சோ: சில நினைவுகள் – 3

December 18, 2016
By

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

விடுதலைப் புலிகளை ஆரம்பம் முதலே மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் சோ. 83,84களில் தமிழ் நாட்டில் புலி ஆதரவு மன நிலை கடுமையாக நிலவி வந்தது. புலிகள் தமிழகம் முழுவதும் எந்தவிதமான தடையுமின்றி சுதந்திரமாக வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். அவர்களின் பல்வேறு குழுக்களுக்குள் அவ்வப் பொழுது கடும் சண்டைகளும் நடந்து கொண்டிருந்தன. பிரபாகரனின் துப்பாக்கி சண்டை, சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு ஆகியவற்றை மீறியும் தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழ் போராளிக் குழுக்களுக்கு பெரும் ஆதரவு நிலவி வந்தது. மத்தியில் இந்திராவும் மாநிலத்தில் எம் ஜி ஆரும் அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்தனர். தமிழ் நாட்டு மக்களிடமும் கூட அவர்கள் மீது அனுதாபமும் பிரமிப்புமே நிலவி வந்த நேரம். அப்படி ஒட்டு மொத்த ஆளும் வர்க்கமும் மக்களும் ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக இருந்த ஒரு சூழலில் அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த ஒருவர் சோ மட்டுமே. இலங்கையின் தமிழ் பிரிவினைவாதிகளை எந்த நிலையிலும் மத்திய மாநில அரசுகள் ஆதரிக்கக் கூடாது என்றும் அவர்களைத் தமிழ் நாட்டில் வளர விட்டால் தமிழ்நாடும் வன்முறைக் களமாகி விடும் என்றும் எச்சரித்து வந்தார்.

ஆனால் சோ பேச்சை துக்ளக் வாசகர்கள் தவிர எவரும் கேட்பாரில்லை. எம் ஜி ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பிளவினால் மீண்டும் தி மு க ஆட்சிக்கு வந்தது. கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு அளவு கடந்த சுதந்திரம் அளித்து தமிழ் நாட்டில் அவர்களுக்கு கட்டற்ற ஆதரவை அளித்து வந்தார். எதிர் குழுவான பத்மநாபாவையும் அவருடன் சேர்ந்த 13 பேர்களையும் சென்னையில் கொன்று விட்டு சிவராசன் இலங்கைக்குத் தப்பி ஓடினான். அவன் எந்தவிதத் தடையுமில்லாமல் இலங்கைக்குச் செல்லவும் அவன் திரும்பி வந்து ராஜீவைக் கொல்வதற்கும் கருணாநிதி கும்பல் உறுதுணையாகவே இருந்தது. சிவராசனைத் தடுத்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். அந்த சூழலில் சோ தமிழ் நாடு பிரிவினைவாதிகளின் கையில் சென்று விடும் என்று எச்சரித்து வந்தார். புலிகளின் பேயாட்டம் கருணாநிதி ஆதரவில் உச்சத்தில் இருந்தது. சோ பேச்சை அப்பொழுதும் எவரும் செவி மடுக்கவில்லை.

அந்தக் கடுமையான சூழலில் தமிழ் நாட்டில் புலிகளின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த சூழலில் மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த அப்பொழுதைய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்தது. சோ தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்ட ஒரே அரசியல் கட்சி மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி மட்டுமே. அன்றைய பொதுக் கூட்டம் மதுரை மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நானும் ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தேன். மிகவும் குறைவான நபர்களே இருந்த கட்சி அது என்பதினால் நிகழ்ச்சி ஏற்பாட்டு உதவிக்காக சீக்கிரமே நானும் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றிருந்தேன்.

மாநிலத்தில் கருணாநிதியின் காட்டுமிராண்டி ஆட்சி உச்சத்தில் இருந்தது. கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லாம் கடுமையாகத் தாக்கப் பட்டனர். கொல்லவும் பட்டனர். புலிகளின் ஆதரவில் தான் தனித் தமிழ் நாட்டின் அதிபர் ஆகி விடும் கனவில் கருணாநிதி மிதந்து கொண்டிருந்தார். அந்தப் பொதுக்கூட்டம் நடைபெறும் அன்று காலையிலேயே தினமலர் நிருபர்கள் மாலையில் சோ தாக்கப் படுவார் என்றும் கொலை கூடச் செய்யப் படலாம் என்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த என் நண்பர்களை எச்சரித்திருந்தார்கள். மாலையில் போலீஸ் பாதுகாப்பு திட்டமிட்டு விலக்கப் பட்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் எச்சரித்திருந்தார்கள். அதை மீறியே கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மேடையின் இடது புறம் நின்று கொண்டிருந்தேன். கூட்டத்தில் நெல்லை ஜெபமணி, தமிழருவிமணியன் ஆகியோர் முதலில் பேசினார்கள். கடைசியாக சோ மைக் பிடித்தார். தன் கணீரென்ற குரலில் எடுத்தவுடனேயே பிரபாகரனைத் தொட்டு விட்டார். பத்தாயிரம் பேர்களுக்கு மேலாகக் கூடியிருந்த கூட்டத்தைக் கட்டுப் படுத்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கூட அங்கு இல்லை. அப்பொழுது டி எஸ் பி யாக இருந்த சிவணாண்டி என்பவரின் உத்தரவின் பேரில் போலீஸ்பாதுகாப்பு திட்டமிட்டு விலக்கப் பட்டிருப்பதை நாங்கள் உணர முடிந்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

சோ பிரபாகரன் பேரைச் சொன்னவுடனேயே சரமாரியாக முன் வரிசையில் இருந்து ஆசிட் பாட்டில்கள் ஆசிட் நிரப்பப் பட்ட பல்புகள் அவர் மீது வீசப் பட்டன. சோ ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்காரர் ஒரு கிரிக்கெட் விமர்சகரும் கூட என்பது அவரது பன்முகத் திறனைப் பற்றி பேசும் பலருக்கும் தெரியாததொரு விஷயம். மேடையில் வீசப் பட்ட பல பாட்டில்களை அவர் லாவகமாகப் பிடித்துக் கொண்டேயிருந்தார். தினமலரில் அவர் ஆசிட் பாட்டிலைப் பிடிக்கும் ஒரு ஃபோட்டோ வெளியாகியிருந்தது. தொடர்ந்து ஆசிட் வீசப் பட்டன. பெரும் குழப்பம், களேபரம் ஏற்பட்டது. அது வரை அங்கு வராமல் மறைந்து இருந்த போலீஸ்காரர்கள் கூட்டத்தினரை அடிக்க ஆரம்பித்தார்கள். நெடுமாறன், கருணாநிதி, புலிகள், போலீஸ்காரர்கள் கூட்டணியில் அந்த தாக்குதல் மேற் கொள்ளப் பட்டது. சோவையும் பிறரையும் மேடையின் பின்னால் தள்ளி விட்டார்கள். மேடை முழுக்க ஆசிட் வீச்சினால் புகை மண்டியது. தமிழருவிமணியனின் கண்களில் ஆசிட் பட்டிருந்தது. நான் அவரை ஒரு ரிக்‌ஷாவில் ஏற்றிக் கொண்டு வடக்குமாசி வீதியில் இருந்த ஒரு டாக்டரின் வீட்டைத் தட்டி உள்ளே கொண்டு போய் சிகிச்சை அளித்து விட்டு அதே ரிக்‌ஷாவில் சோ இருந்த சுப்ரீம் ஹோட்டலுக்கு அழைத்துச் செனறேன்.

அங்கு அறைக்குள் நண்பர்களுடன் ஜெபமணி அவர்களும் பிறரும் சோவுடன் கூடியிருந்தனர். கொதி மன நிலையில் இருந்த நான் கருணாநிதியைக் கடுமையாக வசை பாடினேன். சோ எந்தவித பதட்டமும் அச்சமும் இல்லாமல் நிதானமாக இருந்தார். சற்று முன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததன் அடையாளம் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். ஜெபமணி என்னை தன் நண்பரின் பேரன் என்று சொல்லி சோவிடம் அறிமுகம் செய்து வைத்தார். டெல்லியில் அப்பொழுது சந்திரசேகர் பிரதமராக இருந்தார். நாடு முழுவதும் குழப்பமான சூழலில் இருந்தது. தமிழ் நாட்டைச் சுடுகாடாக ஆக்க நீங்கள் அனுமதிக்கக் கூடாது டெல்லியில் உங்கள் நண்பரிடம் இதை எடுத்துச் சொல்லி உடனடியாகக் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் ஆக்ரோஷமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். அனைவரும் பயங்கரமான கொதி நிலையில் இருந்தார்கள். அனைவரும் கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப் படாவிட்டால் தமிழ் நாடு சுடுகாடாகி விடும் பிரிவினை செய்யப் பட்டு விடும் என்று பேசிக் கொண்டிருந்தனர். தான் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாகவும் அதற்கான முழு ஏற்பாடுகளையும் தான் கட்டாயம் எடுப்பேன் என்று சோ கூறினார்.

அந்தக் கொடூரமான இரவு காலை வரை நீண்டது. சோ தன் எழுத்தில் மட்டும் அச்சமில்லாதவராக இல்லை நிஜ வாழ்விலும் தன் மீது ஒரு கொடூரமான கொலைகாரக் கும்பல் தாக்குதல் நடத்திய தருணத்திலும் அச்சமின்றி துணிவுடன் நடுங்காமல் அதை எதிர் கொண்டதை அன்று என்னால் நேரடியாக உணர முடிந்தது. அஞ்சா நெஞ்சன் என்று எவர் எவரையோ அழைக்கிறார்கள் தான் கொண்ட கருத்துக்களிலும் அதற்கான எதிர்ப்புகள் வன்முறையாக வந்த போதிலும் அச்சமின்றி எதிர் கொண்ட அஞ்சா நெஞ்சன் சோ. மறுநாள் காலை சோ கொடைக்கானல் செல்வதாக இருந்தது. நாங்கள் துணைக்குக் கூட வருவதாகச் சொன்னதை மறுத்து விட்டார். அவர் தனியாகவே காரில் கொடைக்கானல் சென்றார். திமுக அரசின் போலீஸின் உடந்தையை அனுபவித்த அவர் அரசின் போலியான போலீஸ் பாதுகாப்பை மறுத்து விட்டார். தன் வீட்டுக்கு அளிக்கப் பட்ட காவலையும் திருப்பி எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டார். அதன் பிறகு கடைசி வரை எந்தவிதப் பாதுகாப்பும் இன்றியே செயல் பட்டு வந்தார்.

பின்னர் அவர் டெல்லி சென்று ராஜீவ் மற்றும் சுவாமியின் வற்புறுத்தலுடன் சேர்ந்து எடுத்த முயற்சிகளினால் கருணாநிதி அரசாங்கம் மத்தியில் ஆண்ட ஒரு மைனாரிடி அரசாங்கத்தினால் டிஸ்மிஸ் செய்யப் பட்டது. ராஜீவ் காந்தி சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் சோவிடம் பல விஷயங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ராஜீவின் ஆதரவுடனான மைனாரிடி அரசை நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர் ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்த ஒரே காரணம் சோவும், சுப்ரமணியம் சுவாமியும் கொடுத்த அழுத்தம் மட்டுமே. அதற்கான காரணங்களை ராஜீவிடம் எடுத்துக் கூறி அவரது ஆதரவுடன் சந்திரசேகரை வைத்து திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார்கள். சோவின் மீதான ஆத்திரத்தினாலும் கொலைவெறியினாலும் அவரைத் தாக்க எடுத்த முட்டாள்த்தனமான முடிவினால் தன் ஆட்சிக்கே குழி பறித்துக் கொண்டார். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி கூடத் தொடத் துணியாத சோ வின் மீது நடந்த ஒரே வன்முறைத் தாக்குதல் அந்த மதுரைத் தாக்குதலே. அதன் பின்பும் முன்பும் சோ மீது கை வைக்க எவரும் துணிந்ததில்லை. அவர் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து தனியாகவே எங்கும் சென்று வந்தார். அவர் மீதான ஒரே கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் அது மட்டுமே. அந்த ஒரே ஒரு கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் இந்தியாவின் வரலாற்றையே தீர்மானிப்பதில் முடிந்தது. அதற்கு ஒரு சாட்சியாக நான் அந்த இரவில் இருந்தேன்.

திமுக அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப் பட்டவுடன் கடும் ஆத்திரம் அடைந்த கருணாநிதியும் திமுகவும் அதற்கு அடுத்தாற் போல நடந்த ராஜீவ் கொலைக்கு மறைமுக உதவிகளை அளித்தார்கள். தாங்கள் டிஸ்மிஸ் செய்யப் பட்டதற்கு ராஜீவே முழுக் காரணம் என்ற ஆத்திரத்தில் இருந்த கருணாநிதி கும்பல் சிவராசனுக்கு உறுதுணையாக இருந்தது. திமுகவின் திகவின் மறைமுக ஆதரவு இல்லாமல் ராஜீவ் கொலை சாத்தியமாகியிருந்திருக்காது. ராஜீவ் படுகொலை செய்யப் பட்டார். தமிழ் நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி ஜெயலலிதா தலமையில் அமைந்தது. இதற்கெல்லாம் மூல காரணமாக அமைந்தது அன்று மதுரையில் நடந்த சோ மீதான தாக்குதல். அன்று சோ மீதான தாக்குதலுக்கு சாட்சியாகவும் பின்னர் மறுநாள் அதிகாலை வரை அவருடன் கழித்த அந்த பயங்கரமான இரவு என் வாழ்நாளிலும் மறக்க முடியாத ஒன்று. அதன் முன்பாக சோவை சில முறைகள் சந்தித்திருந்தாலும் கூட அன்று இரவு தான் அவருடன் அறிமுகமாகி பேசிக் கொண்டிருக்க முடிந்தது. அதன் பின்னர் சோவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் வரவில்லை. இருந்தாலும் சோவின் பாதிப்பு என் சிறு வயது முதல் இன்று வரை தொடர்கிறது. என்னுடன் எப்பொழுதும் உடன் வந்து கொண்டேயிருக்கிறார்.

(தொடரும்)

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

11 மறுமொழிகள் சோ: சில நினைவுகள் – 3

 1. சந்திரமெளலி on December 19, 2016 at 3:32 pm

  அரசியல் கருத்தானாலும் , சமூக விமர்சனம் ஆனாலும் சோ அளவுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் பத்திரிகை ஆசிரியர் இன்று வரை தமுழில் கிடையாது…அவருடைய தீர்க்கதரிசனம், தைரியம் இரண்டும் தமக்கு கைவரப் பெறாததாலும், தமது சுயலாபங்களுக்காக பத்திரிகை விளம்பரங்களுக்காக ஏதாவது ஒரு கட்சியை , தலைவரை அண்டி வாழ்ந்ததாலும் பொறாமையின் காரணமாக சோவை ஒரு குழப்பவாதியாக மக்கள் மனதில் பதிய வைக்க முயன்று தோற்ற பத்திரிக்கைககாரர்கள் தமிழகத்தில் ஏராளம்… தம் பத்திரிக்கை மீது கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜியார் போன்றவர்கள் தாக்குதல் நடத்தியபோது , கைதுகள் செய்தபோது ஊரையே கூட்டி ஆகாத்தியம் செய்த 99% தமிழ் இதழியலாளர்கள், சோ மீது நடந்த வன்முறைக்கோ, அவர் பத்திரிகை மீது நடந்த தாக்குதல்களுக்கோ குரல் கொடுத்ததாக நினைவில்லை…. ஒரு வேளை , இதோடு சோ ஒழிந்தால் நல்லது என்று கூட புளகாங்கிதப்பட்டிருக்கலாம்.
  எமர்ஜென்சி காலத்தில் , அரசியல் கட்சி பின்புலமோ, பெரிய நிறுவன பின்புலமோ இல்லாமல் எதிர்த்த ஒரே பத்திரிகை துக்ளக் மட்டுமே… முரசொலி போன்றவற்றின் பின்னே திமுக எனும் கட்சி இருந்தது.. அந்த சமயத்தில் மற்ற தமிழ் , ஆங்கில பத்திரிக்கைகள் என்ப கிழித்தன என்று யோசித்தாலே தெரியும்.

 2. sakthipalani on December 19, 2016 at 8:34 pm

  unmaiyai thaakkamudiyum,UNMAI thiruppi thaakkinaal thaangamudiyaadhu enpatheay
  andru kalaingar aatchi kalaikkappattadhu.

 3. kargil jay on December 20, 2016 at 12:00 pm

  பயங்கரமாக இருக்கிறது நிகழ்வுகள். மிகச்சிறந்த தைரியசாலி சோ. ஆசிரியர்க்கு நன்றி.

  அதே நேரத்தில் ராஜீவ் காந்தி ஒரு மிகப்பெரிய கொலைகாரர்.
  தந்தை பெரோஸ் கான் வற்புறுத்தலின் பேரில் சுன்னத் செய்து வளர்ந்த முஸ்லீம் ராஜீவ் காந்தி.
  ராஜீவ் காந்திக்கு இந்தியா-பாகிஸ்தான் போரின் துயரங்கள் நினைவு சற்றும் இருக்கவில்லை.
  பலலட்சம் ஹிந்துக்கள் வங்காளதேசத்தில் கொலை செய்யப்பட்டது சற்றும் கவலையளிக்கவில்லை.
  ராஜீவ் காந்தி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டபோது 4000 சீக்கியர்கள் கொல்லப்படுவதை பார்த்து ரசித்தார்.
  பிறகு பல்லாயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டும் முட்டாள்தனமான முடிவுகளை எடுத்தார்.
  இந்திய ராணுவத்தை அனுப்பி பல தமிழ்ப்பெண்கள் கற்பழிக்கப்பட காரணமானார்.

  1988-91 வரை ஆயிரக்கணக்கில் காஷ்மீர ஹிந்துக்கள் கொல்லப்பட , பெண்கள் கற்பழிக்கப்பட்டு, ஹிந்து ஆண்கள் துரத்தப்பட்டு லட்சக் கணக்கில் அகதிகளாக வந்தபோது புன்முறுவலுடன் அதை ரசித்தது ராஜீவ் தான்.
  இவரைக் கொன்றது தர்மப்படி, சட்டப்படி தவறுதான். ஆனால் முஸ்லீம்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருந்த சோ ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகளை தீவிரமாக விமர்சித்தாரா? என்பது பற்றி ஆசிரியர் எழுத முடியுமா?

 4. சேக்கிழான் on December 20, 2016 at 1:03 pm

  நண்பர் திருமலையின் நினைவிலிருந்து எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை, சோ அவர்களுக்கு ஓர் உண்மையான ரசிகரின்/ வாசகரின் அஞ்சலியாக அமைந்துள்ளது. அற்புதமான மனிதரான சோ அவர்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திப்போம்!

  -சேக்கிழான்

 5. சத்தியப்பிரியன் on December 22, 2016 at 11:46 am

  இதை விட எவரும் சோவின் மறைவிற்கு அஞ்சலி செய்ய முடியாது. ஒவ்வொரு கால கட்டத்திலும் தீய சக்திகள் ஓங்கும்போது சோ போன்ற நல்ல சக்திகளும் ஓங்கும் என்பதுதான் பிரபஞ்ச விதியோ என்னவோ.

 6. Iyappan Thampuran on December 24, 2016 at 2:33 pm

  expecting your next post regarding this….please update it fast

 7. Raja Narasima Veivek on December 26, 2016 at 1:20 pm

  தஙகளின் பதிவுகள் யாவும் இந்து மதம் காக்கவேண்டும் என்ற அடிப்படையில் இருந்தாலும் இதில் பிராமணியம் வாடை வீசவே செய்திறது. உதாரணத்திற்கு சோ, ஜெவை தூக்கி காட்டுதல் இதிலிருந்து என்ன தெரிகின்றது? பிராமணியமே இந்து – இந்து என்பது பிராமணியமே என்பது தெளிவுபட தெரிகின்றது. இதில் எங்கே இந்து ஒற்றுமை உள்ளது என்று தெரியவில்லை. (edited)

 8. Natraj on January 28, 2017 at 11:32 am

  அடுத்த பகுதி எங்கே ஜி? நான்காவது என்ன ஆயிற்று

 9. srinivasan on July 3, 2017 at 6:34 am

  நான்காவது என்ன ஆயிற்று

 10. M. Janardhanan on September 16, 2017 at 12:48 pm

  Cho vaazhnntha kaalathil ma’am vaazhvathe perimeter packiyam

 11. M. Janardhanan on September 16, 2017 at 12:50 pm

  Perum packiyam

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*