சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை – மணிமேகலை 20

சக்கரவாளக் கோட்டத்தின் சுவர்களில் பல தெய்வ ஓவியங்கள் பொலிவுடன் விளங்கின. சம்பாதியை மும்முறை வலம்வந்து, மணிமேகலையைச் சிறை எடுப்பது திண்ணம் என்று உதயகுமாரன் சூளுரைத்ததைக் கேட்ட அந்த ஓவிய தெய்வங்களுள் ஒன்று பொறுக்கமுடியாமல் உயிர் பெற்றதுபோல உதயகுமாரனோடு பேசத்தொடங்கியது.

“எதை எதை எண்ணிச் சூளுரைப்பது என்ற முறைமை தெரியாத அரசிளங்குமரா. அன்னைபோன்ற சம்பாதி தெய்வத்திடம் சூளுரைக்கும் விஷயம் முறையானதுதானா என்று யோசிக்காமல் சூளுரைக்கும் நீ மன்னன்மகன்தானா, இல்லை அடிமுட்டாளா?” என்று வினவியது.

உதயகுமாரனுக்கு மேனி வியர்த்தது. சுவாசம் தடுமாறியது. பொதியறையில் மாட்டிக்கொண்டவன்போல நெஞ்சில் படபடவென்ற உணர்வு ஏற்பட்டது.

தனது தீய எண்ணத்தை அறிந்து தனக்குப் பள்ளியறையில் தோன்றி அறவுரை கூறிய பெண்ணும் தெய்வத்தன்மை வாய்ந்தவள் — மணிமேகலையின் கைகளில் உள்ள அமுதசுரபி என்ற அட்சயப் பாத்திரமும் தெய்வத் தன்மை வாய்ந்தது – இதோ, கோவில் சுவரில் வெறும் சித்திரம்போல் தோன்றும் இந்த ஓவியமும் தெய்வத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இத்தனை எதிர்ப்புகளும் தனக்குதானா என்று தடுமாறிய அரசிளங்குமரன் இதன் முடிவைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிவிட்டு அந்தக் கோவிலைவிட்டு அகன்றான்.

காரிருள் என்ற கரிய யானையான இரவு வந்தது. அது வந்ததை அறிவிக்க எழுப்பட்ட பறை ஒலியானது பகலவன் என்ற அரசனை விரட்டி அடித்த வெற்றி முரசுபோல ஒலித்தது. மாலை என்ற பெரிய நெற்றியை அந்த யானை கொண்டிருந்தது. மாலை வானில் தோன்றும் சந்திரனின் பிறை அதன் தந்தங்களாக இலங்கியது. அதன்மேல் ஒருவரும் இல்லை. ஆசை என்ற நீண்ட துதிக்கையை ஆட்டிக்கொண்டிருந்தது. மணம் பொருந்திய பூக்களின் தாதுக்களை வண்டுகளின் கால்கள் கிளறிவிட்டன. இருள் எனும் யானையின் மதநீர்போலப் பூக்களின் தாது எங்கும் சிதறியது. காவலைக் கடந்துவரும் யானையைப்போலக் காற்றின் வேகத்துடன் இரவு என்னும் யானை வேகமாகக் கவியத்தொடங்கியது.

நகரமெங்கும் காதலர்களின் கைகளில் மோகனப்பண் இசைக்கும் சுதி ஏற்றப்பட்ட யாழின் நரம்புகள் தாளமும் இளையமும் சேர்ந்து எழுப்பிய இசையானது உதயகுமாரன் உள்ளத்தில் எஃகில் செய்யப்பட்ட கூர்மையான வேலினைப்போலப் பாய்ந்தது. அவன் உள்ளத்தில் எழுந்த காமத்தீயானது அடங்காமல் கொழுந்துவிட்டு எரிய அதனைத் தணிக்கும் வகையறியாத உதயகுமாரன் அங்கிருந்து அகன்றான்.

‘எனக்கு வேறுவழி தெரியவில்லை, சம்பாதி. நான் மணிமேகலையின் வடிவில் இருந்தால் என்மேல் மோகம்கொண்டுள்ள அரசகுமாரன் என்னை விடாமல் துரத்தி என்னைப் பின்தொடர்வான். பிறகு நான் மணிபல்லவத் தீவிற்குச்சென்றதற்கும், ஆபுத்திரன் வைத்திருந்த அமுதசுரபியைக் கொண்டுவந்து அற்றவர் பசிதீர்ப்பதற்கும் என்ன பொருள் இருக்கப்போகிறது? எனவேதான் ஊர் முழுவதும் தெரிந்துவைத்திருக்கும் யானைப்பசி என்ற தீராத நோயுடைய காயசண்டிகையின் உருவத்தைத் தாங்கிக்கொண்டுள்ளேன்.” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு சம்பாபதியின் கோவிலைவிட்டு வெளியேறினாள் மணிமேகலை.

இல்லந்தோறும் சென்று இரந்து உணவுபெறுவதும் அவ்வாறு பெற்ற உணவை ஆற்றமாட்டதவர்களைத் தேடிச்சென்று கொடுத்து அவர்கள் பசியைத் தீர்ப்பதும் அவளைப் போன்ற இரந்துண்டு வாழ்பவர்களின் கடமையாகும்என்று நினைத்தபடி மணிமேகலை தர்மம்செய்வோர் வாழும் இல்லங்களை நோக்கி நடந்தாள்.

மணிமேகலை இல்லம்தோறும் சென்று பெற்ற உணவினை அனைவருக்கும் அளித்த பின்னரும் உணவு மீதம் இருப்பதை மணிமேகலை கண்டாள்.

“இலவசமாக உணவு கிடைக்கிறது என்றால் அது அவர்களை முடமாக்கி விடாதா மணிமேகலை?” என்று சுதமதி வினவினாள்.

“நான் வீணருக்கு உணவளிப்பதில்லை. வறியவர்க்கும், ஆதரவற்றவர்களுக்கும், உடலில் ஊறு உள்ளவர்களுக்கு மட்டும்தான் உணவு அளிக்கிறேன்.”

“உணவு எளிதான வழியில் கிடைக்கிறது என்றால் நீ பரிதாபப்படும் வறியவர்களிடம் உழைக்க வேண்டும் என்ற உந்துதல் இல்லாது ஒழியும்.” என்றாள் சுதமதியும் விடாமல்.

“அது மட்டுமன்று மேகலா! இது அரசாங்கத்திற்குச் சவால்விடுக்கும் செயலாகிவிடும்” என்றாள் மாதவி.

“புரியவில்லை!”

“குடிகளின் துயர் கேட்டு அவர்கள் துன்பம் துடைப்பது அரசர்களின் கடமை. அவர்கள் கடமையில் குறிக்கிடுவதுபோலச் செயல் பட்டால் அரசரைச் சேர்ந்தவர்களுக்கு உன்மீது பொறாமை ஏற்படும்.”

“அதற்கு நான் என்ன செய்வது?”

“ஒன்று செய்யலாம். ஏற்கனவே சிறைக்கோட்டத்தில் அடைந்துகிடக்கும் குற்றவாளிகள் சிறையதிகாரிகளால் துன்பபடுத்தப்படுவதாகப் பலரும் பேசிக்கொள்கின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுபோல அரண்மனைக் கோட்டத்திற்குள்ளே இருக்கும் சிறைச்சாலையில் உள்ள குற்றவாளிகளுக்கு உணவளித்துவிட்டு வருவோம். இதன் மூலம் அரசரைமீறிச் செயல்படுகிறோம் என்ற அவப்பெயர் எழாது அல்லவா?”என்றாள் சுதமதி.

“நன்றி சுதமதி. நீ கூறுவதும் நல்ல யோசனைதான். நாம் அரசு அதிகாரிகளைச் சந்தித்துச் சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கும் உணவளிப்போம்” என்றாள்.

துரிதகதியில் களத்தில் இறங்கினார்கள். அறவண அடிகளுக்குத் தெரிந்த அரசாங்க அதிகாரியின் உதவியுடன் சிறையிலுள்ள அதிகாரிகளைச் சந்திக்க உத்தரவு ஓலை பெற்றுக்கொண்டார்கள். மணிமேகலை அரண்மனை சிறைக் கோட்டத்திற்கு வருகிறாள் என்றதும் அங்கிருப்பவர்களுக்கு அவள்மீது பரிவும் அபிமானமும் ஏற்பட்டது. அவளையும் மற்ற இருவரையும் தகுந்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்றனர்.

பசி, பசி என்று அழும் குரல்களும் வலி, வலி என்று கதறும் குரல்களும் மணிமேகலையின் செவிகளைத் துளைத்தன. சிறைக்கம்பிகளின் ஊடே வெறும் கைகளையும், வட்டில்களையும் ஏந்தி, எனக்குச் சோறு போடு தாயே என்று அலறிய குரல்கள் அவள் இதயத்தை கூறாக்கும் கூரான வாள்கள்போலத் தோன்றின. நீட்டிய கரங்களுக்கெல்லாம் உணவளித்துச் சென்றாள்.

அந்தச் சிறைக்கோட்ட அதிகாரி வியந்து நின்றார். அரசல்புரசலாக மணிமேகலையிடம் ஓர் அமுதசுரபி இருக்கிறது என்று கேள்விப்பட்டிருந்தாரேயன்றி, அதன் திறத்தை நேரில் கண்டதில்லை. மணிமேகலை கையில் ஒரே ஒரு அட்சய பாத்திரத்தை ஏந்திச் சென்றாள். அழைக்கும் கரங்களுக்கு அள்ளி அள்ளி வழங்கினாலும் சற்றும் குறையாமல் மீண்டும் மீண்டும் சுரக்கும் அதன் வேகத்தைப் பார்த்து இதென்ன மாயம் என்று வாய்பிளந்து நின்றார்.

உடனே அவருடைய ராஜவிசுவாச மூளை வேலைய்யத் தொடங்கியது. இதை மன்னரிடம் சென்று கூற வேண்டும் என்று எண்ணினார். தானம் என்பது ஒவ்வொரு மனிதனின் மனதில் தோன்றும் நல்லெண்ணம். எத்தனைதான் அரசாங்கங்கள் திட்டங்கள் வகுத்து, மக்களிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் வரிப்பணத்தைப் பெற்றாலும், இதுபோன்ற மாயச்செயல்கள்மூலம் நடைபெறும் தானங்கள் ஒவ்வொரு சமயம் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிடும் தன்மை உடையவை. எனவே உடனே மன்னரிடம் இதைப் பற்றிக் கூறவேண்டும் என்ற நிலைப்பாடு உடையவர் ஆனார்.

காசியப முனிவருக்கும், அதிதி என்ற ரிஷிபத்தினிக்கும் குறுவடிவில் மகனாகப் பிறந்து, மகாபலி என்னும் மன்னனிடம் தானம் பெறவேண்டி நின்று, அந்த மன்னன் கையில் இருந்த நீரை தாரைவார்க்கும்போது மிகப்பெரிய வடிவம் எடுத்த திருமால் தன்னைவிட்டு எப்போதும் நீங்காத திருமகளுடன் செல்வதுபோலத் தனது பட்டமகிஷியுடன் அந்தப் பூவனத்தின் நடுவில் அமையப்பெற்றிருந்த தனது அரண்மனை நோக்கி சோழ மன்னன் மாவண்கிள்ளி நடந்து சென்றான்.

அது ஓர் அழகான பூவனம். அங்கே தும்பிகள் வாய்வைத்து ஊதிப் புல்லாங்குழனின் ஓசையை ஏற்படுத்தின. வண்டுகளின் ரீங்காரம் யாழிசையைப்போல இருந்தது. கிளைகளில் கருங்குயில்கள் பாடலுக்கு வண்ணமயில்கள் தோகைவிரித்து ஆடி அந்த இடமே ஒரு நடனமாடும் அரங்கினைப்போல விளங்கியது.

கூடி இன்பம் கொள்ளும் தங்களது பெண் அன்னங்களை விடுத்து ஆண் அன்னங்கள் துள்ளிக் குதித்து ஆடிக்கொண்டிருந்தன. இதனைப் பார்த்துக்கொண்டிருந்த ஓர் ஆண்மயில் உற்சாக மிகுதியில் தனது பெண் மயிலை அழைத்துக்கொண்டு வந்து தனது இரண்டு சிறகுகளையும் விரித்து அற்புதமாகச் சுழன்று சுழன்று ஆடிய நடனம் முன்பொரு காலத்தில் மதுரா நகரத்தில் நீலமணி சியாமளனான கண்ணனும் அவனுடைய மூத்த சகோதரன் பலராமனும் ஆடிய குரவை கூத்தினை ஒத்திருந்தது. கோங்கை மரம் ஒன்றும் மாமரம் ஒன்றும் அடுத்தடுத்து இருந்தன. ஒரு மயில் கோங்கை மரத்தின் கிளைகளில் மாமரத்தில் இருந்த செங்கையுடன் இணைந்து காணப்பட்ட தோற்றம் ஓர் அழகிய இளம்பெண் முகம் சிவக்க தான் வளர்க்கும் பைங்கிளிக்கு மாங்கனியை ஊட்டுவதுபோலத் தோன்றியது.

அந்தப் பூவனத்தின் உள்ளே அழகிய மகளிர் ஆடும் ஊஞ்சல் ஒன்று இருந்தது. அதன்மீது ஒரு பெண் குரங்கு அமர்ந்திருந்தது. ஆண் குரங்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த ஊஞ்சலை ஆட்டிவிட்டது. உயர்ந்து வளர்ந்த மூங்கில் மரங்களின் ஊடே வெண்ணிறப் பூக்களைச் சொரியும் கடம்பு மரத்தைப் பார்க்கும்போது கரிய நிறமுடைய கண்ணனையும், அவன் அண்ணன் பலராமனையும் காண்பதுபோல இருந்ததால் அரசனின் தேவி கைகூப்பி அந்த இயற்கைக் காட்சியைத் தொழுதாள்.

ஆடல் கூத்தோடு அபிநயம் புரிந்து நடனமாடுபவர்களும், நாடக நுணுக்கங்களை விவரிக்கும் முழுமையான நடன இலக்கண நூல்களைக்கற்று ஆராய்ச்சி செய்பவர்களும், பண்களை இனிமையாக இசைக்க வல்ல யாழ்களில் பண்களின் வரிசையை முறையாக இசைப்போரும், மத்தளத்தின் மேற்பகுதியில் உள்ள தோற்பகுதி முறையாக அமையப் பெற்றிருக்கிறதா என்று ஆய்வு செய்பவர்களும், வேய்ங்குழலில் இனிய இசையை எழுப்பும் கலைஞர்கள், அந்தக் குழலோசை தாளக்கட்டிற்குச் சரியாக இருக்கிறதா என்று ஆராய்பவர்களும், ஆடும்போது அறுந்து விழுந்த மாலைகளிலிருந்து சிதறிய முத்துக்களை எடுத்து மீண்டும் மாலைகளாகக் கோப்பவர்களும், சந்தனத்தை ஒப்பனைக்கு ஏற்றவாறு தீட்டிக்கொண்டிருப்போரும், நடனமணிகளின் கொங்கைகளின்மேல் குங்குமத்தை சித்திரமாகத் தீட்டுவோர்களும், செங்கழுநீர் மலர்களின் இதழ்களை மாலையாக்கித் தொடுப்போரும், நீண்ட நெடிய மகளிரின் கூந்தலில் நறுமணப் பொருட்களைத் தடவி அலங்கரிப்பவர்களும், தங்கத்தால் அமைக்கபட்டிருந்த சுற்றுப்புறத்தையுடைய பெரிய கண்ணாடியின் முன் நின்று அழகு பார்த்துக்கொண்டிருக்கும் மகளிரும் கூடிநிற்க அவர்கள் நடுவே சென்று வேந்தன் தன் மன்றத்தை அடைந்தது, அரம்பையர் சூழ இந்திரன் தேவர் உலகில் இருந்ததைப்போல இருந்தது.

 “அதோ பார் கீரி; இதோ ஒரு முயல்.  அட அங்கே பார் புள்ளிகளையுடைய மான் ஒன்று துள்ளி ஓடுகிறது. அட இது என்ன? கிடாரி எனப்படும் காட்டு ஆடுபோலத் தெரிகின்றதே. அதோ பார்!” என்று தனது துணைவி கீர்த்திக்குத் தனது சிவந்த கரங்களால் காட்டியபடி அரசன் நடந்து சென்றான்.

கேணியில் நீர் நிறைந்திருந்தது. நீரை வேண்டும்போது இரைத்துக் கொள்ளவும், தேவையற்றபோது நிறுத்தவும் எந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. எதிரில் மன்னவன் மன்மதனைப்போல நின்றுகொண்டிருந்தான். இளந்தென்றல் காம வேட்கையை மூட்டுவதாக இருந்தது.

“நீராடலாமா?” என்று கீர்த்தியின் முகம் தொட்டுக் கேட்டான் சோழன்.

பெண்ணல்லவா? முகம் சிவந்து தலை கவிழ்ந்தது. எங்கே தனது வெட்கத்திற்கு விடைசொல்லாமல் போய்விடுவானோ மன்னன், என்ற அச்சமும் ஏற்பட்டது. ‘ம்’ என்று மன்னருக்கு மட்டும் விளங்கும் வண்ணம் இலேசாகத் தலையசைத்தாள். அது போதாதா, காமத்தில் திளைத்து மூழ்கும் ஒரு ஆண்மகனுக்கு? தலைக்கு மேலே அருவி வீழ்வதுபோல அமையப்பெற்றிருந்த எந்திரத்தை இயக்கிவிட்டு மன்னர் தனது தேவியுடன் நறுமணம் பொருந்திய நீர்ப்பரப்பில் இறங்கி களிப்புடன் நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டார்.

மகதநாட்டைச் சேர்ந்த கைவினைஞர்களும், மகாராட்டிர தேசத்தைச் சேர்ந்த பொன் தச்சர்களும், அவந்தி நாட்டைச் சேர்ந்த கொல்லரும், யவன நாட்டைச் சேர்ந்த தச்சர்களும் நமது தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுடன் ஒன்றுகூடிச் சிறப்பாகச் செயல்பட்டு முடிக்கப் பெற்ற மண்டபத்தின் தூண்கள் பவளத்தால் செய்யப்பட்டவை.. விமானமானது கோணவடிவில் அமைக்கப்பட்டு மணிகளால் அமையப்பட்ட போதிகைக் கட்டைகளால் தாங்கப்பட்டு நின்றன. விதானத்தில் முத்துவடங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பொன்னால் வேயப்பட்ட மண்டபம் முழுவதும் பசும்சாணியால் மெழுகப்பட்டிருந்தது.

அரசன் மாவண்கிள்ளி தனது அரியணையில் பட்டமகிஷியுடன் சென்று அமர்ந்தான்.

பின்னால் தொடர்ந்த சிறைக்கோட்ட அதிகாரி, தான் மன்னரைப் பார்க்க வந்த சேதியை வாயிற்காப்போனிடம் சொல்ல, மன்னர் அனுமதி கொடுத்தபின்பு வாயிற்காப்போன் அவரை உள்ளே அனுமதித்தான்.

உள்ளே நுழைந்த அரசு அதிகாரி தூரத்தில் மன்னனைப் பார்த்த மறுகணமே நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்து, “வாழிய மன்னா. நீ வாழி. ஒருபோதும் மண்மீது உள்ள ஆசை சற்றேனும் குறையாது ஊக்கமுடன் பகைவருடன் போர்தொடுத்து வெற்றிகொள்ளும் உன்னுடைய ஊக்கம் வாழி. வஞ்சி நகரத்தில் இருந்தபடி வஞ்சிப் பூவைச் சூட்டிக்கொள்பவன் நீ. பெரிய செவிகளையுடைய யானைகள் மிகுந்த யானைப்படையும், தேர்ப்படையும், குதிரைப்படையும், காலாட்படையும் ஆகிய நால்வகைப் படைகளுடன் மன்னருக்கென்று உரிய தனிப்பெரும் படையான தூசிப்படையுடன் சென்று நெடுங்கிள்ளி என்ற சோழனுக்குத் துணையாகப் போர்செய்ய வந்த சேர, பாண்டிய மன்னர்களையும் காரியாற்றங்கரையில் நிகழ்ந்த போரில் வென்று திரும்பிய இளைய மன்னன் நலங்கிள்ளி மரபில் வந்த வெண்கொற்றக் குடையும் உன்னுடைய தடக்கையும் வாழிய, வாழிய, வாழியவே!” என்று வாழ்த்தினான்.

“நல்லது அதிகாரி! நீ வந்த விஷயத்தைக் கூறு!” என்றான் மன்னன்.

“மன்னா! நீங்களும் கேள்விபட்டிருப்பீர்கள். யானைத்தீ என்ற கொடிய பசிப்பிணிக்கு ஆளான காயசண்டிகை என்ற புதிய பெண் ஒருத்தி புகார் நகரில் சமீபகாலமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறாள். அவள் கையில் பிச்சைப்பாத்திரம் ஒன்றை ஏந்தி, அதன் மூலம் தருவிக்கும் உணவினைக்கொண்டு, சிறைக் கோட்டத்தில் கைதிகளுக்குப் பசி ஆற்றுகிறாள்.” என்று கூறினான்.

“கேட்கவே விந்தையாக இருக்கிறதே? அந்தப் பெண்ணை இப்போதே பார்க்க விழைகிறேன். யாரங்கே!” என்றதும் ஒரு சேவகன் வந்து நின்றான்.

“நீ இந்தச் சிறை அதிகாரியுடன் சென்று அந்தப் பெண்ணை அழைத்துவா. அதிகாரியே! அந்தப் பெண்ணை இவனுடன் அனுப்பிவிட்டு, உங்கள் கடமையை ஆற்றக் கிளம்புங்கள்,” என்றான் மாவண்கிள்ளி.

காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலை மன்னவன் முன்புகொண்டுவரப் பட்டாள்.

“வீரக் கழல் அணிந்த மன்னவனே! நின் புகழ் ஓங்குக.” என்று வாழ்த்தி நின்றாள்.

“தவக்கோலம் பூண்டுள்ள பெண்ணே உன் தொண்டு சிறக்கட்டும். சொல், யார் நீ? இந்த நகருக்குப் புதியவளாகத் தோன்றுகிறாய். உன் கையில் இருப்பது எத்தகைய பாத்திரம்?” என்று நேரடியாகக் கேட்டான்

காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலை கூறத்தொடங்கினாள்.

“வித்யாதர நகர் என்று கூறப்படும் விஞ்சை நகரைச் சேர்ந்தவள் நான். விழாக்களால் சிறப்புப் பெற்ற இந்தப் புகார் நகருக்கு வந்தேன். என் கையில் இருப்பது ஒரு பிச்சை பாத்திரம். கோவில் ஒன்றில் ஒரு தெய்வம் தந்த பாத்திரம். தீராத யானைப்பசி என்னும் நோயால் வாடிய என்னுடைய நோயைத்தீர்த்தது. பசியுடன் வாடும் வறியவர்களின் பசிக்கொடுமையைத் தீர்க்க வல்லது.”

மன்னவன் சற்று யோசித்தான்.

மணிமேகலை அவன் என்ன சொல்ல வரப்போகிறான் என்பதை முன்னமே தீர்மானித்துவைத்திருந்தாள்.

மன்னவன் தன்னுடன் நிச்சயம் கலந்தாலோசிக்க அழைப்பான், அப்போது தனது மனதில் உள்ள செயல்முறை திட்டத்தைக் கூறிவிடவேண்டும் என்று எண்ணியிருந்தாள்.

அதற்கான தருணமும் வந்துவிட்டது.

“பெண்ணே இது குறித்து உன் மனதில் ஏதாவது சிந்தனை உள்ளதா சொல்!”

“மன்னா!  வறுமைதான் ஒரு மனிதனைத் திருடுவதற்குத் தூண்டுகிறது. பசியைப்போலக் கொடிய பகைவன் மனிதனுக்கு வேறு எதுவும் கிடையாது. அத்தகைய பசியை அகற்றிவிட்டால் அவனுடைய அடிப்படையான தேவைகள் அகன்றுவிடும். பிறகு அவன் மனம் தீயசிந்தனையில் மூழ்காது.”

“உண்மைதான் பெண்ணே. மக்களை நல்வழிப்படுத்துவதுதான் ஒரு மன்னவனின் தலையாய கடமை.”

“நான் ஒன்று சொல்வேன், செய்வீர்களா மன்னா?”Image result for அறக்கோட்டம்

“நல்ல ஆலோசனைகளுக்கு இந்த மாவண்கிள்ளி என்றுமே மறுப்பு தெரிவிக்க மாட்டான் பெண்ணே. துணிந்து கூறு!”

“பசி இருக்கும் வரையில்தான் குற்றங்கள் இருக்கும். குற்றங்கள் அதிகரிக்கும்போதுதான் சிறைக்கோட்டங்கள் தேவைப்படும். அந்தப் பசியைப் போக்கிவிட்டு, குற்றங்களைக் குறைத்துவிட்டால், பிறகு சிறைக்கோட்டத்திற்குத் தேவை என்ன இருக்கப்போகிறது, மன்னா? எனவே இப்போதுள்ள இந்தப் பெரிய சிறைக்கோட்டத்தை இடித்துத் தள்ளிவிட்டு, ஒரு மிகப்பெரிய அறக்கோட்டத்தைக் கட்டுங்கள்!”

மன்னன் மெய்சிலிர்த்து நின்றான்.

அன்றிலிருந்து அதற்கான திட்டமிடல் தொடங்கியது. மணிமேகலையின் பங்கு அதில் முக்கியமாக இருந்தது. சிறைக்குற்றவாளிகளுக்கு உரிய அதிகாரிகள், பணியாளர்களின் உதவியுடன் அமுதசுரபிகொண்டு மூன்று வேளையும் வயிறார உணவளிக்க ஏற்பாடானது. பசியின் கொடுமைகுறித்தும் அதனால் எழும் குற்றங்கள்குறித்தும் கூறப்பட்டது. பசி என்பது மறைந்தால் தாங்கள் குற்றம் செய்யப்போவதில்லை என்று சிறைக் கைதிகள் உறுதிமொழி அளித்தனர். புதியதாக அறக்கோட்டம் எழும்வரையில் சிறையில் உள்ள கைதிகள் அனைவருக்கும் உலகஅறவியில் அமுதசுரபிமூலம் உணவிற்கு ஏற்பாடானது.

சிறைக்கோட்டம் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டு, அந்த இடத்தில் மிகப்பிரமாண்டமான அறக்கோட்டம் ஒன்று எழுந்தது.

பின்குறிப்பு : தொழில் துறைகளில் தமிழர்கள் மட்டும் தனித்துச் செயலாற்றாமல் தேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் செயல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதனை சீத்தலை சாத்தனார்,

‘மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி…… ‘ என்பதன் மூலம் குறிப்பிடுகிறார்.

பசும்பொன்மண்டபம் ஒன்றைப் பற்றி சீத்தலை சாத்தனார் குறிப்பிடுகிறார். கல்கி தனது பொன்னியின் செல்வன் நாவலில் மதுராந்தகச் சோழன்தான் முதன் முதலில் பொன்கூரை வேய்ந்த சோழன் என்று குறிப்பிடுவார். இந்த மாவண்கிள்ளி அதற்கு முன்னோடியாக பசும்பொன்னினால் மண்டபம் காட்டியுள்ளதை இந்தக் காதை கூறுகிறது.

[தொடரும்]

2 Replies to “சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை – மணிமேகலை 20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *