நின்னுயிர் கடைகொள
உத்தர மகதத் துறுபிறப் பெல்லாம்
ஆண்பிறப் பாகி அருளறம் ஒழியாய்’ என்கிறார் சீத்தலை சாத்தனார்.

இந்த வாசகம் மிகவும் கூர்ந்து நோக்கத்தக்கது. மணிமேகலை காவியம் புனையப்பட்டு எத்தனை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன! பெண்களின் பிறப்பு குறித்த சாத்தனாரின் கவலை இன்னும் தொடரத்தான் செய்கிறது.

Tags: , , , , , , , ,

 

ஒரு மறுமொழி கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22

  1. ராதிகா மணிமேகலை on September 17, 2019 at 1:15 pm

    சத்தியபிரியன் அவர்களை தொடர்பு கொள்ள முடியுமா?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*