சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் தமிழக அரசியலில் பல வித்யாசமான காட்சிகளை அரங்கேற்றி இருக்கிறது. ஜெயலலிதாவை ‘அம்மா’ என்ற சொல்லன்றி வேறெந்த சொல்லாலும் அழைக்கவே அஞ்சும் அதிமுக ரத்த்த்தின் ரத்தங்கள், இப்போது “ஜெயலலிதாவை இதுவரை காத்ததே சின்னம்மாதான்” என்கிறார்கள். காலம் என்பது கரங்கெனச் சுழன்று கீழ் மேலாகும், மேல் கீழாகும்!

தமிழக அரசியல் இப்போது முக்கியமான திருப்பத்தில் இருக்கிறது. பிரதான கட்சியான அதிமுகவின் தலைவி இறந்துவிட்டார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தனது விழி அசைவில் அனைவரையும் ஆட்டுவித்த மாபெரும் தலைவி ஜெ. அவரது மறைவு அக்கட்சியினருக்கு ஒரு நிச்சயமின்மையை உருவாக்கி இருக்கிறது. அதிலிருந்து மீள அவர்கள், ஜெயலலிதாவின் ‘உடன்பிறவா சகோதரி’யான வி.என்.சசிகலாவை சரண் புகுகிறார்கள். இதன் பின்னணியில் சசிகலா குடும்பத்தின் திட்டமிட்ட செயல்முறை இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

மறுபுறம், திமுக தலைவர் மு.கருணாநிதி இதுவரை இல்லாத வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். ஆயினும் அக்கட்சியின் தலைமை இதுவரை கை மாறவில்லை. கருணாநிதியின் உடல்நலக் குறைவு, ஜெயலலிதாவின் மரணம் ஆகியவற்றால், தமிழக அரசியல் களம் சோபை இழந்திருக்கிறது. அதைப் போக்கும் முயற்சியில் அதிமுகவின் நிர்வாகிகள் அபத்த நாடகங்களை நடத்துகிறார்கள். “ஆருயிர் அம்மா அரசியல் கடலில் கண்டெடுத்த நல்முத்தே! உடன்பிறவா சகோதரியே, சின்னம்மாவே, தரணியாள வாருங்கள்! தமிழகத்தைக் காக்க வாருங்கள்!” என்று மாநிலமெங்கும் விளம்பரப் பதாகைகள். இதைவிட உருக்கமான வசனங்களும் பல இடங்களில் காணக் கிடைத்தன.

ஒரு கட்சியின் தலைவி இறந்து மூன்று நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் அடுத்த தலைமைப் பீடம் யார் என்பதை அறிவிக்க போட்டாபோட்டி அதிமுகவினரிடம் துவங்கிவிட்டது. சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளர் என்பதை அறிவிக்க கட்சித் தலைவர்கள் முண்டியடித்த காட்சியை, நல்லவேளை ஜெயலலிதா காணவில்லை.

டிச. 6-இல் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த சென்னை ராஜாஜி ஹாலிலேயே புதிய மாற்றத்துக்கான அச்சாரங்கள் தென்பட்டன. அவரது உடலைச் சுற்றிலும் சசிகலாவின் குடும்பத்தினரே நாள் முழுவதும் கால் கடுக்க நின்று காவல் காத்தனர். அவர்களில் பலரும் – சசிகலா தவிர- போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என்று அம்மாவால் விரட்டப்பட்டவர்கள்! குறிப்பாக சசிகலாவின் கணவர் நடராஜனைக் கண்டாலே அம்மாவுக்கு கோபம் வந்துவிடும். அவர்தான் சடலத்தின் அருகில் இருந்து, அங்கு வந்த பிரதமருடன் அளவளாவினார்!

அதிமுகவின் அமைச்சர்களோ, ‘தாற்காலிக’ முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த ஓ.பன்னீர்செல்வமோ அம்மாவின் உடல் அருகே இருக்கவில்லை. லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட எவருக்குமே அங்கு இடமில்லை. ஆனால், மன்னார்குடி குடும்பம் தான் அங்கு கோலோச்சியது. ஜெயலலிதாவுடனான சசிகலாவின் நீண்டநாள் நட்புக்கு கைமாறு அது! ஜெ. இறந்தவுடன், அவரால் விரட்டப்பட்டவர்கள் உயிர்த்தோழியின் தயவால் மறுபிரவேசம் செய்த காட்சி அது. அதன்மூலமாக, அதிமுகவின் அம்மா விசுவாசிகளுக்கு தெளிவான தகவல் உபதேசிக்கப்பட்டது.

அதிமுகவில் (திமுகவில் மட்டும் என்ன?) லட்சியத்துக்காக யாரேனும் இருப்பதாக நினைத்தால், அவருக்கு அரசியலே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தனி மனித வழிபாட்டை ஒரு கருவியாக்கி, சுயலாபம் பெறுவற்கான தொழிற்களமாகவே அரசியலை ஆக்கிவிட்டனர் திராவிடக் குஞ்சுகள். அதில் முதல்நிலை வகிப்பது அதிமுக. அத்தகைய கட்சியில் திடீரென வழிபாட்டுக்குரிய தலைமைப்பீடம் இல்லாதுபோனால் என்னவாகும்? புதிய தலைமைப்பீடத்தை வேண்டி அதிமுக பிரமுகர்கள் பரிதவிக்கிறார்கள். அவர்களுக்கு, சசிகலா தான் இப்போதைக்கு ஒரே உபாயம். சசிகலாவுக்கு அந்த எண்னம் இல்லாதிருக்கக் கூடும். ஆனால், அவரை ஆட்டுவிக்கும் மன்னார்குடி குடும்பம் அதிகாரத்தைச் சுவைக்க பரிதவிக்கிறது.

ஜெயலலிதா இருந்தவரை, அவரை ஆட்டுவித்தது சசிகலாதான் என்று குற்றம் சாட்டப்பட்டது. இத்தகைய புகார்கள் எல்லை மீறவே, 2011, டிசம்பர் 19-இல் சசிகலாவையும், அவருடன் 13 பேரையும் (எல்லாருமே சசிகலா குடும்பம்) அதிமுகவிலிருந்து நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆயினும், உயிர்த்தோழி இன்றி அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே மிக விரைவிலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-இல் ஜெயலலிதா தண்டனை பெற்றதற்கும் (சசிகலாவும் உடன் தண்டனை பெற்றார்), முதல்வர் பதவியை இழந்ததற்கும்கூட சகவாச தோஷம் தான் காரணம் என்று குற்றம் சாட்டுவோர் உண்டு. அதில் ஓரளவு உண்மையும் உண்டு. 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்முறை முதல்வரான போது, அவரை தவறாக வழிநடத்தியதாக சசிகலா மீது புகார் கூறியே, திருநாவுக்கரசு, பண்ருட்டி ராமசந்திரன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் அதிமுகவிலிருந்து விலகினார்கள் என்பது நினைவிருக்கும்.

அப்போது, ஜெ.யை வைத்து பின்னணியில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், இப்போது சசிகலாவை முன்னிறுத்துகிறார்கள். நட்புக்காக கணவரையே பல ஆண்டுகாலம் தள்ளிவைத்த சசிகலாவின் தியாகம் இப்போது அதற்கான பலனை அடைகிறது. அம்மாவின் வீடான போயஸ் கார்டன்- வேதா நிலையம் இபோது சின்னம்மாவின் இருப்பிடமாகிவிட்டது. சட்டப்படி அந்த வீடு யாரைச் சேரும் என்ற சர்ச்சைகள் கிளம்பியிருந்தாலும், சின்னம்மா அதைப்பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா மட்டுமே இதை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறார். அவரது மகன் தீபன் சசிகலாவை அத்தை அத்தை என்று வார்த்தைக்கு வார்த்தை அன்புடன் அழைத்து அவருடன் ஒன்றிவிட்டார். ஜெ. உயில் ஏதேனும் வெளிவந்தால் பிரச்னைகள் ஏற்படலாம்.

ஜெ. உயில் ஏதேனும் எழுதியிருந்தாலும் அது சொத்துகள் தொடர்பாக மட்டுமே இருக்க முடியும். கட்சியின் எதிர்கால வாரிசு என்று அவர் யாரையும் அடையாளம் காட்டுவது முறையாக இருக்காது. இந்நிலையில் தீபாவை முன்வைத்தும் அதிமுகவில் சிலர் அரசியல் சாகசம் நிகழ்த்த விழைகிறார்கள். சொந்தக் காலில் நிற்க இயலாதவர்கள், அடுத்தவரின் முதுகில் சவாரி செய்யவே விரும்புகிறார்கள்!

இந்நிலையில், கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், மூத்த தலைவர் பொன்னையன், அதிருப்தி அணியின் தலைவராகக் கருதப்பட்ட செங்கோட்டையன், முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட தம்பிதுரை, எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும், சசிகலாவின் தலைமைக்காக மன்றாடுகிறார்கள். ஒருசிலர் அதீதமாக யோசித்து, சின்னம்மாவே முதல்வராக வேண்டும் என்றும் கோஷமிடுவதைக் காணும்போது புல்லரிக்கிறது.

அதிமுகவின் அவசரப் பொதுக்குழு- செயற்குழுக் கூட்டம் சென்னையில் டிச. 29-இல்  கூட உள்ளது.  அநேகமாக, அதில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கும் நாடகம் முழுமை பெறலாம். ஓ.பி.எஸ்.சை முதல்வராக ஆளவிட்டால் போதும் என்ற நிலை ஏற்பட்டாலே நல்லதுதான்.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபை எம்.பி. சசிகலா புஷ்பா, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். “கட்சி விதிப்படி 5 ஆண்டுகள் முழுமையாக உறுப்பினராக இருப்பவரே பொதுச்செயலாளர் ஆக முடியும்” என்ற விதிமுறையை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். சென்னையில் கூடும் அதிமுக செயற்குழுவில் இந்த விதிமுறை சசிகலாவுக்காக மாற்றப்படலாம்.

இந்நிலையில் சசிகலாவை உயர்பீடத்துக்கு கொண்டுசெல்ல வசதியாக, தினந்தோறும் முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. பிரபல தொழிலதிபர்கள், பத்திரிகை நிறுவன உரிமையாளர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வி நிறுவன அதிபர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சாமியார்கள் எனப் பல தரப்பினர் தினசரி சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். அதன்மூலமாக அவருக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகின்றனர். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள், ஹிந்து என்.ராமும், மதுரை ஆதீனமும்.

இதன் பின்னணியில் இருந்து அழைப்பு விடுப்பவர்கள் மன்னார்குடி குடும்பத்தினர்தான் என்று புலம்புகின்றனர் திமுகவினர். தங்கள் தலைவர் மு.கருணாநிதிதான் நடராஜன் – சசிகலா திருமணத்தை 1973-இல் நடத்தி வைத்தவர் என்ற சரித்திர உண்மையை அவர்கள் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இந்த நிலையில், மணல் மாஃபியா கும்பலின் தலைவன் வேலூர் சேகர் ரெட்டி வீட்டில் டிச. 8-இல் நடத்தப்பட்ட வருமான வரித்துறை அதிரடி சோதனை, பல அதிர்ச்சிகரமான தகவல்களை அம்பலப்படுத்தி இருக்கிறது. சுமார் 177 கிலோ தங்கமும், ரு. 130 கோடி கருப்புப் பணமும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தனது முறைகேடுகளுக்கு உதவிய அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பட்டியலை மத்திய புலனாய்வு அமைப்பிடம் அவர் வாக்குமூலமாகவே அளித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில், ‘இந்திய வரலாற்றில் முதல்முறையாக’ தமிழக அரசு தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும், தலைமை செயலக அறையிலும் வருமான வரித் துறையினர் டிச. 21 –இல் நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத பெருமளவு தங்கமும் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. தவிர, தமிழக அமைச்சர்கள் பலரது பெயர்களும் அவரால் சொல்லப்பட்டதாகத் தகவல். அவர்களில் பலர் சசிகலாவின் நெருங்கிய வட்டத்தினர் என்பது குறிப்பிடத் தக்க தகவல்.

மத்திய புலனாய்வுத் துறையும் அமலாக்கத் துறையும், இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், எதிர்கால அரசியல் மாற்றங்களுக்கு இவையும் காரணமாக அமையக் கூடும். வரும் நாட்களில் கருப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் தமிழகத்தில் எவ்வாறு அமையும் என்பதைப் பொருத்தே அரசியல் நிகழ்வுகளின் ஆரூடத்தையும் சொல்ல முடியும்.

ராம மோகன ராவ்

இந்த அதிரடி ரெய்டுகளைப் பயன்படுத்தி அதிமுகவை மத்திய பாஜக அரசு முடக்கப் பார்ப்பதாகவும், வளைக்கப் பார்ப்பதாகவும் இப்போதே புகார்கள் கிளப்பி விடப்படுகின்றன. நாடு முழுவதும் நடந்துவரும் சோதனைகளின் ஒரு பகுதியே தமிழகத்தில் நடைபெறும் ரெய்டுகளும் என்பதை அறிந்த எவரும் இவ்வாறு உளற மாட்டார்கள். இருப்பினும், மடியில் கனம் உள்ளவர்கள் அஞ்சுவதும், உளறுவதும் இயற்கைதான்.

எது எப்படியோ, அதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா? முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா? நிர்பந்தங்களால் அரசியலிலிருந்தே ஒதுங்குவாரா? எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கறையாகவே இருக்கும்.

காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம்.

மன்னார்குடி குடுமபத்தின் பணபலம் அதிமுகவை ஆட்டுவிக்கிறது. விளம்பர வருவாய்க்காக இதனை ஊடக அதிபர்கள் ஆதரிப்பது அதைவிடக் கொடுமை! அரசியல் என்பதே பிழைப்பாகிவிட்ட சூழலின் கொடிய விளைவு இது.

தமிழகத்தை இறைவன் தான் காக்க வேண்டும்.

 

 

7 Replies to “சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…”

  1. AIADMK came to power this time though not with massive mandate as in 1991, the main reason was to prevent DMK to come to power. AIADMK should be protected by well wishers of the state other if DMK assumes power, it will be disastrous for state in the absence of viable alternative.

  2. //எது எப்படியோ, அதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.//

    இல்லை. அதிமுக வில் இல்லை. அதிமுகவுக்கு வெளியே ஊர் விவாதிக்கலாம். உங்களைப்போல. அதிமுக செயற்குழு உறுப்பினர்கள அனைவரும் சேர்ந்து ஒரேமனதாக சசிகலா பொதுச்செய்லாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட் விட்டார். அடுத்து நடக்கும் ;செயற்குழ, அனைத்து உறுப்பினர்களும் – ஓ பி உட்பட – சசிகலாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்துவிட்டால் அது எப்படி விவாதப்பொருளாகும். அதிமுக ஆளுங்கட்சி. கட்சித்தலைவி மரணிக்க, இன்னொருவரை ஒரே மனதாகத் தேர்தெடுக்கிறார்கள் இதில் உங்களுக்கென்ன பிரச்சினை. எவனோ ஒரு வக்கீல் கேசு போட்டால் சரியாகிவிடுமா? அவன் முக்கியமா?செயற்குழு உறுப்பினர்கள் முக்கியமா?

    ஏன் தமிழ்நாட்டை இறைவன் காப்பாற்ற வேண்டும். இன்னும் அரியணை ஏறவில்லை. ஏறியபின், 4 அரை வருடங்கள் ஆட்சி நடக்கப்போகிறது. சிலகாலம் பார்த்துவிட்டுத்தானே எழுத முடியும் சசிகலா எப்படி ஆள்கிறாரென்று? இல்லையா?

    அவருக்கு அனுபவ்மே இல்லை; இவரெப்படி ஆளுவது என்ற கேள்வியும் வரலாறு தெரியாப் ஏச்சு. உலக, மற்றும் இந்திய வர்லாற்றில் வாரிசு இல்லாமல் மன்னன் மடியும் போது அனுபமே இல்லாத அவன் சிறிய மகனையோ மகளையோ அரியணையில் அமரவைப்பது வழக்கு. ஜன்நாயகத்திலும் உண்டு. ராஜீவ் காந்தி திடீர்த்தலைவர்தானே? உச்சிமோந்து புகழப்படும் – இத்தளத்தில்தான் – ஜயலலிதா எந்த அனுபவத்தில் முத்லவ்ரானார்? அவர் ஆளவில்லையா?

    நடப்பதற்கு முன்பே அது கெடுதலாகத்தான் இருக்கும் என ச்ங்கூதுகிறீர்கள். பொறுங்கள்.

    தனிததலைமை துதுபாடிகள் என்பது அதிமுக உண்மை. ஆனால் அது தவறன்று. அக்கட்சி உட்கட்சி ஜனநாயகத்தில் ந்ம்பிக்கை வைக்காத த்னிநபர் கட்சி. ஒரு தனிநபர் போனதும், இன்னொரு தனிநபரை ஒரே தலைமையாகக் கொண்டால்தான் அக்கட்சி வாழும். எனவே ஒரே தலைவியைத் தேட வேண்டியது அவசியாமாகிறது. சசிகலாவைத்தவிர வேறு யாரிருக்கிறார்கள்?

    I wish all the best to AIADMK under Sasikala.

  3. BSV,

    Your post on comparing sashikala’s elevation to Rajiv Gandhi is pot correct. We all know what a poor PM Rajiv Gandhi was.

    JJ’s death is a mystery & a lot of questions are still unanswered on the nature of her death. Sashikala’s role in this is highly suspicious.

    She was a maid of JJ, she was even driven put of the poes garden residence twice. Her family members have been driven out from the party since 2011 but we saw their dominance during JJ’s funeral.

    It is a matter of great shame that a person with no credentials whatsoever being made the general secretary of a party which has over 1 crore cadres.

    It is even more painful that even educated persons like you are coming forward to defend this action.

    God save Tamilnadu.

  4. The present senior politicians of AIADMK were/are unable to select one among themselves as Gen.Secretary due to mutual distrust. Hence they had elected selvi.Jeyalalitha a cine actress now they have elected sacikala who is a housemaid/Ayya in veda Illam..
    This is abject slavery.The political culture has decended to such a low level.

  5. // உலக, மற்றும் இந்திய வர்லாற்றில் வாரிசு இல்லாமல் மன்னன் மடியும் போது அனுபமே இல்லாத அவன் சிறிய மகனையோ மகளையோ அரியணையில் அமரவைப்பது வழக்கு. //

    ஐயன்மீர், அது மன்னராட்சியில். இது ஜனநாயகம். ஜனநாயகத்திலும் உண்டு என்று சொல்கிறீர்கள். மறுக்கவில்லை. ஆனால் அது இந்திய அரசியல் களத்தில் நேர்ந்த பெரும்பிழை. நமது அரசுகள் தகுந்த சட்டத்திருத்தம் கொண்டுவந்து, மீதமுள்ள ஆட்சிக்காலம் குறுகிய காலமாக இருக்கும்பட்சத்தில் (உதாரணத்திற்கு ஆறு மாதங்களுக்குக்குறைவாக) ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தவும், அதிகமாக இருக்கும்பட்சத்தில் பொதுத்தேர்தல் நடத்தி புதிதாக தேர்வு செய்யப்பட்ட கட்சி ஆட்சி புரியவும் வழி வகுத்திருக்கவேண்டும்.

    காரணம், இன்னும் நமது அரசியல் களம் – குறிப்பாக தமிழகம் – கொள்கைகளையோ அவற்றை முன்வைக்கும் அரசியல்கட்சிகளையோ அன்றி தனி நபரை மட்டுமே மையம் கொண்டதாக உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா என்ற தனிநபர் முகத்திற்காக விழுந்த வாக்குகள் மூலம் ஏற்பட்ட ஆட்சியை சம்பந்தமே இல்லாத இன்னொரு பெண்மணி – ஜெ-வுக்கு தோழியாக இருந்த ஒரே காரணத்திற்காக அபகரிப்பது பரம ஆபாசம் (புதிதாக ஆபாசமாவதற்கு ஒன்றுமில்லை, அது வேறு விஷயம்).

    நாளை சசிகலா மறைந்தால் அவருக்கு சமையைல் செய்து கொடுத்தவர் – அப்புறம் அவருக்குப்பின் அவருக்கு துணி துவைத்து கொடுத்தவர் – அவருக்குப்பின் அவருக்கு செருப்பு துடைத்து கொடுத்தவர் …. இப்படியே ஆட்சிக்கு வரலாமா ?

    இங்கே விவாதத்திற்குள்ளாவது அரசியல் மாண்புகள் மற்றும் மதிப்பீடுகள். அவற்றை பலாத்காரம் செய்யும் வேலைகளை கார் சக்கரத்தின் காலில் விழும் – ஹெலிகாப்டரை வணங்கும் கால்நக்கிகள் செய்துகொண்டிருக்கின்றன.

    எனவே இது அ.தி.மு.க என்ற கட்சியின் விவகாரம் மட்டுமல்ல.

    கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்ற துயரம் கலந்த ஆதங்கம் நியாயமே.

  6. தக்கார் தகவிலர் என்பது அவரவர் தம் எச்சத்தால் காணப்படும். திராவிட இயக்கங்களின் எச்சம் அளவுகடந்த ஊழல்கள், குடும்ப அரசியல், முறைகேடுகள், ஹெலிகாப்டர் டயரை நக்குவது , சாராய ஆலைகள் பல நடத்தி , தமிழனை ஒட்டுமொத்தக் குடிகாரனாக்கி லட்சக்கணக்கான குடும்பங்களை அழித்தது, பெற்றமகளுக்கு நான் அப்பா இல்லை என்று நீதிமன்றத்தில் சொல்வது , பேரன் பேத்திகளுக்கும் வேண்டிய இலாக்காக்களைப் பெற்றுக்கொண்டு , லட்சக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் தலையில் கொத்து எறிகுண்டுகளை வீசி கொல்து, நிலப்பறி அரசு நடத்துவது, ஊழல் சிறை சென்று வரும் கதா நாயகர்களுக்கும், கதா நாயகிகளுக்கும் தாரை தப்பட்டைகளுடன் மங்கள வாத்யங்கள் முழங்க விமான நிலையத்தில் வரவேற்புக் கொடுப்பது என்று பல வண்ண நிறப் பிரிகை போல இருக்கும் ஆக்டோபஸ் போன்ற ஜந்து. அந்த ஜந்து இப்படித்தான் இருக்கும்.

    தன்னுடைய தாய்மொழி தமிழை காட்டுமிராண்டி என்று சொன்ன நபரை தலைவன் என்று சொல்லித்திரியும் கும்பல் இப்படித்தான் இருக்கும். திராவிடம் என்றாலே அடுத்தவன் பெண்டாட்டியை ஆட்டையைப் போடுவதும் , அப்படி ஆட்டையைப் போட்டஇராவணனை உயர்த்திப் பேசுவதும் , மகளின் தோழியை தள்ளிக்கொண்டு போவதுமே இவர்களின் இலக்கணம். இதுகள் இப்படித்தான் இருக்கும். எந்தக் காலில் விழுந்தால் என்ன ? திராவிடம் என்றாலே தலைவர்கள் கொள்ளையர்கள், தொண்டர்கள் மூடர்கள் என்ற இலக்கணம் எழுதப்பட்டு எவ்வளவோ ஆண்டுகள் ஏறக்குறைய நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.

    நடக்கக் கூடாதது எதுவும் நடந்துவிடவில்லை. எது நடக்கவேண்டுமோ அதுவே நடந்துள்ளது. தமிழகம் திராவிடம் என்ற உரலுக்குள் தலையை கொடுத்து 50 -ஆண்டுகள் ஆகிவிட்டது. தலையில் உலக்கை விழாமல் உளுத்தம் பருப்பா விழும் ?

    சசிகலா மறைந்த பின்னர் சசிகலாவுக்கு அருகில் இருந்து தொண்டுபுரிந்த யாராயினும் வந்தாலும் திராவிடத்துக்கு அதுவே தகும். அது இளவரசியா, வளர்ப்பு மகனின் மனைவியா , அல்லது வேறு யாராயினும் சரியே .கொள்கை எதுவும் இல்லாத கொள்ளைக் கூட்டத்தின் அரசியல் இதுவே. யார் காலைக் கழுவியாவது வாழ்வார்கள். சகோதரி சசிகலாவுக்கு அடுத்த தலைவியாக வரப்போவது நமீதா, நயன், அனுஷ்கா , விந்தியா , அல்லது அன்னை கோகுல இந்திரா என்று தான் இருக்கும்.

    திராவிட இயக்கங்கள் தற்குறிகளே என்பதற்கு வேறு சாட்சியம் தேவை இல்லை.

  7. On this occasion, my thoughts are whiling away in not too long future . Since these parties are specific men/family centric, after the demise of the main character, a situation of utter confusion prevails. Most of the party functionaries occupy positions at the mercy of the star figure. Their objective is to make hay as the Sun shines.When the leader is no there, they get scattered like honey bees and eventually fade away.Similar scenario should be expected after M.Karunanaidi in the DMK and TN is just watching a trailer of the events to follow. God save TN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *