அஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா

மிழக மக்களால் பரவலாக அம்மா என்று அபிமானத்துடன் அழைக்கப் பட்ட முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் நாள் நள்ளிரவு மரணமடைந்தார்.  கோடானுகோடி இந்திய மக்களுடன் இணைந்து தமிழ்ஹிந்துவும் அவரது மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.  அவரது ஜீவன் நற்கதியடையப் பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

jayalalithaa

கடுமையான விமர்சனங்களை அவர் மீது கொண்டிருந்தாலும் கூட அவரது மறைவை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும் கூட சொல்ல முடியாத ஒரு வேதனை ஏற்படுகிறது. தமிழ் நாட்டின் முக்கியமான தீய சக்தியை அரக்கக் குடும்பத்தை ஓரளவுக்குள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரே சக்தியும் இன்று கரைந்து போனது வேதனையின் கனத்தை இன்னும் அதிகரிக்கிறது. ஒரு புறம் கட்டுமர வல்லூறுகள் இன்னொரு புறம் அவரே உருவாக்கிய மன்னார்குடி மாஃபியாக்கள் தமிழ் நாட்டின் எதிர்காலத்தை நினைத்தால் இந்த வேதனையுடன் அச்சமும் சேர்ந்து கொள்கிறது. கடவுள் காப்பாற்றட்டும்.

–  ச.திருமலை,  ஃபேஸ்புக்கில்

ஒரு சகாப்தம் முடிவடைந்து விட்டது.  போராட்டங்களும், சாதனைகளும், படாடோபங்களும்,  மனஉறுதியும், கருணையும் கலந்து ததும்பிய  ஒரு மாபெரும் வாழ்க்கை அவருடையது…  20-21ம் நூற்றாண்டுகளின் யுகசந்தியில் தமிழ்நாட்டை சுயலாப மக்கள் விரோத சுரண்டல்வாதிகளும், துவேஷம் வளர்க்கும் இனவாத அரசியல் கயவர்களும் சீரழித்து விடாமல் காத்த தேவதை ஜெயலலிதா. தமிழகத்தின் இரண்டாயிர கால வரலாறு அவரைப் போன்ற மக்கள் தலைவியான ஒரு பெண்மணியைக் கண்டதில்லை. இனியும் காண நேரும் என்று தோன்றவில்லை. நான் அதிமுக தொண்டனல்ல, தீவிர அபிமானி கூட அல்ல. ஆனாலும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. எத்தனை பெரிய ஈடுசெய்ய முடியாத இழப்பு.

– ஜடாயு, ஃபேஸ்புக்கில்

கறாரான அரசியல்வாதி, பாதரசம் போன்று நிலையின்றி அலைபாயும் ஆளுமை (mercurial personality),  இரும்பை ஒத்த உறுதி,  மிகவும் சிக்கலான நிர்வாகத்தையும் கையாளும் செயல்திறன்  – இத்தகைய பிரமிப்பூட்டும் பண்புகளின் கலவையாக ஜெயலலிதா விளங்கினார். 1991, 2011, 2016  தேர்தல்களில்  திமுகவைத் தலையெடுக்க முடியாமல் செய்தார் என்பதே அவரது ஆகப்பெரிய பங்களிப்பாக இருக்கக் கூடும்.  தனது தவறுகளாலும் அகந்தையாலும் எதிரிகள் மீண்டும் துளிர்க்கும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதே அவரது பெரிய தோல்வியும் கூட. ஆனால் ஒன்று, அம்மா, ஆள்வதற்கென்றே பிறந்தவர் என்பதை அவர் சந்தேகமின்றி நிரூபித்தார். இனி, தமிழ்நாடு ஒரு போதும் இது போன்று இருக்காது.. 

– அரவிந்தன் நீலகண்டன்,  ஸ்வராஜ்யா அஞ்சலிக் கட்டுரையில்

******

5 Replies to “அஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா”

  1. De mortuis nil nisi bonum = இறந்தவர்களைப் பற்றி நல்லது அல்லாததைப் பேசக்கூடாது என்பது பண்பாட்டு மரபு.இந்த வகையில் தமிழ்ஹிந்துவின் அஞ்சலி ஏற்கக்கூடியதே. ஆனால் பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்களின் நன்மை-தீமைகளைப் பாதித்த ஒருவரை மரணத்திற்குப் பின்பே சரியாக விமர்சிக்க முடியும்; ஏனெனில் அப்போதுதான் உண்மையான விவரங்கள் வெளிவரும், வேஷம் அகலும், திரைகள் விலகும். கென்னடி, நேரு போன்றவர்களின் நிஜ சொரூபமும் இப்போதுதான் வெளிவந்துகொண்டிருக்கிறது!
    தமிழ் நாட்டில் ஒரு கும்பலைச் சகிக்காதவர்கள்,இயந்திர கதியில் எதிர்கும்பலுக்கு ஜே போடுகிறார்கள்! இவர்கள் நடத்திய அரசியலில் என்ன வேறுபாடு? அதே ஊழல், ஆனால் அதையும் சாமர்த்தியமாகச் செய்யத்தெரியவில்லை! அங்கே குடும்பம், இங்கே கூட்டாளிகள்! இரண்டும் சுரண்டல்! இதில் எது மேல்? இருவரும் தேசீய அரசை சொந்த நலனுக்காகக் கவிழ்த்தார்கள்! அவர் ஹிந்துக்களை நேரடியாகத் திட்டுவார், இவர் ஹிந்து மதத் தலைவர்மீது அபாண்டப் பழி சுமத்துவார்!இருவரும் பிறமதத்தினருக்குப் பரிந்து போவார்கள்! இதில் யார் மேல்? காலம் செல்லச்செல்லத்தான் உண்மை விளங்கும்.

    “The evil that men do lives after them;
    The good is oft interred with their bones.”

    William Shakespeare in Julius Caesar.

  2. முதல்வர் ஜெயலலிதாவின் எழுச்சி நிகழ்ந்த காலகட்டத்தில் தமிழகம் ஒரு குழப்பமான சூழ்நிலையில் யார் நமக்கு உண்மையான நேர்மையான ஆட்சியைத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது. “தி ரோட் நாட் டேக்கன்” (The Road not taken) எனும் ஆங்கிலக் கவிதையின் கூற்றுப்படி தெரியாத தேவதையினும் தெரிந்த பிசாசே தேவலாமென்று மக்கள் பழைய சட்டியைத் தூக்கி அடுப்பில் வைக்காமல், புதிய பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். எவருடைய திறமையும், செயல்பாடும் வாய்ப்பு கிடைத்தால் தான் செய்துகாட்ட முடியும். அப்படி வாய்ப்புகள் கிடைத்தன; எதிர்ப்புகள் மக்களை முகம் சுளிக்க வைக்குமளவுக்கு மோசமாக இருந்தன. பிரமிப்பைக் காட்டிலும் ஒரு பெண்மணியை இவ்வளவு இழிவாக பேசவும் எதிர்க்கவும் செய்யும் போது அனுதாபம் தானாக வந்து சேர்ந்தது. விளைவு, உச்சம். அதில் தக்கவைத்துக் கொள்வது என்பது மிகவும் சிரமம். ஒருமுறை உச்சத்தை எட்டிவிட்டால், அடுத்து சறுக்கல் தான். ஆனால் அந்த உயரம் எட்டுமுன்பே பயணம் முடிந்து விட்டதால், அதே உயரத்தில் வைத்துப் பார்ப்பதும், பிரமிப்பதும் நியாயமே! இனி வருங்காலம் எப்படி இருக்குமென்பதில் எதிர்பார்ப்பு இருப்பதும் நியாயம் தான்.

  3. மிகவும் வருந்தத்தக்க விஷயமென்னவென்றால், இந்தியாவின் பெர்னாட்ஷாவும், அரசியல் சாணக்கியரும், அப்பழுக்கற்ற நேர்மையாளரும், பெறுமதிப்பிற்குரியவரும், ஒவ்வொரு இந்துவும் போற்றவேண்டியவருமான திரு. சோ. ராமசாமியைப் பற்றி ஒரு வரி அஞ்சலிகூட, இந்தத் தமிழ்இந்துப் பொறுப்பாளர்கள் இன்னமும் எழுதவில்லையேயென்பது. சோ அவர்களின் இழப்பு எவ்வஹையிலும் ஈடு செய்யவியலாத மிகப்பேரிழப்பு. எத்தனையோ பேர் வரலாம் போகலாம் ஆனால், சோ என்றொரு ஆளுமை இனி நமக்கு வாய்க்கப்பெறாது. எமது தனிப்பட்ட அவதானிப்பென்னவெனில், பல வகையில் சோவும் சுப்ரமணிய பாரதியும் ஒரே தளத்தில் வைத்துப் பார்த்துப் பாராட்டிப் போற்றப்படவேண்டியவர்கள்.

    குறைந்த பட்சம், திரு அரவிந்தனின் ஆங்கிலப்பதிவையாவது ஸ்வராஜ்ய இதழிலிருந்து மறு பதிவு செய்ய்திருக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

  4. “வெற்றி பெற்றவர்களால் கட்டமைக்கப்படும் மாய பிம்பங்களை நம்பி அவர்களை நாயகர்களாகப் போற்றுவதும் வரலாற்றுப் பீடத்தில் ஏற்றுவதும் உலகில் காலம் காலமாக நடந்து வருகிறது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *