வஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27

கோவலன் கண்ணகி இருவரும் வான் வழியே வானவர் உலகம் சென்றபின்பு நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. சேரன் செங்குட்டுவன் இமையம்வரை  சென்று, கல் எடுத்துவந்து வஞ்சி நகரில் பத்தினி கோட்டம் எழுப்பிவிட்டான். அந்தக் கோட்டம் இப்போது பலரும் வழிபடும் கோவிலாக மாறிவிட்டது. மணிமேகலைக்கு அந்தக் கோவிலுக்குச் சென்று அவர்கள் இவருடைய படிமங்களையும் வழிபாட்டு வரவேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. அவளுக்கு வான்வழி செல்லும் திறன் உள்ளதால், அவள் கவலை ஏதுமின்றி அந்த மந்திரத்தை உச்சரித்து ஆகாய மார்க்கமாக வஞ்சி நகரம் சென்றாள்.

“கண்ணகித் தாய் தனது கற்பின் மேன்மையால் மதுரை நகரில் நியாயம் கேட்கப் போராடியவர். ஆனால் கோவலன் தனது இல்லற தர்மத்தைத் துறந்து கணிகை வீதியில் திரிந்து ஈட்டிய பொருளை இழந்து கண்ணகித் தாயை வருந்த செய்தவர் அன்றோ?  இதில் அவருடைய அறம் பிறழ்ந்தல்லவா போயிற்று? கண்ணகியின் கணவர் என்ற சிறப்புத் தகுதிதான் அவரையும் கோவிலில் படிமம் ஆக்கியதா?” என்ற கேள்விகளுடன் மணிமேகலை கோவிலுக்குள் சென்று இருவரின் உருவச் சிலைகளையும் வணங்கினாள்.

“பொய்யில் புலவனின் அறத்துப்பாலில்தான் எத்தனை அதிகாரங்கள் அறத்தைப் போற்றுகின்றன அம்மா? இல்லறவியல், துறவு என்று இரண்டாகப் பிரிந்து கிடக்கும் அறத்துபபாலில் இல்லறவியலுக்குத்தானே அதிக அதிகாரங்கள்? இல்லறவியலின் அடிப்படை அன்பும் அறமும் இல்லையா தாயே? அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது  என்கிறாரே  வள்ளுவர்? பின் ஏன் உன் அறத்தை நான்கு சுவர்களுக்குள் செய்யாமல் மதுரை வீதிகளில் அலைந்து கற்பையே உனது தர்மமாகக்கொண்டு கடமையாற்றினாய்?”

மணிமேகலை கண்களை மூடி தியானித்தாள்.

தனக்கும் பத்தினித்தாயான கண்ணகிக்கும் இடையில் ஒரு புரிதல் அந்த மௌனமான இடைவெளியை இட்டு நிரப்ப ஒலியற்ற மொழி ஒன்று புலனாகத் தொடங்கியதை மணிமேகலை உணர்ந்தாள்.

“மணிமேகலா,“ கண்ணகியின் குரலில் அன்பும் பரிவும் ததும்பி ஓடியது.

“சொல், தாயே!“ மணிமேகலை பணிவுடன் கேட்டாள்.

“என் கடவுள் கோவலனுக்கு நேர்ந்தது பொறுக்காமல், மதுரையை எரித்து வீதிகளில் வெம்மை தணியாது நான் உக்கிரமாகச் சுற்றிக்கொண்டிருந்தபோது காவல் தெய்வம் மதுராபதி என்னை அழைத்தது.

“இது நாங்கள் முற்பிறவியில் செய்த வினையின் பயனாகும் என்றது. கூடவே ஒரு கதையையும் சொன்னது.“

மணிமேகலை ஆவலுடன் கேட்கத்துவங்கினாள்.

“குற்றமற்ற பூம்பொழில்கள் நிறைந்த கலிங்க நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளை ஞாதி  எனப்படும் தாயாதிக்காரர்களான வசு என்பவனும் குமரன் என்பவனும் ஆண்டு வந்தனர். இருவர் நடுவிலும் கடும்பகை. போர் தொடுக்கும் அளவிற்குச் சென்று விட்டது. அக்காலத்தில் சங்கமன் என்ற வணிகன் பொருள் ஈட்டுவதற்காக எவரும் போகாத தேசத்திற்குப் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை எடுத்துக்கொண்டு தனது மனைவி நீலியுடன் சிங்கபுரம் நோக்கிச் சென்றான். அப்போது அவர்களைப் பார்த்தவர்கள் அந்தப் பெண்ணிடம், ‘பெண்ணே! உன் கணவன் அரசனிடம்  வேலை பார்ப்பவன். பரதன் என்பது அவன் பெயர். ஒரு திருட்டுக் குற்றத்திற்காக அவனை அரசனிடம் அழைத்துச் செல்கிறோம்,’ என்று கூறி அவனை இழுத்துச் சென்றனர். அரசபையில் அவனைக் கபிலபுரத்திலிருந்து வந்த ஒற்றன் என்று குற்றம்சாட்டினார்கள். அரசனும் என்ன ஏது என்று கேட்காமல் அவனை வாளால் வெட்டிக் கொல்ல உத்தரவிட்டுவிட்டான். நீலி, தன் கணவன் இறந்த துயர் தாளாமல் அங்கிருந்த பெரிய மலையின் மீதேறி,”எனக்குத் தீங்கிழைத்தவர்கள் நிச்சயம் அதன் பலனை அடைந்தே தீருவார்கள்!” என்று சாபமிட்டபடி கீழே குதித்துத் தனது உயிரை மாய்த்துக்கொண்டாள்.. அந்தச் சாபம்தான் இந்தப் பிறவியில் என்னைத் தொடர்ந்தது என மதுராபதி தெய்வம் கூறியது.”

“ஓ தாயே! உங்களையும் முன்வினைப் பயன் விடவில்லையா?” என்று கேட்டாள் மணிமேகலை.

“பிறவிப்பெருங்கடலில் விழுந்து எழுந்து உழன்று தவிக்கும் எல்லா மன்னுயிர்களையும் அவர்கள் செய்த தீவினையின் பயனும், நல்வினையின் பயனும் விடாது அடுத்தபிறவிகளிலும் தொடரும்.”

“அப்படித் தொடராமல்  இருக்க வேண்டும் என்றால்?””

“உனக்குத் தெரியாததா மேகலா? மழைவளம் குன்றாத  மகத தேசத்தில்  கபிலை என்ற ஊரில் மகதநாட்டிற்கு  ஒரு பெரிய திலகம் போலத் தோன்றிய புத்தர் பெருமான் அளப்பதற்கு முடியாத புத்தர்க்கு வேண்டிய சீல குணங்களான பாரமிதைகளால் நிரம்பிய ஒரு ஞாயிறு போலத் தோன்றினார். அவருடைய அருள்மொழிகளைக் கேட்டு நான் பிறவிப் பற்றினை அறுத்தெறிந்தேன்.”

“புத்த ஞாயிறு. ஆஹா என்ன  அழகான பண்புப் பெயர்”

“ஆம்! யோசித்துப் பார் மணிமேகலா. போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் இந்த உடல் தீவினைப்பயனால் மீண்டும் மீண்டும் ஏன் பிறக்கின்றது என்ற காரணத்தைத் தெளிந்தார். அவை நான்கு வகை உண்மைகளாகவும், பேதமை முதலிய பன்னிரு நிதானங்களையும் இது இது இத்தகைய தன்மை உடையவை என்று எடுத்துக் கூறினார். காமம் முதலிய குற்றங்களைத் தவிர்த்து வீடுபேறு அடையலாம் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துரைத்தார். அவருடைய அறநெறிகள் ஞாயிற்றின் கிரணங்கள் போலச் சக்கரவாளம் எனப்படும் இந்த உலகம் முழுவதும் கதிர் பரப்பியது. அப்படிப்பட்டவரை ஞாயிறு என்று கூறாமல்வேறு எப்படிக் கூற முடியும்?”
“உண்மைதான் தாயே!“

“நானும் உன் தந்தையும் புத்தரின் ஏழு விகாரங்களுக்குச் சென்று வணங்கிவந்தோம். அவர் அறவுரைகளைக் கேட்டோம். மனம் மெல்லமெல்லப் பற்றிலிருந்து விடுபட்டுத் துறவு நிலையை எய்தியது. பிறகு பிறவியற்ற நிலையை அடைந்தோம், மேகலா!” என்றது கண்ணகி தெய்வம்.

மணிமேகலை அவர்கள் இருவரின் படிமங்களையும் மீண்டும் பூமியில் வீழ்ந்து வணங்கினாள்.

“பிறவியற்ற படிமங்களாக மாறிவிட்டோம் என்று வருந்தாதே எங்களை நாடிவரும் மக்களுக்கு இருத்தி (சித்தி) செய்வோம்.” என்றது அந்தக் கண்ணகி தெய்வம்.

“நான் வரட்டுமா தாயே?” விடைபெறும் நேரம் வந்ததை மணிமேகலை அறிந்தாள்.

“ஒரு நாழிகை இரு,“ என்று கண்ணகிப் படிமம் தடுத்தது.

“மணிமேகலா! இது தொன்மையான ஊர். பல்வேறு சமய அறிஞர்கள் நிறைய இருப்பார்கள். உன்னை வாதத்திற்கு அழைப்பார்கள். அவர்கள் கூறுவதைச் செவிமடுத்துக் கேட்டுக்கொள். அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, நீ சார்ந்த புத்த சமய வாதங்களில் உள்ள மெய்ப்பொருளை நிறுவி, அவர்கள் சொன்ன எவற்றிலும் மெய்ப்பொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்து. உனக்கு வெற்றி உண்டாகட்டும்.” என்றது.

“வாதம் செய்வதுதானே? எனக்குக் கவலையில்லை!“

“உன்னால் உறுதியாக வாதம் செய்யமுடியும். ஆனால் இங்கிருப்பவர்கள் உன் இளைய வயதினைக் கண்டு உன் வாதங்களைக் கேட்கவே மாட்டார்கள். எனவே நீ வேறு ஓர் உருவம் கொள்,” என்று நிறுத்திய கண்ணகி உருவம் ”அது ஓர் ஆண் உருவமாக இருந்தால் நல்லது.” என்றது.

மணிமேகலை சிரித்தபடி, “நல்லது அம்மா வருகிறேன்” என்று விடைபெற்றுக்கொண்டு  கிளம்பினாள்.

கண்ணகிப்படிமம் அறிவுரைத்ததற்கேற்ப தனக்குத் தெரிந்த உருமாறும் மந்திரத்தை ஓதி ஒரு முனிவனின் வடிவத்தை அடைந்தாள்.

அந்த ஊரில்  கோவில் ஒன்று இருந்தது. சீரான சாலைகள் இருந்தன. வேதிகை  ஒன்றும் அதைச் சுற்றி  குளம் ஒன்றும் பூஞ்சோலை ஒன்றும் இருந்தன. அறிஞர்கள், முனிவர்கள், கற்றிந்த புலவர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தனர்.

அந்த மிகப்பெரிய மன்றத்தின்கண் ஓர் அழகிய ஆசனத்தில் சேரன் செங்குட்டுவன் வீற்றிருந்தான். பூவல்லா என்ற வஞ்சி நகரில் வீர்கள் தங்கள் சிகையின்மீது வஞ்சிப்பூவைப் போருக்குச் செல்லும் நேரம் அணிந்து செல்வது வழக்கம். முல்லை நிலத்தில் வாழும் பாண்டியர்களுக்குச் சேரநாட்டின் மலைத்தொடர் எல்லையைப்போல விளங்கியது. துதிக்கைகளைக்கொண்ட வேழங்களை வரிசையாக நிறுத்தியதுபோல மலைத்தொடர் காண்பவர்களை மயக்கமுறச் செய்தது.

செங்குட்டுவன் என்ன சாதாரண மன்னனா? தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை என்று பலவித சேனைகளுடன் ஒரு கடல் முழக்கம் போலச் சேரநாட்டிலிருந்து கிளம்பி பெரிய ஆறான கங்கையாற்றின் கரைவரை படையெடுத்துச்சென்றவன். மகாநதி கங்கையில் வங்கம் என்ற கப்பலில் சென்று ஆரியர்களான கனக விஜய மன்னர்களை எதிர்த்துப் போரிட்டு வென்று அவர்களைக் கைதிகளாக்கி இமைய மலையின்மேல் ஏற்றி, கண்ணகிச் சிலைக்குத் தேவையான பாறாங்கற்களை அவர்கள் தலைகளில் சுமக்கச்செய்து கொண்டுவந்தவன்.

ஒரு போர்கொடியைப போல விளங்கிய அந்த வஞ்சி மாநகரில் வீற்றிருந்த, வில்வலியை  விரும்பும் அந்தச் சேரமன்னன் செங்குட்டுவனின் முன்பு தனக்குத் தெரிந்த புத்தசமயத்தின் நான்கு மெய்ப்பொருளை உணர்த்தும் பொருட்டு மணிமேகலை ஒரு முனிவனின் மாறுவேடத்துடன் போய் நின்றாள்.

பின்குறிப்பு : சேர நாட்டைக் குறித்த தகவல்கள் சங்ககாலப் பாடல்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் விரவி கிடப்பினும் அதன் எல்லைகள் யாவை, அதன் தலைநகரம் வஞ்சி இப்போது எந்த நகரம் என்பது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வாளர் எஸ்.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் சேரநாட்டின் தலைநகர் கேரள மாநிலத்தில் பெரியாற்றின் கரையில் உள்ள கரூர்பட்டணம் என்ற ஊரே அப்போதைய வஞ்சிமாநகரம் என்று கூறுவதைப் பொதுவாக பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *