உடுக்கை இழந்தவள் [சிறுகதை]

ம்பியர் புடைசூழ யுதிஷ்டிரர் சபா மண்டபத்துக்கு வரும்போது சபை கூடியிருந்தது. உள்ளே நுழைந்ததும் அவரது கண்கள் தன்னிச்சையாக விதுரரை நோக்கின. தலையை தாழ்த்தி வணக்கம் சொல்ல வேண்டும் என்று எண்ணினார், அந்த எண்ணம் மூளையிலிருந்து தலைக்குச் சென்று செயலாக மாறுவதற்கு முன் விதுரர் தன் கண்களை திருதராஷ்டிரர் பக்கம் சுழற்றிக் காட்டினார். யுதிஷ்டிரர் வணக்கத்தை எண்ணத்தோடு நிறுத்திக் கொண்டு திருதராஷ்டிரரைப் பணிய அரியணைப் பீடம் நோக்கி நடந்தார். சாத்திரம் அறிந்த தானே முறைமையில் கோட்டை விடும்போது தம்பியர் தாமதம் செய்துவிட்டனர் என்று குறை சொல்லிப் பயனில்லை என்று நினைத்துக் கொண்டார்.

வழியில் இரண்டு பாதங்கள் அவரது கண்களில் பட்டன. கட்டை விரலை விட நீளமான இரண்டாவது, மூன்றாவது விரல்கள். கட்டை விரல் அளவு நீளம் உள்ள மற்ற இரண்டு விரல்கள். அவர் பார்த்த வரையில் குந்திக்கு மட்டும்தான் அப்படி கால் விரல்கள் அமைந்திருக்கும். பட்டாடை மூடி இருந்தாலும் பளிங்குத் தரையில் பொற்கவசத்தின் மின்னலும் தெரிந்தது. ‘இவன் ஒருவன் மட்டும் இல்லை என்றால் துரியோதனனைப் பற்றி அச்சமே வேண்டியதில்லை’ என்று அன்றைக்கு முதல் முறையாக நினைத்துக் கொண்டார்.

‘ஆட்டத்தைத் தொடங்கலாமே!’

பாண்டவர்கள் தாள் பணியும்போது கூட பீஷ்மரின் கண்கள் கர்ணனிடம்தான் நிலைத்திருந்தன. கௌந்தேயா, குருவம்சத்தின் அழிவைக் காட்டும் நிமித்தங்களை சில நாட்களாகவே கண்டு வருகிறேன், உன் ஒருவனால்தான் அழிவைத் தடுக்க முடியும்! உன் ஒருவனுக்குத்தான் துரியன் பணிவான், நீ கௌந்தேயன் என்று அறிந்தால் யுதிஷ்டிரனும் மறுபேச்சு பேசமாட்டான். குரு வம்சத்தின் இந்த இரண்டு கிளைகளையும் உன்னால்தான் இணைக்க முடியும் கர்ணா! இவன் க்ஷத்ரியன் அல்ல, சூதன் என்றும் இழித்துப் பேசும் அடுமடையர்களே, அவன் உடலோடு ஒட்டிய பொற்கவசம் கூடவா கண்ணில் படவில்லை? அதை விடவும் வேறு நிரூபணம் வேண்டுமா?

‘நூறு முத்துமாலை பணயம்!’

வந்ததிலிருந்து துரியோதனனையே பார்த்துக் கொண்டிருந்த பீமன் தன் கவனத்தை கர்ணன் மீது திருப்பினான். என்ன உயரம், எத்தனை வலுவான தசைகள்! இவனாலும் ஜராசந்தனை மற்போரில் தோற்கடித்திருக்க முடியுமோ? ஜராசந்தன் எத்தனை பலசாலி என்றாலும் உடலோடு பிறந்த கவசத்தை உடைத்தால்தானே இவனை வெல்ல முடியும்? பார்த்தனின் வித்தையையும் என் வலிமையையும் ஒரு சேரப் பெற்றவனா இவன்? துரியோதனனைக் கூட வென்றுவிடலாம் போலிருக்கிறது…

‘ஆயிரம் யானை பணயம்!’

