தமிழன்னையின் அணிகலன்கள்

மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றியுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய ஜடாயு அவர்களின் கட்டுரை என்னை இதனை எழுதத் தூண்டியது!

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஈரோட்டில் நான் பள்ளிச்சிறுமியாக இருந்த காலத்தில், ஆண்டாண்டுதோறும் தமிழிலக்கிய விழா ஒன்றினை நான் படித்த கலைமகள் கல்விநிலையத்தின் தாளாளரான உயர்திரு. மீனாட்சிசுந்தர முதலியார் B.A., B.T., அவர்கள் ஏற்பாடு செய்வார்கள். திருவாளர்கள். கி. வா. ஜ., ம.பொ. சி., கி. ஆ. பெ. விசுவநாதம் இன்னும்பல பெரும் தமிழறிஞர்கள் வந்து உரையாற்றிச் சிறப்பிப்பார்கள். அவ்வமயம் பள்ளி இசையாசிரியை கடவுள் வாழ்த்தும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடுவதற்காக, சங்க இலக்கியங்களிலிருந்து பாடல்களைத் தொகுத்து எங்களுக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார்.

மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மட்டுமின்றி, இன்னொன்றும் சொல்லித்தரப்பட்டது. இன்றுவரை பல இடங்களில் இதனைப் பாடிவந்துள்ளேன். பல தமிழாசிரியர்களையும் இதனை இயற்றியவர் யாரெனக் கேட்டும், எவருக்கும் தெரியவில்லை.

இப்பாடல் ஐம்பெரும்காப்பியங்களையும் தமிழ்த்தாயின் அணிகலன்களாகச் சித்தரிக்கின்றது. மிக அழகான பாடல்.

காதொளிரும் குண்டலமும் கைக்குவளை-
யாபதியும் கருணைமார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்
மேகலையும் சிலம்பார்இன்பப்
போதொளிர் பூந்தாளிணையும் பொன்முடிச்
சூளாமணியும் பொலியச்சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்குதமிழ் நீடுவாழ்க!

பொருள் அறிவது மிக எளிது.

தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது. கைகளில் அணிந்த வளைகளாக வளையாபதி திகழ்கின்றது. கருணை பொருந்திய அத்தமிழன்னையின் மார்பில் (சீவக)சிந்தாமணி எனும் ஆரம் ஒளிவீசுகின்றது. அன்னையின் மெல்லிய இடையில் (மணி)மேகலை அணியப்பட்டுள்ளது. அவளுடைய திருவடிகள் சிலம்பார் இன்பப் போதொளிர்பவை- அதாவது சிலம்புகளை (சிலப்பதிகாரம்) அணிந்த திருப்பாதங்கள். திருவடிகளுக்கு ‘சிலம்பார் இன்பப்போதொளிர்’ எனும் அடைமொழி ஏன்? சிலப்பதிகாரத்தைப் படிப்பவர்கள் அடையும் மகிழ்ச்சி, பெருமிதம், ஆகியன இன்பமயமானவை. ஆகவே அத்தகைய சிலம்பினை அணிந்துள்ள திருவடிகள் இன்பமாகிய மலர்களால் அர்ச்சிக்கப்படுவனவாம்.

பின், தனது பொன்முடியாகச் சூளாமணி எனும் காப்பியத்தை அணிந்துள்ளாள் தமிழன்னை. இவள் அரசியாக அமர்ந்து எந்தச் செங்கோலைக் கையில் ஏந்தியுள்ளாள் தெரியுமா? நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குகிறாள் இவள். தமிழன்னை செங்கோலோச்ச இதைவிடத் தகுதியான செங்கோல் எதுதான் உளது?‘அத்தகைய தமிழ் நீடுவாழ்க!’ என உளங்கனிந்து பெருமிதத்தில் விம்மி வாழ்த்தும் புலவர் யார்? தெரிந்தவர்கள் சான்றுகளுடன் கூறுங்களேன்.

இதைப்பாடும்போதெல்லாம் என் உள்ளமும் உடலும் சிலிர்க்கும். பின்னாளில் இதனைக் கல்லூரி விழாவொன்றில் தமிழறிஞர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் தலைமைதாங்க, கடவுள் வாழ்த்தாகத் திருக்குறளையும், தமிழ்த்தாய் வாழ்த்தாக இதனையும் நான் பாடியபோது, அன்னார் அகமிக மகிழ்ந்து, கல்லூரி முதல்வரிடம் பிரத்தியேகமாக எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கக் கூறியிருந்தார். இதெல்லாம் எண்ணிப் பரவசப்படக்கூடிய நிகழ்ச்சிகள்.

தமிழுக்கும் அமுதென்று பேரல்லவா?

18 comments for “தமிழன்னையின் அணிகலன்கள்

 1. //தமிழுக்கும் அமுதென்று பேரல்லவா?//

  நன்றி, தமிழையும் மெச்சி எழுதுபவர்கள் இத்தளத்தில் இருக்கின்றார்களே என நினைக்கும்போது மகிழ்ச்சி.

  இத்தமிழ்தாய் வாழ்த்தை வாசித்தபோது – நான் ஏற்கனவே தெரிந்ததுதான்; எழுதியவர் பாரதியாராக இருக்குமென்பது என் ஊகம் – எனக்கு ஒரு நினைப்பு உதித்தது. இதை எழதிய கவிஞர் சங்க காலம், அதற்கடுத்த காலத்தில் வாழ்ந்திருந்தால் என்னவாகயிருக்கும்? தமிழன்னைக்கு அணிகலனே கிடையாது; எனவே தமிழ்தாய் வாழ்ந்து எழத முடியாது.

  தமிழன்னையின் அணிகலன்களாக இங்கே காட்டப்படும் அனைத்தும் காப்பியங்கள். சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்டவை. செங்கோல் மட்டுமே சங்க இலக்கியமான திருக்குறள். ஆனால் செங்கோல் அணிகலன் இல்லை. அது ஒரு கருவி. மேலும் ஓவியர் திருக்குறளை செங்கோலாக தமிழன்னையில் கையில் இருப்பதாகக் காட்டவில்லை. சரஸ்வதி கையில் எழுத்தோலைக் கட்டொன்றை வைத்திருப்பதைப் போல வரைந்திருக்கிறார். எங்கே செங்கோல்? எங்கே திருக்குறள்? ஆக அதுவும் கூட இல்லை. இப்பாவின்படி சங்க காலத்தில் தமிழன்னைக்கு ஓர் அணிகலன்கூட இல்லை. பாவம். பரம ஏழை :-(. ஆனால் சங்ககாலம் ஏராளமான நூல்களைக்கொண்டது, ஒவ்வொன்றும் ஒரு முத்து. இக்கவிஞனின் மூளையில் ஒன்றுமே தட்டவில்லை 🙁

  இப்பாவில் இன்னொரு உட்பொருள் உண்டு. அதை கட்டுரையாளர் புரிந்திருக்க வாய்ப்பில்லை. உணர்ச்சிகள் அவர் சிந்தனையைத் தடுக்கின்றன. அன்னையில் அணிகலன்களாகச் சொல்லப்படுவதில் ஒன்று கூட இந்துக்காப்பியம் இல்லை. குண்டலகேசி, வளையாபதி, சூளாமணி, சிலம்பு, சீவக சிந்தாமணி -இவை ஐந்தும் சமண், புவுத்தக்காப்பியங்கள். சமணமும் பவுத்தமும் தமிழை அலங்கரிக்க, இந்துக்களின் காப்பியமோ – அப்படியொன்று அப்போது இல்லாவிட்டாலும், பின்னர் எழுந்த நீண்ட பாடலொன்றை – எ.கா திருவாசகம் – அணிகலனாக மாட்டிவிட இக்கவிஞனுக்குத் தோன்றவேயில்லை. அரைகுறை சிந்தனையாளன் இவன். அப்படி ஒரு திருவாசகத்தையோ, பெரிய புராண்த்தையோ, தேவாரத்தையோ மாட்டி விட்டிருந்தால், தமிழன்னை will be a secular figure.

  கண்டிப்பாக அப்படித்தான் தமிழன்னையைச் சித்தரிக்க வேண்டும். காரணம்: சமணர்களின் தமிழ்த்தொண்டும், பவுத்தர்களின் தமிழ்த்தொண்டும், இந்துக்களின் தமிழ்த்தொண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தல்ல. மூன்றும் சேர்ந்தால்தான் தமிழன்னை உண்மையான அன்னை. அழகுடன்.

 2. // எழுதியவர் பாரதியாராக இருக்குமென்பது என் ஊகம் // முற்றிலும் அடிப்படையற்ற ஊகம். இந்தப் பாடல் அமைப்பும் சரி, ஐம்பெருங்காப்பியங்களைக் குறிப்பிடுவதும் சரி,பாரதிக்குப் பிற்காலத்திய தமிழ்ப்பெருமை கோஷங்களுடன் தான் ஒத்துள்ளன. அந்தப் பள்ளியைச் சார்ந்த யாரோ ஒரு கவிஞர் இப்பாடலை எழுதியிருக்கக் கூடும்.மேலும், இந்த ஐந்து காப்பியங்களின் பெயர்கள் அணிகலன்களை ஒத்து அமைந்துள்ளதும் தமிழ் மரபிலேயே கூறப்பட்ட ஒன்று தான். கம்பராமாயணம் எழுதப்படுவதற்கு முன்பாக, காவியங்கள் இவ்வளவு தான் இதற்கு மேல் வராது என்று யாரேனும் ஒரு புலவன் கருதி இவையே ஐம்பெருங்காப்பியங்கள் என்று கூறியிருக்கக் கூடும் 🙂

  பாரதியார் தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களாக கம்பர், வள்ளுவர், இளங்கோ ஆகிய மூன்று கவிஞர்களையும் அவர்களது படைப்புகளையுமே தொடர்ந்து தனது பாடல்களில் சீராக முன்வைத்துள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும். சில இடங்களில் தாயுமானவரை ஏற்றிக் கூறுகிறார். ஒரு பாடலில் ஔவையாரை (’தமிழ்மகள் சொல்லிய சொல்’) குறிப்பிடுகிறார். மற்றபடி வேறு எந்தப் பழந்தமிழ்க் கவிஞர்களையும் பாரதியார் பெருமளவு ஏற்றிக் கூறவில்லை.

  1) யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல்..

  2) அ) கல்வி பிறந்த தமிழ் நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு ஆ) வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு இ) நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு

  3) கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்தததும்….. சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும், தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்

  இப்படி இன்னும் சில பாடல்களையும் எடுத்துக் காட்டலாம்.

  சங்க இலக்கியங்கள் பாரதியார் காலத்திற்குப் பின்புதான் உ.வே.சாமிநாதையர் போன்றவர்களது பெருமுயற்சிகளால் அச்சில் வந்தன. எனவே பாரதியார் அவற்றை ஆழமாகக் கற்றிருக்கவும் பரிச்சயம் கொண்டிருந்திருக்கவும் வாய்ப்பில்லை.

 3. பாரதியார் இதை எழுதவில்லையென்ற பின் அவரின் தமிழ்ப்பற்றைப் பேசி என்ன பயன்?

  உ வே சா காலத்துக்குப் பின் எழுதப்பட்டது இது என்பதைத் தெளிவாகக் காட்டியதற்கு நன்றி. அதே சமயம் உவேசா பெரும்புகழுடன் வாழ்ந்த காலத்தில்தான் பாரதியாரும் வாழ்ந்தார். ஆக, அவர் ஐம்பெரும் காப்பியங்கள் உவேசாவின் பெருமுயற்சியால் வெளித்தெரிந்தன என்பதை அறிந்தவர்தான். எனினும் அவர் இப்பாடலை எழுதவில்லை இல்லையா? பின்னென்ன அவரின் தமிழ்ப்பற்றி இப்படி அப்படி என்று பேச?

  ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாக எடுத்தாலும் அதுவும் ஓர் குறைதான். ஏனென்றால், உவேசாவால், இங்கு காட்டப்படும் ஐந்தில் மூன்றை முழுமையாகப் பெற முடியவில்லை.. குண்டலகேசி, வளையாபதி, சூளாமணி இவை. சீவக சிந்தாமணியும் சிலம்பும் முழமை பெற்ற காப்பியங்கள். இங்கே அணிகலன்கள். சரிதான். முழுமையாக்த் தெரியாத காப்பியங்களை அணிகலன்களாகப் போடும் இக்கவிஞன், எப்படி இவை சிறந்த காப்பியங்கள் என முடிவெடுத்து அணிகலன்களாக்கினான்? முழுமை பெற்ற மணிமேகலையை விட்டுவிட்டு அரைகுறையானவற்றை எடுத்ததேன்?

  மேலும், சூளாமணி, வளையாபதி, குண்டலகேசி இவற்றின் கதைச்சுருக்கங்கள் அப்படியொன்றும் பெரிசாகப் பேசப்படவேண்டியவையா? வெறும் பேய், பிசாசு, சூன்யம் நிறைந்த கதைகள். இவை ஒன்றுக்கொன்று போட்டியாக எழுதப்பட்டவை. எப்படி பெரிய புராணம் சீவக சிந்தாமணிக்கு மாற்று வேண்டுமென்ற சோழனின் கோரிக்கையை ஏற்று சேக்கிழாரால் எழுதப்பட்டதோ, அப்படி சமண, பவுத்த முனிவர்கள் எழுதியவையே அவர்கள் குண்டலகேசியை எழுதிவிட்டார்களே, நாம் விடுவோமா? சூளாமணியை எழுதிவிடுவோமென்று எழுதினார்கள். எப்படியிருந்தாலும், தெரியாத காப்பியத்தை மிகச்சிறந்தவை என முடிவெடுத்தெழதிய இக்கவிஞன் பெரிய கில்லாடிதான் 🙂 இத்தனைக்கும் கம்பராமாயணம் அணிகலனாகத் தெரியவில்லை ஒருவேளை காப்பியங்களையே அணிகலங்களாகப் போடவேண்டுமென நினைத்திருப்பான். அப்படியாயினும் முழமையாக கிடைக்கா காப்பியங்களையுமா? Very bad 🙁
  மொத்தத்தில் நிறை மனதுடன் வாசிக்க முடியாத ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து.

 4. இத்தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிய புலவர் இன்னொரு பாரதியார்
  கவியோகி சுத்தானந்த பாரதியார்.

  (From Wikipedia)

 5. இவர்தான் கவியோகி சுத்தானந்த பாரதியார். இவரைத்தான் சக்திவேல் இப்படி குறிப்பிடுகிறார்: அதாவது திராவிட நாத்திகப்பரம்பரை:

  I am not able to insert his picture. Visit this page to see his picture and his bio.

 6. நாவலோ நாவல் சக்திவேல்.

  யார் எழுதியிருந்தால் என்ன? அதில் நிறைகளைத் தவிர குறைகளும் கூட இருக்குமென்றாலும் தான் என்ன? மொழியைத் தாயாய் உருவகப்படுத்துவதும் அதன் இலக்கியங்களை அணி மணி பூஷணங்களாக அன்னைக்குப் பூட்டி அழகுபார்த்தமை பொலிவு தான்.

  முத்தமிழோனே எனவும் தமிழ்த்ரயவிநோதப்பெருமானே எனவும் தமிழனை அப்பனாக முத்தமிழுருவாக உருவகப்படுத்தியவர் வள்ளல் அருணகிரிப்பெருமான்.

  தமிழிலிருந்து கம்பனை கழித்துக்கட்டுவது த்ராவிட மாண்பு. திருவள்ளுவநாயனாரை வாய்க்கு வந்தபடி வசவிடும் த்ராவிட வீணர்கள் அவரை எதற்கு நினைவு கூறுவர்? ராமசாமி நாயக்கர் எனும் படிக்காத பேதையாகிய நாசி இனவெறியர் சிலம்பினைப பற்றிப் பேசியதை விதந்தோதும் கயமையாளர்கள் தமிழ் என்று உச்சரிப்பதற்கும் கூட கூச வேண்டும்.

 7. அன்பர் பீ எசு

  \\ நன்றி, தமிழையும் மெச்சி எழுதுபவர்கள் இத்தளத்தில் இருக்கின்றார்களே \\

  \\ BSV ……………\\ தமிழன்னை will be a secular figure. \\

  \\ அப்படியாயினும் முழமையாக கிடைக்கா காப்பியங்களையுமா? Very bad \\

  அப்டீங்க்ளா?

  தேவரீர் எழுதும் முறை தமிழை மெச்சுவதோ?

  தமிழுடன் இயைபவர் எவரும் பிறமொழி
  கனவிலும் கருதிடா றன்றோ

  குசும்பெனப்படுவது யாதெனின் தம்மை
  பிறமொழியில் விளிப்ப தன்றோ

  ஈயத்தைப் பார்த்து இளிக்குமாம் பித்தளை
  பிறமொழியில் தனைத் தொலைத்து

  தமிழ்ப்பொன்னிப்புனலினில்
  ஆங்க்ல சாராயமதை
  களிப்புடன் கலந்துகட்டி

  மணியும் பவளமும்
  ப்ரவஹிக்கும் மொழிதனை
  வீணரே விமர்சிப்பர்

  ஈயத்தைப் பார்த்து
  இளிக்கும் பித்தளை
  தன்னிலை உணரலாமே

 8. சுத்தானந்த பாரதியார் என்ற தகவலுக்கு நன்றி, BSV. // திராவிட நாத்திகப்பரம்பரை // என்று நான் குறிப்பிடாத ஒன்றை எனது வாக்காகச் சொல்வது சரியல்ல என்பது மட்டுமல்ல விஷமத்தனம். // பாரதிக்குப் பிற்காலத்திய தமிழ்ப்பெருமை கோஷங்களுடன் // என்பதே நான் எழுதியது. அந்தக் காலகட்டத்தில் பரிதிமாற்கலைஞர்,சுத்தானந்த பாரதி, ச.து.சு.யோகியார், மறைமலை அடிகள் என்று தமிழ்ப்பெருமை பேசிய பலர் இருந்தனர். அவர்கள் எல்லாரையும் திராவிட/நாத்திக என்ற முத்திரைக்குள் அடைத்து விட முடியாது என்பதைக் கூட அறியாதவனல்ல நான். அதனால் யோசித்தே அத்தகைய ஒரு சொல்லாட்சியைப் பயன்படுத்தியிருந்தேன்.

 9. //பரிதிமாற்கலைஞர்,சுத்தானந்த பாரதி, ச.து.சு.யோகியார், மறைமலை அடிகள் என்று தமிழ்ப்பெருமை பேசிய பலர் இருந்தனர். //

  இப்படியே எழுதியிருந்தால் தவறான புரிதலுக்கு வழியே இருந்திருக்காது. ஆனால், நீங்கள் எழுதியது://பாரதிக்குப் பிற்காலத்திய தமிழ்ப்பெருமை கோஷங்களுடன்//

  தமிழ்ப்பெருமை கோஷங்கள் என்றால் எள்ளல் தொனி. தமிழின் பெருமையையும் சிறப்பையும் உரக்கச்சொல்லிவிட்டால் கோஷங்களா? அதையே பலபாடல்களில் பாரதியாரே செய்திருக்கிறாரே? அவர் தமிழ்ப்பெருமை கோஷக்காரர் எனலாமா? தமிழ்ப்பெருமை என்பது தவறே கிடையாது. மாறாக, அதை அரசியலாக்கியதுதான் தவறு. அப்படிச்செய்தோர்கள் நீங்கள் குறிப்பிட்ட எவருமே கிடையாது. எனவே வெறும் தமிழ்ப்பெருமை கோஷங்கள் என்றால் அரசியல் பிழைத்தோரையே குறிப்பிடும். அப்போது நான் நீங்களென்ன திராவிட பரம்பரையையாக் குறிப்பிட்டீர்கள் எனக்கேட்டது என்னைப்பொறுத்தவரை சரியே.

  இக்கட்டுரைப் பொருளாக வரும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடியவர் ஓர் இந்து யோகி. அவரைப்பற்றி நன்கு தெரியவே விக்கிப்பீடியா இணைப்பைத்தந்தேன். அவரின் வாழ்க்கை, எண்ணங்கள்; தமிழ்த்தொண்டு; மதத்தொண்டு, இறைப்பணி, சமூகப் பணி – எல்லாமே அங்கு காணக்கிடைக்கின்றன. அவரின் தமிழ்த்தாய் வாழ்த்தொரு கோஷமன்று. உள்ளமுருகி தமிழைப்போற்றும் உணர்வலை. எனவேதான் இக்கட்டுரையாளரை பரவசமடைய வைக்கிறது. இல்லையா?

  கல்லெறிந்தாலும் கவனமாக நாம் எறிய வேண்டும். தசரதன் கவனக்குறைவாக அம்பு எய்தி ஓர் குருட்டுப்பெற்றோரின் ஒரே ஆதரவான அவர்கள் மகனைக் கொன்ற பாவம் போலாகும்.

 10. five kappiangal according to kappiathiran by soma. illavarasu annamalai university professor 1silapathikaram, sivagasindamani, manimekalai, kambaramanayam and periyapuranam.

 11. // கோஷங்கள் என்றால் எள்ளல் தொனி // தவறு. கோஷம் என்றால் உரக்கக் கூறுவது என்று பொருள். வேத கோஷங்கள், சரண கோஷங்கள் என்று கூறுவதில்லையா அது போல. ஒன்றுமில்லாத விஷயத்தை சத்தம் போட்டுக் கூறுவது என்பதற்கும் இந்தச் சொல்லை எள்ளல் தொனியில் நாம் நடைமுறையில் பயன்படுத்துகிறோம் தான். ஆனால் நான் எழுதிய வாக்கியத்தில் அப்படி இல்லை என்பதைக் கவனிக்கவும்.

 12. இப்பாவில் இன்னொரு உட்பொருள் உண்டு. அதை கட்டுரையாளர் புரிந்திருக்க வாய்ப்பில்லை. உணர்ச்சிகள் அவர் சிந்தனையைத் தடுக்கின்றன. அன்னையில் அணிகலன்களாகச் சொல்லப்படுவதில் ஒன்று கூட இந்துக்காப்பியம் இல்லை. குண்டலகேசி, வளையாபதி, சூளாமணி, சிலம்பு, சீவக சிந்தாமணி -இவை ஐந்தும் சமண், புவுத்தக்காப்பியங்கள். சமணமும் பவுத்தமும் தமிழை அலங்கரிக்க, இந்துக்களின் காப்பியமோ – அப்படியொன்று அப்போது இல்லாவிட்டாலும்,

  இந்து க் காப்பியம் என்று எழுதுவதை படிக்கப்பிடிக்கவில்லை.காலங்கள் எவ்வளவோ மாறி விட்டது. இந்து என்ற வாா்த்தையை நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்தியாவில் உள்ள அனைத்தும் இந்துதான்.இந்து மதத்தின் தமிழ தொண்டு என்று ஒரு கட்டுரையை யாராலும் எழுத முடியாது.

 13. //five kappiangal according to kappiathiran by soma. illavarasu annamalai university professor 1silapathikaram, sivagasindamani, manimekalai, kambaramanayam and periyapuranam.//

  பெரியபுராணம் காப்பியமாகாது. தொடர்ச்சியாக வரும் ஒரு நீண்ட கதையே காப்பியம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் இவைதான் காப்பியங்கள். பெரியபுராணம் 63 நாயன்மார்கள் வரலாற்றைச்சொல்லும் சிறுசிறு நூல்களின் கோவை – ஒரே புலவரால் கோக்கப்பட்டது.. தொடர்ச்சியான நீண்ட கதையன்று. அராபிய இரவுக்கதைகள் போல தனித்தனியான கதைகள். அராபிய இரவுக்கதைகளும் ஒரே ஒருவரால்தான் சொல்லப்பட்டது என்று அதன் முன்னுரை சொல்கிறது. சோழன் கேட்டதிற்கிணங்க பல நாட்கள் தொடர்ச்சியாகப் படிக்கக்கூடிய பெரியபுராணத்தை சேக்கிழார் படைத்தார். காப்பியமாகாது.

  சங்கம் மருவிய காலம், அல்லது சங்க காலம் முடிந்தபின் எழுந்த காலம். இதுவே காப்பிய காலம் எனவழைக்கபபடுகிறது. அக்காலத்தில் பெரிய புராணமோ, கம்பராமாயணமோ எழுதப்படவில்லை. காப்பியகாலத்தில் தோன்றிய நூல்களையே இத்தமிழ்த்தாய் வாழ்த்து அணிகலன்களாக போடுகிறது. அதில் என் விமர்சனம் என்னவென்றால், வளையாபதி, குண்டலகேசி, நீளகேசி இவை நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் உவேசாவைப் போல சிரம்ப்பட்டு எவராவது மீதியை கண்டுபிடிக்கலாம். முழுமை பெறாத கிடைக்காத காப்பியங்களை முழுமை பெற்று மெத்த சிறப்பான சிலம்புடனோ, மேகலையுடனே எப்படி சேர்த்து வைத்துப் பார்க்க முடியும்? உடைந்த ஆபரணங்களை போடுவது எங்கேனும் உண்டா? அமங்கலமல்லவா? அத்தவறை இத்தமிழ்த்தாய் வாழ்த்து செய்கிறது.

  பெரியபுராணத்தைக் காப்பியம் என்று சொல்லும் தமிழ்ப்பேராசியரைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன் 🙁

 14. தொளிரும் குண்டலமும்,கைக்குவளை
  -யாபதியும்,கருணை மார்பின்
  மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
  மேகலையும், சிலம்பார் இன்பப்
  போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
  ளாமணியும் பொலியச் சூடி,
  நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
  தாங்கு தமிழ் நீடு வாழ்க !

  நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
  மொழியிருக்கச் சேக்கி ழாரின்
  பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
  திரமிருக்கப் பகலே போன்று
  ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
  குறளிருக்க, நமது நற்றாய்,
  காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
  கனிபெருகக் கண்டி லோமோ !
  -கவியோகி சுத்தானந்த‌பாரதியார்

 15. காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
  -யாபதியும்,கருணை மார்பின்
  மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
  மேகலையும், சிலம்பார் இன்பப்
  போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
  ளாமணியும் பொலியச் சூடி,
  நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
  தாங்கு தமிழ் நீடு வாழ்க !

  நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
  மொழியிருக்கச் சேக்கி ழாரின்
  பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
  திரமிருக்கப் பகலே போன்று
  ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
  குறளிருக்க, நமது நற்றாய்,
  காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
  கனிபெருகக் கண்டி லோமோ !
  -கவியோகி சுத்தானந்த‌பாரதியார்

 16. நானும் தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதையும் படித்தேன். அதன் பிறகு ஆசிரியர் எழுதிய பல நூல்களை தற்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

  இரண்டாவது பத்தியைப்பற்றி கட்டுரையாளர் சிலாகிக்கவில்லை. முதற்பத்தியே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பட்டது என்று சொல்லி அதை வானளாவிப் புகழ்ந்து உவகை அடைகிறார்.

  உவேசாவிடம் ஒரு பழக்கம். அவரது தேடலில் எங்காவது ஒரு சுவடி கிடைத்தால் போதும் அது ஒரு நீண்ட தொடரில் ஒரு பாடலாக இருக்கலாமென்று ஊகிக்குமளவுக்கு அவரது தமிழ்ப்புலமை இருந்தது. தமிழ் விடுதூது என்ற மதுரை சொக்கநாதர் பற்றியபாடலில் ஒரே ஒரு கண்ணிதான் அவர் கண்ணில் பட்டது. அது அவரை ஈர்க்க மதுரையெங்கும் தேடி முழுப்பாடலையும் கண்டெடுத்தார். அதன்மீது பொழிப்புரையும் எழுதினார்.

  வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி – இவற்றுள் சில பாடல்களே கிடைக்க, அவை காப்பியங்கள் எனத்தான் உணரமுடிந்தது. எவ்வளவு முயன்றும் முழுவதும் கிடைக்கவில்லை.

  முழவதும் இல்லா காப்பியங்கள் உடைந்த சிலைகள் போல. அல்லது உடைந்த நகைகள். அச்சிலைகளை வைத்து ஆராதிக்க முடியாது. அவ்வணிகல்ன்களைப்பூட்ட முடியாது. ஏனென்றால் அவை அமங்கலச்சின்னங்களாகும் தமிழ்த்தாயின் அணிகலன்களாக வைக்க முடியாது. கவியோகி தான் என்ன செய்கிறோமெனபதை உணர்ந்தாரில்லையென்பதே என் கருத்து.

  முடிந்தால் அடியவன் எதிர்கருத்தை வையுங்கள். படிக்க அவா.

  இரண்டாம் பத்தியும் குறைபாடே. நம்மாழ்வாரின் தமிழையும் சேக்கிழாரின் தமிழையும் கம்பனின் கற்பனை வளத்தையுமே எடுக்கிறார். அதே வேளை, வள்ளுவரிடம் தமிழை எடுக்கவில்லை. அறத்தை எடுக்கிறார். அதாவது தமிழ்தாய்க்கு வெறும்தமிழ் போதுமென்றே நினைத்துவிட்டார். ஆனால் வள்ளுவரிடமிருந்து மட்டும் அறம் வேண்டும். என்ன பாரபட்சம்?

 17. காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
  -யாபதியும்,கருணை மார்பின்
  மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
  மேகலையும், சிலம்பார் இன்பப்
  போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
  ளாமணியும் பொலியச் சூடி,
  நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
  தாங்கு தமிழ் நீடு வாழ்க !

  நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
  மொழியிருக்கச் சேக்கி ழாரின்
  பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
  திரமிருக்கப் பகலே போன்று
  ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
  குறளிருக்க, நமது நற்றாய்,
  காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
  கனிபெருகக் கண்டி லோமோ !
  -கவியோகி சுத்தானந்த‌பாரதியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *