முகப்பு » ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சமூகம்

‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’


சில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் ஆட்டோவில் போகும் போது அந்த ஃப்ளெக்ஸ் கண்ணில் பட்டது. ஏனோ தோன்றியது கைபேசி காமிராவில் எடுத்து வைத்துக் கொண்டேன். ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’ என்றது அந்த ஃப்ளெக்ஸ். ஏதோ வழக்கமான சாதி பெருமை பேசுகிற ஒன்று என்பதைத் தாண்டி எதுவும் படவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஏதோ கிளறின.

நேற்று ‘திருவாசகமும் சிவராஜயோகமும்’ எனும் நூல் கிட்டியது. திருவாசகத்துக்கான விளக்க உரை. எழுதியவர் சிவயோகி என புகழப்படும் திருவாரூர் மா.இரத்தினசபாபதி பிள்ளை அவர்கள். 1978 இல் வெளியான இந்நூலுக்கு ஆசியுரை எழுதியவர் காஞ்சிபுரம், மெய்கண்டார் மரபு தொண்டைமண்டாலாதீன குரு மஹா சந்நிதானம் சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். அணிந்துரை எழுதியவர்கள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். இதில் விசேடமென்னவென்றால் திருமுருக கிருபானந்தவாரியார் சிவ தீக்கை பெற்றது இப்பெரியார் திருவாரூர் மா. இரத்தினசபாபதி ஐயா அவர்களிடம்தான்.

இந்நூலில் பின்வரும் விஷயத்தை வாசித்தேன் –

பரை/பறை ஆகியவை ஆழமான ஆன்மிக பொருள் கொண்டவை. நாத முடியில் சந்திரன் இருப்பதாகக் கொள்வது யோக மரபில் ஒரு முக்கியக் குறியீடு. சந்திரன் சுவாதிஷ்டானத்தில் ஒரு கலையுடன் விளங்கும். சிரசின் நாதமாக விளங்கும் போது ஏழாவது கலையாக விளங்கி சக்தி பொருந்தும் இடமாகும். இதற்கு மேல் பரையோகம், பரைபோகம், பரையில் அதீதம் உள்ளன. இவ்வகையாக 16 சந்திர நிலைகள் தேகத்தில் உள்ளன.

திருமூலரும் இதனைச் சொல்கிறார்:

பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் ஆங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளியாய் நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன்தானே.

(திருவாசகமும் சிவராஜயோகமும், மா.ரத்தினசபாபதி பிள்ளை, 1978)

சுவாரசியமான ஒரு விஷயம். திருவருட் பிரகாச வடலூர் வள்ளல் ராமலிங்க சுவாமிகள் நாத முடிவில் இருக்கும் இந்த பரை நிலை தனக்கு வாய்க்க வேண்டுகிறார். அதுவே ஒரு சர்ச்சையாயிற்று. ஏனெனில் ‘நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே அங்கே நானும் வர வேண்டுகிறேன் வெண்ணிலாவே’ என அவர் பாடியதை திருவருட்பா எதிர்ப்பு பிரச்சாரக் குழுவில் சுட்டிக்காட்டினார்கள். சைவ அறிஞரான யாழ்ப்பாணம் கதிரை வேற்பிள்ளை அவர்கள், இறைவன் முடி மேல் தான் அமர வேண்டுமென வள்ளலார் பாடுவது மருட்சியால் எனவே அது அருட்பா அல்ல மருட்பா என கூறினார்.

இந்த் கூட்டத்தில் குமரி மாவட்ட சதாவதானி செய்கு தம்பி பாவலர் இருந்தார். அவர் எழுந்து மேற்கூறிய உண்மையை விளக்கினார். நாதர் என்பது அச்சுப்பிழையாக இருக்கலாம். அது நாத முடி நாதம் என்றால் பிரணவம். அதன் மேல் இருக்கும் சந்திர நிலை . அங்கே வர வள்ளலார் விரும்புவதையே அவ்வாறு பாடியுள்ளார் என பாவலர் விளக்கினார். சைவ மக்கள் பாவலரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.

அது அச்சுப்பிழையாக இருக்கக் கூட வாய்ப்பில்லை. ஏனெனில் திருவாரூர் இரத்தினசபாபதி ஐயா விளக்குகிறார்:

தொழில் நிலையில் சீவர்களை இயக்கும் போது ஐந்து நிலைகளில் சிவன் இருக்கிறார்: சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், நடராசர், இடபாரூடர், கல்யாண சுந்தரர் என்பவை அவை. இவற்றில் சந்திரசேகரரே மகாநிர்வாண தந்திரத்தில் ’மானுட உடலில் சோம மண்டல ஒளியில் சிரசில் விளங்குபவர்’ என கூறப்படுகிறார்.

எனவே பறையர் எனும் பெயரே சந்திர சேகரராக விளங்கும் சிவனைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது சந்திரசேகரராக சிவன் அளிக்கும் பரையோக, பரை போக, பரை அதீத நிலையில் நிலைப் பெற்றிருப்பவர், அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். எனவே பறையர் எனும் பொருள் ஆழ்ந்த பொருள் கொண்டது. இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது ஏமாற்று வேலை.

இப்போது சென்னையில் எங்கோ என்றோ கட்டப்பட்ட அந்த ப்ளெக்ஸின் புகைப்படத்தை எடுத்து அந்த வரிகளைப் பார்க்கிறேன்: ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு!’

எத்தனை உண்மை!

(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

 

5 மறுமொழிகள் ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

 1. dr.A.Anburaj on July 2, 2017 at 1:20 pm

  அருமையானப் பதிவு.சுவையான விசயங்கள்.படித்தேன் வியந்தேன். நன்றி.

 2. Vedamgopal on July 2, 2017 at 1:42 pm

  Aadhi Bhagavan can any one explain this Thirukural first verse first line

 3. RV on July 2, 2017 at 9:44 pm

  பரையா பறையா? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது, அச்சுப் பிழை எதுவும் இல்லையே?

  // அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். எனவே பறையர் எனும் பொருள் ஆழ்ந்த பொருள் கொண்டது. இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது ஏமாற்று வேலை. // என்று எழுதுகிறீர்கள். இருக்கலாம் என்ற ஊகத்திலிருந்து பிரிட்டிஷ் காலத்தில்தான் இது இழிவான பெயர் என்று நினைக்கும் போக்கு உருவானது என்ற முடிவுக்கு எப்படி வருகிறீர்கள்?

  சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என்று நினைக்கிறார்களா? சிலரா? சரிதான்.

 4. அடியவன் on July 4, 2017 at 9:43 pm

  /// நாதம் என்றால் பிரணவம். அதன் மேல் இருக்கும் சந்திர நிலை ///

  ஓம் என்ற பிரணவத்தை சமஸ்கிருதத்தில் எழுதும்போது அதன் உச்சியில் பிறை போன்று வருவதை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஆக பிரணவமே சந்திரசேகரன்… பிறைசூடன்.

 5. BSV on July 14, 2017 at 8:14 pm

  நூல்களின் வழியாக எவரையும் இறைவன் லெவலுக்குக் கொண்டுபோய் வைக்கலாம். ஆனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நூல்களின்படி வாழ்வதில்லை. அவர்களுக்கு பறையன் பறையந்தான். அங்கேயே இருந்துகொள் என்பதுதான். பிரிட்டிஷ் காலத்தில்தான் பறையன் என்ற சொல் இழிவாக்கப்பட்டது என்பது டூ மச். அதற்கு முன்பே பறையர்கள் கோயில்களுக்குள் நுழைய முடியுமா? செத்த மாட்டை தோலையுரித்து பறை செய்து இசை முழுக்கி அவர்கள் சாதி சடங்குகளில் வாசித்தபடியால் பறையர். பறையிசை இசையே அன்று. அது ஒரு கும்மாளமடிக்கப் பயன்படுவது அவ்வளவுதான். பறையர்களின் ஆன்மிகம் அவர்கள் குலதெய்வத்தோடு நின்றுவிடும். அவர்களின் ஒரு சிலர், (நம்பாடுவான், திருப்பாணாழ்வார், நந்தனார் போன்றவர்கள்) வைதீக் கோயில் பெருந்தெயஙகளை வணங்கி வாழ் ஆசைப்பட்டதால், அவர்கள் வரலாறுகள் த்மிழ்நாட்டில் நுழைந்தன. மற்றபடி எந்த பறையரும் தான் ஈசன் மரபு என்று நினைத்துக்கூட பாரப்பதில்லை. அதனால் எப்பலனுமில் என்று அவர்களுக்குத் தெரியும். பறையர்கள் வாழவு என்றுமே சேரியில் தங்கள் தெய்வங்களோடுதான். எம்முயற்சியும் வெற்றி பெறாது.இவனுக ஈசன் மரபென்றால், நாங்களென்ன பேயின் மரபா என்று கேட்பார் இராமதாசு. என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*