துரோணர் நாற்பத்தெட்டாவது முறையாக அர்ஜுனனை நோக்கினார். பெருமிதம் அவரது கரிய முகத்தை ஒளிர வைத்திருந்தது. சபைக்குள் நுழைந்ததும் அர்ஜுனனின் கண்கள் முதலில் தன்னைத் தேடுமா அல்லது கர்ணனைத் தேடுமா என்று அவருக்குள் இருந்த பதைபதைப்பு மறைந்திருந்தது. பார்த்தனின் உள்ளத்தில் தனக்கே முதலிடம் என்பதில் சந்தேகமே இல்லை என்று நினைத்துக் கொண்டார். ஏன் இருக்காது? அவனை இன்றைய தலைமுறையின் இணையற்ற வில்லாளியாக உருவாக்கி… ஆனால் இந்தக் கவச குண்டலதாரி…

‘இரண்டாயிரம் சீனத்துப் பட்டாடை பணயம்!’

அர்ஜுனன் துரோணரை ஓரக்கண்ணால் பார்த்தான். ஆசார்யரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டோம் என்று நினைத்து தன் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டான். முதலில் கர்ணனை என் கண்கள் தேடிவிடுமோ என்ற பதைபதைப்பு அவருக்கு இருந்திருக்கும் என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்தான். அன்புக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கும் மாமனிதர் என்று நினைத்துக் கொண்டான். அண்ணாவிடம் பேசி துரோணரின் குருகுலத்தை இந்திரப்பிரஸ்தத்துக்கு மாற்றிவிட வேண்டும். அவருக்குத் தெரியுமா என்னால் அவனை நேராகப் பார்க்க முடிவதில்லை என்று? வந்து இரண்டு நாழிகை இருக்கும் இன்னும் அவன் பக்கம் மட்டும் தலையை திருப்பவே முடியவில்லை. ஆனால் மனக்கண்ணால் அவனைப் பார்க்காத நொடியில்லை. இம்மி இம்மியாக அவன் உடலைப் பார்க்கிறேன், கவசத்துக்கும் உடலுக்கும் ஒரு சின்ன இடைவெளி கூட இல்லை. காற்று கூட உள்ளே புக முடியாது போலிருக்கிறது. அவன் குளிக்கும்போது அவன் மார்பு ஈரமாகுமா? நான் குளிக்கும்போது என் விலா எலும்புகள் ஈரமாகின்றனவா என்ன? இவன் கவசத்தை எப்படித் துளைப்பது? இவன் திறமையை சமாளித்துவிடலாம், இவன் கவசத்தை எப்படி சமாளிப்பது? இவனை எப்படித்தான் வெல்வது?

‘அடுத்த வருஷ வரிப்பணம் பணயம்!’

துரியோதனன் தன் பார்வையை பீமனிடமிருந்து திருப்பினான். அனிச்சையாக கர்ணனைப் பார்த்து புன்னகைத்தான். கர்ணனின் பதில் புன்னகையைக் கண்டதும் அவன் மனம் மேலும் பூரித்தது. உன் வில்லையும் கவசத்தையும் அந்த தசரத ராமனால் கூட வெல்ல முடியாதடா! இருந்தும், சூதில் வெல்வது உன் வீரத்துக்கு இழிவுதான் என்று தெரிந்தும், நான் அந்த வழியைத் தேர்ந்தெடுத்ததும் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டாயே, உன்னைப் போல் நண்பன் இது வரை இந்த உலகத்தில் தோன்றியதில்லையடா!

‘அஷோமதி ஆற்றை ஒட்டிய பகுதிகள் பணயம்!’

கிருபரின் மனம் மேலும் கவலையில் ஆழ்ந்தது. சகுனி இப்படி தொடர்ச்சியாக வெற்றி பெறுகிறாரே, இவை என்ன பகடைகளா அல்லது அவரது ஆறாவது, ஏழாவது விரல்களா? இந்த நால்வரின் எண்ணத்தில் நல்லவையே உதிக்காதா? அதுவும் க்ஷத்ரியர் அவையில் இந்த சூதனுக்கு என்ன வேலை? ஆனால் சூதனுக்கு உடலோடு ஒட்டிய பொற்கவசம் எப்படி? எந்தத் தேரோட்டி கவசம் அணிகிறான்? தேரோட்டிகளுக்கு கவசம் அணிவிப்பது நல்ல யோசனையாக இருக்கிறதே! அவர்களை எதிராளியின் வில்லிலிருந்தும் வேலிலிருந்தும் பாதுகாக்குமே! துரோணனிடம் ஆலோசிக்க வேண்டும்…

‘மாயராஷ்டிரபுர நகரம் பணயம்!’

பகடைகளை உருட்டிய சகுனியின் மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்திருந்தது. பார் மருகா, என் திறமையைப் பார்! கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி நீ சக்கரவர்த்தி ஆகப் போவது நிச்சயம்! என்னதான் வீரன் என்றாலும் கர்ணனின் வில் வெற்றியைப் பெற்றுத் தரும் என்பது அவ்வளவு நிச்சயம் இல்லை மருகா!

‘இந்திரப்பிரஸ்த அரசு பணயம்!’

விதுரரின் மனத்தில் இருந்த உளைச்சல்கள் அத்தனையும் அந்தக் கணத்தில் நீங்கின. இனிமேல் சகோதர யுத்தத்தைத் தவிர்க்க ஒரே வழிதான் இருக்கிறது. ஐவரும் திராவிடத்துக்கு சென்று தோள் வலியால் ஒரு அரசை அமைத்துக் கொள்ளட்டும். அண்ணனிடமும் பிதாமகரிடமும் ஆசார்யரிடமும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். இந்த மூர்க்கன் அதற்கும் தடை சொல்லாமல் இருக்க வேண்டும். கர்ணனை சம்மதிக்க வைத்துவிட்டால் போதும், மூர்க்கனை வழிக்கு கொண்டு வந்துவிடலாம். அவனை உதவி என்று கேட்டால் போதும் உடலோடு ஒட்டிப் பிறந்த கவசத்தைக் கூட அறுத்துக் கொடுத்துவிடுவான். விதுரர் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்.

‘சகதேவன் பணயம்!’

நகுலனின் கண்கள் மூடியிருந்தாலும், சபை முழுவதும் சகதேவனையே பார்ப்பதையும், சகதேவனின் முகத்தின் உறைந்த புன்னகையின் அழகையையும் உணர்ந்தான். அவன் உடலெல்லாம் உஷ்ணமாக இருந்தது. இத்தோடு தமையன் நிறுத்திக் கொள்ளக் கூடாது, சகதேவன் அடிமை என்றால் நான் மட்டும் சுதந்திரமாக இருந்து என்ன பயன்? நேராக போரில் ஈடுபட்டிருக்கலாம், எதற்காக சூதாட ஒத்துக் கொண்டார்? அது சரி, தெரிந்த விஷயம்தானே? பெரியப்பா, தாத்தா, தம்பியருடன் போரிட விருப்பமில்லை என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் கவசத்தின் மீதுள்ள அச்சம்தானே இவரை சூதாட வைத்திருக்கிறது?

‘நகுலன் பணயம்!’

சகதேவன் இப்போது நகுலனை ஏறிட்டுப் பார்த்தான். சகதேவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த நகுலனும் தன் கண்களைத் திறந்து புன்னகைத்தான். இந்த அழகனும் அடிமையா? ஆசைகளும் அச்சமும் அகங்காரமும் இல்லாத மாமனிதன். காற்றிலும் கடலிலும் ஏன் எல்லாரும் அஞ்சும் கவசத்திலும் கூட அழகையே காணும் ரசிகன். அண்ணா, என்னோடாவது நிறுத்திக் கொண்டிருக்கக் கூடாதா?

‘மாற்றாந்தாயின் புதல்வர்களை மட்டும்தான் பணயம் வைப்பாயா யுதிஷ்டிரா?’

அஸ்வத்தாமனின் கண்கள் சுருங்கி இருந்தன. அர்ஜுனன் அடிமையா? இது என்ன குறுக்கு வழி கர்ணா? உன் கவசத்துக்கு இனி என்ன பயன்? நீ அர்ஜுனனை போரில் வென்றிருந்தால் சூதன் என்று இழித்துப் பேசி உனக்கு கற்பிக்க மறுத்த என் தந்தைக்கும் மாமனுக்கும் சரியான பாடமாக இருந்திருக்கும். சொந்த மகனை விடுத்து பார்த்தனைத்தான் உலகின் சிறந்த வில்லாளியாக ஆக்குவேன் என்று சூளுரைத்த என் தந்தைக்கும் தலை குனிவு ஏற்பட்டிருக்கும்…

‘பீமன் பணயம்!’

இது தவறு. பெருந்தவறு. மூர்க்கனான எனக்கே தெரிகிறது. அண்ணாவின் வார்த்தையை வேதவாக்காகவே கருதும் இந்த துச்சாதனனுக்கே அண்ணன் எல்லை மீறிவிட்டார் என்று புரிகிறது. பீமன் இயல்பாகவே காட்டுமிராண்டி, இப்போது கரை மீறி எழும் வெஞ்சினத்தால் என் மார்பைப் பிளந்து என் ரத்தத்தைக் குடிக்கத்தான் போகிறான். இல்லை, அப்படி எதுவும் நடந்துவிடாது. என் கதாயுதம் என்னைக் காக்கிறதோ இல்லையோ, அண்ணாவின் கதாயுதம் என்னைக் காக்கிறதோ இல்லையோ கவச குண்டலதாரி என்னைக் காப்பான்.

‘உன் மனைவியை பணயம் வை, வென்றால் நீ தோற்ற அனைத்தையும் திரும்பப் பெறலாம்!’

மகனே துரியா, இனி நீதான் சக்கரவர்த்தி! இந்தக் குருடனின் ஆசை நிறைவேறியதடா! ஆனால் அந்தக் கிருஷ்ணனை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது, அவன் சக்கரத்துக்கு எதிர் இவன் வில் தாக்குப் பிடித்துவிடுமா?

‘அவளை இழுத்து வா துச்சாதனா!’

நான் வில் கற்கக் கூடாதா துரோணரே? நான் அர்ஜுனனுடன் போட்டியிடக் கூடாதா கிருபரே? என் கையில் வில் அல்ல, குதிரைச் சவுக்கு மட்டும்தான் இருக்க வேண்டுமா பீமா? நான் சுயம்வரத்தில் பங்கேற்கக் கூடாதா பாஞ்சாலி?

‘ஐவரின் மனைவி பத்தினி அல்ல!’

நான் அறுவருக்கும் பத்தினியாக இருந்திருந்தால்…

‘சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு!’

திரௌபதி கண்களைத் திறந்தாள். அவள் காலடியில் துச்சாதனன் விழுந்து கிடந்தான். பொன்னிறச் சேலைகள் பொதியாகக் கிடந்தன. சுற்றுமுற்றும் பார்த்தவள் கர்ணனின் கோலத்தைக் கண்டதும் திடுக்கிட்டாள். கர்ணன் தன் வெண்பட்டாடையை இழுத்து இழுத்து தன் மார்பை மீண்டும் மீண்டும் மூட முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் மார்பின் கருமுடிகள் அந்த வெண்பட்டாடையை கருநிறமாகவே காட்டின.

**********

(போர் முடிவில் யுதிஷ்டிரன் கர்ணன் தன் அண்ணன் என்று தெரிந்துகொள்ளும்போது பாஞ்சாலி சபையில் அவமதிக்கப்படும்போது தான் தலை குனிந்து நின்றதாகவும் அப்போது கர்ணனின் பாதங்கள் குந்தியின் பாதங்களை ஒத்திருந்ததை கவனித்ததாகவும் அது அவனுடைய கோபத்தைத் தணித்ததாகவும் கூறுகிறான். அதுதான் இந்தக் கதைக்கு ஆரம்பப் புள்ளி. பாஞ்சாலியின் ஆடையை நீக்கச் சொன்ன தருணத்தில் கர்ணனின் ‘ஆடை’ – கவசம் – அவனை விட்டு நீங்கியதாக என் கற்பனை).

2 Replies to “உடுக்கை இழந்தவள் [சிறுகதை]”

  1. ஆர்.வி புத்தக விமர்சகர் பதவியிலிருந்து சிறுகதையாளர் பதவியை அடைந்து, சிறந்த சிறுகதையாளர் இடத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றார். அவரின் மற்ற சிறுகதைகளை விட இந்த கதையின் அமைப்பு நன்றாக இருக்கின்றது. அடிக்குறிப்புகள் எல்லாம் எதற்கு சார். அவரவர் புரிந்து கொள்ளவேண்டியதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *