முகப்பு » அனுபவம், கதைகள், சமூகம்

தாம்பத்யமும் நண்டுப்பிடியும்


”அடுத்த குவாட்டருக்கு என்னென்ன டீல் எல்லாம் இருக்கு?”. என் கடமை கேட்பது. கேட்டாகிவிட்டது.

ரமேஷ் ஞானப்பிரகாசம், லேசான சிரிப்புடன் தன் எக்ஸெல் ஷீட்டை ப்ரொஜக்டரில் ஒளிரச்செய்தான். “நாலு பெரிய அக்கவுண்ட். ரெண்டு மில்லியன் டாலர் 90% கிடைச்சிரும்”.

சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்போன் அதிர, எடுத்துப்பார்த்தவன் முகம் மாறியது. அதே இறுகிய முகத்துடன் தொடர்ந்தான். கவனம் சிதறியிருப்பதை எங்களால் தெளிவாக உணர முடிந்தது. ரெண்டு முறை தவறுதலாகக் கணக்கிட்டுச் சொன்னான். ஒரு முறை வாடிக்கையாளரின் பெயரையே மாற்றிவிட்டான். இது ரமேஷ் அல்ல.

மாலை, நானும் ஜெரால்டும் தங்கியிருந்த ஓட்டலின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். யாரோ வெளியே கத்திக்கொண்டிருப்பதாக அறிந்து ஜெரால்டு முகம் சுளித்தார். “ யாரிவன் காட்டுக்கத்தல் கத்தறான்? அதுவும் தமிழ்ல்ல?”

லேசாக எட்டிப்பார்த்தவன் வியந்தேன்.

“ஜெரால்டு, அது நம்ம ரமேஷ்”

“ஏன் கத்தறான்?”

”தெரியல. வரட்டும், கேட்போம்”

பத்து நிமிட காட்டுக் கத்தலின் பின் ரமேஷ் ஓட்டலினுள் நுழைந்தான். எங்களைப் பார்க்காமல் விடுவிடுவெனச் சென்றவனை அழைத்தேன்.

“என்னடே, ஒரு மாரியா இருக்கே? கஸ்டமர் ஆர்டர் தரமாட்டேங்கறானா?”

”அதில்ல சார்…. விடுங்க”

” அட, சொன்னாத்தானப்பா எதாச்சும் செய்ய முடியும்?” என்றார் ஜெரால்டு.

“சொல்ற மாரி விசயம் இல்ல சார்” என்றவன் இரு நிமிடம் தலைகுனிந்து மவுனமாக இருந்தான்.

”பொண்டாட்டி டைவர்ஸ் கேட்டிருக்கா”

ஜெரால்டு திடுக்கிட்டுப் போனார் “ டே, என்ன உளறுத? ரெண்டுவருசம்தான ஆச்சி? நாங்கூட கலியாணத்துக்கு விருது நகர் வந்திருந்தேனேடே? தேதிகூட இந்த மாசம்தான் அதுவும்”

நான் அவன் திருமணத்திற்குப் போகவில்லை. ஆனால் மணமக்கள் இருவரும் வீட்டிற்கு வந்திருந்தனர். அமைதியான அழகான பெண். மிகவும் இயல்பாகவே இருந்தாள். இவர்களுக்குள் என்ன அப்படி விரிசல்?

“என்னடே ஆச்சி?” என்றேன் மெதுவாக.
.
திடீரென விக்கி விக்கி அழத்தொடங்கினான். யாரும் பார்க்குமுன், அவனை அழைத்துக்கொண்டு எனது அறைக்கு விரைந்தோம்.

“இப்ப சொல்லு” என்றார் ஜெரால்டு, நான், ரூம் சர்வீஸை அழைத்து மூன்று ஃப்ரெஷ் லைம் சோடா ஆர்டர் செய்துகொண்டிருந்தபோது, அவன் குரல் விக்கல்களூடே ஒலித்தது.

“நல்லாத்தான் இருந்தோம் சார். திடீர்னு அவளுக்கு என்மேல சந்தேகம் வந்திருச்சு. என்னமோ நான் போகிற இடத்துலல்லாம் ஏதோ பொண்ணுங்க சகவாசம் இருக்குன்னு எப்படியோ அவளுக்குத் தோணிருச்சு. இந்த ஆறுமாசமா, ஒவ்வொரு நாளும் மூணு நாலுதடவ போன் பண்ணிருவா. எங்க இருக்கே?, யாரு கூட இருக்கே?ன்னு தொணதொணப்பு. நானும் பொறுமையா எத்தன தடவ சொல்ல முடியும்?” அதுவும் கஸ்டமர் முன்னாடி…”

“அப்புறம் சொல்றேன்னு சொல்ல வேண்டியதுதானே?”

”அவளுக்கு இன்னும் சந்தேகம் பலமாயிருச்சு சார். அவ அப்பா கிட்ட அழுது, அவரு போன் பண்ணி, நான் கத்தி, அவர் எங்கப்பா கிட்ட பேசி.. இவரு கத்தி… பெரிய ரணகளமாயிருச்சு.”

“பெரியவங்கள உங்ககூட கொஞ்ச நாளைக்கு வந்து இருக்கச் சொல்லு. அவங்களே பாத்துட்டு, அறிவுரை சொல்லட்டும். “

“அதுவும் செஞ்சாச்சி. எங்கப்பாவால வரமுடியாது. அவங்கப்பாவுக்கு கடை இருக்கு, போட்டுட்டு வரமுடியாதுன்னுட்டாரு. அத்தைக்கு தனியா வரமுடியாது. மொழி ப்ரச்சனை வேற”

”ஏன் சந்தேகம் வந்திச்சு? கவுன்ஸிலரைப் பாத்திங்களா? ”

“பாத்தோம்” என்றான் ரமேஷ், ஃப்ரெஷ் லைம் சோடாவை உறிஞ்சியபடி “ ஒரு நாள் என் சட்டைப் பாக்கெட்டுல ஒரு மல்லிப்பூ கிடந்துச்சு சார். அது, நம்ம ஆபீஸ் பார்ட்டியில டெக்கரேஷன் செய்யறப்போ, சட்டையில விழுந்த்து. இவ, அது யாரு?ன்னா. நான் சும்மா எங்க ஆபீஸ் பெண்ணுன்னேன். அத சீரியஸா சிந்திக்கத் தொடங்கிட்டா”

“நீ அதை ஒரு ஜோக்குன்னு விளக்கிட்டியா? சில நேரம் இப்படித்தாண்டே, நாம ஒண்ணு நினைச்சுச் சொல்லுவோம்: புரிஞ்சுக்கிறது வேறயா இருக்கும். இதுக்குத்தான் நாம வீட்டுல பேசணும்கறது. சும்மா டீவி, லாப்டாப்பு, கஸ்டமர் பேச்சுன்னு இருக்கப்படாது”

“சொல்லிப் பாத்தேன் சார்” விக்கினான் அவன் “அவ என் நடத்தையையே சந்தேகப்பட்டுட்டா. என்னால அதப் பொறுக்க முடியல. அவ எப்பக் கேட்டாலும் ஏறுக்கு மாறா பதில் சொல்லிறுவேன். கழுத, என்ன வேணாலும் நினைச்சுக்கட்டும்”

“டே, இந்த சந்தேகம் முதல்ல எல்லாம் இல்லேல்லா? “ என்றார் ஜெரால்டு.

“இல்ல சார். கவுன்ஸிலருமே, இவளுக்கு மனவியாதி ஒண்ணுமில்லன்னுட்டாரு. இந்த ஒரு சந்தேகம் மட்டும்தான்..”

நானும் ஜெரால்டும் ஒருவரியொருவர் பார்த்துக்கொண்டோம். ஜெரால்டு கடகடவென சிரித்தார்.

“ஏன் சார் சிரிக்கீங்க?” அவன் கடுப்பாவது தெரிந்த்து. ஜெரால்டு கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துகொண்டே “முட்டாக்கூ…. மவனே, இதுக்கா டைவர்ஸ் வரை போயிருக்க? கேணப்பயலால்லா இருக்க நீயி?”

”சார், நொந்து போயிருக்கேன். ஒழுங்காப் பேசுங்க”

நான் இடை மறித்தேன். “ஜெரால்டு சொல்றதுல ஒரு உண்மை இருக்கு ரமேஷ். இது ஆரோக்கியமான சந்தேகம்னு எடுத்துக்கிட வேண்டிய ஒண்ணு”.

“ஏன் சார்?” என்றவன் என்னை நோக்கி உணர்ச்சியோடு கை நீட்டினான் “ அவ என் நடத்தையச் சந்தேகிக்கிறா. நீங்க அது ஆரோக்கியம்கறீங்க. அவங்க அவங்களுக்கு வந்தா தெரிஞ்சிருக்கும்”.

“தம்பி ரமேஷு” என்றார் ஜெரால்டு. “ அவ உன்மேல வைச்சிருக்கிற பொஸஸிவ் காதல் தான் இப்படி ஒரு தற்பாதுகாப்பில்லாத உணர்ச்சியா வெளீப்படுது. இன்ஸெக்யூரிட்டின்னு வச்சுக்க. எந்த மனைவியும், தன்கணவன் தனக்கு மட்டுமே இருக்கணும்னு நினைப்பா. அது மாமியார் மருமகள் சண்டையா வரலாம். எதிர் வீட்டுப் பொம்பளைகூட வர்ற சண்டையாக இருக்கலாம். என்னவேணாலுமாவட்டு. அடிப்ப்டை இந்த காதலின் இன்ஸெக்யூரிட்டிதான். ஆனா இந்த பாதுகாப்பில்லாத உணர்வும் ஆரோக்கியமான இல்லறத்தின் ஒரு கல்லு. சும்மா அதைப் பிடிச்சு நோண்டிகிட்டிருக்காத. வீடு விழுந்திரும்”.

”அதான் விழுந்துட்டே சார்? இனியும் என்ன விழணும்?”

”விழல தம்பி. உனக்கு இன்னும் புரியலை. டே சுதாகரு, அந்த சீரங்கம் கதையச் சொல்லுடே. எனக்கு முழுசும் ஞாபகமில்ல”

நான் தொடங்கினேன் “ ஸ்ரீரங்கத்துல, ஒரு விழா உண்டு. நம்பெருமாள் இரவெல்லாம் வேட்டைக்காக உலாப் போய் வருவார். எனவே திரும்பி வரும்போது அவர் திருமேனியில் அங்கங்கே கீறல்கள், சிராய்ப்புகள் தடம் இருக்கும். ரங்கநாயகித் தாயார், சந்தேகம் கொண்டு இது அவர் எங்கேயோ சென்று வருகிறார் என்று ஊடி, கோயில் கதவைச் சார்த்திவிடுவார். இருவருக்கும் வாக்குவாதம் நடக்கும். கடைசியில் நம்மாழ்வார் மத்தியஸ்தத்திற்கு வருவார். “ பெரியவர் உம்மைப் பற்றிச் சொல்வதால் சம்மதித்தோம்” என்று தாயார் , பெருமாளை கோயிலுள்ளே அழைப்பார். இது மட்டையடி உற்சவம்னு நடக்கும்”.

ஜெரால்டு இடைமறித்து “கடவுளுக்கே இந்த நிலைன்னா நம்மைப் பத்தி நினைச்சுப் பாருடே?நமக்கு என்ன நம்மாழ்வாரா வந்து “ஏட்டி, இவன் நல்லவன் கேட்டியா?ன்னு சொல்லுவாரு? நாமளே சொல்லிக்க வேண்டியதுதான்“ என்றார்.

“இதப்பாரு ரமேஷு,” என்றேன். “சந்தேகம் என்பது இணையிலிருந்து சிறு விலகல். அப்பவே பாத்து சரிபண்ணலைன்னா பெரிய விரிசலாப்போயிரும். கொஞ்ச நாள்ல, நாம எதை தீவிரமா சந்தேகிச்சோமோ,அதை உண்மைன்னே நம்பிருவோம். அப்ப என்ன சாட்சியும் எடுபடாது. உடனே தீத்துடணும். அதுக்கு அடிக்கடி நம்பிக்கை ஏற்படுத்துற மாதிரி நடந்துக்க. நீ போற ஊருக்கு அவளையும் கூட்டிட்டுப் போ. ரெண்டு நாள் லாட்ஜுல போரடிக்கும். அப்புற் “சே, என்ன வேலைன்னு இந்தாள் அலையறாரு? இதெல்லாம் ஒரு சாப்பாடா? மனுசன் என்னமா கஷ்டப்படறாரு?ன்னு தெரிஞ்சுபோகும்.“

அவன் ஏதோ புரிந்தது போலிருந்தான். “ஆனாலும், இது..இது ஆரோக்கியமானது இல்ல சார். “

“டே ஆரோக்கியமானதுதான். திருமங்கையாழ்வார் திருநறையூர்னு ஒரு ஊர் பத்திப் பாடறாரு. அதுல ஒரு திருமொழியில ஒவ்வொரு பாசுரத்துலயும் ரெண்டு வரி கடவுள் , இரண்டு வரி அந்த ஊர் இயற்கை வளம்னு விரவி வரும். ஒரு பாசுரம் பாரு.. கடைசி ரெண்டு வரி இப்படி போகுது

“பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவா யலவன் முகம்நோக்கி,
நள்ளி யூடும் வயல்சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே”

ஒரு வயல்ல இரு நண்டுகள். ஒன்னு ஆண், மற்றது பெண். ஆண் நண்டுக்கு அலவன்னும், பெண் நண்டுக்கு நள்ளின்னும் தமிழ்ல பெயர் உண்டு. அலவன் ஒரு நாள் தாமரை மலர் ஒன்றில் புகுந்தபோது, மாலை நேரம், மலர் மூடிக்கிடுச்சு. அதன் மகரந்தமெல்லாம் அலவன் மேல படிஞ்சு..அடுத்தநாள் புலரியில, தாமரை மலர்ந்த்தும்,அலவன் வெளியே வந்து, நள்ளிகிட்ட நடந்த்தைச் சொல்ல வந்த்து. நள்ளி ,அலவன் இருக்கிற இருப்பைப் பார்த்து. ராத்திரி பூரா எவகூடயோ இருந்துட்டு இப்ப கதையா சொல்றே?ன்னு ஊடலோட , திரும்பி ஓடிருச்சு. இப்படி அழகான வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே, எம்பிரானே”ன்னு பாட்டு போகுது.”

“ஆக, இந்த ஊடல், விலங்குலயும் இருக்குன்னு எடுத்துகிடணும். அதுதான் ஆரோக்கியம், வளம்னு ஆழ்வாரே சொல்றாரு. உம்பொண்ட்டாட்டியும் நீயும் இந்த நாடுதானேடே? அப்படித்தான் இருக்கும்.. அலவன் மாதிரி, நம்பெருமாள் மாதிரி, பொறுமையா எடுத்துச் சொல்லிப்பாரு. எல்லாம் சரியாயிரும். இதுக்கெல்லம டைவர்ஸ் அது இதுன்னு போகாதே”

ரமேஷுக்கு போனவாரம் குழந்தை பிறந்திருக்கிறது. நள்ளி.

அவளிடம் திட்டு வாங்க ஏதோ அலவனும் எங்கோ பிறந்திருப்பான்.

(சுதாகர் கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

sudhakar_kasturiசுதாகர் கஸ்தூரி  இணையத்தில் தொடர்ந்து பலதரப்பட்ட  சுவாரஸ்யமான செறிவான பதிவுகளை எழுதிவருபவர். 6174, 7.83 ஹெர்ட்ஸ் முதலான அறிவியல் புதினங்கள், வலவன் (டிரைவர் கதைகள்) ஆகிய நூல்களின் ஆசிரியர்.

நெல்லைத் தமிழின் வண்ணங்கள் மணக்க எழுதும்  தூத்துக்குடிக்காரரான சுதாகர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

 

ஒரு மறுமொழி தாம்பத்யமும் நண்டுப்பிடியும்

  1. Kargil on June 18, 2017 at 12:46 pm

    While Churches advice Christian couple before wedding , train and later counsel them, Hindus don’t do anything. Most of us don’t treat our partners nicely and vulnerable.

    From this view, I appreciate this story.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*