ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?

ஹைட்ரோ  கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதையொட்டிய கிராம மக்கள் கடந்த மாதம் போராட்டம் செய்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான பிரச்சினையை நான்கு விதமாக அணுக வேண்டியுள்ளது.

  1. வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு/ மாநில அரசு எவ்வாறு கையாள்கிறது?
  2. ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் பிரச்சினைகள்/பலன்கள்.
  3. இந்தியாவில் ஹைட்ரோ கார்பனை எடுக்கப்பயன்படுத்தப் போகும் தொழில் நுட்பம் என்ன? அதனால் எம்மாதியான சூழலியல் பாதிப்புகள்  உண்டு அல்லது ஏற்படலாம்?
  4. ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேறுமானால் இந்தியாவிற்கு என்ன லாபம்?

மேற்கூறிய கேள்விகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மட்டுமல்ல இனி அரசு கொண்டு வரும் எந்த வளர்ச்சித் திட்டத்திற்கும் கூட பொருந்தும்.

இக்கேள்விகளுக்கு விடையைப் பெறுவதற்கு முன்பாக ஹைட்ரோ கார்பன் என்பதென்ன? அனைத்து உயிரினங்களிலும் பல்வேறு வேதிப்பொருட்களின் கலவைதான் உள்ளது. ஹைட்ரஜனும் கார்பனும் சேர்வதன் கலவையைப் பொறுத்து அவ்வேதிப்பொருளுக்கு பெயர் சூட்டியுள்ளனர். ஒரு கார்பனும், நான்கு ஹைட்ரஜனும்  இணைந்தால் மீத்தேன் என்று பெயர். இரண்டு கார்பனும்  ஆறு ஹைட்ரஜனும்  இணைந்தால் ஈத்தேன் என்று பெயர். இவ்வாறாக அதன் கலவையைப் பொறுத்து ஒவ்வொரு வேதிப்பொருளுக்கும் பெயர் உள்ளது. லட்சக்கணக்கான வேதிப்பொருட்கள் ஹைட்ரஜன், கார்பன், நீர், ஆச்சிஜன், நைட்ரஜன் கலப்பதால் கிடைக்கும்.

ஹைட்ரோ கார்பனை எடுப்பதால் எரிபொருள் தேவையும், மின் உற்பத்தித் தேவையையும் பூர்த்தி செய்ய உதவும் என்பதால்தான் அரசு ஹைட்ரோ கார்பன் எங்கெல்லாம் உள்ளது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு சில இடங்களைக் கண்டறிந்தன. கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவேரி படுகைகளிலும், அந்தமான் வரையிலுமான வங்க வளைகுடா பகுதியிலும், அஸ்ஸாம், ராஜஸ்தான், மேலும் சில இடங்களிலும் ஹைட்ரோ கார்பனை எடுக்கலாம் எனக் கண்டறிந்துள்ளது. ஹைட்ரோ  கார்பனிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், இயற்கை எரிவாயு, மீத்தேன், ஷேல் எரிவாயு என பல வகையான வேதிப் பொருட்களைப் பிரித்தெடுக்க இயலும். 

வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு/ மாநில அரசு எவ்வாறு கையாள்கிறது?

வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி அதற்கான நிலங்களைக் கையாள்வதில் தொடங்கி, பொது மக்கள் அத்திட்டத்தால் தமக்கு ஏற்படப்போகும் விளைவுகளைக் கண்டு அஞ்சி எதிர்ப்பைத் தாமாக தெரிவித்தாலோ, சூழலியல் போராளிகளின் தூண்டுதலில் தவறாகப் புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தால் கூட மக்களை அணுகி தொழில் நுட்ப ரீதியிலான விளக்கத்தை அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. கொண்டு வரப்போகும் திட்டத்தால் இந்தியாவிற்கு  என்ன பலன், அதைக்காட்டிலும் நிலங்களை இழக்கும் மற்றும் அதனால் பாதிப்புக்குள்ளாகும் அதைச் சுற்றியுள்ள நில உரிமையாளர்களுக்கும், கிராம மக்களுக்கும் கிடைக்கப்பெறும் பொருளாதார நன்மைகள் மற்றும் மருத்துவக் காப்பீடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்வதன் வாயிலாக அவர்களின் நம்பிக்கையைப் பெரும் வகையில்  மத்திய/மாநில அரசு செயல்பட வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தையும் , போராடும் மக்களின் உணர்வுகளையும்  புரிந்துக் கொண்டு செயல்படுவதாகத் தெரியவில்லை. மத்திய/ மாநில அரசுப் பொறுப்பில் உள்ளவர்களும், அதிகாரிகளும் இதை வெறுமனே வளர்ச்சித் திட்டமென்றும், மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று சொல்வதும், அவர்களே மக்கள் விரும்பவில்லையென்றால் இத்திட்டம் கைவிடப்படும் என்ற மாற்றையும் முன்வைப்பதைக்  காட்டிலும் மக்களைக் குழப்பத்தில் கொண்டு செல்வதும், அச்சத்தை அதிகப்படுத்துவதும் வேறொன்றாக இருக்க இயலாது. குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது அதிகாரத்தில் உள்ள அரசும், முந்தைய அரசின் கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் வெறுமனே நாங்களும் இத்திட்டத்தை எதிர்க்கிறோம், இதை வரவிட மாட்டோம் என்று சொல்வது கூட அரசியல்தான். ஜெயலலிதா கூடங்குளம் அணுஉலை பிரச்சினையிலும் ஆரம்பத்தில் போராட்டத்திற்கு மாநில அரசின் ஆதரவுண்டு என்று சொன்னதும், பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றியதும் வரலாறு. ஆகையால்தான் இம்முறை மாநில  அரசு உறுதி மொழியைக் கொடுத்த பின்னரும் போராட்டக்குழுவினர் போராட்டத்தைக் கைவிடவில்லை.

சூழலியல் போராளிகள் என்ற பெயரில் பல்வேறு அமைப்புகள் வளர்ச்சித் திட்டங்களை வெறும் சூழலியல் பிரச்சினையாக மாற்றி  ஊடகங்களைத் தங்களுக்குச் சாதகமாக தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுப்பதன் வாயிலாக பொது மக்களையும், கிராம மக்களையும் மிகத் தெளிவாக அச்சத்தில் ஆழ்த்த இயலுகிறது. இத்திட்டங்களால் ஏற்படும்  இழப்பைக் காட்டிலும் இந்தியாவிற்கு பலன் என்று இருந்த போதிலும் மத்திய அரசும் சரி, ஆளும் அரசின் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுக்கும் விளக்கமும் சரி பார்வையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதில்லை. தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்களை வாங்குவதைக் காட்டிலும் விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் துணையோடு ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டிய கடமை அரசிற்கே உள்ளது. ஹைட்ரோ கார்பன் விஷயத்தில் தொழில் நுட்பம் சார்ந்த விளக்கங்களும் வழங்கப்படவில்லை. நிலங்களை இழக்கும், குத்தகைக்கு விடும் மக்களுக்கு இதனால் கிடைக்கப்பெறும் பலன்களைக் கூட அரசு அதிகாரிகள் அதிகளவில் மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதே உண்மை.

ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சந்திக்கப் போகும் பிரச்சினைகள்/பலன்கள் :

அரசு குத்தகைக்குச் சிலரிடமிருந்து நிலங்களை ஆய்வுக்காக வாங்கியது. அதற்கான பணம் மும்மடங்கு வாங்கிய தினத்திலிருந்து அவர்களது வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது. அரசு இதை மேற்கொண்டு எடுக்க முப்பது வருடங்களுக்குக் குத்தகை போட்டுள்ளது. முப்பது வருடங்களுக்குப் பின்னர் நிலம் உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என்ற உறுதியை அரசு கொடுத்தாலும், அவ்விடத்தில் சில/பல ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய இயலாது. ஏனெனில் அங்கு ரசாயானம் கொட்டிக் கிடந்திருக்கும். அந்த மண்ணின் தன்மை விவசாயம் செய்வதற்கான சக்தியை இழந்திருக்கும் என்பதும் உண்மை.

விவசாயிகள் நிரந்தரமாக எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகளை மனதிற்கொண்டு நிலங்களை விற்பவர்களுக்கு அல்லது குத்தகைக்கு விடுபவர்களுக்கு மிகுந்த லாபம் தரும் வகையில் செய்தால் தாங்களாகவே மாற்றுத் தொழிலுக்கு ஆயத்தம் செய்வார்கள்.  மேலும் இதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட நிலப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்களுக்கும் பயிர்க் காப்பீடு திட்டத்தின் மூலம் சிறப்புச் சலுகைகள் வழங்கும் என்கிற உறுதி மொழியையும் கொடுத்தால் நிச்சயமாக அரசின் திட்டங்களுக்குத் துணை செய்வார்கள். என்னைக் கேட்டால் நிலத்தைக் கொடுப்பவர்களுக்கு ஹைட்ரோ கார்பன் வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் கிடைக்கும் என்ற உறுதியும் கொடுக்க வேண்டும். நிலத்தையும் விற்க முன்வருவார்கள்.

இந்தியாவில் ஹைட்ரோ கார்பனை எடுக்கப்பயன்படுத்தப் போகும் தொழில் நுட்பம் என்ன? அதனால் எம்மாதியான சூழலியல் பாதிப்புகள்  உண்டு அல்லது ஏற்படலாம்?

ஹைட்ரோ  கார்பனில் மரபு சார்ந்த எரிபொருள் (Conventional Gas) & மரபுசாரா எரிபொருள் (UnConventional Gas) என இரண்டு இருக்கிறது. மரபு சார்ந்த எரிபொருள் என்பது  பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு (natural gas) போன்றவை. நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் எரிவாயு, tightsand மீத்தேன் போன்றவை  மரபு சாரா எரிபொருள் வகையைச் சேர்ந்தது.  தற்போது  இந்தியாவில் மரபு சார்ந்த எரிபொருள்  (Natural Gas & Oil)எடுப்பதற்கான தொழில் நுட்பமுள்ளது. ஆழ்துளைக் குழாய்களை பூமிக்கு அடியில் செலுத்தி நீரை எடுப்பது போல மிகச் சிறிய அழுத்தத்தைக் கொடுத்து பூமிக்கு அடியிலுள்ள எண்ணெயையும், இயற்கை எரிவாயுவையும் எடுப்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதை எடுப்பது என்பது பெரிதாக சுற்றுச் சூழலைப் பாதித்ததில்லை. இரண்டாவதாக சொல்லப்படும்  மரபு சாரா எரிபொருள் (methene, Shale Gas) எடுக்கப்படுவதற்கானச் சொந்தமான தொழில் நுட்பம் இந்தியாவிடம் கிடையாது. இந்தியாவில் பல்வேறு ஆய்வுகள் இது சம்பந்தமாக நடந்து வருகின்றன. இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்காவில் உள்ள நீரியல் விரிசல் (hydraulic  fracking) முறையைப் பயன்படுத்தினால் அதிக தண்ணீர் செலவாகும் என்பதால், தமக்கான புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓஎன்ஜிசி  உயர் அழுத்த அலைகள் (Super Shock Waves)  என்ற தொழில் நுட்பத்தை செயலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது Rock Sciences and Rock Engineering Laboratory, Department of Earth Sciences, IIT Bombay Natural Gas & Shale Gas ஐ மண்ணுக்கு அடியிலிருந்து எப்படி எடுப்பது என்பது பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இயற்கை எரிவாயுவை – ஐ எடுப்பது ஷேல் எரிவாயுவை  எடுப்பதுபோல கடினமான ஒன்று அல்ல. இயற்கை எரிவாயு என்பது மென்மையான பாறைகளில் படிந்துள்ள ஒன்று. இதை துளைகளைப் போட்டு  மென்பாறைகளில் படிந்துள்ளதையும் சிறிய அழுத்தத்தைக் கொடுப்பதன் வாயிலாக மென்பாறைகளை  ஊடுருவி எடுப்பதும் மிக எளிதான ஒன்று. ஆனால் ஷேல் எரிவாயு  என்பது கடினமான பாறைகளுக்குள்  படிந்துள்ள ஒன்று. இதை ஆழ்குழாய்களை துளையிட்டு  எடுப்பது கடினமான ஒன்று. இதை எடுக்கவே அமெரிக்கா  நீரியல் விரிசல் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கிறது. இதைப் பல்வேறு வகையான ரசாயானத்தை  மண்ணுடன் கலக்கி, அதிக  அழுத்தத்துடன் தண்ணீரைச் செலுத்தி கடின பாறைகளில் படிந்துள்ள ஷேல் எரிவாயுவானது  பிரித்தெடுக்கப்படுகிறது. ஒருவேளை இந்தப் பாறைகளை உடைத்தெடுக்கும் போது தவறுகள் நடந்தால் அது நீருடன் கலந்து மாசு ஏற்படுத்தும் என்பதே இதை எதிர்ப்பவர்களின் வாதம். அதனால் பல பிரச்சினைகள் (விவசாயம் அழியும், நோய்கள் வரும்) ஏற்படும் என்பதே எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் வாதமாக உள்ளது.

மேலும் அமெரிக்கா, தான் வைத்திருக்கும் நீரியல் விரிசல் தொழில்நுட்பம் பற்றிய நுணுக்கங்களை யாரிடமும் பகிரத் தயாராக இல்லை என்பது ஒருபுறம். மற்றொரு புறத்தில் இதை ஆய்வு செய்து வரும் இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்காவில் உள்ள பாறை அமைப்பிற்கும் இந்தியாவில் பூமிக்கு அடியிலுள்ள பாறை அமைப்பும் ஒன்றல்ல என்று தெரிவிக்கின்றனர். மேலும் இதற்கு அதிக தண்ணீர் செலவாகும் என்பதையும் கணக்கில்கொண்டுள்ளது. எனவே தான் இந்தியா நீரியல் விரிசல் (Hydraulic Fracking)முறை நமக்கு அவசியமில்லாத ஒன்று எனக்கருதி, சொந்தத் தொழில் நுட்பத்தை உருவாக்கும் பொருட்டு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் அந்நிய செலவாணியைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அரசின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவோ, அல்லது நீரியல் விரிசல் முறையை இன்னமும் கொண்டு வரவில்லை என்பதை அறியாமலேயே அரசை மக்கள் விரோதி அரசாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சமூக போராளிகள் உள்ளூர் மக்களிடம் தவறான கருத்தைப் பரப்பி வருகிறார்கள் என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

பாறையின் தன்மையை, அதை உடைக்கவும் அழுத்தம் பற்றிய ஆய்வுகளை ஒரு புறம் Rock Sciences and Rock Engineering Laboratory, Department of Earth Sciences, IIT Bombayசெய்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதை அளவை செய்யும் permeameter  கருவியையும்  மற்ற கருவிகளையும்   தயார் செய்துவிட்டார்கள். இதுவரையிலும் பாறையை எப்படி உடைப்பது என்பதற்கான 6-7 முறைகளை ஆய்வு செய்துள்ளார்கள். இன்னும் இரண்டு வருடங்களில் பாறையை எப்படி உடைப்பது என்கிற முழுமையான ஆய்வுகள் முடியும். இந்த ஆய்வை மேற்கொள்ளுவதற்கு சர்வதே அனுமதியையும் பெற்றுவிட்டது மும்பை ஐஐடி.

Super Wave Technology Ltd (SWTL) என்ற நிறுவனத்துடன்  ஓஎன்ஜிசி  புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போட்டு ஷேல் எரிவாயுவை எடுக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறியும் super shock waves  என்ற விரிசல் தொழில் நுட்பத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளது.  SWTL என்பது ஐஐஎஸ் பங்களூரின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். இந்த ஆய்வை இந்தியா ஏன் மேற்கொள்கிறது என்ற கேள்விக்குப் பதில் இதுதான்.

// Hydraulic fracturing requires very large quantities of fresh water and huge quantities of energy for pumping the same at very high pressures to break up the shale rock and free up the oil or gas. After the fracturing, the well produces substantial quantity of effluent water which needs to be disposed of.
These are issues regarding safe disposal of the water. The global oil and gas industry has been searching of late for alternate technique for fracturing which either does not require any water or minimum quantity of water ​//

அதாவது அமெரிக்காவின் நீரியல் விரிசல் தொழில் நுட்பத்திற்கு அதிக தண்ணீர் செலவும் அதிக பொருட் செலவும் ஆகும். ஆகையால் இந்தியா அவ்வழியைப் பயன்படுத்துவதினால் லாபமல்ல என்பதால்தான் இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரில்லாமல் அல்லது மிக்க குறைந்த அளவில் தண்ணீர் உபயோகிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்தியா.

shock/blast waves தொழில் நுட்பத்தை முதலில் 1000 -1500 மீட்டர் ஆழத்தில் உள்ள ஷேல் காஸை எடுக்கப் பயன்படுத்தலாம் என்ற யோசனையையும் ஓஎன்ஜிசி ​ அரசிற்கு முன் வைத்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேறுமானால் இந்தியாவிற்கு என்ன லாபம்?

இந்தியா அந்நிய செலவாணியில் 80%-  ஐக் கச்சா எண்ணெய்  மற்றும் 18% எரிவாயு இறக்குமதி செய்வதற்கே செலவிடுகிறது. ஆண்டுக்கு 10,50,000 கோடி ரூபாய்க்கு  கச்சா எண்ணெய்  இறக்குமதிக்காக  மட்டுமே இந்தியா தற்போது செலவிடுகிறது. 2030 ல் இதே நிலை நீடித்தால் 20,00,000 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். இந்தியாவின் இயற்கை எரிவாயுவுக்கான சராசரி தேவை 6.8% அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் எரிபொருள் தேவையை மனதிற் கொண்டு இந்தியா தேவையைக் கட்டுக்குள் வைக்க முயல வேண்டும். மின் உற்பத்தி முறையில் அணு மின் உற்பத்தி மற்றும் கதிர், காற்றாலைகள் போன்ற மாற்று மின் திட்டங்களைக் கொண்டு வருவதன் வாயிலாக எரிவாயு, எண்ணெய் தேவையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். மேலும் இறக்குமதியைக் குறைக்க தமக்கான சொந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு எரிவாயுவை பூமிக்கு அடியில் வைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் எரிபொருள் தேவையையும் ஓரளவுக்கு நிறைவேற்ற இயலும்.

​மக்கள் விரும்பாத திட்டங்கள் வேறு. மக்களை அறியாமைக்குள் செலுத்தி மக்களை விருப்பப்படாமல் செய்ய வைக்கும் முயற்சிகள் வேறு. ஆனால் மக்களை அறியாமையில் வைத்து ஓஎன்ஜிசி ​மற்றும் அரசுகள் முறையாகச் செயல்படுவதன் விளைவுகளே இன்று சூழலியல் போராளிகள் என்ற பெயரில் மக்களைக் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வளர்ச்சிக்கான திட்டமாகப் பார்க்காமல், கான்சர் வரும், நோய்கள் பரவும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி இந்திய வளர்ச்சிக்குக் குந்தகம் ஏற்படுத்துகிறார்கள்.

​இப்போது அரசு செய்ய வேண்டிய பரப்புரை, இந்தியா தற்போதைய நிலையில் ஏற்கனவே மற்ற இடங்களில் எடுத்து வரும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்தான் எடுக்கப்போகிறது என்பதையும், நீரியல் விரிசல் முறையை இந்தியா பயன்படுத்தப் போவதில்லை என்பதையும், ஆகையால் அதிக அளவிற்கான நீரைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை இந்தியா நிராகரித்துள்ளது போன்ற  விஷயங்களையும் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

போராட்டக் காரர்கள் இந்த சமூக விஞ்ஞானிகளிடம் இந்தியாவில் எங்கெல்லாம் நீரியல் விரிசல்  தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஷேல் எரிவாயுவை எடுத்துள்ளார்கள் என்று வினாக்களை எழுப்பச் செய்ய வேண்டும். அப்போது அவர்களால் இந்தியாவில் ஒரு இடத்திலும் இதுவரை எடுக்கவில்லை என்ற உண்மையைச் சொல்ல வேண்டி வரும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய அரசும், மாநில அரசும் ஓஎன்ஜிசியும் மிகத் தைரியமாக மக்களிடம் சென்று விளக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பின்வாங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டமல்ல, கச்சா எண்ணெய்யைக்கூட  எடுக்க முடியாது. ஏனெனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்க ஒரு தரப்பு முனைப்பாகவே இருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக அமல்படுத்தாமல், முகநூல், தொலைக்காட்சிகள் மற்றும் மக்களிடம் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் அரசுகள் கழிவுகளை அகற்ற உண்மையான அக்கறையை செலுத்துவதோடு அல்லாமல், அவற்றை முறையாக அகற்றும் பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தொழிற்சாலையில் அப்பொறுப்பில் உள்ளவர்கள் முறையாக செய்யாவிடில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பஞ்சாயத்துத் தலைவர்கள் இதுசார்ந்து புகார் கொடுத்தால் ஓஎன்ஜிசி முறையான நடவடிக்கையை அதிகாரியின் மீதும் எடுக்க வேண்டும். உடனுக்குடன் கழிவுகளையும் அகற்ற வேண்டும். செயல்முறைக்கு (operation) வந்த பின் இதை முறையாகச் செயல்படுத்தாமல் அன்றாட உற்பத்தியில்  மட்டுமே கவனம் செலுத்துவது சரியல்ல.

அதிக அளவிலான மீத்தேன் வெளிப்பாடு என்பது வேளாண்மையிலிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தான் வெளிப்படுகிறது. இதனால் பெருமளவு பசுமை வீட்டு வாயுக்கள் (Green House Gas) வெளிப்படுகின்றன. கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக புவி வெப்பமயமாதல் என்ற மிகப்பெரிய சூழலியல் பிரச்சினைகளுக்கு இதுவே காரணமும் கூட. மனிதர்கள் தங்கள் தேவைக்காகத் தான் பல்வேறு சூழலியல் பிரச்சினைகளுக்கு இடையே வாழ்கிறோம். அவ்வகையில் இன்றைய தேவையான எரிபொருளும் முக்கியமானது என்ற புரிதலையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இயன்ற அளவுக்கு  சூழலை மாசுபடுத்தாத தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிப்பதே சமூகத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் சுற்றுச்சூழலையும் பேணிக்காக்க வழிவகுக்கும் என்ற புரிதலே அவசியமானது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அரசின் பொறுப்பு. பெட்ரோல் டீசலை மண்ணெண்ணெய் இறக்குமதியையும் குறைத்து, அந்நிய செலவானியையும் குறைத்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நமது ஒத்துழைப்பைக் கொடுப்போம்.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்க்கலாம்:

https://www.business-standard.com/article/punditry/where-is-india-s-fracking-revolution-115102100273_1.html

https://www.shalegas.international/2015/02/20/indian-company-uses-shock-waves-instead-of-fluid-to-frack-shale/

https://www.kbhenergycenter.utexas.edu/2016/05/03/india-invites-texas-energy-companies-to-invest-in-its-shale-market/

https://www.heritage.org/environment/report/the-regulation-hydraulic-fracturing-federal-and-indian-land-wyoming-v-department

https://www.teriin.org/policybrief/docs/Shale_gas.pdf

https://indianexpress.com/article/technology/science/from-the-lab-studying-shale-rocks-to-extract-gas/

https://tech.economictimes.indiatimes.com/news/technology/a-billion-dollar-business-by-using-a-destructive-natural-phenomenon/51723663

https://www.business-standard.com/content/b2b-chemicals/ongc-super-wave-technology-to-co-develop-alternative-for-hydraulic-fracturing-115022000033_1.html

https://www.emis.com/insight/india-%E2%80%93-shelving-shale

https://timesofindia.indiatimes.com/business/india-business/ONGC-goes-for-shock-therapy-under-PMs-Make-in-India-move/articleshow/46291516.cms

4 Replies to “ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?”

  1. The article explains, in crystal clear terms, the significance of the project. In these days of transparency, it is essential, that the public be informed and educated about the various plans and projects.Most of the objections stem out of ignorance and fear.Hope the concerned authorities realise this responsibility and take the people with them to achieve the glorious ends

  2. In Principle we can not offer agricultural land for alternative energy. We have to import food otherwise die of starvation Already agricultural land is sinking and unemployable labour. Hungry thrice in a day for all. We can remain without oil and gas. Can we remain without food in a day? Development without destruction of natural resources is welcome.

  3. No one is objecting to the extraction of hydrocarbon per se.

    This cannot be compared to the what is being done in other states. The land here in neduvasal is a fertile one & this extraction will definitely lead to farmers’ ruin.

    If it was really above board, why has the govt not taken the pains to explain the benefits to the people & allay their fears?

    You have BJP leaders like Ila Ganesan saying “Tamilnadu must be preopred to make a small sacrifices for India” which further compounds the issue.

    Also, while extracting there is the danger of sea water mixing with the ground water, gas leakage etc.,

    The BJP Govt may be good in its intention but is poor in implementation.

    They must remember that “the smallest good deed is better than the grandest good intention”.

  4. One other reason for people being apprehensive is that of late, tamilians have started feeling increasingly insulated from the rest of India.

    The way we have been marginlaised in issues like Cauvery water, Mullai periyar, Palar, Jallikattu, fishermen deaths etc., has given a feeling that Tamilnadu is being victimized.

    Now issues like hydrocarbon, hindi imposition etc., has only heightened this suspicion.

    Much was expected of the BJP Govt but it has failed to live up to the peoples expectations.

    But history will tell you that whenever people/govt are voted with great expectations, they have invariably failed

    Modi is no exception.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *